உலகின் எல்லாப் பருவங்களிலும் ஒலிக்கட்டும் எம் பெண்களின் இந்த ஒலிக்காத இளவேனில்

Picture 900Picture 899

  • தமிழச்சி தங்கப்பாண்டியன்

“கவிஞன் உணர்ச்சிகளின் நிபுணன், உணர்ச்சிகள் என அழைக்கப்படுபவற்றுக்கு குறைந்தபட்சம் இரு தளங்கள் உள்ளன. முதல் தளம் அறியப்பட்டதும் ஒப்புக்கொள்ளப்பட்டதுமானவற்றைத் தாங்கிச் செல்கிறது. இரண்டாவது தளம் பெயரிடப்படாத யாருக்கும் சொந்தமற்ற பிரதேசம். அளவில் அதிகரிக்கும் பெயரற்ற உணர்ச்சிகளின் தொகுதிகளுக்குக் கவிஞன் குடியுரிமை பெறும் கடமையிலிருக்கிறான்.
நமது வலிமிகுந்த இந்த சிக்கலுற்ற நூற்றாண்டு பிற விஷயங்கள் தவிர நமக்குக் கற்றுத் தந்திருக்கிறது மிகத் தலையாய விஷயங்கள் எல்லாம் நம் வாழ்வின் அறிவின் எல்லைக்கு அப்பால் உள்ள பிரதேசங்களில் நடக்கின்றன என” – ஆக்நெஸ் நெமிஸ் நேகி 

(சமகால உலகக் கவிதை, தொகுப்பு – பிரம்மராஜன்).

“இன்றைய நாளின் தன் வலியைப் பாடும் வெளித்தரியாத குரல்களைத்” தேடிச் சென்று பதிவு செய்திருக்கின்ற தொகுப்பாக ஒலிக்காத இளவேனில் (18 பெண் கவிஞர்களின் கவிதை நூல்) வடலி வெளியீடாக வந்துள்ளது. டிசம்பர் – 2009 இல் பதிப்பித்த இக்கவிதைத் தொகுதியை கனடாவில் வாழும் தான்யாவும், பிரதீபா கனகா தில்லைநாதனும் தொகுத்துள்ளார்கள். ஜூன் 16-2012 இல் டொரொண்டோ நகரில் இக்கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்ற நிலையில், தோழர் சாந்தாராம் வாயிலாக இந்நூல் என் கைக்குக் கிட்டியது.
“பெண்களின் மெளனம் யாரையையும் தொந்தரவு செய்ததில்லை – பெண்களையே கூட” எனும் ஆதங்கக் குரலுடன், அனைத்து வகையான வன்முறைகளுக்கும் ஒரே இலக்காகப் பெண்கள் இரையாகின்றபோதும், “தம் துயரை, எதிர்ப்பை, ஒரு அரசியலாய்க்” கொண்டு செல்ல வேண்டும் எனும் ஓர்மையுடன் தொகுப்பாளர்கள் இப் பணியை முன்னெடுத்திருக்கிறார்கள். இத் தொகுப்பின் மிக முக்கியமான கூறு என்னவென்றால் – “போராளிப் பெண் குரல்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தனவோ, அதுபோலவே, எமது அரசியல் காட்சிகளின் மாற்றங்களுக்கமைய ஒரு கணத்தில் போராளிகளாய் அற்றுப்போகும் பெணகளின் குரலும் முக்கியமானதே” எனும் தொகுப்பாளர்களின் தெளிவும், தெரிவும்.
“மாபெரும் கவிதைகளை அவர்கள் எழுதவேண்டியதில்லை, ‘ஈழப் பெண்குரல்’ என அவை மிகை படுத்தப்பட வேண்டிய அவசியமுமில்லை, ஆயின், உலகின் வெவ்வேறு நகரங்களில் உள்ள, இலங்கைத் தமிழ்ப் பெண்கள், எத்தகைய, ஆண் அரசியல், குடும்பக் கடப்பாடுகள், கட்டுப்பாடுகளூடாகத் தங்களை வெளிப்படுத்துகிறார்கள் – அவற்றின் அரசியல் என்ன” என்பதனைப் பகிர்ந்து கொள்ளச் செய்திருக்கின்ற முயற்சியே இது என்கிறார்கள் தொகுப்பாளர்கள்.
இத் தொகுப்பு ஈழத்தை மட்டுமே மையப்படுத்தவில்லை. ஒரு அந்நிய தேசத்தில் வாழ நேர்கின்ற, சமகால வாழ்வின் சிக்கல்களைத் தனது தாய்நாட்டின் வரலாற்றுக் கண்ணியுடன் இணைக்கின்ற, அதில் இதுவரை கேட்டிராத பெண் குரலெனப் பதியப்பட்டவைகள் குறித்துக் கவனப்படுத்துதலும், பேசுதலுமே இதன் மையப்புள்ளி . ஒர் புலம் பெயர்ந்த சமூகத்தின் தனிமை, வன்முறை, பண்பாட்டுச் சிக்கல்கள், அடையாள மறுப்பு, சுயமிழத்தல் – இவற்றையெல்லாம் ஒரு பெண்ணாக எதிர்கொள்ள நேர்கையில், தனது வலியின், எழுச்சியின் வலிமையான குரலாக அவள் கவிதையைத் தேர்வு செய்திருப்பதனை, தேசம் : யுத்தநிறுத்தம், பெண் : வாழ்வியல், புலம்பெயர்வு : குடும்பம்,  புலம்பெயர்வு : மாணவம், தேசம் : யுத்தகாலம் எனும் பிரிவுகளில் தொகுத்தளித்துள்ளார்கள். மெளனமாக்கப்பட்டவர்களுக்கான வெளியெனவும், அவர்தம் குற்றஉணர்ச்சிகளினின்றும் விடைபெறுகின்ற சுமைதாங்கிக் கல்லெனவும் இத்தொகுப்பு இருப்பின் அதுவே போதுமானது எனும் தான்யா, பிரதீபா தில்லைநாதனின் பெருமுயற்சி கவனிக்கப்படவேண்டியது, பரவலாகப்  பேசப்படவேண்டியது.
பெண்களின் உலகம் ஒரு மூடிய உலகமாகவே இன்றுவரை இருக்கிறது. தொடர்ந்த கண்காணிப்பினாலும், தடைகளினாலும் அவளது ஒவ்வொரு அடியும் முறைப்படுத்தப்படுகின்றது. பெரும்பாலான பெண்களின் உலகம் பதற்றம், மன உளைச்சல், பாதுகாப்பின்மை, பாலியல் அத்துமீறல், குடும்பச் சுமை, பொருளாதார நெருக்கடி இவற்றால் முழுதுமாய் மூச்சுத் திணறுகிறது எனில், புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழ்ப் பெண்களின் உலகோ தமது புகலிடச் சூழல், ஈழத்து அரசியல், யுத்தத்தின் நிகழ் மற்றும் நிழல் உணர்வுகள், தனிமை, பகிர்தலற்ற வெறுமை – இவற்றால் கட்டமைக்கப்பட்டுள்ளது. அவர்தம் சொல்ல இயலாக் கனவு, காதல், காமம், துரோகம், நம்பிக்கை, பயம் – இவற்றின் ஒட்டுமொத்தத் தனித்த குரலே இந்த ஒலிக்காத இளவேனில். இதில் ஒலித்திருக்கின்ற ஒவ்வொரு பெண் குரலும் தன்னளவில் தனித்துவம் வாய்ந்ததே.
எனக்கு மிகவும் பிடித்த, நான் நேசிக்கின்ற அனாரின்

“மலர்களின் பார்வைகள்
அந்தியில் ஒடுங்கி விடுகின்றன.
அவைகளின் கனவுகள் மாத்திரம்
காற்றில் அலைகின்றன
என் கவிதைகளைப் போல”

எனும் காற்றில் அலையும் கனவுகள் பெரும்பாலும் வட அமெரிக்காவைக் களமாகக் கொண்டிருக்கின்ற ஈழத் தமிழ்ப் பெண்களின் எதிரொலியே.

“குறிகளும் யோனிகளும் இன்று இப்படித்தான்
எதற்காகவும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை
அவை தமது நிமிடத்தினை
வாழ்ந்து விடவே விரும்புகின்றன”

எனும் நிவேதா ரேவதியின் குரல்,
“இந்தக் கணத்தை ஐம்பது வருடங்களுக்கு முந்தையதிலிருந்து
வேறுபடுத்தி அறியாத தளர் முதியோன் போல,”
எனும் ஹங்கேரியப் பெண் கவிஞர் ஆக்நெஸ் நெமிஸ் நேகியை நினைவு படுத்துகிறது.

“ஆண்களால் வெல்லப்பட்ட உடம்பு
பொய்களால் கொல்லப்பட்ட மனசு”

எனும் சரண்யா;

வசந்தி,

“எப்போதும் ஒரே வட்டத்துள்
நிர்ப்பந்த வெப்புசாரம்
மூச்சு முட்ட வைக்கும்
ஆசுவாசப் படுத்தல்கள்
அற்றதான தனிமை”யை வேண்டுகிறார்.

மிகச் சமீபத்திய செய்தியொன்றின் மூலமாக ஈழப் போரின் இறுதிக்கட்டத்தினை ஐ.நா உறுப்பினர்கள் சரிவரக் கையாளவில்லை என அறிந்து கொண்ட அந்தக் காலைவேளையில், யசோதராவின் புதைக்குழி கவிதையை மீண்டும் வாசித்தேன்.

“யுத்தம் என்ன செய்தது
யுத்தம் என்ன தந்தது
“அந்த” இராணுவமென்னை வன்புணர்ந்தது
எனது இராணுவம் உனது தகப்பனை
கண்ணுக்கு முன்னால் கொன்றுபோட்டது.
…….
அவள் / நான் தலையிலடித்தபடி அழுகிறேன் / அழுகிறாள்
புதைகுழியை ஐ.நா. திறந்து திறந்து மூடுகிறது
விஜி! ஐ.நா. என்ன செய்கிறது
விஜி: திறந்து திறந்து மூடுகிறது!”

சமகாலத்தின் மிகப்பெரிய துயரம் நம்பிக்கையற்றுப் போதல். அதன் தொடர்பான கையறு நிலையின் மன உளைச்சளைத் தான் தொகுப்பின் அநேகக் கவிதைகள் முன் வைக்கின்றன. என்றாலும், அவை வெறும் புலம்பல்கள் அல்ல.
சமகால உலகில் பாசிசம் ‘சாதாரண உடுப்பில்’ தோன்ற முடிவது குறித்து உம்பர்தோ ஈக்கோ பின்வருமாறு குறிப்பிட்டார்:

“உர் – பாசிசம் (நித்திய பாசிசம்) நம்மைச் சுற்றிலும் இன்றும் இருக்கிறது. சில நேரங்களில் சாதாரண உடைகளில். எவராவது ‘ஆஷ்விட்ச்சை மீண்டும் திறக்க வேண்டும். இத்தாலிய சதுக்கங்களில் கருப்புச் சட்டைகளின் பேரணி நடத்த வேண்டும்’ என்று சொன்னால், நமது சிக்கல் எளிதாகிவிடும். வாழ்க்கை அத்தனை எளிதானதல்ல. உர் – பாசிசம் எந்த அப்பாவித்தனமான உருவிலும் மீண்டும் வரலாம். உலகின் எல்லா மூலைகளிலும் தினசரி அது எடுக்கும் புதுப்புது அவதாரங்களைச் சுட்டிக் காட்டுவது நம் கடமை.”

அது யுத்தமாகட்டும், இடப் பெயர்வாகட்டும், வன்முறைகளாகட்டும், ஊடகங்களாகட்டும், அன்றாட இயல்பான வாழ்க்கை நடைமுறைகளாகட்டும் – பெண்னென்பவள் எதிர்கொள்வது இப் பாசிசத்தின் ஏதாவதொரு முகத்தைத்தான். சமூகம் கட்டமைத்துள்ள நிறுவனங்கள், ஆண், சக பெண்கள் – என அனைத்து வெளிகளிலும் பெண்ணானவள் ஒரு நுட்பமான பாசிச அரசியலைத் தான் ஒவ்வொரு கணமும் எதிர் கொள்கிறாள்.

“நகரம் இச்சையால் மூடியிருக்கிறது
ஒவ்வொரு மூலையிலும் வல்லவர்கள் ஆளுவார்கள்”

என Weapon of Mass Destruction இல் பாசிசத்தின் ஒரு முகத்தைச் சுட்டும் பிரதீபா, தனது ஆண் கவிதையில் தோலுரிப்பது அதன் மற்றொரு வடிவத்தையே.

“வீதிகளில்
தோழர்களுடன் செல்கையில்
உன் இனத்தவன் ஒருவன்
எங்களில் யாரேனும் ஒருத்தியை
உன் இனத்து மொழியிலேயே
வேசைகள் என்று
எம் பால் உறுப்புக்கள் சொல்லிக் கத்துவான்,
அவர்களை எவ்வின அடையாளமுமின்றி
ஆண்கள் எனவே அழைத்துப் பழகினோம்”.

விவரிப்பவரே, விவரிப்பின் ஒரு பகுதியாக மாறிவிடுகின்ற சர்ரியல் தன்மை கொண்ட பிரதீபாவின் “உனது இனம், அரசியல், ஆண், மொழி” தொகுப்பின் அதி முக்கியமான கவிதை. இன்றைய பெண்ணுக்கான தெளிவான அரசியலைப் பேசும் பின்வரும் இக்கவிதை –

“நீ பொறாமையுறும்
திடகாத்திரமான காப்பிலிகளுக்கோ
ஆண்மையற்ற நோஞ்சான்களாய்
இகழப்படும் சப்பட்டையருக்கோ
தாயாகுவதில்
எச்சொட்டு வருத்தமும்
நான் கொள்வதில்லை.
எண்ணி நாப்பது வருடங்களிலோ
இன்றையோ
அக்குழந்தைகள்
தாய்மொழியை இழப்பதில்
அப்படி ஒரு துக்கம்
எழுவதாயில்லை.
வஞ்சனையை, மனித விரோதத்தை, பகைமையை
கொண்டு ஆடுகிற மொழி
அழிந்தால் என்ன?
நியாயமற்று
வெறித்தனமாக
ஒரு மரணத்தை நியாயப்படுத்தவோ
மரணத்திற்கு பழகியோ போகாதவரை
அவர்களுடைய எந்த மொழியும்
எனது மொழியே.
அது உன்னுடையதாய் அல்லாதது குறித்து
என் கவலைகள் இல்லை”

என்று வாழ்வின் மிக உன்னதமானவையென விதந்தோதப்படுகின்ற, இன, மொழிப்பற்றை விவாதத்திற்குள்ளாக்கி, முடிவில் மிகத் தெளிவானதொரு அரசியலைத் தீர்ககமானதொரு பெண் குரலில் முன் வைக்கிறது.
இத்தொகுப்பின் மிகப்பெரிய பலம் – இக்கவிதைகள் எவையும் இரக்கத்தைக் கோராதவை என்பதுவே. இத்தாலியக் கலாச்சாரத்திற்குப் பெரும் சவாலாக விளங்கிய கவிஞர், நாவலாசிரியர், பன்முக ஆளுமை கொண்ட பியர் பாவ்லோ பாசோலினியின் பிரசித்தி பெற்ற வாக்கியம் – “எனக்கு இரக்கத்தின் மீது நம்பிக்கையில்லை”. அதனை அடியொற்றிப் பயணித்திருப்பவையே இந்தத் தொகுப்பின் கவிதைகள்.
தற்கொலை பற்றிய தான்யாவின்:

“அந்த இடம் –
ஒரு நிமிடம் சாவதற்கான முனை
மறு நிமிடம் இசைக்கான கருவி
பிறிதொரு பொழுதில் வாழ்வதற்கான வெளி
அத்துவான வெளியில்
வாழ்க்கையின் நம்பிக்கையைத் தொலைப்பது
இயலாமற் போகிறது
…………
வாழ்க்கை அவளை வசீகரிக்கிறது”

எனும் வரிகளும்

” ஓர் முத்தத்தின் பேரியக்கத்தில்
ஆயுதங்களின் விறைப்புக்களுக்கு அப்பாலாய்
நானும் வாழ வேண்டும்” (யசோதர)

எனும் வேட்கையும், இரக்கம் கோராத, தன்னளவில் திமிறி நிற்கும் திடமான பெண் குரல். இந்த தெளிவிருக்கும் எம் பெண்களுக்கு,

“புரிந்து கொள்ள வேண்டி
நிற்கும் அவலமோ
நேசத்தை உணராத
வலியோ அற்ற அமைதி” (தான்யா)

வாய்க்கப் பெறும் ! பெறின் – அதுவே இத்தொகுப்பின் வெற்றியாகும்!
தேசம் என்பதே ஒரு கற்பிக்கப்பட்ட உருவாக்கம் போன்ற கருத்தாக்கங்கள் பரவலாக விவாதிக்கப்படுகின்ற இப் பின் நவீனத்துவக் கால கட்டத்தில், தன் தேசத்தின் மீட்சிக்காகப் பாடும் ஒரு பெண்ணின் தேசம் எது? புலம் பெயர்ந்து வாழும் பிற நாடு நமதாகுமா? கனடா போன்ற நாட்டில் பூர்வீகர்களுடைய வரலாறு மறைக்கப் படுகையில், அவர்களை ஒடுக்கியவரிடத்தில், ‘எம்மை வாழவைத்த தேசம்’ எனும் நன்றியுணர்வு சரியானதா? தேசம், தேசீயம் – இவை கட்டமைக்கப்பட்டிருக்கிற ஆதிக்க – ஆண் மனத்திற்கு முரணாகத்தானே, தமது பிள்ளைகளைப் பறிகொடுத்தவர்களது மனநிலையும் இருக்க முடியும்? – போன்ற மிக முக்கியமான கேள்விகளைத் தொகுப்பாளர்கள் எழுப்பி இருக்கிறார்கள். உணர்வும், அறிவும் சரிசமமாக வெளிப்படும் கலவையான கவிதைகள் மூலமாகவும் அவர்கள் முன்வைப்பது இந்தக் கேள்விகளையே!
தம் எல்லாவிதமான வேறுபாடுகளோடும், ஒவ்வொரு குரலும், தத்தமது அனுபவங்களின் நேர்மையுடனும், மொழியின் சத்தியத்துடனும் ஒலிக்கப்பட வேண்டும் – அவை கேட்கப்படவும் வேண்டுமென்கின்றன இப் பெண்களது கவிதைகள். அவை உலகின் அனைத்துப் பெண்களின் கவிதைகள்தாம்!
தேடலுடன் உரத்து ஒலிக்கும் எக்குரலும் அங்கீகரிக்கப்பட்ட வேண்டியதே – குறிப்பாக அக்குரல் ஒரு பெண்ணினுடையதாய் இருக்கும் பட்சத்தில்!  இந்திராவின் பின்வரும் இக்குரலே பெண்ணினத்தின் ஒருமித்த குரல் –

“எனக்குள் ஒரு ஜிப்சி
எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறாள்.
அவள் –
வரம்புகளை உடைத்தெறிந்து
ஒரு புறாவைப் போலப் பறந்திட
ஏங்கிக் கொண்டிருக்கிறாள்”

மேலும், மேலும் மறைக்கப்பட்ட, அழுத்தப்பட்ட குரல்களைத் தேடிப் பயணியுங்கள் தோழிகளே! தான்யாவும், பிரதீபாவும் தொடங்கி வைத்த இப்பயணத்தில் ஒரு வாசகியாய்ப் பங்கு பெற்ற நான் இந்த தொகுப்பினை மூடி வைத்தவுடன், டெல் அவீவின் பெண் கவிஞர் தாஸ்லியா ராவிகோவிச்சின் வரிகளை நினைத்துக் கொண்டேன் –

“அவர்கள் அனைவரும் சென்றபிறகு
கவிதைகளுடன் நான் தனியே எஞ்சியிருக்கிறேன்”

* * * * *

Advertisements
Leave a comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: