ஓபியசின் தலை: யோ.கர்ணனின் சிறு கதைகள் ….

நேற்றும் கூட பெருமழை பெய்தது..

இன்னும் முளைக்கவில்லை

[மண்ணுக்காக] விதைக்கப்பட்ட மனிதர்கள்.

– சம்பூர் வதனரூபன் (கவிஞர், திருகோணமலை)

பண்டைய கிரேக்க புராணக் கதைகளில் ஓர்பியஸ் என்கிற ஒரு பாத்திரம் வரும். தீர்க்கதரசியும் ஒப்பற்ற கவிஞனுமான அவன் கற்களையும் மரங்களையும் கூட கசிய வைக்கும் பாடகனாய் அறியப் படுகிறான். அவன் பாடத் தொடங்குகையில் தனது வேர்களைப் பிடுங்கி எடுத்துக் கொண்டு அவனுடன் நடக்கத் தொடங்கும் மரம், மலைப் பாதைகளையும் நதிகளையும் அவன் பின்னால் நடந்து,
கடந்து,
அவன் பாடலை நிறுத்துகின்ற கடற்கரையில் மீண்டும் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளுமாம். மந்திர சக்தியைச்  சூழவும் கொணரும் அவன் குரலின் ஆளுமை நதிகளைத் தம் பாதைகளை மறக்கவும்; நெடு மரங்களை தமை மறந்து ஆடவும் செய்யுமாம்.  ஏன், பலதரப்பட்ட கிளைக் கதைகள் காரணங்களாகப் புனையப்படக் கொல்லப்படுகிற ஒஃபீயஸின் துண்டாடப்பட்ட தலையுமே கூட, நதியில் விழுந்து, லெஸ்போஸ் எனும் சிறுதீவை வந்தடையும் வரை,  நீரில் மிதந்தவாறு, பாடிக் கொண்டே இருந்ததாம்…   யோ.கர்ணனின் “தேவதைகளின் தீட்டுத் துணி” என்கிற சிறுகதைத் தொகுதி குறித்த இக் குறிப்பையும் ‘சம்பூர்’ வதனரூபனின் கவிதையிலிருந்தோ அல்லது துண்டாடப்பட்ட ஓஃபீயஷின் அந்தத் தலையிலிருந்தோ தொடங்கத் தோன்றுகின்றது.

இந்த நூல் வெளிவந்த சில மாதங்களுக்குப் பிறகிருந்து (நவம்பர் – டிசம்பர் 2010) வாசிக்கக் கிடைத்திருந்த போதும், வாசிப்பின் போதான எண்ணங்களை ஒரு விமர்சனமாகத் தொகுப்பதற்கு மனதை ஒருங்கிணைக்க முடிந்திருக்கவில்லை.  போரின் அந்தரமும்  அது உக்கிரமுற்றிருந்த போதிலும் பிறகும் ஏற்படுத்திய கையாலாகாத்தனமும் வெறுமையும் ஒருவித அயர்ச்சியுள் எழுதுதல் தொடர்பான அர்த்தமின்மையுள் தள்ளியிருந்தன; அக் காலத்தைப் பதிவுசெய்கிற இவற்றைத் தொகுக்க முனைகிற முயற்சிகளும் அத்தகைய யுத்தகால உணர்வுகளது தாக்கத்துக்குள்ளேயே (அந்தரத்துள்) விட்டுச் செல்கின்றன.  இக் குறிப்பையும் அந்த அந்தரிப்பை கடக்கும் இன்னொரு முயற்சியாகவே இங்கே மீண்டும்  தொடங்கவேண்டியிருக்கிறது.

ஒரு புதிய தலைமுறையின் வருகை:

நடந்து முடிந்த இப் போரினதும் அதன் அதிர்வுகள் ஆறாத காலங்களதும் வயதுகள் ஆகிற 1980-களில் பிறந்த எனது தலைமுறையில், யோ.கர்ணன் இவ் அனுபவங்களை அங்கிருந்து உள்வாங்கியவராய் இருக்கிறார். தமது அரசியலாற்பட்ட மனத்தடைகளை விட்டு இலக்கிய, அரசியல் பிரமுகர்கள் அவரது அனுபவங்களை உரையாடும் காலம் வருகிறதோ இல்லையோ, இவை நிராகரிக்கப்பட முடியாத கேள்விகள் போல சாட்சியமாய் உள்ளன. கலைமெருகு குறையாத, சாட்சியங்களாய்.. பரிகசிப்பும் துயரமும் மிகுந்த சாட்சியங்களாய். ஒவ்வொன்றும் ஒரு tragic comedy-இன் சிறு சிறு காட்சித் துண்டுகள் போல.

எனது தலைமுறையில் யோ.கர்ணன் என்கிற புதிய கதைசொல்லியின் (சாட்சியின்) வரவை இந் நூல் தெரிவித்துப் போகிறது. இது, இந்தத் தலைமுறையிற் பலர் கேட்கவிரும்பாத ஆனால் தமது வாழ்வே ஆகிப் போன அனுபவங்களை –  கண்டதைச்  சொல்லும் காலமாகட்டும். அதற்கு வலுவாக, இத்தகைய சாட்சிகள் மீது கல்லெறியாத – சேறு பூசாத – பாதுகாப்பு அரண்களைச் சமூக ஆர்வலர்கள் ஏற்படுத்துவார்கள் எனவும் நம்புவோம்.

முன்னுரையில் கருணாகரன் கூறியது போல:
என்னதானிருந்தாலும் சனங்களுக்கு எப்போதும் உண்மை மீதுதான் நாட்டமிருக்கிறது. அவர்கள் எப்படியோ உண்மைகளைக் கண்டுபிடித்து விடுகிறார்கள். தாங்கள் கண்டுபிடிக்கும் உண்மைகளை நாடிச் சென்றும் விடுகிறார்கள்.
ஸ்ராலினின் இரும்புச் சப்பாத்துக் கால்களுக்குள்ளிருந்து உண்மைகளைக் காப்பாற்றிய அன்னா அக்மத்தோவாவை சனங்கள் எப்படி அடையாளங் கண்டு கொண்டார்கள் என்பதும் சியோனிஸ்ருகளின் அபாய வலைகளுக்குள்ளால் மிகக் கடினப்பட்டு உண்மைகளோடு பயணித்த ஆடோனிஸயும் நிசார் கப்பானியையும் எப்படி மக்கள் அரவணைத்துக் கொண்டார்கள் என்பதையும் புரிந்து கொண்டால் இதையும் எளிதிற் புரிந்துகொள்ளலாம்.

இலட்சியம் நியாயம் கற்பு தமிழீழம் … இவை ஒத்த புனிதங்கள் என வருகிற போது இவை குறித்த தமது  கேள்விகள், ‘கண்ட’ மற்றும் ‘தெரிந்த’ உண்மைகளை மறுத்து வந்த சமூகம் அக் கற்பிதங்கள் உடைகையில் பேசியவையே புதிய தத்துவங்களைக் கொணர்ந்தன. இந் நூல் எம் இலட்சியங்களின் “அழுக்கு’ (“தீட்டு”) பக்கத்தை விமர்சிக்கின்றது. இந்த  விமர்சனங்களைச் சாட்சியங்களைக் கொண்டிருக்கிற கலைவெளிப்பாடுகளை உள்ளெடுத்துக் கொண்டாலேயே வேறு தரிசனங்களை அடைய முடியும். அத்தகைய தரிசனங்களுக்கான அத்திவாரங்களைப் போடும் கர்ணனை ஒத்தவர்களை messengers / whistle-blowers-ஐ மறுப்பதை, வசைபாடுவதை, அவர்கள் குறித்த ‘ஊக’  வதந்திகளைப் பரப்பி எதிர்கொள்வதை விடுத்து  – அவற்றைக் கேட்பதுக்குத் தயாராக வேண்டும். இப்போது பாசாங்கு செய்தாலும், தமிழ்ச் சமூகம் ஏதோவொரு வகையில் தனது வரலாற்றின் கோரப் பக்கங்களைக் கேட்டே ஆகவேண்டும்.

#எழுத்துப் பாணி: A Collage [கலப்போவியப் படிமங்கள்]

கர்ணனின் கதைகளில் ‘தஸ்யுக்களின் பாடல்கள்’ (பக் 75) இரு எதிர் இனக் குழுமங்களின் கதையை சொல்ல முனைகிறது. அதன்  சிக்கலுகள் (complexes)  (ஒருவர் நியாயவாதியாய் மற்றய குழுமம் முழு எதிரியாய்) சித்தரிப்பதில் உள்ள வரலாற்றுக் குறைபாடுகள் காரணமாக, பெரிய நாவலுக்கான சிறு தொடக்கமாக, முற்றுப் பெறாததாய் அமைந்து விடுகிறது (பெரிய கதையொன்றைக் கூற எத்தனித்து பெருமூச்சுடன் முடிந்து போவது போல பல கதைகள் பிறகும் விரிந்து செல்கின்றன). அதில் தஸ்யுக்கள் தமிழர்களாய், சகோதர இனத்தால் வஞ்சிக்கப்பட்டவராயும் புனையப்படுகிறதோ இல்லையோ. அதற்கான படிமங்கள், கலப்போவியங்களாய்.. விழுகின்றன.

1980களில் பிறந்த ஒரு தலைமுறை அக் காலத்தின் கலை இலக்கிய, அரசியல், சரி-பிழை, பலி எல்லாவற்றினதும் எதிரொலியான ஒரு Collage ஆகவே இருக்க முடியும்.
‘இரண்டு குண்டுகள்.
ஒன்று ஆகாயத்திற்கு
அடுத்தது பூமிக்கு’  என்பதாய் 1980களின் கவிதை முடிகிறதா, கர்ணனின் கதையும் முடிகிறது ‘உதவியாளன் அடிச்சது இரண்டே இரண்டு ரவுண்ஸ் தான். சனம் எல்லாம் குழறிக் கொண்டு திரும்பி ஓடிச்சுதுகள்.
ஒன்று வானத்துக்கு. மற்றது இவன்ர தலைக்கு’ (பக். 59; கதை: “சுதந்திரம்”)

#கறுப்பு – அங்கதம்

கர்ணனின் கதைகளில் வைக்கப்பட்ட விமர்சனங்களில் ஒன்று:
அவை இதுவரைகாலமும் புனிதங்களாக இருந்தவற்றை (விடுதலை இயக்கம், தமிழீழ இலட்சியம், மனித அழிவு தரும் பெருந் துயரம்) கேலிக்கூத்தாக்கியிருக்கிறது என்பது. இந்த விமர்சனங்களுக்குப் பின்னே ஒரு கொடிய மனித அழிவினது சாட்சியாக உள்ள எழுத்து குறித்த ‘அது இப்படித்தான் இருக்கவேண்டும்’ என்பதான பிம்பமும்  – அவ் வாழ்வை வாழ்ந்திராதவர்களது – புனித மனநிலையும் இருக்கிறது; அதுவே முன்வைக்கப்படுகிறது.

இவற்றுக்கு மாறான பார்வையே அவரது எழுத்துக் குறித்து எனக்குள்ளது. கனடிய புனைவுலகில் முதலாம் உலக யுத்தத்தை மையப்படுத்திய Timothy Findley போன்ற கதைஞர்களது படைப்புகளில்  உள்ள துயரத்தில், அங்கதம்  பேசப்படுவதுண்டு. ஒருவகையான இந்த எள்ளலுணர்வு அல்லது விகடம் (Wit) உண்மையில் ஒருவரது பாதுகாப்புக் வழிமுறையாகவே (defense mechanism) செயற்படுகிறது. ஏனெனில் துன்பியல் நாடகங்கள் துயரத்தில் தோய்ந்து எழுதப்படுகிற துயரக் கதைகள் எம்மை மீட்டெடுக்கத் தோதான சிகிச்சை (Therapy) வழிகள் இல்லை. கொடிய அனுபவங்களை எழுதுபவர்கள் அறியாமலே எள்ளல் ஒரு பாதுகாப்புக் கவசமென அவர்களது படைப்புகளில் வந்துவிடுவதையே அவதானிக்கலாம்; பல தலித் கதைகளாகட்டும் கறுப்பின இலக்கியமாகட்டும் அவற்றின் எளிய தன்மை விளிம்புகளது கதைகளுக்கு உரியதே. வறுமைக்குள்ளாறவும் அடக்குமுறைக்குள்ளாறவும் வன்முறைக்குள்ளாறவும் கசியும் எள்ளலுங் கூட அவற்றின் இயல்புகளில் ஒன்றே – கனம்மிகுந்த வாழ்வை இலகுவாய் எதிர்கொள்ள நகைச்சுவையே மனிதர்களுக்கு உதவுகிறது.

இத்தகைய எள்ளலுணர்வுடைய கதைகளாக, சம காலத்திலிருந்து (எனது வாசிப்புக்குட்பட்ட அளவில்) 2008 – 2009 யுத்தம் உக்கிரமடைந்த போது, வலைப்பதிவில் எழுதப்பட்ட சயந்தனின் சில சிறுகதைகள்… சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம்  குறித்த நிரூபாவின் கதைகளைக் கூறலாம்.

போரிலிருந்து, போர்ச் சூழலிலிருந்து விலகி, வெவ்வேறு தேசங்களில், தமிழ்த் தேசீய நேரடி வர்ணனையில் எம் மூளைத் திசுக்களுட் பதியப்பட்ட யுத்தம் பற்றிய பிம்பங்களுள், போர் குறித்த கதைகளில் நகைச்சுவை உணர்வுக்கு ஓர் இடமுமில்லை. அதனாலேயே இத் தொகுப்புக் குறித்த விவாதங்களும் தமிழ் இணையத்தில் அதற்கு எதிரானதாக அமைந்திருந்தன:
1 – போராளிகள் இப்படி யோசிப்பினமோ
2 – அவர்களுக்கும் சக பெண்களில் ஈர்ப்பு வருமோ
3 – முகாமில் இப்படி உணவுக்காக சனம் அடிபாடு செய்திருப்பினமோ
4 – யுத்தம் நடக்கேக்க சனம் நகைச்சுவையாய்க் கதைச்சுக் சிரிச்சிருக்குமோ

இத்தகைய கேள்விகள் இதை இணையத்தில் வாசித்தவர்களால் முன் வைக்கப்பட்டிருந்தன.

சமீபத்தில் வாகன விபத்துக்குள்ளாகிய ஓர் 15 வயது சிறுவன் தான் உயர் வகுப்பில் படித்த போது (அன்றைய தனது யதார்த்தத்துக்கு ஒத்துவராததால்) பிடிக்காத ஒரு நாவலை – அப்போது சாத்தியமற்றுத் தோன்றிய அதன் பிறழ் மனநிலையை – இப்போது தினமும் அனுபவிப்பதாகச் சொன்னான். உடலின் பாகங்கள் இயங்கும் வரை, அதற்கான முயற்சியுள், சிகிச்சை அறையுள், சூழும் மனிதரை மிருக நிலைக்கு கொண்டு செல்லும் அந்தப் பிறழ்வுத் தனிமை, அவனால் (அவளால்) அப்படியான ஒன்றை அனுபவிக்க முன்னர் நினைத்துப் பார்க்கவியலாததாயிருந்த  ஒரு சிந்தனை அல்லது வன்முறை நிலையை அடைந்துவிடுகிறது. Cast Away என்கிற வழமையான ஹோலிவூட்த் திரைப்படத்தில் விமான விபத்தில் ஒரு தீவுள் தனியனாக வந்தடைந்து விடுகிற அவன் யாருமற்ற தனிமையில் கொஞ்சம் கொஞ்சமாக விலங்காக மாறுகிறான்; வேட்டையாடி உண்கிறான். நாகரீகவானாக இருந்த அவனது உடல்மொழி வளைந்து ஒரு வேடனுடையதைப் போல இரை தேடிப் பதுங்கத் தன்னை தகவமைத்துக் கொள்கிறது (முள்ளிவாய்க்காலில் நாங்கள் நாகரீகமடைந்த மனிதர்களைப் போலவே இருக்கவில்லை – இவ்வாறு போர் ஓய்ந்த பிறகு ஒருவர் எழுதியிருந்ததை இங்கே குறிப்பிடத் தோன்றுகிறது).

மிருகநிலைக்குத் தள்ளப்படும் வன்முறை மனத்துக்குரிய  இடங்களாகவே முகாம்களும் போர்க் களங்களும் இருக்கின்றன. இவைக்கு வெளியில் இருப்பவர்கள் இதைப் புரிந்து கொள்ளாததுடன், தாம் எப்போதுமே அனுபவித்திராத அந்த அனுபவத்துக்கு வாய்ப்பே இல்லை என்கிறவர்களாயும் இருக்கிறார்கள். உண்மையை மறுதலித்தல் அல்லது தமதல்லாத எந்த அனுபவத்தையும் (அதன் உண்மையையும்) மறுத்தல் என்பது பாரதூரமானது. அறியாமை அல்ல, அறிந்ததை – தமக்கு உடன்பாடற்றனவையை – கண்டும் காணாத புறக்கணிப்பு; கபடம் நிறைந்த தேர்ந்தெடுப்பு அரசியல் (Selective Politics).

அது போல ஒன்றே, மரண நெடிக்குள் இருப்பதால் இயற்கையான ஆண்-பெண் ஈர்ப்புகளோ அதை வென்ற சூழல் ஏற்படுத்தும் மனநெருக்கடிகள் மற்றும் பிறழ்நிலைகளோ இருக்காது என நம்புவதும். மரணத்துள் வாழ்பவர்கள் இயற்கையான காதல் காம உணர்வுகள் அற்ற கடவுளர்களா? போராடியவர்கள், மனித அழிவை அனுபவித்தவர்கள் என்பதற்காக பசி அற்றுப் போய் விடுவார்களா; தமது உணவுக்காய் சண்டை பிடிக்கார்களா?

சென்ற காலங்களிலும், போரினுள் மனிதப் படுகொலைகளினுள் வாழாதவர்கள் கட்டி எழுப்பி வைத்திருக்கிற போர் குறித்த போராட்டம் குறித்த பிம்பங்களை உலக இலக்கியங்கள் போட்டு உடைத்திருக்கின்றன. யூதப்படுகொலைகள் பற்றிய அதனுள் வாழ்ந்த தனது அனுபவத்தை எழுதுகிற – 1986-இல் நோபல் பரிசு பெற்ற எலீ வீஸல் (Elie Wiesel), யூதக் குடியிருப்பிலிருந்து தொடங்கி, வழியில் தன் குடும்பத்தினரை ஒவ்வொருவராய் இழந்த யூத வதைமுகாம்கள் குறித்த அனுபவத்தைப் பதிவு செய்த ‘‘இரவு’  (யூத வதைமுகாம் அனுபவங்கள்) நூலினை இவ்வாறு முடிக்கிறார்:

சுதந்திரமடைந்த மனிதர்களான எங்களது முதல் நடவடிக்கை, உணவுப் பொருட்களை நோக்கிப் பாய்ந்தது தான். நாங்கள் அதைப் பற்றியே எண்ணினோம்; பழிவாங்குவதையோ எங்கள் குடும்பங்களைப் பற்றியோ இல்லை; ரொட்டியைத் தவிர வேறெதைப் பற்றியும் இல்லை.
நாங்கள் பசியின்றி இருக்கும்போதுகூட எவரும் பழிவாங்குவதைப் பற்றி யோசிக்கவில்லை.  மறுநாள் சில இளைஞர்கள் வெய்மாருக்கு உருளைக் கிழங்கு மற்றும் உடைகள் வாங்க பெண்களுடன் படுக்கச் சென்றனர். ஆனால் பழிவாங்குவது குறித்த அறிகுறியே இல்லை.  புச்சன்வால்ட் விடுதலையடைந்த மூன்றாம் நாள் உணவு விசமானதால் நான் நோய்வாய்ப்பட்டேன். மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு இரண்டு வாரங்கள் வாழ்விற்கும் சாவிற்குமிடையே போராடியபடி கழித்தேன்.
ஒருநாள் எனது பலமனைத்தையும் ஒன்றுதிரட்டிய பிறகு என்னால் எழுந்திருக்க முடிந்தது. நான் எதிர்ச் சுவரில் தொங்கிக் கொண்டிருந்த கண்ணாடியில் என்னைப் பார்க்க விரும்பினேன். யூதக் குடியிருப்பில் இருந்ததற்குப் பின் நான் கண்ணாடியில் என்னைப் பார்த்ததே இல்லை.  
அந்தக் கண்ணாடியின் அடியாழத்திலிருந்து ஒரு பிணம் என்னைக் கூர்ந்து பார்த்தது. அந்த விழிகள் என்னை உற்றுநோக்கியபோது பார்த்த பார்வை என்னைவிட்டு அகலவில்லை.

000

கொடும் படுகொலைகளது சாட்சியான ஒருவர், வதைமுகாமில் தன் குடும்பத்தினைரையே இழந்த ஒருவர், இவ்வாறாக தனது விடுதலையின் பிறகு யோசிப்பார் என்பதை ‘கற்பனை’ செய்ய கடினமாகவே இருக்கும். ஆனால் எம் கற்பனைக்கு அப்பாலுள்ளவையை நாம் நிராகரிக்க முடியாது.

கர்ணனின் ‘பாதுகாப்பு வலயம்’ போன்ற கதைகளில் விபரிக்கப்பட்டிருக்கிற காட்சிகள் அவல நகைச்சுவையாகவே படுகிறது. செல் அடிக்க அடிக்க தன் காயப்பட்ட பிள்ளையைத் தூக்கிக் கொண்டு செல் அடிக்கிற அதே வழிகளில் விழுந்து கிடக்கிற பிணங்களில் விழுந்து எழும்பி ஓடுகிறவர் குறித்த சித்தரிப்பு அவலச் சுவையுடனே வாசிப்பவரிடம் வருகிறது.

#வாசிப்பனுவம்:

1
யுத்த நிறுத்த (?) காலத்தில் போர்ப்புலமிருந்து வெளிவந்த தானா.விஷ்ணுவின் கவிதைகளில், வாழ்தல் என்பதுக்கான பதிற் சொல்லாக அவரது கவிதைத் தொகுதி முழுவதும் ‘வசித்தல்’ என்றொரு சொல் பாவித்திருப்பார். அதை அவர் வேண்டுமென்று பாவித்தாரோ இயல்பாயோ வந்ததோ, அது பல அதிர்வுகளைத் தன்னளவில் கொண்டதாக இருந்தது. போருள் வாழ்தலில் அதன் ஜீவன் எங்கு சாத்தியம்? எனிலும்: போருக்குள்ளும் சனங்கள் வாழ்ந்தார்கள்; மரணத்துள் வாழ்வோம் என்ற குரலெழுப்பிய கவிஞர்கள் பலரும் சமூக புற, அகக் காரணங்களுடன் போரின் உக்கிரம் காணாது புலம்பெயர்ந்த பிறகும் அங்கே சனங்கள் வாழ்ந்தார்கள் (வெளியேற வாய்ப்பற்ற சனங்கள், வெளியேற மறுத்த சனங்கள், வெளியேற விரும்பாத போதும் ‘வெளியேற்றப்பட்டவர்கள்’ தவிர்த்து, எஞ்சிய சனங்கள், போராடிய சனங்கள், போராட்டத்துக்காய்த் தம் பிள்ளைகளைக் கொடுத்த சனங்கள்) . தமது இலட்சியங்களின் மீதான நம்பிக்கைகளைக் கைவிடாமல், அல்லது வேறு தேர்வுகள் இல்லாமல் ஏலுமானவரை விமர்சனங்களைத் தம் குரலில் உயர்த்த முனைந்தபடி. ‘வாழ’ முனைந்தபடி… அந்த வாழுதலின் இன்பத்தைச் சந்தர்ப்பங்களிற் பாடியபடி.

அதற்குச் சாட்சியாக கருணாகரனின் பல கவிதைகள் இயற்கையை, இன்பத்தை, காதலைநப் பாடியிருக்கின்றன (அவை போருக்கு வெளியிலிருந்து பாடிய காதலை விடவும் அற்புத படிமங்களும் நெகிழ்ச்சியும் நிறைந்தவையாய் இருந்திருக்கின்றன). ஏன்? போருக்குள்ளும்,  எப்போ முடியும் இக் கணமென அறியாத உயிர் தானே அறியும் மேலான இவ் வாழ்வின் அன்பின் ஒப்பீடின்மையை, ‘தரப்பட்ட அவகாசத்தின்’ கருணையை?

கருணாகரனின் கவிதைகள் கொண்டிருக்கிற (போரிலும் கைவிடப்பட முடியாது அலையும் மனித மனத்தின் கற்பனையாற்றலும் இயற்கை மீதான காதலும், வன்முறைக்கும் போரின் நியாயத்துக்குமிடையிலான நித்திய வேள்வியும்) அதே கூறுகள் கொண்ட படைப்பாற்றலை யோ.கர்ணன் தனது உரைநடையில் கொண்டிருக்கிறார் (அதே பாணியல்ல, மாறாக அந்த மனக் கூறு).

2
ஒப்பிடுகையில் யுத்த நிலத்துக்குத் தொலைவிலிருக்கும் எனது கற்பனைகள் சிறு வயதின் வன்னியின் வயல்வெளிகளைப் போல பரந்திருந்த அந்த எனது கற்பனைகள், சீனக் கதைப் புத்தகங்களிற் தொலைந்திருந்த அச் சிறு பிராயத்தோடு தொலைந்து போய் விட்டன; பிறகெப்போதும் தொடரவில்லை. அப்படியிருக்க, பேரழிவுகளது ஊற்றான போருக்குள்ளும், கர்ணனின் கற்பனைகள் ஆசையூட்டுகின்றன. தீராத புதிர்களை உருவாக்கும் எமது சிறுவத்தினை நினைவூட்டுகின்றன. இராசகுமாரன்கள் குமாரத்திகளின் கூந்தலால் உப்பரிகைக்கு ஏறி வரும் வேனிற் கால சீனாவும் பூத்துக் குலுங்கும் பூக்களும் மனதை வந்து நிரப்புகின்றன. அவரது எழுத்தின் இந்த சாத்தியம் அதனது பலம். அவை  மீண்டும் மீண்டும் மனித உயிரின் வாழும் வேட்கையைப் பதிவு செய்கின்றன. எனவே தான், பெரும் அழிவியந்திரனான யுத்தத்துக்குள்ளும் முகிழ்ந்து எழும் மனித மனத்தின் படைப்பியக்கம் ஒப்பீடுகளுக்கு அப்பாற்பட்ட மகா சக்தியாக, அது நெகிழ்ச்சியையும் வியப்பையும் கைவிட்டுவிடமுடியாத ஆன்மாவின் நம்பிக்கையையும் கொண்டிருக்கிறது.

#சமகாலம் பேசப்படுதல்: போரின் தலைமுறை

எமது காலத்தின் நிகழ்வுகளை அவைக்கான வினைகளை எமது தலைமுறையில் படைப்பாக்க வினையாக படிக்கிற அனுபவம் கிளர்ச்சியூட்டுகிறது.

சென்ற காலங்களின் வரலாற்று முக்கியத்துவங்களே அழுத்தப்படுகிற சூழலில் சமகால அரசியல் நடப்பை  யோ.கர்ணனின் பிரதிகள் பதிவுசெய்கின்றன. ஒரே விதமான அனுபவங்களை — ஒரே அரசியற் சம்பவங்களை — ஒரே நிலத்திற் பிறந்த இந்த ஒரு தலைமுறை எவ்வாறு உள்வாங்கிக் கொள்கிறது, எவ்வாறு தன் படைப்பாக்கத்தில் பயன்படுத்துகிறது, அது எவ்வாறு எதிரொலிக்கின்றது என்பன தொடர்பில் ஒரு ஒப்பீட்டை செய்வதற்கான பிரதிகள் கொண்ட ‘எமது’ காலமாக இது இருக்கிறது. மூன்றாவது ஈழப் போரின் (1995 – 1999) ஆரம்பத்தில் புலம்பெயர்ந்த என்னை  கர்ணனின் கதையான “மன்னிக்கப்படாதவனின் கைத்தொலைபேசி”  2006 இல்  (யுத்த நிறுத்த காலம் என சொல்லப்பட்ட காலப்பகுதியில் நடந்த) ஈரோஸ் பாலாவின் கொலையிடம் திருப்பி எடுத்துச் சென்றது. அக் காலப் பகுதியில் ‘களையெடுப்பு’ப்போல அவ்வாறு பல கொலைகள் நடைபெற்றன.  போர் நிற்பதற்கு முந்தைய காலம் ‘இவை பற்றிப் பேசப் கூடாது’ என்றொரு குரல் இருந்தது; சொல்லப்பட்ட யுத்த நிறுத்த காலம் பலரும் கொல்லப்பட்ட காலமாகவே இருந்தது.

000
1990களின் இறுதியில் கொழும்பிற்கும், 1990களின் மத்தியில் ‘கனடா’ என்படுகிற பூர்விகரின் நிலத்துக்கும் புலம்பெயர்ந்து சென்றவளாக 15 வருடங்களுக்கு மேலாய் அந்த நிலத்தை விட்டு வாழ்ந்த போதும், யுத்த காலத்தில்த் தாக்கப்பட்ட – நான் கண்டறிந்திராத / கண்டுணர்ந்திராத எனது தகப்பனின் குருதியைக் கொண்டலைகிறேன்.  காலத்தைக் கதைகளூடாக இணைத்துப் பார்க்கும் எனக்கு, அகிலனின் அப்பா 1980களின் இறுதியில்  மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட முடியாது இந்திய இராணுவம் தடுக்கச் செத்துப் போவதும், அதே காலப்பகுதியில் அத் தெருக்களில் எங்கோ விழுந்த கிடந்த (வைத்தியாதீனமாய் உயிர் தப்பிய) எனது தகப்பனும் இணைந்து செல்வது போல இருக்கும். அந்த இணைவு, எம்மை இணைக்கின்ற ஒன்றாக; ஒரே காலத்தில் ஒரே நிலப்பரப்பில் வெவ்வேறு குடும்பங்களில நிகழ்ந்த  – வாழ்வைப் என்றென்றைக்கும் பாதிக்கப் போகிற – ஒத்த சம்பவங்களும்…  எம்மில் அவற்றின் தாக்கங்களுமென… யோ.கர்ணன் உள்ளிட்ட இந்தத் தலைமுறையுடன் அவர்களின் கதைகளுடன் நெகிழ்ச்சியூட்டும்விதமான ஒத்துணர்தல், நாம் பகிர்ந்துகொண்டிருக்கிற ஒரே வரலாற்றுடன் தொடர்புடையது. ஆனால் அந்த ஒரே வரலாறுதான் எத்தனை பாரபட்சமானது? ஒரே காலப்பகுதியில் நாங்கள் பிறந்து வளர்ந்த எமது சிறுவத்தில் போர் எங்களை எப்படியான எதிர்காலத்துள்த் தள்ளியது? போரினால் வெளிநாட்டில் வசிக்கின்ற நானும், 2006 வரை  அதனுள் உழன்ற அகிலனும், எனது தகப்பனை ஒத்தோர் இணைந்து நடத்திய போராட்டத்தில் அந்த விடுதலை இலட்சிய ஆகுருதியில் உயிரை இழந்தவர்களும், காலினை இழந்த யோ.கர்ணனும் எத்தனை சமமான வாய்ப்புகளைப் பகிரவில்லை? ஒரு நிலப்பரப்பின் ஒத்த தலைமுறைகளிடமே பகிரப்படும் வெவ்வேறு வாழ்வனுபவத்தை – அதன் வேறுபாடுகளை – கருத்திற் கொள்ளாது எப்படிப் பேச முடியும்? கருத்திற் கொள்ளாத போதே – யுத்தம் தொடர்பான எம் எல்லோரது அனுபவங்களையும்- ஒரே தளத்தில் வைத்துப் பேசுதலெனும் வன்முறை நிகழ்கிறது (அது மறுபடி மறுபடி நிகழ்ந்த படியே இருக்கிறது).

எனினும், எங்களை இணைக்கும் கோடாய் இந்தப் போர் ஆகியிருக்கிறது.
இல்லாவிடடால் 2006-இல் தெருவில் ஒரு பரிதாபத்துக்குரிய நாயைப் போல சுடப்பட்டுக் கிடந்த (நான் கண்டறியாத), அப்பாவின் தொழர் ஒருவரது கொலை என் உயிரை எப்படி குளிரச் செய்திருக்கும், ஒரு செத்த பிணத்தினுடையதைப் போல?  மூன்று பெண் குழந்தைகளின் தகப்பனான அவரது இறுதிக் கோலத்தை, மூன்று பெண் பிள்ளைகளது தகப்பனான எனது தகப்பனுடன் ஒப்பிடாதிருக்க முடியாது, பரிதாபத்துக்குரியவராய், பாதுகாப்பற்ற அந்தரத்துள் அவர் கிடந்த காட்சி இன்னமும் ஏன் என்னைப் பதட்டத்துள்த் தள்ளுகிறது. அப் பதட்டத்தை அந்தவொரு கதையில் கர்ணன்  மீண்டும் மீண்டும் ஏற்படுத்துகிறார். சதா மரண பயத்துடன் இந்த அச்சங்களை அந்தந்த அச்சங்கள் கொண்டவர் அன்றி வேறு யாரறிவார்?

சில வேளைகளிற் சகோதரர்களுக்கு எதிராய் செயற்பட  வைத்த / வைக்கும் அச்சம்; சிலவேளைகளில் எதிரிகளாய் ஆ(க்)கும் அச்சம்; எதிரிகளாய் உணர்பவர்களை எல்லாம்  களையெடுக்க (காவெடுக்க) உந்திய அந்த அச்சம். ஒருவரை ஒருவர் சந்தேகிக்கும் உளவியல் தாக்கம், அச்சம் என்பன பற்றி போர்ப்புலத்துள் (ஆயுத அரசியலுள்) பிறந்தவரே உணருவர். அதன் அச்சுறுத்தலுள் வாழ்ந்தவரே அறிவர். சிரிப்பூட்டுபவையாக (பலரது அறிவுக்கு) இருப்பினும், ஒருவருக்கொருவர் எதிரிகளாய் ‘கவனத்துடன்’ ‘துவக்குடன்’ திரிந்த காலங்களே சொல்லும் நண்பனும் சந்தேகிக்கக் கூடியவன் ஆவது எவ்வாறு என்பதையும் ஆயுதங்களுக்கு எவ்வளவு தூரம் மனிதர்களை ஆளும் பலம் உண்டு என்பதையும்.

சமாதான காலப் பகுதிகளில்,  புலம்பெயர் எழுத்தாளர்களது, ‘தாம் கொல்லப்பட்டு விடுவோம்’ என்கிற வகையான பயங்கள் பற்றிய புரிதலாய் ‘அந்த எழுத்தாளரின்’ புத்தகங்கள் இலங்கையில அவர்களது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்தன, பிறகென்ன..’ ‘பின்னர் எதற்கு இந்த stunt’ என்ற போல விமர்சனங்கள் இன்னொரு புறம் வைக்கப்பட்டிருக்கின்றன.  (அக் காலப் பகுதியில் கொல்லப்பட்டவர்கள் பலரும் அடையாளமற்ற, பிரபலமற்ற, தம் வாழ்வுக்கு திரும்பிவிட்டிருந்த குடும்பஸ்தர்களான, வெவ்வேறு இயக்கங்களைச் சேர்ந்த முன்னாள்  போராளிகளே). எனினும், இன்று யோசிக்கையில், ஈழப் போராட்டம் ஏற்படுத்திய பலவித மனப்பிறழ்வுகளின் பல்வேறு அச்சங்களை — ரொறன்ரோவில் யுத்த எதிர்ப்பு நாடகமொன்று போடப்பட்டபோது, சகோதரப் படுகொலைகள் மற்றும் போர்ச் சூழலின் இதர வன்முறைகள் அரங்கில் தத்ரூபமாய் நடித்துக் காட்டப்பட்டபோது, முன் வரிசையில் இருந்து நடுங்கி நடுங்கிப் பார்த்துக் கொண்டிருந்த ‘வளர்ந்த’ இளைஞனின் ‘இருப்பினை’  (அதை ஆள்கிற உளவியலுக்கான அரசியலை)  புரிந்துகொள்ளுதலுக்கும் அவற்றின் பின்னணியை அறியும் தேவையை உணர முடிகின்றது.

கர்ணனும் அந்தச் சம்பவம் ஒத்த சம்பவங்களுள் நேரடி அனுபவங் கொண்டவராய் இருக்கலாம். அல்லது கேட்டறிந்த கதையாக இருக்கலாம். ஆனால் அவை ‘எமது’ கதைகள். எம் உடல்களைக் குளிரில் சில்லிடச் செய்யும்.

#எமது- கதைசொல்லிகள்

1
(குறிப்பாக) சிறுகதை, நாவல்களைப் பொறுத்தவரையில் – இந்தியாவுடன் ஒப்பீட்டளவில் – குறைந்த பங்களிப்புகள் / “கவனங்கள்” உள்ள ஈழத்திலிருந்து, புலம்பெயர் சூழலிலிலிருந்து (இலக்கிய சூழலுள்) பார்த்திபன், யீவமுரளி, குமார் மூர்த்தி, குருசேவ், நிரூபா, சோபாசக்தி போன்றவர்களது படைப்புக்கள் எழுத்தின் ஆரம்பங்களில் ( தனிப்பட்ட எனது வாசிப்பினடிப்படையில்) கவனங்களைப் பெற்றவை. இவர்களில் – ஏனையவர்கள் சிறுகதை என்கிற வடிவத்துடன் அறியப்பட – சோபாசக்தி ஒன்றுக்கு மேற்பட்ட (சிறுகதை, நாவல், கட்டுரை) தொகுதிகளுடன் இன்று நன்கு அறியப்பட்டவராய் இருக்கிறார் (வெகுசன இந்திய வாசகர்களால் அறியப் படுதல் என்று வருகிற போது அதற்குள் அ.முத்துலிங்கமும் வருவார் என்றாலும், அவரது கதைகளது களன்கள் வேறு). ஓர் சிறுகதை-வடிவத்தில் எழுதப்பட்ட-நாவல் எனக் கூடிய நிரூபாவின் ‘சுணைக்குது’ மிக முக்கியமான தொகுதி; இலங்கையிலிருந்து வெளிவந்தது; தமிழ்நாட்டில் (வழமைபோல) அனேகமானவர்கள் வாசித்திருக்க வாய்ப்பில்லை என்பதோடு கவனமும் பெறவில்லை.  எமது பெருந்தேசிய அலையுள் வரக்கூடிய அரசியல் நீக்கப்பட்ட பெண்-பிரதி இவ்வாறான புறக்கணிப்புக்குள்ளாவதும் இயல்புதான்.

புலத்திலிருந்தும் புலத்தை விட்டு வெளியேறியும், தனது தலைமுறை அனுபவித்த போருக்குப் பிந்தைய நினைவுகளை (அழிவின் அரசியலை) சமகாலத்தில் வெளிப்படுத்திய பிரதியான த.அகிலனின் ‘மரணத்தின் வாசனை’யைத் தந்த வடலி பதிப்பகத்தால் இந்தியாவிலிருந்து வெளியிடப்பட்டுள்ள இன்னொரு பிரதி புலத்திலிருக்கிற யோ.கர்ணனின் “தேவதைகளின் தீட்டுத் துணி.” இந் நூல் இந்தியாவிலிருந்து வெளியிடப்பட்டுள்ள போதும், ஆனந்தவிகடன் போன்ற ஒரு ஜனரஞ்சக இதழால் தரப்பட்ட கவனம் (அங்கீகாரம்?) கூட இழப்பின் அரசியலைப் பேசும் – இன்று தமிழ்நாட்டு அரசியலுள் ஈழ அரசியலின் இன்னொரு பக்கத்தைப் பேசும் – இந் நூலுக்குத் தரப்படவில்லை எனவே கூறலாம்.

மரணத்தின் வாசனை ஈழத்திலிருந்தும் எழுதப்பட்டதாலோ என்னவோ நேரடையாய் அல்லாத (நேரடியாய் விமர்சிக்க முடியாத)  “சுய – தணிக்கை” அதிலிருந்தது. அதன் சொற்களுக்கு பலத்த கண்காணிப்புகளுக்குள் தன்னை வெளிப்படுத்த வேண்டிய தேவையிருந்தது. அந்தக் காலப் பகுதிகளில் ‘சிந்தனைக் குற்றம்’ என்கிற 1984 நாவலில் வருகிற வாசகம் தன்னை பின்தொடர்ந்துகொண்டிருந்தது என அகிலன் கூறியதும் ஞாபகம். ஆம், சுயமான சிந்தனைகளுக்கு, நேர்மையான விமர்சனங்களுக்கு என்றென்றைக்குமே முகங் கொடுக்க விரும்பாத (இன்று அழிவைத் தந்த) சட்டகத்தினுள், ஒரு கர்வத்தினுள்,  தீக்கோழியைப் போல முகம் புதைத்து தமிழ்-தேசிய அரசியல் அதிகாரபீடங்கள் நின்றிருந்தன (நிற்கின்றன). இலக்கியப் பதிவாய், அதன் ஒரு பாகத்தை (பெரும்பாலும் கடும் விமர்சன அரசியல் நீக்கப்பட்ட) அகிலனின் பிரதி கொண்டு வந்ததெனில், மற்றொரு பாகத்தை யோ.கர்ணன் தனது முதலாவது சிறுகதைத் தொகுதியில் கொண்டு வந்திருக்கிறார்.
போர் முடிந்த பிறகு வெளிவருகின்ற தொகுதி என்கின்றபடியால் அது தணிக்கையற்றதாக இருக்கின்றது. ஆனால் போர் முடிந்த பிறகும், ஆச்சரியமூட்டாதவகையில், தமிழ் பெரும்பான்மை தமிழ்த்தெசீய மனநிலை அவரது பிரதியின் விமர்சனங்களைத் தணிக்கை செய்யவும், அது பேசப்படாதிருக்க வேண்டுமெனவுமே விரும்புகின்றது. அதனால், அதை வாசித்தாலும், அதையிட்டு மெளனமாய் இருக்கிறது. அல்லது அதன் நியாயத்தன்மையைக் குற்றப்படுத்த விரும்புகிறது.

2
“தேவதைகளின் தீட்டுத் துணி என்பது எவ்வாறான அர்த்தத்தை தருகிறது” என ஆரம்பகாலப் போராளி ஒருவரிடம் கேட்டேன். அவர் “இது ஒரு உன்னத இலட்சியத்தில் (அல்லது அந்த உன்னத இலட்சியத்தின் போது) நிகழ்ந்த அழுக்கு பற்றியது” என்றார்.  அந்த அழுக்குகளைப் பற்றி அப் போரினை ஆரம்பித்து வைத்த அவரது தலைமுறையின் பிள்ளைகள் (அப் போரினுள் வாழ்ந்த அதனுட் தம் வாழ்வை வாழ்வின் அழகிய கூறுகளை இழந்த பிள்ளைகள்) எழுதுவதை மிகவும் துயரம் படர வாசித்துக் கொண்டிருந்தார் அவர்.

நூலாக்கப்பட்ட புனை-தொகுப்புகளில் ஈழப் போராட்ட கருப்பொருளைக் கொண்ட பிரதிகளாக பல குறிப்பிடப் படலாம். இதில் சோபாசக்தியினதை ஒத்த நூல்கள் புலம்பெயர் (முன்னாள்) போராட்டக் காரர்களதாகவும் (1980கள் 1980களின் இறுதிகள் 1990கள்) இருக்க; 2006 வரையான போருக்குட்பட்ட ஈழத்தை அகிலனும், பிறகு யோ.கர்ணனதே அந்த நிலத்தில் போரினுள் (இறுதிவரை) வாழ்ந்தவரது சாட்சியம் என்னும் வகையில் இன்னும் பிரத்தியேகமாகக் கவனத்துக்குரியதாகிறது.

இத்தகு தொகுப்புகளுக்குத் தரப்படாத கவனங்கள் இலக்கிய உலகில் (அது எந்தப் பக்கமாயினும்) எப்போதும் சுவாரசியமாய்ப் பேசப்படும் கிசுகிசு சலசலப்புகளுக்கு உண்டே. போராட்டத்தில் (மக்களில்?!) அக்கறை கொண்டவர்கள் இறுதிவரை அங்கிருந்தவர்களது குரலை (தமக்கு உடன்பாடற்ற போதும்) உன்னிப்பாய் கவனிப்பவராயே இருப்பர், இருக்க முடியும். வரலாற்றைச் சுய -விமர்சனம் செய்யாமல் ஒரு இனம் எங்கே போக முடியும்? விமர்சனங்கள் தொடர்பில் காதுகளைப் போத்திக் கொள்வதால் என்ன மாற்றம் விளைந்தது? 30 வருடப் போரினில் வெறும் புலி எதிர்ப்பு எதிர் புலி சார்பு இரண்டு பக்கங்களுக்கும் மற்றவரை குற்றம்சாட்டுவது தவிர வேறென்ன (ஆரோக்கியமான?) தாக்கத்தைத் தமது சமூகத்திடம் தர முடிந்தது? இறுதிப் போரினில் மக்கள் (தரப்புகள் எதுவென தெரியாத மயக்கத்துள்) செத்துக் கொண்டிருந்த போது (புலி எதிர்ப்பு மனநிலையில்) ‘புலிகள் அழிய வேண்டும். மக்கள் வெல்ல வேண்டும்’ என எழுத என்ன சூத்திரம் நம்பிக்கை தந்திருக்க வேண்டும்? ‘புலிகளை அழிக்கின்ற எந்த அதிகாரத்துக்குமும் கூட மக்களைப் பற்றிய கவலையில்லை’ என்கிற எளிய உண்மையை அச் சூத்திரங்கள் தராமற் போனது ஏன்? ‘உந்தக் கொடிகள தூக்கிப் போட்டுட்டு மக்களைப் பற்றி கதையுங்கடா’ எனும் புலி’சார்பு’ (நேர்மையான) குரல்களைக் கூட மதியாது கொடிகளோடு புலம்பெயர் தெருக்களில் நின்ற தமிழ்த் தேசீயம் போலவே, புலி வெறுப்பு என்பது தவிர ஏதேனும் மற்றத் தரப்பில் இருந்திருந்தால் புலி உடையினில் (புலிகளினால்) பிடித்துச் செல்லப்பட்ட பிள்ளைகளும் நின்றிருப்பது தெரிந்திருக்க வேண்டுமே…. புலி உடையும் புலி வெறுப்பும் மட்டுமே கண்களில் தெரிந்தால் உங்களிடமிருந்த எந்த சூத்தரங்களால்தான் சனங்களை, சனங்களின் பிள்ளைகளைக் காப்பாற்றியிருக்க முடியும்?

3.
இங்கே, இத்தகைய எழுத்தை எழுதுகிற ஒருவர் எமது சூழலில் தனிமைப் படுத்தப்படுவதே நிகழ்கிறது. அதிலும் தோல்வியுற்ற தேசீயத்திலிருந்து மீண்டு வராத தேசீய மனங்கள் இன்னமும் அது தந்த எச்சசொச்ச- அரசியலுடன் துரோகியாக்குதலுக்கே முன் நிற்பன. மறுபுறத்தில் so called புலி எதிர்ப்புக் கூட்டமும் தம் மீதான மற்றவர்களுடைய இதுநாள்வரையான விமர்சனங்களை களத்துள்ளிருந்து வந்த ஒருவரிடமும் பகிர்ந்துகொள்ளப் பங்களிக்கின்றன (!). அதாவது, சோபாசக்தி போன்ற ஒரு பெயர்ப் பட்டியலுடன் கர்ணனைக் காணுகின்ற ஒருவர் அவர்கள் பகிர்கிற வரலாறு குறித்த அதிலிருக்கிற போருடனான அவர்களது அனுபவங்களது வேறுபாடுகள் குறித்த எந்த அக்கறையுமின்றி ஒருவர் மீதான விரோதத்தை (விமர்சனத்தை) மற்றவரிடமும் கையளிக்கிறார். பட்டியல்களின் அரசியலில் ஒருவரது வாழ்வனுபவத்தின் முக்கியத்துவங்கள் மழுங்கடிக்கப்படுகின்றன. கர்ணன் field-இல் இல்லாத கடந்த 10 – 15 + வருடங்களுள் புலம்பெயர் நாடுகளில் ஏராளம் விவாதங்கள் இயங்களது சண்டைகள் இந்திய எழுத்தாளர்களது வருகைகள் மகுடங்கள் நடந்திருக்கின்றன. அந்த 10 வருடங்களில் புலி எதிர்ப்பு அல்லது புலி சார்புப் பரணிகள் பாடியவர்கள் அனைவருமே களத்தில் வாழ்ந்த ஒருவருடன் ஒப்பிடுகையில் புலம்பெயர் சமூகத்தில் பாதுகாப்பான அகதி வாழ்வையே வாழ்ந்தார்கள். எந்த வகையிலும் புலம்பெயர் வாழ்வோடு ஒப்பிடவியலாததே போரில் வாழ்ந்த புலத்திலுள்ளோர் வாழ்வு. கர்ணன் இந்த 10 வருடங்களில் அதற்கு முன்பும் போராளியாய் இருந்தவர். அதிற் தன் ஒரு காலை இழந்தவர். முள்ளிவாய்க்கால்வரை அங்கு வாழ்ந்தவர். அவரது அனுபவங்களும் அவர் மீதான விமர்சனங்களும் முன்னையவர்கள் மீதான விமர்சனங்களும் எப்படி ஒன்றாக முடியும்? அத்துடன் கர்ணனின் எழுத்து புலி எதிர்ப்பு என்கிற கட்டத்துள் அடைசப் படுவது பொருந்தாத ஒன்றாகவே படுகிறது. அவரது அனுபவங்கள் எழுதப்படுகிற போது அது த.வி.புலிகள் அமைப்பினது தோல்வியின் பின்னான பதிவு என்கிற போதில் அவர்களது செயல்பாடுகளது உண்மையைப் பேசியமையால் அது வசதியாக அவ்வாறு அடையாளங் காணப் படுகிற போதும், கர்ணன் மிக தெளிவாக மக்களுக்கு எதிரான – தேசியவாதத்துக்குமே எதிரான – கூறுகளை பதிந்திருக்கிறார். (‘’தமிழனுக்கு தலையாட்டியை தெரியாதா’’ பக். 118)  துரதிர்ஸ்டவசமாக, பிரதியை விட எந்தக் குழுவைச் சேர்ந்தவர் என்பதே பிரதானப்படுத்தப்படும் தேசீய மற்றும் பின்நவீனத்துவ சூழலில் கர்ணனும் இது குறித்த (இவ்வாறு அடையாளங் காணப்படுதல் தொடர்பாய்) பிரக்ஞையுடன் இருத்தல்  சாட்சியாக இருக்க விரும்புகிற அவரது அனுபவங்களுக்குச் செய்கிற நியாயமாக இருக்க முடியும்.

4.
தன் இத்தனை இழப்புகளுடனும் ‘கண்டதை சொல்லவும் அஃதால் தனிமைப்படவும்’ துணிகிற இளைஞனாய் கர்ணன் இருப்பது மதிப்புக்குரியது; இத்தனைக்குப் பிறகும் சந்தர்ப்பவாதத்துக்கு எதிரான குரல்கள் தொடர்பான நம்பிக்கையைத் தருகிறது. பேரழிவில் முடிந்த ஒரு போராட்டத்தின் அழிவுகளுக்குக் காரணமான வன்முறைக்கு எதிரான மனநிலையே வன்முறைக்கெதிரான சாட்சியம் ஆகும்.

எமது சூழலில் புலியிருந்தால் புலி எனவும் இல்லாவிடில் வேறொன்றிலும் நழுவி நழுவித் திரியும் சந்தர்ப்பவாத விற்பன்னர்களையே நாம் கண்டுவந்திருக்கிறோம் (எஞ்சியிருக்கும் பலம் மிகுந்த ஒரு அதிகாரத்திடம் சரணடைவது வேறு வழியற்ற எமது மக்களினது அல்ல, மாறாக எக் காலத்தில் அது சந்தர்ப்பவாதிகளான அரச சேவகர்களதும் கல்வியாளர்களதும் யதார்த்தமாகவே இருந்திருக்கிறது; இருக்கிறது. என்ன அதை அவர்கள் திரைமறைவில் செய்வர், அவ்வளவே). அவர்கள் மாறி மாறி, பலம் மிகுந்த ஒரு அணி எங்கு நிற்கிறதோ அங்கு நிற்பார்கள். நோகாமல் நசியாமல் அவர்களுக்கென்றோர் இடம் இத் தமிழ் கூறும் நல்லுலகில் தரப்பட்டுமிருக்கும்.

அவற்றுக்கு மாற்றாய் இத்தகைய சாட்சிகள் எழுந்து வரட்டும். அவர்களின் சொற்கள் சொகுசான இருப்பை சுற்றி கேட்கும்வரை மொய்க்கட்டும். முந்தைய போர்ப் பரணிகள் எடுத்த இடத்தை இந்தக் கதைகள் நிரப்பட்டும். வன்முறையிலிருந்து விடுதலை அதன் இத்தகை கொடூரங்களை எதிர்கொள்வதிலிருந்தே பிறக்க முடியும்; எதிர்கொள்ளாமை மேலும் மேலும் கொடூரங்களையே வீண் வீம்புடன் உற்பத்தி செய்யும். அப்பொழுதும் உற்பத்தியாளர்களது பிள்ளைகள் அல்ல மடியப் போவது. களத்தில் நிற்கிறவர் பிள்ளைகளே (அது தலைவர்களதே ஆயினும்).

அவர்களது அபிப்பிராயங்களை, கடந்து வந்த பேரழிவின் அனுபவங்களை, சாட்சிகளை – புறக்கணித்து (அல்லது தமக்குத் தோதானவையை மட்டுமெடுத்து) அவர்களது இழப்புகளின் மேல் ஏறி தமது இன  மானத்தை, வெற்றுத் தேசீயச் கூச்சலை, வேண்டி நிற்றல் – அது, அந்தக் குட்டித் தீவுள் வாழ் மக்களுக்குதவாத பிதற்றல்.  ‘அவர்கள் அழிந்து விட்டார்கள். நடந்தது நடந்து விட்டது. இனி கதைத்து ஒன்றுமில்ல’ – இதை சொல்லுபவர்கள் அவர்கள் இருந்தபோது கதைத்தார்களா? தவறு நடந்த போது விமர்சித்தார்களா? இத்தகைய தரப்பிடமிருந்தே, 2009 மே நிகழ்வின் பிறகு முகாமிலிருந்து எழுதப்பட்ட இறுதிப் போர் அனுபவங்களை, சம்பந்தப்பட்டவர்கள், ‘இப்போது எழுதக் கூடாது’ என்கிற வாதம் அல்லது  கட்டளையும் முன் வைக்கப்பட்டது [எமது பெரும்பான்மை அரசியலைப் பொறுத்தவரை அதற்கு மாறான விமர்சனங்களைப் பொறுத்தவரையில் (அவை பொதுவெளியில் வைக்கப்பட அல்லது பேசப்பட என) எப்போதுமே தகுந்த நேரம் என்று ஒன்று வந்ததேயில்லை].

இவ்விடத்தில், வாசித்த ஒரு யூதக் கதை ஞாபகம் வருகிறது. படுகொலைகள் எல்லாம் முடிந்த பின் தனது வீட்டுக்குத் திரும்பி வருவாள் ஒரு பெண் (முகாம்களில் தப்பிய பெண்).  உயிர்தப்பாத தனது பெற்றோரின் எஞ்சியுள்ள பொருட்களை (இருந்தால்) எடுத்துச் செல்ல. அவளது வீட்டில் ஒன்றுமில்லை. அவளது பக்கத்துவீடுகளில் அயலவர்கள் ‘அப்பிடியா? எல்லாப் பொருட்களும் அரசாங்கம் கொண்டு போனதோடு சரி. ஒன்றும் மிச்சமில்லை’ என கையை விரிப்பார்கள். ஆனால் அவர்கள் வீட்டில் இவளுக்கு ரீ கொண்டு வர அவர்கள் பாவித்த கப் அன் சோசர் தொட்டு ‘அவர்களுடைய’ எல்லாம் அங்கே புழக்கத்தில் இருக்கும். அவளுடைய மனம், அங்கு எஞ்சியுள்ள பொருட்கள் தருகிற நினைவினில் மிதக்கும். அவளுடைய அம்மா ரீ ஊத்திய கேற்றில்… அப்பா சாய்ந்திருந்த கதிரை… நிலா முற்றத்து வாங்கில்… இவற்றை அழித்த கொடும் சித்ரவதைக் காலம்! அந்த அயலோர் நடந்தது குறித்து வருத்தம் தெரிவிக்காதது மட்டுமல்ல, எதுவும் நடந்தது போல காட்டிக் கொள்ள மாட்டார்கள். இப்போ இதை செய்வது சிங்கள மேற் தட்டு மட்டுமல்ல தமிழ் மேற் தட்டும் தான். இல்லாவிடில், ‘நடந்ததை பெசாதீர்கள்’ என்று கேட்க யாருக்குத்தான் தைரியம் வரும்?

போருக்குள் வாழ்ந்து (போராடி) அதில் தம் காலங்களை இழந்து கடைசிவரை அதனுள் இருந்து (முகாமிலும் இருந்து) வந்தவனிடம் /வந்தவர்களிடம் அதை சொல்வதில் என்ன ஒரு அதிகாரம்?!  அதில் என்ன நியாயம்?

இன்று இத்தனையாயிரம் போராளிகள் உள்ளே இருக்கிறார்கள் என அரசாங்கத்தை சாடிக் கொண்டே, அந்த வறிய போராளிகளது குடும்பங்களுக்குத் தமிழ்த் தேசியத்தின் பேரில் சேகரித்த பணத்தை பயன்படுத்த ‘தயாரற்ற’ – இன்னமும் தமக்குள் பணத்தை சுவீகரிக்கும் மோதல்களால்ப் பிரிந்துள்ள – புலம்பெயர் தரப்பு(கள்) ஒரு புறம், மற்றும் ‘அவர்கள் செய்யலாம் தானே” என சொல்கிற எதிர் தரப்பினர்.. என ஏஜென்டுகளை வாய்ச் சொல்லர்களை சட்டாம்பிகளை பணத்தை சுருட்டியவர்களைத் தானே காண முடிகிறது. மக்களை நேசித்த மனிதர்கள் எங்கே?
சமீபத்தில் இலங்கையிலிருந்து வந்த ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுளள்ளது போல (தமிழ்த் தேசீயத்தின் பேரில்) மண்ணுக்காக விதைக்கப்பட்ட அத்தனை பிள்ளைகளும், எஞ்சிய பேராளிகளும் “…வேள்விக்கு இறைத்த கடாய்களாய்” தானே ஆகி விட்டிருக்கின்றனர். தேசீயம் பேசிய புலம்பெயர்ந்தவர்களால் கைவிடப் பட்டிருக்கின்றனர்? புதிதாய் அரசியல் ‘செய்ய’ முன் பழைய கணக்கை – அதன் தவறுகள் களைந்து – தீர்க்க வேணாமா? பழைய கணக்கின் தவறுகளாற் பழிவாங்கப்பட்டவர்கள் தொடர்பில் கபடமான மெளனத்தை சாதிக்கலாமா? அவர்கள் தொடர்பில் செய்வதற்கு ஒன்றும் இல்லையெனில், நீ துரோகி என்றும் நீ புலி என்றும் எம் மயிர்அரசியலின் நிமித்தம் தாராளமாய் லேபல்களை வழங்கித் திரியவேண்டியதில்லையே? எம் ஈகோவைத் திருப்திப்படுத்தச் செய்யும் அரசியல்களை தாய்நிலத்தில் இருக்கும் அவர்களின் நலன்களுக்காகவும் தான் என சளாப்பத் தேவையில்லையே….

……………………………………………………………………………………………………………………….
கற்பனைகளும் கனவுகளும் அழகானவை. மனதுக்கு நிறைவை தருவனவும் கூட. ஆனால் யாதர்த்தம் அவ்வளவு இனிமையாக இல்லை. கண்களை மூடியபடி உலகம் இருட்டு என்ற பூனையின் கதைகளை இந்த உலகம் எத்தனை தடவை பார்த்து இருக்கிறது. ஒவ்வாரு தடவையும் பூனை தான் பிறர் சொல்வதை கேட்பதாய் இல்லை. பூனை கேட்காது விட்டாலும் அவலம் மனிதர்களுக்கு தானே நேர்கிறது. மனிதப் பேரவலத்தின் முடிவில் சுடுகாட்டின் மேல் நின்று நாடு கடந்த அரசாங்கம்என்ற குரல் ஒலிக்கின்றது.
மீநிலங்கோ தேய்வேந்திரன், Facebook status, பெப்.14 2011′
……………………………………………………………………………………………………………………

#பெண்கள்

இவை தவிர, கர்ணனின் கதைகளில் வருகிற பெண்கள், பெண் சார்ந்த பார்வை பற்றியும் குறிப்பிட வேண்டும். ஒன்றினது குறியீடாகிற ‘தேவதையின் தீட்டுத்துணி’ என்கிற தலைப்புத் தொட்டு காதல் தொட்டு புனிதங்களென கட்டப்பட்டவை தொடர்பில் எள்ளலுடனே கர்ணன் தான் சார்ந்த உலகை பார்க்கிறார். சக போராளிகளாக ( காவல்துறைப் பெண்களாக) இருக்கின்ற போதும், கர்ணனே எழுதிறது போல (“எல்லா இடமும் பெண்கள் ஒரு மாதிரித்தானே”) கர்ணனின் கதைப் பெண்கள் நளினமும் சிரிப்புமாய் ஒரு மரபான முகத்தையே அணிந்துள்ளார்கள். கதைகளில் வருகிற கதைசொல்லி ஆண் எந்த வயதானவரையும் பொதுப்புத்தியின் அடிப்படையிலேயே சிந்திக்க வைக்கிறார் (பிள்ளை நின்றார். ‘என்னவாமடி பிள்ளையள். கெலி நோட்டீஸ் போட்டது உண்மையே?’ அதுகள் ஒரு சாங்கமாய்ப் பிள்ளையைப் பாத்தன. ஒருத்தி ‘ஓமோம் அங்கிள்’ என்றுவிட்டு ஒருத்தியின் சட்டையைப் பிடிக்க இருவரும் சிரிச்சுக் கொண்டு ஓடிச்சுதுகள். பிள்ளைக்குப் பெரிய புதினமாக இருந்தது. இப்ப என்ன நடந்தது என்று இதுகள் இப்பிடி வெட்கப்பட்டுக்கொண்டு ஓடுதுகள். லவ் பண்ணப் போறன் எண்டு சொன்னாலும் சரி, ரேப் பண்ணப் போறன் என்று சொன்னாலும் சரி எல்லாத்துக்கும் சிரிக்குங்கள்போல என யோசித்துக் கொண்டு….. . பக்.61.) இது, போராட்டம் எவ்வளவு தூரம் ஆண்-பெண் புரிதல்களை வளர்த்திருககிறது என்பது தொடர்பில் யோசிக்கத் தூண்டினாலும் இயல்பான ஆண் – பெண் ஈர்ப்பும் ஒருவரது உலகம் பற்றிய இன்னொருவரது புதிர்நிலையும்  சமூகத்தளங்களில் பெரியளவில் மாறவில்லை என்பதே யதார்த்தம். அவர்களிருவரது உலகமும் இருவருக்கும் புதியதே. எச் சந்தர்ப்பத்திலும் அவ் உலகம் அறியக் கிடைக்கும் அருகாமை கிளர்ச்சியூட்டக் கூடியதே. புனிதம் எதிர் புனிதமற்றது என்கிற இரு எதிர் நிலைகளில், தீட்டினை அழுக்கான ஒன்றாகவே முன்வைக்கிறது.  தமிழ்ச் சூழலில் சமகாலப் பெண்ணியம் தீட்டென ஒதுக்கப்படும் தூமையை தூய்மைக்கெதிராய் (புனிதங்களுக்கு எதிராய்) முன் வைப்பது.

போரில் எதிர்கொள்கிற வீரமும் அதற்கு மாறான நளினமும் காதலும் தாய்மையும் என மரபான பெண் முகங்கள் விரிந்தாலும், இறுதியாய் எஞ்சுகின்று முகம் என்னவோ மண்ணள்ளி எறிந்து அழுகின்ற அம்மாக்கள் தான்.

“….எவ்வளவோ சொல்லிப் பாத்தான். ஆமி விடவில்லை. காணிக்கைமலரும் வந்து நிலத்தில ஒரு பாட்டம் விழுந்து குழறிப் பாத்தது. ஆமிக்காரர் நிறையச் சமாதானம் சொல்லி தாய்க்காரியை அனுப்பிப் பொட்டு, இவனைப் பஸ்ஸில ஏத்திச்சினம். மெனிபாம் செம்பாட்டு மண்ணில உருண்டு அழுது உடம்பெல்லாம் செம்பாடு பத்திப் போய் நிக்கிற தாய்க்காரியைப் பாக்க இவனுக்கு அழுகை பொத்தீக் கொண்டு வந்தது. பஸ் யன்னிலில முகத்தை வைச்சுக் கொண்டு அழுதான். …” (பக்.19, இரண்டவாது பந்தி, அழுகின்ற அம்மாக்கள்)

இயக்கத்துக்காக (போராட்டத்துக்காக) ஆள் சேர்த்தவர்களே, பிறகு யார் யார் இயக்கத்தில் இருந்தார்கள் எனக் ‘காட்டிக் கொடுக்கும்’ முகமூடிகளாக (“தலையாட்டிகளாக”) ஆகும் ஜீரணிக்க முடியாத உண்மைகள்.  குப்பிகளை இளைஞர்களிடம் தந்தவர்கள், அவர்களது இழப்புகளுக்குப் பொறுப்பானவர்கள் ஆன தலைவர்கள் சரணடைந்து நின்றதும், காட்டிக் கொடுப்பவர்கள் என மற்றவர்களைச் சாடியவர்கள் தாமே காட்டிக் கொடுப்போர்களாக மாறியதும், அதிகாரம் இழந்து, இன்னொரு அதிகாரத்திடம் போவது ‘வேறு வழியற்ற நிலைமை’ என்பதை ஒத்துக் கொள்ளாமல் / முடியாத இக்கட்டுள் சுழலும் முன்னைய ‘இரண்டாவது’ தலைவர்களும் ….. பற்றிய சித்திரமே எஞ்சுகிறது. அதாவது வரலாறு திருப்பிக் கொண்டு வந்து ஆரம்பித்ததிலும் மோசமான இடத்தில், மோசமான உயிரிழப்புகளுடன் விட்டுச் செல்லும் காட்சி. அத் துயரம் எள்ளலுடன்

இங்கே / இவ்வாறாய்

…….
எனது தலைமுறையின் வலியும் துயரமும் நிறைந்த இந்தப் பிரதிகளும் குருதியில் நீந்திச் சென்றவாறு பாடிக்கொண்டிருக்கின்றன. கண்டும் காணாது இருப்பவர்கள் கண் எதிரே  – எல்லோரதும்
மதில்களைத் தாண்டி
உடைந்த மதகுகள் தாண்டி
மிதந்த வந்த
ஓஃபீயசின் தலையை வைத்துக் கொண்டு
சிலையாகி நிற்பாள் எமது வரலாற்றின் பெண், (மண் சுமந்து, பின்) தாங்கவியலா அதன் துயர் சுமந்து.

தேவதைகளது தீட்டுத் துணி இளம் பருவத்தில்  வயதுக்கு மீறிய அனுபவங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிய போருக்கான குறியீடாய் இருக்கலாம்.  ஆனால் நாவுகளும் கைகளும் கால்களும் துண்டாடப்பட்ட அவநம்பிக்கைமிகு போரிலிருந்து தமக்கான வாழ்வை அவர்கள் கண்டடைய வேண்டும். அப்போது பாடப்படும் அந்தப் பாடல்களில் காதலும் விடுதலையும் தீர்க்க தரிசனங்களும் நிறைய,
கடற்கரையில் அவல ஓலங்களும் இரத்தமும் எந்த மீட்பரதும் செவிக்கெட்டாத அந்த சனங்களின் உண்மைகள் உயிர்பெற, சாட்சிகள் ஒவ்வொருவராய் எழுந்து வரட்டும். இன்னும் நிறையக் குரல்கள், பெண்கள், போருள் இருந்தவர்கள்,  தம் இளமையைத் தந்தவர்கள் அனைவரது சாட்சியத்துக்காகவும் காத்திருப்போம். அதிலிருந்து பாடங்களை கற்றுக்கொள்ளதுவதும் கொள்ளாததும் வரலாற்றினதும் அதன் மாணவர்களதும் தேர்வு (choice).  சர்வதேசம் கேட்பதென்ன, முதலில் புலம்பெயர் நாடெங்கும் சடைத்துக் கிடக்கும் — எங்களது மனச் சாட்சிகள் தானும், ‘தம் பக்க அரசியல்களை எங்க நியாயப்படுத்துவது’ என்பதை விடுத்து கேட்கத் தொடங்கட்டும். வரலாற்றின் உண்மைகளை மிதித்துச் செல்லாத புதிய வெளி அப்போதே சாத்தியமாகும்.

..நேரம் நன்றாக போய்க் கொண்டிருந்தது. தேத்ததண்ணிக் கடைகாரன் ரேடியோ மீற்றரை புலிகளின் குரலிலிருந்து பீ.பி.சிக்கு மாற்றினான். எங்கட பிரச்சனையைத்தான் அதில கதைச்சினம். இவன் சுமதியை சுரண்டிவிட்டு வலு ஆவலாகக் கேட்டான். முதல்நாள் ஷெல்லடிச்சு நிறையச் சனம் செத்தது பற்றித்தான் பீ.பீ.சீக்காரன் கதைச்சுக் கொண்டிருந்தான். ஆமிக்காரனிட்ட கேட்டான். அவையள் சொல்லிச்சினம் தாங்கள் ஷெல்லடிக்கவில்லை. ஆனால் தங்கட ஆட்கள் சத்தத்தைக் கேட்டவைதான். அது புதுக்குடியிருப்புக்கு கிழக்குப் பக்கமாகக் கேட்டதாகவும். ஆகவே புலிகளே அடிச்சிருக்கவேணும் எண்டினம். பீ.பீ.சீக்காரரும் விடவில்லை. விடுத்து விடுத்துக் கேட்க கதைச்ச ஆமிக்காரர் கொஞ்சம் நழுவினார். பிறகு இயக்ககாரரோட கதைக்க றை பண்ணினம் கிடைக்கயில்ல என்றுவிட்டு மாத்தளன் ஆசுப்பத்திரி டொக்டர் சத்தியமூர்த்தியை தொடர்பு கொண்டினம். அந்தாள் அடிச்சுச் சொல்லுது. இல்லை. அந்தச் ஷெல்லுகள் மேற்கு, வடமேற்காலதான் (ஆமிப் பிரதேசம்) வந்தது என்று. என்னெண்டாலும் அந்தாளின்ர துணிவை மெச்சவேணும் என்று மனதுக்குள் நினைச்சுக் கொண்டிருக்க வழிகாட்டி வந்தான். எல்லாரும் வெளிக்கிட்டு சத்தம் போடாமல் எனக்குப் பின்னால ஓடிவா என்று விட்டு ஓடத் தொடங்கினான். ஒரு கையில சுமதியைப் பிடிச்சுக் கொண்டு குனிஞ்சபடி ஓடினான். இயக்கத்தின்ர பண்ட்டை ஏறிக் கடக்க வேணும். சுமதி கஸ்டப் பட்டாள். கல்யாணம் கட்டிய இரண்டு மாதத்தில் முதல் முதலாக அவளைத் தூக்கினான்.
அவளின்ர தமயன் பண்டுக்கு மற்றப் பக்கம் நின்று கீழ்குரலில அம்மா வந்தாச்சுதா.. தம்பி வந்தாச்சுதாசுமதி வந்தாச்சுதா என்று இடாப்பு கூப்பிடத் தொடங்கினான். எல்லாரும் சரியெண்டதும் இவங்கட குடும்பகாரர் ஓடிப் போய் தண்ணீருக்குள் இறங்க சுமதி கிடங்கொண்றில் காலை விட்டு விழுந்தாள். அவளை தூக்கி தனக்கு முன்னுக்கு நடக்கவிட்டபடி இவன் நடக்க
எங்கிருந்தென தெரியவில்லை. கிழக்கிலிருந்தா மேற்கிலிருந்தா, வானத்திலிருந்தா பூமியிலிருந்தா என்பது தெரியவில்லை. தெரிந்ததெல்லாம் எங்கோ தொலைவில் துப்பாக்கி ஒன்று ஒரு சுற்று சடசடத்து ஓய்ந்தது. அதன் ஒரு ரவை 7.62க்கு 52 mm அளவு கொண்ட சின்னி விரலளவு ரவை, இவன் நெஞ்சைத் துளைத்துப் போனது.
(தொகுப்பிலிருந்து, சிறுகதை: றூட், பக்.93-94)

./.

  • கர்ணனின் வலைத்தளம்: http://yokarnan.com/
  • இரவு – தமிழ் மொழிபெயர்ப்பிலிருந்து
  • அவரது இரண்டாவது தொகுதி ‘சேகுவேரா வாழ்ந்த வீடு’ வடலி வெளியீடாக வந்திருக்கிறது — http://vadaly.com/

===============================

published in கூர் 2012 

===============================

Advertisements
Leave a comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: