பறவை உகிர்தன் பற்றுதலின் தடம் – ஒலிக்காத இளவேனிற் குறிப்புகள்

  • தீபன் சிவபாலன்

01.

அடபோடா, வாழ்வெமக்கு அபாயங்களின் மீதொரு வெடிகுண்டு என்று எழுதப்பட்டது  என்றார் கருணாகரன் கவிதை ஒன்றில். காலமும் களங்களும் உருண்டுபோகவும் அபாயங்களும் வெடிகுண்டுமாகவே எஞ்சுகிறது வாழ்க்கை. நொடிதோறும் நாணேற்றி தினந்தோறும் நமை வீழ்த்தும் வாழ்கையின் தீரா அம்புகளுக்கு மத்தியிலும் இலக்கியத்தின் நிழல் சிறு அமைதியை தன்னும் தரும்  என்ற மாறாத நம்பிக்கையோடு இங்கே இருக்கின்ற அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள்!  குலசேகர ஆழ்வார்,  “வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால் மாளாத காதல் நோயாளன்”  என்றதைப்போல வலி மிகுந்த வாழ்க்கையும் இலக்கியத்தின் மீதே மாறாத காதல் கொண்டு வந்து சேர்க்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை . அதுவே நேற்றில் உறைந்த கனவை, இன்றின் மீதான கொண்டாட்டத்தை,   நாளை நலமாகும் என்ற  நம்பிக்கையை சிறுகச் சிறுக  கற்றுத்தருகின்றதாய் உணர்கிறேன்.

மேலும், ஒலிக்காத இளவேனில் தொகுப்பு மீதான என்னுடைய குறிப்புகளை முன்வைப்பதற்கான வாய்ப்பினையிட்டு மிகிழ்ச்சி கலந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு நான் இங்கே அபிப்பிராயங்களை உருவாக்கும் தொழில்முறையான விமர்சனம்  எதையும் முன்வைக்க விரும்பவில்லை. இன்றிருக்கக் கூடிய இலக்கியச் சூழலில் – அபிப்பிராயங்கள் எப்படி நிலையற்ற திரவத் தன்மையானவையோ – அப்படியே   அபிப்பிராயங்களை உருவாக்கும் வேலையும் அர்த்தமற்றது என்பது என்னுடைய எளிமையான புரிதல். மேலும் ஏதோ ஒரு அரசியலின் பேரால் நிகழும் பட்டியலுருவாக்கமும் குழுநிலையுமாய் தொடர்கின்ற இன்றைய இலக்கிய போக்கில் இருக்க கூடிய அவநம்பிக்கையே ஒரு வாசகனை இலக்கியத்தில் இருந்து வெளியேற்றும் நாச வேலையையும் செய்வதாக உணர்கிறேன்.      ஒரு படைப்பு தனக்கான அரசியலை அபிப்பிராயத்தை தனக்குண்டான வெளியில் அதுவே உருவாக்கும். அதற்கான அடையாளத்தை, கவனத்தை முன்வைப்பதுதான் அதற்கு செய்யக்கூடிய நேர்மையான மரியாதையாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆகவே இந்த தொகுப்பின் மீதான என்னுடைய அவதானங்களை பதிவு செய்து கொள்ளும் ஒரு சந்தர்ப்பமாகவே இதனை கருதுகிறேன்.

02.

ஈழத்து அரசியல் கவிதைகளின்  இயங்குதளத்தில் பெண்களின் காத்திரமான பங்களிப்பு குறித்து இங்கே புதிதாக நான் எதையும் கூறத் தேவை இல்லை என்றே நினைக்கிறேன். அன்றைய சொல்லாத செய்திகளில் இருந்து இன்றைய ஒலிக்காத இளவேனில் வரையான தொடர்ச்சி குறித்தும் அந்த தொடர்ச்சில் இயங்கிய – இயங்கிவருகின்ற புலம்சார் மற்றும் புலம் பெயர் கவிதாயினிகள் குறித்ததுதாமாய்  பலரும் ஆரோக்கியமான வகையில் பதிவு செய்திருப்பதாகவே கருதுகிறேன். அந்த வகையில் என்னிடம் குறிப்பிட்டுச் சொல்ல எந்த தேர்வு முறையும் பட்டியலும் இல்லை, மேலும் ஒரு காலத்தை பதிவு செய்தவர்கள் குறித்ததும் அந்தக் காலத்தை பதிவு செய்ததில் அவர்களுக்கிருந்த உள்ளார்ந்த மற்றும் புறவயமான நெருக்கடிகள் தாண்டியும் அதை எந்த முறையில் அவர்கள் இயன்றவரை சரியாக  செய்தார்கள் என்பது குறித்துமே நான் கவனப்படுத்த விரும்புகிறேன்.  குடும்பத்தின், சமூகத்தின், பேரினவாததத்தின் எல்லாத் தடைகளையும் மீறி அவர்கள் வீதிக்கு வந்தபோது அதுகாறும் கவிதைக்கு இருந்த மரபுசார் மூலகங்களையும் அழித்தார்கள் என்பதே உண்மை.  பேராசிரியர் சிவத்தம்பி கூறினார் ஒரு பெண் போராளி எவ்விதம் நிலவுக்கு இருந்த காதல்வயமான மரபுசார் படிமத்தை மாற்றினாள் என்று. அதுபோலவே கப்டன் வானதி எழுதாத என் கவிதையை எழுதுங்களேன் என்று சொல்லி மரணிக்க ஏறத்தாள பத்தாண்டுகளின் பின் ஆனையிறவு படைத்தளம் கைப்பற்றப்பட   நாதினி எழுதினார் எழுதாத உன் கவிதை எழுதப்பட்டு விட்டது என்று. இதன் மூலம் அவர்கள் கவிதை என்பது குறித்தான மரபான சொல்லாடலுக்கு  வெளியேயும் அதன் செயல் குறித்த வடிவமாகவே அதைப் புரிந்து கொண்டார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.

இதன் மறுதளத்தில் ஈழத்து வாழ்க்கையை கவிதை எப்படி படம் பிடித்தது என்று நோக்கும் போது செல்வி கோடை என்ற கவிதையில் பின் வருமாறு எழுதினார்

// வீதியில் கிடந்த கல்லை

கால் தட்டிச் செல்ல

அதன் கூரிய நுனி

குருதியின் சுவையறியும்

ஒதுங்கிப் போன கல்

ஏளனமாய் இனிக்கும்

இதயத்தில் நினைவுகள் விரிந்து

சர்ரென்று வலியெடுக்கும்

வாடைக்காற்றின் சிலிர்ப்பும்

வரப்போரத்தில் நெடிதுயர்ந்த

கூழாமரத்தின் பசுமையும்

நிறைந்த குளத்தின் மதகினூடு

திமிறிப் பாயும் நீரினழகுமாய்

ஒதுங்கிப்போன இனிய பொழுதுகள்

ஊமையாய் மனதுள் அழுத்தும்.

–செல்வி (கோடை-சொல்லாத சேதிகள்) //

காலம் கால் தட்டிப்போன கல்லாய் சிரிக்கிறது எல்லா தவறுகள் மீதும் – மனது கல் தட்டிப்போன காலாய் வலிக்கிறது எல்லா ஆற்றாமைகள் மீதும். ஒரு கோடையின் அழகுணர்ச்சியை, தருணங்கள் மீதான தீராக்காதலை, வாழ்வு குறித்தான பிடிமானத்தை  அதன் அரசியல் சாத்தியங்களோடும் தவிப்போடும்  கவிதையாக்கியவர் செல்வி.

வானதி எழுதாத என் கவிதையை எழுதுங்களேன் என்று எழுதிய அதே தொண்ணூறுகளில்தான் வானதி அங்கம் வகித்த அமைப்பால்   செல்வியும் அவர் எழுதிய கவிதைகளுடன் கடத்தப்பட்டு காணாமல்  போனார் என்பதாகவே இருந்தது  ஈழத்து யதார்த்த சூழல். இங்கே அரசியல் சரி பிழைகளை விவாதிப்பதல்ல என்னுடைய நோக்கம் ஈழத்து தமிழ் சூழலில் என்றைக்கும் இருக்கக் கூடிய இறுக்கமான மரபான கட்டுமானங்களை மீறி எப்படி இவர்கள் தங்களுடையை இருப்பை கனவை தேவையை புரிந்து கொள்வதற்கான ஊடகமாக கவிதையினை மாற்றியமைத்தார்கள் என்பதையே இங்கே குறிப்பிட விரும்புகிறேன். இதுவே ஒரு அடையாளமாக அங்கீகாரமாக கவிதையை அதன் மரபான கூறுகளுடன் முன்வைப்பதனூடாக தமிழ் சூழலில் ஒரு பொதுத் தன்மையை உருவாக்க விரும்பும் இலக்கியப் பிதாமக்களுக்க்கு ஒரு போதும் உவப்பாக இருக்க முடியாது என்பதிலும் வியப்படைய ஏதுமில்லைத்தான். ஈழத்து அரசியல் கவிதைகள் வெற்றுக் கூச்சல் என்று எந்த தளமும் களமும் வாழ்வுமுறையும்  அறியாது மேதமையின் பிரகாரம் கருத்துரைக்கும் தமிழகத்து போதாமைகளுக்கு சொல்வதற்கு இருக்கிறது, கவிதைக்கான இலக்கணங்களை எங்கள் வாழ்வும் வாழ்வு நிமித்தங்களும் மாற்றியது என்பதை, உங்கள் அளவுகோல்களின் பிரகாரம் அதற்கொரு உறை கூட போட முடியாது என்பதை; அதன் முடிவுறாத் தொடர்ச்சியாய் நாம் இருப்போம் அங்கீகரிப்புகள் நிராகரிப்புகள் குறித்த எந்தச் சலனமுமற்று.

03.

ஒரு தொகுப்புக்கான பொது மூலகங்களை, அரசியலை, வடிவத்தை அதன் தார்மீக தேவையே முன்னெடுக்கிறது. அந்த வகையில் பெரும் கவனமும் புதிய பாச்சலுமாய் நகர்கின்ற பெண்ணிய கோட்பாட்டின் ஒரு அடையாளப்படுத்தபட்ட அல்லது ஆவணப்படுத்தப்பட்ட வடிவமாகவே ஒலிக்காத இளவேனில் இருக்கிறது. இதன் பொதுத்தன்மை என்பதை பெண் எழுத்தாகவும் அரசியலாக ஒரு பன்முகப்பட்ட பெண்ணிய கருத்தியலாகவும் வடிவம் கவிதையாகவும் புரிந்து கொள்ளச் சந்தர்ப்பம் இருக்கிறது.   வேறெந்தத் தொகுப்பிலும் இல்லாத வகையில் இந்த தொகுப்பில் மிகவும் நீளமான தொகுப்பாளர் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. அவை யதார்த்தத்தை கட்டியம் கூறுகின்றதாயும் ஒரு பெண்ணை சிநேகமுறச் செய்வதாயும் அவள் மீதான எல்லா வன்முறையையையும் சீற்றம் கொண்டு எதிர்ப்பதாயும் அவளுக்குண்டான குடும்ப சமூக தொடர்பாடல் சூழல் குறித்த கரிசனையாயும் பரந்து பட்டு விரியும் பெண்ணியக் கோட்பாட்டின் நிகழ்கால குறுக்குவெட்டு என்பதாயுமே இருக்கிறது.

ஏறத்தாள பத்தாண்டுகளின் பரிமாணத்தை எழுதிச் சென்றிருக்கும் தொகுப்பாளர் குறிப்புகளில் என்னவிதமான நிகழ்காலத்தில் நம் வாழ்வு இருக்கிறது என்பது குறித்த காலப்பதிவின் சித்திரம் கிடைக்கிறது – அதுவே கேள்விகளை முன்வைப்பதினூடாக ஒரு ஆரோக்கியமான தனிமனித, சமூக விமர்சனத்திற்கான தொடக்கப்புள்ளியாகவும் அமைகிறது என்பதையும் குறித்துக்கொள்ள விரும்புகிறேன். நேற்றய யுத்தம், குடும்பவன்முறை, குழுநிலை தெருச்சண்டை, மோசடிக்கும்பல் கலாச்சாரம் இன்னும் பலவுமாய் தொடர்கின்ற    நெருக்கடி நிறைந்த இன்றைய புலம்சார் மற்றும்  புலம்பெயர் சூழல் எவ்விதம் பெண்களை பாதிக்கிறது என்பது குறித்ததான கரிசனை ஆரோக்கியமான மாற்றைத்தை வேண்டி நிற்கிறது. இங்கே குறிப்பிட்டு எவரையும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தும் நோக்கில் அல்லாது எல்லோருக்கும் பொதுவான நன்மை வேண்டியே எழுதப்பட்டிருக்கிறது என்பது சிறப்பான அம்சமாகும். இதனை எந்தப் பாலினுள்ளும் அடக்கிவிட நாங்கள் விரும்பவில்லை என்பதினூடாக தேவை தீர்வே அன்றித் குற்றம் சுமத்தலோ தண்டனை வழங்கலோ அல்ல என்கின்ற புரிதலூடாக  ஒரு சமூக பிரச்னைக்கு என்றைக்கும் அதன் எல்லா அங்கத்தவரையும் உள்ளடக்கிய நடமுறைசார் அணுகுமுறை ஒன்றை முன்வைப்பது   சிறப்பானது. மேலும் இது குறித்த களஅடிப்படையிலான ஆய்வுமுறையிலான கருத்துகளும் இங்கே முன்வைக்கப்படலாம் அவைகள் எல்லாமும் சேர்ந்த ஒரு நடைமுறையிலான பன்முக வெளிப்பாட்டு வெளியை பெண்களுக்கு  தோற்றுவிப்பதற்காக எடுத்து வைக்கப்படுகின்ற கனமான அதிவாரமாகவே இதை கருத இருக்கிறது. அவர்கள் கூறுவதைப் போன்ற இயற்கையை, புலனை, நிறத்தை காலத்தை கொண்டாடும் கவிதைகளை நெருக்கடியின்றி எழுதும் நாள் வரட்டும். நம்பிக்கையோடிருப்போம்  நாமும் ஒரு துணை இருப்போம்.

04.

கவிதையின்  நுட்பமான கண்ணிகள் குறித்து நிறையவே பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருகிறது. – அந்தக் கண்ணி இன்னொரு கண்ணியை திறக்கிறது அதிலிருந்து இன்னொன்று என்று ஓர்  சுடர் ஏற்றும் சங்கிலித் தொடர் உருவாகிறது. அவையே  ஒரு கருவியாக, கருத்தாக, அரசியல் வெளிப்பாடாக, அழகியல் கூறாக இன்ன பிறவாக அல்லது  இவை எல்லாமுமாக  கவிதையின் நோக்கத்திற்கு பயன்படக் கூடியவை என்பதும் முக்கியமானது. இதுவே வாசிப்பு நிலையில் ஒத்த தளத்தில் ஒரே அதிர்வெண்ணில் இயங்கும்  குரல்களை அறிமுகம் செய்கிறது.

அந்த வகையில் துர்க்காவின் இருப்பு முனைப்பு குறித்த

// நான் என்பதாக

விட்டுச் செல்ல விரும்புகிறேன்

எனக்கான என் சுவடுகளை //  என்கின்ற கவிதை வரிகள் சிவரமணியின்

//நான் வாழ்ந்தேன்

வாழ்நாளெல்லாம் நானாக

இருள் நிறைந்த

பயங்கரங்களின் ஊடாக//

என்ற கவிதையிடம் அழைத்துச் செல்கிறது. உண்மையில் இவைகள் சொல்ல வருவது எத்தனை நெருக்கடிகளிலும் நம்முடைய வாழ்க்கை வாழப்பட்டாக வேண்டும் அதன் சுவடுகளுடன் என்பதைத்தான். வன்னியில் போர் துரத்த உயிர் கொண்டோடும் ஒரு சனத்தின் குரலாக “கசப்பு நிரம்பியதேனும் வாழ்வதின் ஒரு கணம் மேலானது” என்று கருணாகரன் எழுதினார். ஆனால் இத்தனைக்கு மத்தியிலும்  பிடிமானம் சிதைக்கும் – இருப்பை அழிக்கும் -ஒரு  கொடிய பாம்பாய் தொடர்ந்து  தீண்டிக்கொண்டே இருக்கிறது சமூகம் அவர்களை. இந்தச் சூழலின் ஒரு கூறாய் நம்மிடமும் இருக்கிறது அவர்களுக்கு வழங்கப்பட்ட விஷத்தின் கறை.

பெண்எழுத்தை ஒரு திட்டவட்டமான வடிவத்தினுள் அடக்கிவிட முடியாத போதும் பெரும்பாலான கவிதைகளின் அடிநாதமாக இருப்பது புறக்கணிக்கப் படமுடியாத்  தன்மைமையும் அவர்களின் எதிர்பார்ப்பு குறித்த வெளிப்பாடுகளும் தான்.  நிவேதா  புகையெனப் படரும் பிணங்களின் வாசம் என்ற கவிதையில் எழுதப்படாத கவிதைக்குள் உறைந்து கிடக்கும் என் பிணங்கள்  என்பதனூடாக அந்த உணர்வுகள் ஒரு புரிதலுக்கான வெளியை கோரி நிற்கிறது. மேலும் பெண்களால் உடலை முன்வைத்து எழுதப்படும் கவிதைகள் வெறும் அதிர்ச்சிப்  பிரதியல்ல அவை  ஒரு நிராகரிக்க முடியாத உணர்வைச் சொல்லவே தம் படைப்புகளினூடாக உடலைத் தேர்ந்தெடுக்கின்றன என்பதையும் இந்தக் கவிதையூடாகக் காணலாம்.

கவிதை தன்னை எழுத எல்லா பிற பாடுபொருட்களையும் போலவே அவசியம் கருதியே உடலையும் முன்வைக்கிறது. இதில் பெண்ணுடல்  கொண்டாட்டத்தின் கூறாகவும்  வன்முறையில் கசங்கிய பொருளாகவும்  ஆணுடல்  அதிகாரத்தின் வாள் முனையாகவும் வன்முறைப்பொருள் ஆகவும் முன்வைக்கப்படுகையில்  –  அதன் உள்ளார்ந்த யதார்த்தம் கருதி அதை ஏற்றுக்கொள்வதே நியாயம்.

// சிங்களச் சகோதரிகளே!

உங்கள் யோனிகளுக்கு

இப்போது தேவையில்லை.// என்ற  கோணேஸ்வரிகள் கவிதையையும்

// நஞ்சருந்தியோ சுருக்கிட்டோ

தற்கொலைக்கு முனையும் பெண்கள்

முன் எச்சரிக்கையுடன் உள்ளாடைகளை

மறக்காமல் அணிந்துக்கொள்கின்றனர் // என்றும்

// பிணவறைக் காப்பாளருக்கு

பொன் முட்டைகளைப் பரிசளிக்கும்

சிறப்பு விருந்தாளியான

நடிகையின் சில்லிட்ட சதை // என்றதுமான

மாலதி மைத்ரியின் தீப்பற்றிஎரியும் நிர்வாணம் கவிதை வரிகளிலும் ஊடாக உருவாக்கப்படுவது யதார்த்தம் அன்றி வேறில்லை.

மறுபுறத்தில் இவையே ஒரு அதிர்ச்சிப் பிரதியாக தனிப்பட்ட கவனமோ அடையாளமோ  கோருகின்ற நோக்கத்தில் கவிதையில்  உடல் முன் வைக்கப்படும் போது – அவை ஒருவித துருத்தலுடன் தம்முடைய நோக்கத்தில் இருந்து நீர்த்துக் கொள்கின்றன என்றே நினைக்கிறேன்.

இந்தத் தொகுப்பில் இருக்கின்ற பெரும்பாலான கவிதைகள் குறித்து நிறைய பேசவே விரும்புகிறேன் இருப்பினும் நேரம் கருதி இன்னொரு சந்தர்ப்பத்தில் அவற்றை பதிவு செய்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். மேலும், இறுதி யுத்தத்தின் உடனடிப் பின்னரான இந்தத் தொகுப்பில் அந்த யுத்தத்தின் கோரத்தை , பேரினவாதம் பிணங்களை  புணர்ந்த சோகத்தை – உன்னதங்கள் சொந்த மக்களுக்கு கொளுத்தும் வெய்யிலையும்  கூடாரங்களையுமே பரிசளித்த கதையை அதன் பரிமாணங்களோடு கவிதையாய் பதிவு செய்யும் சந்தர்ப்பம் நேரங்கருதி விடுபட்டு போயிருக்கலாம். அவை இனிவரும் காலத்தில் பதிவும் செய்யப்படலாம்.  -இத்தனைக்கும் பின் நானிருப்பது நீதி சாகாது என்று சொல்லிச் சிரிக்க என்று மெலிஞ்சி முத்தன் எழுதியதை போல.

அழகான மலர் பெண்  இல்லை

அவள்

உத்திரப்  பிரதேசத்தில் ஒரு முறையும்

போராட்டத்தின் கதறலாயும்

போரிடலாயும்

அமெரிக்காவில் மூர்க்கம் பிடித்த

கறுப்பு பெண்ணாய்

லெஸ்பியனாய்

ஒரு போதும் பிறப்பதில்லை -என்கிறார் பிரதீபா

ஒரு பறவை அதன் அழகின் நிமித்தமும் மென்மை வண்ணம் நடத்தை குறித்ததுமான ஒரு படிமச்  சித்திரத்தை பெறுகிறது. அதுவே அதற்கான பொது அடையாளமும் ஆகி விடுகிறது இருப்பினும் கூடு அமைக்க உணவு சமைக்க சுவடு பதிக்க என்று அதன் பிரயோக தளத்தில் அதிகமும் பயன்படுவது அதன் உகிர் கொண்ட பாதங்களே. அதுபோலவே இந்தத் தொகுப்பும் தன்னுடைய பொது அடையாளங்களுக்கு வெளியேயும் அதன் தேவை கருதி  காலத்தின் ஈரமண்ணில் அழியாத தடம் பதித்து செல்லும் பறவை உகிராகவே எனக்கு தோன்றுகிறது.

நன்றி வணக்கம்

——

Thanks: தீபன் சிவபாலன்

Advertisements
Leave a comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: