“நாட்டின் படுக்கையறைகளுக்குள் அரசுக்கு ஒரு இடமுமில்லை’’

நான் இராணுவத்தில் இருந்த போது, இரண்டு ஆண் மக்களைக் கொன்றதற்காக, அவர்கள் எனக்கு  தங்க மெடல் தந்தார்கள். நான் ஒருத்தனைக் காதலித்தேன் என்பதற்காக, என்னை வேலையில் இருந்து நீக்கினார்கள் .
– ஒரு இராணுவத்தினனின் மரணக் குறிப்பு, 1988

01

‘ஓரினச்சேர்க்கையாளர்கள்’ என பொதுப்புத்தியால் விளிக்கப்படுகிற  ‘சமபாலுறவாளர்கள்’ மற்றும் பாலியல் சிறுபான்மையினரை மையமாய் கொண்ட ஒரு குறிப்பு இது.  அவர்களது இருப்பு பொதுவெளியில் பேசப்படுதல் காலத்துக் காலம் மாறுபட்ட போதும், சிறுபான்மைப் பாலினங்கள் மற்றும் மனிதரது பாலியல் தேர்வுகளது வரலாறு மிக நீண்டதே. அதிலும்,  நாகரீகமடைந்த(?) சமுதாயத்தில், அவர்களது உரிமைகளை வேண்டிய போராட்டமும் தொடர்ச்சியாய் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற ஒன்று. பல நாடுகளில் அவர்களது அடிப்படை உரிமைகள் அவற்றின் சட்டமைப்புகளில் உள்ளடக்கப்படாத போதும், சமூக ஆர்வலர்களது அழுத்தங்களாலேயே சிறிது சிறிதாக உரிமைகள் வென்றெடுக்கப் படுகின்றன. சென்ற வருடம், மூன்றாம் உலக நாடுகளில்  இந்தியாவில் வயதுவந்தவர்களுக்கிடையே ‘ஒப்புதலான ஓரினச்சேர்க்கை சட்டவிரோதமானதல்ல’ என சட்டம் இயற்றப் பட்டது. பல முதலாம், மூன்றாம் உலகங்களில் பாலினச் சிறுபான்மையினரின் அடையாளத்தை பறைசாற்றும் + அங்கீகாரம் வேண்டும் போராட்டங்களும், அதை எடுத்துச் சொல்லும் வருடாந்த சகோதரத்துவக் கொண்டாட்டங்களும் நடாத்தப்படுகின்றன.  கனடாவிலும் வருடாவருடம் Pride வாரம் என கோடை கால யூன் மாத இறுதிகள் பிரகடனப்படுத்தப்பட்டு நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப் படுகின்றன.

‘Pride’ என்கிற ஆங்கில பெயர்ச் சொல்லுக்கீடான தமிழ்ச் சொல்லாக: பெருமிதம், தலைக்கனம், பெருமை, கர்வம் போன்ற சொற்களை (இணையம்) தமிழ் விக்சனரி (http://ta.wiktionary.org/wiki/pride) பரிந்துரைக்கிறது.  இவையெல்லாம் இணைந்த (நேர்மறையான ) ஒரு அர்த்தத்தையே  மாற்றுப் பாலினர்களின் கொண்டாட்டத்தினதும் நோக்கமாகக் கூறலாம்.
– ‘நான் என் குறித்து வெட்கப்படவில்லை’
– ‘என் அடையாளத்தை மறைத்து வாழ்தலை நான் விரும்பவில்லை’ –  ‘நான் ஒரு சமபாலுறவாளர், நானொரு திருநங்கை, நாங்களும் உங்களைப் போல மனிதர்களே, எமது காதலை வெளிப்படுத்தும் உரிமை எமக்கும் உண்டு”
– ‘இதை நீங்கள் அங்கீகரித்துத்தான் ஆக வேண்டும்’
– ‘நீங்கள் நேசிக்கிறவர்களுள் உங்கள் அன்புக்குரியவர்களுள் யாரேனும் ஒருவர் எங்களைப் போல ஒருவராய் இருப்பார் – அவரை நீங்கள் தள்ளி வைப்பீர்களா? தெருவிற் கண்டால்த் தாக்குவீர்களா? கேலி பேசுவீர்களா’

Pride நிகழ்ச்சிகளில் தம் குறித்த புரிதலை வேண்டும் இத்தகைய குரல்கள், கேள்விகளுடன்,  நாம் வாழும் ரொறன்ரோ-டவுன்ரவுண் வீதிகளில், தம், பால் அடையாளத்தை வருடாவருடம் கொண்டாடி வருகிறார்கள் மாற்றுப் பாலினர் .

02

ஒரு பிள்ளை பிறக்கிற போது, அது இன்ன இன, மத, ஜாதிய, வர்க்க வேறுபாட்டை உடையது என்பதைத் தீர்மானிப்பவர்களாக மனிதர் இருக்கலாம். ஒரு பெண்ணாகப் பிறக்கின் ஒரு முறையிலும், ஆணாகப் பிறக்கின் இன்னொரு முறையிலும்; ஒடுக்கும் சாதியெனில் ஒருமாதிரியும், ஒடுக்கப்படுபவர் எனில் இன்னொரு மாதிரியும், வேறுபாடுகளுடன் அவர்களை ‘உருவாக்குபவர்களாய்’, அதே மனிதர்கள் இருக்கவுங் கூடும். ஆனால்: கருவுக்குள், அப் பிள்ளைக்குள், எம் பரம்பரையால் உயிரினங்களுக்குரியதாய்க் கடத்தப்படும் மரபான விடயங்களை அவர்களாற் தடுக்க முடியாது. ‘இயற்கையாகவே’ ஊட்டப்படுகிற பாலியல் இயல்புகளை அதன்பாற்பட்ட பாலுறவுத் தேர்வுகளை அவர்களால்க் கட்டுப்படுத்த முடியாது. நவீன தொழில்நுட்பம் மிக வளர்ந்து, நீலக் கண்கள், திடகாத்திர உடல் என ‘ஆரோக்கிய’ பின்புலத்தையுடைய பரம்பரைஅலகைத் தேர்வு செய்து பரிசோதனைக் குழாயுள் கருக்கட்டிக் கொண்டாலும், பிறக்கும் உயிர்கள் எதனுடையதும் பாலுறவு இயல்புகளை யாரும் தேர்வு செய்யவோ மாற்றவோ  முடியாது. அப் பிள்ளை ஒரு சமபாலுறவாளராகவோ திருநங்கையாகவோ தன்னை உணர்வதை யாரும் தடுக்க முடியாது.

தம்மால் பலதையும் தடுக்க முடியாதென்ற போதும், எல்லாப் பெற்றோருடைய விருப்பமும், சமூகம் அங்கீகரிக்கிறபடி கல்வி, திருமண, இன்ன பிற தேர்வுகளைத் தம் பிள்ளைகள் தேர வேண்டும் என்பதும்;  எச் சந்தர்ப்பத்திலும் தம் ‘வளர்ப்பு’ப் பிசகாத அங்கீகாரங்களை அவர்கள் பெற்றுத் தர வேண்டும் என்பதுமே ஆகும். அத்துடன், பெற்றோரை அத்தகைய எதிர்பார்ப்புக்குள் வைத்திருப்பது அப்படியான தேர்வுகளே  தம் பிள்ளைகளைச் சமூகத்தில் சந்தோசமாய் வைத்திருக்கும் என்கின்றதான நம்பிக்கைகளும் தான். அல்லாமல், சமூகத்துடன் ஒத்து இயங்காத பிள்ளை ஒதுக்கப்படும் – விமர்சிக்கப்படும் – தனிமைப்படும் என்பதால்!

ஆனால் டொக்ரருக்குப் படிப்பதைத் தேருவது போலவோ, நேசித்த ஜாதிய ரீதியில் ஒடுக்கப்பட்ட பெண்ணை (அல்லது ஆணை) கைவிட்டுவிட்டு பெற்றோர் சொல்கிறவரைத் திருமணம் செய்வது போலவோ ஒன்று அல்ல, ஒருவர் ஓரினச்சேர்க்கையாளராய் (அதாவது சமபாலுறவாளராய்) இருப்பதும்; அரவாணியாய் (அதாவது திருநங்கையாய்ப்) பிறப்பதும்.

ஏனைய பாகுபாடுகள் போல, அது சமூகத்தால் ‘உருவாக்கப்பட்டது’ அல்ல. மாறாக காலங்காலமாக ‘இயற்கையாகவே’ இருப்பது.  எமது புராணியக் கதைகளில் பண்டைய இலக்கியங்களில் ‘இயற்கையான’ பிரசவங்களிலேயே அவர்களும் பிறந்தார்கள். இன்றும் தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் பன்னூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயிற் சிற்பங்கள் பல்வேறு பாலின பாலியல்ச் சேர்க்கைகளைக் கொண்டிருக்கின்றன; “இது ஒன்றும் மேற்குநாடுகளிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட ‘புது’ நாகரீகம் கிடையாது. மாறாக எவ்வளவோ காலமாக எமக்குள் இருப்பதுவே” என்பதாய், ஆண்மையும் பெண்மையும் கலந்தவேறு பாலினங்களது இருத்தலை அவை உறுதி செய்கின்றன. இப்போது வலியுறுத்தப்படுகிற பாலியல் ஒழுங்குகளைக் கேள்விக்குட் படுத்துகின்றன. பாலியலுக்கான பன்முகம் என்பதும் இயற்கையானதே என்பதை அழுத்துகின்றன.

காட்சி 1: கடந்த காலம்

 • இறவாவரம் வேண்டும் அரக்கர்களை திசைதிருப்பவென விஷ்ணு பேரழகியான ஒரு மோகினிப் பெண்ணாய் உருமாறுவார். சிவனோ அவரில் (அவளில்) காதல்வசப்பட்டு விடுவார். காந்தமாய் இழுக்கும் உடலிலும், பெண்மையிலும் மயங்கி, காமத்துடன் அவளைப் பின்தொடருவார். யாதுமறிந்தவர் எம் பெருமான் சிவபெருமான்.  அவர் அறியாரா, மோகினி உண்மையில் பெண்ணாய் உருமாறிய விஷ்ணுவின் வடிவம் தான் என்பதை? எனிலும், காதல்வசப்பட்ட சிவனுக்கும் விஷ்ணுவான மோகினிக்கும் பிள்ளை பிறந்ததாயும் அப் பிள்ளையே ஐயப்பன் என்பதாயும் புராணங்களில் கதைகள் உண்டு. ஆக: ஐயப்பன், சமபாலினரான சிவனும் விஷ்ணுவும் கூடிப் பிறந்த ஹரிகரபுத்திரன்.

03

அங்கீகரிக்க மறுக்கும் உலகுக்குத் தோதாய், தன்னை மாற்றிக் கொள்ள எவ்வளவு முயன்றும் இயற்கையால் தரப்பட்ட வரிகளைப்போல இயல்பான ஒன்றை, மாற்ற முடியாது மன உளைச்சலுக்குட்படும் இளம் சமபாலுறவாளர்கள், அந்த துன்பம் போதாதென்று, தமது சகபாடிகளால், சகமனிதர்களால் வீதிகளில் அச்சுறுத்தலுக்குள்ளாகும், தனியே காண்கையில் தாக்கப்படும் சம்பவங்கள் இன்னமும் நடக்கின்றன – ‘வளர்ந்த’ நாடுகள் உட்பட – உலகெங்கும். ஒரு கள்ளக்குடியேறியாய் தன்னை தன் நாட்டின் சிறைக்குத் திருப்பி அனுப்பவல்ல குடிவரவு பொலிஶ்காரர்களது கண்களிடமிருந்து ஒளித்துத் திரியும் — தங்களது அத்தனை எதிர்காலத் திட்டங்களும் கனவுகளும் உடைந்து கொட்ட ஒரு நாள் பொலிஶில் பிடிபடுதலை ஒத்த — உணர்வைச் சமபாலுறவாளர்கள் தம் பாலுறவு அங்கீகரிக்கப்படாத பல தேசங்களில் தினம்தினம் அனுபவிக்கிறார்கள். பிடிபடுதலின் கொடும் தண்டனைகள் குறித்த பெரும் அச்சங்களுடனேயே தாம் நேசிப்பவர்களைச் சந்திக்கிறார்கள் – உறவு கொள்கிறார்கள்.

04

சிறியவர்களது உலகம்; சிறுபான்மை உலகம் —

எப்பொழுதும் தமது  (இயற்கையான)  இச்சைகளுக்காகத் தண்டிக்கப்படுவது சிறியவர்களே. ஒரு வசதியானவவரோ அரசியல்வாதியோ பேராசிரியரோ மதபோதகரோ தமது பாலியல் தேர்வுளராக இருப்பதில் அவர்கள் இழப்பது எதுவுமில்லை. அவர்கள் பாதுகாப்பான தமது கவசங்களுள் இருந்தவாறே தமது இன்பங்களை இயற்கையான விருப்புகளை அனுபவிக்க முடியும். மற்றவர்களைச் சுரண்டவும் முடியும். இரட்டை வேடத்தில் தமது இன்பத்தை அனுபவிக்க முடியும். தம்மிலும் சிறு வயது பெண்களை மாணவர்களை தந்திரமாக  சுரண்டும் பல்கலைக்கழகங்களது பேராசிரியர்களையோ அரசியல்வாதிகளையோ கவிஞர்களையோ பொதுவெளியில் யாரும் மதிக்காது போவதில்லை. அவர்களது சமூக பெறுமானங் காரணமாக, அவர்களது பாலியல் குற்றங்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை – ஏனெனில் வலியவர்களால் இந்த உலகில் ‘எப்படியும்’ வாழ முடியும்.

0

சமபாலுறவு என்பது மேற்கத்தைய மனோதத்துவ நிபுணர்களால் ஒரு “மனநோய்”ஆகவே பார்க்கப்பட்டது. அமெரிக்கா உட்பட, பல நாடுகளில் இன்றுங் கூட, வைத்தியர்கள்  இதை இயற்கைக்குப் புறம்பான ஒன்றாகவே பார்ப்பதுடன், ஒரு நோயாகக் கண்டு ‘குணமாக்க’வே முயலுகின்றனர்.  வைத்தியர்களால் சமபாலுறவாளர்கள் ‘ஏற்றுக் கொள்ளப்பட்ட’ இயற்கைக் குணங்களைப் பின்பற்றுமாறு கூறப்பட்டு, தமதல்லாத பாலுணர்வுத் தேர்வை நோக்கி நகர்த்தப்படுகின்றனர்.  சமபாலுறவாளர்களுக்கு உண்மையை ‘உணர’ வைக்கும் நோக்கமுடைய சட்டபூர்வமற்ற சிகிச்சை முறைகள் 1960கள் ஏன் அதற்குப் பிறகும் கூட  இங்கு புழக்கத்தில் இருந்தன. சமூகநல செயற்பாட்டாளர்களது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டு பின்னர் பல எதிர்ப்புகளுக்குள் அகற்றப்பட்ட சர்ச்சைக்குள்ளான சிகிச்சை முறைகளில் ஒன்று: பெண்ணுக்குப் பதிலான சக ஆணிடத்தில் ஈர்ப்புக்குள்ளாகும் ஆண் மகனை (அல்லது ஆணுக்குப் பதிலாக சக பெண்ணிடத்தில் ஈர்ப்புக்குள்ளாகும் பெண்ணை) அந்த ‘நோயிலிருந்த’ மீட்கும் முகமாக, அவர் தனியே அழைக்கப்பட்டு, அப்படியான பாலியல் தூண்டுதலுக்குள்ளாகிற போதில், மின்-அதிர்வுகளை அவரது பாலியல் உறுப்புகளுக்குச் செலுத்தி அத் தூண்டுதலை மறக்கச் (?) செய்ய முனைந்தது உட்படவான அதிர்ச்சி வைத்திய முறைகள் (Shock Treatments) அமெரிக்காவில்ப் பல்கலைக்கழக மட்டங்களிலும் மத நிறுவனங்களது ஆதரவுடனும் வைத்திய துறையில் இருந்தவர்கள் மற்றும் இல்லாதவர்கள் செய்ததற்கான ஆதாரங்கள் கடந்த 50 – 60 வருடங்களுக்குள்ளாவே உள்ளன. இயற்கையின் வடிவில் சர்வ நலமும் பொருந்திய சாதாரண மனிதர்களை நோயாளிகளாக்கவே இத்தகு மருத்துவ நடைமுறைகள் உதவியிருக்கின்றன;  இதனால் அவர்கள் எவரும் தம் பாலியல் தேர்விலிருந்து மாறியதாகப் பதிவுகள் இல்லை.

0

இயற்கையானதான தம் பாலியல் வேட்கையுடன், இன்று பெரும் பயணம் கடந்துள்ளனர் சமபாலுறவாளர்கள். இன்னும் பெரும் பயணம் அவர்கள் மேலும் தமது உரிமைகளை வெல்லக் கடக்க வேண்டியிருக்கிறது.கனடா உட்பட பல பகுதிகளில் அவர்கள் சட்டரீதியான அங்கீகாரங்கள் பெறுகின்ற  இன்றும் பொதுவெளியில் சமபாலுறவு தொடர்பிலும் தனிநபர்களது பாலியற் தேர்வுகள் மற்றும் பாலியல் உரிமைகள் என்பது தொடர்பிலும்  புரிதலின்மைகளோடு பலரையும் காண முடியும்.  அவர்களை ‘ஏற்றுக் கொள்ள முடியாமல்’ இருப்பதற்கான பின்னணியாய் மேற்கு நாடுகளிலும் சரி எங்கும் இருக்கின்ற பொதுவான காரணங்களையும் ஏற்காதவர் கூறுகிற வாதங்களையும் அவற்றின் நியாயத் தன்மைகளையும் பின் வரும் பகுதிகளில்ப் பார்க்கலாம்.

05

சமபாலுறவை எதிர்ப்பவர்களால் பொதுவாகக் கூறப்படும் வாதங்கள்:

 • இரு பெண்கள் அல்லது இரு ஆண்கள் உறவு கொள்வது இயற்கைக்கு விரோதமானது ஆகவே இது அருவருப்பானது;
 • எனது மதம் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை – அது இதனைப் பாவங்களில் ஒன்றாகச் சொல்கிறது. அதனால் இதை என்னால் அனுமதிக்க முடியாது

1: யாரும் எந்தக் காலத்திலும் எந்த மதப் புத்தகத்தையும் ஒப்புற ஒழுகுவதில்லை; ஏனெனில் அதன்படி 100 விகிதம் வாழ்வது துறவு பூணாத சாதாரணர் வாழ்வில் சாத்தியமில்லை. சாதனங்களைத் தமக்கேற்றபடி மாற்றி, சமரசங்களை செய்தே வாழ்கின்றது மனித வர்க்கம். நவீன கருத்தடை சாதனங்களது பாவனை இல்லை எனில் நவீன குடும்பங்கள் ஒவ்வொன்றும் தத்தமது கருமுட்டைகளதும் விந்தணுக்களதும் ஆயுளுக்கமைய ஒரு டஜன் பிள்ளைகளுக்கு மேல் பொறுப்பேற்க வேண்டியிருக்கும். நவீன குடும்ப அமைப்பில் அந்த எண்ணிக்கைக்கு இடமில்லை. ஒரு எண்ணிக்கையைப் பேண செய்யப்படும் ஏற்பாடு இயற்கைக்கு எதிரானது அன்றி வேறென்ன? இங்கே எழுகிற கேள்வி இதுதான்: சமபாலுறவாளர்கள் அல்லாதவர்களது பாலுறவு முறைகள் அனைத்துமே இனப்பெருக்கத்தை ‘மட்டுமே’ நோக்கமாய்க் கொண்டிருக்கின்றனவா?
2: இன்னொரு வகையில் சொன்னால், சமபாலுறவு என்பது இயற்கைக்கு விரோதமானதா சரியானதா பிழையானதா, அதற்கு உடன்படுகிறோமா இல்லையா என்பதை விட, ஒரு பெண், தனது துணையாக ஒரு ஆணை அல்லது பெண்ணை தேர்வு செய்வதால் என்ன தீங்கு விளைந்து விடும் ? அதன் அளவு என்பது என்ன – என்பதிலிருந்தே அவர்களை அங்கீகரிக்க மறுப்பதற்கான பொறி கிழம்ப முடியும்.

 • சமபாலுறவு இனப்பெருக்கத்துக்கு எதிரானது. இதனை அங்கீகரித்தால் இது சனத்தொகையைப் பாதிக்கும். அத்துடன், குடும்பம் – குடும்ப விழுமியங்கள் – பாதிக்கப்படும். மரபான பாலுறவின் விளைச்சலான பிள்ளைகள் தொடர்பான மதிப்பும் குறைந்து விடும்.

இந்த வாதமே மத நிறுவனங்களதும் அதை ஒத்தொழுகும் அரசுகளதும் அதி முக்கிய பயமுறுத்தலாக இருந்து வருகிறது. ஆனால் இந்த வாதத்தில் எவ்வித நேர்மையோ நியாயமோ கிடையாது. அத்துடன், ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுவதான காட்சியை ஒத்த போலித்தனமானதே இதுவும்.

ஏனெனில்:
இன்று உலகெங்கும் மேற்கு நாடுகளது ( மத நிறுவனங்களாலும் ஆதரிக்கப்படும் ) அரசாங்கங்களால் வறிய நாடுகளது வளங்களை நோக்கிய யுத்தங்கள் முன்னெடுக்கப்படுவதும், மக்கள் தொடர்ச்சியாய் உயிரிழப்பதும், வறுமையில் உழல்வதும் தொடர்கிறது. இந்தியா, சீனா உள்ளிட்ட மூன்றாமுலக வல்லரசுகளில் பெண் சிசுக் கொலையாலும், பெண் குழந்தைகள் கைவிடப்படுவதாலும் ஆண்-பெண் விகிதாசாரத்தில் பாரிய வேறுபாடுகள் தோன்றியுள்ளன. ஆண்களின் எண்ணிக்கை கணிசமானளவு அதிகமாகவும் பெண்களது குறைவாகவும் என்பதாக  இனி வரும் காலங்களில் ‘பெண்கள் பற்றாக்குறை’ தோன்றலாம் என்கிற அளவில் இருக்கிறது இவற்றின் நிலவரம்.

அதிசயமல்ல, இத் தேசங்களது அரசாங்கங்கள் இதற்கான காரணமாய் தமது  சனத்தொகையை காரணங் காட்டுவது. சனத் தொகை குறைந்தால் இப் பிரச்சினை தீரும் என்பதாய். சனத்தொகையல்ல – அச் சனத்தொகையினது உழைப்பும் தேச வளங்களும் குறைந்த விகிதமான முதலாளிகளது செல்வத்தை இன்னும் அதிகரிக்க உதவும் முகமாக அரசாங்கங்கள் செயற்படுவதும் வளங்கள் மக்களுடன் பகிரப்படாமையுமே பிரச்சினைகளது மையம்.

ஆனால் இதே நாடுகளில் பாதுகாப்பான கருக்கலைப்புகளும்-கருத்தடை சாதனங்களுமே மக்களுக்குப் பரவலாக்கப் பட்டில்லை. அதிலும் விட ‘ஆண் பிள்ளையை’ விரும்பி பெண் பிள்ளையைக் கொல்லும் சமூக காரணி(கள்) கண்டறிந்து களையப் படவில்லை (ஏனேனில் சமூக காரணி அரசுகள் மாற்ற விரும்பாத வறுமைதான்). அந்த வறுமையே தன்னைப் பிற்காலத்தில் ‘பார்க்கக் கூடிய’ (இன்னொரு குடும்பத்துக்குப் போய் விடாத) ‘உழைக்கக் கூடிய’ ஆண் மகனைப் பெற நிர்ப்பந்திக்கிறது. தாம் நம்பிய மதம் சொல்லாத (பிறந்த பால்ச்சிசுவின் பிஞ்சுவாயினுள் நெல்மணிகளை விழுங்க வைத்து) ‘கடவுள் தந்த பிள்ளையை’ப் பாகுபாடு காட்டிக் கொல்ல, தெருவில் போட்டுவிட்டுச் செல்ல, சிறுவர்களைக் கைவிட வறுமையும் வறியவர்களுக்கு எதிரான சட்டங்களும், அத்துடன் ‘ஆண்பிள்ளை வச்சுப் பாப்பான்’ என்கிற அறியாமையும் தூண்டுகின்றன. அழிக்க வேண்டியதும் அனுமதிக்க மறுக்க வேண்டியதும்  – நியாயமாய்ப் பார்த்தால் – இத்தகைய நிலமைக்குக் கொண்டு செல்லும் வறுமைக்குள் அவர்களை அமிழ விட்ட மிதவாத மற்றும் முதலாளிய அரசுகளது மக்கள் சார்பற்ற கொள்கைகளையே. ஆனால் நிகழ்வதெல்லாம் அதற்கு மாறானவையே.

— உலகில் சனத்தொகை கூடுவது ஒரு பிரச்சினையெனில் சமபாலுறவுத் தடைச் சட்டங்களை நீக்க மறுப்பது ஏன் ? அவர்களுடைய வாதத்தின்படி இதுவும் ஒரு நல்ல தீர்வாகலாம் அல்லவா?
— சரி, சனத்தொகை குறைவது ஒரு பிரச்சினையெனில், உலகமெங்கும் சாதாரண மக்களின் பல்லாயிரம் குடும்பங்களை குடும்ப விழுமியங்களை சாய்க்கும் யுத்தங்களை எதிர்த்து மதநிறுவனங்கள் ஏன் ஊர்வலம் போவதில்லை? பெண்சிசுக்கொலைகளையும் பெண் குழந்தைகள் கைவிடப்படுதலையும் எதிர்த்து ஏன் கிழம்புவதில்லை அவை? அவற்றில் எல்லாம் விளைகின்ற அழிவைவிட மிக அதிகமா நாட்டின் சனத்தொகையில் மிக மிகச் சிறுபான்மையினரான சமபாலுறவாளர்களது இணைவு தரக் கூடியது?

தமக்குத் தேவையான போது சனத்தொகை அதிகமென பிள்ளைப் பேற்றுக்குக் கட்டுப்பாடு போடும் அரசுகள் (இந்தியாவின் ‘நாம் இருவர் நமக்கொருவர்’ மற்றும் இமேர்யன்சி காலகட்டத்தின் பலாத்கார கருத்தடை அறுவைச் சிகிச்சை); மறுபுறம், சனத்தொகையை மரபான குடும்ப விழுமியங்களைப் பாதிக்கும் எனக் கூறி சமபாலுறவு தடைச் சட்டத்தை சமபாலுறவு மீதான கடும் தண்டனைகளை அமுல்படுத்தும் அரசுகள் — இவை அவற்றின் இரட்டை வேடத்தையே காட்டுகின்றன.

தொடரும் பெண் சிசுக்கொலைகள்,  வல்லரசுளது நலனை முன்வைத்த யுத்தங்கள் – இவற்றினால் எல்லாம் இந்த அரசுகள்-மதநிறுவனங்கள் “படைத்தல்”த் துறை  (இனப்பெருக்கம்) பாதிக்கப்பட்டதாய்க் காணவில்லை. மாறாக, அரசுகள் சிறுபான்மை பாலினங்களை – அறியாத மக்கள் தாக்குவது போலவே – தாங்களும் தாக்குகின்றன; மதத்தின் பேரிற் தனிமைப்படுத்துகின்றன. சட்டங்கள் சலுகைகள் இன்றி ‘மறைந்து’ மறைத்து வாழ நிர்ப்பந்திக்கின்றன. இத்தகையோரால்தான் வறுமையும் பிணியுமாய்க் இக் ‘கலியுகம்’ பிறந்ததென மதவாத கருத்தியல்களைத் தமது நலனுக்கு உதவும் முகமாய் வளர்த்தெடுக்கின்றன.

சமபாலுறவு போன்ற ஒன்று தொடர்பாக மதரீதியாக ஒழுக்கரீதியாக உளவியல்ரீதியா சமூகரீதியாக முரண்பாட்டை (வெறுப்பை)க் கொண்டிருக்கும் பொதுமனத்தை தமது நலன்களுக்காக வளைப்பது அரசு மற்றும் மத நிறுவனங்களுக்கு இலகுவாயும் இருக்கிறது.

 • இது ஒரு பாவம். சமபாலுறவாளர்கள் ‘நரகத்துக்குத்தான்’ செல்வார்கள்.

பள்ளி மாணவியை அல்லது மாணவன் ஒருத்தனை அவனொரு சமபாலுறவாளன் என்கிற ஒரே காரணத்துக்காக  படிக்கும் சக முரட்டுத்தனமான மாணவர்கள் திரத்திச் சென்று அடித்துக் கொன்ற சம்பவங்களில் கூட, அத்தகைய மாணவர்களது மரண இறுதி ஊர்வலத்திலும் மரண வீட்டிற்கு வெளியயேயும் “கடவுள் சமபாலுறவாளனை வெறுக்கிறார்” “அவர்களுக்காக அழாதீர்கள்” “கம்பி _______ நரகத்துக்குச் செல்வான் (செல்வாள்)” போன்ற வாசகங்களுடன் மதபோதகரும் சார்பாளரும் நிற்கக் காணலாம்.

அறத்துக்கு ‘ஒரு’ முகம் கிடையாது.  அதற்கு பல முகங்கள் உண்டு. நமக்கு அறமெனப் படுகின்ற ஒன்று அழிவுக்கு சார்பாகவும் கருணையற்றதாகவும் ஆகும் எனில் அந்த அறமே கேள்விக்குரியது.

மீண்டும் அதே கேள்விகள். சமபாலுறவு எதிர்ப்பாளர்கள் ஏன் மாபெரும் அழிவுகளை வழங்கும் யுத்தத்தின் சூத்திரதாரிகளின் முன் தம் பதாகைகளுடன் நிற்பதில்லை? ஒரு தனிமனிதனின் படுக்கையறையுள் நுழைய இருக்கிற ஆர்வம் ஏன் பல்லாயிரக்கணக்கில் குஞ்சு குருமன்களாய் மனிதர்கள் கொல்லப்படுவது கண்டு மெளனிக்கிறது?

ஆபிரிக்க நாடுகளுக்காக வழங்கும் உதவி(?!))த் தொகையில் சுமார் 700 மில்லியனுக்கு மேற்பட்ட தொகையை  சென்ற வருடங்களில்  காப்பரின் கனடிய அரசாங்கம் கத்தரித்திருந்தது. கேவலம், பட்டினிச் சாவை தடுப்பதில் எல்லாம் தேசத்தின் நலனுக்கு இலாபகமில்லை. பதிலாக – இன்னமும் கனடிய இராணுவம் மத்தியகிழக்கில் நிலைகொண்டிருக்கிறது. அழிவில் பங்கெடுக்கிறது. மதபோதகர்களது கவலையெல்லாம் ‘புத்தி வளர்ந்த’, ‘உரிய வயதான’, இரண்டு நபர்கள், பரஷ்பர சம்மதத்துடன் உறவு வைத்துக் கொள்வது தான் இந்த உலகத்தை அழிக்கப் போகிறது என்பதாம். வேற்று நாடுகளில் இராணுவங்களால் நடந்தேறும் பாலியல் பலாத்காரங்கள் மற்றும் அத்துமீறல்கள் அல்ல – மாறாக, யாரும் ஏமாற்றப்படாமல் சம்மதம் கொண்ட சமபாலுறவாளர் இருவரின் கலத்தலே இவ் வுலகை அழிக்கப்போகின்றதாம்! இவ்வகையான போலி மனநிலையை வளர்க்கும் அரசியல் தான் அழிவுகளுக்கு வழி வகுக்கும்; அழிக்கும்.

காட்சி 02: நவீன காலம்

 • 1967இல் கனடிய சட்டசபையில் முன்னாள் கனடிய பிரதமர் ரூடோ, குற்றவியல் நடைமுறை தொகுப்புச் சட்டங்களை மீள்நோக்கி அவற்றில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது தொடர்பில் ஆற்றிய உரையிலிருந்து, பின்வரும் பந்தி பிரபலமானது:

“…இத் திருத்தங்களானவை, நாட்டின் சட்டங்களை சமகால சமூகத்துக்குத் தகுந்ததாய் ஆக்குவதற்காகவே/ஆக்குவதற்கானவை என்றே நான் பார்க்கிறேன். சமபாலுறவாளர்கள் தொடர்பான விடயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இது தொடர்பில் நாங்கள் கொண்டிருக்கிற பார்வை என்னவெனில் – நாட்டின் படுக்கையறைகளுக்குள் அரசுக்கு ஒரு இடமுமில்லை. வயதுவந்தவர்களுக்கிடையில் அந்தரங்கமாக இடம்பெறுகின்றவை குற்றவியல் பிரிவின் கவனத்துக்குரியவை அல்ல. அதுவே ‘பொதுப் பிரச்சினை’யாக வருமானால் அல்லது வயதுகுறைந்தவர்களுடன் சம்பந்தப்படுமானால், [அது] வேறு கதை.’’
மேலும் அறிய:
http://en.wikipedia.org/wiki/Matthew_Shepard
http://www.cbc.ca/news/background/samesexrights/timeline_canada.html
http://www.pridetoronto.com/about/history/
http://www.cbc.ca/news/background/samesexrights/timeline_canada.html
http://www.clga.ca/Material/Records/docs/flitchro/72.htm
http://www.intorontomag.com/index.php?option=com_k2&view=item&id=377:toronto-pride-parade&Itemid=139

.|.

Published : October issue of Thaiveedu monthly Tamil Newspaper

Advertisements
Leave a comment

2 Comments

 1. தனிமனித சுதந்திரத்தில் அதிகம் மூக்கை நுழைக்கும் எங்கள் பழக்கத்தை மாற்றிக்கொள்ளவேண்டும். எனது வீட்டில் என்ன நடக்கிறது என்பதைவிட பக்கத்துவீட்டில் என்ன நடக்கிறது என்பதை அறிவதில்தான் எம்மவர் பலருக்கும் ஆர்வம். தன்னினச்சேர்க்கையும் இயற்கையின் விதிகளில் ஒன்று அதை ஏற்றுக்கொள்ளவேண்டும். இங்கு நான் வாழும் ஜேர்மனியின் முக்கிய அமைச்சர்களில் ஒருவர் இந்தவகையைச் சேர்ந்தவர். ஆனால் அதற்காக அவரை மக்கள் ஒதுக்கிவிடவில்லை. மந்திரிப்பதவிவரை உயர்த்தி இருக்கிறார்கள். எங்கள் எண்ணங்களில் மாற்றம் வரவேண்டும். ஒவ்வொரு சமுதாயத்தினதும்மொழி, மொழியின் எழுத்துக்கள், கலாச்சாரம் எல்லாமே காலத்திற்குக்காலம் மாற்றம்பெற்றுவருகிறது. ஒவ்வொரு இனமும் அவ்வப்போது சுயவிமர்சனங்கள் மீளாய்வுகள் மூலம் காலமாற்றத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளாவிட்டால் நிலைத்திருக்கமுடியாது. நாம் இப்படித்தான் இருந்தோம் இப்படியேதான் இருப்போம் என முரண்டுபிடிப்பதி அர்த்தமில்லை

  Reply
 2. /அதற்காக அவரை மக்கள் ஒதுக்கிவிடவில்லை. மந்திரிப்பதவிவரை உயர்த்தி இருக்கிறார்கள். எங்கள் எண்ணங்களில் மாற்றம் வரவேண்டும். ஒவ்வொரு சமுதாயத்தினதும்மொழி, மொழியின் எழுத்துக்கள், கலாச்சாரம் எல்லாமே காலத்திற்குக்காலம் மாற்றம்பெற்றுவருகிறது. ஒவ்வொரு இனமும் அவ்வப்போது சுயவிமர்சனங்கள் மீளாய்வுகள் மூலம் காலமாற்றத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளாவிட்டால் நிலைத்திருக்கமுடியாது. நாம் இப்படித்தான் இருந்தோம் இப்படியேதான் இருப்போம் என முரண்டுபிடிப்பதி அர்த்தமில்லை/
  உண்மை அம்பலத்தார். தளத்திற்கு வந்து உங்கள் கருத்திட்டமைக்கு மிக்க நன்றி.
  – பிரதீபா

  Reply

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: