பிற்சேர்க்கை 01: ஒலிக்காத இளவேனில் 2006-7

(சில கேள்விகள்… குறிப்புகள்…) பெயரற்றவை: ஒலிக்காத இளவேனில் பற்றி..

0

2003 – ஒரு கோடை காலம்: பெண்களின் கவிதைகளைத் தொகுப்பது பற்றியெழுந்த ஓர் எண்ணம் சாத்தியப்படாமைக்கு, எமக்கு தடைகள் இருந்தன.

குழுக்களைச் சார விரும்பாத தொகுப்பாளர்களாய் (பெண்களாய்) நாம் இருந்ததும்; தனிப்பட்ட எங்களுடைய தொடர்புகள் மற்றும் ஈழத்துடன் தொடர்ச்சியற்ற, அரசியலற்ற-பதிப்பகங்களூடாக புத்தகம் கொணருவதையிட்டு, இடைத் தரகர்கள் ஊடாகப் பதிப்பகங்களை அணுகுவதிலும் எமக்கிருந்த விருப்பின்மைகள் என வேறும் காரணங்களால் தடைப்பட்டபோதும், இத் தாமதமும் கூட பெண்களின் சொற்பமான தொடர்புகள் (ஆண்-வழிப் பதிப்பகங்கள்) நிர்ணயிக்கிற ஒன்றாகவே படுகிறது.

இத் தொகுப்பிடம் நாம் மீள்கிற இந்தக் காலம், 2002 கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்தம்(?) முடிக்கப்பட்டு, மீளவும் ஈழ-இலங்கை யுத்தம் ஆரம்பித்து விட்டது. 1980 – 90களிலிருந்தும் மாறுபட்டு அதி தீவிரமாய் கொடும் யுத்தம் (அழிவின் இன்னொரு முகம்) திரும்புகிறது. கடந்த காலங்களில் யுத்தத்திடம் அதன் ஆயுதங்களிடம் தம் இளமையை இழந்த 80களின் தலைமுறையும் அவர்களது, அவர்களுக்கு அடுத்த புதிய தளிர்களும் யுத்தத்துள் சிக்குகின்றனர்.

இக் காலப் பகுதிகளில் ஈழ அரசியலுடன் தொடர்புடைய, அல்லது அப் பிரதேச பின்புலத்தை உடைய பெண்களின் எண்ணங்ளே இங்கே இணைந்திருக்கின்றன.

மேலும், இதுவொரு புலம்பெயர்ந்த இலங்கைப் பெண்களை மையப்படுத்திய தொகுப்பே ஆகும். எமது குறுகிய தொடர்புகளுக்கமைய இலங்கையிருந்து பெண்கள் நால்வர் எழுதியிருக்கின்ற போதும், யுத்தம் நடக்கிற பிரதேசம் உட்பட இலங்கையின் ஏனைய பகுதிகளது பெண் குரல்கள் இங்கே உள்ளடக்கப்படவில்லை. அறிமுகத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது போல, யுத்தத்தின் தொடர்ச்சியான நம் புலம்பெயர் சூழலிலும்  தம் பிள்ளைகளை வன்முறைக்கு தாம் பெயர்ந்த நிலங்களின் அரசியல்களுக்கு பறிகொடுக்கும் அவலத்தையும், விளிம்புகள் எனப்படும் சமூகத்தில் கீழ்நிலைகளாய் இருப்பவர்களை நோக்கிய அவதானங்களை முன்வைத்தலுமே இந் நூலுக்கான எமது பின்னணியாய் இருந்தது. எம்மைத் அச்சுறுத்தும் வன்முறையான ஒரு காலத்தைப் பதிவு செய்ய, பிரேரிக்கப்படுகிற புலம்பெயர் கவிஞர்கள் எனப்படாதவர்களை நாம் தேடிச் செல்லும் பொருட்டு உருவான ஒன்றே இத் தொகுதியாகும்; அதே தேடல், ஈழத்தில் உள்ள வெளித்தெரியாத படைப்பாளிகள் தொடர்பாகவும் வருதல் அவசியமானது என்கிற புரிதலுடனேயே இத் தேடல் தொடங்கியது.

இச் சந்தர்ப்பத்தில், மீளவும், ‘பெண்களின் கவிதைகள்’ என்கிற அடைமொழி எங்களளவில் ஒரு மேலதிக தகவலே/அம்சமே தவிர இக் கவிதைகளை நிர்ணயிப்பதற்கானது கிடையாது என்பதைக் கூறவேண்டும். அத்துடன், இத் தொகுதி வெளிவருகிற பொழுது,’பெண்’ அடையாளமும் ஏனைய விளிம்புகளினை ஒத்தது என்கிறதை விளக்க வேண்டிய கட்டத்தை -பல தொகுப்புகளூடாக, உரையாடல்களுடாக- கடந்து விட்டிருக்கிறோம். எமதல்லாத/எமது கட்டுப்பாட்டுள் அடங்காத காலங்களைப் பார்த்துக் கொண்டே சலனமற்றுக் கடக்கும் வலியின் உறைவே இது.

– 1 –

இவ் இடைப்பட்ட காலத்தில்,’சுவிஸ்’ றஞ்சி,’ஜேர்மனி’ தேவா ஆகியோர் தொகுப்பில் ”மை” தொகுதி (ஊடறு வெளியீடு, 2007), அ.மங்கையின் தொகுப்பில் ‘பெயல் மணக்கும் பொழுது’ (இந்தியா, மாற்று பதிப்பகம், 2007) என்பன இலங்கைப் பெண்களது கவிதைகளுடன் வெளிவந்தன.

1.         (மை) கவிதைகள் குறித்த ‘தர அளவுகோல்களின்றி’ ‘பெண்கள் எழுதியவை’யைத் தொகுத்தல் எனவும்

2.         (பெயல் மணக்கும் பொழுது) ‘ஈழப்பெண்கள் (என்கிற நெகிழ்வு மனநிலையுடன், அவர்கள்) எழுதியவையைத்’ தொகுத்தல் எனவும் வகைப் படுத்தலாம்.

பெண்களது இந்த இரு நூல்கள் வெளிவருவதற்கு முன், தமிழவனின் தொகுப்பில்’ஈழத்தின் புதிய தமிழ் கவிதைகள்’ (காவ்யா: முதற் பதிப்பு 2005) நூல் வெளிவந்திருந்தது. அதில்: புதிய கவிஞர்களில் ஈழத்தின் மூத்த தலைமுறைகளான சண்முகம் சிவலிங்கம், ஜெயபாலன், நுஃமான், சேரன், சிவசேகரம் தவிர அவர்களுக்கு அடுத்த தலைமுறைகளான ஆத்மா, நட்சத்திரன் செவ்வியந்தியன், ஆழியாள் கூட 1990களைச் சேர்ந்தவர்களே (கவனிக்க: இந் நூல் 2005ம் ஆண்டு வெளிவந்தது!). அவர்கள் எழுத வந்து – கவிதை எழுதாமலும் விட்டிருக்கக் கூடிய – ஒரு 15 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழவனின் தொகுதியில் இளம் தலைமுறையினராகத் தொகுக்கப்பட்டிருந்தனர்.

இத் தொகுத்தல் என்பது, ஒருவகையில் இலங்கையில் நடந்துகொண்டிருக்கும் யுத்தம் தொடர்பான (அதன் விளைவுகள் சற்றேனும் தெறிக்கிற சமகாலத்தைய இலக்கியங்கள் தொடர்பான) அது அறிமுகமான அவரவர் காலப்பகுதியை மையப்படுத்திய ஒரு தேக்க நிலையையே அறிவித்தது. உலகமெல்லாம் புலம் பெயர்ந்து-பரந்து வாழும் ஈழத் தமிழர்களில்,

–           1980களிற்கு முன்னர் புலம்பெயர்ந்தவர்கள்

–           1980களில் புலம்பெயர்நதவர்கள்

–           1990 – 1995களில் புலம்பெயர்ந்தவர்கள்

–           2000-இல் புலம்பெயர்ந்தவர்கள்

என்கிற அடுக்குகளில் ஒவ்வொருவருக்கிடையே உள்ள மாபெரும் அரசியல், பொருளாதார வேறுபாடுகள் ஒருபுறம் இருக்க, ஒவ்வொரு அடுக்குகளிலும் உள்ள அவர்கள் ஒவ்வொருவரையும் தாம் இலங்கையை விட்டுவந்த அந்தந்தக் காலத்தில் ‘தேங்கியவர்கள்’ எனவும் சொல்லலாம். தாம் விட்டுவந்த அந்தக் காலப் பகுதிக்குரிய அரசியலையே அவர்கள் பேசியபடி இருப்பார்கள். இன்று போரை முகங் கொடுக்கும் இலங்கையுள் வாழும் மக்களை நோக்கி அவர்களது அரசியல் நோக்கு முன் நகராது. அதையொத்த ஒரு செயலே தமிழவனின் தொகுப்பாக்கத்தின் அறமுமாக இருந்தது. ?? கவிஞர்கள் அடங்கிய அத் தொகுயில் பெண்களாய்: ஆழியாள், ஊர்வசி, ஒளவை, சிவரமணி, செல்வி, மேஜர் பாரதி ஆகிய ஆறு பெண்களது கவிதைகள் தொகுக்கப் பட்டிருந்தன.

– 2 –

பெரிதுவக்கப்படும் ஈழப் பெண் குரல்கள் 1980, 1990களிற்குப் பிறகு என்ன ஆயின? ஆப்போதுங் கூட பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்-இல் இல்லாத பெண்கள், மரணத்துள் வாழ்வோம்-இல் ‘நம்பிக்கை தந்த’ சில பெண்கள், 1980களின் பெண்கள், 1990களின் இரெண்டொரு பெயர்கள்…. மைதிலி, ஆழியாள், பின் ஆகர்ஷியா மற்றும் போராளிக் கவிஞைகள்… அவற்றைத் தவிர? அவற்றின் பிறகு?

பெண்களின் மௌனம் யாரையும் தொந்தரவு செய்ததில்லை (பெண்களையே கூட! இத் தொகுப்பில் எழுதிய பெண்களில் அனேகமானவர்கள் இத் தொகுப்புத் தாமதமான போதிலும் தங்களது கவிதைகளை வேறெங்கும் பிரசுரித்திருக்கவில்லை. அது, பெண்களாய் தமது எழுத்துக் குறித்த அவர்களது அலட்சியத்தையும்,  தன்முனைப்பின்மையையுமே வெளிப்படுத்துகிறது); அவர்கள் கொல்லப்பட்டிருந்தாலோ தற்கொலை செய்திருந்தாலோ தவிர அவர்களது மௌனத்தில் அதிர்வுகள் என்று சமூகத்தில் எதுவும் இருந்ததில்லை. அந்தந்தக் கால பதிவுகளாய் அவர்களது பிரதிகள் காற்றில் எழுதப்பட்டு மறக்கப்பட்டும் விட்டன.

80கள் தொடங்கி, பிறகும் இந்த யுத்த காலங்களில் பாதிக்கப்படுபவராய் – சகல வன்முறைகளதும் இலகு இலக்குகளாக – பெண்களே இருக்கின்ற போதும், இது வரையில், தம் துயரை, எதிர்ப்பை, அறியப்படுகிற நம் ‘கவிஞன்‘களைப் போல ஒரு அரசியலாய்க் கொண்டு சென்ற, ஒரு பெண்ணைத் தானும் இலக்கியத்தில்க் குறிப்பிட/அறிய முடியவில்லை (அல்லது, அந்தக் குரல்களை யாரும் கொண்டு செல்லவில்லை; உரத்துப் பிடிக்கவில்லை எனலாமா?). கடந்த காலங்களில், இலங்கைக்கு வெளியிலும் சரி உள்ளேயும் சரி இதுவே யதார்த்தமானது.

– 3 –

”ஈழம்” மையப்படுத்தப்பட்ட வெளியீடுகளில் பெயர் கூறல்களை ஓர் வன்முறை போலவே நாம் செய்து வருகிறோம். சிவரமணி கூட விரும்பியிருக்க மாட்டார், இந்தக் காலத்தையும் தானே பிரதிபலித்துக் கொண்டிருப்பதை (‘எந்தக் காலமும் இதைவிடச் சிறந்ததல்ல’ என நிகழ்காலத்தைப் பாடியவர் அவர்). காலம் சிவரமணியிம் செல்வியிலும் உறைந்து நிற்றலோ, காலம் தாழ்த்தி அவர்களை அறிந்துகொள்ளும் வாசகர்களுக்காக ஈழ நிலவரமும் அக் காலத்திலேயே நிலைகொள்ளலோ சாத்தியமில்லை.

அவர்கள் அக் காலத்தின் குறியீடுகளாக இயங்க, இன்று(ம்) தமது ஆண்குறிகளோடும் ஆயுதங்களோடும் துவக்குகளோடும் திரியும் ‘தமது’ இன + சகோதர, சிங்கள இன ஆண்கள் குறித்து மீளவும் நெருக்கடியுறும் ஈழ நிலவரம் குறித்தும் பெண்களின் குரல் (வன்னியிலிருந்து, மட்டக்களப்பிலிருந்து, யாழிலிருந்து, தீவுப்பகுதிகளிலிருந்து – எந்த அதிகார அமைப்புகளிற்குள்ளும் அடங்காது) ‘உரத்து’க் கேட்கவில்லை என்பதே கசப்பான நியமாக உள்ளது. இன்றைய’ஈழத்துப் பெண் கவிதை’ என்பது மதிப்புக்குரிய எமது தமிழகத் தோழர்கள் எழுதுவது போல ஓர் கிளர்வூட்டும் படிமம் அல்ல. அது தோற்றுப் போனது கூட அல்ல. அது இன்றைக்கு -ஒரு இயக்கமாக – ஒலிக்கிறதா என்பதே எமது கேள்வியாக இருக்கிறது. அதற்கு இலங்கையில் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கிற தமிழ்-முஸ்லிம்-பிற-இலக்கிய ஆண்கள் தமக்கெதிரான ஒவ்வொரு குழுக்களைக்ன கைகாட்டித் தப்பிக்க முடியும், தம் பொறுப்பெடுத்தலைத் தவிர்த்து. ஆனால், யார் யாரின் தணிக்கைக்கும், ஒட்ட நறுக்கும் விமரிசனங்களுக்கும் அமைய பெண் குரல் தடுக்கப்படுகிறதோ!

அதனைக் கேட்க, ஓர் இலகுவான சடங்குபோல ‘ஈழம்’ ‘இலக்கியம்’ என்பதைக் குத்தகை எடுத்துள்ள எழுத்தாள ஜாம்பவான்களால் தரப்படுகிற பட்டியலை ஒப்புவித்துக் கொண்டிராமல், இன்றைய நாளின் தன் வலியைப் பாடும் வெளித் தெரியாத குரல்களை தேடிச் செல்ல வேண்டியிருக்கிறது.

– 4 –

போராளிப் பெண் குரல்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தனவோ, அது போலவே, எமது அரசியல் காட்சிகளின் மாற்றங்களுக்கமைய ஒரு கணத்தில் போராளிகளாய் அற்றுப் போகும் பெண்களது குரலும் முக்கியமானதே… சமாதானக் காலத்தில் மட்டக்களப்பில் வெருகலில் பிளவு நடந்த ஒரு கணத்தில் அவர்கள் போராளிகளற்றுப் போனார்கள். அவர்களது எதிர்காலம் ஒரு கணத்தில் அச்சுறுத்தலுக்குள்ளானது. தேசீயம் தான் அவர்களிடம் முன்பு தந்த சீருடையின் பாதுகாப்பைக் கூட வழங்க மறுத்தது (அப் பிளவிலும், தமக்குள் கொலையாளியாகவும் கொலையுண்டவர்களாயும் எம் இனச் சகோதரர்களே ஆனார்கள்). அவ்வாறே இக் காலப்பகுதியின் கிழக்கு இடப்பெயர்வுகளும் யாழின் இராணுவ கட்டுப்பாட்டுள்ளும், வன்னியின் போர்ச் சூழலலினுள்ளும் சகல அரசியல், பிராந்தியப் பிளவுகளுக்கும் தன் பிள்ளைகளைப் பறிகொடுத்தவர்களாய் இறுதியில் பெண்களே இருந்தார்கள். மாறும் ஒவ்வொரு அரசியல் சூழலிலும், இலங்கை நிலவரங்களுள் பெண்ணாக வாழ்தல் சகல இராணுவங்களையும் பால்-இன அடையாளத்துடன் எதிர்கொள்கின்ற நிகழ்வாகும். ஓரு போராளிப் பெண்ணாய் மலைமகள் போன்ற பெண்களது சிறுகதைகளது பகுதிகள் வெளிப்படுத்தியளவு கூட – தமிழ்த் தேசிய ஆயுதக் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத – ஏனைய பிரதேசங்களிலிருந்து வெளிப்படுத்தப்பட்டதா? படின், அது கவனிக்கப் பட்டிருக்கின்றதா?

இலங்கையை/ஈழத்தைப் பொறுத்தவரை அவர்கள் எதிர்கொள்கிற வாழும் சிக்கல்களுக்குள்ளால் மாபெரும் கவிதைகளை எழுதுவது அல்ல எமது எதிர்பார்ப்பு; ‘ஈழப் பெண் குரல்’ என அது றொமான்ரிக் படுத்தப் படுவதுமல்ல. எத்தகைய – ஆண் அரசியல் குடும்ப கடப்பாடுகள் கட்டுப்பாடுகளூடாக அவர்கள் தங்களை வெளிப்படுத்துகிறார்கள் – அவற்றின் அரசியல் – என்பதே கவனிக்க வேண்டியது. சகஜீவியாய் அவள் தன்னை வெளிப்படுத்த விடாத சமூக அமைப்பு அதற்கான பொறுப்பை எடுக்கவும் அதை மாற்றவதற்கான செயல்களில் இறங்குதலுமே அடுத்த எதிர்பார்ப்பாய் இருக்க முடியும்.

-5-

ஈழத்தை மையப்படுத்தாது, பெரும்பான்மையாய்ப் புலம்பெயர்ந்தவர்களையே கொண்டிருக்கிற இத் தொகுதி  இவற்றை ஓர் அவதானமாகவே முன்வைக்கிறது. நெருக்கடியுறும் சமகாலத்தின் ஓலம் எம் காதுகளை எட்டாதபோது இறந்த காலத்தின் பிரதிகளை உச்சரித்துக் கொண்டிருப்பதே அபத்தமாகத் தோன்றுகிறது; ஐக்கியமற்ற இலங்கைக்குள், தமிழ் பேசும் மக்களை உடைய பல்வேறு பிரதேசங்களை, அவற்றின் மாறுபட்ட மனநிலைகளை அறியாது அதை ‘ஒன்றாக’ பார்க்க முனைவது அதன்மீதான மாபெரும் வன்முறையாகவும் படுகிறது.

அந்த வகையில், ‘இரத்தத்துடன் யுத்தம் நடக்காத’, சிங்கள மக்களை கொண்ட, இலங்கையின் தென்பகுதியில் (கொழும்பு) இருந்தும் ‘நோயில் விழுந்துபோன தன் தேசத்தின் மீட்சிக்காய்’ ஏங்குகின்ற குரலுடன், தன் அடையாளத்தை அழிக்கிற அந் நிலத்திற்கு வெளியிலிருந்து அதன் உருவாக்கத்தை –தரப்பட்டிருக்கிற- அதற்கான நியாயங்களை கேள்வியெழுப்ப வேண்டியும் ஒலிக்கிறது பிறிதொரு குரல். இவ்வாறாய்,

தேசம் என்பது எம்முன் முரணுகள் நிறை கருத்தாக்கமாக எழுந்து நிற்கிறது. இங்கே:

  •          ‘தன்’ தேசத்தின் மீட்சிக்காய் பாடும் ஒரு பெண்ணின் தேசம் எதுவாக இருக்கும்? அது தான் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலமா அல்லது தன் பெற்றவர்கள் பிறந்த -குறிப்பிட்ட- பிரதேசமா?
  •          புலம்பெயர் தமிழராய் நாம் வாழும் அமெரிக்கா எமது நாடாக இருக்க முடியுமா?’கனடா’ என்கிற நாடு பூர்விகர்களுடையது என்கிற வரலாறு மறைக்கப்படுவதை – வந்தேறுகுடிகளாய் இங்கு வந்த நாங்கள் ‘இது எம்மை வாழ வைத்த நாடு, எமக்கு வாழ்வு தந்த நாடு’ எனுகிறபோதான ஒத்திசைவில் – ஏற்றுக் கொள்கிறோம் அல்லவா? அவர்களது நாட்டில், அவர்களை ஒடுக்கியவனுக்கு எம் நன்றியுணர்வை காட்டுவதூடாக எமது குரல் அவர்களது வரலாற்றை அமிழ்த்துகின்றது; அதை அறியாமையெனக் கூடிய சந்தர்ப்பவாதம் ராஜதந்திரமாக எம் அரசியல் பரப்பெங்கிலும் நிறைந்திருக்கிறது.
  •          ‘என் தேசம்’ எது என்ற கேள்வியின் பின்னான அரசியலையும் உள்ளடக்கி, தேசம், தேசீயம் இவை கட்டமைக்கப்பட்டிருக்கிற ஆதிக்க-ஆண்-மனத்துடன் முரண்கொள்வதாகவே/முரணானதாகவே, அவ் ஆதிக்க-ஆண்-மனத்தின் அத்தனை பரிமாணங்களுக்கும் பிளவுகளுக்கும் தன்னுடைய பிள்ளைகளைப் பறிகொடுத்தவர்களது மனநிலை இருக்க முடியும் ?

-6-

‘துவக்குகளோடு’ வந்த வெள்ளைத் தோல் மனிதர்களால் – பூர்விகரிடமிருந்து – கொலைகளாலும் தந்திரங்களாலும் திருடப்பட்ட நிலமிருந்தே இத் தொகுதி வெளிவருகிறது. ஆக்கிரமிப்பாளர்கள், ஒரு பெரு நிலத்தை அவர்களிடமிருந்து திருடி விட்டு, இன்றவர்களை றிசேர்வ் (Reserve) எனப்படும் மலையகத்தின் லயங்களைப் போன்ற குடியிருப்பு(?)களில் அடைத்துள்ளார்கள். இக் குடியிருப்புகள் போரினால்ப் பின்தங்கிய கிராமங்களை விடவும் கீழ்நிலையில் மின்சார, நல் குடிநீர் வசதிகளற்றுக் கிடக்கின்றன. எமக்கான மனித உரிமைகளை உலகுக்கு பேசுபவர்களாக உள்ள அதே கனடியர்களாலேயே, திட்டமிட்டமுறையில் மௌனமாக பூர்விகருடைய வாழ்வு முற்றாய் சீரழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந் நிலமிருந்தே நாம் எம் மீதான வன்முறைகளுக்கு எதிராகப் பேச வேண்டியிருக்கிறது. அதன் முரண்களோடும், எமக்கான அரசியலை தீர்வுகளை இவர்களிடமிருந்தே தேர/பெற வேண்டியுமிருக்கிறது (உ-மாக: சமாதான காலத்தில் கனடிய, பிரெஞ்சு-ஆங்கில மாகாண சுயாட்சி முறை என்பன அவ்வவாறு பேசவும் பட்டன).

வேறொரு புலத்தில் வேறு அனுபவங்களுள் செல்கிற எம் குரல்களையும் –வெவ்வேறு அரசியல்-சமூக தளங்களில் நின்று– பார்க்க வேண்டும். உலகமெங்கிலும் சிதறியிருக்கிற ஒவ்வொரு ஈழத்தைச் சேர்ந்தவர்களது குரல்களும் – பகைபுலம் ஒன்றென்ற போதும் – அதன் உள்ளியங்கும் வேறுபாடுகளைக் காணலிலும் சமூக ஆர்வலர்கள் எனப்படுகிறவர்கள்தம் கவனம் வேண்டும். அதனூடேயே அவ் வேறுபாடுகளை ஒன்றின்கீழ் அடக்குவது அதன் ஏனைய குரல்களுக்கு எதிரானது என்பதான புரிதல் நிகழலாம்.

தமது கருத்துக்களைப் பிரதிபலிப்பான்களாக (நன்றி: கருணாகரன்) மனிதரை, குழுக்களை, கருத்தாக்கங்களை உருவாக்குவதும் அதற்கு வெளியில் எதையும் தேடிச் செல்லாமலிருப்பதும் என்கிற ஒரு ‘சொகுசு மனநிலை’யை ஒத்து, அறிவுசீவிகளும் தமக்குப் பரிச்சயமான காலத்தை ‘இன்று’ என அறிமுகப்படுத்தும் வன்முறையைச் செய்வதாக இருக்கிறார்கள். அஃதூடே ஈழத்தின் பல்வேறுபட்ட மக்களின் வலியைக் கூட ஒன்றாக்கவும் செய்கிறார்கள்; தேடலற்றவர்களாய், அறிவுக்கு எதிரான அலட்சியத்துடன், தங்களுக்கு எது கிடைக்கிறதோ அதையே எல்லோரது குரலாகவும் பிரகடனம் செய்கிறார்கள்.

இங்கே: நாம் – ‘எமக்குக் கிடைக்கிறவற்றை வைத்துப் பேசிக் கொண்டிராமல்’; அப்பால், மேலும் மேலும் – எமது சமகாலத்தின் நிகழ்வுகளிற்கு நியாயம் செய்யும் – பிரதிகளைத் தேடிச் செல்லவும், அதனூடே, அந் நிலத்தினுள், பல்வேறு திட்டமிட்ட, அல்லது இனங் காணவியலா செயற்பாடுகள் அழுத்தி மறைக்கிற குரல்களை தேடிச் செல்லவும் வேண்டியிருக்கிறது. அதுவே இத் தொகுதியினது தொடர்ச்சியாக இருக்கும்.

தோழமையுடன்

தொகுப்பாளர்கள்

ஆவணி 2007

(ஒலிக்காத இளவேனில் – கவிதைத் தொகுப்பிலிருந்து)

Advertisements
Leave a comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: