“Away From Her” : சாகசக்காரிகள் பற்றியவை

நேர்ஸ்: நீங்க சந்திக்கேக்க உங்களுக்கு எத்தின வயசு?
கிறான்ற்: அவளுக்கு 18
நேர்ஸ்: கடவுளே! கலியாணங் கட்டுறதுக்கு அது செரியான சின்ன வயசெல்லோ..?
கிறான்ற்: அது என்ர ஐடியா இல்ல.
நேர்ஸ்: அப்ப அவதான் கட்ட கேட்டவா எண்டிறிங்களா. ஆ.. கேட்கவே ஆசையா இருக்கு. நானும் அவதான் கேட்டிருப்பா எண்டு நினைச்சன். எப்பிடிக் கேட்டவா?
கிறான்ற்: அவ அத முதலே திட்டமிட்டிருந்தா எண்டு சொல்ல முடியாது. நாங்க ரோபமோறியில மனிரேலிலன் போறதுக்காண்டி படகுக்கு காத்தண்டு இருந்தம். மழை தூறிக் கொண்டிருந்தது. விசரான ஒரு காலநிலை. அவள் நல்ல மூட் இல இருந்தாள் – எனக்கிருந்த விசர் மூட்டின்ர எந்த சிறு பகுதியும் அவளுக்கு வேணுமாய் இல்லை.
நேர்ஸ: ஓ.. அப்ப என்ன செய்தவ.. என்ன சொன்னவா
கிறான்ற்: ம்ம்.. அவ கேட்டா நாங்க கலியாணங்கட்டினா நல்லா இருக்குமெண்டு… நினைக்கிறியா? எண்டு..
நேர்ஸ: அதுக்கு நீங்க என்ன சொன்னிங்க
கிறான்ற்: … நான் ஓமெண்டு கத்தினன்!
(மௌனம்)
நான் எப்பவுமே அவளிட்ட இருந்து விலகி இருத்தலை விரும்பேல்ல. அவளிட்ட வாழ்வின் உயிர்ப்பிருந்தது…
***நேர்ஸ்-இற்கும் கிறான்ற்-இற்குமான உரையாடல், திரைப்படம் ‘Away from her’ [2006]

01
முதியவர்களின் காதலைப் பற்றியும் அவர்ளுக்கிடையான நெருக்கம் – பாலுணர்ச்சி என்பனவும் திரைப்படங்களது கவர்ச்சியான பேசுபொருளாக அமைந்ததில்லை.  முதியவர்களது காதற் கதை என எடுக்கப்படுகிற பல கதைகள் ஞாபகங்களூடே ஒரு பயணம் என அவர்களது இளமைக் காலத்தை நோக்கியே பின்னகர்கின்றன. அந்த வகையில் எம் மனதிலுள்ள முதியவர்கள் பழங்காலத்தை மென்றவாறு நிகழ்காலத்தில் குந்தியிருப்பவர்களாகவே பதிந்துள்ளார்கள். அதற்கு மாறாக முதியவர்களது  நிகழ்காலத்துக்குரிய காதல் பேசப் படுவதில்லை.

முதிய வயதிலும் பாலுணர்வு காதல் நெருக்கம் மனிதர்களுக்கு தேவையானது என்பதை உணராததாற் தான் பல குடும்பங்களில் ஒரு மகளின் பிள்ளையை அம்மாவும் இன்னொரு மகளின் பிள்ளைகளை தகப்பனும் பார்க்கவென இறுதிக் காலத்திலும் ஒன்றாக இருக்க விடாமற் பிரித்து பிள்ளைகளது வசதிக்கேற்ப வெவ்வேறு வீடுகளில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

கனடியத் தென்மேற்கு ஒன்ராறியோவின் கிராம பின்புலத்தில் ஒரு முழு நேர கனடிய சினிமாவில், தொடங்கி முடியும் வரை,  இரு முதியவர்களது காதலைப் பாலுணர்வை நெருக்கத்தை உறவில் இருவரிடையேயான சமமின்மைகளைப் பார்க்கக் கிடைத்தது.  2006இல் வந்த “Away from her” என்கிற அத் திரைப்படம் இக் கருப்பொருள் உட்பட பல வகைகளிற் சிறப்பு மிக்கது.  இது கனடிய எழுத்தாளர்களில் எமது செக்கோவ் என மதிக்கப்படுகிற அலைஸ் மன்றோவின் [Alice Munro] சிறுகதையான ‘”The Bear Came over the Mountain”’-இனை அடியொற்றி எடுக்கப்பட்டது. மிக நுட்பமாக மனித மனத்தின் நுணுக்கங்களை உள்ளுறங்கும் எரிமலைகளைத் தன் சொற்களால் உருவாக்கும் தேர்ந்த கதைசொல்லி அலைஸ். அவளது கதைகள் யாவும் கனடிய பின்புலத்தை அதிலும் தென்மேற்கு ஒன்ராறியோ பின்புலத்தைக் கொண்டவை. ஒன்ராறியோவின் கிராமப்புறங்களின் முகங்கள் அவளது எழுத்தெங்கும் வியாபித்திருக்கின்றன.

02.
கிறான்ற்-இன் 44 வருட வாழ்க்கைத் துணையான ஃபியோனா தன் முழு அசைவிலும் உயிர்த்துடிப்பும் நளினமும் மிகுந்தவள். படபட என பதிலுக்குப் பதில் பேசும் அவளது விளையாட்டுக் குணம் எந்த முதிர்ச்சியிலும் போய்விடவில்லை. இளமையில்‘’நான் ஒரு இடத்துக்குப் போக விரும்பி; அதற்கு நான் போக முடியாமல் போனது என்று இப் புவியில் ஓரிடமுமில்லை’’ என்றவள் அவள்; திடமான நம்பிக்கையும் சாகசங்களுமென ஈர்ப்புக்குரியவள்.
குளிர்காலத்தில் ஒவ்வொரு நாளும் கனடிய தென்மேற்கு ஒன்ராறியோவின் அந்த வெள்ளை பனி வெளிகளில் அவர்கள் இருவரும் ஸ்கீயிங் போவார்கள். பனியிற் சறுக்கியபடி உரையாடல்களற்ற நிசப்தத்தில் இயற்கையின் பேரியக்கத்தை தம்மை சூழவும் உணர்ந்தவாறு மாலை மயங்குகையில் வீடு செல்வார்கள். ஹாஸ்ய உணர்வு மிக்க ஒரு கதைகாரியான ஃபியோனா ஏதாவது கதைசொல்லிச் சிரித்தவாறு, நிதானமானவன் என்கிற போதும் அவளுக்குச் சளைக்காத கிறான்ற்-இன் பதிலுடன் அவர்களது தோழமையுணர்வும் காதலும் கூடவே காலவெளியில் உள்ளுறங்கும் சிறு சிறு பனிப்போர்களும் எல்லையற்ற கனடிய நிலப்பரப்பின் மாறும் பருவங்கள் போல; வாழ்வின் அநித்ய வடிவங்கள் போல பின்னப்பட்டிருக்க வீ டு செல்வார்கள்.

03
ஐஸ்லாந்துப் பின்புலத்தைச் சேர்ந்த ஃபியோனாவை, எல்லையேயற்ற கனடிய நிலப்பரப்பை ஒத்த அவளது சாகச மனத்தின் ஞாபகங்களது செழுமையை, மிக மிக மெதுவாக ஞாபக மறதி நோயான அல்சைமர் [Alzheimer] வந்து அரிக்கவாரம்பிக்கிறது. அயலட்ட நண்பர்களை அழைத்து விருந்து கொடுக்கும் போது, கதைத்தவாறு வைனினை நண்பரது கோப்பையினுள் ஊற்ற எழுந்தவள் தான் எதற்காக எழுந்தேன் என்பது தெரியாமல், நின்று விடுகிறாள். ஒரு விருந்தின் பின்னர் சாப்பாட்டு இயத்துக்களை கணவர் கழுவிக் கொடுக்க கீழே றாக்கினுள் அடுக்க வேண்டியவள் ஒன்றைக் கொண்டு போய் குளிர்சாதனப் பெட்டியினுள் வைத்து விடுகிறாள். தன் துணைப் பெண்ணின் இந்த மாற்றங்கள் ஒவ்வொன்றையும் உள்ளார்ந்த வலியுடன் அவதானிக்கும் கிரான்ற் யன்னலடியில் யோசனையுடன் பாத்திருக்க அவள் தனியே பனியில் ஸ்கீ (Skiing) சறுக்கப் போகிறாள். மனம் ஒன்று விலகித் தனித்துப்  போதலை அது முன்னறிவிக்கிறது. தனியே போகிறவள் இடையில், தனது இல்லத்தை, தன் துணையை, நடுவே பனி வெளியில் நிற்கும் தன்னையும் மறந்து போகிறாள் – திசையற்று. மூளை திரும்ப வேண்டிய வீட்டின் வழிகளை மறந்து போயின் அவள்  எங்கு திரும்ப முடியும்?

03
அனேகமாக திரைப்படங்களுக்கான விமர்சனமாய் அவற்றின் கதையைக் கூறுவதில் ஈடுபாடு இருப்பதில்லை. எனினும் சாகசங்களும் பேரழகுகளும் நிறைந்த தான் தொலைந்து போய் விட்ட பிறகு, உயிர் இருக்கும் போதே ஆன்மா பிரிந்து விட்டவளாக, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஆளரவமற்ற பனிவெளியில், ‘half of the time wonder around i cant remember what it is’ என்கிற வசனத்துடன் நிற்கும் ஒரு முதிய பெண் சில காட்சிகளை மீள மீள எழுதத் தூண்டுகிறாள். “அரைவாசி நேரம் நான் எதையோ தேடித் திரியிறன். என்ன தேடுறன் எண்டு எனக்கே தெரியேல்ல.“ இவ்வாறு சொல்லும் குரல்களைத் திரைக்கு வெளியிலும் நாம் அறிவோமல்லவா?

எம்மை மறந்து போதல் எத்தகு அந்தரமான ஒரு கணம் – அதிலும் அதனை எங்களால் எமது முழு நனவுமனநிலையுடன் உணர முடியாது என்கிற போது. அல்லது அந்தக் கணம் யாரை அந்தரத்தில் விட்டுச் செல்லும், எங்களையா அல்லது எம்மைச் சார்ந்தவர்களையா. தேர்ந்த நடிகையாய் ஜீலியினது [Julie Christie] முகம் தன் மனம் தன்னுடலைக் கைவிடுதலை அதன் அந்தரிப்பை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.

மேலும், ஃபியோனாவைப் பார்க்கையில் அவள் தன்னை மறந்து போதல் என்பதைத் தனியே ஒரு நோயின் பிறழ்வாகப் பார்க்க முடியவில்லை. அலைஸ் மன்றோ என்கிற பெண், நோயை பெண் வாழ்வினது குறியீடாய் ஆக்கியிருக்கிறார். பெண்களது கவிதைகளில் ஒன்றில் வரும் –
“அவளை
அந்த சாகசக்காரியை
மறந்து விடுதல் சாத்தியமாகிறது.“

குடும்ப வட்டங்களுள் அதன் சுவருகளுள் எத்தனை சாகசக்காரிகள் கதைகாரிகள் தம் கதைகளற்றுப் போனார்கள்; சாகசமிழந்து சுருங்கினார்கள். அந்த சாகசக்காரிகளை — அந்த அவர்களது சாகசங்களுக்காகவே காதல் வசப்பட்டவர்களால் – எப்படி மறக்க முடிகிறது.  வாழ்வின் ஒரு பக்கம் எப்படி மறந்து போகிறது. மறைந்து போகிறது?
எனது பார்வையில், இத் திரைப்படம் பெண்களின் அக வெளியின் ஸ்தம்பிதத்தை அடையாளமிழப்பை வெளிப்படுத்துகிறது என்றே படுகிறது. திருமணத்தின் பின் தம் அத்தனை ஜாலங்களும் தொலைய சமையல் கலயங்களுடனும் பிள்ளை வளர்ப்புடனும் அமுங்கிப் போகும் முகங்கள்; சுயமதிப்பை குறைக்கும் விதமாய் நடத்தப்படுவதை ஏற்றுக் கொள்ளாவிடிலும், அதன் வெறுப்பை தம்முள் புதைத்து விட்டு, புன்னகையுடன் வளைய வரும் முகங்கள் – எம் அனுபவங்களிலிருந்து எம் சுற்றுவட்டங்களிலிருந்து ஞாபகமூட்டப்படுகிறார்கள்.

இங்கு புற உலகில் – பெண்களின் உலகம் பற்றிய கேலிகளிற்கோ ஒரு அளவில்லை. அவை சந்தடி சாக்கில் கற்களைப் போல எறியப் படுகின்றன. பல வேளைகளில் பெண்களும் அதை நம்பியவாறு நகர்கிறார்கள்.  ‘’இந்தசமையலுக்குத் தான் இவ்வளவு கதையோ… ஆண்கள் ஒரு மணிநேரத்தில் செய்திருவார்கள்…’ விடுமுறை நாட்களில் முழு நாளும் வீட்டில் இருந்து, வெளியே இரண்டு கட்டை நடக்கத் தானும் போகாமல் ஒரு அமுக்கத்தில் இருந்த நாட்களில் தான் உணர முடிந்தது உள்ளிருப்பவர்களின் உலகை. என்றைக்காவது ஒரு நாள் சமைக்க நேருகிறவர்களுக்கும் என்றென்றைக்கும் ஒரே விதமாய்ச் சமைத்துக் கொண்டே இருக்க வேண்டியிருப்பவர்களுக்குமான வேறுபாட்டினை. பிரசித்தமான ஆண் சமையல்காரர்களுக்குப் போலன்றி சம்பளமற்ற வேலையின் களைப்பூட்டலை. ஒரே மாதிரியான செயல்களைத் திருப்பி திருப்பி செய்து கொண்டிருப்பதில் தன்னார வாரம் ஒரு பயித்திய நிலை வந்து விடுகிறது. ஆனால் தமக்கென வகுக்கப்பட்ட அந்தக் கடமைகளைச் சென்ற காலங்களிலும் அந்த முதிய பெண்கள் எவ்வளவு அழகாகச் செய்தார்கள். உணவுகளை அலங்கரித்தல் – விதவிதமான கேக்குகள் – வீட்டுத் தயாரிப்புகள் – அழகிய லேஸ் பின்னல்களில் திரைச்சீலைகள்…… கைபட்ட இடமெல்லாம் தம் பிறழ்வுக்கு எதிரான முயற்சிகளுடன் – களையற்ற தம் வாழ்வுக்கு தம் சூழலுக்கு உயிர் கொடுக்க எத்தனித்தவாறு… அவர்கள் எம் சூழலில் வளைய வரக் காணலாம்.

முரண்பாடுகளாலும் அதனுடன் எழும் நிரப்பவியலாத வெற்றிடங்களாலும் முறிவுகளாலும் நிரம்பும் ஒரு காதலில், அதன் குடும்பத்தில், தொடர்ந்துமிருக்க ஒருவளைத் தூண்டுவது எது? காதலென்று தொடங்கி பின் துரோகங்களையும் சமமின்மைகளையும் உதாசீனத்தையும் தந்து, சுயமதிப்பையும் எடுத்துச் சென்றாலுமே கூட, அதிற் தங்கிப் போகச் செய்வது ஒன்றில்ப் பழகிப் போய்விடுகிற மனித இயல்பா அல்லது ஒன்றின்மீதான தீராக் காதலா? அனேகமான போது, வேற வழியற்ற சமூக இயல்பாகவே அது அமைந்திருக்கிற போதும், பல வருடங்கள் இணைந்திருத்தலில் ஏற்ற தாழ்வுகளற்ற பயணமும் சாத்தியமற்றதே.

கிறான்ற் ஞாபக மறதி நோயான அல்சைமரினால் பாதிக்கப்படுவர்களுக்கான சிகிச்சை இல்லத்தில் ஃபியானாவை விட வேண்டி நேரிடுவதிலிருந்தே தொடங்குகின்றது கதை. ஆனால் அது அந் நோய் தவிர்ந்த அரங்குகளுக்கும் எம்மைப் பார்வையாளர் ஆக்குகிறது.

04.
44 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த ஒரு தம்பதி நோயினால் பிரிக்கப்படும் சமகாலத்தைப் பற்றிய திரைப்படம் அத்தனை ஆண்டுகள் இணைந்து வாழ்தலின் குறைநிறைகள் தொடர்பான உள்ளார்ந்த விமர்சனத்தைக் கொண்டிருத்தலும் இயல்பானதே. ஆனால் அதைப் புரிந்துகொண்டு அவர்களது முதிர்ச்சிக்குரிய மரியாதையுடன் இப் படத்தை இயக்கியிருக்கிற பெண் ஒரு 28 வயது கனடிய நடிகை என்பது மிகவும் ஆச்சரியத்தைத் தந்தது. இளம் பெண்களைப் பொறுத்தவரையில் அவர்களது வாழ்வு முதிய காலங்களைப் பற்றிய கனவுகளையோ கற்பனைகளையோ கொண்டதல்ல. முதியவர்களது காதல் உணர்வுகள் அவர்களது சுவாரசியத்துக்குரிய பேசுபொருள்களுமல்ல. பொதுவாகவே இளைஞர்களை மையப்படுத்திய வெளிப்பாடுகளே கிளாமரானவையாக இருக்கின்றன.

இதன் இயக்குநரான Sarah Polley-யோ இந்தப் படத்தைப் பார்த்தவர்களது தனது வயது குறித்த ஆச்சரியமும் இந்த கருவை தான் தேர்ந்தெடுத்ததற்கான காரணம் அறிய விரும்புதலும் பற்றி கூறுகையில் தான் இதை ‘வித்தியாசமான’ கதைக்களன் தேடி எடுத்ததாய் இல்லை என்கிறார். இந்த கருப்பொருளை எடுக்கிறபோது தனது வயது குறித்த பிரக்ஞையோ மனத்தடையோ தனக்கிருந்திருக்கவில்லை என்கிறார். இப்படியான ஆளுமைகள் அறிமுகமாகிறபோது, தன்வயப்பட்டவராய் அல்லாத எந்த வயதினரும் தம்முடன் உலகைப் பகிரும் சகலர் குறித்தும் அறியவும் அவர்களது வாழ்வை மரியாதை செய்யவும் தயாராய் இருப்பார்கள் என்பதையே நம்ப முடிகிறது. பல்வித முரண்பாடுகளை மறைமுகமாகப் பேசுகின்ற இந்தத் திரைப்படம்  அற்புதமான காதற் கதை. நான் அது குறித்த எனது மனப்பதிவை நோயினால் நினைவிழந்து போய்க்கொணடிருக்கும் முதிய பெண்ணான அந்த சாகசக்காரி மீதான முச்சாய்வுடன் எழுதுகிறேன். ஆனால் அவள் மீதான ஆழ்ந்த காதலுடன் ‘’நான் 44 ஆண்டுகளில் ஒருமுறை தானும் அவளைப் பிரிந்து இருந்ததில்லை. [I was never away from her] இப்போது முதல் முப்பது நாட்கள் அங்கு வர வேண்டாம் என்கிறார்கள்’’ என்கிற ஒரு கிழவனின் குரலும், சிகிச்சைக்கு விடப்பட்ட இடத்தில் அவரையும் அவள் மறந்து போய் விட, தொடர்ந்தும் அவர் விருந்தினர் நேரங்களில் மருத்துவமனையே கிடையாய்க் கிடந்து அவளது கவனத்தை வேண்டி வேண்டித் திரும்புதலும் இடையில் எந்த வார்த்தைகளுக்கும் அவசியமற்று மனதைத் தொடுகின்றன.

கணவராய் நடித்திருக்கிற Gordon Pinsent உட்பட கனடிய நடிகர்களும் julie christie போன்ற ஒப்பீடற்ற திறமைமிகு பிரித்தானிய நடிகையும் ஒளிப்பதிவும் குறிப்பிட வேண்டியவை. மேலும் கனடிய திரைப்பட சூழலில் தவிர்க்கவியலாதவரான ஆர்மினிய பின்புலத்தைச் சேர்ந்த Atom Egoyanஆல் தயாரிக்கப்பட்டிருக்கிறது படம்.

05.
இங்கே சாகசம் என்பது சேர்க்கஸ் வித்தைகளல்ல. அது ஒருவளு(னு)க்கேயுரிய தனித்துவங்கள். மேடையில் நடனம் ஆடிய பெண்ணில் காதல் வசப்பட்டு திருமணம் செய்து கொண்டு அவளை ஒரு நடன ஆசிரியையாய்த் தன்னும் இருக்க விடாதவர்கள்; வீணை வாசிக்கத் தெரிந்த பெண் வேண்டும் என தேடித் தேடிக் கட்டிவிட்டு வீணையைத் தொட விடாதவர்கள்.. இப்படி சிலவற்றை இங்கே உதாரணமாய்ப் போடலாம். ஒருவள்(ன்) தன் சாகசங்களிலிருந்து விலக்கப்படுகிற போது அங்கே தானே நிகழ்ந்து விடுகிறது சுயமிழத்தல். ஒரு சிறு குருவி போல உயிர்ப்பே உருவாக ஃபியானோ சிறப்பான இல்வாழ்வை வாழ்கிற போதும் அவளது வாழ்விலும் அவள் அதை விட்டு ஓட விரும்புவதற்கான காரணங்களும் உண்டுதான். அவளது கணவன் ஒரு கல்லூரி பேராசிரியராய் இருந்தவர். அவர் அவளை விட்டு ஓடிவிடவில்லை என்றாலும் அவளது வாழ்வில் விதவிதமான சப்பாத்துக்களுடன் கணவருடம் சம்பந்தப்படும் அந்தப் பெண்களின் இருப்பு உணரப் பட்டிருக்கிறது. சிகிச்சை இல்லத்தை நோக்கிய பிரயாணத்தில் ஃபியானோ இப்படியாய்ப் பொருள்பட சொல்லுவாள் ‘எல்லா ஞாபகங்களையும் மறக்க முடிவதில்லை பார். எத்தனையோ விடயங்களை நான் மறந்திருந்தாலும் நான் மறக்கோணும் என நினைக்கிறவற்றை மறக்க முடியவில்லைப் பார். அந்த விதவிதமான சப்பாத்துகளுடன் பெண் கால்கள்!!!’ – இப் படத்தின் கதையின் அதி சிறப்பு ஒரு நோயூடாக எமக்குள் எழுப்பப் படும் கேள்விகள் தான். கடந்த காலங்களில் மிகவும் அருமையான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிற போதும் நல்ல உறவுகளில் இருந்திருக்கிற போதும் மனதை பாதிப்பதும் துளைப்பதும் அதனைப் பாதித்த துர் அனுபவங்களே. அவற்றிலிருந்து தப்பி ஓடி விடத் தான் அந்தக் கணம் அழுத்துகிறது. ஆனால தப்பிப் போகும் வாய்ப்பு புத்தனுக்கு மட்டுமே உரியது. ஒருவர் அல்லது ஒன்றின் மீதான பற்று மற்றும் சமூக நியமங்களும் தப்பிச் செல்லும் வாய்ப்புகளை விழுங்குகின்றன. அந்த வாய்ப்புகளிற்கு அவசியமற்ற கணம் நாம் எம்மை இழந்து போதலெனும் பிறழ்வுற்ற பைத்தியநிலையே. இந்தப் புத்தகத்தில் கிறான்ற் மனைவிக்கு அவளுக்குப் பிடித்தமான நூல்களை வாசித்துக் காட்டுவார். அதில் ஃபியோனாவின் பின்புலமான ஐஸ்லாந்துப் பிண்னணியில் [“Letters From Iceland” by; W.H. Auden என்கிற] ஒரு நூலிலிருந்து இந்த மேற்கோளும் வரும்: Those in love cannot make up their minds to go or stay. Artist and doctor return most often. Only the mad will never, never come back. (காதலில் இருப்பவர்களால் அதில் இருப்பதா அல்லது கைவிட்டுப் போவதா என்பதில் முடிவை எடுக்க முடியாது. கலைஞர்களும் வைத்தியர்களும் அனேகமாக திரும்பி வருவார்கள். பைத்தியக்காரர்கள் மட்டும் ஒருபோதும் திரும்பி வர மாட்டார்கள்).
0

==பிரதீபா கனகா – தில்லைநாதன்

குறிப்புகள்:
1. எடுத்தாளப்பட்ட கவிதை வரிகள்: தான்யா
2. திரைப்பட மேற்கோள்கள், தகவல்கள்: http://www.imdb.com/title/tt0491747/

தாய்வீடு டிசம்பர் பதிப்புக்காக / thaiveedu.com — for december 2011 issue

Advertisements
Leave a comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: