ஒலிக்காத இளவேனில் — (நறுமுகை தேவி)

  •  நறுமுகை தேவி

என் திறவுகோல்

#################

”என்னுடைய திறவுகோல்

தனது வீட்டைத் தொலைத்து விட்டது

நான் நடக்கிறேன் வீடு வீடாக

எதுவும் பொருந்துவதில்லை

நான் கண்டடைந்தேன்

பூட்டுச் சாவிக்காரனை

என் திறவுகோல் பொருந்துகிறது

அவனது கல்லறைக்கு”

—–ரோஸே அவுஸ்லாண்ட்டர்

இந்தக்கவிதை ஒருவரின் இருப்பின் இல்லாமையை அல்லது இருப்பின் நசிவை,நசுக்கலை வெகு சூசகமாகச் சொல்லிச்செல்கிறது.இது வாழ்விடம் பறிக்கப்பட்டு புகலிடம் எதிர்நோக்கி அலையும் அனைவருக்கும் பொருத்தமான வரிகளே…

ஒரு பறவை  ஒரு மரக்கிளையில் இருந்து இன்னொரு மரக்கிளைக்கு ஒரே ஒரு வினாடியில் பறந்து அமர்வது என்பது சாதாரண நிகழ்வு..அதே நிகழ்வு ஒரு பறவை இரை தேடச் சென்று திரும்பும் தருணத்தில் தான் சிறுகச் சிறுகச் சேகரித்துக் கட்டிக்கொண்ட கூட்டையும் அதில் விட்டுச்சென்ற தன் குஞ்சுப்பறவைகளையும் காணாமல் தத்தளிக்கும் அவலம் போலத் தான் ஒரு எதிர்பாராத வினாடியில் சொந்த தேசத்தில் அனாதைகளாக்கப்படுவதும் அலைந்து திரிந்து பிரிதோர் தேசத்தில் அடைக்கலம் புகுவதும்..

ஆனால் மனித மனத்தின் செயல்பாடு என்பது உறவுகளாலும் செயல்பாடுகளாலும் பின்னப்பட்டது.அது அவ்வளவு எளிதாக எந்த சோக நிகழ்வுகளில் இருந்தும் மீள்வதில்லை..

இலங்கை எனப்படும் சிங்களத் தீவில் ஏதோ இன்று நேற்று தமிழர்கள் அடைக்கலம் புகுந்து விடவில்லை..அது தொன்றுதொட்டு பல்வழிப்பயணமாகத் தொடரும் உறவு…யாழ்ப்பாணம் அருகில் ஆனைக்கோட்டைப் பகுதியில் நடந்த அகழ்வாராய்சியில் கிடைக்கப்பட்ட 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு இறந்தமனிதனின் கல்லறையில் கிடைக்கப்பெற்ற  தகட்டில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்ததில் இருந்தே சிங்களத்துக்கும் தமிழகத்துக்குமான நீண்ட உறவு தெரியவருகிறது.. அவ்வப்போது மெல்லியதாகப் புகைந்து கொண்டிருந்த தமிழ்-சிங்கள இனவாதம் சில நூற்றாண்டுகளாகத்தான் தீப்பிடித்து எரியத்துவங்கியிருக்கிறது…இதன் பின்னணியில் இன்று ஒரு இனமே கண்மூடித்தனமாக துடைத்தெறியப்பட்டுக் கொண்டிருக்கிறது…

பொதுவாக ,ஒரு பிரச்சனையின் உள்நின்று பேசுவதற்கும்,பிரச்சனையின் வெளிநின்று அவதானித்தலில் இருந்து பேசுவதற்கும் வேறுபாடு உள்ளது..அதே போலத்தான் போர்மண்ணிலிருப்பவர்கள் பேசுவதற்கும், அங்கிருந்து தொலைவில் இருந்து பேசுவதற்கும்  நிரம்ப வேறுபாடு இருக்கிறது.மகாகவிஞர்கள் என்றும் மகாபடைப்பாளிகள் என்றும் யாரும் பிறப்பதில்லை..அவர்களின் வாழ்விடம்,வாழ்வியல் சூழல்,தாங்கள் உழலும் பிரச்சனைகள்,அவதானிப்புகள் இவையே யாரையும் படைப்பாளிகள் ஆக்குகின்றன..எழுத்துகளில் வடியும் அழகுணர்ச்சியை விட அதில் உள்ள உண்மையும், வலியுமே பலநேரங்களில் அவ்வெழுத்தைத் உயரத் தூக்கி விடுகின்றன..ஈழத்தில் சந்தித்த சில எழுத்தாளர்களிடம் இத்தகைய உரையாடலின் போது எங்கள் வலியை வேதனையை இழப்பை,அவலத்தைப் பதிவு செய்யவே விரும்புகிறோம்..இதற்கு மொழி போதும்..உங்கள் நவீனம்,பின்நவீனம்,அழகியல் எதுவும் எங்களுக்கு வேண்டாம் என்று குமுறியதாக அங்கு சென்று வந்த நண்பர் ஒருவர் பதிவு செய்தார்..

அதற்குமேல் ஒன்றும் இல்லை

###########################

”கவிதை என்பது

எல்லோரும் புறப்பட்ட பின்

அவர்களின் காலடியில் ஆளற்ற காடு

சடசடக்கையில்

பழைய அடுப்பின் அரை இருளில்

உரையாடலுக்கு மேல் ஒன்றும் இல்லை

கவிதை

நாம் விரும்பிய வார்த்தைகளுக்கு மேல்

ஒன்றும் இல்லை

காலத்திற்கேற்ப இடம்மாறி

இனி ஒரு வெறும் கறை

சொல்ல முடியாத ஒரு நம்பிக்கை மட்டுமே

என்றாகிவிட்ட வார்த்தைகள்

ஆனந்தத்திற்கு மேல்

அரை இருளில் உரையாடலுக்கு மேல்

புறப்பட்டுச் சென்று

ஏற்கனவே மெளனமாகிவிட்ட

எல்லாவற்றிற்கும் மேல்

வேறு எதுவும் இல்லை கவிதை “

என்று கவிதையின் உருவாகு தளத்தைப் பற்றிப் பதிகிறார் எலிசியோ டியெகோ.

பிரச்சனைகளின் பின்னணியில் யார் இருந்த போதும் அதிகம் பாதிப்பிற்குள்ளாவது பெண்களே..உடமைகள்,உறவுகள் இழப்பு ,உயிர் இழப்பு இருபாலருக்கும் பொதுவானதாக இருந்த போதும் பெண்களிடம் சூறையாடப்படுவதற்கு அவர்கள் உடல் இருக்கிறது.. அது  வேண்டுமளவிற்கு சிதைக்கப்படுகிறது..சின்னாபின்னப்படுத்தப்படுகிறது..பெண்களின் உடல் மீதுதான் பல்வேறு விதமான சமூகத் தாக்குதல்களும்,கட்டமைப்புகளும்,அரசியல்களும் கட்டியெழுப்பப்படுகின்றன…உயிருடன் இருக்கும் போது புணர்ந்து சீரழிப்பதற்கும், இந்த மாதிரியான போர்ச்சூழலில் அகப்படும் பெண்களில் உடல்களைத் தகாத பாலியல் உறவில் ஈடுபடுத்தி ரசிப்பது,நிர்வாணப்படுத்தி துன்புறுத்துவது, இறக்கும் முன் அல்லது இறந்த பின்னர் ஒரு மரப்பாச்சி பொம்மையைப்போல் அங்கங்களை பிய்த்துப் பிய்த்து எறிவதற்குமான வக்கிரத்துக்கான வடிகாலாய் இன்று பெண்ணுடல் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

இவைகளைப் புறம் தள்ளி  சமூகச் சிந்தனையோடு களம்காணும் பெண்களின் ஒழுக்கம் மீதான கடும் விமர்சனத்தாக்குதல் தான் உச்சபட்சமாக இன்று உலகெங்கும் கையாளப்படுகிறது..இது மிக இலேசான மனம் படைத்தவர்களைத் தற்கொலையையை நோக்கி உந்திச் செல்கிறது…

எனவே,பெண்கள் இத்தகைய நிகழ்வுகளை, தங்களைச்சுற்றி எழுப்பப்படும் வலைப்பின்னல்களைச் சிக்கல் எடுக்க அவகாசமில்லாமல் கிழித்துக் கொண்டு பீறிட்டு வெளிவருவதன் தேவை இன்று சமுகத்தில் அதிகரித்திருக்கிறது..அதன் ஒரு உடைப்பே எழுத்து என்கிற வகை..

பொதுவாக,பெண்களுக்கான எழுத்தும்,வாசிப்பும் மறுக்கப்படுகிற சமூகமாகத்தான் இன்றைய நிலை இருக்கிறது..

இலங்கையைப்பொறுத்தவரைக்கும் இன்னமும் பெண்களே குடும்பத்தை முன்னடத்திச் செல்கிறார்கள்..இங்கு பெண்களுக்குச் சொத்துரிமையும் இருப்பதால் ஆண்கள் மனைவியின் வீட்டோடு போய் இருப்பது ஒரு வழக்கமாக இருக்கிறது..இச்சூழலில் பெண்களுக்குக் குடும்பங்களில் கொஞ்சம் எழுத்துச்சுதந்திரம் இருக்க வாய்ப்பிருக்கிறது என்றே நாம் நம்புவோம்… ஆனால் யுத்தபூமியில் சம்பந்தப்பட்ட எதிரிகள் அவர்களுக்கு நிச்சயம் சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்றிருக்க மாட்டார்கள்.கடுமையான அடக்குமுறையையும்,நெருக்கடியையும் அவர்கள் சந்தித்திருப்பார்கள்…தண்டனைகளுக்குள்ளாகியிருப்பார்கள்.

அதையும் மீறித்தான் பல்வேறு பதிவுகளும் அவர்கள் எழுத்தில் வெளிவந்துகொண்டேயிருக்கிறது.தாங்கள் வாழ்ந்த இருப்பிடம்,தங்களது குடும்பம்,நண்பர்கள்,குழந்தைகள் என்று கண்முன்னே அனைவரையும் பறிகொடுத்து விட்டு,பலரைக் காணாமல் போனவர்கள் பட்டியலில் இணைத்து விட்டு,அரும்பும் பருவத்தைப் பத்திரப்படுத்த வழியின்றி பயத்தில் உறைந்து,தன் காதலைத்துறந்து அல்லது இழந்து என்று பெண்கள் சார்ந்த உலகம் பலவாகத் தன் எழுதும் பொருட்பரப்பை விஸ்தாரீத்துக்கொண்டே போகிறது..அப்படி படைப்பாளிகளைப் பற்றிச் சொல்லத்துவங்கும் போதே

செல்வியையும்,சிவரமணியையும் தவிர்த்து விட்டு இலங்கை சார்ந்த படைப்பாளிகளையோ,அவர்களது படைப்புகளையோ பற்றிப் பேசிச்செல்வது என்பது எளிதன்று..முறையும் அன்று..

”என்னிடம்

ஒரு துண்டுப்பிரசுரத்தைப் போல

நம்பிக்கையும் முடிவும் சொல்லத்தக்க

வார்த்தைகள் இல்லை

இரவு;

இரவினால் அதிகாரமிடப்பட்ட பகல்;

நாளைக் காலையில்

சூரியன் உதிக்குமா என்பதில் கூட

சந்தேகம் கொண்டுள்ள என்னிடம்

கனவுகள் தம் அர்த்தத்தை இழந்தவை தான்.

இந்தச்சமூகத்தின் தொப்புள் கொடிக்கு

துப்பாக்கி நீட்டப்படும் போது

ஒரு மெல்லிய பூ நுனியில்

உக்காரக்கூடிய

வண்ணத்துப் பூச்சியின் கனவு

எனக்குச் சம்பந்தமற்ற

ஒரு சம்பவிப்பு மட்டுமே.

நான் மனிதனாய் வாழும் முயற்சியில்

பூக்களை மரத்துடன் விட்டுவிட விரும்புகிறேன்.

எனக்கு

பகலால் உருவாக்கப்பட்ட அழகிய இரவு

கனவாய் உள்ளது.”

இது சிவரமணியின் கவிதை..

மிகச்சாதாரண மனதின் விருப்பங்கள் தான் இவை எனினும்,ஒரு யுத்தபூமியில் மிக அரிதானதாகப்போய் விட்ட சோகத்தை உணர்கிறோம்..எதையும் ரசிக்கமுடியாத படிக்கு போரின் அந்தகம் எல்லாக்கண்களை மட்டுமல்ல அனைத்துப் புலன்களையும் ஒடுங்கச் செய்கிற சூழலை நம்மால் உணரமுடிகிறது..யுத்த பூமியின் வாதைகளை,அக்கணத்தின் மனதின் பெருவெடிப்புகளைப் பற்றி ஒரு வசதியான, அமைதியான அறையில் அமர்ந்து கொண்டு நாம் விவரித்துவிட இயலாது.

நிராகரிக்கப்பட முடியாதவள் நான்” என்று பதிவிட்டுப் போன சிவரமணியை ஒருபோதும்  நம்மால் நிச்சயமாக நிராகரித்து விட இயலாது தான்.

”இந்தமுடிவுக்காய் என்னை மன்னித்து விடுங்கள்

கைக்கெட்டிய  வரை

எனது அடையாளங்கள்

யாவற்றையும் அழித்து விட்டேன்

நீங்கள் எனக்குச் செய்யக்கூடிய உதவி

எதுவும் எஞ்சியிருந்தால்

அவற்றையும் அழித்து விடுவதே”

இப்படி எழுதி வைத்து விட்டுத் தற்கொலை செய்து கொண்ட சிவரமணி நிச்சயம் கோழையல்லள். அவளது வாழ்நிலையின் கனம்..தூண்டப்பட்டது தற்கொலையின் எல்லை நோக்கி..இது ஒரு இரண்டகமனநிலையின் ஊசலாட்டமே..எப்படியும் விடுதலை அடைவதே நோக்கம் என்று பாடிய பெண்ணை ஒரு எல்லையில் தள்ளியது அங்கிருந்த பதட்டச் சூழலே..

செல்வி காணாமல் போனவர்கள் பட்டியலில் இருப்பவள்.அவளுக்கு கொடுக்கப்பட்டப் பரிசை வாங்குவதற்குக் கூட வரவியலாத /வரவிடாத தூரத்துக்குப்போய்விட்டவள்..

 ”இராமனே இராவணனாய்”

“நான் மிகவும் பலவீனப்பட்டுப்போயுள்ளேன்.

என்னை யாரும் கேள்வி கேட்டுத்

தொந்தரவு செய்யாதீர்கள்

நூலிழையில் தொங்கிக் கொண்டிருக்கிறது எனது இதயம்

எந்த நேரமும்

விழுந்து வெடித்து விடக்கூடும்

இந்த வீடே

எனக்கான அசோகவனமாயுள்ளது

ஆனால்

சிறைப்பிடித்தது இராவணனல்ல.இராமனே தான்

இராமனே இராவணனாய்

தனது அரசிருக்கையில் முதுகுப்புறமாய்

முகமூடிகள் மாற்றிக் கொண்டதை

பார்க்க நேர்ந்த கணங்கள்..

இதயம் ஒருமுறை அதிர்ந்து நின்றது

இந்தச் சீதையைச் சிறைமீள வருவது யார்?

அசோகவனங்கள்

இன்னும்

எத்தனை காலத்திற்கு?

இக்கவிதை செல்வியின் மிகக் கடும் துயரின் நெடியை இன்றுவரை வீசிக்கொண்டிருக்கிறது.அவள் வாழ்ந்த அந்தக் கணத்தின் கனமும்,காந்தலும் தான் இக்கவிதை பறைசாற்றுகிறது.அதில் அச்சுறுத்தலுக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கப்படுகிறோம் நாம்..இங்கு இராமன் என்பதும்,இராவணன் என்பதும் வெவ்வேறு குறியீடுகள்..இக்கவிதையிலிருந்து நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய பிசிறு படிந்த கயிறு நம்மை எதிர்பாராத ஒரு இடத்துக்கு இட்டுச் செல்ல வாய்ப்புகளிருக்கிறது.

இதோ இந்த “ஒலிக்காத இளவேனில்” நிறையச் செய்திகளை  நம் செவிகளுக்கு ஒலிக்கவிட்டுக் கொண்டிருக்கிறது..காலங்காலமாக ஆண்களின் எழுத்துக்களை அதன் வழிமுறைகளையே பெண்படைப்பாளிகளும் பயன்படுத்துகிறார்கள் என்கிற பதத்தை அடித்து நொறுக்கும் விதமாகத்தான் இன்றையநிலையில் பெண்களின் எழுத்துக்களும் பாடுபொருட்களும் மிகவலிமையானதாக,மிக மூர்க்கமானதாகப் பதியப்படுகிறது..ஆண்களின் எழுத்துக்களின் திறப்பு முன்வாசல் எனக்கொள்ளப்படுமேயாயின் பெண்களின் எழுத்துக்களூக்கு முன் வாசலும்,கொல்லைப்புறவாசலும் உண்டென நாம் கொண்டாடலாம்..அதாவது,ஆண்களைவிட பெண்கள் சந்திக்கும் புற உலகின் கிளைகளும்,அக உலகின் கிளைகளும் பலவாகப் கிளைத்திருக்கின்றன..

     “இருண்ட காலங்களில்

கவிதைகள் இருக்குமா?

இருக்கும்

இருண்டகாலமாக இருக்கும்”

_பெர்டோல்ட் பிரேக்ட்

ஆம், இந்த மாதிரியான அவலங்களின் பதிவுகள் எதிர்வரும் சந்ததியினரின் புரிதலுக்காய்,தெரிதலுக்காய் எழுதப்படும் நாட்குறிப்புகள் எனக்கூடக் கொள்ளலாம் நாம்..ஒரு மாபெரும் வரலாற்றுப்பிழையின் பின்னணியில் விளைந்த வீரத்தின் துளிகள் இவை..காதலையும்,காமத்தையும் மட்டுமல்ல வாழ்ந்த மண்ணுக்காய்,வீழ்ந்த மண்ணுக்காய் எழுத்துக்களத்தில்  எழுத்தாணியெடுத்துப்போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

மழை தட்டி எழுப்பும் மண்வாசத்தைப்போல தம்சொந்த மண்ணின் வாசத்தைப் புகலிடத்திலும் தேடிக்கொண்டிருக்கிறார்கள்..கலவையாய் இருக்கிறது இவர்களின் மொழி..தங்களை அடக்கி வைத்திருந்தவர்களைப்பார்த்து விரல் நீட்டி எச்சரிக்கிறார்கள்..உரத்துக் கேள்வி கேட்கிறார்கள்….ரசிக்கிறார்கள்…சிரிக்கிறார்கள்…சமயங்களில் கண்மூடி மெளனமாகிறார்கள்…தங்கள் வீட்டுத் தோட்டத்தில் உலவுகிறார்கள்..முற்றத்தில் எலுமிச்சையின் மணம் உணர்ந்து கயிற்றுக்கட்டிலில் புரண்டு படுக்கிறார்கள் இவையனைத்துமே கவிதைகளின் வழி சாத்தியமாகிறது இவர்களுக்கு..இவர்களை உறைந்து போனவர்கள் என்று இலகுவாய்த் தாண்டிவிட எத்தனித்தால் ஆபத்துதான் எதிரிகளுக்கு..அப்படியே உருகி உள்ளிழுத்துக்கொள்ளும் ஆபத்தானவர்கள்..எழுத்தால் அறைகிறார்கள்..தமக்கு என்ன வேண்டும்..என்ன வேண்டாம் என்பதை ஆணித்தரமாய் ஒலிக்கிறார்கள்.

“ஒரு அழுக்கேறிய அடையாளவில்லையைப் போலே

அந்தந்த நிமிடங்களின் அடையாளங்களைப்

பெற்றுக்கொள்ளும் அவள்

ஆக்கிரமிக்கப்பட்ட பஞ்சமி நிலமாக்கப்படுகிறாள்”

ஆனால்,நிலைமை இப்போது தலைகீழாக மாறத்துவங்கியிருக்கிறது..தன் அத்துணை அடையாளங்களையும் உதறி எறிந்து தான் தனிமனுசி என்று  அறுதியிட்டுக்கூறுகிறாள்..

இதோ கவிஞர்.துர்க்காவின் வரிகள்..

அவரின் மகள்

இவரின் மனைவி

உங்களுடைய தாய்

என்பதல்லாமல்

நான் என்பதாகவே

விட்டுச்செல்ல விரும்புகிறேன்

எனக்கான சுவடுகளை

*******************

வனமெங்கும் சுற்றித்திரிந்த இயற்கைவாசிகளைக் கூட்டுக்குள் அடைத்து வைக்கும் கொடூரம் இன்று அரசியலில் சரியானதாக மாற்றப்பட்டிருக்கும் நிலைமையில் அவர்களுக்கு பெரிதாய் என்னவென்று புரியவைத்துவிட முடியும்.

எல்லோருமே தங்கள் எல்லாப்பிரச்சனைகளையும்வாய்விட்டுச் சொல்லாம்,குறிப்பேடுகளில் எழுதலாம்,வலிகளைக் கவிதையாக்கலாம்,கதைகளாக்கலாம்.இவையெல்லாமே இழந்த எல்லாவற்றையும் மீட்டுத்தருமா?என்ற கடும் கேள்வி எழுகிறது.கூட்டைச்சுமந்து திரியும் நத்தையென மனிதமனமும் மிகுவிருப்பத்திற்குரிய எதையேனும் சுமந்து திரிகிறது.அது காதல்,பாசம்,தாய்மை,வீரம் எதுவாக இருக்கலாம்.

ஆனால், எல்லா மனிதமனமும் தன்னுடைய குடும்பத்தை நேசிப்பது போலவே அல்லது தன்னையே நேசிப்பது போலவே தன் தாய்மண்ணை நேசிக்கிறார்கள்.தாய்நாட்டுப்பற்றில் வெறியில் நடத்தப்படும் தீவிரவாதங்கள் சிலவும் அத்தகையதே.போர்கள் சிதைத்துப்போவது தனிமனிதனின் நுட்பமான உணர்வுகளை..இவை பலரையும் மனச்சிதைவுக்கும்,மனப்பிறழ்வுக்கும் உள்ளாக்குகிறது.

தலைப்பை ஒலிக்காத இளவேனில் என்று கொடுத்துவிட்டாலும் கூட பல்வேறுவிதமான கருத்துகளும் இடையறாது தொகுப்பு முழுக்க ஒலித்துக்கொண்டேயிருக்கிறது.

கவிஞர்.தமிழினியின்

“என் தாயுமானவளுக்கு…” என்ற கவிதை

சிந்தனைகளின் அழுத்தத்தில்-கேள்விகளின்

குடைதலில்

தலைக்குள் குருதி

றிகெட்டு தடை தகர்த்து குமுறிப்பாய

நரம்புகள் பின்னிப் பிணைந்து

இறுகித் தெறித்து

வெடித்துச் சிதையக் கூடும்

நானும் சிதையக் கூடும் சீக்கிரம் வந்து விடு

“ஒற்றைக் குயிலின் அழுகையின் நீட்சியில்

எழுகிறது என் சோகம்

பொழியும் மழையின் ஒவ்வொரு துளியிலும்

வழிகிறது என் கண்ணீர்”

…………………………………………………………………

இப்படியே தொடரும் நெடுங்கவிதை அது. அக் கவிதையின் உள்ளே பிரிவின் துயர் தாங்கா வெம்மை நம்மையும் சுடுகிறது.

கவிஞர்.ஜெபாவின்

”திணிக்கப்பட்ட காலை.

திணிக்கப்பட்ட எழுத்து.

திணிக்கப்பட்ட ரசனை.

திணிக்கப்பட்ட குறி.”

******************************

இவரது இன்னொரு கவிதை”வெளிகளில் தோற்கும் பிணங்கள்”

பிணங்கள்

பெண் பிணங்கள்

சோகங்கள் அப்பிய முகங்களுடன்

திடல்கள், திண்ணைகள்

வீட்டின் மூலைகள்,வெளிகள்,

எங்கும் பெண் இரத்தவாடைகள்.

மரணவெளியில் மறைக்கப்பட்டு

வாழ்விக்கப்படும் பெண்கள் நாங்கள்

ஆண்களுக்காகவே பிறப்பெடுத்தது போல்

காமக்கண்களுக்கு விருந்தாகி

கவர்ச்சிகள் காட்ட நிர்பந்திக்கப்படும்

பெண் பிணங்கள் தானே நாங்கள்

எங்களிடம் இருப்பவற்றை வாரி எடுத்து

மொத்த நிர்வாணமாக்கி

இஷ்டத்துக்குப் புணரப்பட்டபின்

மாசுபட்டவள் என்ற பிரேரணையுடன்

தூக்கி வீசப்படும் பிணங்கள்

ஒரு தடவையே தோற்றோம் என எண்ணி

ஒவ்வொரு தடவையும் தோற்றே போனோம்

ஆனாலும் வாழ்கிறோம்

வாழும் வெளியில் பெண்களாக…

*******************

பெண்களின் எல்லா விசயங்களுமே யாரோ ஒருவரால் திணிக்கப்பட்டதாகவே இருக்கிறது. அவளது வாழ்க்கை முழுவதும் அவள் இதை எதிர்கொள்ள வேண்டியது.இதிலிருந்து தப்பிக்க நினைக்கும் பெண்களின் ஒரு வாசற்கதவு எழுத்து என்பதாக இருக்கிறது.அதன் வழியே அவர்கள் சுதந்திரக்காற்றை சுவாசிக்க நினைக்கிறார்கள்.உபயோகித்து வீசப்படும் பொருட்களாகப் பெண்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள்..சமீபமாக கடும் இழப்புகளைப் பொருட்படுத்தாது அந்தக் கருத்தாக்கத்தை உடைக்க  முற்படுகிறார்கள்

கவிஞர்.அனாரின்”அந்த இருட்டறைகள்’ கவிதையில்

…………………………..

…………………………………

”நீயும் நானும்

திறப்புகளை வீசிவிட்டு

வெளியே வருவோம்

கொஞ்சம் வாழ்வதற்கு

பூட்டியே கிடக்கட்டும்

அந்த இருட்டறைகள்”

என்று ஒரு கட்டுடைப்பை மெல்லிதாய் ஆழமாய்ச்  சொல்லிவிட்டுச்செல்கிறார்.

கவிஞர்.நிவேதா இப்படிச் சொல்கிறார்

“உங்கள் தன்னகங்காரத்திற்கு

அடி விழுமோவெனப் பயந்து..

இல்லாத விம்பங்களை சோடித்து..

ஆன்மா கதறக்கதற

என் கனவுகளைக் குழி தோண்டிப் புதைத்தீர்கள்

உங்கள் பாழாய்ப் போன பயங்களுக்கு

என்னைப் பலியாக்கினீர்கள்.

******************************************

*****************************************

எனக்குமென்று ஒருநாள் வரும்.

பெளர்ணமி நிலவொளியில்…

தன்னை மரங்களின் சலசலப்பினூடு

முற்றாத எலுமிச்சைகளின்

இனிய மணத்தினை நுகர்ந்தபடி..

திறந்த ஓலைக் கொட்டிலுக்குள்..

சாக்குக் கட்டிலின் மீது

நீட்டி நிமிர்ந்து உறங்குவேன் நான்

நீங்கள் மட்டுமல்ல…

வேறெவருமே என்னை ஏனென்று கேட்க முடியாதபடி”

இந்தக்கவிதையைப் படித்து இருவேறு உணர்வுகளுக்குள்ளானேன்.ஒரு சாதாரண மனவிருப்பம் நிறைவேற எவ்வளவு பெரிய குரல் எழுப்ப வேண்டியிருக்கிறது?மேலும் இப்படி “விட்டேத்தியான” அனுபவிப்புமுறைமை என்பது ஆண்களுக்கானது என்பதாகத்தான் பொதுப்புத்தியில் பதியப்பட்டிருக்கிறது இது உணர்த்தியும்,உடைத்தும் விட்டுப் போகிறது.

கவிஞர்.பிரதீபாவின்

‘அழகான மலர் போன்ற பெண்ணை

எதுவும் பாதிப்பதில்லை

உண்மை;அழகான மலர்’

பெண் இல்லை’

என்று தொடங்கிய கவிதையில் இருந்து  ’உனது இனம் அரசியல்.ஆண்.மொழி’என்ற அவரின் மற்ற கவிதைகளும்  சாட்டையைக் கையில் எடித்துச் சுழற்றுவனவாகவே இருக்கின்றன.தோலுறியவேண்டியவர்களுக்கு உரிந்தால் போதும்.

கவிஞர்.கற்பகம் யசோதர வின் ’புதைகுழி’ கவிதை யுத்தபூமியைக் கண்முன்னே விரிப்பதோடுமட்டுமின்றி மிக மூர்க்கமாக ஒரு இனஅழிப்பு நடைபெற்ற போதும் கண்டும் காணாமல் இருந்த அல்லது எல்லோரும் செத்தபிறகு இறுதியஞ்சலிக்கு வருகிற மற்ற எல்லா தேசத்தின் அமைப்புகளையும் சாடுகிறது..(குறிப்பாக ஐ.நா.)

’யுத்தம் என்ன செய்தது

யுத்தம் என்ன தந்தது

“அந்த” இராணுவ மென்னை வன்புணர்ந்தது

எனது இராணுவம் உனது தகப்பனை

கண்ணுக்கு முன்னால் கொன்று போடது

தனக்கு முன்னால் மண்டையில் போட்டதால்

எனது அழகிய தீபன் வலிப்பு வந்து

மூளை குழம்பி,குழம்பிய மூளையைத் திருத்து,

ஒரு ட்ரான்சிஸ்டர் ரேடியோவைத் திருத்துவது போல்

யுத்தம் பழகிய பிறழ்வுகளைத் திருத்தி

உடல் இயந்திரத்தை இடையிடையே ஸ்தம்பிக்காது

ஓடச்செய்-

அவள்/நான் தலையிலடித்தடி அழுகிறேன்/அழுகிறாள்

புதைகுழியை ஐ.நா. திறந்து திறந்து மூடுகிறது

விஜி!ஐ.நா.என்ன செய்கிறது

விஜி:திறந்து திறந்து மூடுகிறது

___________________________________

____________________________________

இப்படிச் செவிட்டில் அறைகிற மொழியைக் கொண்டிருக்கிறார்கள்..நம் பெண்கள்.

”பெண்கள் ஆணின் மொழியைத்தான் கொண்டிருக்கிறார்கள்..அவர்களின் குரல் கீச்சொலிகளால் ஆனது..வெற்றுப் புலம்பல்கள்” என்றெல்லாம் சொல்லி பெண்களின் படைப்புகள் மீது வேண்டுமென்றே கருணையற்ற விமர்சனங்கள் செய்யும் ஆண்கள் சிலர் இப்படியான தொகுப்புகளை படித்தல் அவசியமாகிறது.

இப்படிச்சொல்லிக்கொண்டே போகலாம்.எல்லாக்கவிஞர்களின் கவிதைகளையும் எடுத்தாண்டுதான் இங்கே நிறைவு செய்ய இயலும்..எனினும் அது சாத்தியமில்லை என்பதால் சிலரை மட்டும் குறிப்பிட்டிருக்கிறேன்.கடைசியாக அலி சர்தார் ஜாப்ரியின் கவிதைத் துணை கொண்டு இக் கட்டுரையை முடிக்கலாம் என்று நினைக்கிறேன்.

ரத்தம்

######

இந்த ரத்தத்தைக் கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்

இந்த ரத்தம்

ஒரு முத்தத்தைப் போல

வெம்மையானது

ஒரு ரோஜாவைப் போல

சிவப்பானது

அது பிறந்த குழந்தைகளின்

புன்னகை

வெகுகாலம் பேசி ஓய்ந்த

உதடுகளின் ஆசிர்வாதங்கள்

பாதித் திறந்த கண்களில் தீட்டிய மை

மென்மையான கைகளில்

வரைந்த மருதாணி

ருபாப் பாடகனின் பாடல்

கவிஞனின் அறைகூவல்

மாறாக் காதலின் உறுதிமொழி

இந்த ரத்தம் ஒரு மதமறுப்பாளன் இல்லை

மதத் துவேஷியும் இல்லை

இஸ்லாமியனும் அல்ல

அது வேதங்களின்

கீதையின் இசை

புனித நூலின் லயம்

வாழ்க்கைப் புத்தகத்தின் முதலெழுத்து அது

ஆசையின் முதல் பாடல் அது

அது வேதாகமத்தின் முலம்

தோரவினுடையதும்

தோத்திரப்பாடல்களுடையதுமான ஆன்மா அது

நீறு பூத்த இந்த நெருப்பு

வாளின் தாகத்தைத் தணிக்காது

இந்த ரத்தத்தைக் கொண்டு என்ன செய்யப்போகிறீர்கள்

இந்த ரத்தம்

சிவந்த வெம்மையான

இளமை ததும்பும் இந்த ரத்தம்

நிலத்தில் சொட்டும் போது

அது பூமியின் கருவறையை

எரித்துவிடும்

பின் ஒரு போதும் வானத்தினின்று

ஆசிர்வாதங்கள்

நம்மை வந்து அடையாமல் போகும்

எந்த விதையும் முளைக்காமல் போகும்

எந்த  மொட்டும் புன்னகைக்காது

எந்தப் பூவும் மணம் வீசாது

இந்த ரத்தம் உதடுகளின் நறுமணம்

கண்களினொளி

நாணத்தால் சிவந்த கன்னம்

இதயத்தின் பூரிப்பு

இது ப்ரான் மலையின் சூரியன்

சினாய் மற்றும் துர்மலைகளின் கம்பீரம்

சத்தியத்தின் தீப்பொறி

எரிந்து கொண்டிருக்கும் இதயத்தின்

தெற்ற முடியாத வலி

உண்மையின் ஒளிவீச்சு

ஒளியின் வெளிப்பாடு

இந்த ரத்தம்

என்னுடையது

உங்களுடையது

நம் எல்லாருடையதும்..

கோடை முடியும் ஒரு நாளில் வசந்தம் தொடங்க வாய்ப்பிருக்கிறது..அத்தகைய வசந்தம் அவ்வளவு அருகில் இல்லை என்பதும் அல்லது வசந்தத்திற்கான வாய்ப்பே இல்லை என்பதும் பட்டவர்த்தனமாகத் தெரிகின்ற வேளையிலும் நம்பிக்கை சார்ந்து முள்வேலிகளுக்குள் அடைபட்டுக் கிடக்கும் நம் மக்களின் அவலத்தை இன்னும் அழுத்தமாகவும்,ஆணித்தரமாகவும்,உரக்கவும் பாடவேண்டியிருக்கிறது.

இக்கணத்தில் ஒன்று சொல்லிக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.இனக்கலவரத்தையும்,இன அழிப்பையும் ,போர் பூமியையும்,பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமைகளையும் உள்ளது உள்ள படிச் சொல்லிச் செல்லும் நாம் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும்,காலங்காலமாய்ச் சமூகத்தைச் செல்லரித்துக் கொண்டிருக்கும் சாதிக் கொடுமைகளைப் பற்றிப் பேச வேண்டியது மிக முக்கியக் கடமையாகிறது..இந்த சாதிகளின் உட்பூசல்கள் பல்வேறு விதமான பிரச்சனைகளுக்கும் காரணமாகிறது.இன்னும் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் மலையகத் தமிழர்கள் சாதியக் கொடுமைகளால் கட்டுண்டு கிடக்கிறார்கள்.அவர்களுக்கான விடுதையையும் இங்கு நாம் பேச வேண்டியிருக்கிறது.

அது அம்மக்களின் மீட்சிக்கான வழியை திறந்துவிடும் பட்சத்தில் நாமும் பிரம்மாக்களாகக் கூடலாம்.முள்வேலியில் முகம் பதித்து பொட்டலச் சோற்றுக்காய் கையேந்தவா நாம் யானை கட்டிப் போரடித்த பரம்பரையில் வந்தோம்?அல்லது வந்ததாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம்?

மாதவிலக்கின் போது உதிரம் வடியும் உறுப்புகளை மறைக்க ஒட்டுத்துணிக்காய் கண்டவனை எதிர்பார்த்திருப்பதோ நம் மறத் தமிழச்சிகள்? கவிதைகள் பாடுவதோடு நின்று விடுவதில் அர்த்தமில்லை..சிங்களவரோடு கூடி நின்று களவாணிகளாகக் கயமைத்தனம் புரிந்த இந்திய அரசின் நடுமண்டையில் ”நறுக்”கென்று கொட்டி கேள்விகள் கேட்பதும் அவசியமாகிறது..பிரச்சனைக்குரிய இருதரப்பையும் கலந்தாலோசிக்காமல் சிங்களவரோடு போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய அரசு இலங்கைக்கு அனுப்பி வைத்த “அமைதிப்படை” அழிவுக்கான படையாக மாறிய கொடுமை நீட்சி இன்றும் தொடர்கிறது.

………………………………………………………………………………………………………………………………………………………………………….

……………………………………………………………………….கொடிய மிருகங்களின் தோலை உரிக்கப் பாடுவோம் தோழிகளே!

கொடுமைகள் முடியட்டும்.

இப்படியான ஒரு தொகுப்பு இக்காலகட்டத்தின் மிகமுக்கியத்தேவையாகிறது.இத்தொகுப்பில் இடம் பெற்ற படைப்புகளின் படைப்பாளிகளுக்கும்,இதைத் தொகுத்த தான்யா,பிரதீபா கனகா-தில்லைநாதன் ஆகியோருக்கும்,வெளிக்கொணர்ந்த வடலி பதிப்பகத்திற்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வோம்…வாழ்த்துகள் தோழர்களே..!

தோழமையுடன்,

                          நறுமுகை தேவி

20எப்,அண்ணாநகர்

புது சித்தாபுதூர்

கோவை-44

அலைபேசி;9500892364

Advertisements
Leave a comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: