ஒலிக்காத இளவேனில்- விமரிசனம் (திலகபாமா)

  • திலகபாமா

ஈழ மற்றும் புலம் பெயர் சூழலிலிருந்து வந்திருக்கின்ற பல பெண் கவிஞர்களின் கவிதைகளை தொகுத்தளித்திருக்கின்ற தொகுப்பு இது. இத்தொகுப்பு கையில் கிடைத்தவுடன் உடனடியாக விமரிசனம் எழுதி அனுப்புங்களேன் என்றார்கள். அவர்களதுகோரிக்கையில் நியாயம் இருந்த போதிலும் , ஒரு வாரத்திற்குள் எழுதுகின்ற எனது விமரிசனத்திற்கும் நியாயம் இல்லாதது போலவே தோன்றுகின்றது. காரணம் இத் தொகுப்பின் கவிதைகள், இது பற்றித் தான் இதன் போக்கு இதுதான்  கவிதைகளின் உள்ளடக்கம் , உருவம், பாடுபொருள் இவை இவைதான் தான் என வகைப்படுத்திட முடியாத படிக்கு இக்கவிதைகள் எல்லா திசையெங்கும் திசை அல்லாத வெளியெங்கும் வரையறைகளற்றும், சிமிழிக்குள் அடைபடும் வகையற்றும் பறந்து திரிகின்றது. பெண்கள் எழுதுவதெல்லாம் பெண்கள் பிரச்சனைகள் என்று வாசிப்பது எவ்வளவு மொட்டையான வாசிப்போ அதுபோலவே இது வெறும் ஈழப் பிரச்சனைகளுக்கான கவிதை என்றோ அதையும் பெண்கள் எழுதியிருப்பதால் அவர்களுக்கானது என்றோ புறம் தள்ள முடியாது.போர் நடக்கின்ற எல்லாத் தேசத்துக்குமான கவிதைகள். அகதிகளாய் வாழ நேர்கின்ற எல்லாருக்குமான அவநம்பிக்கைகள், போராட்டங்கள், வேர் தொலைத்து அலைவுறும் தலைமுறைகளின் பேராவல் எல்லாம் இத்தொகுப்பு நெடுகிலும் சுழன்று வருகின்றது.

இத்தொகுப்பை ஆத்மார்த்தமாக ஒரே மூச்சில் வாசித்து விடவும் முடியவில்லை. காரணம் கவிதையின் கனங்கள்,புதிய தடமேறும் மொழிகள் ஒரு சில கவிதைகளின் வாசிப்பில் நிறைவுறும் மனது தன்னை காலி பண்ணிக் கொண்டு வாசிக்க இன்னும் சில காலம் அவகாசம் தேவைப்படும் என நிதானிக்கின்றது

என்னைப் பொறுத்தவரை எல்லா உண்மைகளுமே கவிதையாகுவதில்லை அல்லது படைப்பாகுவதில்லை. ஆனால் உண்மைகள் இல்லாத எதுவும் கவிதை/படைப்பாகுவதுமில்லை.இன்றைக்கு ஈழ மற்றும் புலம்பெயர்ந்த தமிழச்சியின் வாழ்வு எழுதப் பட்டே ஆகவேண்டும். அல்லது வரலாற்றிலிருந்து அது தொலைந்து போகக் கூடும்.அதிலும் பெண்ணின் வெளியின் இருப்பு எழுதப் படுதல் அதுவும் பெண்களாலேயே எழுதப் படுதல் அவசியம். இன்னுமொரு விடயம் ஏனைய தமிழ்ப் பெண்கவிதைகளுக்கு இல்லாத வாய்ப்பு, இவர்களின் கவிதைகளுக்கு கிடைத்திருக்கின்றது வாழ்வு நெருக்கடி அதிகமானதாக இருப்பதால் , பிரசுர நெருக்கடி, பெயர் புகழ் வாங்குவதற்காக எழுதும் நெருக்கடி என்பதான எதுவும் இவர்களை அதிர்ச்சி வெளிப்பாடுகளை நோக்கித் தள்ளிவிடவில்லை.

உண்மைகளும் வாழ்வும் எழுதப்  பட்டே தீர வேண்டும் என்ற உந்துதலைத் தர அப்படைப்பு தனக்கான வடிவம் உள்ளடக்கம் எல்லாவற்றையும் புதிதாகக் கட்டமைக்கும். அதற்கான எதிர்பார்ப்புகளோடு பல கவிதைகளும், எதிர்பார்ப்புகளை கடந்த படி சில கவிதைகளுமாக இக்கவிதை தொகுப்பு நம் வாசிப்பிற்கு வருகின்றது .

நிவேதா என்ற கவிஞரின் கவிதை இது

எவருக்காகவும் காத்திருப்பதில்லை- காலை

விரைந்து கொண்டேயிருக்கின்றது

தடைகளற்ற பால்வெளியில்

சுழன்று வீசும் காற்றினைப் போல

அறியாப் பருவத்தில்

அந்தரங்கங்கள்  அத்துமீறப் பட்டு

கதறித் துடித்தபடி

கண் விழித்திருந்த இரவுகளினதும்

இவர்களது அருவருப் பூட்டும் தீண்டல்கள்

கலைத்துப் போன கனவுகளினதும்

நீட்சியில்

கற்பனையின் எல்லைகளை மீறுவதாயிருக்கிறது.

இவர்களுள் இருவனோடு காதலில் வீழ்வது

தெருவின் இருபுறங்களிலும் பரந்திருக்கும்

தைமாதத்து வயல் வெளிகளில்

இடைக் கிடை தலை காட்டும் பம்பயாக்களாய்

வாழப் பழகிவிட்டுருந்த சுயம்

குரல்வளையின் ஆழங்களில் சிக்குண்டிருக்கின்றது

மூச்சுத் திணறச் செய்கிறது

மறுபடியுமொருமுறை

காலங்களை தாண்டி இந்தக் கவிதை வாழ்வுக் கான பொருளைக் கொண்ட படியே இருக்கின்றது.சுயத்தை எழுதத் தொடங்குகின்ற போது அதை கொண்டாட முடியாது செய்கின்ற ,அறியாப் பருவமதில் நிகழ்ந்து விட்ட  அத்துமீறல்கள் காதலை புறந்தள்ள வைப்பதை வலுவாகச் சொல்லும் கவிதை இது இதில் பம்பயா( வயற்காட்டிடை வைக்கும் திருஷ்டி பொம்மை) புதிய பொருளைத் தந்து, கவிதைக்கான உயிர்நாடியாய் மாறிப் போகின்றது. தனித்திருத்தலின் வலியும் சுதந்திரமும் அந்த படிமத்தில் வெளிப்படுகின்றது.

இன்னும் சொல்லப் போனால் அடுத்த தலைமுறை குறித்த கவலை நிகழுக்கு எப்பவும் இருந்தாக வேண்டும்.பெண் என்பதால் குழந்தமை பற்றியும் குழந்தைகள் பர்ரியும் எழுதிய பெண்கள் கவிதையாக பார்த்த்டு விடுதல் கூடாது. ஒவ்வொரு சிந்தனாவாதிக்கும், சமூகப் பொறுப்புணர்வு கொண்டவர்களுக்கும் எதிர்கால தலைமுறை குறித்த கவலை எழும்பியே தீருதல் வேண்டும் அப்படியான குழந்தைகள் உலகம் குறித்த கவலைகள் கவிதையாகியிருக்கின்றன. அது மிக சரியான உணர்வை தந்து போகின்றன. உதாரணமாக தான்யாவின் “ நினைவின் விசச் சரடுகளிலிருந்து” எனும் கவிதை.

புலம் பெயர் தமிழ் பெண்களுக்கு இருக்கின்ற முக்கியப் பிரச்சனை இரட்டைக் கலாசாரம்.தொலைக்க முடியாமல் தூக்கிச் சுமந்த சொந்த கலாச்சாரம் , போய் விழுந்த மண்ணின் வேர் கலாச்சாரம் இவை இரண்டும் பெண்கள் வாழ்வில் பிரிக்க முடியா அங்கமாகின்றன ரேவதியின் ”சிதிலமடைந்துள்ள வாழ்க்கை “ கவிதை  பேசிப் போகின்றது இரட்டைக் கலாசாரத்தின் சிக்கல்களை.. எப்பவும் தொலைதலும் தொலைக்கப் படுதலும் பெண்ணாகவே இருக்க அவளோ தன்னுலகமே குழந்தையாகத்தான் கொண்டிருக்கின்றாள். யுத்த அலறல் குழந்தைகளை செவிடாக்குவதையே கவலை கொள்கின்றாள்

இரு வரிகளை எடுத்துப் போட்டு அழகான கவிதை இவை இவை என்று சொல்வது  ஆபத்தானது எந்த இருவரிகளும் முன்னும் பின்னுமான வரிகளின் உயிரோட்டத்திலேயே நிற்கின்றன. ஆகவே நான் நேசித்த சில கவிதைகளை சுட்டி விலகிக் கொள்கின்றேன்.

சில கேள்விகளை  தவிர்க்க முடியவில்லை. பல இடங்களில் என்னிடம் பலர் கேட்டதுண்டு  நீங்கள் இலங்கைத் தமிழரா என்று அதற்கு அவர்கள் சொன்ன காரணம் ஆங்கிலக் கலப்பில்லாமல்  தமிழ பேசுபவர்கள் இலங்கைத் தமிழர்கள் என்று.

அப்படியான அபிப்பிராயத்தை மாற்றிப் போடும் கவிதைகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. ஆங்கில சொற்களாலேயே நிரப்பப் பட்ட கவிதைகள், தலைப்பு ஆங்கிலத்தில் வைக்கப் பட்ட கவிதைகள் இருக்கின்றன.

முழு வாழ்வையும் யுத்தத்தில் இழந்து விட்ட வாழ்வின் கவிதைகள் , தொடர் வாசிப்பில் ஒரு சலிப்பையும் அவ நம்பிக்கையும், கனத்த இதயத்தையும் ஏற்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை. சில இடங்களில் இந்த பாதிப்பே பலமாயும் சில நேரங்களில் பலவீனமாகவும் மாறி விட்டிருக்கின்றது.

18 கவிஞர்களை உட்கொண்டிருக்கின்ற இந்த தொகுப்பு, இதுவரை இருந்த கவிதைக்கான ஒற்றை அடையாளத்திலிருந்து சிறகு விரிக்கின்றது. தமிழகத்து  பெண் கவிஞர்கள் உடல்மொழி எனும் ஒற்றை அடையாளத்துள் சிறைவைக்கப் பார்க்கின்ற கவிதையின் இருப்பை இத்தொகுப்பு சிறகுகள் தந்து வரையறைகளை அழித்து விடுகின்றது. அதுவே நல்ல அடையாளம்.ஒலிக்காத இளவேனில் ஒலிக்கின்றது கவிதைக்கான நல்ல சமிக்ஞைகளை.

Advertisements
Leave a comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: