வென்றவர்கள் மத்தியில் இருக்கிற இன்னும் வெல்லாதவர்கள்

 – சம்பூர் வதனரூபன் கவிதைகள் –


adayalamatiruththal-500x500

1.
சம்பூர் வதனரூபனின் “அடையாளமற்றிருத்தல்” (வடலி வெளியீடு, 2013 டிசம்பர்) கவிதைத் தொகுப்பின் கவிதைகள் பூர்விக நிலம் பறிபோதலை, தம் ஊரிலிருந்து அகற்றப்பட்ட பிறகு நினைவுகளில் உள்ள ஊர் ஏற்படுத்தும் அகலா வலியை, அதனைப் பின்னிய உணர்வோட்டங்களைப் பதிவு செய்கின்றன. நீண்ட வரலாற்றை உடையதான தமிழ்ப் பகுதிகளில் இலங்கை அரசின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் ஈழப் போராட்டத்தில் ஆற்றிய பங்கு எம்மிடையே ஏலவே கவனத்துக்குள்ளாகிய ஒன்றே. 2006 இல் நிகழ்ந்ததான திருகோணமலை மாவட்டம், சம்பூரிலிருந்து மக்களது வெளியேற்றம் வெளிப்படுத்துவதும் ஆக்கிரமிப்பாளர்களைப் பொறுத்தவரை அது தொடர்ச்சியான வேலைத் திட்டம் என்பதே.

நூலின் முன்னுரையில் மு.மயூரன் குறிப்பிடுவதுபோல, ‘45% இற்கு மேற்பட்டவர்கள் விவசாயத்தையும் 35% இற்கு மேற்பட்டவர்கள் மீன்பிடித் தொழிலையும் செய்துவந்த தன்னிறைவான நிலமான சம்பூர் எனும் சிறு கிராமத்தின் 5000 ஹெக்டேயர் நிலப்பரப்பு “உயர்பாதுகாப்பு வலயம்” என்ற பெயரில் கடற்படையின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இவ்விடத்திற்தான் இந்தியாவின் பாரிய நிலக்கரி மின்நிலையமும் 4000 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள வரிவிலக்களிக்கப்பட்ட மிகப்பெரிய பன்னாட்டு முதலீட்டு வலயமும் உருவாகவுள்ளன.’

மக்களின் நிலங்கள் அந்நிய முதலீடுகளுக்கும் உயர்பாதுகாப்பு வலயம் என்கிற பெயரில் அரசுக்கும் பறிபோகையில் நிலம் யாருடையது என்கிற கேள்வி தவிர்க்கமுடியாதபடி எழுகிறது. உலகப் பரப்புகளில் ஆக்கிரமிப்புக்கு எதிரான நிலம்சார் போராட்டங்களும் அவைக்கு எதிரான பின்காலனித்துவ அடக்குமுறைகளும் தொடர்கின்றன. கனடா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட பூர்விகக் குடிகளிடமிருந்து திருடப்பட்ட நாடுகளது; இஸ்ரேல் போன்ற பலஸ்தீனர்களிடமிருந்து திருடப்பட்ட நாட்டினது; இந்தியா போன்ற தனது ஆதிக்குடிகளது வளங்களைச் சுரண்டி அந்நிய முதலீடுகளுக்கு கொடுக்கும் அரசுகளினது, ஆயுத அதிகார பலத்துக்கெதிராக – வாழ்விடத்தின் மீதான தமது உரிமையை வலியுறுத்தி – சாதாரண மக்கள் தொடர்ந்து போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

சம்பூரிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு எட்டு வருடங்களும்; இலங்கையில் யுத்தம் முடிவு(?)க்குக் கொண்டுவரப்பட்டு ஐந்து வருடங்களும் ஆன நிலையில் மக்கள் கூட்டாக போராட்டங்களில் ஈடுபடுவதற்கு கடும் எதிர்ப்புகளும் தண்டனைகளும் பதிலாகிக் கொண்டிருக்கின்றன. முன்னம் இராணுவம் நிலைகொண்டிராத கிராமங்களில் வந்துவிட்ட ஆயுதங்களுடனான இராணுவ பிரசன்னம் அரசாங்கம் எச் சிறு எழுச்சியையும் தான் எவ்வாறு கையாளப் போகிறேன் என்பதைச் சுட்டும் சமிக்ஞையாக இருக்கிறது. அவை தாண்டியும் யுத்தத்தில் ஏற்கனவே இழந்தவற்றின் துயர் ஆறுமுன்னே தமது உரிமைகளுக்காக மக்கள் தெருவில் இறங்கிய சந்தர்ப்பங்களும் இருக்கின்றன. அத்தகையதான காணாமற்போன தமது உறவுகளுக்காக ஒருங்கிணைக்கப்பட்ட போராட்டங்கள் போன்ற கூட்டு போராட்டங்கள் தவிர, போரின் பிறகான முதல் கட்டத்தில், இழந்தவற்றை விடுத்து, இருப்பவற்றைக் காத்துக் கொள்ளும் எத்தனிப்புகளை அதிகம் காண முடியும்.

2.

வதனரூபனின் தொகுப்பும் இத்தகைய பின்னணியின் பாதிப்புகளிலிருந்து விலகியதல்ல. ‘யுத்தமற்ற யுத்தகாலத்தில்’ நிகழ்ந்த 2006 சம்பூர் இடப்பெயர்வு முதல், யுத்தகாலத்தில் 2009 இல் தமிழீழ விடுதலைப் புலிகளது இராணுவத் தோல்வி மற்றும் அதன் பிறகான காலம் வரையான மனநிலைகளை கவிதைகள் கொண்டிருக்கின்றன. தனித்தும் கூட்டாகவும் அப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்களது உணர்வோட்டங்களை இவை வெளிப்படுத்துகின்றன.

நினைவுகளிலுள்ள ஊர் தனியே மனிதர்களால் ஆனதா… செந்தாமரைகள் நிறைந்த குளங்கள், கால்நடைகள், பிரார்த்தனைத் தலங்கள், தமது ‘பருத்த கிளைகளை வீசியெறிந்து’ காத்திருக்கும் அரசமரங்கள்; இவற்றுடன் இணைந்ததே சக மனிதர்களுடனான பயணமும் வாழ்வும். அவற்றை இழந்து, சொந்த நாட்டுக்குள்ளேயே இடம்பெயர்ந்து முகாம் வாழ்க்கைக்குத் தள்ளப்பட்ட பிறகு; மரபுவழி யுத்தத்தில் அதன் தோல்வியின் பின்னரான முதற் கட்டத்தில் – தருவதை ஏற்க வேண்டியவர்களாக சமூகம் மாற வேண்டியிருக்கிறது. உரிமைகளும் தேர்வுகளும் அற்ற நிலையைக் கவிஞர் இவ்வாறு எழுதுகிறார்:

“விரும்புகின்றவைகளைக் கொடுப்பதும்
தருவதையெல்லாம் ஏற்பதும்
மிக கடினமாயுளது எப்போதும்.’ (ப. 41)

அதேபோல, கிழக்கில் தமிழர் பகுதிகளில் உள்ள அரச மரங்களின் கீழ் எல்லாம் புத்தர் வந்தபின் ‘…காகமும் கொக்கும் கூடுகட்டிக் கூச்சலிட / கறுப்பு நிழல் பரப்பி வெள்ளை எச்சங்கள் பூசி/ ஆண்டுகள் தோறும் ஆயிரங்களாய் காய்த்துக் கொட்டி/ அதற்கான உரிமையோடு பல்லாண்டுகளாய்’ (ப.67) வாழ்ந்த மரங்களை அவற்றை வளர்த்தவர்களே அவசரமாய்க் கொல்ல நேர்ந்த சூழலை”புத்தரின் பெயரால் வெட்டப்படும் மரங்கள்” கவிதை சொல்கிறது.

இருக்கிறவை பறிபோகாமலிருக்க சிறுபான்மை சமூகம் எடுக்கும் எத்தனங்களாகவே அதைப் பார்க்க முடியும். தன் புராதன அழகை கெடுத்தவாறு கோணேஸ்வரர் கோயிலில் புதிதாய் – எங்கே பேரினவாத அடையாளத்துடன் புத்தர் அங்கும் வந்து விடுவாரென்றோ என்னவோ – மாபெரும் சிவன் சிலையும் வந்துவிட்டது. இதனுடன் தொடர்புடையதாக, சிறு பராயத்தில் எமது கிராமத்தில் – பல தமிழ்க் கிராமங்களில் – தமிழ் பவுத்தத்திற்கான சாட்சிகளாய் நிலங்களின் அடியில் புத்தர் சிலைகள் கண்டெடுக்கப்பட்டதும் பேரினவாதத்தின் முன் அதை மறைக்க வேண்டி இருந்த ‘தேவைகள்’ குறித்து எம்முன் பெரியவர்கள் உரையாடிய நினைவுகளும் வருகின்றன. பவுத்தம் தத்துவார்த்தமான ஒரு மார்க்கம் என்கிறபோதும், இந்துக்கள் சக பவுத்தர்கள் என்கிற அரசியல் வாய்பாடே இன்றும் உடனடியான எதிர்ப்பரசியலாகுவதைக் காண முடிகிறது.

தனது தேசத்திலே அந்நியமாக உணருதல்; காலகாலமாக சிறுவம் – பள்ளிப் பருவம் – காதல் என தன்அனுபவங்களைப் பகிர்ந்த நிலத்திருந்து பிடுங்கி அகதி முகாம்களுக்கு எறியப்படுதல் – இத்தகையதான அனுபவங்களை ஒவ்வொரு தலைமுறையும் ஒவ்வொரு விதமாய் எதிர்கொள்கிறது. அந்த வகையில், இன்னமும் சொந்த ஊரில் இருப்பதாய் நினைத்து இயங்கும் ஆச்சியொருத்தியைக் கண்முன் கொண்டுவருகிறது மற்றுமொரு கவிதை. மரநிழலில் இருந்து, சருகு பொறுக்கிச் சேர்ப்பதும் கேட்டால் ‘பயிர் வளர உரம் இடுவதாகச்’ சொல்வதுமாய்,

“…அவள் வாழ்வது
அகதி முகாம் என்பது
எப்போதும்
அவளுக்கு நினைவில் வராது.

கைக்குத்து அரிசியோ?
கடைந்த குப்பைக் கீரைக்கறி இல்லையோ?
வீட்டு முற்றத்தில் காற்று வீசல்லையோ?
ஆச்சி அறியாமல் கேட்பாள்.’ (ப. 79)

போருக்கு பிந்தைய மனம் வெற்றிபெற்றவர்களது களிப்பாலும் தோல்வியடைந்தவர்களது மனச்சோர்வாலும் பின்னப்பட்டிருக்கின்றது. ஃ கொடிகளை உயர அசைத்தவாறு ஒரு தரப்பின் வெற்றிக் கொண்டாட்டங்கள் யுத்த வடுக்களிலிருந்து மீள முனைபவர்களிடம் அதிர்வுகளை ஏற்படாதிருத்தல் சாத்தியமில்லை. இப் பெரும் போரும் அதன் முடிவும். அர்த்தமற்றுப்போன இழப்புகள் ஏற்படுத்துகிற துயரமும், தோல்வி எவ்வாறு வந்தது என்கிற கேள்வியும் பல கவிதைகளைத் துளைக்கின்றன. அவை, போரிட வந்த அசுரர்கள் இன்னதென்று அற்று பல முகங்களுடன், ‘எட்டுத் திக்குகளிலுமிருந்து / நவீன வாகனங்களில் ஜாலம்காட்டி/ பலமாக வலியவர்களாக’ உலகக் கடவுளர்களின் ‘வரம்பெற்று போரிட வந்த’ கதையையும்; ‘உண்மையான’ போராளிகள் களத்தில் இறந்துவிட ஏனையோர் தடுப்புமுகாம்களிலும் தனிப்பட்ட வறிய நிலைகளிலும் மௌனித்துவிட சந்தர்ப்பவாதிகளானோரே சமூக கௌரவங்களுடன் பேசத் தொடங்கும் தன் சமகாலத்தையும் பதிவு செய்கின்றன. ‘விடுதலை கேட்டவர்கள் விமர்சிக்கப்பட்டும் குற்றவாளிகளாகியும் நிற்க; முடமான போராளிகள் முன்னாள் போராளி சான்றிதழ்களுடன் வீடுகளில் முடங்கியும்’ யுத்தமில்லாத யுத்தகாலம் – அவரது மொழியில் – தாய்நிலமற்று தனிக் கலாச்சாரமற்று தொன்மங்களைத் தொலைத்து தோற்றும் போய், ஊர்களுக்குத் திரும்ப முடியாதவர்கள் முகாம்களில் வாழும் காலமாகவும்; சந்தேகத்தில் கைதானவர்கள் சிறைகளில் வாடும் காலமாகவும் ஆகிப் போனது.

பயங்கரங்களும், தனிநாடு கோரப் ‘புலிகளும் பிரபாகரனும் … பயங்கரவாதிகள் என அழைக்கப்பட்டோரும் இல்லையென்றான பின்பும்’ கூட, தமது நிலங்களுக்குத் திரும்ப முடியாமல் சம்பூர் உள்ளிட்ட மக்கள் உள்ளனர். சந்தேகத்தில் கைதானவர்கள் திரும்பிவரவில்லை. ‘காகித முகங்களையும் விடுதலை வேண்டுதல்களையும் / கைகளால் உயர்த்திப் பிடித்தபடியுள்ள, பெண்களதும் முதியவர்களதும் கவலை தோய்ந்த முகங்களாக / அவை திரையிடப்படுகின்றன.’ கிழக்கில் நில ஆக்கிரமிப்பு அப்படியே இருக்கிறது. ஆக்கிரமிப்பாளர்களான,

‘இன்றுள்ளவர்கள் வேலி விரித்திருக்கும்
மிக வசதியான அடைப்புக்குள் தான்
நேற்று இருந்தவர்களின் படுக்கையும்
கழிப்பறையும் கூட
ஆதியாகவும் நிரந்தரமாகவும் அமைந்திருந்தது.’ (ப. 39)

‘இனி எந்த வீதியிலும்
புத்தர் மீண்டும் கவச வண்டிகளில்
சித்தார்த்தனாக வலம்வர முடியும்.’ (ப. 40)

இப்படியான சூழல் தருகிற மனச்சோர்வை; அடையாளங்கள் அழியும் ஆக்கிரமிப்பு ஏற்படுத்துகிற வெற்றிடத்தை; நம்பிக்கைகள் உடைந்த ஒரு காலத்தை நகர்த்திச் செல்ல “தோற்றுக் போகவில்லை” என்கிற உணர்வு முக்கியமாயிருக்கிறது. தோல்வியடைந்தவர்கள் இல்லை என்கிற நம்பிக்கை தேவையாய் இருக்கிறது.

‘தோற்றவர்களில்லை
நாங்கள்
வென்றவர்கள் மத்தியில் இருக்கும்
இன்னும் வெல்லாதவர்கள்.’ (ப. 62-63)

போன்ற கவிதை வரிகள் வழி அதையே உணர முடிகிறது.

3.

கவிதை அல்லது தாம் தேர்ந்தெடுக்கும் படைப்பு வடிவத்தின் அமைப்பு, அதன் சமகாலப் போக்குகள் குறித்த விவாதங்கள் / விமர்சனங்கள் மற்றும் போதிய ஊக்கப்படுத்தல்கள் பரவலாயில்லாத சூழலில், தொடர்ந்து எழுதுவதற்கும் எழுதுபவர்கள் தம்மைப் புதுப்பித்துக் கொண்டு படைப்பையும் புதுப்பித்துக் கொள்ளுதலிற்குமான ஆயுளும் குறைவானதே. அனேகமாக இலங்கைக்குள் எழுதப்பட்ட இலக்கியங்களுள் தமது நூல்கள் உரிய கவனம் பெறாததாலும், ‘பிரபல பட்டியலாளர்கள்’ அறிந்த ஒரு சில பெயர்கள் மட்டுமே ஈழத்தின் அதிசிறந்த எழுத்தாளர்களாய் முன்வைக்கப்படுவதாலும் காலப்போக்கில் காணாமற் போனவர்களது தொகையே அதிகம்.

போருக்குள் சிக்கிக்கிடந்த, போரே பிரதான பேசுபொருளாய் சபிக்கப்பட்டிருந்த நிலத்தையுடையவர்கள், தம் இளமையின் பெரும் பகுதியை அதனுடனே பகிர்ந்தவர்கள், தமது படைப்புகளின் தராதரத்தை நிர்ணயிக்கிற அதிகாரம் உடையவர்களாய் இருந்ததில்லை. தம் பாடுகளை எழுதுதல் தவிர தம் படைப்பின் குரலை உரிய வாசகர்களிடம் எடுத்துச் செல்லும் சந்தைப்படுத்தல் வசதிகள் கிடைக்கப் பெறாதவர்கள் அவர்கள். அதனால், துரதிர்ஸ்டவசமாக அவர்களதான அனுபவங்களைக் கொண்டிராதவர்களே அவர்களது அனுபவங்களையும் சேர்த்து பிரதிநித்துவப் படுத்திக் கொண்டிருப்பார்கள். அதைத் தாம் பிரதிநித்துவப்படுத்துவதாச் சொன்னாலும், வசதியான சலுகைமிக்க வகுப்பைச் சேர்ந்த எழுத்தாளர்களால் ஒருபோதும் பிரத்தியேக சலுகையற்றவர்களது உலகத்தை அதன் சிக்கல்களைப் புரிந்துகொள்தலோ முழுமையாய்ப் பிரதிநித்துவம் செய்தலோ சாத்தியமில்லை. இதனாலேயே வதனரூபனின் தொகுதியும் அதிகம் பிரதிநித்துவப்படுத்தப்படாத பிரதேசத்தின் பாடுபொருள்களுடன் தனித்து ஒலிக்கிறது.

ஒத்ததாக, வதனரூபனது தலைமுறையைச் சேர்ந்த சம்பூரைச் சேர்ந்த இன்னொரு கவிஞரான சுஜந்தனின் ‘நிலம் பிரிந்தவனின் கவிதை’ என்கிற தொகுதியொன்றும் 2011 இல் வெளிவந்தது. ஆச்சரியமற்ற வகையில் இந்த இரண்டு கவிஞர்களும் தாம் இழந்து வந்த சம்பூர் எனும் ‘பொன்னிலத்துக்கும்’ அதைப் பிரிந்து இடம்பெயர்கையில் பலியானவர்களுக்கும் தம் நிலத்துக்காய்ப் போராடியவர்களுக்குமே தமது நூலை சமர்ப்பணம் செய்திருக்கிறார்கள். இரண்டு தொகுதிகளுமே ஊரை அதன் மீதான உரிமைகளை இழந்து வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட முகாம் வாழ்வையும் அதைச் சூழ் அரசியலையுமே பேசுகின்றன. அத்துடன் இருவரும் தமது கவிதைகளின் அமைப்புகள் நவீன கவிதை வடிவங்களுள் அடங்கியனவா அல்லவா என்பதை விடுத்து தம் பாடுகளை தமது குரலைப் பதியும் பெரு விருப்பைத் தம்முரைகளில் பதிந்திருக்கின்றனர்; வாசகர்கள் தம் சூழலின் எல்லைகளை கவனங் கொள்ளுமாறு கேட்டுள்ளனர். கவிதையா இல்லையா போன்ற விவாதங்களுக்கு போகக் கூடிய தனிச்சலுகை (privilege) மிகுந்த சூழல் அகதி முகாம் வாழ்விலோ தம்மைச் சூழ நிகழ்ந்துகொண்டிருந்த பிரச்சினைகளின் கொதிநிலையிலோ இருந்ததில்லை என்பதையே அவர்கள் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அவற்றையும் கவனங் கொள்வதுடன், இத்தகைய நூல்கள் குறித்த தொடர் உரையாடல்கள் விமர்சனங்களுடன் மேலும் நூல்கள் வருவதற்கான பொருளாதார ஊக்குவிப்புகளும் நம் மத்தியில் அவசியமானவை.

அந்த வகையில் வெளியீடுகளில் இலங்கையில் வாழும் ஆளுமைமிகு பல படைப்பாளிகளதும் படைப்புகளை முதன்மைப்படுத்தி வெளியிடும் வடலி வெளியீட்டிற்கும் அகிலனுக்கும் நன்றிகள்.வெகு சில எழுத்துப் பிழைகள் தவிர்த்து, நூல் நேர்த்தியாக வந்திருக்கிறது. நிலம் மற்றும் காலம் தொடர்பில் அறிமுகமற்ற வாசகர்களுக்கு கவிதைகள் எழுதப்பட்ட திகதிகளும்,திருக்கோணமலையில் சம்பூரின் நிலப்படமும் சேர்க்கப்பட்டிருப்பின் அதன் புவியியல்சார் முக்கியத்துவங்களை விளங்கிக் கொள்ள அதனுடன் கவிதையை மேலும் புரிந்துகொள்ள உதவியிருக்கும். ஏனெனில் 07.07. 90 என்கிற கவிதையின் தலைப்பாக வரும் திகதியின் பின்புலம் அறிவதில் என் போன்ற வெளிநாடுளில் வசிக்கிற தலைமுறை வாசகர்களுக்குத் தடைகளுண்டு (பிரத்தியேக பின்புலமற்ற, அன்றாடமாய்ப் போன நிகழ்வுகளில், கவிஞருக்கு முக்கியமான ஒரு பயங்கர தினமாய் அது இருக்கவும் கூடும் எனிலும்).

இக் கவிதைகளின் போதாமை அல்லது அடைந்திருக்கக் கூடிய படைப்பின் உச்சங்கள் வதனரூபன் தன்னுரையில் கூறுவதுபோல ஒரு காலத்தின் பிரதிபலிப்புகளே. அவ்வாறு காலத்தோடு வாசிக்கக் கோருவதையும் விஞ்சியிருக்கின்றன சில கவிதைகள். அவற்றில் சிறப்பான கவிஞராகத் தன்னை அடையாளங் காட்டுகிறார் சம்பூர் வதனரூபன்.

“எனது பூர்வீக நிலத்தில் இருந்து ஓர் நள்ளிரவில் விரட்டப்பட்டு, வாழ்வின் வேரறுந்து, தனித்த பொட்டல்வெளிக் கூடாரங்களில் அனல் மூடக் கிடந்த காலங்களிலும், என் மக்களின் அவலங்களைத் தினமும் காணும்போதும் அதற்குக் காரணமானவர்களிடம் இந்நிலைக்காக கெஞ்சவோ, வருந்தி அழவோ, விதியென நொந்து கொள்ளவோ என்னால் இப்போதும் முடிவதில்லை” என்று கூறும் அவரின் அந்த இயல்பே பல கவிதைகளை ஆக்கிரமித்திருக்கிறது. அவர் எதற்கும் கெஞ்சவோ வருந்தி அழவோ இல்லை. அடையாளமற்றிருத்தல் – தொடர்பில் தனியாகவும்கூட்டாகவும்உணரும் உணர்வெழுச்சிகள் சிறு சிறு எதிர்ப்புகளாக இங்கே வெளிப்பட்டிருக்கின்றன.

நீண்ட வரலாற்றை உடையதான கிழக்கிலங்கையின் தொடர் நிலஅபகரிப்பினை அதன் சமகால உதாரணமாய் அந்நிலத்துடன் பிணையப்பட்ட மனிதர்களின் தவிப்புடன் இக் கவிதைகள் வெளிப்படுத்துகின்றன. நிலத்துடனான தனது உரிமை பறிக்கப்படுதலை தம்மால் இயன்றவரைக்கும் எதிர்க்கின்றன. அதனால்த்தான் பெயரின் முன்னால் ஊரின் பெயரைப் போடுகின்றதொரு வழக்கம் இருந்து வருகின்ற போதும் – தன்னிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட – ஒன்றைக் காவும் ஒருவரது தேர்வு, வரைபடத்திலிருந்து நீக்கினும் கூட தனது பெயருக்கு முன்னால் அது ‘இருக்கும்’ என்பதை உறுதி செய்ய விரும்புவதாய்த் தோன்றுகிறது. ஒரு வகையில் தாய் தகப்பனது பெயரை மிஞ்சி இழந்த நிலத்தின் மீதான பிடிமானம் பதியப்படுவதிலிருந்து ஊர் தன்னடையாளத்தின் மையமாகுவதையும் அதனை இழப்பதன் தாக்கத்தையும் உணரலாம்.

வாசித்த பிறகு, படைப்பின் பெரும் கனத்தை, அதன் சலனங்களை, மனதை நிரப்பும் வெறுமை ஏற்படுத்தும் மௌனத்தை தந்து நகரும்’ஆளற்றுத் தனித்த வெளிகள்” ‘இப்படிக்குத் தாய் நிலமின்றிய அண்ணன்” “எனக்குப் பிடித்த வில்லுக்குளமும் வெண்தாமரைப் பூக்களும்” போன்ற கவிதைகளும்;

‘அச்சம் குறையவில்லை..
இன அடக்குமுறையும் தீரவில்லை.
ஆண்டாண்டாய் போர் செய்தோம்.
அழித்தோம். அழிந்தோம்.
விடுதலை என்பதற்கு
விளக்கம் மட்டும் கிடைக்கவில்லை.
சந்தனப்பேழையுள் நீ
விதைக்கப்பட்டதற்காய்
கல்லறைமேடுகள்தான் மீதமாகும் சான்றுகளா?

தாய்நிலம்மீது நீ
வீரங்கொண்டெழுந்தோடி
பாதச் சுவடுகள் பதித்ததன் புண்ணியம்
களப் புதர்களுக்கு மட்டுமே கிடைத்ததா சொல்.’

போன்ற வரிகளும், எமது தலைமுறையில், மிக நீண்டகாலத்துக்குப் பாதிப்புச் செலுத்தக்கூடிய படைப்புக்களைத் தரக்கூடிய ஒரு கவிஞராக சம்பூர் வதனரூபனை அடையாளங் காட்டுகின்றன. அவர் தொடர்ந்தும் எழுதவேண்டும். தொடர் இயக்கமொன்றே எந்நிலையையும் மேம்படுத்த உதவுகின்ற ஒன்றாக இருக்கும். அத்துடன் இத்தகைய படைப்புகளூடாகவே (அவற்றின் இடையறா பரவலாக்கத்தின் ஊடாக) தமக்கான பிரதிநித்துவங்களை குறிப்பிட்ட இடங்களுக்கு உரியவரே கைப்பற்றிக் கொள்ளுதலும் சாத்தியம்.

தம் கைகளில் ஏதோரு அதிகாரமுமற்றவரது சிறு எதிர்ப்புகளின் இடம் தான் என்ன? அது – பலங்கொண்ட இராட்சசனாய் ஆக்கிரமிக்கும் இராணுவ வண்டிகளை நோக்கிக் கல்லெறியும் – சிறுவர்களது இடமெனவே சொல்லத் தோன்றுகிறது.

__பிரதீபா கனகா-தில்லைநாதன்

Nantri: thaiveedu (Tamil News Monthly) June 2014 issue

 

Advertisements
Leave a comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: