வெல்கின்ற பக்கத்தைத் தேருபவர்கள் யார்

01.

இவ் வருட பெண்கள் தின ஊர்வலங்களில் ஆகட்டும், மேதின ஊர்வலங்களிலாகட்டும் உழைக்கும் மற்றும் பலதரப்பட்ட சிறுபான்மை மக்கள் குழுக்கள் இணைந்து ஆளும் பழமைவாத (கொன்சவேட்டிவ்) கட்சிக்கு எதிராய், ‘புதிய ஜனநாயகக் கட்சி’க்கான ஆதரவு குரல்கள் எழுந்தன. எளியோர் நலன்களில் அக்கறை கொண்ட சிறு குழாம்கள் மாற்றத்தினை வேண்டி ஒன்றிணைந்தன. பல சாராரின் பிரச்சாரத்தினால், முன்னெப்போதும் இல்லாதளவு ஆதரவை (குறிப்பாக பிரேஞ்சு கனடியர்களது கியுபெக் மாநிலத்தில் தேசீயக் கட்சியே பின்தள்ளப்பட்டு) ‘புதிய ஜனநாயகக் கட்சி’ பெற்றது. ‘Raise Welfare! Disability Rates! Restore Special Diet!’ ‘United we eat, divided we starve’ போன்ற கோசங்களூடாக, சமூகநல உதவிகள், சலுகைகள் தொடர்பில் நிதி ஒதுக்குவதை நிறுத்த வேண்டாமென்றும்; மருத்துவத் துறையை தனியார்மயமாக்குதல், உணவுப் பொருட்கள்-எரிவாயு விலைவாசி ஏற்றம், மத்தியகிழக்கில் தொடரும் கனடிய இராணவ நிலைகொள்ளல் என்பனவை தொடர்பில் அவை எதிர்த்துக் குரல் கொடுத்தன.
முன் ஒருபோதும் புதிய ஜனநாயகக் கட்சிக்கு வாக்களிக்காதவர்களைப் பொறுத்தவரை (ஏனெனில் அது ‘வெல்கின்ற’ இரண்டு கட்சிகளில் ஒன்று அல்ல என்பதால்!) ஒவ்வொரு தேர்தல் சமயமும் குழப்பத்துக்கு உள்ளாவார்கள். இருக்கின்ற இரண்டு சாத்தான்களில் எந்த சாத்தானால் ‘குறைந்த’ அழிவு உள்ளது என்பதை அளவிடுவதிலுள்ள குழப்பம்தான் அது. இன்னும் சொல்லப் போனால் மூன்றாம் சக்தி ஒன்றை உருவாக்க எத்தனிக்காத ஒரு வட்டத்துக்குள்ளேயே பழகிப் போன மனதின் குழப்பம். இதனாலேயே, சுருதி மாறாமல் பல நாடுகள், ஒன்று மாறி இன்னொன்று என தமக்குதவாத அரசாங்கங்களை தேர்ந்தபடியிருக்கிறார்கள்.

இதற்கு முந்தைய தேர்தல்களில் எல்லாம், புதிய ஜனநாயக கட்சிக்கு வாக்களிக்கும் சிலரைப் பொறுத்தவரை, இம் முறையும் ஆளும் கட்சி வெல்கிற வாய்ப்பு இருப்பதை அறிந்ததும், புதிய குடியேறிகள் தொடர்பில் நச்சுத்தனமான துவேசங்களைக் காவும் கொன்சவேட்டிவ் கட்சியை ‘வராமல் பண்ண’ லிபரலுக்கு வாக்களிக்கலாம் என முடிவு செய்தார்கள். காண்பவர்களிடமும் அதையே வேண்டினார்கள். சிறுபான்மை மக்களது நலன்களில் அக்கறையுள்ளவர்கள் என்றபோதும் அவர்கள் மிகுந்த அக்கறையுடனும், காப்பர் போன்ற ஒருவர் வெற்றி பெற்று வந்தால் சிறுபான்மை மக்கள் எதிர்கொள்ளக் கூடிய நெருக்கடிகளையும் மனங்கொண்டு அவ்வாறு வேண்டினார்கள். ‘இந்த முறை நாங்கள் strategically வாக்களிக்க வேண்டும்!’

எமது உத்திகள் எப்போது பலித்திருக்கின்றன? எந்த புத்தறிவும் அற்ற, ராஜதந்திர நகர்வு அல்லது strategic move போன்ற அரசியல் தரிசனங்கள் எல்லாம் கடற்கரையோரம் நல்ல மணல் கோட்டை என எமது போராட்டத்திலேயே நடந்து முடிந்த வரலாறு இருக்கையில் அவர்களுடைய அந்த ராஜதந்திரப் பரிந்துரையில் மனம் எடுபடவில்லை. தேர்தல் காலத்து எமதேயான அனுபவமான ராஜதந்திர அரசியல் உத்தியின் சிறப்பினைக் கூற சந்திரிக்காவும் ராஜபச்சேவும் மனக் கண்ணுள் சிரித்தவாறு கையசைத்தார்கள்.

கனடாவில் வரலாறு படைத்திருக்கும் தேர்தல் முடிவுகள், அவர்களது (எமது) strategy–க்கு புறம்பான உண்மைகளையே கூறுகிறது.
(1) அத்தனை புதிய ஜனநாயக கட்சியின் வாக்குகள் போயிருந்தாலுங்கூட லிபரலைக் காப்பாற்றியிருக்க முடியாது.
(2) புதிய ஜனநாயகக் கட்சிக்கு வாக்களித்த சிறுபான்மை மக்கள் தமது குரலை, தம்மாலும் மாற்றுக்களை அது அல்லது இது என்று மாற்றி மாற்றி பழைய மொந்தையிலேயே உழன்று கொண்டிராமல், ஒரு புதிய சக்தியை தேர்வு செய்ய முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.
(3) கொன்சவேட்டிவ்-ஐ வெல்ல செய்திருப்பது அவர்களுக்கு விழுந்த ‘லிபரல்’ வாக்குகளே.

பழமைவாதக் கட்சி போலன்றி, ‘முன்னோக்கான’ லிபரல் கட்சியை ஆதரிக்கிற லிபரல்கள் எப்படி பழமைவாத கட்சி ஒன்றுக்கு வாக்களித்திருக்க முடியும்? இதற்கான பதில், இரண்டுமே ‘கிட்டத்தட்ட’ ஒன்றுதான் என்பதன்றி வேறென்ன? மணிரத்னம் படங்களில் ஏனையவர்கள் கணக்கிலெடுக்காத சிறபான்மையிலும் சிறுபான்மையான மனித இருப்புகளான அலிகள் என கொச்சைப்படுத்தப்படுகிற அரவாணிகள் அல்லது திருநங்கைகள், மற்றும் பெண்கள் கண்ணியத்துடன் காட்டப்படுவது போல, சில சில விடயங்களில் ‘பரந்த’ எண்ணங்களும் மைய்யமான (பரப்புரையாய்) எண்ணமாய் பிற்போக்கு (வன்முறையின் வலிகளை கணக்கெடுக்காத தேசீய ‘வாதமும்’ கொண்ட) அரசியலிருப்பது போல இந்த எதிர்க் கட்சிகள் இருக்கின்றன. பெரும்பான்மை சனத்தொகைக்கு ‘பழகிப்போய்விட்ட’, அதனால் மாறி மாறி ஆட்சியில் ஏற்றப்படும் இந்தக் கட்சிகளுக்கிடையில் அடிப்படை முரண்பாடுகள் பெரிதாய் இல்லை என்பதையே காலத்துக்கும் அவர்களது சந்தர்ப்பவாத அரசியல் முன்(பின்?!)நகர்வுகள் அம்பலப் படுத்தியிருக்கின்றன. இல்லாவிட்டால்: கடவுள் மறுப்பு உள்ளிட்ட பெரியாரின் கருத்துநிலையை அடியொற்றி வந்தவர்கள் எப்படி பாரதீய ஜனதா போன்ற ஒரு ஜாதீய கட்சியோடு கூட்டுச் சேர முடியும்? பாலஸ்தீனத்தின் இருப்பை ஆதரிப்பவர்கள் எப்படி அதன் இருப்பை நிராகரிக்கிற இஸ்ரவேல் அரசாங்கத்தைச் சாருகிற ஒரு கட்சியை ஆதரிக்க முடியும்?

02

சமீபத்தைய வெகுசன கனடிய அரசியலிற் பேசப்பட்ட (பூதாகரப்படுத்தப்பட்ட) கப்பலில் வந்திறங்கிய புதிய அகதிகள் குறித்த அச்சம் கொன்சவேட்டிவ் இன் பிரச்சாரத்துக்கு மிகவும் உதவியிருந்தது. இந்தப் புதிய குடிவரவாளர்கள் எங்கே ‘தமது’ நாட்டை அபகரித்து விடுவார்களோ என்கிற மனப் பயம் மிகவும் ஆழமாக ஊன்றப்பட்டது. பல பூர்விகர் குழுமங்களினது பல தேசங்களாக இருந்த இந்த பெரிய நிலப்பரப்பின் இன்றைய குடியாளர்கள் (முந்தைய ஆக்கிரமிப்பாளர்கள்) தாம் இன்னொரு நாட்டை அபகரித்த நினைவு-மறதியில் வரும் புதியவர்கள் குறித்த அச்சங் கொண்டார்கள். இது தொடர்பில்தான் ‘லிபரல்களில்’ பெரும்பான்மையின் நம்பிக்கை குறைந்தது. இப் பிரச்சினையை ‘எதிர்கொள்ளத்தக்க’ தீர்வுகள் ஏதும் லிபரல்களிடம் (அவர்களது பேச்சு வல்லமையில்) இல்லை என்பதே பெரிய ஏமாற்றமாகப் பார்க்கப்பட்டிருந்தது. அதை ஆளும் சக்தி வாக்கு வங்கி நன்கு பயன்படுத்திக் கொண்டது.

கடந்த ஆட்சியில் என்ன மும்மாரி பொழிந்தது என்று பார்த்தால் நிலமை ஒன்றும் உவப்பானதாய் இல்லை. கடந்த வருடத்தின் ஜுன் மாதத்திலிருந்து: வேலைவாய்ப்பின்மை அளவு அதிகரித்துள்ளதுடன், கடந்த ஜுலை மற்றும் நவம்பருக்கு இடையில், 10,000 தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளார்கள். பெப்ரவரி 2008இலும் பாக்க, 64,000த்திலும் அதிகமான வேலை செய்யக் கூடிய வயதுடைய கனடியர்கள் வேலை வாய்ப்பற்றுள்ளார்கள் (தகவல்கள் நன்றி: www.canadauncut.net))

இதில், பெரும்பான்மை கனடியர்கள் அதிகம் வசதியற்றவர்களாய் (கணிசமான அகதிக் கனடியர்கள் வாழ்க்கைத் தரம் வறுமைக் கோட்டிற்குக் கீழவாய்), நடுத்தரவர்கக்த்தினராயே இருந்த போதும் அவர்களில் ஒரு பகுதி கொன்சவேட்டிவ்வுக்கே வாக்களிக்கும் மக்களின் ஆதரவுடன், இந்தியாவில் பிஜேபி போன்ற மதவாத கட்சி ஆட்சியில் ஏற முடிவது போல. மத்தியகிழக்கில் அடிப்படைவாதம் வெல்லமுடிவது போல. மேலும் பல நாடுகளில் தேசீயம், மதம் போன்ற மனிதர்களைப் பிரிக்கும் அம்சங்களைத் தமது உருவேற்றும் கொள்கைகளின் மையமாய் வைத்து கட்சிகள் வெல்வது போல.

துவேசமான கருத்தியல்களால் உருவேற்றப்படுகின்றவர்கள் பாதிப்படைபவர்கள் வறியவர்களே. அவர்களே அதி தீவிர அரசியலால் ஈர்க்கப்படுபவர்கள், இலகுவில் மூளைச் சலவைக்கு உள்ளாகுபவர்கள். அவர்களே தங்களைப் போன்ற ஏனைய வர்க்கத்துக்கு எதிராய் மத, தேசியஉணர்வுகள் ஊடாகத் தூண்டப் படுபவர்கள். எங்கே ஒரு முஸ்லிம் ஆதிக்கம் செலுத்திவிடுவானோ என்கிற பயம் குஜராத்தில் நரேந்திர மோடி என்கிற கொலைக் குற்றங்களுக்குரிய தலைவனை ஆட்சியில் ஏற்றுகிறது. சமூகத்தில் ஒடுக்கப்படுபவர்கள் நலன்களைக் கொண்ட இடஒதுக்கீட்டுக்கு எதிராய், பெண்ணின் கருவறை உரிமைகளுக்கு எதிராய் என, மனிதர்களது அடிப்படை மற்றும் சமச்சீரை வலியுறுத்தும் உரிமைகளை – சந்தர்ப்பவாத அரசியலாளர்களால் உருவேற்றப்படும் பேரச்சங்கள் காரணமாக – மனிதர்களே பலிகொடுக்கிறார்கள். இது அவர்களது பிள்ளைகளை, அவர்களை, அவர்களது மகள்களை, சக மனிதர்களைப் பாதிக்கும் என்கிற போதும், அதை அறியாதவர்களாய் அவர்கள் வழிநடத்தப்படுகிறார்கள். தேசீய, ஆணாதிக்க, ஜாதிய’வாதம்’கள் மனிதர்களது (சக மனிதர் குறித்த மனிதத்துவத்தினது) கண்களை மறைக்கிறது. விளைவு: அவர்களது வாக்குகளாலேயே, இவ்வளவு தூர பிரச்சாரத்தின் பிறகும், கடந்த தேர்தலில் சிறுபான்மை வெற்றியில் ஆட்சி செய்த கொன்சவேட்டிவ் கட்சி இம்முறை மாபெரும் வெற்றி பெற்று பெரும்பான்மை ஆட்சியை அமைத்திருக்கிறது.

03
‘தேசம்’ குறித்த கனவு:

ஒரு தேசத்தின் வாழ்க்கைத் தரத்தை நிர்ணயிப்பது அது வசதியானதாக, வல்லரசாக இருப்பதிலோ, அதன் இராணுவ பலத்திலோ, தன் நாசகாரப் படைகளை இன்னொரு நாட்டுக்கு அனுப்புவதிலோ, நிறைய வளங்களைக் கொண்டிருத்தலிலோ – இல்லை. மாறாக, அந்த வளங்களும் செல்வமும் தேசத்தின் சகல பிரஜைகளுடனும் பகிரப்படுவதிலும், வேலை வாய்ப்புகள், வாழ்வை உளைச்சலற்றதாக்கும் வேலைத்தள சலுகைகள், மற்றும் ஏனைய பல வாழ்வாதார உரிமைகள் கொண்டிருத்தலிலும், சுற்றாடல், மட்டும் மனித உயிர் வாழ்தலுக்கு எதிரான விடயங்களை செய்யாதிருத்தலிலும் இருக்கிறது.

தேசத்தின் பிரஜைகளின் உளைச்சலற்ற அமைதியான மனநிலைக்கு உதவுவது அவர்கள் உருவாக்கிய குடும்பங்களுக்கான சலுகைகள் (உ-மாக குழந்தைப் பராமரிப்பு மற்றும் வலுவளருக்கானவை), வேலைத்தள பாதுகாப்பு, இலவச மருத்துவம் மற்றும் கல்வித்துறை, வயது முதிர்ந்தவர் ஓய்வூதிய மதிப்புகள் போன்ற நிரந்தரக் காப்புறுதிகள் தான்.
ஆனால், இவற்றையன்றி, தேசஅபிமானம், வல்லரசுஆதல், இராணுவபலம், முதலீடுகளது வெற்றி போன்றன முன்நிலைப்படுத்தப்பட்டு, மக்கள் அவற்றில் தான் தம் வாழ்க்கைத்தரம் தங்கியிருப்பதாக நம்ப வைக்கப் படுகிறார்கள். பெரும்பான்மையான உழைக்கும் மக்களை விடுத்து, நாட்டின் சனத்தொகையில், 1 விகிதத்திலும் குறைவான முதலாளிகளது நலன்களுக்கே இந்த அரசாங்கங்கள் சேவை செய்கின்றன. கொள்ளை இலாபம் சம்பாதிப்பவர்களுக்கு வரிக்குறைப்பு, வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் தொழிலாளர்களுக்கோ வாழ்வாதார சலுகைகள், சம்பளம் என்பன குறைப்பு – இவ்வாறு தான் அரசாங்கத்தின் வறியமக்கள்-மற்றும்-முதலாளிகள் ‘நியாயத் தராசு’ இருக்கிறது. வல்லன வாழவும் அல்லன தேயவும் தான் ‘விதி’ செய்யப்படுகிறது.

அரசாங்கங்கள் செய்கின்ற இந்த நியாயம் எம் குடும்ப அமைப்புக்குள்ளும் ஒன்றும் புதிதல்ல. வசதியான குடும்பங்களில் உள்ள ஆரோக்கியமான பிள்ளைகளுக்கு உறவுக்காரர்கள் விழுந்து விழுந்து சாப்பாடு கொடுப்பதும், கஸ்ரப்பட்ட குடும்ப பிள்ளைகளைக் கணக்கெடுக்காது விடுவதும் என, இருப்பவர்களை நோக்கித் தானே கவனமும் அக்கறைகளும் குவிக்கப்படுவது நியதி?!

இந்த நியதிக்கேற்ப, அரசாங்கங்களும் பணக்காரர்களின் சேவகர்கள் ஆகின்றன. மக்களும் ஒவ்வொரு வருடமும் மாறி மாறி ஒரே நலன்களைக் கொண்ட நபர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகளின் சம்பள விபரங்களைப் பார்த்தால் புரியும், இதால் அவர்களது குடும்பங்களும் – அவர்கள் நாலு வருசமிருந்து போடுகிற வாக்குகளில் இயற்றப்படுகிற சட்டச் சலுகைகளில் – வசதி படைத்தோரும் தவிர, யாரும் வாழப் போவது இல்லை என்பது.

04
தன்னிலை அறிதல்:

மனிதர்களின் கற்பனைகளையும் கலைத்துவ வெளிப்பாடுகளையும் ஊக்குவிக்காது கலைக்கான மானியங்களை வெட்டுதல், சுற்றுச்சூழல் குறித்த சட்டங்களுக்கு தொழிற்சாலைகளை பணிய வைக்காதிருத்தல், வாடகை. அன்றாட தேவைகள் விலைவாசி ஏற்றத்தில் எவ்வித கட்டுப்பாடும் வியாபாரிகளுக்கு விதிக்கப்படாமை என அரசுகளின் வலியோர் சார்புநிலை சாதாரண மக்களின் வாழ்வை மேலும் இறுக்கியிருக்கிறது.

மனித மேம்பாட்டுக்கான சமூகத் தூண்களில் ஒன்றான கல்விச் செலவுகள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன (இதனால் நிறைய மாணவர்கள் சிறுபான்மை மற்றும் வறிய குடும்பங்களில் இருந்து வருபவர்கள் மேற் கல்வியைத் தொடர அல்லது முடிக்க முடியாதவர்களாய் இடையில் கைவிட வேண்டியவர்களாய் எல்லாம் உள்ளார்கள்). பணமிருக்கிறவர்கள் கட்ட வேண்டிய வரியளவைக் குறைத்துவிட்டு, கல்விகற்க வேண்டிய இளந் தலைமுறையைக் கல்வி கற்காமற் பண்ணக்கூடிய விதத்தில் அதிகரிக்கும் ரியூசன் செலவை மட்டுப்படுத்தாத அரசாங்கங்கள் யாருக்கானவை?

ஒரு வறிய இந்தியர், தனது வறுமையையும் வாய்ப்பின்மைகளையும் தீர்க்காத ஒரு ஆட்சியை தேர்வு செய்வதை ஒத்ததே இத் தேசத்தில் ஏனைய சிறுபான்மையினரில் ஒன்றான தமிழ் சமூகம் கொன்சவேட்டிவ் (அல்லது லிபரல்) கட்சி போன்ற ஒரு கட்சியுடன் தன்னை அடையாளங் காண்பதும்.

எந்த ஒரு கட்சியிலும் வேட்பாளராய் நிற்பதும் வாக்குக் கேட்பதும் அவரவரது ஜனநாயக உரிமைகள் தான், அதை மறுப்பதற்கில்லை. ஆனால், தேர்தல் சமயங்களில் கேட்கும் சில கோசங்களான ‘தமிழர்கள் வெல்ல வேண்டும்’ ‘எந்தக் கட்சியில் நின்றாலும் உங்கள் தொகுதியில் தமிழரைத் தேருங்கள்’ ‘தமிழர்களைப் பாராளுமன்றம் அனுப்புவோம்’ என்பனவை குறித்த எதிர்மறையான கருத்துக்களை இங்கே பகிர வேண்டியிருக்கிறது.

மேற் குறிப்பிட்ட இங்குள்ள சிறுபான்மை இனங்களது பொருளாதார, வாழ்வாதாரப் பிரச்சினைகள் தமிழர்களுக்கு இல்லையா? குறைந்த சம்பளத்தில் இரண்டு வேலைகள் என்றெல்லாம் ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்களில் தமிழர்கள் இல்லையா? அவர்களது பிள்ளைகள் கல்விச் செலவினால் சிரமப்படவில்லையா?

எப்போதும் கஸ்டப்படும் சமூகங்களுக்கு என சில இயல்புகள் உண்டு. மூன்றாமுலக சேரிகளில் உழைக்கும் வர்க்கம் கடும் வண்ணத்தில் சேலைகளை ஆடைத் தெரிவுகளை தேருவதைக் காணலாம். ஒளியும் நம்பிக்கையும் அற்ற கடும் உழைப்பை வேண்டும் கடினமான வாழ்வின் சுமைகளை அவர்கள் வண்ண வண்ணமான (மிகவும் குறைந்த விலையில் வீதியோரக் கடைகளில் வாங்கிக் கட்டும்) சேலைகளில், அணியும் ஓட்டுக் காப்புகளில் கரைத்துக் கொள்கிறார்கள்.

இந்த நாடுகளது கறுப்பு சேரிகளில் கறுப்பின அம்மாக்கள் கடும் சிவப்பு நிறத்திலும் (எமது பார்வையில்) கண்ணைக் குத்தும் கலர்களிலும் ஆடைகள் அணிந்து கொண்டாட்டங்களில் நடனமும் பாட்டுமென தமது வாழ்வின் சுமைகளை சற்று நேரம் இறக்கி வைக்கிறார்கள்.

அது போல கனடாவில் இருப்பதாகக் சொல்லப்படுகிற 300,000 தமிழர்களில் போரில் இடம்பெயர்ந்தவர்கள் பலரும் கல்வியை இடைநிறுத்தியும், சட்டத்துக்கு விரோதமான வகையில் குடியேறியும், தம் வாழ்வை கடினமான பாதையாகவே கண்டவர்கள். அவர்களில் நலுங்காமல் புத்திஜீவிகளாக பல்கலைக்கழங்களிலும் காரியாலயங்களிலும் வேலை பார்ப்பவர்கள் குறிப்பிட்ட சதவீதத்தினரே. மற்றவர்கள், பெரிய வீடுகள், கார்கள் வைத்திருந்தாலும் கூட (அந்த ஆடம்பரங்களுள் தமது கடின வாழ்வின் கடுமையை மறைக்க முடிகிற போதும்), அதற்காய் கடினமாய் உழைக்கும் (முக்கியமாய் உடல் உழைப்பை நம்பிய) வர்க்கத்தினரே.

நிலமை இவ்வாறிருக்க, கொன்சவேட்டிவ் கட்சியில் போட்டியிடும், யாரேனும் ஒரு தமிழர் கொன்சவேட்டிவ் கட்சிக்குரிய மேட்டுக்குடி வர்க்கத்தைச் சேர்ந்தவராய் இருந்தாலுமே கூட (அதிக வருமானத்துடன், எனினும் சம்பாத்தியத்துக்கான அதிக வரி கட்ட விரும்பாதவராக இருப்பினிலுங் கூட) அவர் ஒரு தமிழ்த் தேசீய வாதியாக இருப்பின், அவர் வாக்குப் போடுமாறு கேட்கிற ‘அவரது மக்கள்’ எத்தகைய தொழில் வாய்ப்புகளில் இருக்கிறார்கள்? தொழிற்சாலைகளிலா பல்கலைக்கழகங்களிலா அல்லது வியாபாரிகளாகவா? எத்தனை விகிதம்? இன்று கப்பலில் வந்திறங்கும் தமிழர்களது உரிமைகளை பறிக்கக்கூடிய ஒரு கட்சியை தமிழர் நலன்களுக்கு ஆதரவாளர் என சொல்லிக் கொள்பவர்கள் எந்த அறத்துடன் ஆதரிக்க முடியும்? இங்கு வாழப் போகும் தமிழ் மக்கள் (தாங்கள் உள்ளிட்ட ஏனைய சிறுபான்மை மக்கள் குறித்தும் பொறுப்புணர்வுடன் சிந்திக்க வேண்டிய தமிழ் சமூகம்) தமது நிலைமைக்கும், ஏனைய சிறுபான்மை மக்களுக்கும் பாதகம் விளைவிக்கக் கூடிய பிரதிநிதியை அவர் தமிழர் என்கிற ஒரே ஒரு காரணத்துக்காக மட்டும் எப்படித் தேர்ந்தெடுக்க முடியும்?

துரதிர்ஸ்டவசமாக, தமிழர்களுடைய சந்தர்ப்பவாத அரசியலை அன்றி வேறு எதையும் இது காட்டி நிற்கவில்லை. (வெல்கிற பக்கத்தில்) எமக்கு யார் இடம் தருகிறார்களோ அங்கு நிற்க தயக்கமில்லாத தனக்கென ஒரு கொள்கையை வகுக்காத மனமே இங்கும் தொழிற்படுகிறது.

இலங்கை அரசாங்கத்துடன் ‘சேர்ந்து’ நிப்பவர்கள் என ஒருபாலாரைத் தூற்றுவதும், அதே சமயத்தில், (கப்பலில் வந்திறங்கும்) எமது மக்களில் ஒரு பகுதிக்கு மட்டுமல்ல இங்குள்ள ஏனைய (பல அநீதிகளை கடந்து இங்கு வந்த) சிறுபான்மை இனங்களுக்கும் அநீதி இழைக்கக் கூடிய சட்டதிட்டங்களை தன்னகத்தே கொண்டுள்ள கட்சியை ஆதரிப்பதும் முரண்பாடானது அல்லவா? (அதன் சட்டதிட்டங்களை மாற்றுவதெனில் ஒரு மாமாங்கம் வேண்டும், அதிலும் ஒரே ஒரு தமிழர் தேர்வாகி, வெள்ளை பெரும்பான்மை கட்சியுள் அதன் அத்தனை சிக்கல்களுள் எதை என்று மாற்றுவது?!)

எல்லாவற்றிலும் விட, ‘எந்தக் கட்சி என்றாலும் சரி’ என, நமக்கென ஒரு கொள்கையற்ற (யாரைச் சார்வது யாரைச் சார்வதில்லை என்கிற தீர்க்கமான அரசியல் பார்வையற்ற) சந்தர்ப்பவாதத்தை இட்டு இன்னமும் நாம் பெருமைப்பட என்ன இருக்கிறது? அது எந்தவிதமான வெற்றிகளை – ஒரு இனமாய் – இதுவரை எமக்கு அள்ளிக் குவித்திருக்கிறது?

05
வெல்லாத பக்கத்தை சேர்ந்த கட்சியின் வெற்றி

நடந்து முடிந்திருக்கும் கனடிய பொதுத் தேர்தலில் ‘புதிய ஜனநாயகக் கட்சி’யில் போட்டியிட்ட தமிழர் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினர் ஆகியிருக்கிறார்; அவர் ஒரு பெண் என்பதுடன் இத் தேசத்தில் வந்தேறிய சிறுபான்மை இனக் குழுமத்திலிருந்து அவர் தேர்வாயிருக்கிறார் என்பதும் அழுத்தப்பட வேண்டிய ஒன்று.

உண்மையில் புலம்பெயர்ந்த சூழலில், பொதுத் தேர்தலில், இந்த வெற்றிக்கு, இது தனியே தமிழர்கள் என்றில்லாமல் ஏனைய இனங்களது நலன்களுடன் ஒத்திசைந்திருந்தது தான் காரணம் ஆகியிருக்கிறது. அத்துடன் புதிய ஜனநாயகக் கட்சி போன்ற கட்சியில் தான் புதிய குடிவரவாளர்களுக்கும் வெள்ளையர் அல்லாதோருக்கும் இளையொருக்கும் பெண்களுக்கும் ‘ஒதுக்கீடு’ அதிகம்.

பத்தொன்பதே வயதான பதின்ம வயது பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட 6 பல்கலைக்கழக மாணவர்கள் இதே கட்சியில் பா.உறுப்பினர்களாகத் தேர்வாகியிருக்கிறார்கள்! தேர்தலுக்கு முன், பல்கலைக்கழக கல்விகான வங்கிக் கடனைப் பற்றி உளைச்சலுற்றுக் கொண்டிருந்திருக்கக் கூடிய இவர்களது வருடாந்த சம்பளம் இனிமேல்: 157, 000 கனடிய டொலர்கள்! இதே கட்சியில் தான் அதிக பெண் உறுப்பினர்களும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். (இலங்கையில் தமிழ் பாராளுமன்ற அரசியலில் எல்லாம் ஏன் புதிய அலைகள் வீசுவதில்லை? ஏன் எப்போதும் பழம்பெரும் தலைவர்களே இருக்கைகளில் குந்தியவாறு? மனதில் இத்தகைய கேள்விகள் எழுகின்றன)

கடந்த காலங்களில், (உள்ளுர், மாநிலத் தேர்தல்களில்,) சமூகநலன்களில் அக்கறைப்படுகிற அதற்காக செயற்படுகிற தமிழ் செயற்பாட்டாளர்கள் ‘புதிய ஜனநாயகக் கட்சி’ வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்ய கதவுகள் தட்டியபோது, பல தமிழ் நண்பர்கள், ‘தமிழர்’ என்பதற்காக லிபரல், கொன்சவேட்டிவ் நபர்களுக்கு வாக்களிக்கச் சொன்னார்கள். ‘இவை தான் வெல்லுகிற கட்சிகள். ஆகவே வெல்லுகிற ஒன்றை தேர்வதூடாக எமது குரலை அவர்களூடாக நாங்கள் ஒலிக்கச் செய்யலாம்’ என்றார்கள். இவ்வாறாய், ‘எப்போதுமே புதிய தரிசனங்களை, புதிய மாற்றங்களை ஏற்படுத்துதல் சாத்தியமில்லை’ என்று கூறி வந்தவர்களது நம்பிக்கைகளை இந்த வெற்றி பொய்ப்பித்திருக்கிறது. எம் பெரும்பான்மைத் தமிழர்களைப் பொறுத்தவரை இவ்வளவு காலமும் ‘வெல்கிற’ பக்கத்தை சார்ந்து நின்று, ஓடுவதில் நன்கு ஓடுற குதிரைக்கு பந்தயம் கட்டிய, தம் பாரம்பரியத்தை மீறி தமக்குரிய கருத்துநிலைக்கேற்ப ஒரு கட்சியைத் தேர்ந்து, அதன் வேட்பாளருக்கான ஆதரவை, பத்திரிகைகள், தனிநபர்கள், இணைந்து வழங்கி, பின்னிருந்து இயக்கி, வெற்றி பெறச் செய்திருப்பது மிக மிக முக்கியமானது. அத்துடன், மதிக்கப்படவும் வளர்த்தெடுக்கப்படவும் வேண்டிய பாரம்பரியம்.

இனி வரும் ஆண்டுகளில் கொன்சவேட்டிவ் ஆட்சி (கறுத்த, வெள்ளை, மண்ணிற சகல எளிய கனடிய வர்க்கங்களுக்கும்) சிறுபான்மை குழுக்களுக்கு பெரும் நெருக்கடிகளை கொண்டு வர இருக்கிறது. அடிப்படையில் ஒரு முதலாளித்துவ நாடான கனடாவில், அந்த நெருக்கடிகளின் பின்னாவது இந்த ஆட்சியின் சராசரி மக்களுக்கு எதிரான போக்குகள் மக்களால் அடையாளங் காணப்பட்டால் சரிதான். ஆனால்த் தமிழர்களைப் பொறுத்தவரை, மீண்டும் மீண்டும் வலியுறுத்த வேண்டியிருப்பது இதுதான்: இந் நாட்டின் ஏனைய சிறுபான்மை இனங்களுள் ஒருவராக நாங்கள் எம்மை அறிவூட்டிக் கொள்ள வேண்டும். எது எமக்குரியது, எது எம்மைப் பொன்ற மக்களின் நலன்ககளுக்கு ஏற்புடையது என்பன தொடர்பில் விழிப்புணர்வு வேண்டும். அதில், நிச்சயமாய், ‘தமிழர்களுக்கு வாக்களியுங்கள்’ என்கிற வாதம் ஏற்புடையதானதே அல்ல.
நம்பிய, ராஜதந்திர ஏனைய பிற கோட்பாடுகள் எம் மக்களுக்கு எதையும் தராததால், இனி மக்கள் தம் சுயசிந்தனையை விடாது, தமக்கான அரசியலைத் தேடட்டும். அவர்கள் சுதந்திரமாக முடிவெடுப்பவர்களாக உருவாகட்டும். எமக்கு உதவக்கூடிய ஓடாத குதிரைகளையும் ஓடச் செய்யட்டும்! அதை செய்யும் சக்திகளாகுவதற்கு அவர்கள் தகுதியானவர்களே. இந்தத் தேர்தல் அதைத் தான் நிரூபித்துப் போயிருக்கிறது. வெல்கிற பக்கம் என்பதை மக்களும் தீர்மானிக்க முடியும்.
~~~~

– பிரதீபா கனகா தில்லைநாதன் –

நன்றி: தாய்வீடு, May 2011 issue

Advertisements
Leave a comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: