நினைவுகளில் படரும் நிழல்: மு.சத்யா

மு.சத்யாPicture 1533 Picture 1534 Picture 1535 Picture 1536 Picture 1537

தனிமைச் சிறையில் உழலும் பெண்களின் சின்னஞ்சிறு உலகத்துள் நேசம், காதல், உறவு, பிரிவு, பிள்ளை, சுரண்டல், வன்முறை, விரக்தி, பால்யநினைவு, பைத்திய மனநிலை இவற்றை கழித்துவிட்டுப் பார்த்தால் எஞ்சுவது ஓரிரு வார்த்தைகளே. அவையும் எப்போதாவது ஒரு சில பெண்களிடம் மட்டுமே.

பிற்சேர்க்கையில் இத்தொகுதி தன்னை அறிவித்துக் கொள்வது போல இது யுத்த நிலத்துக்கு வெளியில் வாழும் குறிப்பிட்ட சில இலங்கைப் பெண்களின் தொகுதி. அவர்களின் வலியை, உணர்வுகளை, சந்தித்த குரூரங்களை நேர்மையுடன் பதிவு செய்திருக்கிறது. உண்மையில் யுத்தம் தேசம் தாண்டியும் அதிர்வுகளை மனங்களில் ஏற்படுத்தி பிறழ்வு கொள்ளச் செய்கிறது. யுத்தம் உடல்களைச் சிதைக்கிறது. மனங்களையோ சதைக்கூளமாக்குகிறது. யுத்தத்தில் இறந்தவர்கள் பாக்கியவான்கள். உறவுகளைத் தொலைத்து குரூரத்தின் சாட்சியாய், வாழும் நடைப்பிணங்களாய் சபிக்கப்பட்டவர்களை என்னவென்று சொல்ல?

இத்தொகுப்பின் கவிதைகள் புலம்பெயர்வின் தனிமை, மனப்பிறழ்வின் மனநிலை, இயற்கை மறுப்பு, நினைவின் கொடுமை, யுத்த மறுப்பு ஆகியவற்றை மையங் கொண்டுள்ளன.

பல அழகியல் வரிகளுடனும், கருத்துக்களை வீச்சாய் உயர்த்திப் பிடித்தும், வலியை இறக்கி வைக்கும் முகமாகவும், விரக்தியின் வெளிப்பாடாய், விண்டுபோன வரிகளுடனும், வீச்சான கவிதைகளுடனும் ஒரு பன்முகத்தன்மை கொண்டதாகவே இத்தொகுப்பு அமைந்திருக்கிறது. அரசியல் பேசும் கவிதைகள், அரசியல் பேசும் பெண்களின் விகிதத்தை ஒத்திருக்கிறது.

பிரதீபாவின் கவிதைகள் முழுக்க அரசியல் பேசுகின்றன. அதில் பதாகை போன்ற வரிகளைக் குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும்.

அழகான மலர் போன்ற பெண்ணை

எதுவும் பாதிப்பதில்லை

உண்மை : அழகான மலர்

பெண் இல்லை.

இயற்கை இத்தொகுப்பில் சின்னாபின்னப்பட்டுக் கிடக்கிறது. பனிக்கால மரமென பட்டுப்போய் நிற்கிறது. பறக்கத் துடிக்கும் பட்டாம்பூச்சிகள் சிறகு முறிந்து கிடக்கின்றன. மழை, புகைந்து கருகிய கவிதைகளைப் பொழிகிறது. நிலவைத் தொலைத்து நிற்கிறது இரவு. சிதறிய ஸ்வரங்கள், நீலம் பாரித்த கனவுகள் என எங்கும் மனச் சிதறல்.

தமிழினியின்

ஒற்றைக் குயிலின் அழுகையின் நீட்சியில்

எழுகிறது என் சோகம்

பொழியும் மழையின் ஒவ்வொரு துளியிலும்

வழிகிறது என் கண்ணீர்வரிகளில்

இயற்கையும் சோகத்தின் நீட்சியாய், சாட்சியாய் நிற்கிறது.

இயற்கையை ரசிக்க முடியாத கவிஞன் மரித்துக் கொண்டிருப்பதற்கான குறியீடு.

தொகுப்பினூடாய் செல்கையில் உதிர்ந்த இலைகளாய் விரக்தியும், மனச்சிதைவும், பைத்திய மனநிலையும் நமது காலடித் தடங்களில் நொறுங்குகிறது.

தான்யாவின்.

நீ என்பது உடைவின் குறியீடு

போரின் குறியீடு சமூகத்தின் குறியீடு

நானின் குறியீடு

பிறழ்விலிருந்து எழுதுங்கள் முறிவின் முதற் குறிப்பை

என்ற வரிகள் காத்திரமானவை. இம்மனப்பிறழ்வுதான் தொகுப்பு முழுதும் இழைந்து பின்னும் நூலிழை எனலாம். இவரது கவிதையில் திரும்பத்திரும்ப தெரிந்த எண்களை அழைப்பது, நிர்வாணமாய் ஓடும் அச்சம், கணமுறிவில் சுழலுள் செல்தல் என இருப்பே பிரச்சினையாயிருக்கிறது.

ஒரு கவிஞன் நிச்சயம் இப்படி ஒரு நிலையை எதிர்கொண்டிருப்பான். ஒரு கவிதை உருவாகி சோப்புக்குமிழி போல நினைவில் மிதந்து கொண்டிருக்கும். அன்றாட வாழ்வின் தனிமையமையா இயந்திரமயமாதலில் சோப்புக்குமிழியை பின்தொடர்ந்து எழுத்தில் வடிப்பதற்குள் அது உடைந்து காற்றில் கரைந்து பலநாளாயிருக்கும். என்னவென்றே மறந்து போய் வாழ்வின் ஏக்கங்களில் ஒன்றாய் மனதில் படிந்திருக்கும். ஓர் உண்மையை இங்கே ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். பெண்களின் செக்குமாட்டு சுற்றலில் இது அதிகம்.

வன்முறை என்பது ஒரு நாளில் பெண்ணிற்கு நடப்பது மட்டுமல்ல. மேலதிகமாய் ஒட்டுமொத்த பெண் வாழ்வையும் குடும்ப நியதிகளின் போர்வையின் கீழ் திருடிக் கொள்ளும் கபடம். அதுதான் கௌசலாவின் கவிதையில் படிமமும் குறியீடுமாய், உப்பும் புளியுமாய் குழம்பில் கரைகிறது.

எப்பக்கமும் வெளியேற வழியில்லா முட்டுச் சந்துகள் நிறைந்த புதிர்ப்பாதை சதுரப்பெட்டியான குடும்பத்தில் ஓடி ஓடி அலுத்துப்போய் மங்கிய பார்வையுடன் மலங்க விழித்திருக்கும் எலிகள் தானே பெண்கள்.

புலம்பெயர் குடும்பத்தில் பெண் மெல்ல மெல்ல மனச்சிதைவுக்கு ஆளாகிறாள். கிட்டத்தட்ட பைத்திய மனநிலைக்குத் தள்ளப்படுகிறாள். முடிவில் மரணத்தை நேசிக்கத் துவங்குகிறாள்.

தன் சுவடுகளை விட்டுச் செல்ல விரும்பும் துர்கா காலம் தன் சுவடு இன்றிக் கடப்பதை, புலம்பெயர்வில் அவள் கறை படிந்த இன்னுமொரு குருதித்துளியாய் நிற்பதை, ‘நேசிப்பதற்கும் நேசிக்கவும் வெறித்தபடி மரணம் மட்டும்என தன் இருப்பை வலியோடு பதிவு செய்கிறார்.

அன்றாட வாழ்வில் சுழலும் பெண்ணின் கவிதை இன்னும் எழுதப்படவேயில்லை. அவள் தனது வேலைகளை முடித்து வரவேண்டி அக்கவிதை காத்துக்கொண்டேயிருக்கிறது. அவளோ வேலையை முடித்தபாடில்லை.

பார்வை தெரியும் தூரம் வரை அழித்து அழித்து திரும்ப எழுதிய பின்னும் காலத்தை அழித்து எழுத கைவசம் எதுவுமற்று, ஐந்து தலைப் பாம்பையும் ஆயிரத்தெட்டு விரல்களையும் நினைவில் அழிப்பதெப்படி? கனவில் அழிப்பதெப்படி? நிஜத்தை விட்டுப் பிரியாது அடியொற்றி வரும் நிழல் பூதத்தை கத்திரிப்பது எங்கனம்? பாம்பு ஒரு முறை மட்டும் தீண்டுவதில்லை. வாழ்க்கை முழுதும் தீண்டியபடியிருக்கிறது, நினைவுகளின் மடிப்புகளிலும், கனவுகளின் கலங்கல்களிலும். யுகங்களுக்கு அப்பாலிருக்கும் கடிகார ஒலி குழந்தையின் அழுகையில் ஒடுங்குகிறது. விழுங்கும் ஒவ்வொரு கவளத்திலும் ஒட்டிவரும் துயரை விழுங்க முடியாது போவது தான் மைதிலியின் அவலம்.

சாதாரணப் பெண்களைப் பொறுத்தமட்டில் அங்கு நடந்து கொண்டிருந்தது நம்பிக்கைக்கும், நம்பிக்கையின்மைக்குமான யுத்தமே. காத்திருப்புக்கும் பொய்த்தலுக்குமான மனப் போராட்டம். இருப்புக்கும் இழப்புக்குமான வலி. பொழுது புலர்ந்து நிம்மதியாய் பொங்கி உண்டு பேசிக் களித்து உறங்க முடியாமற் போனதற்கான ஏக்கம்.

தனது முடிவில்லா யுத்தம்கவிதையில் நள்ளிரவில் வாராத உறவுக்காக விழிகளை எறிந்து காத்திருக்கும் பெண்ணின் துயரை முன்வைக்கிறார் ரேவதி.

துக்கமும் இறுக்கமும் குரூரமும் மிதமிஞ்சிப் போகையில் உடல்தான் ஆயுதம். இரண்டுதான் வழி. ஒன்று உடலை அழித்தல். மற்றொன்று உடலை ஆயுதமெனத் தரித்தல். தைரியமாக வாழ விரும்புகிறவர்கள் உடலை ஆயுதமாக்குகிறார்கள். எதை முன்வைத்து கழுத்து நெரிபட ஆதிக்கம் செலுத்துகிறார்களோ அதுவே ஆயுதம். அகமெங்கும் பொழியும் முன்பனிக்கால மந்தாரங்கள்நிவேதாவின் வீச்சான கவிதை. நோயில் வீழ்ந்த தேசமொன்றின் நிர்பந்திக்கப்பட்ட வாழ்தல் குறித்தும் அடையாளமற்ற அந்நியதேச ஒற்றை அட்டை சுதந்திரம் குறித்தும் கனவுகளில் புகையெனப் படரும் பிணங்களின் வாசம் குறித்தும் பதிவு செய்யும் இவர் குவேனியின் நினைவை வரித்தபடி, பாத்தியா சந்தோஷ், இராஜூவின் இனத்துவம் மீறிய காதல் பாடலுடன் தன்னை இனங்காண முயல்கிறார்.

சபிக்கப்பட்ட இறந்தகாலம் ஒருவருக்கு வாய்க்குமெனில் ஓர் அறையினுள் இட்டு பூட்டிவிடுவதோ அல்லது அதன்மேல் ஒரு சமாதி எழுப்பிவிடுவதோ நல்லது. அப்படிப்பட்ட இறந்தகால நினைவும் நிகழ்காலமும் இணைந்து பயணிக்க இயலாது. நிகழ்காலத்தின் கழுத்தை நெரித்து மூச்சுத்திணற வைத்து கொன்றுவிடும் வல்லமை கொண்டது இறந்தகாலம். எனில் இறந்தகாலமே ஆகச் சிறந்த எதிரி. யாரும் துக்கம் கேட்கவோ தெரிந்து கொள்ளவோ வினவாதிருக்கவேண்டும். மற்றுமொன்று, நாமே பழைய நாம்இல்லை என நம்பத்துவங்குவது.

இருட்டறைகளைப் பூட்டி திறப்புகளை வீசிவிடுகிறார் அனார். காற்றில் அலைகின்றன கனவுகள். வறண்டுகிடக்கிறது வெள்ளைநதி.

ஆழியாளின் மற்றுமோர் அவள் ஜனிக்கத்துவங்குகிறாள்என்ற கவித்துவமிக்க வரியையும், ‘ஒவ்வொரு தடவையும் தோற்றே போனோம், என்ற ஜெபாவின் வலி மிகுந்த வரியையும் குறிப்பிடத்தான் வேண்டும்.

தொகுப்பை வாசித்து முடிக்கையில் இக்கரைக்கும் அக்கரைக்கும் நடக்கும் போரில் குருதியாற்றில் தன் பிள்ளைகளின் உடல்கள் மிதப்பதையும், பிணக்குவியல்களில் பிள்ளைகளைத் தேடியும் காட்டில் தொலைந்த ஆசை மகவின் வாசனையை உணர்ந்தும் விசரியாகும் தாயின் மனநிலை நெஞ்சை ஊடறுத்துச் செல்கிறது. அரசியலின் ஆதி அந்தம் அறியாது, அடி முதல் முடி வரை வெறுத்து பைத்தியமாகி அலையும் அப்பெண்களின் யாசகம் எதுவாயிருக்கும்? வரலாற்றின் மறைக்கப்பட்ட பக்கங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் நடைப்பிணங்கள்தான் வன்முறை அழிவுகளின் உச்சம்.

ஓடினேன்முடியவில்லை

……

எமது காயங்களும் சிதைந்த உடல்களும் தெரியா

விம்பங்களாயின

உங்கள் செவிகளில் எம் குரல் கேட்கும் வரை

உரக்கக்கத்துவோம் யுத்தம் வேண்டாம்என்பது தான்

ஒலிக்காத இளவேனிலின் இறுதியான பெண் குரல்.

இறுதிவார்த்தைகள்கவிதையில் வரும்

பிறகும் பிறகும்

என்னை விட்டு வையுங்கள்

என்னிடம் உயிரை விட்டு வையுங்கள்

நான் வாழ வேண்டும்

எவனு/ளுடனோ

இந்த வாழ்வை

இருத்தலின்பெரும் வலிமையுடன்

தயவு செய்து

எனும் வரிகள் யுத்தத்தின் கோரமுகத்திடம் எளிய ஆனால் வலிய இறைஞ்சுதல்.

விழாத பிணத்துக்காய் அழாதே அம்மா

அழுவதுக்கு இனிமேல்

என்னிடம் கண்ணீர் இல்லையக்கா

விஜி ஐ.நா. என்ன செய்கிறது?

புதைகுழியை திறந்து திறந்து மூடுகிறதுஎன்று அரற்றும் பெண்களின் குரல்கள் தொகுப்பை மூடிவைத்த பின்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.

தம்மிடமிருந்து நிலத்தைப் பறித்துக்கொண்ட துர்வரலாற்றின் முன்பு பெண்கள் அகதிகளாகவே நிற்கிறார்கள். இதில் ஆண்கள் இழுத்த கோடுகளுக்குள் அடைபடும் நிலத்திற்கு என்ன பெயரிட்டால் என்ன? அதிகாரத்திற்கு சாய்ந்து சுழலும் உலகில் எந்த சதுர அடியில் நின்று பேசினாலும் பெண்களின் குரல் ஒன்றுபோலவே இருப்பது தற்செயலானது அல்ல. ஒலிக்காத இளவேனிலின் குரலும் அப்படித்தான் இழைகிறது.

(கனடா வாழ் இலங்கைப் பெண்களின் கவிதைத் தொகுப்பு, ‘ஒலிக்காத இளவேனில்வடலி வெளியீடாக வந்துள்ளது. தொகுப்பாளர்கள் தான்யா, பிரதீபா கனகா தில்லைநாதன். தொடர்புக்கு : வடலி, 10-வது குறுக்குத்தெரு ட்ரஸ்டு புரம், கோடம்பாக்கம், சென்னை 600 024.)

Advertisements
Leave a comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: