எழுதப்படாத கற்பனைகள்

அறிமுகம்

இரண்டாயிரம் ஆண்டுகால இலக்கிய மரபில் – ஒளவையார், காரைக்கால் அம்மையார், ஆண்டாள், வெள்ளிவீதியார், நன்முல்லையார் எனக் குறிப்பிடத்தக்க பெண் கவிஞர்களின் பங்களிப்பு தமிழில் உண்டு. விடுதலைப் போராட்டங்களில் பிரச்சாரமாக இடம்பெற்ற/இடம்பெறுகிற அரசியல் எழுத்துக்கள், கவிதைகள் அல்லது பாடல்களாகின்றன. பெண்களைப் பொறுத்தளவில் இலக்கிய வடிவங்கள் பல இருக்கின்றபோதும், அவர்கள் புனைவாளர்களாகவோ, விமர்சகர்களாகவோ இல்லாமல் கவிஞர்களாக இருப்பதற்கு அவர்களுக்கென்றிருக்கிற சொற்ப நேரமும் அதற்கான இடமும் (space) காரணமாகக் கூடும். அந்த வகையில், வன்முறையாலும் தனிமையாலும் உருவாகியிருக்கிற எம் சமகாலத்தை பதியும் நோக்கில் வெளிவரும் இம் முயற்சியும் ஒரு கவிதைத் தொகுப்பாகவே அமைகிறது.

இதுவரையில், சொல்லாத சேதிகள் (இலங்கை, 1986), மறையாத மறுபாதி (ஐரோப்பா, 1992), உயிர்வெளி- பெண்களின் காதற் கவிதைகள் (கிழக்கிலங்கை, 1999), எழுதாத உன் கவிதை – தமிழீழப் பெண்களின் கவிதைகள் (வட இலங்கை, 2001) ஆகியனவை வேறுபடும் கருத்துநிலைகளில் உள்ள இலங்கைப் பெண்களைக் கொண்டு வெளிவந்த கூட்டுத் தொகுதிகளாக அறிகிறோம்; பறத்தல் அதன் சுதந்திரம் (இந்தியா, 2001) இலங்கை-இந்தியா-புலம்பெயர் பெண் கவிஞர்களின் கவிதைகளோடு வெளி வந்தது (விடுபட்ட இக்காலப் பகுதிக்குரிய வேறும் தொகுதிகள் இருக்கலாம்).

இவற்றினைத் தொடர்ந்து, ஈழத்தின் கவிதை வழியினைக் கடந்து/தொடர்ந்து, ஈழத்தோடு அவர்களுடைய பண்பாட்டையும் நினைவையும் – வெவ்வேறு விகிதங்களில் – பகிர்கிற அல்லது பகிராத குறிப்பிட்ட சில பெண்களது அனுபவங்கள் ஊடாக, ஓர் அந்நிய மற்றும் சமகால வாழ்வை இத் தொகுப்பு பதிய முனைகிறது. வட அமெரிக்காவைக் களமாகக் கொண்டு தொகுக்கப்பட்டதால், அங்கிருந்தே பெரும்பான்மைக் கவிஞைகளோடு வெளிவருகின்ற இதில் எழுதியுள்ள பலரும் கவிதை-பிரசுரவெளிக்குப் புதியவர்களே.

இத் தொகுதி  – தமது அரசியல் நம்பிக்கைகளாலும் வாழ்வுமுறைகளாலும் வேறுபடுகிற, சமூகத்தில் வெவ்வேறு பாத்திரங்களைக் கொண்டிருக்கிற, உலகின் வெவ்வேறு நகரங்களில் உள்ளவர்களை, ‘இலங்கைப் பெண்கள்’ என்கிற பொது உடன்பாட்டின் அடிப்படையில் கூட்டிணைக்க முனைந்திருக்கிறது. இதில் எழுதியிருக்கிற ஒவ்வொருவரது உலகும் ஒவ்வொரு தனித்தனி ஆட்களின் உலகங்கள்; அவ் வகையில், இந் நூல் தரக்கூடிய மொத்தக் கருத்தோடும் இக் கவிஞர்கள் அனைவரும் உடன்படவில்லை.

[  பின்புலம் ]

சராசரியான புலம்பெயர் தமிழ்ப் பொதுமகன் ஒருவரிடம் புலம்பெயர்ந்த மண்ணில் அவருக்குரிய பிரச்சினை என்னவென்று கேட்கப் படின், அவருடைய பதிலும் ஆதங்கமுமாய், பெயர்ந்த மண்ணில், தமது பண்பாடு அழிந்துபோவதையிட்ட முறையிடலும் இருக்கும். அதில்: ஒரு தமிழ்ப்பெண் ‘காப்பிலி’யையோ (காப்பிலி: கறுப்பு இனத்தவரை புலம்பெயர் தமிழர் அழைக்கிற கொச்சைப் பெயர்) பிற இனத்தவன் ஒருவனையோ திருமணம் செய்து விடுவாள் என்பதுடன், ஒரே இனத்தைச் சேர்ந்த, வேறு ஜாதியான, ஒரு தமிழ் மகனை எப்படி அடையாளங் கண்டு திருமணம் செய்யாமல் விடுவாள் என்கிற வகைக் கவலைகளும் அடங்கும். மொழியைவிடவும் மதம், பஜனை வகுப்புகள், பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம் எனப் பிள்ளைகளை – முக்கியமாகப் பெண் குழந்தைகளை- வகுப்புகளுக்குக் கொண்டு சென்று, தமது கலாசாரத்தைக் கைக்கொண்டுவிடவே அவர்கள் விரும்புகிறார்கள். மறுபுறம், கவிஞன்களது பிரதிகள் வீடு திரும்புதல் பற்றிய ஏக்கங்களை, பனி தூவும் விடியற் போர்வையை விலத்திப் பகிருதலும் தொடருகின்றது. மரபான சகல பிம்பங்களும் உடைக்கப்பட வேண்டியனவாய் இருக்க, ‘கவிஞன்‘ என்கிற பிம்பத்தை மட்டும், விடாது, தாமே கட்டி எழுப்பிக் காவித் திரிகின்றன ஆண்களின் பிரதிகள். எனின் அவர்களுடைய அத்தகு ஆதங்கங்களும் பெரும் துக்கமும் இந்த மண்ணில் வளர்கிற பெண்களுக்கோ, ஈழத்தில் வெள்ளாள ஆதிக்கத்தின்கீழ் – வீடோ தமக்கென நிலங்களோ அற்று – ஒடுக்கப்பட்ட (இங்கு வதியும்) சிறுபான்மை மக்களுக்கோ, அடுத்த தலைமுறைத் தமிழ் இளைஞர்களுக்கோ உரியதன்று– அவர்கள் எதிர்கொள்கிற அனுபவங்களது வெளி முந்தையவர்களிடமிருந்து வேறுபட்டது.

இங்கு: முதலாளிய சமூகத்தின் அங்கமான பொருள்முதல்வாதசார் சிந்தனைப் போக்கிற்கமையவே இயங்கும் எம் சமூக வாழ்வில், போரினால் தமது வீட்டை இழந்துவந்த ஒரு மக்கள் கூட்டம் (தமக்கென வீட்டினை, நிலத்தினை புலத்தினில் ‘கொண்டிருந்த’ ஒரு வர்க்கம்), சொத்துச் சேர்த்து ‘வீடு’ வாங்கி, பின் அதற்காக ‘குறைந்த ஊதியத்தில்’ ஓடத் தொடங்குகிறது: ‘வீடு வாங்குதல்’ அவர்களது இழப்புகளின் குறியீடாயும் பதிலீடாயும் ஆகிவிடுகிறது. புலம்பெயர்ந்த நாடுகளின் சமூகங்களிலும் சொத்துச் சேர்ப்பு, திருமணம், குடும்பம், குடும்பத்திற்கென உழைப்பு என எல்லா நிறுவனங்களும் அப்பழுக்கற்றதாய் அப்படியே பின்பற்றப் படுவதும்; தொழிற்சாலைகளில் தமது உரிமைகளை வலியுறுத்தவியலாதளவு சார்ந்திருப்பவர்களாக, வங்கிகளது நிரந்தரக் கடனாளிகளாக, மனிதர்கள் ஆகிவிடுவதும் யதார்த்தமாகி விடுகிறது. மறுபுறம்: ஏனையவற்றுடன், வாழ்வின் அழுத்தங்களினால், குடும்ப வன்முறையால், மன உளைச்சலால் தற்கொலை செய்து கொள்கிற தமிழ்ப் பெண்கள்; யார் யாராலோ எழுதப்பட்ட, எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் தமது வரலாற்றில், யுத்தத்தின் பல்வேறு துயரங்களின் பளுவுடன் சுழலும் உளைச்சலுற்ற மனிதர்கள்; பொது வீதிகளில் வேகக் கார் ஓட்டங்களில் – குழு வன்முறைகளில், தன்மொழிக்குரியவனையே(!) ‘காரால்’ அடித்தும் அடிக்கப்பட்டும் ஒரே சமயத்தில்க் கொலையாளியாகவும் கொல்லப்பட்டவனாகவும் ஆகிவிடுகிற இளைஞர்கள்…. இவ்வாறாய், வன்முறையைத் தூண்டியவாறு போர்ப் புலத்தின் காலடிகள் எம்மைத் தொடர்கின்றன. போரினது கோரத்தை அறியாத போரினுள் வாழ்ந்திராத புலத்தில் வாழும் நம் பிள்ளைகளது கரங்களிலும் அதன் வன்முறை வெறி  ஊடுருவியிருக்கின்றது.

[புலம்பெயர், இளம் தலைமுறை ஆண்களது தமிழ் ‘ரவுடி’ சினிமா மற்றும் வன்முறை குழுக்களைப் பாடுபொருளாகக் கொண்ட கறுப்பர்களது வெகுசன இசை மீதான கவர்ச்சி (gang culture / gang based  music influence) குறிப்பிட வேண்டியது. வன்முறைக் குழுக்கள் தனியே ஆண்களுடையதா என்பதுவும், வன்முறைக்கு பலியாகும் கறுப்பு இளைஞர்கள்  உருவாகிற கறுப்பு சேரிகள் (ghetto) எனப்படுகிற மேற்கின் திட்டமிட்ட பிரித்துவைத்தல் (systematic segregation) நிகழும் குடியிருப்புகளது அரசியல்களும் பிறிதொரு தளத்தில் ஆழமாய் உரையாடப் பட வேண்டியனவாகும். இவற்றிலுள்ள – இங்கே குறிப்பிடக் கூடிய – துயரகரமான அவதானம், வன்முறைக்குழுக்கள் பெரும்பாலும் சண்டையிட்டுக் கொள்வது தமது இன மனிதர்களுடனும் தமது வர்க்க மனிதர்களுடனும் தான். போதைப் பொருட்கள் விற்பனை, துவக்குகள் என இவர்களது   நுகர்வில் பயனடைவோராக திரைமறைவில் பெரும் வியாபாரிகள் இருக்க, வெளியில் வன்முறையில் இறங்கும்  பெண்களானாலும் ஆண்களாலும் அவர்களது சண்டைத் தரப்பாக அகதிகளான சக இன மற்றும் ஒரே வர்க்கத்தினரே இருக்கிறார்கள். அவர்கள் மாறி மாறி தம்மை அடித்துக் கொல்வது என்பது, அவர்களைப் பெற்றெடுத்தவர்களது தவிர, யாருடைய துயரமாய் இருக்க முடியும்??]

அவர்களை இயக்கிக் கொண்டிருக்கிற வன்முறையுலகம், பொருள்சார் மோகம் என – இங்கே நாம் எதிர்கொள்கின்றவை, தனிப்ப(ட்)ட ‘ஒரு’ சமூகம் எதிர்கொள்கின்றவை மட்டுமன்று. யுத்தத்திலிருந்து விலகி வந்த பிறகும் ஆழ ஊடுருவிய அதை தொடர்ந்தும் தம்முடன் சுமக்கிற இனங்களது யதார்த்தம் புதியதும் அல்ல. ஆனால்: கலாசார, பாலின, தலைமுறை இடைவெளிகளை புறந் தள்ளி, இப் பிரச்சினைகளைத் தம் சமூகத்தின் நலனை முன்வைத்து (கலாசார இடைவெளிகளை மீறி) விசாலமாய் அணுகுகிற சிந்தனைப் போக்கும் அதை வளர்க்கிற வேலைத் திட்டங்களும் எம்மிடையே உள்ளதா என்பதே கேள்வியாகும்.

இங்குள்ள தமிழ் சமூக நிறுவனங்கள் அந்நியப்படுகிற இளைஞர்களது நலனைவிட -படித்த, யாழ்-மையவாத (வெள்ளாள, ஆதிக்கஜாதி மனோபாவ)- சிந்தனைகளது இணங்கு தளங்களாகவே உள்ளன; அதன் வேலையாட்கள் ஆங்கில அறிவைப் பெற்ற ஒரு மேற்குடி மட்டத்தினரே. அவை ‘கட்டி எழுப்ப’ விரும்புவது தனிப்பட்ட நலன்களும், ‘தமிழர்கள் அனைவரும் வன்முறையாளர்கள் அல்ல’ ‘வன்முறையில் ஈடுபடும் இளைஞர்கள் (எங்களைப் போல) படித்தவர்கள் அல்ல’ என்பதான – பிரச்சினையானவற்றை/பிரச்சினையானவர்களை ஒதுக்க/தவிர்க்க’ விழையும் – ஒரு தப்பித்தல்ப் போக்கினைத் தான். அப்படியாய் வெகுசன வட்டத்துள் தவிர்க்கப்படும் சமூகத்தின் ஒரு சாராரின் அழிவுப் போக்கு– இன்னொருவகையில் கனடிய அதிகாரங்களினால் மறைமுகமாய்க் கட்டமைக்கப்பட்டுள்ள இனத்துவ பாகுபாடுகளுக்கே உதவி புரிந்து, வழிவிடுகின்றன. இள வயதுகளில் சிறைச்சாலைகளில் நிறைந்திருக்கிற, நீதிமன்றங்களை ஏறி இறங்குகிற எமது இளைஞர்களே அதற்குச் சாட்சியாக உள்ளார்கள். போரின் கொடிய கரங்களிலிருந்து தம் பிள்ளைகளைக் காப்பாற்றிக்  கொண்டு வந்தவர்கள், புதிய நிலத்தின் இனவாதப் பொறிகளுக்கு அவர்களை இழக்க வேண்டியிருக்கிறது.

0 0 0 0

எமது சமகாலம் வன்முறையாலும் தனிமையாலும் உருவாகியிருக்கிறது. நாம் விரக்தியால் பின்னப் பட்டிருக்கிறோம். அது போர்ப் புலத்தின் தொடர்ச்சியால், பெயர் புலத்தில் விழுகிற கொலைகளால், கலாசார இடைவெளிகளால் மட்டுமல்ல; நண்பர்களைப் பிரிவதாகவோ, தொடர்பூடகங்களால் ஏற்படுத்தப்படுகிற தாழ்வுச் சிக்கலாகவோ தனிமைப் படுத்தலாகவோ இருக்கலாம். எதையும் ‘வெளியில்’பேச முடியாதபடி நாங்கள் பயிற்றப் பட்டிருக்கிறோம். பேச முனைதல் என்பதே சமூகத்தால் ஏளனமாகப் பார்க்கப்படுகின்ற ஒன்றாகும். வழிவழியான பயிற்றுவிப்புகள், ‘வெளியில்’ இருந்து, எந்த உதவியையும் நாடாதவாறு தனிமைப் படுத்தப்பட்டவர்கள் மீது பயங்கரமானதொரு எதிர்விளைவைக் கொண்டிருக்கின்றன. இதை எந்த ஒரு பாலினத்துள்ளும் (gender) அடக்குவது எமது நோக்கமல்ல. இன்றைய சமூக-பொருளாதார சிக்கல்களுள் பாதிக்கப்பட்டவர்களாக சகலருமே உள்ளார்கள். ஆயினும், புலம்பெயர்ந்த பிறகும், புதிய நிலத்தில் ஓர் இனம் காவுகிற சகல விழுமியங்களையும் காவ வேண்டியவர்களாய் உடனடியாக எதிர்பார்க்கப்படுவது பெண்களிடமிருந்தே தொடங்குகிறது. பொது ஊடகங்களில் விமர்சிக்கப்படும் (அணியும் ஆடைகளிலிருந்து ஒழுக்கம் வரை) உடம்பை முன்னிறுத்திய அனைத்து செயற்பாடுகளையும் உதாரணமாய்க் கூறலாம். தெருவில் திரியும் ஆண்களது  ஒழுக்கம் குறித்து விமர்சனங்கள் அத்தகைய முக்கியத்துவத்துடன் எழுவதில்லை.

தாயகத்திலிருந்து திருமணங்கள் ஊடாக, இங்கு அழைக்கப்படுகிற, தாம் வாழ்ந்த நம்பிக்கைகளிலிருந்து ‘பிடுங்கி வைக்கப்படுகிற நாற்றுகள்’ புதிய இடத்தை தகவமைத்துக் கொள்வதற்கான உதவியை இங்குள்ள நிறுவனங்களோ, குறிப்பாக குடும்பத்தில் ஆண் உறவுகள் செய்ய தவறுகின்றனர். தவறாது, வந்ததும் குழந்தையை மட்டும் சுமக்கத் தந்துவிடுகிற துணைகளோடு, புதிய இடத்தில், தனித்து வைக்கப்படுகிற ‘குடும்பப் பிரச்சினையை எங்கவும் கதைக்கக் கூடாது’ எனக் கட்டளைகள் இடப்பட்டிருக்கிற பெண்ணின் நிலை – சமூகத்தின் பொது நீரோட்டத்தின் ‘வரையறை’களுள் அடங்காதவர்களை ஒத்ததே. தன்னுள் ஒடுங்குதல் எனும் ‘தகர்க்க முடியாது’ தனைச் சூழ்ந்த சுவர்களுக்குள்ளே கூட யாரையுமே அணுகவியலாத் தனிமை பிறழ்வுகளுக்குள் இட்டுச் செல்கிறது. ‘பேச’ யாரும் இல்லாத நிலையிலேயே – எண்ணற்ற கோயில்கள், தேவஸ்தானங்கள் உளநலனுக்கான உத்தரவாதத்துடன் பத்திரிகைகளில் ‘விளம்பரமிட்டு’ அழைக்கிற போதும்; பல பத்திரிகைகள் சமூகத்தின் தூண்களாய் நிமிர்ந்து நிற்கின்ற போதிலும்; 24-மணிநேரமும் தமிழ் வானொலிகள் – ‘தனிமையில் இருக்கிறவர்களை’ நம்பி நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கிற போதும்; பெண்நல(?) உதவி நிறுவனங்கள் உம் அதில் தமிழ் ‘சமூக சேவகிகள், சேவகர்கள் சேவை’யாற்றிக் கொண்டிருக்கின்ற போதும் – ‘பல்க்கனி கம்பிகளை மீறி’ பல அவலங்கள் நிகழ்கின்றன.

0 1

ஓர் புலம்பெயர் சமூகமாக, எம்மிடையே இடம்பெறுகிற கொலைகள், தற்கொலைகள், பாலியல் துஷ்பிரயோகங்கள், இளைஞர் குழு மோதல்கள் – இவற்றின் பின்னணியிலேயே இத் தொகுப்பும் எண்ணம் பெற்றது. சுயமற்றவர்களாய் மற்றவர்களது கருத்துக்களைக் காவ எதிர்பார்க்கப்படுகிற பெண்கள் ஊடாக சமகாலத்தைப் பேசத் தோன்றியது. இக் கவிதைகள் எவ்வளவு தூரம் ஓர் காலத்தைப் பிரதிபலித்தன என்பதல்ல, நாம் இவையால் உந்தப் பட்டிருக்கிறோம். அந்த உந்துதலூடாக இப் படைப்புகள் உங்களிடம் வருகின்றன. இதில் இடம்பெறுகிற ஒவ்வொரு பெண்களும், தம் அன்றாடத் தனிமை, காதல், காமம், ஏக்கம், அச்சம், கனவு, அரசியல் இலட்சியம்சார் அவரவர் உலகங்களைத் தமதான நம்பிக்கைகளுடன் வெளிப்படுத்தியுள்ளார்கள்.

தமது நிலத்தினதும், அந் நிலமிருந்து பெயர்ந்து திரியும் தேசங்களினதும் நிகழ்காலத்தை தமது எல்லைகளுடனும் பாடுகின்றன இவை. கால மாற்றங்கள் வயதைத் தவிர எதையும் அதிகரிக்காத வாழ்விலுங் கூட அத்தகைய தமது இருப்பைப் பகிரலும் அதூடாக ஓர் உரையாடலைத் தொடங்குவதுமே இவற்றினது மைய நோக்கமாகிறது. தாம் ஒலிப்பதை மறுக்கிற சூழலின் மீதும், சுயமரியாதையின்றி அவமதிக்கப்படும் ஆண்-பெண் உறவுச் சிக்கல்களின் மீதும், பேச்சை ஒடுக்கும் குடும்ப நிறுவனங்களின் மீதும் சற்றேனும் இவை தம் விசனங்களைப் பதிவு செய்திருக்கின்றன. இறுக்கமான சமூகக் கட்டமைப்பில் இத்தகைய பகிர்வுகள் மாற்றத்திற்கான சிறு சிறு சலனங்களே எனலாம். அவ்வகையில், பெண்களாகிய அவர்களுக்கும் சமூகத்திற்கும் இடையில், குடும்ப நிறுவனத்திற்கும் அவர்களுக்கும் இடையில், ஆண் உறவுகளுக்கும் அவர்களுக்கும் இடையில், வன்முறைக் குழுக்களுக்கும் அவர்களுக்கும் இடையில், வேரூன்றித் தொடரும் அடக்குமுறையையும் நிலவும் அசமத்துவத்தையும் இவை தொட்டுச் செல்கின்றன.

0 2

தொகுப்புக்கென அனுப்பப்பட்ட கவிதைகளின் பொதுத்தன்மை உறவுகள் சார்ந்ததாகவே இருந்ததில் இருவிதமான சிக்கல்களை எதிர்கொண்டோம். ஒன்று: பெண்களுடையது என்றால் காதல் மற்றும் ‘தனிப்பட்ட’ உணர்ச்சிகள் சார்ந்தவை என்கிற பொதுவான நிலைப்பாடு குறித்தது. மற்றயது, சமகாலத்தில் நாம் வாழும் உலகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கிற ‘முக்கிய’ அரசியல்(!) நிகழ்வுகள் சார்ந்த பதிவுகள் இல்லாமையால் வருகிற போதாமை குறித்தது. இது பெண்களுடைய பாடுபொருள்களது மட்டுப்படுத்தப்பட்ட எல்லைகள் குறித்து ஆண்கள் ஊடாக ஏற்படுத்தப்படும் சிக்கல் உணருதலாயும் இருக்கலாம். (பெண் வாழ்வியலில் தாண்டப்பட முடியாதவையாக ஆண் நலனை முன்நிறுத்தும் குடும்பமும் வாரிசுடமையும் இருக்கின்றன. அவது உடலில் ஓர் அங்கமான கருப்பை மீதிலான அவளது உரிமையையே நிர்ணயிப்பது அவளாய் இல்லை; அதை நிர்ணயிப்பது ஆண் மதபீடங்களதும் அரசாங்கங்களதும் நலன்களாய், வளர்ந்த(?)-வளராத சகல நாடுகளிலும் இவையே பெண்ணை இறுக்குகையில், பெண்களது அரசியல் என வேறு எதைத்தான் அழுத்துதல் முடியும்?)

எனினும், வடஅமெரிக்காவைக் களமாகக் கொண்டிருக்கிற இத் தொகுதியில், அமெரிக்காவில் 2001 செப்ரெம்பர்- உலக வர்த்தக மையம் தாக்கப்பட்டதுக்குப் பின்பான அரசியலில், ஓர் காலகட்டம், மறைமுகமாகவேனும் பேசப்பட்டிருக்க வேண்டும் என்பதும்; ஈழத்தில் மட்டுமல்ல, உலகெங்கிலும் அதன் விளைவுகள் பற்றி இப் பெண்களுடைய எழுத்திலும் பதியப் பட்டிருக்க வேண்டுமென்பதே எமது விருப்பாயிருந்தது. அதுவே தமிழ்க் கவிதைச் சூழலுக்கான வளர்முகமாகவும் தோன்றிற்று. அதனால் ‘தாயகத்திலிருந்து பிரிக்கமுடியாத’ சோகப்பாடல்களை (அதிகம் பாசாங்குடன்) பாடிக் கொண்டிருக்கும் புலம்பெயர் கவிதைகள் இங்கு இடம்பெறவில்லை; மாறாய் இதில் இடம்பெறுகிற, சில நிகழ்வுகள் பதியப்பட்டிருக்கக்கூடிய ‘உனது இனம்’ போன்றன, கவிதைகள் என்பதைவிட ‘கருத்து’க்களாகவே இருக்கலாம்; எனினும், அவற்றுக்கான தேவை கருதியே சேர்க்கப் பட்டிருக்கின்றன. இத் தொகுப்பு ‘கவிதை’களை முன்நிறுத்தி அவற்றின் மகா உன்னதப் பாய்ச்சலை அடையாளங் காட்ட எனத் தொகுக்கப்படவில்லையாயினும், நவீன கவிதையின் சமகாலப் போக்குகளின் அடிப்படையில் அத்தகைய வகைமாதிரிகளை ‘கவிதைகள்’ என ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை.

0 0 0 0

80-களின் பிற்பகுதியில், ஈழத்தில், போராட்ட குணமும் நேர்மையும் நிறைந்த மனுஷிகள், செயற்பாட்டாளர்கள், சமூக பிரக்ஞையுடைய இளைய தலைமுறையினர் வெளிப் பட்டார்கள். அக் காலத்தின் சிறப்பாய், தம்முள் ஒடுங்காது, தமது சமூகத்துடனான தொடர்பைப் பேணின அவர்களது குரல்கள்.

ஒரு காலத்தின் பதிவுகளான அவர்களின் குரலை இனியும் தலைமுறைகள் தாங்கிச் செல்லும் என்கிற நம்பிக்கையோடு, அரசியந்திரத்துடன், ஆயுதந் தாங்கிய எமது சகல (ஆயுத) குழுக்களாலும் ‘விடுதலையின் பெயரால்’ மௌனமாக்கப்பட்டவர்களை தற்கொலை செய்து கொண்டவர்களை மறக்கப்பட்டவர்களை -இயக்க வேறுபாடின்றி, ‘விடுதலை’யை விரும்பிய, அதற்காய்த் தம்மை அர்ப்பணித்த சகல மனிதர்களையும் – இச் சமயத்தில் நினைவு கூருகிறோம். வெளித் தெரிகிற’சில’ பெயர்களை மட்டுமே பதிவு செய்கிற வரலாற்றில், வெளித் தெரியாத, எழுத்தில் பதியப்படாத ஏராளம் தனிமனிதர்களும், அவர்களின் அர்ப்பணிப்பும் சேவையுணர்ச்சியுமே எம் மக்களை நோக்கியிருந்தன; அவர்களைக் காப்பாற்றின. அத்தகைய மனிதரின் பிரதிபலனற்ற இருத்தல்தான் எமது வரலாற்றுக்குச் சிறப்பூட்டின என்பதை நினைவு கூருவோம்.

இத் தொகுப்பை சகல பெண்களும் – தம் குற்ற உணர்ச்சிகளிலும் சுமைகளிலும் இருந்து இறங்கி – அவர்களுக்கான சிறு பரிசாக ஏற்றுக்கொண்டால்; எழுத மறுத்து விரக்தி பூண்டிருக்கிற பெண்கள் கைகளில் இது புத்துணர்ச்சியை ஏற்றும் எனில் – அதுவே போதுமானது. அங்ஙனமாயினும், அவர்களுடைய ”இனிய மாலைக் காட்சியும், இயற்கை ரசிப்பும், எதிர்காலத்தின் வாழ்க்கைப் போக்கைப் பற்றிய கற்பனையும்” அவர்களால் எழுதப் படட்டும். அதற்கான சாத்தியங்கள் கைகூடும்வரை இத் தொகுப்பும் ஒரு காலத்தின் பதிவாக இருக்கட்டும்.

0

மார்கழி 2003-5, குளிர்காலம், ஐரோப்பாவிலிருந்து குடியேறிய ஆக்கிரமிப்பாளர்களால் “கனடா” எனப்படுகிற – பூர்வீகர்களின் – திருடப்பட்ட நிலத்திலிருந்து. (மறுதிருத்தங்களுடன்)

Advertisements
Leave a comment

2 Comments

  1. பெயல்மணக்கும் பொழுது, மை, இசைபிழியப்பட்டவீணை, பெயரிடப்படாத நட்சத்திரங்கள் ஆகியவை பெண்கவிஞர்களின் 2007ற்குப் பின்னரான தொகுப்புகளாவன.

    Reply
  2. நன்றி தர்மினி.
    ஒலிக்காத இளவேனில் 2009 இறுதியில் வெளிவந்தது. அதில் பின்னிணைப்பாக மை மற்றும் பெயல் மணக்கும் பொழுது குறிப்பிடப்பட்டிருந்தது. 2009 இற்குப் பிறகு வெளிவந்த மற்ற இரண்டு தொகுதிகளுமே குறிப்பிடப்படவில்லை.

    நன்றி

    Reply

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: