மதிப்புரை: ஒலிக்காத இளவேனில் – க.பஞ்சாங்கம்

  • க.பஞ்சாங்கம்

Picture 905

Picture 907 Picture 908 Picture 909 Picture 910 Picture 911 Picture 912

=====================================================

தான்யா, பிரதீபா கனகா தில்லைநாதன் (தொ), ஒலிக்காத இளவேனில் (2009),

வடலி வெளியீடு, சென்னை – 24. தொ.பே.0091 4443540358.

E.mail: sales.vadaly@gmail.com. பக்.172/ ரூபாய் 135 /

 

மதிப்புரை

          எண்பதுகளில் ஈழப்போர் வெடித்த காலந்தொட்டு இன்றுவரை ஈழமண்ணில் இருந்து வரும் எத்துணையோ கவிதைத் தொகுப்புக்களை வாசித்திருக்கிறேன். அவைகள் தரும் வலிகளையும் வேதனைகளையும் மௌனமாக உள்வாங்கி உடலாலும் உள்ளத்தாலும் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறேன். குறிப்பாக ஈழத்துப் பெண் கவிஞர்களின் எழுத்தில் வெளிப்படும் அவலத்தின் அலைகளால் எத்துண்டு சிதறிக் கிடந்திருக்கிறேன். மீண்டும் என்னைக் கூட்டி ஒன்று சேர்த்துக் கொள்வதற்குப் பல நாட்கள் தேவைப்பட்டிருக்கின்றன. இப்பொழுதும் தான்யா, பிரதீபா கனகா தில்லைநாதன் ஆகியோர் தொகுத்துள்ள ஒலிக்காத இளவேனில்என்ற பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பை வாசிக்கும் போதும் உடைந்துதான் போனேன். எப்படியும் இத்தொகுப்பு குறித்து எழுத வேண்டும் என்று எனக்குள் ஏற்படுத்திக் கொண்ட நிர்ப்பந்தம் காரணமாக நிதானமாய் என்னைச் சேகரித்துக் கொண்டு இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

          இந்தத் தொகுப்பு பல வழியில் வித்தியாசமான தொகுப்பாகப் படுகிறது. அந்த வித்தியாசங்களை இப்படி வரிசைப்படுத்திக் கொள்ளலாம்.

1.       குழுக்களைச் சார விரும்பாத தன்னிலைகளின் கவிதைகள்

2.       விளிம்புநிலை மக்களை முன்வைக்கும் கவிதைகள்

3.       வெளித் தெரியாத புதிய படைப்பாளிகளின் கவிதைகள்.

4.       பெரும்பான்மையாய்ப் புலம்பெயர்ந்த படைப்பாளிகளின் கவிதைகள்.

இந்த வித்தியாசங்கள் இந்தத் தொகுப்பிற்கு மற்ற ஈழத்துப் பெண் கவிஞர்களின் தொகுப்பிலிருந்து வேறுபட்ட பல பரிமாணங்களையும் குணாதிசயங்களையும் கொண்டு வந்து சேர்த்திருக்கின்றன என்று எனக்குப் படுகிறது. ஒரே ஒரு எடுத்துக்காட்டுச் சொல்லட்டுமா? பிரதீபாவினுடைய மொழி குறித்த ஒரு கவிதை:-

          …

          சப்பட்டைகள், கறுவல்கள், சோனிகள்

          தொடருகிற உன் துவேசங்கள்

          நான் தாயாக அரவணைக்கிற குழந்தைகளை

          அண்டவிடேன்

          வஞ்சனையை, மனித விரோதத்தை, பகைமையை

          கொண்டு ஆடுகிற மொழி

          அழிந்தால் என்ன?

 

          நியாயமற்று

          வெறித்தனமாக

          ஒரு மரணத்தை நியாயப்படுத்தவோ

          மரணத்திற்குப் பழகியோ போகாதவரை

          அவர்களுடைய எந்த மொழியும்

          எனது மொழியே

 

          அது உன்னுடையதாய் அல்லாதது குறித்து

          என் கவலைகள் இல்லை – (ப.130)

2004-இல் எழுதப்பட்ட இந்தக் கவிதை, பொதுப் புத்தியில் தாய்மொழிப் பற்று என்று பேசப்படும் ஒரு பேச்சின் மேல் உலக மனிதநேயத்தைத் தூக்கி வைத்துக் கடும் விமர்சனத்திற்குள் அமுக்குகிறது. புலம்பெயர் வாழ்வுச் சூழலில் குழந்தைகள், தாய்மொழியை இழப்பதில் அப்படி ஒரு துக்கம் எழுவதாய் இல்லைஎன்ற வரிகளை எழுதும் போது, வஞ்சனையை, மனித விரோதத்தை, பகைமையைக் கொண்டிராத ஒரு உன்னத மொழிக்கு அவாவி நிற்கும் பேருள்ளத்தைத் தரிசித்து வியந்து போய் நின்றேன். அதே நேரத்தில் புலம் பெயர் வாழ்வு தரும் துக்கமும் வாதையும் வலியும் வேரையே அறுக்கிற சத்தத்தையும் என்னால் கேட்க முடிந்தது.

          மனித சரித்திரத்தில் எதன்பொருட்டும் எந்த ஞாயத்தின் பொருட்டும் யுத்தம்என ஒன்று நிகழ்வதென்பது கொடூரமானதுதான். யுத்தத்தில் முதலில் கொல்லப்படுவது மனிதம்தான். மனித மதிப்பீடுகள்தான். பயங்கரமான இரண்டாம் உலகப்போர் முடிந்த நாற்பதுகளில் இனி இந்தபூமியில் போரின் கூச்சலே கேட்கக் கூடாதுஎன்று உலகம் ஒரே குரலில் ஓங்கி ஒலித்தது. அந்த அளவிற்கு யுத்தத்தின் வலி உணரப்பட்டது. ஆனால் யுத்தம் ஓய்ந்ததா? இரண்டாம் உலகப் போரில் கொல்லப்பட்டவர்களைவிடப் பன்மடங்கு அதிகமாக அதற்குப் பிறகு நடந்த பல்வேறு யுத்தங்களில் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்தத் தொகுப்பிலும் பிரதானமாக யுத்தத்தின் கொடூரம் ஈழப்போர் பின்னணியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. உலக வரலாறு முழுவதும் எப்பொழுதும் எங்குப் போர் நடந்தாலும், கலவரம் வெடித்தாலும், பஞ்சம் தாண்டவமாடினாலும் சுரண்டல் கொடிகட்டிப் பறந்தாலும் முதலில் வகைவகையான பெரும் பாதிப்புகளுக்குள் தலைகுப்புறத் தள்ளப்படுபவர்கள் பெண்களாகத்தான் இருக்கிறார்கள். கைதாவது, காணாமல் போவது, பிணமாவது, பாலியல் வன்முறைக்கு ஆளாவது, கரு கலைப்பது, தந்தை இல்லாக் கரு சுமப்பது, சீருடைக்காரன் மீது காறி உமிழ்ந்து மரணத்தைத் தழுவுவது, பாலில்லாது அழும் சிசுவைக் கையில் சுமந்து அன்னையாய் அழுவது – இப்படி யுத்தச் சூழலில் பெண்கள் படும் பாடு ஒன்றா இரண்டா? எல்லாவற்றையும் இந்தத் தொகுப்பு கவித்துவமாகப் பேசுகிறது. றெஜியின் தெரியா விம்பங்கள்” – என்ற கவிதை போரின் கொடூரத்தைப் பல்வேறு கோணத்தில் பதிவு செய்து கொண்டே நீளுகிறது.

          “பயங்கரமான இருள் நிறைந்த இரவுகள் எம் வாழ்வானதுஎன்று தொடங்கும் அந்தக் கவிதை,

          போகும் வழியெல்லாம் இரத்த வாடையுடன் பிரேதங்கள்

          இல்லை இல்லை இவர்கள் பிரேதங்கள் இல்லை

          என் அம்மா, என் அப்பா, என் பிள்ளை, என் அக்கா, என்

          அண்ணா, என் நண்பர்கள்

          மனிதர்களை மனிதர்களே அழித்து விட்டார்கள். (ப.152)

என ஒட்டு மொத்த மனித சமூகத்தைக் குற்றஞ் சாட்டுகிறது. மேலும்

          பலம் வாய்ந்த தலைவர்கள் தம் பதவி வெறிக்கு

          வறுமையில் வாழும் முகம் தெரியா

          எம் காக்கிச் சட்டைச் சகோதரனை இரையாக்கிக் கொண்டார்கள்” (ப.153)

என்று எழுதுவதன் மூலம் எந்தப் போராக இருந்தாலும் அங்கே இரையாவது விளிம்புநிலை மக்கள்தான். அதிகாரம் அசையாமல் இருப்புக் கொள்ள விளிம்புநிலை உயிர்களைத்தான் பலியிடுகிறது. எனவே

          “பயங்கரமான உன் பாதங்களாலும் துப்பாக்கிகளாலும்

          எம் குரல் புதைக்கப்பட்டு, அழிக்கப்பட்ட போதிலும்

          உங்கள் பாதங்கள் என் காயத்தின் கசிவை உணரும் வரை

          உரத்துக் கத்துவோம், யுத்தம் வேண்டாம்” (ப.155)

என்று கவிதை முடியும் போது, பின்னணி ஈழயுத்தமாக இருந்தாலும், உலகம் முழுவதிலும் நடக்கும் யுத்தத்திற்கு எதிரான குரலாகக் கவிதை பரிணாமம் பெற்று விடுகிறது.

          இயேசுவைப் போலவே முப்பத்து மூன்று ஆண்டுகள் கூட வாழ முடியாது குண்டுகளால் சிதறிக்கப்படும் வாலிபர்களே அற்ற யுத்த பூமியிலே, வயதான பெரிசுகள், பேரப்பிள்ளைகள் அற்றவர்களாய், ஒரு குழந்தை போலாகிப் பேரர்களுக்குக் கதை சொல்ல வாய்ப்பு கிடைக்காமல் கண்ணீர்; சிந்துகிறார்கள். அது ஏசுவின் இரத்தம் போலிருக்கிறது. இதைத்தான் (யுத்தத்தை நடத்தும் காட்டுமிராண்டிகள்) தோற்கடித்தல் என்பார்களா?” என்று பாலஸ்தீனக் கிழவனை முன்னிறுத்தி எழுதப்பட்ட அந்தக் கவிதை வினாவோடு முடியும் போது, ஒட்டுமொத்த இந்த மனித நாகரிகத்தின் மேலேயே அருவருப்பு ஏற்படுகிறது.

          யுத்தம் என்ன செய்தது? யுத்தம் என்ன தந்தது? ‘அந்தஇராணுவம் ஒருத்தியை வன்புணர்ந்தது என்றால், மற்றொரு இராணுவம் ஒருத்தியின் தகப்பனைக் கண்ணுக்கு முன்னால் கொன்று போட்டது. ஐ.நா என்ன செய்கிறது? புதைகுழியைத் திறந்து திறந்து மூடுகிறது. விளைவு!

          “பிள்ளைகளின் பிணத்தில் நிலம்

          பிள்ளைகளின் கனவில் கொலை

          பிள்ளைகளின் விளையாட்டில் சூடு” (ப.140)

என்று எழுதும் கற்பகம் யசோதர,

          தெய்வமே, நீ எங்கிருக்கிறாய்

          நான் காற்றோடும் மரத்தோடும்

          கோடை நிலத்தின் மேலாய்

          என்னோடு தோன்றிடும் நிழல் தோறும்

          பேசினேனே… (ப.139)

என்று இழந்த வாழ்வின் மகத்துவத்தைப் பேசும் போது யுத்தத்தின் உக்கிரம் மென்மையாய் நமக்குள் பரவிப் பாடாய்ப் படுத்துகிறது. யுத்தத்தை எதன் பொருட்டும் ஞாயத்திற்குள் கொண்டு வர முடியாது என்று இந்தக் கவிதைத் தொகுப்பு முன்வைக்கும் பார்வை, மிக வேகமாக உடனடியாக வளர்த்தெடுக்கப்பட வேண்டிய ஒன்று.

*    யுத்தம் ஒரு பக்கம் என்றால், பெண்ணைப் பொறுத்தவரை ஆணின் அதிகாரம் மற்றொரு பக்கம். ஆண் நலத்திற்காகக் கட்டமைக்கப்பட்ட வாழ்க்கை வெளியில் வாழ்ந்து தீர வேண்டிய நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டோம் என்ற விழிப்புணர்வு பெற்றுவிட்ட பெண்ணின் உடலும் உள்ளமும் படும்பாடுகள் இந்தத் தொகுப்பில் மிக நுட்பமாகப் பதிவாகியுள்ளன. உயிர் உற்பத்தியில் பெண்ணை, உடலாலும் உள்ளத்தாலும் கூடுதலாக வலுவானவாளாக உருவாக்கியிருக்கிறது இயற்கை. எனவே பிரமாண்டமான அந்தப் பெண் எனும் சக்தி” – யின் முன்னால் நோஞ்சானாகத்தன்னை உணர்ந்து கூனிக் குறுகிப் போகும் அனுபவத்தைத் தொடர்ந்து ஆண் எதிர் கொள்ள நேர்கிறது. இந்த இயலாமைதான் அவனை அரசியல்வாதியாக தந்திரம், சூழ்ச்சி மிக்கவனாக மாற்றுவதில் செயல்பட்டுள்ளது. இந்தத் தந்திரத்தின் மூலம் மொழியை, அறிவை, பொருளாதாரத்தை, நடமாடும் வெளியை என்று அனைத்தையும் தனது அதிகார நலத்திற்கேற்றவைகளாகக் கட்டமைத்துக் கொள்கிறான். இந்த ஆதிக்க அரசியலைப் புரிந்து கொண்ட பல கவிதைகள் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.

          அசையாப் பெண்மையின்

          ஜனன ரகஸ்யத்தின் அச்சமூட்டலில்

          அசையும் ஆண்மையின்

          நிச்சயமின்மைப் பதட்டங்கள்.

 

          குருதி கண்ட குழப்பத்தில்

          தம்மைச் சிவப்பாக்கி

          அடக்கும்

          ஆளுமை நாடகங்கள் (ப.70)

என்று விரிகிறது வசந்தியின் கவிதை ஒன்று. இதேபோல் முலைகளுக்குப் பேசக் கற்றுக் கொடுத்தநிவேதா-வின் கவிதையும்,

          காம்புகளில் துளிர்த்த

          முதல் துளியின் வாசனை

          பறைசாற்றிப் போகும்

          நான் மகத்தானவள்

          நான் மகத்தானவள் (ப.40)

என்று முழங்குவதோடு கழுத்தை நெரிக்கும் ஆம்பிளைத் தனங்களைப்பற்றியும், ‘கால்களைப் பிணைக்கும் யுத்த சங்கிலியைப் பற்றியும்விமர்சனத்திற்கு உட்படுத்துகிறது. இதேபோல் பாதை தவறாமல், அச்சுப் பிசகாமல், சுற்றுவதொன்றே பணியாகக் கோள் ஒவ்வொன்றும் சூரியனைச் சுற்றிச் சுழலும் ஒரு அற்புதமான காட்சிப் படிமத்தைக் கட்டமைக்கும் கௌசலா,

          காற்று மண்டலமோ முகில் துகிலோ

          எதுவோ ஒன்றைச் சுற்றிக் கொண்டு

          எரிமலைகளையும் புயல்களையும் கூட

          சூரியனைத் தாக்காத படி

 

          உபகோள்க் குழந்தைகளையும்

          இழுத்துக் கொண்டு

          உருண்டு ஓடி

          தடக்கி வீழ்ந்தெழும்பி சேவகம் செய்தும்

          திருப்தி காணாமல் எரிந்து கொதிக்கும்

          சோம்பேறி;ச் சூரியனை

          எதுகொண்டு சாத்த? (ப.94)

என்று கவிதை மொழியில் கேள்வியைத் தூக்கிப் போடும் போது ஆண்மையச் சமூகத்தில் பெண் பிறவிகள் படும்பாடு உணர்வுக்குள் செலுத்தப்படுகிறது.

          பெண்ணை அவள் சுயத்தை அவள் விழிப்பை மிக எளிதாக வீழ்த்துவதற்கு ஆண் அதிகாரம் கையாளுகிற ஒரு கீழ்த்தரமான தந்திரம், “அவளுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது. அவள் ஒரு மாதிரி. ஆவள் ஒரு வேசிமுதலிய சொல்லாடல்கள் ஆகும். இதைப் பதிவு செய்கிறது கௌசலா கவிதை:-

          அடி ஆன்மா நெருப்பு உமிழ்ந்து

          நகக் கண்களும் மயிர்க் கால்களும் கூட

          பொசுங்கி மணக்க

          ஓநாய்;க் கூட்டமொன்று ஊளையிட்டுக்

          கொண்டலைந்தது

          எனக்குப் பைத்தியம் என்று?

          ஆச்சரியம் எனக்கு!

          ஓநாய்க்கு வாழ்க்கை (ப.92)

பிரதீபா கவிதை ஒன்று, இதையே மிக மேன்மையான முறையில் மொழியாடுகிறது.

          “வீதிகளில்

          தோழர்களுடன் செல்கையில்

          உன் இனத்தவன் ஒருவன்

          எங்களில் யாரேனும் ஒருத்தியை

          உன் இனத்து மொழியிலேயே

          வேசைகள் என்று

          எம் பால் உறுப்புக்கள் சொல்லிக் கத்துவான்

          அவர்களை எவ்வின அடையாளமுமின்றி

          ஆண்கள் எனவே

          அழைத்துப் பழகினோம்” (ப.128)

          “அனுபவமின்றி அறுக்கப்பட்ட ஸ்படிகப் பிரதிபலிப்பாய் குலைந்து சிரிக்கின்ற துண்டு துண்டு வாழ்க்கையைக் கொண்டிலங்கும் பெண்கள், “மரபுகளின் நீசத்தனங்களில் நீலம் பாரித்துப் போன கனவுகளைஎல்லாம் தூக்கி எறிந்து விட்டு வாழ்வின் நிகழ்கணங்களை எதிர்கொள்ளும் பாங்கை ரேவதியின் கவிதை சொல்லிச் செல்கிறது.

          நிச்சயமற்ற வாழ்விற்குப் பழக்கப்பட்டவர்கள்

          எதற்காகவும் காத்திருப்பதை விரும்புவதில்லை

 

          குறிகளும் யோனிகளும் இன்று இப்படித்தான்

          எதற்காகவும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை

          அவை தமது நிமிடத்தினை

          வாழ்ந்து விடவே விரும்புகின்றன… (ப.24)

 

          ஒரு பெண்

          தன் கணவன் தன்னைச் சந்தோசப்படுத்த முடியாதவன்

          என்பதனால் அவனை நிராகரிக்கிறாள்

          அந்த நேர்மை எனக்குப் பிடித்துப் போகிறது… (ப.25)

இவ்வாறு சிதிலமடைந்துள்ளவாழ்வைச் சித்திரிக்கும் இந்தக் கவிதை,

          வாழ்தலிற்கான தேவையை அங்கீகரிக்க போகிறோமா

          இல்லை வெற்றுக் கலாசாரம் பேசி

          எங்களைச் சுற்றி எல்லாவற்றையுமே குப்பைகளாக்கப்

          போகிறோமா (ப.25)

எனக் கேட்கிறது. சரண்யாவின் கவிதை ஒன்றும், மரபை ஓரங்கட்டி விட்டு வெளியேறி விடும் பெண்ணைப் படைத்துக் காட்டுகிறது.

          … அருகில்: கணவனை விட்டு

          வேற்று ஆணுடன் உறவு வைத்திருக்கும்

          மனைவியாய் மட்டும் நான்.

          தொடரும் உறவுகளில் திளைத்திருக்கும்

          உன்னை அங்கீகரிக்கவும்

          துணிவும் நம்பிக்கையுமுள்ள

          என்னை நிராகரிக்கவும்

          இந்த அநியா சமூகத்திற்கு

          அங்கீகாரம் கொடுத்தது யார்? (ப.61)

இந்தக் கேள்வி இன்றுதான் புதிதாய்ப் பிறந்திருக்கிறது.

          பாலியல் வன்முறை இந்த ஆண்மையச் சமூகத்தில் கணந்தோறும் நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது. இப்படியொரு வன்முறை கொடூரமாக நிகழ்ந்து ஊடகங்களின் பக்கங்களை நிரப்பும் போதெல்லாம் நமது ஆணாதிக்கத் தலைவர்கள் கூறுகிற அறிவுரை ஒன்றுண்டு, “பெண்கள் கவர்ச்சியாக உடை உடுத்துவதைத் தவிர்க்க வேண்டும்இதுதான் அந்த ஒன்று. ஆணின் வன்முறையின் உச்சம் இது. உடல் மேல் நிகழ்த்தப்பட்ட அந்த வன்முறையைவிடக் கொடுமையானது இந்தக் கூற்று. ஆணின் ஆதிக்க ஆணவம் வெளிப்படும் அசிங்கமான மொழியாடல் இது. இதையெல்லாம் அம்பலப்படுத்திக் காட்டுகிறது. திணிக்கப்பட்ட காலை. திணிக்கப்பட்ட எழுத்து. திணிக்கப்பட்ட ரசனை. திணிக்கப்பட்ட குறிஎன ஆதிக்க அரசியலை மூஞ்சியில் குத்துவது போல முன் வைக்கும் ஜெயா-வின் கவிதை:-

          “ஆண்களுக்காகவே பிறப்பெடுத்தது போல்

          காமக் கண்களுக்கு விருந்தாகி

          கவர்ச்சிகள் காட்ட நிர்ப்பந்திக்கப்படும்

          பெண் பிணங்கள்தானே நாங்கள்” (ப.56)

இவ்வாறு எல்லாவற்றையும் நீ நிர்ணயித்து விட்டு?, எங்களையா குற்றஞ்சாட்டுகிறாய்எனக் கேட்கிறது கவிதை. ஆண்களால் வெல்லப்பட்ட உடம்பு. பொய்களால் கொல்லப்பட்ட மனசுஎனக் கண்ணீரால் எழுதுகிறார் சரண்யா. பாம்பு என்று தெரிந்தும் ஆளுக்கொன்றைப் பிடித்துக் கொள்ளுமாறு நிர்ப்பந்திக்கப்பட்ட வாழ்க்கை, பெண்ணின் வாழ்க்கை என்கிறார் வசந்தி:-

          ‘பாம்பு கொத்தும்

          குதறும்

          துன்புறுத்தும்

          என்றெல்லாம் பேசிக் கொண்டே

          ஆளுக்கொன்று வைத்திருப்பார்கள்’ (ப.71)

 

மேலும் கவிதை,

          “கேவலம்

          கண்டவிடமெல்லாம் ஊர்ந்து திரிகின்ற

          அற்பப் பாம்பிற்கு

          இத்தனை

          அந்தஸ்தா?” (ப.71)

எனக் கேட்டு முடியும் போது, ஆண்களின் அற்பத்தனங்களுள் திணிக்கப்பட்டுள்ள பெண்ணின் அவஸ்தைக் குரலைக் கேட்க முடிகிறது.

          யுத்தத்திற்கும் ஆண்களுக்கும் நடுவே வாழ நேர்ந்த பெண்ணின் அவலங்களை இந்தத் தொகுப்புப் பன்முகப் பரிமாணங்களோடு முன்வைத்துள்ளது. உடலின் மேல் சுமத்தப்பட்ட அதிபுனித வரையறைகளைஎல்லாம் அழித்துச் செல்கின்றன இந்தக் கவிதை அலைகள். துயரில் விளைந்த மனங்களின்நுண்ணுணர்வு, மொழிகளால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு வாழ்வின் நீள் வலியை உரக்கப் பேசினாலும், அதே வாழ்வு தரும் சுகமான கணங்களையும் இந்தக் கவிதைகள் பதிவு செய்துள்ளதன் மூலம், மனிதர்களை இயக்கும் இருத்தலுக்கான உந்துதலுக்கும் உரமிட்டுள்ளது என்றே கருதுகிறேன்.

          “அந்த இடம்

          ஒரு நிமிடம் சாவதற்கான

          முனை

          மறுநிமிடம் இசைக்கான

          கருவி

          பிறிதொரு பொழுதில் வாழ்வதற்கான

          வெளி

          அத்துவான வெளியில்

          வாழ்க்கையின் நம்பிக்கையைத் தொலைப்பது

          இயலாமற் போகிறது” (ப.119)

என்றும்

          “மலையும் மலர்களும் சூழ்ந்த பிரதேசங்களை

          கைப்பற்றிக் கொள்ள

          எத்தனித்துக் கொண்டிருப்பவர்கள்

          அமைதியாய் இருக்கிறார்கள்” (ப.121)

என்றும் தான்யா எழுதும் போது, இந்த நாசகாரச் சூழலிலும் வாழ்வதற்கான ஒரு வெளியை அடையாளம் கண்டு கொள்ளக் கூடிய சாத்தியம் இல்லாமல் ஆகிவிட வில்லை என்ற நம்பிக்கை பிறக்கிறது. கலை இலக்கியங்கள், நம்பிக்கையின் ஊற்றுக் கண்கள் என்பது மீண்டுமொரு முறை இத்தொகுப்பு மூலம் உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது.

          மிகக் கவனமாக, வாழ்வு, கலை இலக்கியம், உலகச் சூழல் முதலியவை குறித்த நுட்பமான பிரக்ஞையோடு தொகுத்துள்ள தான்யா, பிரதீபா கனகா தில்லைநாதன் ஆகியோரைப் பாராட்டுகிறேன்.

நன்றி.

புதுச்சேரி –8.                                                                                       

பெருகும் அன்புடன்

காசி இல்லம்

9003037904.                                                                                 க.பஞ்சாங்கம் (பஞ்சு)

E.mail.drpanju49@yahoo.co.in

Advertisements
Leave a comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: