முற்றாத எலுமிச்சைகளின் இனிய மணம் – ஒலிக்காதஇளவேனில்: மதுமிதா

Picture 3026

திணிக்கப்பட்ட காலை
திணிக்கப்பட்ட எழுத்து
திணிக்கப்பட்ட ரசனை
திணிக்கப்பட்ட குறி – ஜெபா

ஒரு இனத்தின் மீது வலியத் திணிக்கப்பட்ட அடக்குமுறைகள், நிகழ்த்தப்பட்ட ஒட்டு மொத்த வன்முறைகள் அனைத்தையும் இந்தக் கவிதை ஒற்றைக்குறியீடாக அதன் கனத்தை சுமையை சுமந்து எடுத்துச் சொல்வதாகவே தோன்றுகிறது.

’ஒலிக்காத இளவேனில்’ பதினெட்டு பெண் கவிஞர்கள் எழுதிய கவிதைகளின் தொகுப்பாக வடலி வெளியீடாக வெளிவந்திருக்கிறது.
தொகுத்த தான்யா, பிரதீபா கனகா – தில்லைநாதன் என்றென்றும் பாராட்டுதலுக்குரியவர்கள்.

ஒவ்வொருவரின் ஒவ்வொரு கவிதையும் கவிதையின் ஒவ்வொரு வரிகளும் ஓராயிரம் கதைகளைச் சொல்லிச் செல்கின்றன. ஒரு சிறிய வாசிப்பனுபவமாக இதை எழுதிச் சென்றுவிட முடியாது. ஒவ்வொரு கவிதையையும் வரி வரியாக ரசிக்கும் அளவுக்கு ஒரு நிகழ்வாக நடத்தப் பட வேண்டிய அனுபவத்தை சில பக்கங்களில் எழுதிவிட முடியாது என இத்தருணத்தில் உணர்கிறேன். எழுதி முடித்த பின்னும் குறிப்பிடப்படாத கவிதைகளின் வரிகள் என்னை குற்ற உணார்வில் ஆழ்த்தும் என்பதை அறிந்தே இருக்கிறேன். முழுமையாகச் சொல்லிவிட முடியாதபடிக்கு ஒன்றைச் சொல்ல வருகையில் இன்னொரு உணர்வினை முன்னும் பின்னுமாய் ஊடு பாவாகப் பின்னி வரிகளில் நூதன உணர்வின் வெளிப்பாட்டினை அள்ளித் தெளித்திருக்கின்றனர்.

கவிதைகளின் கரு தேசத்தின் மீதான நேசம், யுத்தம் மீதான கசப்புணர்வு, பிரிவு, காதல், காமம், ஏக்கம், தனிமை, கனவு, அச்சம் என பல்வகை உணர்வுகளை வெளிப்படுத்துபவையாக உள்ளன கவிதைகள். ஒரு கட்டுக்குள் இந்தக் கருவை முன்னிறுத்துகின்றன எனச் சொல்லவியலாதபடிக்கு இன்னும் இன்னும் பல்வேறு வெளிகளில் பரந்து விரிந்து வியாபிக்கின்றன.

ஊடறு – விடியல் வெளியீடாக ஈழப் பெண் போராளிகளின் ‘பெயரிடாத நட்சத்திரங்கள்’ கவிதைத் தொகுப்பு வாசிப்புக்குப் பிறகு வெளி வந்த இலங்கைப் பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு என்ற அளவில் முக்கியத்துவம் நிறைந்ததாக இருக்கிறது. அந்த பாதிப்பிலிருந்து வெளிவருவதற்கு முன் இந்தத் தொகுப்பு இன்னுமொரு புதிய அலைவரிசையில் பதிவாகி இருக்கிறது.

ஒரு நினைவை ஒரு நிகழ்வை ஒரு மகிழ்வை ஒரு சோகத்தை ஒரு அனுபவத்தை ஒரு கவிதை வெளிப்படுத்தலாம். ஒரு எதிர்பார்ப்பை ஒரு ஏக்கத்தை ஒரு தனிமையை ஒரு விருப்பை ஒரு நிதர்சனத்தை கவிதை வெளிப்படுத்துகையில் அது ஒரு உன்னதக் கலைவெளிப்பாடாக அமைகிறது. இந்தப் புத்தகத்தில் தொகுக்கப்பட்ட கவிதைகள் அத்தகு அனுபவத்தை நம்முன் காட்சிப்படுத்துகின்றன.

நிவேதாவின் கவிதைகள் இத்தகைய தன்மையைக்கொண்டவையாக வெளிப்படுகின்றன.

அறியாப் பருவமதில்
அந்தரங்கங்கள் அத்துமீறப்பட்டு
கதறித் துடித்தபடி
கண்விழித்திருந்த இரவுகளினதும்
இவர்களது அருவருப்பூட்டும் தீண்டல்கள்
கலைத்துப்போன கனவுகளினதும்
நீட்சியில்
கற்பனையின் எல்லைகளை மீறுவதாயிருக்கிறது…
இவர்களுள் ஒருவனோடு காதலில் வீழ்வது!

காதலே இன்பத்தை நல்குவதைவிட வலியும் வேதனையும் நிரம்பியது. இப்படிப்பட்ட ஒருவனோடு காதலில் விழும் வலி என்ன ஒரு ஆக்ரோஷமான வலி.

’எலுமிச்சைகள் பூக்கும் நிலம்
எங்கிருக்கிறதென்று உனக்குத் தெரியுமா?’ என்னும் கதேயின் கவிதை வரிகள் ஐரோப்பிய இலக்கிய உலகில் மிகப் பிரபலமான வரிகள்.

கதே தன்னுடைய ’காதலின் துயரம்’ நூலில் தனது நண்பனுக்கு, கடிதம் வழியாக காதல் நாயகி ’லோதே’ வின் மீதான தனது காதலையும் துயரத்தையும் எழுதிக்கொண்டே இருக்கும் நாயகன் ’வெர்தர்’ தனது காதலையும் அதனால் அவன் ஏற்கும் துயரத்தையும் கடிதம் முழுக்க எழுதிக்கொண்டே இருப்பான். கடைசியில் .தனது காதலியின் கையால் பெறப்பட்ட காதலியின் கணவனின் துப்பாக்கியால் தன்னைச் சுட்டுக்கொல்வதற்குமுன்பு, தனது மறைவுக்குப்பிறகு தன்னை எலுமிச்சை மரங்களின் கீழ் புதைக்கும்படி எழுதிவிட்டுச் செல்வான். ‘தேவாலயத்தின் சுற்றுப்புறத் தோட்டத்தில் பின்பக்க மூலையில் வயல்வெளிகளுக்குப் போகும் பாதையில் இரண்டு எலுமிச்சை மரங்கள் உள்ளன. அங்கேதான் நான் உறங்க விரும்புகிறேன்’ என்று எழுதிவைத்துவிட்டுத் தன்னை மாய்த்துக்கொள்கிறான் வெர்தர். இறந்த பிறகும் எந்த இடத்தில் புதைக்கப்பட்டு இருக்க வேண்டும் என்ற விருப்பும் கலைஞனுக்கு இருக்கிறது.

ஒரு நிலமோ ஒரு வீடோ ஒரு மரமோ அதன் வாசமோ என்பது ஒரு நிலம் ஒரு வீடு ஒரு மரம் ஒரு வாசம் மட்டுமல்ல. அது நமது முந்தைய நாம் வாழ்ந்த வாழ்க்கையும் வாழ்வில் நாம் அறிந்த வாழ்வின் மீதான விட்டு விடவே முடியாத நேசமும் ஆகும். ஒவ்வொருவருக்குள்ளும் தனது சொந்தமான வீடு குறித்த ஒரு கனவு இருக்கும். ஒரு மனிதனின் வாழ்க்கையின் ஒரு பகுதியென்பது ஒட்டுமொத்தமாகப் பொதுவில் பார்க்கையில் தனக்கென ஒரு குடும்பம், அதில் தன் குழந்தைகளுக்கென சொத்தும், சொத்தாகத் தனியாக ஒரு வீடும் கட்டி முடிக்கப்படுகையில் முதுமை நெருங்கி இறப்பின் பாதையில் அடியெடுத்து வைத்துவிட நேரும். பாரதி தனக்கொரு காணிநிலமும் தென்னைமரங்களும் பக்கத்தில் பத்தினிப்பெண் வேண்டுமென்றும் பாடி இருப்பர்.

இதோ நிவேதாவின் பாடலைப் பாருங்கள்:

எனக்கென்று ஒருநாள் வரும்
பௌர்ணமி நிலவொளியில்…
தென்னை மரங்களின் சலசலப்பினூடு
முற்றாத எலுமிச்சைகளின்
இனிய மணத்தினை நுகர்ந்தபடி…
திறந்த ஓலைக் கொட்டிலுக்குள்…
சாக்குக் கட்டிலின் மீது
நீட்டி நிமிர்ந்து உறங்குவேன் நான்
நீங்கள் மட்டுமல்ல…
வேறெவருமே
என்னை ஏனென்று கேட்கமுடியாதபடி.

பதுங்குகுழிகளில் வாழ்க்கை முடிந்துவிடாதபடிக்கு அனைவரையும் போல் வாழவேண்டும் என்னும் சுதந்திர வாழ்க்கை, யாரும் ஏனென்று நம்மைக் கேட்கமுடியாதபடி வாழ வேண்டிய வாழ்க்கை இனிமையானது அல்லவா. இனி எப்போது இவ்வாழ்க்கை நம் மக்களுக்கு வாய்க்கும்.

ரேவதி தனது கவிதையில்:

நிச்சயமற்ற வாழ்விற்குப் பழக்கப்பட்டவர்கள்
எதற்காகவும் காத்திருப்பதை விரும்புவதில்லை… என்கிறார்.

வாழ்க்கையே நிச்சயமில்லை எனும்போது இவர்கள் ஏன் எதற்காகவும் காத்திருக்க முடியும். என்ன ஒரு நிச்சயமற்ற வாழ்க்கை. என்ன ஒரு நிதர்சன உண்மை.

யுத்தபூமியும், யுத்தபூமியை தாய்நாடாகக் கொண்டவரும் புலம்பல்களையும் வேதனையையுமே எழுதி வருகின்றனர் என்ற சிலரின் கூற்றினையே முற்றிலும் மறுத்து ஒதுக்கித் தள்ள விளைகிறேன். அவர்களின் இந்தக் கூற்றினையே நான் புலம்பல்களாகக் கருதுகிறேன். அந்த வாழ்க்கையை வாழ்ந்து பார்க்காத அந்த வேதனையை அறியாதவர்கள் கூறும் பிதற்றல் மொழிகளே ஆகும். இவர்களின் எழுத்தையே வாசிக்க முடியாது நாம் வெறும் உள வலியைச் சுமக்கிறவர்கள் ஆகிறோம். எனில் நிச்சயமற்ற வாழ்க்கையின் ரணத்துயர் அளிக்கும் மரண அவஸ்தையின் உச்சத்தில் இருப்பவர் அதனை எவ்விதம் வெளிப்படுத்தாமல் இருக்க முடியும். அதைப் பதிவுசெய்யும் அவர்களின் அந்த நேர்மைதான் அவர்களின் கவிதைகளுக்கு உயர்வினைத் தருகிறதல்லவா. வேறு எந்த இலக்கண இலக்கிய வகைமுறைமைகளை விட இந்த கவிதைகள் சுமக்கும் கரு உன்னதமான உண்மை உணர்வுகள்.

கணவனை இழந்த மனைவிகள், மகனை இழந்த தாய்கள் என ஒருவரை இழந்து இன்னொருவர் வாழ்வதான நிலையையே அதிகம் காண்கிறோம். வாழ்வின் இணைந்த இனிக்கும் உறவுகளை பிணங்களாகவே பார்க்க நேர்வது என்ன ஒரு கொடுமை. பிறக்க விருக்கும் மழலையிலும் பிணத்தைப் பார்க்க வேண்டிய நிலை. இன்னும் அதிகமாகத் தன்னையே பிணமாகக் காண நேரும் அவலம். அந்த வலியினை கவிதைகளாக உக்கிரமாக பதிவு செய்திருக்கின்றனர்.

கற்பகம் யசோதரவின் ’யுத்தம் என்ன செய்தது’ கவிதையும் சொல்கிறது:

அவள் தலையிலடித்- தடித் -தழுகிறாள்
நம்பிக்கையை
ஐ. நா. திறந்து திறந்து மூடுறது
தெய்வமே, நீ எங்கிருக்கிறாய்
நான் காற்றோடும் மரத்தோடும்
கோடை நிலத்தின் மேலாய்
என்னோடு தோன்றிடும்
நிழல் தோறும் பேசினேனே

பிள்ளைகளின் பிணத்தில் நிலம்
பிள்ளைகளின் கனவில் கொலை
பிள்ளைகளின் விளையாட்டில் சூடு.

ஜெபா எழுதிய ’வெளிகளில் தோற்கும் பிணங்கள்’ கவிதை,

’பிணங்கள்/ பெண் பிணங்கள்’ என முகத்தில் உண்மையை அறைந்து சொல்கிறது. பெண்கள் பெண்களாகப் பார்க்கப்படாமல் உடல்களாகப் பார்க்கப்படுவதே பெரிதும் அவலமான நிலை. அதிலும் பெண் பிணமாகவே பார்க்கப்படுவது…

அனாரும் எனக்குள் வசிக்க முடியாத நான் கவிதையில் எழுதுகிறார்:

எந்த சிதையில் எரிகின்றது
என் உடல் ?

எல்லாவற்றிலும் எல்லோரையும் தானாகப் பார்க்கும் கவிமனம் எத்தனை வலி தாங்கி இது போன்ற கவிதைகளைக் கருக்கொண்டிருக்கும்.

நிவேதாவின் ’புகையெனப் படரும் பிணங்களின் வாசம்’, கவிதையில் என் கனவுகளெங்கும் பிணவாசம்
புகையெனப் படர்ந்தது
இனி, அகாலம் விடியும் வேளையில்
என் படுக்கையின் மீது
நிணக்கூழ் வடியும் கண்களுடன்
பிணமொன்று தவழும் மழலையென..

தான்யாவின் ‘எத்தனை குழந்தைகள்’ கவிதை காலம் காலமாக பெண்ணுக்கு நடக்கும் குழந்தை சுமத்தலின் முற்றிலும் சுடும் வலியின் தொனியினை முன்வைக்கிறது.

ஒவ்வொரு உறவும்
கர்பப்பையை நிரப்பவே
என்பது தரும் தளர்ச்சியான உணர்வை
யாரும் புரிந்து கொண்டதேயில்லை…

சிறிய துவாரங்களுள்
பாம்புகள் நுழையும்/ நுழைகின்றன.

இன்னுமொரு கவிதையில்:

கொடிய கனவுகளைக்கொண்ட
குழந்தை பெற விரும்பாத – ஒருத்தியை
நினைத்தபடி இருக்கப் போவதில்லை… என்கிறார்.

இத்தொகுப்பில் இன்னும் சில கவிதைகளிலும் பாம்பு விசேஷமான பொருளில் கையாளப்பட்டுள்ளது.

வசந்தியின் வரிகளைப் பாருங்கள்:

கேவலம்
கண்டவிடமெல்லாம் ஊர்ந்து திரிகின்ற
அற்பப் பாம்பிற்கு
இத்தனை
அந்தஸ்தா?

ரகஸ்யம் 2 கவிதையில் வசந்தி எழுதுகிறார்:
ஆண்டாண்டு கால
கர்ப்பப்பை ஒடுக்கல்களில்
இறுகிக் கிடக்கும்
ஜனன ரகசியங்கள்
ஆவேச வெடிப்புக்காய்… என.

கருவறையின் இருட் சுடரில்
மற்றுமோர்
‘அவள்’
ஜனிக்கத் தொடங்குகிறள் – என்கிறார் ஆழியாள்.

வீடு என்ற ஒன்று முதல் முதலாகக் கட்டப்பட்ட அந்தக் காலம் தொட்டு இப்போது வரையிலும் பெண்கள் வீட்டுக்குள் பூட்டப்பட்டுக் கிடந்தவர்கள். கிடப்பவர்கள். பாதுகாப்புணர்வு கருதி பகலில் வெளியில் சென்றாலும் இரவுகளில் வீட்டுக்குள் அடைபட்டுக்கிடக்க வேண்டியவர்களாகவே இருக்கிறார்கள்.

பெண்ணுக்குள் பறத்தலின் சுதந்திரம் அறிந்த ஒரு சிறகு விரிக்கும் பறவை எப்போதும் இருந்துகொண்டே தான் இருக்கிறது. பெண்ணுக்குள் வனத்துள் தன்னைப் பிணைக்கும் விலங்கின்றி சுற்றித் திரியும் விலங்கின் ஒரு வேட்கை இருந்துகொண்டே தான் இருக்கிறது. பெண்ணுக்குள் கடலுள் தன்னிச்சையாய் அலைந்து நீந்திச் செல்லும் மீனின் விருப்பு இருந்துகொண்டே தான் இருக்கிறது.

ஆணால் அறிந்துகொள்ளப்படவே இயலாத இந்த வேட்கையினை இதோ ஒரு அடைபட்ட இனத்தின் வரம்புகளை உடைத்தெறிய விரும்பும் இந்திராவின் இந்த அர்த்தமுள்ள வரிகளில் காணலாம்:

எனக்குள் ஒரு ஜிப்சி
எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறாள்
அவள் –
வரம்புகளை உடைத்தெறிந்து
ஒரு புறாவைப் போல பறந்திட
ஏங்கிக் கொண்டிருக்கிறாள்.
நாடற்று
நிலமற்று
சுதந்திரமில்லா இந்த வாழ்வுற்றும்
பறந்திடக் காத்திருக்கிறாள்.

அரசியலானாலும் வேறு எந்தத்துறையினைச் சார்ந்ததானாலும் வலியவனின் முன் மெலியவனின் நியாயமான குரல் எழும்புவதேயில்லை. உரிமை வேண்டி உண்மையினை உரத்த குரலெடுத்து கூக்குரலிட்டாலும் அது வலியவனின் முன்பு எடுபடுவதும் இல்லை. இயற்கை நியதியாகவும் உலக நியதியாகவும் ஆகிவிட்டது இது. மேலும் வலியவன் கூறும் பொய்கூட உண்மையென ஆணித்தரமாக ஆக்கப் பாடுபட்டு மேற்கொள்ளப்படும் விந்தையை வரலாறு நெடுகிலும் பார்த்துக்கொண்டுதானிருக்கிறோம்.

’விலகலுக்கான நெருக்கத்தில்’ எனும் நீள் கவிதையை எழுதிய தர்சினியின் இந்த கவிதையைப் பாருங்கள்:
உரத்து உச்சரிக்கத்தான் ஆசை
எனது குரலை
ஆனாலும்
அலையாய் ஆர்ப்பரிக்கும்
ஏனைய குரல்களில்
அது அர்த்தமிழந்து விடுகிறது.

பிரதீபா Weapon of Mass Destruction கவிதையில் சொல்கிறார்:
உலகத்தில் என்னென்னமோ நடக்கும்.
ஒவ்வொரு மூலையிலும் வல்லவர்கள் ஆளுவார்கள்.
முதலாம் உலகங்களில்;
மின்கம்பங்கற்கு மேல்
பறவைகள் சுழல்வதை
“போர் விமானங்கள் போல” எனவும்
தொலைக்காட்சியில் ஒளி சிதற
கிராமமொன்றில் குண்டு விழும்
சற்றலைட் காட்சியை
“இரவில்
நட்சத்திரங்கள் மின்னுவது போல” எனவும்
எழுதிக்கொண்டிருப்பர் கவிஞர்.

இன்னும் நீள்கிறது கவிதை.

கற்பகம் யாசோதரவின் ’வரலாற்று மறதி’ கவிதையும் றெஜியின் தெரியாத விம்பங்கள் நீள்கவிதையும் இரத்தக் கண்ணீர் ஆறுகள்.

துர்க்காவோ தனது சுவடுகளை காலங்களில் பதிந்து செல்ல விரும்புகிறார்.

அவரின் மகள்
இவரின் மனைவி
உங்களின் தாய் என்பதை விட
நான் என்பதாக
விட்டுச் செல்ல விரும்புகிறேன்
எனக்கான என் சுவடுகளை

பெண்மனதின் இன்னொரு மாற்றம் கண்ட பரிமாணமாய் ஒழுக்க மீறல்கள் என பொதுபுத்தியுடன் எழுப்பப்படும் சமூக அக்கறை நிறைந்த கேள்விகளைக் கேள்விக்குறியாக்குகிறது. சமூகத்தில் மனமொத்த ஆண், பெண் இருவர் உடல், மனம், ஆன்மா இணைய உயிராய் இழைந்து இணைதால் என்பது அநீதி, துரோகம் மேலும் பாலியல் மீறிய பிழையாகவே கருதப்படுகிறது. இந்த அநியாய சமூகத்திற்கு அங்கீகாரம் கொடுத்தது யார் என சரண்யாவின் கவிதை வினவுகிறது:

அருகில்: கணவனை விட்டு
வேற்று ஆணுடன் உறவு வைத்திருக்கும்
மனைவியாய் மட்டும் நான்.
தொடரும் உறவுகளில் திளைத்திருக்கும்
உன்னை அங்கீகரிக்கவும்
துணிவும் தன்னம்பிக்கையுமுள்ள
என்னை நிராகரிக்கவும்
இந்த அநியாய சமூகத்திற்கு
அங்கீகாரம் கொடுத்தது யார்?

சரண்யாவின் வேறு கவிதையின் இன்னும் சில வரிகள்:

உடைத்து விட்ட உறவும்
கட்டில்லா காதலும் காமமும்
எதைக் கொண்டு வருமெனப் பார்த்திருக்கிறேன்…

கௌசலாவின் கவிதை சொல்கிறது:

அகலிகை புத்திசாலி.
அறிவுக்கும் உணர்விற்கும்
உறவு என்னவாயிருக்கும்?

இப்படித்தான்
காதல்களும்
வாழ்தல்களும்
செத்தும் பிறந்தும்…
மனிதருக்கு எதற்கு வாழ்க்கை…?

தர்சினியின் ‘விலகலுக்கான நெருக்கத்தில்’ கவிதை முழுவதுமாய் மனம் கனத்துப் போகச் செய்கிறது.

ரேவதியின் கவிதையும் இதை உரத்துப் பேசி ஒரு நேர்மையான புதுப் பார்வையினை முன் எடுத்து வைக்கிறது. ‘சிதிலமடைந்த வாழ்க்கை’ என்கிற தலைப்பே ஒரு குறியீடாக நிகழ்த்திக் காட்டுகிறது.

குறிகளும் யோனிகளும் இன்று இப்படித்தான்
எதற்காகவும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை
அவை தமது நிமிடத்தினை
வாழ்ந்து விடவே விரும்புகின்றன…

ஒரு பெண்
தன் கணவன் தன்னைச் சந்தோசப்படுத்த முடியாதவன்
என்பதனால் அவனை நிராகரிக்கிறாள்
அந்த நேர்மை எனக்குப் பிடித்துப் போகிறது…

சரண்யாவின் ’உனது அறைக்குள் என்னை அழைக்காதே’ கவிதை முழுக்க முழுக்க ஒரு பெண்ணின் சிதைந்த உணர்வுகளை, அவளுக்கு நிகழ்ந்த நம்பிக்கை துரோகத்தை, இழைக்கப்பட்ட அநீதியை எரிமலைக் குமுறல் வார்த்தைகளால் நிறைக்கிறது.

’ஒருபோதும் எழுதப்படாத கவிதையை’ எழுதிய ’தான்யா’வின் ‘தற்கொலை பற்றி அறிந்திராத ஒருவள்’ தரும் உணர்வலைகள் உணர்வின் உச்சத்தினைக் காணுங்கள்:

அத்துவான வெளியில்
வாழ்க்கையின் நம்பிக்கையைத் தொலைப்பது
இயலாமற் போகிறது
சாகசக்காரியாய், ஆறாய், நீர்வீழ்ச்சியாய்
படகாய் குழந்தைகளாய்
கீழே வாகனங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன
மேலே
கோபமும் விவேகமும் தாபமும் நிறைந்தவள்
சேர முடியாதபடி
வாழ்க்கை அவளை வசீகரிக்கிறது.

வசீகரிக்கும் வாழ்க்கையை வாழவே அனைவரும் விரும்புகிறோம். ஆனால், அந்த வாழ்க்கையை அப்படியே சுதந்திரமாய் விருப்புடன் வாழ அனுமதிக்கிறதா காலம். அப்படி அனைவராலும் வாழ இயலுகிறதா? அதுவும் போர்பூமியில்.

நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் இவர்களுடன் இவர்களின் நம்பிக்கையைப் போலவே ஒரு நாள் அந்தக் காலம் நிச்சயம் வாய்க்கும் என்று. அன்று அந்த நம் பூமியில் கிரிவெஹர பாதையில் நான் நம் தோழிகளுடன் நடந்து செல்வேன் என்னும் நம்பிக்கையுடன் இதை முடிக்கிறேன்.

அன்புடன்
மதுமிதா
1.03.2013

Advertisements
Leave a comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: