மாயா ஆஞ்ஜலோ: சில இடையீட்டுக் குறிப்புகள்

மாயாவிடம் அவரது படைப்புகளின் சுயசரிதத் தன்மை குறித்துக் கேட்கப் படுவதுண்டு.  அதற்கு மாயா சொல்கிறார்: இதற்கொரு வரலாறு இருக்கிறது.  முந்நூறு வருடங்கள் அடிமையாக இருக்கிற ஒருவராய் இருந்து, நீங்கள் உங்களுக்கு நிகழும் கொடுமையை/உண்மையை ”இரு வீதி தள்ளி, அந்தப் பெரிய மரத்திற்கு முன்னால்” என்கிற ரீதியில் ‘விபரமாய்’ எழுத முடியாது.  அப்படி விவரித்தீர்களாயின், எஜமானர்களுக்கு உங்களது இடத்தைக் காட்டிக் கொடுக்கிறீர்கள்.  அதனாற்தான் அடிமைகள் பாடினார்கள் (மாயா பாடுகிறார்) ”…நதிக்கரைக்கு அருகாமையில், நிகழ்ந்தது அது.”

அடிமைகள் உண்மைகளைப் பாடினார்கள், அவை குறித்த நேரடி விவரங்களை அல்ல.  உண்மை, மறைமுகமாக சொல்லப்படலாம், ஆனால் அது சொல்லப்படுகிறது என்பதே முக்கியம்.  (மாயா தொடர்கிறார்)  உண்மையில், எல்லோரும், சுயசரித நூல்களையே எழுதுகிறார்கள்; மேலும், கலையே அடிப்படையில், யாருடையவோ தன்னிலை விளக்கம்தான்; அது ரோஷீனி (Rossini) ஆகட்டும் மொசாட் (Mozart) ஆகட்டும், எல்லோரது வெளிப்பாடும் தன்னிலை விளக்கங்களே (confessions).
‘மனிதராய் இருப்பதென்பது இப்படித்தான் உணரக் கூடியதாய் இருக்கிறது
இப்படித்தான் நாங்கள் காலையில் எழுந்து நேசிக்கப்படாமையை உணர்வது
இப்படித்தான் நாம் ஆப்பிள்களைப் பார்ப்பது
இப்படித்தான் நாம் வாழ்வது
– இவை எல்லாம் தன்னிலை விளக்கங்கள்; blue singer-ஓ, gospel பாடகரோ எல்லோரதும் அதுதான்.  என்னைப் பொறுத்தளவில், Frederick Douglass (1818 – 1895) ஒரு அசலான சுயசரிதரே (autobiographer).  தன் ஒருமையில், பன்மையின் பிரச்சினையைக் கூறினார் அவர்; அங்கே, ‘நான்’ என்பதன் அர்த்தம், ‘நாம்’ தான்.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

இப்படி மாயா தன்னிலை விளக்கிறபோது, உழைக்கும் கறுப்பு மக்களின் சொலவடைகளாலும் பிரார்த்தனைப் பாடல்களாலும் பின்னப்பட்டிருக்கின்ற அவரது மொழி உறைகிறது; அவர், தான் பின்தொடருகிற அறிவுரை எனக் குறிப்பிடுகிற, தெற்காபிரிக்கத் தத்துவவாதியொருவருடைய \\Don’t pick them up, don’t lay them down// என்பது (அத்தலைப்பில் கவிதையொன்றும் எழுதியிருக்கிறார்) முதல், அதேபோல, தன் முன்னோர்களில் தேசஅளவில் புகழ்பெற்ற முதற் கறுப்பரான Paul Lawrence Dunbar (1872-1906) ஆல் எழுதப்பட்ட  Sympathy கவிதையில் வருகிற வரிகளையே தனது முதல் சுயவரலாற்று நாவலுக்குத் தலைப்பாய் எடுத்தாண்டிருந்தது என (I know why the caged bird sings), அவரோடு, அவரது பண்பாட்டின்  மனிதர்களின் இருத்தல்க் குரல்கள் வந்தபடியே இருக்கின்றன.  ஒன்றுக்கு மேற்பட்ட மொழிப் பரிச்சயங் காரணமாக மாயாவின் எழுத்துகளிற் பிற மொழிச் சொற்களும் இயல்பாகவே பங்கு வகிக்கின்றன.
வாய்வழிப் பாடல்களாய், சந்தத்தைக் கொண்டு எழுதியவை மொழிமாற்றலின்போது சந்த இழப்புக்குள்ளாகின்றன.
அதேபோல spirit, spirituality போன்ற சொற்களுக்கு வேர்ச்சொல்லாக ஆன்மீகம் எனக் குறிப்பிடுகிறபோது அதைப் பக்திரீதியாகப் பார்க்கப்படுவதற்கான அபாயம் இருக்கிறது.  ஆனால் இங்கே அர்த்தப்படுகிற ஆன்மீகஉயிர்ப்பு / ஆன்மீகஇயல்புநிலை (spirit/spirituality) – ஒருவருடைய உயிர்ப்பை ஒரு அமானுஸ்ய நிலையை குறித்ததான சொல்லேயன்றி, தனியே ஆன்மீகம் அல்ல.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மாயாவுடனான உரையாடல்களில் உறுத்தியது மதப் பின்னணியின் பாதிப்பாற்பட்ட அவரது குறிப்பிட்ட கருத்துநிலைகள்.  அந்த -உடல் சார்ந்த அதன் குற்றங்கள் சார்ந்த- அவரது பார்வை, மதரீதியான ‘பாவம்’ ‘பாவ’ மன்னிப்பு இவற்றுடன் நெருக்கமானது.  முக்கியமாக, பாலியல் துஷ்பிரயோகம் போன்றதொரு சிக்கலான விடயத்தை வைத்து உரையாடுகிறபோது, இவர் ”ஒருவர் ஒருமுறை பாலியல் தாக்குதலுக்குள்ளானபின் மீளவும் தூய்மையாய் உணர்தல் கடினம்” என்று குறிப்பிடுகிறார்.  பாலியல் வன்முறைக்குள்ளானவர்கள் சமூகத்தாலும் உடல் பற்றி காலகாலமாக போதித்துவருகின்ற செய்திகளாலும் (அதன் ‘கற்பு’ போன்ற விடயங்கள்) உடனடியாக தமது உடலின் தவறுதான் யாரோ ஒருவர் அப்படியான வன்முறையை தம்மீது ஏவக் காரணமென நினைப்பார்கள்.  ”அது அழுக்கானது” அல்லது ”தூய்மையை இழந்தது” என்பது (கிறிஸ்தவ) மதக் கண்ணோட்டமாகும்.  மாயா: தனது சிறுவத்தில், தான், சமூகத்தின், தனது மதத்தின் கண்ணோட்டங்களினடிப்படையில் பேசாமல் இருந்தது பற்றி சிந்திக்காது, சமகாலத்திலிருக்கிற ஒரு சிறுமியும் ”தூய்மையாக” உணர்தல் கடினம் என்பது அவரது மதத்துடன் இணைந்த சிந்தனையிலிருந்து வருவதுதான்.
‘அழுக்கு/ தூய்மை’ போன்ற இந்த சொற்கள் (”கற்பிழந்தது” போன்ற) இன்னொரு அர்த்தத்தைத் தருகிற ஆபத்திருக்கிறது.  சுயவிருப்பமற்று துஷ்பிரயோகம் செய்யப்படுகிற உடல் ”அசுத்தமாவதில்லை.”  தனது உடம்பின் மீதான தனது அதிகாரம் மீறி, ஒருவர் அத்துமீறிய, அதை எதிர்க்கும் ‘பலம்’ அச் சமயம் தனக்கு மறுக்கப்பட்ட கோபம்/ஆழமான வடுவே அவ்விடம் இருக்கும்.  எளிய உதாரணமாய், ஒருவர் யுத்தத்தில்  காயப்படுகிறபோதோ, மிகமோசமான சிறைச்சாலை வதைகளின்போதோ, அவர்மீது அந்த வன்முறைகள் தந்த வலிகள் மனஉளைச்சல்கள்தான் உண்டே தவிர அதனால் அவர் உடம்பு அசுத்தமாவதில்லை.  மேற்குறிப்பிட்ட வன்முறைகள் போலவே, கொஞ்சமும் நியாயமற்று, ஒருவர்மீது பாலியல் தாக்குதல்  என்கிற வன்முறை இழைக்கப்படுகிறது என்பதை இப்படித்தான் புரிந்துகொள்ளலாம்.  வேறு இல்லை.  உடலுறவை ‘பாவம்’ என மொழிகிற மதம், அப் பாவத்தைச் செய்கிற உடலை ‘அழுக்கு’ என்கிறது. அப்படியான, மாயா ஆஞ்ஜலோவின் கிறிஸ்தவ(மத)ப் பின்னணியில், அவர் காபரே நடனராக இருந்ததையும் ஒரு ‘பாவமாக’ ‘ஒத்துக்கொண்டு’, பின் அதை உணர்ந்து ‘திருந்தி’, அதற்காய் அவர் (பாவ) மன்னிப்பும் பெற்றுக் கொண்டிருக்கலாம். ஆனால், ‘பாவங்கள்’ என உடல் சார்ந்த செயல்களை மதிப்பிடுகிறபோது, அது புனிதம் சார்ந்ததாக, அப் புனிதம் கெடுதல், (பெண்ணிற்கு) ‘கற்பு’ இழத்தலாக உருமாறுகிறது.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மேலும், பிரபல கறுப்பெழுத்தாளரான பெல் கூக்ஸ்சும் மாயாவும், மனிதர்கள் புரிகிற குற்றங்களுக்கு, அதை இழைத்த மனிதர்களைப் பொறுப்பாக்கிக்கொண்டே, அவர்களைப் ‘புரிந்துகொள்ளுதல்’ பற்றி உரையாடுகிறார்கள்; அதே சமயத்தில், அக் குற்றவாளிகளை அப்படித் தூண்டிய, அவர்கள் அப்படி ஆகக் காரணமான பண்பாட்டையும் மேலோட்டமாகத் தொடுகிறார்கள்.  ஆனால் விளைகிற அநீதிகளுக்கு, குற்றங்களின் விளைநிலமான சமூகத்தையும் அதை இயக்கும் அதிகாரிகளையும் பொறுப்பாக்குதல் என்பது அம் மனிதர்களைப் புரிந்துகொள்ள + சமூகத்தைப் புரிந்துகொள்ள பிரதானமானதாக இருக்க, அதை விடுத்து, இருவரும் அக் குறிப்பிட்ட மனிதனைப் பொறுப்பாக்குதல் பற்றியே பேசுகிறார்கள்.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
ஒருபாலுறவாளர்கள் உள்ளிட்ட சமூகத்தின் கீழ்நிலையிலுள்ள குழுமங்கள் பற்றின லிபரலான எண்ணங்களைக் கொண்டிருக்கிறபோதும், மாயா ஆஞ்ஜலோவும் பெல் கூக்ஸ் போன்றோரும் ‘ஏற்றுக் கொண்டு’ சரணடைந்துள்ள மதம், தேசியம் இவை இரண்டும் ஆழமான புரிதல்களிலிருந்து இவர்களை விலத்தி வைத்திருக்கும் மட்டுப்படுத்தல்கள் எனலாம்.

அவரது தலைமுறையில், மாயா கொண்டிருக்கிற கீழ்நிலையிலுள்ளவர்கள்மீதான அக்கறைகள் அவரை ஒரு குறிப்பிடத்தகுந்த மனுஷியாக வழிமொழிகின்றன.

_____________
மொ-ர்.

2005 அற்றம் சஞ்சிகை. 2வது இதழ்

Advertisements
Leave a comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: