பிளவுண்ட வகுப்பு : ஒரு பரிசோதனைப் பாடம்

“Oh, Great Spirit, Keep me from ever judging a man until I’ve walked in his moccasins”
– Sioux Aboriginal Prayer

01

முற்போக்கான புரிதல்களை வளர்க்கின்ற மாற்று அமைப்புகள் தமது அறிவூட்டல் நிகழ்வுகளில்  – unlearn என்றொரு ஆங்கிலச் சொல்லை நாம் கற்ற தவறான விடயங்களை எம் மூளையிலிருந்து அகற்றுதலைக் குறிப்பதுக்குக் கூறுவார்கள்.  learn, unlearn. அதாவது, நாம் கற்க வேண்டும்; அதே நேரத்தில், எமக்கு கல்விக் கூடங்களில் குடும்பங்களில் சமூக சூழலில் கற்பிக்கப் படுகிறவற்றில் இருக்கும் தவறானவையை (மற்றவர் குறித்து, பாரபட்சங்களைத் தொடர்ந்தும் வலியுறுத்திக் கொண்டிருப்பவற்றை) நாங்கள் எம் அறிவிலிருந்து அகற்றுதலும் அவசியமாகின்றது.  நாம் கற்றவற்றை  மறுசீலனை செய்ய வேண்டும். ‘டாக்குத்தர் சொன்னால் எல்லாம் சரியாயிருக்கும், ஆசிரியர் சொன்னால் எல்லாம் சரியாயிருக்கும், பல்கலைக்கழகங்களிற் கற்பிக்கின்ற எல்லாமே சரியாய்த் தான் கற்பிக்கப்படுகின்றன, படித்தவர்கள் எல்லாருமே அறிவாளிகள்’ இப்படியான நம்பிக்கைகளைக் காவிக் கொண்டிருக்கிறபோது அங்கே மறுசீலனைக்கு இடமற்றுப் போய் விடுகிறது.

02
பாரபட்சங்களது வேர்  ஆழமானது; அது கண்ணுக்குத் தெரியாதது, சமயங்களில் நாமும் அறியாது நம்முள் ஆழ ஊன்றி வளர்வது. அதை யாரேனும் சமூக சீர்திருத்தவாதிகள் வந்து கேள்விக்குட்படுத்தி அடையாளங் காணும் வரை, அதுவும் சமூகத்தில் ஒரு அங்கமாக தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டு யாராலும் ஆட்சேபிக்கப் படாது வாழ்ந்து கொண்டிருக்கும். அந்த தனிநபர் சீர்திருத்தங்கள் பலவாய்ப் பரவி சமூக இயக்கமாய் அல்லது ஒரு சமூக மாற்ற இயக்கமாக உருவெடுத்து சமூகத்தை உலுக்கி, மாற்றத்தைக் கொண்டு வரும் வரையில், அதன் கபடங்கள் உயிருடன் தன் விச நாக்குடன் சக மனிதர்கள் மீதில் ஒடுக்குமுறையை நிகழ்த்திக் கொண்டிருக்கும்.

கள்ளங் கபடமற்ற மாசுமருவற்ற ஒரு பருவமென அறியப்படுகிற சின்ன வயதுகளை நினைக்கிற போது அதனுள் கலந்திருந்த பாரபட்சங்களை என்னால் இன்று அடையாளங் காண முடிகிறது. அவை எங்கிருந்து வந்தன என்பதையும்.

வன்னியில் காணிகளை உடைய – குடிசை அல்லாது  – வீடுகளுள் வாழ்கிறவர்களது பிள்ளைகள் மரியாதையற்று யாரை அவன் என்று விளித்தார்கள் என்பதையும் யாரை அவர் என்று சொன்னார்கள் என்றும் பார்த்தால் அதற்குக் காரணமான சாதித் தடிப்பும் பொருளாதாரப் பின்னணிகளும் தெரிய வரும். அதே போல தம் வீட்டில் வேலை பார்க்கிறவரை பெரியவர்களைப் போலவே சிறுவர்களும் பெயர் சொல்லியே அழைத்தார்கள். இதே நிலவரமே வன்னியில் யாழ்ப்பாணத்தில் கொழும்பில் மலையகத்திலிருந்து வீட்டு வேலைக்கெனக் கொண்டு வரப்பட்ட வீட்டுத் தொழிலாளர்களுக்கும் நடந்தது. அந்த வசதியான வீடுகளின் குழந்தைகள் அவர்களிடம் வன்முறையையும் குரூரத்தையும் பிரயோகித்தார்கள். ஒரே மொழியைக் கதைக்கின்ற போதும் அவர்களும் மனிதர்களே என்கிற போதும் அவர்கள் நடத்தப்பட்ட விதங்களில் எதுவும் தவறிருப்பதாக சூழ இருந்த யாருக்கும் உறைத்ததில்லை.

கள்ளம் கபடமற்ற அப் பருவத்தில், பாரபட்சத்தின் அந்த முதல் முளைகளை, கிள்ளி எறிய பெரியவர்கள் – ஆசிரியர்கள் – பெற்றோர்கள் எவருக்கும் ஏன் தோன்றவில்லை? பிள்ளைகள் பாரபட்சங்களை அங்கேயே கற்றார்கள்.  அவை தலைமுறைகளாய் ஏற்றுக் கொள்ளப்பட்டுக் கடத்தப்பட்டன.

பாரபட்சங்கள் அவ்வளவு தூரம் பிழையற்றனவாக நெறிகளுள் ஒன்றாக எங்களுக்குள் தம்மைத் தகவமைக்கச் செய்திருக்கின்றன.

அதனாற் தான் கல்வி கற்பிக்கிற – கடவுள்களில் ஒருவராகக் கருதப்படும் – ஆசிரியர் தொழிலில் உள்ளவர், சாதிய ரீதியில் ஒடுக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளிடம் ‘போய் சிரையுங்கோவன்டா’ ‘போய் மரமேறுங்கடா’ என்றும், விவசாயிகளது பிள்ளைகளிடம் ‘போய் மாடு மேயுங்கடா’ என்றும் கூறுவது ‘இயல்பாய்’ இருந்தது; தவறாய்ப் பார்க்கப் படவில்லை. யாரையும் உறுத்தவில்லை.

03
ஒடுக்கப்பட்டவர்கள் பள்ளிப் படிப்பை தொடருவதற்குத் தடையாய் ஆதிக்க சாதியினது ஆணவ அடக்குமுறை காரணமாய் இருந்திருக்கிறது. கரும்பலகையிற் தவறாகக் கணக்குப் போட்டுக் காட்டிய வாத்தியாரை, தான் தவறென்று திருத்தியபோது,  ஒரு ஒடுக்கப்படும் சாதியைத் சேர்ந்த மாணவன் தன்னைத் திருத்துவதைப் பொறுக்காத அந்த ஆசிரியர் கோபத்துடன் ‘போய்ச் சிரையுங்கோவன்டா’  என்றதைத் தன் கால அனுபவங்களை விபரிக்கும் ஒரு சிறு விவரணப் படத்தில் ஈழத்தின் முக்கிய இலக்கிய அரசியல் ஆளுமைகளுள் ஒருவரான டொமினிக் ஜீவா பகிர்ந்திருந்தார்.  மேலும் அவர், ‘எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்’ என்கிற தனது  சுயவரலாற்று நூலில் சாதி ஒடுக்குமுறை மற்றும் அதற்கெதிரான தனது அரசியல் அனுபவங்களை விரிவாகப் பதிந்திருக்கிறார்.
இதில் சாதியத் திமிரை (ஈகோவை) காட்ட எடுத்துக் கொண்ட ஆயுதம்: சாதிய ரீதியான அவமதித்தல். தனது அதிகாரத்தைப் பிரயோகிக்க சமூகத்தில் ஏலவே இருக்கவே இருக்கிற பாரபட்சங்கள் அந்த ஆசிரியருக்கு உதவுகின்றன. அவர் ‘(சாதிய மற்றும் பிற) அடக்குமுறைகள் பிழையற்றன’ என்கிற சூழலின் வார்ப்பு.
அந்தச் சூழலில் அத்தகைய ஆசிரியர்களை ஒத்தவர்களுடைய செயல்களைப் பார்த்து வளர்கிற சக மாணவர்கள் அத்தகைய அவமதிப்புகள் தவறல்ல என்றே ‘கற்று’க் கொள்கிறார்கள். விளையாட்டுத் திடலில் தம் சக மாணவர்களைச் சாதி சொல்லி அவமதிக்கிறார்கள். தம்மை விடக் கெட்டிக்காரர்களாக அவர்கள் இருந்துவிடில், அது தருகிற எரிச்சலுடன் – ஆசிரியர்மாரின் ஒத்துழைப்புடன்  – போய்ச் சிரையுங்கோடா எனக் கத்துகிறார்கள்.
ஏனெனில்:
– பெரியவர்கள் சொல்வதைக் கேட்கவேண்டும்.
– உயர்பீடங்களில் இருப்பவர்களைப் பின்தொடர்வது சமூகக் கடமை.
– பெரியவர்கள் எப்போதுமே பொய் சொல்வதில்லை.
– ஆசிரியர்கள் பிழையானவற்றைப் படிப்பிப்பதில்லை
– ஒப்புர ஒழுகு

இங்கே தான் கேள்விகள் எழும்புகின்றன. கல்வி, அது, எதைக் கற்பிக்கிறது? இத்தகைய பாரபட்சங்கள் உட்பட கல்விக்கூடங்களில் நாம் உள்ளெடுத்துக் கொள்ளும் அனைத்துமே அறிவுதானா? எனில், எத்தகைய அறிவு?

04
எங்களைச் சூழவும் பாரபட்சங்கள் அதிகாரங்களாக எமது கைகளில் தரப்பட்டுள்ளன. குறிப்பாக இந்து மதம் ஒருவரது பிறப்பே முன்வினைப் பயன் எனக் கூறி, ‘தாழ்ந்த’ பிறப்பு பாவத்தின் வினைப் பயன் என்றும், ‘உயர்ச்சி’ முன்செய் நன்மைகளின் விளைபலன் என்றும் கூறி வைத்திருக்கிறது. ஒருவரது ஜாதிய அடையாளம், பொருளாதார பின்புலம், பால் அடையாளம் – இவையெல்லாம் அவை அவைக்கு ஏற்ப பலங்களை எமக்குத் தந்துள்ளன.

ஒரு ஆணாக இருத்தல், ஒரு வசதியான ஆணாய் இருத்தல், ஒரு வசதியான ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஆணாய் இருத்தல் – இவை எல்லாம் ஒரு வறிய, ஒடுக்கப்பட்ட ஆணாய் இருத்தலை விட, ஒடுக்கப்பட்ட சமூகத்தை விட மேலான அதிகாரங்களைக் கொண்டது; அதற்குத் தகவாய் சலுகைகளையும் வாய்ப்புகளையும் கொண்டது.

ஆச்சரியமூட்டக் கூடிய வகையில், ஏலவே இருக்கின்ற பாரபட்சங்களுக்கு எதிரான சட்டதிட்டங்கள், இயக்கச் செயல்பாடுகள், தற்காலிக சமூக மாற்றங்கள் நீண்ட காலத்துக்கானவையாகச் செயல்படுத்தப் படாத போதில் மீண்டும் அவை  பாரபட்சங்களுக்கே வழி திறந்து விடுகின்றன. இயற்கை அழிவுகள் – மனித அழிவுகள் – பெரும் போர்களின் பிறகும், எல்லாம் வழமைக்குத் திரும்பி விடுகின்றன. போராடிய பெண்கள் சமையலறைக்குத் திரும்புகிறார்கள். சாதிய சமூகம் தன் சாதித் தடிப்புகளுக்குத் திரும்புகிறது. “உங்களை ஆயிரம் பெரியார் வந்தாலும் திருத்த முடியாது” என்றவாறு சலிப்புடன் நகர்கிறார்கள் சமூக செயற்பாட்டாளர்கள் தமிழ்நாட்டில்.

05

தாம் நம்புகிற எது குறித்தும் தம்மால் முடியக் கூடிய எல்லைகளுள் இருந்து எதிர்ப்பை எழுப்பக் கூட தயங்குவர் பலர். எம் சக்திக்கு இது முடியுமா.. என்னால் இது முடியுமா.. எமக்கு அப்படியொரு சக்தி இருக்கிறதா என பின்னடிப்பார்கள்.

ஆனால் சிலர் இருக்கிறார்கள் தாம் நம்புகிறவற்றுக்கு அவர்களே ஆஜர் ஆகுவார்கள். தமது எல்லைகளுக்குள் மாற்றங்களை உண்டாக்குவார்கள்.  சமூகரீதியான  தலைமைத்துவப் பண்பு என்பது சமூகத்துள் இருந்தே வருவது – இதையே எனக்கு உறுதிப்படுத்துகிறார் ஆசிரியை Jane. தன் வேலையே பறிபோகக் கூடிய வாய்ப்பிருந்தும், சக ஆசிரியர்களால் அச்சுறுத்தலுக்கும் வெறுப்புக்கும் புறக்கணிப்புக்கும் உள்ளான போதும், தனது குழந்தைகளையும் கேலிகள்-கிண்டல்கள் என அது பாதித்த போதும் அவர் தனது எல்லைகளுக்கு வெளியே போயும் தான் நம்பியதை பேசிடத் துணிந்தார்.


1968 றைஸ்வில், ஐஓவா :
சிறுவன் ஒருவன் அன்று தனது மூன்றாம் வகுப்பு ஆசிரியரிடம் கேட்க கேள்வி ஒன்றுடன் வருகிறான்…”ஒரு அரசனைக் கொன்று விட்டார்களாமே… அவனை ஏன் ரீச்சர் கொன்றார்கள்” என்பதே அவனது கேள்வி.

1968 ஏப்ரல் 4 – கறுப்பினச் சிவில் உரிமைகள் தலைவர் மார்ட்டின் லூதர் கிங் கொல்லப்பட்டிருந்தார். அது குறித்த தொலைக்காட்சி செய்திகளும் உரையாடல்களிலிருந்தும் ஒரு அரசனைக் (king) கொன்றுவிட்டதாக அவனுக்கு விளங்கியிருந்தது. தன் வயதுக்கேயுரிய அறியும் ஆர்வமும் துடிதுடிப்பும் அவனிடம்… மார்ட்டின் லூதர் கிங் கொல்லப்பட்ட போதான தொலைக்காட்சி நிகழ்வுகள் அந்த ஆசிரியரையும் பாதித்திருந்தன. அச் சந்தர்ப்பத்தில் அமெரிக்காவில் ஒடுக்கப்படுகிற பிற இனங்கள் குறித்த புரிதலை ஏற்படுத்தும் ஒரு பாடத்தை தனது மாணவர்களுக்கு அவர் கற்பிக்க விரும்பினார். ஆனால் அந்தப் பாடம் வழமையானதொன்றாக இருப்பதை அவர் விரும்பவில்லை. ஏனெனில் காலங் காலமாக கல்விக்கூடங்களில் பாடத் திட்டங்களில் பாரபட்சங்கள் குறித்த மேலோட்டமான பாடங்கள் இடம்பெற்றுக் கொண்டுதானிருந்தன.  ஆனால் பெரும்பான்மையாய் வெள்ளையின கிறித்துவர்களையே சனத்தொகையாய்க் கொண்டிருக்கிற றைஸ்வில் கிராமத்தில் உண்மையாகவே அடக்குமுறைக்குட்படுகிற இன்னொரு இனத்தவராய் இருப்பது என்பது எப்படியானதோர் உணர்வு என்பதை கற்பிக்க விரும்பினார்.

இது குறித்துக் கூறுகையில் அந்த ஆசிரியர் ஜேன் இலியட் (Jane Elliott) கூறினார். ‘கிங் கொல்லப்பட்ட பிறகு, தொலைக்காட்சியில் வெள்ளை நிருபர்கள் கறுப்பினத் தலைவர்களை நோக்கிக் கேட்ட கேள்வி என்னை யோசிக்க வைத்தது. அந்த நிருபர்களில் ஒருவர் கேட்டார் ‘எமது தலைவர் (கென்னடி) கொல்லப்பட்டபோது அவரது மனைவி எங்களை ஒரு ஒழுங்குள் வைத்திருந்தார்.  உங்களது மக்களை யார் கட்டுப்படுத்தப் போகிறார்கள்?’ இந்தக் கேள்வியின் பின்னாலுள்ள நாங்கள் எதிர் நீங்கள் என்கிற அந்த வேற்றுமையின் அரசியல் என்னைச் சிந்திக்க வைத்தது.  ஒரே நாட்டில் வசிக்கிற மனிதர்கள் தொடர்பில் உங்களது மக்களை யார் கட்டுப்படுத்தப் போகிறார்கள் என்கிற பிறிம்பான கேள்வியின் பின்னே அவர்களை இரண்டாம் மனிதர்களாக உப பிரிவாக பார்க்கிற வெள்ளை உளவியல் இருந்தது; வளர்ந்தவர்களிடமே இந்த மனநிலை இருக்கிற போது றைஸ்வில் போன்றதொரு சிறு கிராமத்தில் சிறுவர்கள் எத்தகைய மனநிலைகளுடன் இருப்பார்கள் என்கிற கேள்வி என்னைச் சிந்திக்க வைத்தது. பாடத் திட்டங்கள் வருடா வருடம் இந்த நாட்டின் பூர்விகக் குடிகளுடன் புரிதலை வளர்த்தல் பற்றியும், ஒவ்வொரு மாதங்களை ஒவ்வொரு தலைவர்களுக்கு அர்ப்பணித்தும், சமூக நீதிகளைப் பேசி வந்தாலும் அவை உண்மையான புரிதல்களை வளர்த்தனவா தாக்கத்தைத் தந்தனவா என்றால் அப்படி இல்லை என்பதே பதில்.’

உள்ளடக்கப்பட்ட நிறைய விடயங்களைப் பாடத் திட்டங்கள் கற்பித்த போதும், அவை சரியான வகையில் மாணவர்களால் உள்வாங்கப்படுவதற்கு அவை ஏது செய்வதில்லை. இதற்கான மாற்றாக, 1968இல் அந்த வகுப்பறையில் தனது 3ம் வகுப்பு மாணவர்களுக்குள் அந்த நல்லாசிரியர் அப் பரிசோதனையை நிகழ்த்தினார் – அவர்களால் ஒருகாலமும் மறக்க முடியாத பரிசோதனை!

06
சயொக்ஶ் (Sioux) பூர்விக இனத்தவரது ஒரு பிரார்த்தனைப் பாடலான ‘ஓ.. மாபெரும் ஆத்துமாவே, நான் எவர் ஒருவரதும் பாதணியில் நடக்க நேரும் வரையில், அவரை மதிப்பிட என்னை அனுமதியாதே’ [“Oh Great Spirit, keep me from ever judging a man until I have walked a mile in his moccasins.”] என்பதை மையப்படுத்தியமைந்தது அவரது பாடம். ‘உனது உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது’ எனக் கூறினாற் போல, பல்வித அசமத்துவங்களைக் காவுகிற உறவுகளிலே எம்மால் எச் சந்தர்ப்பத்திலும் முழுமையாய் மற்றவருடைய உணர்வுகளைப் புரிந்திட முடிந்ததா? அவரது இடத்திலிருந்து அவரது நியாயங்களை அறிந்திட முடிந்ததா?

அப் பிரார்த்தனையை முன்வைத்து வகுப்பறையில் இனத்துவேசம் குறித்த சிறு உரையாடலை நிகழ்த்தினார் ஜேன். ‘’எப்படி நீங்க மற்ற இனத்தவரைப் பார்க்கறீர்கள். இந் நாட்டின் பூர்விகக் குடிகளை. கறுப்பர்களை?’’ இவ்வாறு கேட்கப்படுகிற போது, சிறுவர்கள் எந்தத் தணிக்கையுமின்றிக் கூறுகிறார்கள் ‘அவையளப் பாக்கேக்க நாங்க நினைப்பம் ‘பாரன் ஆக்கள’ எண்டு’ ‘குப்பைச் சனம்’ ‘அவர்கள் வெள்ளையர்கள் போல புத்திசாலிகள் இல்லை’ ‘சண்டை பிடிப்பவர்கள்’ –  நிறத்தை வைத்து ஆக்களை மதிப்பிட முடியுமாயின், ஆட்களது கண்களைப் பார்த்து ஒருவருடைய இயல்பை கணிப்பிட முடியுமா… கணித்துப் பார்ப்போமா என்ற கேள்வியுடன், ‘பாப்போமே’ என்கிற பிள்ளைகளது ஆர்வத்துடன், பிறகு அன்றைய வகுப்பை அவர் இரண்டாகப் பிரித்தார். அவர் சொன்னார் ‘நான் தான் உங்களின் ஆசிரியர்… எனக்கு நீலக் கண்கள். ஆகவே நீலக் கண்களை உடைய மனிதர்கள் கெட்டிக்காரர்கள். அவர்களுக்கு விசேச பலமும் இயலுமைகளும் உண்டு.’ மண்ணிறக் கண்களை உடைய பிள்ளைகளது உதடுகள் துடித்து கண்களில் துயரம் எட்டிப் பார்க்கிறது ‘அதெப்பிடி’ ‘அப்ப நாங்க?’ ‘இல்ல.. இருக்கவே இருக்காது’ என வாதிட வருகிற குழந்தைகளை அவரது குரல் மறிக்கிறது ‘உனது அப்பா உன்னை அடித்ததாகச் சொன்னாயே.. அவருக்கு மண்ணிறக் கண்ணா.. நீலநிறக் கண்களை உடைய அப்பாக்கள் இப்படி நடந்து கொள்வார்கள் என நினைக்கிறாயா?’
‘திறமை குறைவான மண்ணிறக் கண்களை திறமை கூடியவர்களிடம் இருந்து உடனடியாக வேறுபடுத்திக் காட்ட வேண்டும்! நீங்கள் இந்த கொலரைப் போட்டுக் கொள்ளுங்கள்.. தூரத்திலே உங்களை அடையாளங் காண உதவும்’
அத்துடன் நிறுத்தாது அவர் அன்றைய அவர்களது விளையாட்டுக்கான இடைவேளை நேரத்தை, நீலநிலக் கண்களை உடைய பிள்ளைகளுக்கு முன்னதாகவும் மண்ணிறப் பிள்ளைகளுக்கு தாமதமாகவும் குறைவாகவும் தரப் போவதாக அறிவிக்கிறார். மண்ணிறக் கண்களை உடையவர்கள் உடைந்து போய் நிக்கிறார்கள். நீலநிலக் கண்களை உடைய சிறுவர்கள் முகத்தில் மகிழ்ச்சி எட்டிப் பார்க்கிறது. தாம் உயர்ந்தவர் என்கிற போதை அவர்களது உடலெங்கும் மெல்ல மகிழ்ச்சியைப் பரப்புகிறது.

இரக்க சுபாவமும் சிறந்த எண்ணங்களும் உள்ள அந்தக் குழந்தைகள் ஒரு கணத்தில் தீய்மையும் வெறுப்பும் கொண்டவர்களாகி விட்டார்கள் – அதுவும், தம் சக மாணவர்களுக்கு எதிராக! தம் நேற்றைய நண்பர்களுக்கு எதிராக…! இடைவேளை நேரத்தில் கடந்த காலங்களில் உற்ற நண்பர்களாய் இருந்தவர்கள் கூட மண்ணிறக் கண்ணை உடையவர்களுடன் விளையாட அனுமதிக்கப்படவில்லை.  பழைய நண்பர்கள் யாரும் அவர்களை அழைக்கவும் இல்லை. அத்துடன் அவர்களை அவர்கள் மண்ணிறக் கண் உடையவர்கள் என வசையாடுகிறார்கள்… அவர்களை அவமதிக்கிறார்கள்… இடைவேளையில் அவர்கள் தனித்து அழுதவாறு தம்மைச் சிறுமைப்படுத்தும் கொலரை குளிராடைக்குள் மறைத்தபடி ஒதுங்கியிருந்தார்கள்.

இடைவேளையின் பிறகு: அவர்களது நடத்தைகளைக் கேட்கிற ஆசிரியை ஜேன் அவர்கள் அப்படி நடந்து கொண்டதற்கான காரணங்களைக் கேட்கிறார். தன்னை மண்ணிறக் கண் என்று சொன்னது தன்னை ஒரு முட்டாளாக உணர வைத்தது என்றும் அதனாற் தான் நான் சக மாணவனை அடித்தேன் என ஒரு மண்ணிற கண்ணை உடைய சிறுவன் கூறுகிறான். அவனது முகமோ சோகமே உருவாகி இருக்கிறது. விட்டால் தான் தனிமைப் படுத்தப்பட்டது தொடர்பில் அழத் தயாராக இருக்கிறது அது.  ‘அது… அப்படி அவனை அடித்தது.. உன்னை சந்தோசப்படுத்தியதா’ என்று அவனிடம் ஆசிரியர் திரும்பவும் கேக்கிறார், அவன் இல்லை என்று தலையசைக்கிறான். அவனது முகமும் மண்ணிறக் கண்களும் துயர் படர்ந்து சிறுத்து தெரிகின்றன. தான் ஒரு பெறுமதியற்றவன் என்கிற செய்தியை அது தருகிறது. தன் நண்பர்களால் ஒரே நாளில் தான் புறக்கணிக்கப்பட்ட வலி தெரிகிறது.

மறுநாள்: அதே வகுப்பறையில் ஜேன் கூறுகிறார் ‘நேற்று நான் நீலக் கண் உடையவர்கள் மண்ணிறக் கண்களை உடையவர்களை விடக் கெட்டிக்காரர் அதி புத்திசாலிகள் என்று கூறினேன். நான் நேற்று பொய் தான் சொன்னேன்.. உண்மையில் நீலக் கண்களை விட மண்ணிறக் கண்களை உடையவர்கள் தான் புத்திசாலிகள்’.  நீலக் கண் சிறுவர்கள் ‘அப்படி இருக்காதே’ என  மறுக்கிறார்கள். ‘ம்ஹீம் அது தான் உண்மை’ என்ற ஆசிரியை, இப்போது தன் கண்ணாடியை மறந்துவிட்டு வந்திருந்த நீலக் கண்களை உடையவனிடம் ‘உனக்கு நீலக் கண் இருப்பதாற் தான் இந்த மறதி. பார் மண்ணிறக் கண்களை உடையவர் யாரும் தங்களது கண்ணாடிகளை மறக்கவில்லை’ என்கிறார். கரும்பலகையில் வந்து பதில் எழுதச் சொல்ல முதல் நாள் துயர் படர்ந்திருந்த சிறுவன் உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்து இப்போது பதிலை தன்னம்பிக்கையாய் வந்து எழுதுகிறான்.  ஆசிரியரின் குரல் இன்னும் உறுதி பெறுகிறது ‘மண்ணிறக் கண்களை உடையவர்கள். வேகமானவர்கள். வந்து வேகமாய்ப் பதிலை எழுதிச் செல்வதிலேயே அது தெரிகிறது.’ எதிர்ப்புடன் தலையை மேசையில் சாய்ந்து வைத்திருக்கிற சிறுவனைப் பார்த்து, ‘இவனைப் பாருங்கள்… நீலநிறக் கண்களை உடைய பிள்ளைகளுக்கு ஒரு கதிரையில் எப்படி ஒழுங்காய் இருப்பது என்பதே தெரியவில்லை.. இதிலேயே தெரியவில்லையா இவர்களைப் பற்றி….’ (நீலக் கண் காரர்கள் சங்கடத்துடன் நெளிந்தவாறு கேட்டவாறு இருப்பார்கள்).  ஆசிரியர் இறுதியாய்க் கூறுவார் ‘இப்போது மண்ணிறக் கண்களை உடையவர்கள் அணிந்துள்ள கொலரை அப்படியே உங்களருகில் இருக்கிற நீலக்கண் காரருக்குப் மாட்டி விடுங்கள்’ – அந்தக் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் வந்து அதை அணிவிக்கும். 5 நிமிட மேலதிக இடைவேளை நேரமும் இவர்களுக்குக் கிடைக்கும். அத்துடன் விளையாட்டுத் திடல் உபகரணங்கள் எதையும் உபயோகிக்க நீலக் கண் காரருக்கு அனுமதியில்லை. அதே போல மண்ணிறக் கண்களை உடையவர்களுடனும் அவர்கள் விளையாட முடியாது.

ஒரு கணத்தில் அவர்களது தன்னம்பிக்கை உயர்ந்துவிட்டது. வகுப்பறை அறிவுசார் போட்டியில், முந்தைய நாள் 5 ½ மணிநேரம் எடுத்த மண்ணிறக் கண் சிறுவர்கள் இந்தப் புதிய நாளில் 2 ½ மணி நேரங்கள் எடுக்கிறார்கள்.
‘ஏன் உங்களால் நேற்று இது போல புள்ளிகளைப் பெற முடியவில்லை’ என்று ஆசிரியர் கேட்க, மாணவர்கள் பதிலளிக்கிறார்கள், ‘நேற்று நாங்கள் அந்த கொலரைப் பற்றியே யோசித்தவாறு இருந்தோம். இதில் எங்கள் மனம் ஈடுபடவில்லை. அது எம் கழுத்தைச் சுற்றிக் கொண்டு கிடந்தது.’
நேற்றைய நாள் 3 மணித்தியாலங்கள் எடுத்த நீலக் கண்களை உடையவர்களோ இன்றானால் 4 மணித்தியாலங்களும் 18 விநாடிகளும் எடுக்கிறார்கள். ஏனென்று கேட்க தாங்கள் ஒரு பிரியோசனமும் அற்றவர்களாக இன்று தங்களை உணர்ந்ததென்றும் அது தங்களைப் பாதித்ததென்றும் கூறுகிறார்கள். ஆசிரியரும் அவர்களுடன் இணைந்து கொள்கிறார் ‘இன்றைய நாளை நான் வெறுக்கிறன். ஏனென்டா எனக்கும் நீலக் கண்’ – குழந்தைகள்  அதை ஆமோதித்து உரையாட தங்களை  இணைத்துக் கொள்கிறார்கள். ‘..ஆனால் இது ஒரு சந்தோசமான நாளாய் இருக்குமென்று நான் உங்களுக்குச் சொல்லவில்லையே.. ஏனெனில் பாரபட்சம் என்கிற விடயமும் சந்தோசமான விடயமில்லை. அது ஒரு விளையாட்டுக்குரியதும் அல்ல’ – இவ்வாறு ஆசிரியை கூறத் தொடரும் உரையாடலில் அவர் அவர்களது உணர்வுகளைப் பகிரக் கேட்கிறார். கயிற்றால் கட்டப்பட்ட நாயைப் போலவும் நேற்று தங்களது நண்பர்கள் எப்படி உணர்ந்தார்களோ அது போல எனவும் ஒரு சிறைக்குள் அவர்களை அடைத்துவிட்டு திறப்பை  வெளியே எறிந்து விடுவது போல எனவும் அவர்கள் தம் மனநிலைகளைப் பகிர்கிறார்கள்.
இறுதியாய் அந்த ஆசிரியர் கேட்கிறார்:
அப்படியானால் ஒருவருடைய கண்ணின் நிறத்தை வைத்து ஒருவரை நாம் மதிப்பிடலாமா ?
சிறுவர்கள சொல்கிறார்கள்: இல்லை
அப்படியானால் ஒருவருடைய தோலின் நிறத்தை வைத்து ஒருவரை நாம் மதிப்பிடலாமா ?
இல்லை
ஒருவருடைய நிறத்தை வைத்தோ இன்ன பிற தோற்றத்தை வைத்தோ ஆட்களை நாம் மதிப்பிடலாமா ?
இல்லை…
(அந்தப் பையனின் முகமும் துயரம் மிகப் படியக் கூறுகிறது – இல்லை. இல்லை)

இவற்றை வைத்துத்தானா மனிதர்களை நல்லவர்களாக கெட்டவர்களா என மதிப்பிடுவீர்கள் ?
இல்லை
தோலின் நிறம், கண்ணின் நிறம் இவையா ஆட்களை நல்லவர்களாயும் கெட்டவர்களாயும் ஆக்குவது ?
இல்லை

அந்த கொலருகளை அகற்றக் கூறிவிட்டு, அதை என்ன செய்யப் போகிறீர்கள் என ஆசிரியர் கேட்க, அவர்கள் ஒருமித்து அதனைக் குப்பையில் எறிய விரும்புவதாய்க் கூறி, கிழி கிழி என்று கிழித்து, அவர்களது கழுத்தைக் சுற்றிக் கிடந்து, அது கடத்திய விசத்தைத் தம்மிடமிருந்து பிதுக்கி எறிய விரும்புகிறவர்கள் போல – எல்லையற்ற உற்சாகத்துடன் கிழித்தெறிகிறார்கள். பிறகு நண்பர்கள் ஓடி வந்து ஒருவரை ஒருவர் தோள்களிற் கை போட்டுக் கொண்டார்கள் இறுக்கமிழந்த அந்த மகிழ்ச்சியைத் தெரிவிக்க. முகங்களிலிருந்து துயரமும் அந்நியமும் விலகி விழுகிறது.

இப் பரிசோதனையை அந்த ஆசிரியர் செய்து 43 வருடங்கள் ஆகிவிட்டன. இன்றாயினும் இதற்கான தேவை இல்லாது போய் விட்டதா? ஜேனே 2002-இல் ஒரு பேட்டியில் கூறியது போல, ‘இதன் தேவை இன்னும் இருக்கிறது… ஏனெனில் இந்த நாட்டிலும் சரி ஏனைய உலக நாடுகளிலும் சரி நாங்கள் வெள்ளையின உயர்ச்சி மனப்பான்மை [white superiority] என்கிற மூடநம்பிக்கையை இன்னமும் பழக்கப்படுத்தி வருகிறோம்.  ‘இந்த நாட்டில் இனத்துவேசமெல்லாம் இப்ப இல்லை’ என்றே தொடர்ந்தும் சொல்லப்பட்டு வருகிறோம். ஆனால் இதைச் சொல்லுகிற அனேகமானவர்கள் வெள்ளையர்கள் தான். வெள்ளையினத்தவர்கள் நினைக்கிறார்கள் அப்படி (இனத்துவேசம்) எல்லாம் இல்லை என.  ஏனெனில் வெள்ளையர்கள் நினைக்கிறார்கள் தமக்கு நடக்காத எதுவும் (மற்றவர்களுக்கும்) நடக்காது என.

இந்தப் பரிசோதனை பலதரப்பட்ட பல்கலாச்சார வேலைத்தள பயிற்சிகளின் போது; பாலின மற்றும் இனரீதியான புரிதல்களை வழங்க செய்யப்படும் பட்டறைகளின் போது; இன்றுவரை  ஜேனாலும் பல செயற்பாட்டாளர்களாலும் முன்னெடுக்கப்படுகின்றது.  சிறுவர்கள் மட்டுமல்ல இந்தப் பரிசோதனைக்கு உள்ளாகிற பெரியவர்கள் கூட தாம் இதுகால்வரையில் கவச குண்டலங்களென அணிந்து வைத்திருந்த இனத்துவ, பால் மற்றும் வர்க்கப் பெருமைகள் ஒவ்வொன்றையும் இத்தகைய பரிசோதனை ஊடாக ஜேன் புடுங்கி எறிகையில், இறுதியிற் சிறுத்துப் போய் கூனிக் குறுகி நிற்கிறார்கள் – அப்போதில், இதுகால்வரையில், தமது உயர்வு-மனப்பாங்கினால் இவர்களால் ஒடுக்கப்பட்ட அந்த மனிதர்களைப் போல ஆகிவிடுகிறார்கள். தனித்து, நவ – நாசிகளது ஆதிக்கம் நிறைந்த ஒரு யேர்மானிய புறநகர்ப் பகுதியில் மாட்டுப்பட்டுவிட்ட மற்ற இடங்களில் மறத் தமிழ் வீரம் பற்றி பேசக் கூடிய இளைஞனது நிலை எப்படியிருக்கும்? பல் புடுங்கப்பட்ட பாம்பு; கூண்டில் அடைக்கப்பட்ட புலி – இப்படி ஒன்றாய் ஒரு கணத்துள் மா(ற்)றி விடும் நிலமையை, இக்கட்டை, இப் பரிசோதனை ஏற்படுத்துகிறது. அது அச்சங்களுள் வாழும் ஒடுக்கப்படும் மற்றவரது பாதணியில் நடக்கச் செய்கிறது..

07
வெள்ளை உயர்ச்சி மனப்பான்மையிலும் குறைவானதா என்ன நமது கண்டத்திலுள்ள பிராமண – வேளாள – ஆதிக்க மனப்பான்மைகளது அடக்குமுறைகள்?
சமீபத்தில் இணையத்தில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. கால் ஒன்றினைப் போரினில் இழந்திருந்த 29-வயது முன்னாள் போராளியும் அவரது மனைவியும் தற்கொலை செய்திருந்த செய்தி அது.  ‘ஒடுக்கும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த சங்கீதாவும் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த நிறஞ்சனும் இணைந்து வாழ்ந்ததில் சில சமூக முரண்பாடுகளும் நிலவி இருக்கிறது. வசதியான நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்த சங்கீதாவை அவரது வீட்டார் ஏற்க மறுத்துவிட்டனர்’ என்பதாய் அதிற் குறிப்பிடப் பட்டிருந்தது. பெரும் மனித அழிவில் உயிர் பிழைத்து வந்த ஒரு இளைஞன்,  பலரது தேசக் கனவுக்காக தமது உயிரைத் தரத் துணிந்த மதிப்புக்குரிய முன்னைநாள் போராளிகளே கூட போர் முடிந்த பிறகு ஆதிக்க சமூகத்தால் மதிப்பிறக்கம் செய்யப்பட்டு இப்படியாய் முடிவெடுக்கிற அளவுக்கு, நடத்தப்படுவதை இட்டு ஒரு சமூகம் எவ்வளவு வெட்கித் தலை குனிய வேண்டும்? எதிர்க்க வேண்டும்? ஆனால் போரிற் பலியான ஆயிரக்கணக்கான உயிர்களைப் போலவே, இவை பெறுமதியற்ற வெறும் சம்பவங்களாய்ப் போதலன்றி, சமூகத்தில் சலனங்கள் வேறொன்றுமில்லை என்பதை என்னவென்பது?

இன்னும் இன்னும் இந்த சமூகம் கட்டிக் காவும் இந்த இழிவை, சாதிப் பாகுபாட்டை இன்னொரு சாரார் ‘இப்ப அதெல்லாம் ஒருதரும் பாக்கிறதில்ல’ என மறுத்தும்  கூட வருகிறார்கள்.  அதைக் கூறுவது யாரெனப் பார்த்தால் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்களாயே இருக்கிறார்கள். வெள்ளை இனத்-துவேசர்களைப் போலவே ஆதிக்க சாதிகளும் சொல்லிக் கொண்டிருக்கின்றன, தம்மேல் நிகழ்த்தப்படாத ஒடுக்குமுறைகள் எதுவும் ஒடுக்குமுறைகளே இல்லை என்பதாய்.  இங்கே ஒடுக்கப்பட்டவர் மீதான ‘பாரபட்சங்களது யுத்தங்கள்’ தொடர்ந்தும்  நடந்து கொண்டே தான் இருக்கின்றன – வெளிப்படையாகவும் மறைமுகமாகவும்.

இவை எந்த முகமூடியோடு வந்தாலும், இவற்றை எதிர்த்து நிற்காது, பார்வையாளர்களாக, கண்ணுக்கு முன்னால நிகழும் இந்த அநீதிகளை கண்டும் காணாதவாறு – சந்தர்ப்பங் கிடைக்கும் போது தாமும் இன்னொருவரைச் சாதியின் பேரில் அல்லது ஏதோ ஒன்றின் பேரில் அடக்கி ஒடுக்கியவாறு – இருக்கிறபோது, ‘நாம் இனரீதியாக ஒடுக்கப் படுகிறோம்’ என்று சொல்வதற்கான தார்மீக நியாயத்தை இழந்து விடுகிறோம்.  ஏனெனில் ஏதோ காரணங்களுக்காக இன்னொருவரை நாங்கள் ஒடுக்குவது சரியெனில்,  எங்களை அவர்கள் ஒடுக்குவதற்கான காரணங்களும் அவர்களைப் பொறுத்தவரையில் மிகச் சரியே. மேலும், தொடர்ந்தும், தமக்கேற்றபடி காரணங்களைப் புனைவதில் மனிதர்கள் நாம் மகா கெட்டிக் காரர்களே!
\

மேலும் அறிய:
http://www.pbs.org/wgbh/pages/frontline/shows/divided/
http://www.penniyam.com/2012/01/blog-post_21.html

Advertisements
Leave a comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: