கள்ளத்தோணிகள் .

கள்ளத்தோணிகள் . கள்ளக் குடியேறிகள் . அவர்தம் திரைப்பட முயற்சிகள்

Tamil Boat People :

கடந்த சில வருடங்களில், ‘அகதி’ அந்தஸ்து(?) கோரி பல நாடுகளின் எல்லைகளுக்குள் சட்ட விரோதமாய் – அவர்களின் பார்வையில் கள்ளக்குடியேறிகளாய் – நுழைந்த ஈழத் தமிழர்கள் ஊடகங்களில் boat people என்கிற அடையாளத்துடன் அழைக்கப்பட்டிருந்தார்கள்.

அந்நிய மக்கள் குழாம்களைப் பற்றி மக்கள் மத்தியில் வெகுசன சூழலால் ஏற்படுத்தப்படுகிற இன்னொரு புனைவுக்கே இப் பெயரும் உதவப் போகின்றது என்பதை புதிய நாடுகளுக்கு குடிவருகிறவர்கள் அறிவார்கள். எனினும் இது ஊடாக பரவும் சிறுபான்மையினருக்கு எதிரான அரசியலையும் அதைத் தூண்டும் பெரும்பான்மையின் ‘திட்டமிட்ட அறியாமை’க்கான பதில் செயற்பாடுகளையும் யோசிக்க வேண்டும்.

முதலில்: boat people என்பது கூற வருகிற அர்த்தந் தரும் பொருத்தமானதொரு பெயர் ஒன்றை (எமது சூழலில்) யோசித்தபோது, பா.அகிலனின் ஈழத்தவர்களுக்குத் தரப்பட்ட புனைவுகள் குறித்த கவிதை நினைவில் வந்து போனது.

நானொரு ஆசியன்,
கடவுளர்களின் கண்டத்தைச் சேர்ந்தவன்
சமுத்திரங்களின் சொர்க்கத் தீவில்
வடகுடாவின் வெப்பத் தெருக்களில்
காட்டுப்பறவை.
நீங்கள் அறியீர்கள் என்னை,
கட்டப்பட்ட புனைகதைச் சுவடிக்குள்
சிறையிடப்பட்டது எனது வரலாறு,
உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நான்
உங்கள் தாழ்வாரங்களை நிரப்பும்
வேண்டப்படாத அசுத்த விருந்தினன்,
தேசங்களின் எல்லைகளைத் திருட்டுத்தனமாகக் கடக்கும்
கள்ளக் குடியேறி,
சமரசமின்றி இறப்பை ஏந்திச் செல்லும்
முரட்டுப் போராளி…

இவ்வாறாய் தொடங்கும், இது பா.அகிலனின் ‘பதுங்கு குழி நாட்கள் (2000) கவிதைத் தொகுதியிலுள்ள “புனைவுகளின் பெயரால்” கவிதையின் வரிகள். இதிலிருந்து, ஒவ்வொன்றாய் தட்டித் தட்டி போய், இறுதியில், ஒரு வகையில் (பல வகையில்?) முரண்நகையான கள்ளத்தோணி என்கிற சொல் தட்டுப் பட்டது.
காலனியக் காலப் பகுதிகளில் இலங்கைக்கு இந்தியாவிலிருந்து வேலைக்காக கள்ளமாக வந்தவர்களையும், பின்னர் இலங்கையிலிருந்து இந்தியா தப்பிப் போகும் அகதிகளது சம்பவங்களிலும் இச் சொல் இருந்திருக்கிறது. இந்த வசைச்சொல்லின் மூலகம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும்என நாடற்று பந்தாடப்பட்ட மலையக மக்களுக்கும் தரப்பட்ட சொல்லாக இருக்கலாம். இங்கே boat people என அழைக்கப்படுகிற போது, சட்டவிரோதமாக வந்திறங்கும் மக்களை, அது ஒன்றும் புகழ்ச்சிக்குரிய வகையில் சுட்டுவதில்லை, ஒரு முத்திரை குத்தல் இருக்கிறது. மேற்கத்தைய வெள்ளை இனவாதிகளால் தரப்படுகிற ஒரு சொல்லுக்குச் சமனான தமிழ்ச் சொல்லாக தமிழ்இனவாதம் தந்த சொல்லொன்றை தருவதும் முரண்நகையான சுவாரஸ்யமான விடயமாகப் பட்டது.

எம் கண்ணெதிரிலேயே நாம் காணமறுத்திருந்தது மலையக மக்களது வரலாறு – ஒருவகையில் வெள்ளை இனவாதிகளதை ஒத்த திட்டமிட்ட அதே அறியாமை; எமதல்லாதவை குறித்த உதாசீனத்தைக் கொண்டிருந்ததும் ஆகும்.

இது தொடர்பில், “பச்சை இரத்தம்” என்கின்ற தோட்டத் தொழிலாளர்கள் குறித்த (தமிழக) ஆவணப் படம் குறித்து இயக்குநர் தவமுதல்வன் எழுதியிருந்த அறிமுகக் குறிப்பொன்று ஆழமாகப் பேசுகிறது.

‘1800…… களில் மழையின்மை, பொருளாதார நெருக்கடி, பசி, பட்டினி போன்றவை தோற்றுவித்த ‘நாடும் வேலையும் தேட’ நினைத்தவர்களுக்கு வெள்ளைக்காரரின் நடமாடும் வெலை வாய்ப்பு ஏஜென்சி காங்காணிகளிடம் ஆள் சேர்த்தது. கால்நடையாய் ராமேஸ்வரம் – பிறகு கொழும்பு மன்னார் வழியாக மலையை நோக்கிய நடைபயணம், கமிஷனுக்காக ஆசைப்பட்டு கங்காணியால் ஏற்றப்பட்ட அதிகமான ஆட்களை இடையிலேயே மூழ்கி குறைத்ததும் உண்டு.

பாதைகள் புதிதாய் செப்பனிட்டு, விலங்குகளுக்கு உணவாக பலரை பலியிட்டு, எஞ்சியவர்கள் தன் உயிரையே சிறுக சிறுக உரமிட்டு பசுமை படர்ந்து இருக்கிற இடங்கள் தான் இலங்கையின் இன்றைய மலையகம். ….நகரின் உயர்ந்த கட்டிடங்கள், தொடர் வண்டியின் பாதைகள், சுரங்கப் பாதைகள், பாலங்கள், இவற்றின் அடித்தளமாய் புதைக்கப்பட்டிருக்கிறது ஆயிரக்கணக்கான மலைய மக்களின் உயிர்கள். ..கிடைத்ததோ, தோட்டக்காட்டான், கள்ளத்தோணி, கப்பல்காரன் என்கிற ஏளனப் பட்டங்களே!
வாக்குரிமை, வாழ்வுரிமை என உரிமைக்குரல்கள் உயர்ந்தபோதெல்லாம் சிங்களக் காடையர்களால் குரல் நெறிக்கப்பட்டனர். மலையகத் தலைவர்கள், தொண்டைமான் வகையறாக்களும் பதவிகளில் சுகபோகத்தில் விலைபோயினர். தேசிய உற்பத்தியில் மூன்றில் இரண்டு பகுதியை ஈட்டிக் கொடுத்த மலையக மக்கள்தான், 1948ல் பிரஜா உரிமை மறுக்கப்பட்டதால் நாடற்றவர்கள் ஆயினர். பூர்வீக இலங்கை தமிழரின் மெளனமும், சிங்களப் பேரினவாதிகளின் வன்செயல்களும் கொஞ்சம் கொஞ்சமாய் எஞ்சியவர்களை நடைபிணமாக்கியது. இறுதியாய், 1964ல் கையெழுத்தான சிறிமாவோ – சாஸ்திரி ஒப்பந்தம் ஐந்தரை இலட்சம் தமிழர்களை நாடு கடத்த வழி கோரியது. எந்த கடற்கரையிலிருந்து கட்டிய துணிமணிகளுடன் புறப்பட்டார்களோ அதே கரையில் நாடற்றவர்களாக இலங்கையின் கப்பல்கள் இறக்கவிபட்டன.
மீண்டும் தாயகத்திற்கே வந்தனர். …கண்டிக்காரன், சிலோன்காரன், கள்ளத்தோணி என சொந்தங்களாலேயே, தமிழர்களாலேயே அவமானப்படுத்தப்பட்டனர்.
…. பசுமை படர்ந்த மலைகளும், வளைந்தோடுகிற சாலைகளும் விரிந்து கிடக்கும் தேயிலைத் தோட்டங்களும் பலருக்கு மகிழ்ச்சியை, உற்சாகத்தை பரவசத்தை தரலாம்.!
உலகத்து உதடுகளை தேநீர் உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கலாம்! அது எங்கள் வியர்வை! வாழ்க்கையே எட்டாமல் மூன்று நூற்றாண்டுகளாய் தேயிலைத் தோட்டத்தின் தென்படாத குறுக்குப்பாதையைப் போல உழைப்பின் முகவரியற்றுப் போன தாயகம் திரும்பிய மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்வதே இப்படத்தின் மையப்புள்ளி.”

——–இயக்குநர் தவமுதல்வன், ‘பச்சை இரத்தம்’ திரைப்பட அறிமுகத்தில்.

கனடாவில் ஏனைய கள்ளத்தோணிகளது கதைகள்:

நாடற்றவர்கள், நாட்டில் வாழ்தல் மறுக்கப்பட்டவர்கள், வறியவர்கள், அக்கரை சீமைகளை நோக்கி ஓடுவதும்; எஜமானர்களால் கூலித் தொழிலாளர்கள் மிகக் கடினமான வேலைகள் வாங்கப்பட்டு, பிறகு கைவிடப்படுவது என்பதுவும் ஒன்றும் புதிய நிகழ்வுகள் அல்ல.
1880களில் கனடிய பசிஃபிக் ரயில் பாதை (Canadian Pacific Railway) போடக் கொண்டு வரப்பட்ட சீனக் கட்டுமானத் தொழிலாளர்கள், அவ் வேலை முடிந்த பிறகு கனடாவில் தொடர்ந்து வசிப்பதற்கு வரவேற்கப்படவில்லை. அவர்கள் ஒவ்வொருவரும் (கட்ட முடியாதளவு) வரி கட்டப் பணிக்கப்பட்டதுடன் (head tax) இங்கு குடியேற விரும்புவர்களுக்கான வரியையும் அதிகரித்தார்கள்.

அனேக மேற்கு நாடுகள் போலவே, கனடிய வரலாற்றைப் பார்த்தால், (வெள்ளையரல்லாத) ஆசிய அகதிகளை ஒருவித ஐயப்பாட்டுடனே வெள்ளை கனடிய குரவரவுத்துறை அணுகியுள்ளது தெரியும். முக்கியமாக பதிய குடிவரவாளர்(அகதி)களால் விழைகிற பயன்பாட்டை எடுத்துக்கொள்ளவும், அதே நேரம், தேவை முடிந்ததும் திருப்பி அனுப்பவும் அவர்கள் எப்போதும் தயாராக இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள். பிந்தைய காலங்களில், குடிவரவுச் சட்டங்களில் மாற்றங்கள் வந்த போதும் இந்த அணுகுமுறையில் — அவர்களை ‘இரண்டாவது பிரஜைகளாக’ (எந் நேரமும் திருப்பி அனுப்பப் கூடியவர்களாக) நடத்துவதில் — மாற்றம் இல்லை.
இரண்டாம் மகா யுத்தத்தில் பேர்ள் காபர் தாக்கப்பட்டதை அடுத்து இங்கு தலைமுறைகளாய் வாழ்ந்த யப்பானியர்களை ‘தமது’ பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்கிற பெயரில் தனி முகாம்களில் அடைத்ததும், சொத்துக்களை பறித்ததும் இதற்கொரு உதாரணம்.

மேற்கூறிய சம்பவங்களுக்கு மன்னிப்பு (கால தாமதமாய் ஏனும்) கூறப் பட்ட போதும், புதிதாய் குடிபெயரும் இனங்கள் எதிர்கொள்கிற சிக்கல்கள் குறித்த நிறைய பாடங்கள் இச் சம்பவங்களில் இருந்து எடுத்துக் கொள்ளலாம். இன்று “நேரடியான’’ இனவாதம் இல்லை என சொல்லிக் கொண்டாலுங் கூட, இளைஞர் வன்முறைகளுடன் சம்பந்தப்படுத்தப்படுகிற தமிழ் இளைஞர்களை கையாளுகிற விதம் முதற் கொண்டு (racial profiling) பல விடயங்களில் மறைமுகமான இனவாத முகத்தினைக் காண முடியும்.

Boat people என்கிறபோது அதிகம் உதாரணங் காட்டப் பட்ட சம்பவம்: “Komagata Maru கப்பல் சம்பவம்.” 1914இல் 376 இந்தியர்களுடன் அக் கப்பல் வன்கூவர் துறைமுகத்தை வந்தடைந்தபோது “இந்துக்கள் கனடாவை முற்றகையிடுகிறார்கள்” என்கிற றேஞ்சு-க்கு பத்திரிகைத் தலையங்கங்கள் இருந்தன; இன்றைய கொன்சவேட்டிவ் கட்சியின் தேர்தல் பிரச்சாரங்கள் – கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு முடிந்த பிறகும் – அந்தளவு மிகைப்படுத்தியே, சராசரி வெள்ளையின பிரஜையை பதட்டத்துக்குள்ளும் பயத்துக்குள்ளும் தள்ளுகின்றன (எங்கோ தாமறியாத மூலைகளில் இருந்து வரும் இந்த மக்கள் கூட்டம், கப்பலில் வந்திறங்கி தமது வேலைகளையும் வாய்ப்புகளையும் பறித்து விடுவார்களோ என்பதான பெரும் அச்சம் அவர்களிடம் ஊட்டப்படுகிறது).

அன்று அந்த மக்களை அதிகாரிகள் கப்பலை விட்டு இறங்க அனுமதிக்க விரும்பாததுடன், உணவு நீர் என்பன கிடைப்பதையும் தடுக்க முனைந்தார்கள். அனுமதி மறுக்கப்பட்டு, இந்தியா திரும்பிய கப்பல், (காலனிய) எதிர்பாளர்களை கொண்டிருக்கலாம் என்கிற ஊகத்தின் அடிப்படையில் பிரித்தானிய-இந்திய பொலிஸ் சூட்டுத் தாக்குதலுக்கு உள்ளானது; பலர் கைதுசெய்யப்பட்டதுடன் காவலில் கண்காணிப்பில் வைக்கப்பட்டார்கள். 20 பயணிகள் பலியானார்கள். கதை முடிந்தது.

உபரி செய்திகள்:

1914 Komagata Maru கப்பல் சம்பவத்தை வைத்து தீபா மேத்தா திரைப்படம் எடுக்க உள்ளார். இதே போல 1939-இல் அமெரிக்கா கனடா கியூபா உள்ளிட்ட நாடுகளால் திருப்பி அனுப்பப்பட்ட ஜேர்மன் கப்பல், 937 யூத அகதிகளுடன் திரும்பிச் சென்றது; இதில் குறிப்பிட்ட எண்ணிக்கையான மக்களுக்கு மட்டுமே ஐரோப்பிய நாடுகள் சில தஞ்சம் கொடுத்தன; மறுக்கப்பட்ட ஏனையோர் நாசிகளின் முகாம்களில் பலியானார்கள்; அதை வைத்து ‘Voyage of the Damned’ (1976) என்கிற திரைப்படம் வெளிவந்தது.

ஈழத்தவர்களது கதைகள்:

நாம் ஓர் 30 – 35 வருடங்களாய் இங்கு குடிபெயர்ந்த இனம். குடிபெயர்ந்த முதற் தலைமுறையின் துயரங்களும் கடின உழைப்பும், அடுத்த, அதற்கடுத்த தலைமுறைகளுக்குத் தான் பயன்படும் என்பார்கள். ஈழத்தவரைப் பொறுத்தவரையிலும் அடுத்தவர்களது முயற்சிகளிலும் செயற்பாடுகளிலும் தான் அவர்களுக்கு முந்தைய தலைமுறைகளின் இருப்பும் தங்கியுள்ளது என்றே தோன்றுகிறது.

மேற்கில் வெகுசன நீரோட்டத்துள் அறியப்படுகின்ற “இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள்” என (1990கள் அதற்கு முந்தைய காலம்) பட்டியல் ஒன்றை யோசிக்கிற போது மைக்கல் ஒண்டாச்சி, சியாம் செல்வதுரை போன்றவர்கள் உடனடியாய் ஞாபகம் வருவார்கள். பின்வந்த காலம் மாயா அருட்பிரகாசத்தை (சர்வதேச அரங்கில் ஒலிப்பவர்களில்) தந்திருந்தது. பிறகு வாசுகி கணேசானந்தன் ‘காதல் திருமணம்’ எனவொரு ஆங்கில நாவலுடன் சமீப காலங்களில் அறிமுகமானார். மாயா தவிர முன்னையோர் இருவரும் இலங்கையில் நடந்துகொண்டிருந்த யுத்தம் தொடர்பில், அதன் இழப்புகள் சார்ந்தோ (எதிர்த்தோ, கவலைகள் தெரிவித்தோ) பேசியிருக்கவில்லை (குறிப்பாக இறுதிக் காலத்தில்). பேசியிருக்க வேண்டும் என்பதெல்லாம் கட்டாயமில்லை என்றாலும், எமக்கு நெருக்கமான நிலமொன்றில் நடந்த மனிதர்களுக்கு எதிரான அவலங்கள் குறித்து எதிர்த்துப் பேச எழுத்தாளர்களாய் (மனிதர்களாய்) அவர்களுக்கு மொழியின் ஒரு சொல்லும் உதவவில்லை என்பது ஏமாற்றமே!

தவிர, தமீழ் நவீன இலக்கியத்தைப் பொறுத்தவரை,
எமது மக்களின் துயரங்களையும், அவர்கள் கடந்து வந்தவற்றையும் பல கருத்துநிலைகளில் நின்று வெளிப்படுத்திய இலக்கியங்கள் உண்டு. அதன்தொடர்ச்சியாக குறும்பட முயற்சிகள் பலவும் பரவலாகி உள்ளன. சமீப காலங்களில், திரைப்பட விழாக்களில் பிரதீபன் (என் வீட்டின் முற்றத்தில் ஒரு மாமரம்), தமிழியம் சுபாஸ் (I have a dream, வன்னி மவுஸ்) போன்றவர்களின் படைப்புகள் கவனமும் பெற்றிருக்கின்றன.

இந்த மண்ணின் மைந்தர்களான பூர்விகர்களைப் பற்றிய ஒரு ஆவணப் படமே, அவர்களது நாட்டுக்கு வாழ வந்தவளான என்னை, அவர்கள் குறித்த வரலாற்றை அறியவும் அவர்கள் வெள்ளையர்களால் ஒடுக்கப்பட்ட, அவர்கள் தேசம் களவாடப்பட்ட கதைகளை அறியவும் உந்தியது. அதில் அழுத முதியவர்களது கண்ணீர் இன்னமும் நான் அதுவரை பாத்திராத யன்னல் வழியாக வடிந்தபடிதான்..

எம்முள் ஊடுருவுவதில், திரைப்படங்கள், வேறெந்த ஊடகங்களை விடவும் சக்திவாய்ந்தன. பெரும் மறதிக் காரர்களான மனிதர்கள், வரலாற்றின் திகதிகளை மறந்து விடுவார்கள். ஆனால் அத் திகதிகள் உயிர்பெற்று எம்முன் பேச ஆரம்பிக்கிற போது, அது குறித்த அதுவரை கால அறியாமையும் மறதியும் போட்டி போட நாம் பதட்டத்துடன் அதற்கு செவிசாய்க்கிறோம், குற்றஉணர்ச்சிக்குள்ளாகிறோம்.

இவ்வாறாக: நாம் கண்டேயறிந்திராத தேசங்களது – எங்களைப் போன்ற – மக்களையும், அவர்களதும் எங்களைப் போன்ற பிரச்சினைகளே என்பதையும் இலக்கியங்ககளைப் போல, பல்மொழித் திரைப்படங்களும் வெளிப்படுத்தின. அருமையான திரைப்படங்களை பார்க்க நேருகின்ற போதில் எல்லாம், எமதான வாழ்வை பகரும் திரைப்படங்கள் குறித்த விருப்பு வளருகிறது.

நாங்கள் சார்ந்த உலகத்தையும் திரையில் காண விரும்பும் பேரவா, எமதான யன்னலைத் திறந்து, எமது வாழ்வைக் கூறும், தனித்துவமான, இனத்துக்குரிய வெளிப்பாட்டை உடைய ஒரு திரைக் கதையை வேண்டுகிறது. இது இன மைய்ய ரீதியான அவா என்பதல்ல, எமது அடையாளத்தை தேடுவது என்பது, பெரும்பான்மையின் கண்களுக்குத் தெரியாதவர்களாய் (invisible) பலமற்றவர்களாய் உணருவதிலிருந்து வருவது…

ஆண்களுடைய வாழ்வனுபவங்களை மட்டுமே இலக்கியம் சுமந்து வந்த போது தமது வாழ்பனுபவங்களைத் தேடித் தோற்ற பெண்கள் தமது எழுத்து வெளிப்பாடுகளூடாக, தமது யன்னல்களைத் திறந்தார்கள். அதனூடாக இதுவரைகாலமும் தானுணர்ந்திராத பெண் குரலை தன்னுள் பதிந்துகொண்டது எழுத்துலகம். அந்த யன்னல்கள் அடுப்படிகளையும் மாதப் போக்கு, பிரசவ வலியென இன்னொரு உடலின் இருப்பைப் பேசின. இப்படியாய்ப் பேசப்படாதவையின் குரல்கள் முனைப்புப் பெறுகிற போதே மனிதர்களிடையே ஓரொருவர் குறித்த புரிந்துணர்வுகளும் வளர முடியும்; எமதான சினிமாவும் அத்தகைய தேவையே.
கூடவே: உலக சினிமா இன்று பெரு வளர்ச்சி கண்டிருக்கிறது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வரவு ஒருபோது மேட்டுக்குடிக்கு மட்டுமே சாத்தியமாக இருந்த ஊடகத்தை சாதாரணர்களின் கையிலும் தந்திருக்கிறது, புதியவர்களுக்கும் அவர்களின் பரீட்சார்த்த முயற்சிகளுக்கும் வழிவிட்டு.

மொழி, பேச்சுவழக்கு; அதன் இயல்புதன்மைகள் — கடைசி இருக்கை நாடக ரசிகர்களையும் மனதில் வைத்திருக்கும் நாடக மேடைக்குரிய சற்றே மிகைப்படுத்தப்படும் அங்க அசைவுகள், விரிவுகள் இன்றி — திரைமொழியில் வேறொரு பரிமாணத்தை வேண்டி நிற்கின்றன. எந்த தடங்கலும் இல்லாமல், நதி அசைந்தசைந்து மெதுவே தன் இயல்பிழக்காது ஓடிக் கொண்டிருப்பது போல, சமகாலத் கிழக்கத்தியத் திரைப்படங்கள், தம் மொழியின் வழக்குகளை லாவகமாய் கையாளும் இயக்குநர்கள், நடிகர்கள், கதாசிரியர்களுடன், சமயங்களில் கதையென என்றே கூட ஒன்றும் அற்று கமராவாலேயே தம்மை நகர்த்தக் கூடியளவு வளர்ந்துள்ளன.

இங்கே ‘எமது திரைப்பட மொழி’ என்கிற திசையில் சிந்திக்கின்ற போது, சிலவற்றை குறிப்பிட வேண்டும்.
1. எப்படி கனடிய திரையுலகம் என வருகிறபோது, அதன் சுயாதீனமான இருப்பை (சந்தைப் பெறுமதியை) அமெரிக்க – ஹொலிவூட் படங்கள் பாதித்தனவோ, அதுபோலவே ஈழத்துத் திரைப் படங்கள் என வரும்பொதும் ‘இந்திய’ மோகம் தலைப்படுவதைக் காணலாம். ஈழத் தமிழ் மொழி அடையாளத்தை ஒரு நாடகத் தமிழாய் எடுத்துத் தமிழக சினிமா கொன்றது எனில், எமது (வெளிநாட்டுத் தமிழர்களது) திரைப்படத் தயாரிப்புகளிலும் நடிகர்கள் ‘இந்தியத் தமிழை’ப் பேச வெளிக்கிட்டார்கள். மொத்தத்தில் ‘பெரிய’ திரைத்துறைகளுக்குக் கீழிருந்து வருகின்றவர்களது தாழ்வுணர்ச்சியைக் கடந்து ‘சிறிய’ நாட்டவர்கள் தலையெடுக்க அவகாசம் தேவைப்படுகிறது; அந்த அவகாசம் அவர்களுக்கான தனித்தன்மையை கண்டுகொள்வதற்கானது.
2. இன்று கனடியத் திரைப்படத் துறை (ஆங்கில, மற்றும் பிரெஞ்சு சினிமா) அருமையான திரைப்படங்களைத் தயாரிக்கின்ற துறையாக இருக்கிறது; ஹொலிவூட்டை மிஞ்சி அது வந்துவிட்டதென்பதல்ல, ஆனால் ‘தனித்துவமான சினிமா’வை தனது பிரதேசங்களுக்குரிய கதைகளை எடுத்து உருவாக்க முடியும் என்பதை அது நிரூபித்திருக்கிறது. இன்று, பேர்பெற்ற சர்வதேச திரைப்பட விழா வருடாவருடம் ரொறன்ரோவில் நடப்பதை பலரும் அறிவார்கள்.
3.அடிமைகளாக கொண்டுவரப்பட்ட கறுப்பர்கள், அமெரிக்காவின் வெகுசன சூழலுள் கால்பதிக்க எவ்வளவு காலமெடுத்ததோ, அதையும்; அப்படிக் காலம் வாய்த்து, முதன்முதலின் ஒரு கறுப்பர் அமெரிக்க தொலைக்காட்சியில் தோன்றிய கணத்தின் முக்கியத்தையும் அறிந்தவாறே, வெகுசன சூழலுக்குள் வருகின்ற சிறுபான்மை முயற்சிகளை மதிப்பிட முடியும்.

3 இரவு 4 பகல் – ஒரு குறும்படம்:

சமீபத்தில் பார்க்கக் கிடைத்த ஒரு குறும் படம் “3 இரவு 4 பகல்” (பிரான்ஸ்) – நெறியாள்கை: ஐ.வி.ஜனா). வழுக்கி விழும் படிக்கட்டுகள், செல்வந்த வீடுகள், செயற்கையான கதைக் களங்கள், இவற்றுடன் கூடவே தமிழ்சினிமா மோகத்தில் எடுக்கப்படும் திரைப்பட முயற்சிகளிலிருந்து மாறுபடும் அசல்க் கள்ளக்குடியேறிகளது கதை..

கள்ளக்குடியேறிகளாய் ஏஜென்சிகளுடாக புறப்பட்ட ஈழத்தவர்களது பயணத்துக்கு ஒரு 30 சொச்ச ஆண்டுகள் வரலாறு உண்டு. 1980கள் 1990கள் 2000கள் அதன்பிறகு இப்போ கப்பலிலும் என மொஸ்கோ, தாய்வான், பாங்கொக் என நகரங்களது பெயர்கள் எல்லாம் ஏஜென்சிகள் ஊடாகப் போகிற எமது உறவுகள் ஊடாகவே நாம் அறிந்தோம். சிலரோ போனவர்கள் போனவரே, மொஸ்கோக் குளிரில் விறைத்தும், பனி ஏரிகள் உடைந்து அவற்றினுள் மூழ்கியும் தொலையுண்டு போனார்கள். விழுந்த உடல்களை விட்டுவிட்டே எஞ்சியவர் பயணங்களும் தொடர்ந்திருக்கின்றன. பாரம் தாக்க தொடர்ந்த பயணங்களை பகிரும் இப் படத்தை ஒத்த எமது கதைகள் படமாக்கப்படுகிற போது அவற்றின் பாதிப்பு எமதல்லாததான தமிழ்(தமிழக)சினிமா பாதிப்பிலிருந்து வேறுபட்டதாகவே இருக்கும். ஒன்று எமது கதை, எமது துயரம்; மற்றது இரவல்.

கப்பல் தமிழர்கள் அல்லது கள்ளத்தோணி தமிழர்களுக்கு எதிரான வெள்ளை சமூகத்தின் கேள்விகள் பெரும்பாலும் இவ்வாறு அமைந்திருக்கும் (ஒரு இணையத்தள பின்னூட்டம்): “Don’t be fool by these Tamils, they are liars. Their aim is to come to Canada because everything is provided for FREE from welfare cheques, health care, medical care, dental care, lodging and other social benefits which they did not contribute a dime into our system.
If these Tamils have money to pay a large sum amount of $50,000 to the human smugglers (Tamil Tigers), then they are not refugees.
Wake up Canada before it’s too late.”

“கப்பலில் வந்தவர்கள் ஒவ்வொருவரும் தலா தலைக்கு 45-50, 000 டொலர்கள் கொடுத்தார்களாம், இவர்கள் அகதிகளோ? நல்ல கதை?” என்பதே அந்த மனநிலையின் சாரம்.

இந்தத் திரைப்படத்தில் அவர்கள் கடந்து வருகிற பயணத்தின் நிரந்தரமின்மையும் அபாயமும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அத்துடன், 45 000 டொலர்கள் வரை கொடுக்கின்ற மனிதனால் பரிஸில் கேவலம் ஒரு பஸ் ரிக்கற்-இற்கான சில்லறைகளை ஒழுங்கு செய்ய முடியாமையைப் பேசுகிறது. அந்த அபத்தத்தை பார்வையாளரிடம் கடத்துவதே படைப்பின் சிறப்பு. ஒரு பேரமும், அந்த பேரத்துக்காக உழைக்கின்றவன் (உழைக்கின்றவள்) முகமும், அவர்கள் படுகிற வாழ்வின் பாடுகளும் திரையில் காட்டப்படுகிறது.
இனவாத பிரச்சாரங்கள் ஏற்படுத்துகின்ற பதட்டத்துக்கு எடுபடுகிற மக்கள், அவர்களும் வறியவர்களாக இருக்கின்ற சந்தர்ப்பத்திலும் கூட, எளிய விடயங்களைக் கூட காண முடியாதபடி, அரசியல் பிரச்சாரங்கள் அவர்களது கண்களை (சிந்தனையை) மறைக்கின்றன. சிந்தித்தால் தெரியும்: மேற்கின் எந்த நாட்டின் சமூகநல உதவிப் பணத்திலும் மிச்சம் பிடித்து ஒருவர் 45 000 டொலர்களை ஏஜென்சிக்கு குடுக்க முடியாது என்பது. உணவு, உறைவிடம், குடும்பம் என இருக்கின்ற பொறுப்புகளுக்கு போக, மீதி என வேறு சேமிப்பதற்கு தகவாய் வழங்க, அப்படியொன்றும் மேற்கின் சமூகநலத்துறை வள்ளல்களுக்குரியதல்ல. மாறாய், அனேகமாக, இரண்டு வேலைகள், வங்கிக் கடன்கள், கடனட்டை கடன்கள், ‘வட்டி’முறைகள் என இன்ன பிறவற்றின் உதவியுடனேயே ஏஜென்சிக்கு பணம் கைமாறுகிறது. “எங்கட வரிப் பணத்தில் அவர்கள் வாழுகிறார்கள்” என கூறுகின்றவர்கள், 30 வருடமாய், இந் நாட்டின் சட்டபூர்வமான பிரசைகளாய் உள்ளவர்கள் வரி கட்டாமல் விட்டால் வருமானவரித்துறை பாவம் இருக்கட்டும் என விட்டு விடுவார்களா எனச் சிந்திப்பதில்லை. சிலவேளை கண்ணுக்குத் தெரியாத – ஆனால் மிகச் சாதாரணமான – விடயங்களைக் கூட விளங்கப் படுத்திக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால் உலவும் கட்டுக் கதைகளைச் சகிக்க வேண்டி வரும்! இதையொத்த படங்களும் வெகு சன வெளியில் இவற்றினது புழக்கமுமே ஒரு இனத்தைப் பற்றி உலவும் புனைவுகளுக்கு விடுதலை அளிக்கும். அப்படிப் பார்த்தால், இன்னும் இத்தகைய பலப் பல முயற்சிகள் வர வேண்டியிருக்கிறது.

♀♂♀

– பிரதீபா கனகா – தில்லைநாதன்

Photo: from the article “Boat people for prime minister” art installations spotted around Toronto” in BlogToronto

நன்றி: ‘தாய்வீடு’ – Published in ‘Thaiveedu’ NewsMonthly’s May Issue

Advertisements
Leave a comment

2 Comments

 1. Nalliah Thayabharan

   /  March 17, 2012

  ஒரு நாட்டின் பூர்வீகக் குடிகள் அந்நாட்டின் வளமான பகுதிகளில்தான் வாழ்வார்கள். அண்மைக் காலத்தில் குடியேறிவர்கள் தான் வளமற்ற பகுதிகளில் வசிப்பார்கள். இலங்கையின் வளமான பகுதிகளில் வசிப்பவர்கள் யார் ? தமிழர்களே அல்ல

  உங்களில் யாருக்காவது ஆறு தலைமுறைகளுக்கு முன்னாள் உங்கள் மூதாதையர் யார் என்று தெரியுமா ?

  மலையகத் தமிழர் எல்லாரும் ஆங்கிலேயரால் இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்டவேர்களே தவிர களவாக வள்ளங்களில் வந்தவர்கள் அல்ல. உண்மையில் இவர்கள் கள்ளத்தோணிகளும் அல்ல

  கடந்த எண்ணூறு ஆண்டுகளுக்கு மேலாக கலிங்க படையெடுப்பில் தொடங்கி இருநூறு வருடங்களுக்கு முன் புகையிலை பயிரிட்டு பஞ்சம் போக்கவென வந்தவர்கள் வரை வடஇலங்கைக்கு களவாக ஆயிரக்கணக்கானோர் வள்ளங்களில் தமிழ்நாட்டில் இருந்து வந்தனர்.

  பின்னர் நூறு வருடத்திற்கு முன்னர் இவர்களில் ஒரு பகுதியினர் பர்மா(மியான்மார்) சிங்கப்பூர் மலேசியா என்றெல்லாம் பணம் தேட வள்ளங்களில் போனார்கள்.

  அறுபது வருடங்களுக்கு முன் இவர்களில் பலர் மீண்டும் இலங்கைக்கு திரும்பி வந்தனர். கடந்த முப்பது வருடங்களாக மத்திய கிழக்கு இங்கிலாந்து அமெரிக்கா அவுஸ்திரேலியா கனடா பிரான்ஸ் ஜெர்மனி நோர்வே சுவிஸ் டென்மார்க் ஒல்லாந்து இந்தியா என்று பல நாடுகளுக்கு பொருள் தேடி குடும்பமாக குடி பெயர்ந்தனர்.

  திரை கடல் ஓடிய் திரவியம் தேடுவதில் நாங்கள் வல்லவர்கள். வள்ளமும் தோணியும் எங்கள் வம்சமெல்லாம் இன்று உலகமெலாம் பரவ மிக முக்கியமானவை.

  வெளி மாவட்டங்களில் யாழ் அகற்றி சங்கங்கள் அமைத்த முந்தி வந்த யாழ்ப்பாணி பிந்தி வந்த யாழ்ப்பாணியை யாழ்ப்பாணி என்பது போல முந்தி தோணியில் வந்தவன் பிந்தி தோணியில் வந்தவனை கள்ளத்தோணி என்றது தான் உண்மையான எங்கள் வரலாறு. இதனால் தான் சொத்து மீதும் பணத்தின் மீது நாம் கொண்ட பற்று சக மனிதர் மீதும் இருக்கும் நாட்டின் மீதும் எமக்கு கிடையாது.

  எங்கள் முன்னோர் போலவே நாமும் நாடோடியாக எப்படியாவது திரவியம் தேடுவதில் வல்லவர்கள். ஆனால் வாழ்க்கையை அனுபவிக்கதான் எமக்கெல்லாம் தெரியாது.

  நாங்கள் எப்படி எல்லாம் நாடுவிட்டு நாடு ஓடினோம் என்பதற்கு பிரித்தானிய புள்ளிவிபர ஆதாரங்களை பாருங்கள். 160 வருடங்களுக்கு முன் 1834கும் 1870கும் இடையில் அதாவது 36 வருடகாலத்தில் மதராஸ் பகுதியில் இருந்து மட்டும் 14 லட்சம் பேர் வடஇலங்கைக்கு குடிபெயர்ந்தனர். அதே காலப்பகுதியில் 8 லட்சம் பேர் வடஇலங்கையில் இருந்து மதராஸ் பகுதிக்கு குடிபெயர்ந்தனர். ஆகவே இந்த 36 வருடங்களில் மட்டும் 6 லட்சம் பேர் மேலதிகமாக வடஇலங்கையில் குடியேறி உள்ளனர். இதில் கேரளா, திருநெல்வேலி, ராமநாதபுர பகுதிகளில் இருந்து வந்தவர்கள் உள்ளடங்கவில்லை. அவர்களையும் சேர்த்தால் குடியேறியவர்களின் தொகை பத்து லட்சத்தையும் தாண்டி விடும் .

  150 வருடங்களுக்கு முன் தென் கிழக்காசியாவில் உள்ள சகல பிரித்தானிய துறைமுகங்களிலும் தமிழர்தான் வேலை செய்தனர். பீஜீ, கயானா, ஜாவா, கம்போடியா, மொரீசியஸ், தென் ஆபிரிக்கா என்றெல்லாம் 150 வருடத்திற்கு முன் திரவியம் தேடி போனவர்கள் எம் முன்னவர்கள். ஜப்பான்காரனுக்கு ஜப்பான் சொந்தம் ஜேர்மன்காரனுக்கு ஜேர்மன் சொந்தம் பிரெஞ்சுகாரனுக்கு பிரான்ஸ் சொந்தம் சீனாக்காரனுக்கு சீனா சொந்தம் கொரியர்களுக்கு கொரியா சொந்தம்
  எங்களுக்கோ இந்த பூமியே சொந்தம் யாதும் ஊரே யாதும் கேளீர்.

  நாங்கள் எல்லாரும் பெரும்பாலும் நாடோடிகள் தான். அந்த நாடோடிகளின் திரவியம் தேடும் சிந்தனையின் விளைவே எங்களுக்குள் இருக்க கூடிய அடிமைப் புத்தி. பூர்வீகம் பூர்வீகமாக ஒரே இடத்தில் இருந்து வாழ்ந்தவர்கள் பிரச்சனைகளை விட்டு தப்பி ஓடுவதை விட்டு பிரச்சனைகளை தீர்க்க சிந்திப்பதில் ஆர்வம் காட்டுவார்கள்

  Reply
 2. நன்றி தயாபரன்.
  நிறைய தகவல்கள்….

  சில வருடங்களுக்கு முன்னர் நடந்த வரலாறே தெரியாதவர்களாகத்தான் எமது தலைமுறை உள்ளது.
  அறிந்தவர்கள் வரல◌ாற்றை தொடர்ந்து கத்திக் கொண்டிருப்பது இஙங்கே மிக அவசியமானதே.

  Reply

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: