பிற்சேர்க்கை 01: ஒலிக்காத இளவேனில் 2006-7

(சில கேள்விகள்… குறிப்புகள்…) பெயரற்றவை: ஒலிக்காத இளவேனில் பற்றி..

0

2003 – ஒரு கோடை காலம்: பெண்களின் கவிதைகளைத் தொகுப்பது பற்றியெழுந்த ஓர் எண்ணம் சாத்தியப்படாமைக்கு, எமக்கு தடைகள் இருந்தன.

குழுக்களைச் சார விரும்பாத தொகுப்பாளர்களாய் (பெண்களாய்) நாம் இருந்ததும்; தனிப்பட்ட எங்களுடைய தொடர்புகள் மற்றும் ஈழத்துடன் தொடர்ச்சியற்ற, அரசியலற்ற-பதிப்பகங்களூடாக புத்தகம் கொணருவதையிட்டு, இடைத் தரகர்கள் ஊடாகப் பதிப்பகங்களை அணுகுவதிலும் எமக்கிருந்த விருப்பின்மைகள் என வேறும் காரணங்களால் தடைப்பட்டபோதும், இத் தாமதமும் கூட பெண்களின் சொற்பமான தொடர்புகள் (ஆண்-வழிப் பதிப்பகங்கள்) நிர்ணயிக்கிற ஒன்றாகவே படுகிறது.

இத் தொகுப்பிடம் நாம் மீள்கிற இந்தக் காலம், 2002 கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்தம்(?) முடிக்கப்பட்டு, மீளவும் ஈழ-இலங்கை யுத்தம் ஆரம்பித்து விட்டது. 1980 – 90களிலிருந்தும் மாறுபட்டு அதி தீவிரமாய் கொடும் யுத்தம் (அழிவின் இன்னொரு முகம்) திரும்புகிறது. கடந்த காலங்களில் யுத்தத்திடம் அதன் ஆயுதங்களிடம் தம் இளமையை இழந்த 80களின் தலைமுறையும் அவர்களது, அவர்களுக்கு அடுத்த புதிய தளிர்களும் யுத்தத்துள் சிக்குகின்றனர்.

இக் காலப் பகுதிகளில் ஈழ அரசியலுடன் தொடர்புடைய, அல்லது அப் பிரதேச பின்புலத்தை உடைய பெண்களின் எண்ணங்ளே இங்கே இணைந்திருக்கின்றன.

மேலும், இதுவொரு புலம்பெயர்ந்த இலங்கைப் பெண்களை மையப்படுத்திய தொகுப்பே ஆகும். எமது குறுகிய தொடர்புகளுக்கமைய இலங்கையிருந்து பெண்கள் நால்வர் எழுதியிருக்கின்ற போதும், யுத்தம் நடக்கிற பிரதேசம் உட்பட இலங்கையின் ஏனைய பகுதிகளது பெண் குரல்கள் இங்கே உள்ளடக்கப்படவில்லை. அறிமுகத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது போல, யுத்தத்தின் தொடர்ச்சியான நம் புலம்பெயர் சூழலிலும்  தம் பிள்ளைகளை வன்முறைக்கு தாம் பெயர்ந்த நிலங்களின் அரசியல்களுக்கு பறிகொடுக்கும் அவலத்தையும், விளிம்புகள் எனப்படும் சமூகத்தில் கீழ்நிலைகளாய் இருப்பவர்களை நோக்கிய அவதானங்களை முன்வைத்தலுமே இந் நூலுக்கான எமது பின்னணியாய் இருந்தது. எம்மைத் அச்சுறுத்தும் வன்முறையான ஒரு காலத்தைப் பதிவு செய்ய, பிரேரிக்கப்படுகிற புலம்பெயர் கவிஞர்கள் எனப்படாதவர்களை நாம் தேடிச் செல்லும் பொருட்டு உருவான ஒன்றே இத் தொகுதியாகும்; அதே தேடல், ஈழத்தில் உள்ள வெளித்தெரியாத படைப்பாளிகள் தொடர்பாகவும் வருதல் அவசியமானது என்கிற புரிதலுடனேயே இத் தேடல் தொடங்கியது.

இச் சந்தர்ப்பத்தில், மீளவும், ‘பெண்களின் கவிதைகள்’ என்கிற அடைமொழி எங்களளவில் ஒரு மேலதிக தகவலே/அம்சமே தவிர இக் கவிதைகளை நிர்ணயிப்பதற்கானது கிடையாது என்பதைக் கூறவேண்டும். அத்துடன், இத் தொகுதி வெளிவருகிற பொழுது,’பெண்’ அடையாளமும் ஏனைய விளிம்புகளினை ஒத்தது என்கிறதை விளக்க வேண்டிய கட்டத்தை -பல தொகுப்புகளூடாக, உரையாடல்களுடாக- கடந்து விட்டிருக்கிறோம். எமதல்லாத/எமது கட்டுப்பாட்டுள் அடங்காத காலங்களைப் பார்த்துக் கொண்டே சலனமற்றுக் கடக்கும் வலியின் உறைவே இது.

– 1 –

இவ் இடைப்பட்ட காலத்தில்,’சுவிஸ்’ றஞ்சி,’ஜேர்மனி’ தேவா ஆகியோர் தொகுப்பில் ”மை” தொகுதி (ஊடறு வெளியீடு, 2007), அ.மங்கையின் தொகுப்பில் ‘பெயல் மணக்கும் பொழுது’ (இந்தியா, மாற்று பதிப்பகம், 2007) என்பன இலங்கைப் பெண்களது கவிதைகளுடன் வெளிவந்தன.

1.         (மை) கவிதைகள் குறித்த ‘தர அளவுகோல்களின்றி’ ‘பெண்கள் எழுதியவை’யைத் தொகுத்தல் எனவும்

2.         (பெயல் மணக்கும் பொழுது) ‘ஈழப்பெண்கள் (என்கிற நெகிழ்வு மனநிலையுடன், அவர்கள்) எழுதியவையைத்’ தொகுத்தல் எனவும் வகைப் படுத்தலாம்.

பெண்களது இந்த இரு நூல்கள் வெளிவருவதற்கு முன், தமிழவனின் தொகுப்பில்’ஈழத்தின் புதிய தமிழ் கவிதைகள்’ (காவ்யா: முதற் பதிப்பு 2005) நூல் வெளிவந்திருந்தது. அதில்: புதிய கவிஞர்களில் ஈழத்தின் மூத்த தலைமுறைகளான சண்முகம் சிவலிங்கம், ஜெயபாலன், நுஃமான், சேரன், சிவசேகரம் தவிர அவர்களுக்கு அடுத்த தலைமுறைகளான ஆத்மா, நட்சத்திரன் செவ்வியந்தியன், ஆழியாள் கூட 1990களைச் சேர்ந்தவர்களே (கவனிக்க: இந் நூல் 2005ம் ஆண்டு வெளிவந்தது!). அவர்கள் எழுத வந்து – கவிதை எழுதாமலும் விட்டிருக்கக் கூடிய – ஒரு 15 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழவனின் தொகுதியில் இளம் தலைமுறையினராகத் தொகுக்கப்பட்டிருந்தனர்.

இத் தொகுத்தல் என்பது, ஒருவகையில் இலங்கையில் நடந்துகொண்டிருக்கும் யுத்தம் தொடர்பான (அதன் விளைவுகள் சற்றேனும் தெறிக்கிற சமகாலத்தைய இலக்கியங்கள் தொடர்பான) அது அறிமுகமான அவரவர் காலப்பகுதியை மையப்படுத்திய ஒரு தேக்க நிலையையே அறிவித்தது. உலகமெல்லாம் புலம் பெயர்ந்து-பரந்து வாழும் ஈழத் தமிழர்களில்,

–           1980களிற்கு முன்னர் புலம்பெயர்ந்தவர்கள்

–           1980களில் புலம்பெயர்நதவர்கள்

–           1990 – 1995களில் புலம்பெயர்ந்தவர்கள்

–           2000-இல் புலம்பெயர்ந்தவர்கள்

என்கிற அடுக்குகளில் ஒவ்வொருவருக்கிடையே உள்ள மாபெரும் அரசியல், பொருளாதார வேறுபாடுகள் ஒருபுறம் இருக்க, ஒவ்வொரு அடுக்குகளிலும் உள்ள அவர்கள் ஒவ்வொருவரையும் தாம் இலங்கையை விட்டுவந்த அந்தந்தக் காலத்தில் ‘தேங்கியவர்கள்’ எனவும் சொல்லலாம். தாம் விட்டுவந்த அந்தக் காலப் பகுதிக்குரிய அரசியலையே அவர்கள் பேசியபடி இருப்பார்கள். இன்று போரை முகங் கொடுக்கும் இலங்கையுள் வாழும் மக்களை நோக்கி அவர்களது அரசியல் நோக்கு முன் நகராது. அதையொத்த ஒரு செயலே தமிழவனின் தொகுப்பாக்கத்தின் அறமுமாக இருந்தது. ?? கவிஞர்கள் அடங்கிய அத் தொகுயில் பெண்களாய்: ஆழியாள், ஊர்வசி, ஒளவை, சிவரமணி, செல்வி, மேஜர் பாரதி ஆகிய ஆறு பெண்களது கவிதைகள் தொகுக்கப் பட்டிருந்தன.

– 2 –

பெரிதுவக்கப்படும் ஈழப் பெண் குரல்கள் 1980, 1990களிற்குப் பிறகு என்ன ஆயின? ஆப்போதுங் கூட பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்-இல் இல்லாத பெண்கள், மரணத்துள் வாழ்வோம்-இல் ‘நம்பிக்கை தந்த’ சில பெண்கள், 1980களின் பெண்கள், 1990களின் இரெண்டொரு பெயர்கள்…. மைதிலி, ஆழியாள், பின் ஆகர்ஷியா மற்றும் போராளிக் கவிஞைகள்… அவற்றைத் தவிர? அவற்றின் பிறகு?

பெண்களின் மௌனம் யாரையும் தொந்தரவு செய்ததில்லை (பெண்களையே கூட! இத் தொகுப்பில் எழுதிய பெண்களில் அனேகமானவர்கள் இத் தொகுப்புத் தாமதமான போதிலும் தங்களது கவிதைகளை வேறெங்கும் பிரசுரித்திருக்கவில்லை. அது, பெண்களாய் தமது எழுத்துக் குறித்த அவர்களது அலட்சியத்தையும்,  தன்முனைப்பின்மையையுமே வெளிப்படுத்துகிறது); அவர்கள் கொல்லப்பட்டிருந்தாலோ தற்கொலை செய்திருந்தாலோ தவிர அவர்களது மௌனத்தில் அதிர்வுகள் என்று சமூகத்தில் எதுவும் இருந்ததில்லை. அந்தந்தக் கால பதிவுகளாய் அவர்களது பிரதிகள் காற்றில் எழுதப்பட்டு மறக்கப்பட்டும் விட்டன.

80கள் தொடங்கி, பிறகும் இந்த யுத்த காலங்களில் பாதிக்கப்படுபவராய் – சகல வன்முறைகளதும் இலகு இலக்குகளாக – பெண்களே இருக்கின்ற போதும், இது வரையில், தம் துயரை, எதிர்ப்பை, அறியப்படுகிற நம் ‘கவிஞன்‘களைப் போல ஒரு அரசியலாய்க் கொண்டு சென்ற, ஒரு பெண்ணைத் தானும் இலக்கியத்தில்க் குறிப்பிட/அறிய முடியவில்லை (அல்லது, அந்தக் குரல்களை யாரும் கொண்டு செல்லவில்லை; உரத்துப் பிடிக்கவில்லை எனலாமா?). கடந்த காலங்களில், இலங்கைக்கு வெளியிலும் சரி உள்ளேயும் சரி இதுவே யதார்த்தமானது.

– 3 –

”ஈழம்” மையப்படுத்தப்பட்ட வெளியீடுகளில் பெயர் கூறல்களை ஓர் வன்முறை போலவே நாம் செய்து வருகிறோம். சிவரமணி கூட விரும்பியிருக்க மாட்டார், இந்தக் காலத்தையும் தானே பிரதிபலித்துக் கொண்டிருப்பதை (‘எந்தக் காலமும் இதைவிடச் சிறந்ததல்ல’ என நிகழ்காலத்தைப் பாடியவர் அவர்). காலம் சிவரமணியிம் செல்வியிலும் உறைந்து நிற்றலோ, காலம் தாழ்த்தி அவர்களை அறிந்துகொள்ளும் வாசகர்களுக்காக ஈழ நிலவரமும் அக் காலத்திலேயே நிலைகொள்ளலோ சாத்தியமில்லை.

அவர்கள் அக் காலத்தின் குறியீடுகளாக இயங்க, இன்று(ம்) தமது ஆண்குறிகளோடும் ஆயுதங்களோடும் துவக்குகளோடும் திரியும் ‘தமது’ இன + சகோதர, சிங்கள இன ஆண்கள் குறித்து மீளவும் நெருக்கடியுறும் ஈழ நிலவரம் குறித்தும் பெண்களின் குரல் (வன்னியிலிருந்து, மட்டக்களப்பிலிருந்து, யாழிலிருந்து, தீவுப்பகுதிகளிலிருந்து – எந்த அதிகார அமைப்புகளிற்குள்ளும் அடங்காது) ‘உரத்து’க் கேட்கவில்லை என்பதே கசப்பான நியமாக உள்ளது. இன்றைய’ஈழத்துப் பெண் கவிதை’ என்பது மதிப்புக்குரிய எமது தமிழகத் தோழர்கள் எழுதுவது போல ஓர் கிளர்வூட்டும் படிமம் அல்ல. அது தோற்றுப் போனது கூட அல்ல. அது இன்றைக்கு -ஒரு இயக்கமாக – ஒலிக்கிறதா என்பதே எமது கேள்வியாக இருக்கிறது. அதற்கு இலங்கையில் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கிற தமிழ்-முஸ்லிம்-பிற-இலக்கிய ஆண்கள் தமக்கெதிரான ஒவ்வொரு குழுக்களைக்ன கைகாட்டித் தப்பிக்க முடியும், தம் பொறுப்பெடுத்தலைத் தவிர்த்து. ஆனால், யார் யாரின் தணிக்கைக்கும், ஒட்ட நறுக்கும் விமரிசனங்களுக்கும் அமைய பெண் குரல் தடுக்கப்படுகிறதோ!

அதனைக் கேட்க, ஓர் இலகுவான சடங்குபோல ‘ஈழம்’ ‘இலக்கியம்’ என்பதைக் குத்தகை எடுத்துள்ள எழுத்தாள ஜாம்பவான்களால் தரப்படுகிற பட்டியலை ஒப்புவித்துக் கொண்டிராமல், இன்றைய நாளின் தன் வலியைப் பாடும் வெளித் தெரியாத குரல்களை தேடிச் செல்ல வேண்டியிருக்கிறது.

– 4 –

போராளிப் பெண் குரல்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தனவோ, அது போலவே, எமது அரசியல் காட்சிகளின் மாற்றங்களுக்கமைய ஒரு கணத்தில் போராளிகளாய் அற்றுப் போகும் பெண்களது குரலும் முக்கியமானதே… சமாதானக் காலத்தில் மட்டக்களப்பில் வெருகலில் பிளவு நடந்த ஒரு கணத்தில் அவர்கள் போராளிகளற்றுப் போனார்கள். அவர்களது எதிர்காலம் ஒரு கணத்தில் அச்சுறுத்தலுக்குள்ளானது. தேசீயம் தான் அவர்களிடம் முன்பு தந்த சீருடையின் பாதுகாப்பைக் கூட வழங்க மறுத்தது (அப் பிளவிலும், தமக்குள் கொலையாளியாகவும் கொலையுண்டவர்களாயும் எம் இனச் சகோதரர்களே ஆனார்கள்). அவ்வாறே இக் காலப்பகுதியின் கிழக்கு இடப்பெயர்வுகளும் யாழின் இராணுவ கட்டுப்பாட்டுள்ளும், வன்னியின் போர்ச் சூழலலினுள்ளும் சகல அரசியல், பிராந்தியப் பிளவுகளுக்கும் தன் பிள்ளைகளைப் பறிகொடுத்தவர்களாய் இறுதியில் பெண்களே இருந்தார்கள். மாறும் ஒவ்வொரு அரசியல் சூழலிலும், இலங்கை நிலவரங்களுள் பெண்ணாக வாழ்தல் சகல இராணுவங்களையும் பால்-இன அடையாளத்துடன் எதிர்கொள்கின்ற நிகழ்வாகும். ஓரு போராளிப் பெண்ணாய் மலைமகள் போன்ற பெண்களது சிறுகதைகளது பகுதிகள் வெளிப்படுத்தியளவு கூட – தமிழ்த் தேசிய ஆயுதக் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத – ஏனைய பிரதேசங்களிலிருந்து வெளிப்படுத்தப்பட்டதா? படின், அது கவனிக்கப் பட்டிருக்கின்றதா?

இலங்கையை/ஈழத்தைப் பொறுத்தவரை அவர்கள் எதிர்கொள்கிற வாழும் சிக்கல்களுக்குள்ளால் மாபெரும் கவிதைகளை எழுதுவது அல்ல எமது எதிர்பார்ப்பு; ‘ஈழப் பெண் குரல்’ என அது றொமான்ரிக் படுத்தப் படுவதுமல்ல. எத்தகைய – ஆண் அரசியல் குடும்ப கடப்பாடுகள் கட்டுப்பாடுகளூடாக அவர்கள் தங்களை வெளிப்படுத்துகிறார்கள் – அவற்றின் அரசியல் – என்பதே கவனிக்க வேண்டியது. சகஜீவியாய் அவள் தன்னை வெளிப்படுத்த விடாத சமூக அமைப்பு அதற்கான பொறுப்பை எடுக்கவும் அதை மாற்றவதற்கான செயல்களில் இறங்குதலுமே அடுத்த எதிர்பார்ப்பாய் இருக்க முடியும்.

-5-

ஈழத்தை மையப்படுத்தாது, பெரும்பான்மையாய்ப் புலம்பெயர்ந்தவர்களையே கொண்டிருக்கிற இத் தொகுதி  இவற்றை ஓர் அவதானமாகவே முன்வைக்கிறது. நெருக்கடியுறும் சமகாலத்தின் ஓலம் எம் காதுகளை எட்டாதபோது இறந்த காலத்தின் பிரதிகளை உச்சரித்துக் கொண்டிருப்பதே அபத்தமாகத் தோன்றுகிறது; ஐக்கியமற்ற இலங்கைக்குள், தமிழ் பேசும் மக்களை உடைய பல்வேறு பிரதேசங்களை, அவற்றின் மாறுபட்ட மனநிலைகளை அறியாது அதை ‘ஒன்றாக’ பார்க்க முனைவது அதன்மீதான மாபெரும் வன்முறையாகவும் படுகிறது.

அந்த வகையில், ‘இரத்தத்துடன் யுத்தம் நடக்காத’, சிங்கள மக்களை கொண்ட, இலங்கையின் தென்பகுதியில் (கொழும்பு) இருந்தும் ‘நோயில் விழுந்துபோன தன் தேசத்தின் மீட்சிக்காய்’ ஏங்குகின்ற குரலுடன், தன் அடையாளத்தை அழிக்கிற அந் நிலத்திற்கு வெளியிலிருந்து அதன் உருவாக்கத்தை –தரப்பட்டிருக்கிற- அதற்கான நியாயங்களை கேள்வியெழுப்ப வேண்டியும் ஒலிக்கிறது பிறிதொரு குரல். இவ்வாறாய்,

தேசம் என்பது எம்முன் முரணுகள் நிறை கருத்தாக்கமாக எழுந்து நிற்கிறது. இங்கே:

  •          ‘தன்’ தேசத்தின் மீட்சிக்காய் பாடும் ஒரு பெண்ணின் தேசம் எதுவாக இருக்கும்? அது தான் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலமா அல்லது தன் பெற்றவர்கள் பிறந்த -குறிப்பிட்ட- பிரதேசமா?
  •          புலம்பெயர் தமிழராய் நாம் வாழும் அமெரிக்கா எமது நாடாக இருக்க முடியுமா?’கனடா’ என்கிற நாடு பூர்விகர்களுடையது என்கிற வரலாறு மறைக்கப்படுவதை – வந்தேறுகுடிகளாய் இங்கு வந்த நாங்கள் ‘இது எம்மை வாழ வைத்த நாடு, எமக்கு வாழ்வு தந்த நாடு’ எனுகிறபோதான ஒத்திசைவில் – ஏற்றுக் கொள்கிறோம் அல்லவா? அவர்களது நாட்டில், அவர்களை ஒடுக்கியவனுக்கு எம் நன்றியுணர்வை காட்டுவதூடாக எமது குரல் அவர்களது வரலாற்றை அமிழ்த்துகின்றது; அதை அறியாமையெனக் கூடிய சந்தர்ப்பவாதம் ராஜதந்திரமாக எம் அரசியல் பரப்பெங்கிலும் நிறைந்திருக்கிறது.
  •          ‘என் தேசம்’ எது என்ற கேள்வியின் பின்னான அரசியலையும் உள்ளடக்கி, தேசம், தேசீயம் இவை கட்டமைக்கப்பட்டிருக்கிற ஆதிக்க-ஆண்-மனத்துடன் முரண்கொள்வதாகவே/முரணானதாகவே, அவ் ஆதிக்க-ஆண்-மனத்தின் அத்தனை பரிமாணங்களுக்கும் பிளவுகளுக்கும் தன்னுடைய பிள்ளைகளைப் பறிகொடுத்தவர்களது மனநிலை இருக்க முடியும் ?

-6-

‘துவக்குகளோடு’ வந்த வெள்ளைத் தோல் மனிதர்களால் – பூர்விகரிடமிருந்து – கொலைகளாலும் தந்திரங்களாலும் திருடப்பட்ட நிலமிருந்தே இத் தொகுதி வெளிவருகிறது. ஆக்கிரமிப்பாளர்கள், ஒரு பெரு நிலத்தை அவர்களிடமிருந்து திருடி விட்டு, இன்றவர்களை றிசேர்வ் (Reserve) எனப்படும் மலையகத்தின் லயங்களைப் போன்ற குடியிருப்பு(?)களில் அடைத்துள்ளார்கள். இக் குடியிருப்புகள் போரினால்ப் பின்தங்கிய கிராமங்களை விடவும் கீழ்நிலையில் மின்சார, நல் குடிநீர் வசதிகளற்றுக் கிடக்கின்றன. எமக்கான மனித உரிமைகளை உலகுக்கு பேசுபவர்களாக உள்ள அதே கனடியர்களாலேயே, திட்டமிட்டமுறையில் மௌனமாக பூர்விகருடைய வாழ்வு முற்றாய் சீரழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந் நிலமிருந்தே நாம் எம் மீதான வன்முறைகளுக்கு எதிராகப் பேச வேண்டியிருக்கிறது. அதன் முரண்களோடும், எமக்கான அரசியலை தீர்வுகளை இவர்களிடமிருந்தே தேர/பெற வேண்டியுமிருக்கிறது (உ-மாக: சமாதான காலத்தில் கனடிய, பிரெஞ்சு-ஆங்கில மாகாண சுயாட்சி முறை என்பன அவ்வவாறு பேசவும் பட்டன).

வேறொரு புலத்தில் வேறு அனுபவங்களுள் செல்கிற எம் குரல்களையும் –வெவ்வேறு அரசியல்-சமூக தளங்களில் நின்று– பார்க்க வேண்டும். உலகமெங்கிலும் சிதறியிருக்கிற ஒவ்வொரு ஈழத்தைச் சேர்ந்தவர்களது குரல்களும் – பகைபுலம் ஒன்றென்ற போதும் – அதன் உள்ளியங்கும் வேறுபாடுகளைக் காணலிலும் சமூக ஆர்வலர்கள் எனப்படுகிறவர்கள்தம் கவனம் வேண்டும். அதனூடேயே அவ் வேறுபாடுகளை ஒன்றின்கீழ் அடக்குவது அதன் ஏனைய குரல்களுக்கு எதிரானது என்பதான புரிதல் நிகழலாம்.

தமது கருத்துக்களைப் பிரதிபலிப்பான்களாக (நன்றி: கருணாகரன்) மனிதரை, குழுக்களை, கருத்தாக்கங்களை உருவாக்குவதும் அதற்கு வெளியில் எதையும் தேடிச் செல்லாமலிருப்பதும் என்கிற ஒரு ‘சொகுசு மனநிலை’யை ஒத்து, அறிவுசீவிகளும் தமக்குப் பரிச்சயமான காலத்தை ‘இன்று’ என அறிமுகப்படுத்தும் வன்முறையைச் செய்வதாக இருக்கிறார்கள். அஃதூடே ஈழத்தின் பல்வேறுபட்ட மக்களின் வலியைக் கூட ஒன்றாக்கவும் செய்கிறார்கள்; தேடலற்றவர்களாய், அறிவுக்கு எதிரான அலட்சியத்துடன், தங்களுக்கு எது கிடைக்கிறதோ அதையே எல்லோரது குரலாகவும் பிரகடனம் செய்கிறார்கள்.

இங்கே: நாம் – ‘எமக்குக் கிடைக்கிறவற்றை வைத்துப் பேசிக் கொண்டிராமல்’; அப்பால், மேலும் மேலும் – எமது சமகாலத்தின் நிகழ்வுகளிற்கு நியாயம் செய்யும் – பிரதிகளைத் தேடிச் செல்லவும், அதனூடே, அந் நிலத்தினுள், பல்வேறு திட்டமிட்ட, அல்லது இனங் காணவியலா செயற்பாடுகள் அழுத்தி மறைக்கிற குரல்களை தேடிச் செல்லவும் வேண்டியிருக்கிறது. அதுவே இத் தொகுதியினது தொடர்ச்சியாக இருக்கும்.

தோழமையுடன்

தொகுப்பாளர்கள்

ஆவணி 2007

(ஒலிக்காத இளவேனில் – கவிதைத் தொகுப்பிலிருந்து)

Advertisements

பிற்சேர்க்கை 02 யுத்த காலம் 2009 – தேசத்திடம் திரும்புதல்

பிற்சேர்க்கை 02பெயரற்றவை: ஒலிக்காத இளவேனில் பற்றி..

யுத்த காலம் 2009 – தேசத்திடம் திரும்புதல்

புதிய தேசங்கள் ஒடுக்கப்பட்டவர்களுக்குத் தந்த விடுதலையும் அனுபவங்களது வெளியும் வேறானாலும் – தமதெல்லா உறவுகளையும் வெளிநாடுகளில் கொண்டிருக்கிற ஆதிக்க பிரதேசவாதிகள் போலன்றி, பல உறவினர்களை அங்கு கொண்டிருக்கிற– புலம்பெயர்ந்து வாழும், குறைந்த அளவிலான ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள்   தாம் பிறந்த தேசத்திடம் திரும்ப வேண்டிய சந்தர்ப்பங்களை யுத்த காலம் கொண்டு வருகிறது.

போர்நிறுத்தத்திலிருந்து (நம்பிக்கையிலிருந்து) அக் காலப் பகுதியின் அரசியல் களையெடுப்புகள்  – படுகொலைகளிலிருந்து,  மீண்டும் உத்தியோகபூர்வமாய் இனவழிப்பு யுத்தம். மக்கள் முகாம்களிடம் ஆயுதங்களால்த் துரத்தப்பட்டனர்.

இடையில், மீண்டும் அம்மா – போராளி – சகோதரி – விசரி என்கிற யுத்தகால முகங்களை வரித்தவாறு பெண் இருப்பு.

மீண்டும், மறுக்கமுடியாத உண்மை, இந்த யுத்தமும் உயிரிழப்புகளும் தேசத்திலிருந்து வெளியேறவியலாத, பெரும்பான்மை, அடித்தட்டு மக்களுடையதே என்பதும், இந்த யுத்தம் பலிகொண்டது தொடர்ந்தும் பலிகொள்வது ஏழைத் தாய்மாரின் குழந்தைகளையே என்பதும்…

யுத்தம் தேசத்தின் வறிய மக்கள் மீதானது. எப்போதும் தொலை-புலங்களில் இருந்து ‘பேசுகிறவர்களாய்’ தேசியவாதிகள் இருக்க, அஃதால் இழப்புகளை முகங்கொடுத்தவர்களாய் மனப்பிறழ்வுகளுக்கு உள்ளாகிறவர்களாய் பாதிக்கப்பட்டவர்களாய் சாதாரண மக்களே இருந்தார்கள்; மரணத்திடம் திரும்பிய இந்த யுத்தம் அவர்களது தேர்வாக இருந்ததில்லை.

இனி: இயலாமையையும் குற்றஉணர்ச்சியையும் எழுப்புகிற சொற்களோடு சொல்வதற்கு எதுவுமில்லை. இப்போது: ‘இது யுத்த(ம் நடக்கிற) நிலத்துக்கு ‘வெளியில்’ வாழும் குறிப்பிட்ட சில இலங்கைப் பெண்களின் தொகுதி’ என்பதே சரியாக இருக்கும்.

இதில் எழுதியுள்ள, இலங்கையில் இருந்து எழுதிய கவிஞர்களுள் அனேகமானவர்கள், போருக்கும் போர் நிறுத்தத்துக்குமிடையேயான குறுகிய காலப் பகுதிகளில் கல்வி மற்றும் குடும்ப நிமித்தமாக புலம்பெயர்ந்துள்ளார்கள். ஆக, அதுவும் இதில் எழுதியுள்ள பெண்களிடம் உள்ள ‘தேர்வுகள்’ எனும் அரசியலைப் பேசவே செய்கிறது. தேர்வற்ற பெண்கள் இலங்கைக்கு உள்ளே உள்ளார்கள். அவர்கள் தனியே பெண்களாக அல்ல, சாதீய பொருளாதார அவர்கள் பிறந்த நிலப் பிரதேசத்தின் (போர் காரணமான) பின்தங்கல்நிலைகளால் ஒடுக்கப்பட்டவர்களாய் உள்ளார்கள். அவர்களது பிள்ளைகள் போராடினார்கள். அவர்கள் போராடினார்கள். ஆயுதம் ஏந்தி மட்டுமல்ல, [தமக்காய்/தம்முடன்] ஆயுதம் ஏந்தியவர்களுடனும் அவர்கள் போராடினார்கள்.

இன்று முகாம்களுள் அடங்கியுள்ள எஞ்சியுள்ள சனங்களுக்கு, அவர்கள் கடந்து வந்த, எம் காலத்தில் நடந்தேறப் பெற்ற மனித அழிவு கடக்க முடியாத கனவாக நடந்தேறியிருக்கிறது. அக் கனவில், அந்நிய ஆயுதங்கள் மட்டும் அல்ல, எமது ஆயுதங்களே கூட தம் சொந்த மக்களை கொன்று, கொன்றவனாயும் கொல்லப்படுபவனாயும் ஆகிய பெரும் துரோகத்தை செய்தன. அந்த யதார்த்தத்தைக் கத்தப் போகும், எம் ஆன்மாவைக் துளைக்கும் அவர்கள்தம் அலறல்கள் எங்களை நெருங்குகின்றனவா? எங்களால் அதன் ஓலத்தைக் கேட்க முடிகின்றதா?

இதுவரை, யுத்தம் – இலங்கையின் ஏனைய சிறுபான்மைகளுடன் – பெண்களுக்கு எதைத் தந்தது என்பதற்கு நாங்கள் இலங்கையின் ஒவ்வொரு சமூக கட்டமைப்புகளுள்ளும் நுழைந்து பார்க்க வேண்டியிருக்கிறது. பெண்களது இருப்பை, அரசியலிலும் தன் இடத்தை, கேள்வி கேட்க எத்தனை பெண்கள்? பெண் அரசியல் விமர்சகர்கள்? எழுத்தாளர்கள்? கவிஞர்கள்? முன்னாள்ப் பேச்சுவார்த்தை மேடைகளில் எத்தனை பெண்கள்? ஆயுதங்கள் தவிர்த்து, தேசீயமும், ‘தேச’ அரசியலும் பெண்களுக்கு தந்தது என்ன என்பதையும், வருங் காலம் பெண்களினுடைய கரங்களினூடாக மூளையினூடாக இதயத்தினூடாக கருணையினூடாக எழுதக் காத்திருக்கிறது.

– தொகுப்பாளர்கள் –

அதே திருடப்பட்ட நிலமிருந்து

எழுதப்படாத கற்பனைகள்

அறிமுகம்

இரண்டாயிரம் ஆண்டுகால இலக்கிய மரபில் – ஒளவையார், காரைக்கால் அம்மையார், ஆண்டாள், வெள்ளிவீதியார், நன்முல்லையார் எனக் குறிப்பிடத்தக்க பெண் கவிஞர்களின் பங்களிப்பு தமிழில் உண்டு. விடுதலைப் போராட்டங்களில் பிரச்சாரமாக இடம்பெற்ற/இடம்பெறுகிற அரசியல் எழுத்துக்கள், கவிதைகள் அல்லது பாடல்களாகின்றன. பெண்களைப் பொறுத்தளவில் இலக்கிய வடிவங்கள் பல இருக்கின்றபோதும், அவர்கள் புனைவாளர்களாகவோ, விமர்சகர்களாகவோ இல்லாமல் கவிஞர்களாக இருப்பதற்கு அவர்களுக்கென்றிருக்கிற சொற்ப நேரமும் அதற்கான இடமும் (space) காரணமாகக் கூடும். அந்த வகையில், வன்முறையாலும் தனிமையாலும் உருவாகியிருக்கிற எம் சமகாலத்தை பதியும் நோக்கில் வெளிவரும் இம் முயற்சியும் ஒரு கவிதைத் தொகுப்பாகவே அமைகிறது.

இதுவரையில், சொல்லாத சேதிகள் (இலங்கை, 1986), மறையாத மறுபாதி (ஐரோப்பா, 1992), உயிர்வெளி- பெண்களின் காதற் கவிதைகள் (கிழக்கிலங்கை, 1999), எழுதாத உன் கவிதை – தமிழீழப் பெண்களின் கவிதைகள் (வட இலங்கை, 2001) ஆகியனவை வேறுபடும் கருத்துநிலைகளில் உள்ள இலங்கைப் பெண்களைக் கொண்டு வெளிவந்த கூட்டுத் தொகுதிகளாக அறிகிறோம்; பறத்தல் அதன் சுதந்திரம் (இந்தியா, 2001) இலங்கை-இந்தியா-புலம்பெயர் பெண் கவிஞர்களின் கவிதைகளோடு வெளி வந்தது (விடுபட்ட இக்காலப் பகுதிக்குரிய வேறும் தொகுதிகள் இருக்கலாம்).

இவற்றினைத் தொடர்ந்து, ஈழத்தின் கவிதை வழியினைக் கடந்து/தொடர்ந்து, ஈழத்தோடு அவர்களுடைய பண்பாட்டையும் நினைவையும் – வெவ்வேறு விகிதங்களில் – பகிர்கிற அல்லது பகிராத குறிப்பிட்ட சில பெண்களது அனுபவங்கள் ஊடாக, ஓர் அந்நிய மற்றும் சமகால வாழ்வை இத் தொகுப்பு பதிய முனைகிறது. வட அமெரிக்காவைக் களமாகக் கொண்டு தொகுக்கப்பட்டதால், அங்கிருந்தே பெரும்பான்மைக் கவிஞைகளோடு வெளிவருகின்ற இதில் எழுதியுள்ள பலரும் கவிதை-பிரசுரவெளிக்குப் புதியவர்களே.

இத் தொகுதி  – தமது அரசியல் நம்பிக்கைகளாலும் வாழ்வுமுறைகளாலும் வேறுபடுகிற, சமூகத்தில் வெவ்வேறு பாத்திரங்களைக் கொண்டிருக்கிற, உலகின் வெவ்வேறு நகரங்களில் உள்ளவர்களை, ‘இலங்கைப் பெண்கள்’ என்கிற பொது உடன்பாட்டின் அடிப்படையில் கூட்டிணைக்க முனைந்திருக்கிறது. இதில் எழுதியிருக்கிற ஒவ்வொருவரது உலகும் ஒவ்வொரு தனித்தனி ஆட்களின் உலகங்கள்; அவ் வகையில், இந் நூல் தரக்கூடிய மொத்தக் கருத்தோடும் இக் கவிஞர்கள் அனைவரும் உடன்படவில்லை.

[  பின்புலம் ]

சராசரியான புலம்பெயர் தமிழ்ப் பொதுமகன் ஒருவரிடம் புலம்பெயர்ந்த மண்ணில் அவருக்குரிய பிரச்சினை என்னவென்று கேட்கப் படின், அவருடைய பதிலும் ஆதங்கமுமாய், பெயர்ந்த மண்ணில், தமது பண்பாடு அழிந்துபோவதையிட்ட முறையிடலும் இருக்கும். அதில்: ஒரு தமிழ்ப்பெண் ‘காப்பிலி’யையோ (காப்பிலி: கறுப்பு இனத்தவரை புலம்பெயர் தமிழர் அழைக்கிற கொச்சைப் பெயர்) பிற இனத்தவன் ஒருவனையோ திருமணம் செய்து விடுவாள் என்பதுடன், ஒரே இனத்தைச் சேர்ந்த, வேறு ஜாதியான, ஒரு தமிழ் மகனை எப்படி அடையாளங் கண்டு திருமணம் செய்யாமல் விடுவாள் என்கிற வகைக் கவலைகளும் அடங்கும். மொழியைவிடவும் மதம், பஜனை வகுப்புகள், பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம் எனப் பிள்ளைகளை – முக்கியமாகப் பெண் குழந்தைகளை- வகுப்புகளுக்குக் கொண்டு சென்று, தமது கலாசாரத்தைக் கைக்கொண்டுவிடவே அவர்கள் விரும்புகிறார்கள். மறுபுறம், கவிஞன்களது பிரதிகள் வீடு திரும்புதல் பற்றிய ஏக்கங்களை, பனி தூவும் விடியற் போர்வையை விலத்திப் பகிருதலும் தொடருகின்றது. மரபான சகல பிம்பங்களும் உடைக்கப்பட வேண்டியனவாய் இருக்க, ‘கவிஞன்‘ என்கிற பிம்பத்தை மட்டும், விடாது, தாமே கட்டி எழுப்பிக் காவித் திரிகின்றன ஆண்களின் பிரதிகள். எனின் அவர்களுடைய அத்தகு ஆதங்கங்களும் பெரும் துக்கமும் இந்த மண்ணில் வளர்கிற பெண்களுக்கோ, ஈழத்தில் வெள்ளாள ஆதிக்கத்தின்கீழ் – வீடோ தமக்கென நிலங்களோ அற்று – ஒடுக்கப்பட்ட (இங்கு வதியும்) சிறுபான்மை மக்களுக்கோ, அடுத்த தலைமுறைத் தமிழ் இளைஞர்களுக்கோ உரியதன்று– அவர்கள் எதிர்கொள்கிற அனுபவங்களது வெளி முந்தையவர்களிடமிருந்து வேறுபட்டது.

இங்கு: முதலாளிய சமூகத்தின் அங்கமான பொருள்முதல்வாதசார் சிந்தனைப் போக்கிற்கமையவே இயங்கும் எம் சமூக வாழ்வில், போரினால் தமது வீட்டை இழந்துவந்த ஒரு மக்கள் கூட்டம் (தமக்கென வீட்டினை, நிலத்தினை புலத்தினில் ‘கொண்டிருந்த’ ஒரு வர்க்கம்), சொத்துச் சேர்த்து ‘வீடு’ வாங்கி, பின் அதற்காக ‘குறைந்த ஊதியத்தில்’ ஓடத் தொடங்குகிறது: ‘வீடு வாங்குதல்’ அவர்களது இழப்புகளின் குறியீடாயும் பதிலீடாயும் ஆகிவிடுகிறது. புலம்பெயர்ந்த நாடுகளின் சமூகங்களிலும் சொத்துச் சேர்ப்பு, திருமணம், குடும்பம், குடும்பத்திற்கென உழைப்பு என எல்லா நிறுவனங்களும் அப்பழுக்கற்றதாய் அப்படியே பின்பற்றப் படுவதும்; தொழிற்சாலைகளில் தமது உரிமைகளை வலியுறுத்தவியலாதளவு சார்ந்திருப்பவர்களாக, வங்கிகளது நிரந்தரக் கடனாளிகளாக, மனிதர்கள் ஆகிவிடுவதும் யதார்த்தமாகி விடுகிறது. மறுபுறம்: ஏனையவற்றுடன், வாழ்வின் அழுத்தங்களினால், குடும்ப வன்முறையால், மன உளைச்சலால் தற்கொலை செய்து கொள்கிற தமிழ்ப் பெண்கள்; யார் யாராலோ எழுதப்பட்ட, எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் தமது வரலாற்றில், யுத்தத்தின் பல்வேறு துயரங்களின் பளுவுடன் சுழலும் உளைச்சலுற்ற மனிதர்கள்; பொது வீதிகளில் வேகக் கார் ஓட்டங்களில் – குழு வன்முறைகளில், தன்மொழிக்குரியவனையே(!) ‘காரால்’ அடித்தும் அடிக்கப்பட்டும் ஒரே சமயத்தில்க் கொலையாளியாகவும் கொல்லப்பட்டவனாகவும் ஆகிவிடுகிற இளைஞர்கள்…. இவ்வாறாய், வன்முறையைத் தூண்டியவாறு போர்ப் புலத்தின் காலடிகள் எம்மைத் தொடர்கின்றன. போரினது கோரத்தை அறியாத போரினுள் வாழ்ந்திராத புலத்தில் வாழும் நம் பிள்ளைகளது கரங்களிலும் அதன் வன்முறை வெறி  ஊடுருவியிருக்கின்றது.

[புலம்பெயர், இளம் தலைமுறை ஆண்களது தமிழ் ‘ரவுடி’ சினிமா மற்றும் வன்முறை குழுக்களைப் பாடுபொருளாகக் கொண்ட கறுப்பர்களது வெகுசன இசை மீதான கவர்ச்சி (gang culture / gang based  music influence) குறிப்பிட வேண்டியது. வன்முறைக் குழுக்கள் தனியே ஆண்களுடையதா என்பதுவும், வன்முறைக்கு பலியாகும் கறுப்பு இளைஞர்கள்  உருவாகிற கறுப்பு சேரிகள் (ghetto) எனப்படுகிற மேற்கின் திட்டமிட்ட பிரித்துவைத்தல் (systematic segregation) நிகழும் குடியிருப்புகளது அரசியல்களும் பிறிதொரு தளத்தில் ஆழமாய் உரையாடப் பட வேண்டியனவாகும். இவற்றிலுள்ள – இங்கே குறிப்பிடக் கூடிய – துயரகரமான அவதானம், வன்முறைக்குழுக்கள் பெரும்பாலும் சண்டையிட்டுக் கொள்வது தமது இன மனிதர்களுடனும் தமது வர்க்க மனிதர்களுடனும் தான். போதைப் பொருட்கள் விற்பனை, துவக்குகள் என இவர்களது   நுகர்வில் பயனடைவோராக திரைமறைவில் பெரும் வியாபாரிகள் இருக்க, வெளியில் வன்முறையில் இறங்கும்  பெண்களானாலும் ஆண்களாலும் அவர்களது சண்டைத் தரப்பாக அகதிகளான சக இன மற்றும் ஒரே வர்க்கத்தினரே இருக்கிறார்கள். அவர்கள் மாறி மாறி தம்மை அடித்துக் கொல்வது என்பது, அவர்களைப் பெற்றெடுத்தவர்களது தவிர, யாருடைய துயரமாய் இருக்க முடியும்??]

அவர்களை இயக்கிக் கொண்டிருக்கிற வன்முறையுலகம், பொருள்சார் மோகம் என – இங்கே நாம் எதிர்கொள்கின்றவை, தனிப்ப(ட்)ட ‘ஒரு’ சமூகம் எதிர்கொள்கின்றவை மட்டுமன்று. யுத்தத்திலிருந்து விலகி வந்த பிறகும் ஆழ ஊடுருவிய அதை தொடர்ந்தும் தம்முடன் சுமக்கிற இனங்களது யதார்த்தம் புதியதும் அல்ல. ஆனால்: கலாசார, பாலின, தலைமுறை இடைவெளிகளை புறந் தள்ளி, இப் பிரச்சினைகளைத் தம் சமூகத்தின் நலனை முன்வைத்து (கலாசார இடைவெளிகளை மீறி) விசாலமாய் அணுகுகிற சிந்தனைப் போக்கும் அதை வளர்க்கிற வேலைத் திட்டங்களும் எம்மிடையே உள்ளதா என்பதே கேள்வியாகும்.

இங்குள்ள தமிழ் சமூக நிறுவனங்கள் அந்நியப்படுகிற இளைஞர்களது நலனைவிட -படித்த, யாழ்-மையவாத (வெள்ளாள, ஆதிக்கஜாதி மனோபாவ)- சிந்தனைகளது இணங்கு தளங்களாகவே உள்ளன; அதன் வேலையாட்கள் ஆங்கில அறிவைப் பெற்ற ஒரு மேற்குடி மட்டத்தினரே. அவை ‘கட்டி எழுப்ப’ விரும்புவது தனிப்பட்ட நலன்களும், ‘தமிழர்கள் அனைவரும் வன்முறையாளர்கள் அல்ல’ ‘வன்முறையில் ஈடுபடும் இளைஞர்கள் (எங்களைப் போல) படித்தவர்கள் அல்ல’ என்பதான – பிரச்சினையானவற்றை/பிரச்சினையானவர்களை ஒதுக்க/தவிர்க்க’ விழையும் – ஒரு தப்பித்தல்ப் போக்கினைத் தான். அப்படியாய் வெகுசன வட்டத்துள் தவிர்க்கப்படும் சமூகத்தின் ஒரு சாராரின் அழிவுப் போக்கு– இன்னொருவகையில் கனடிய அதிகாரங்களினால் மறைமுகமாய்க் கட்டமைக்கப்பட்டுள்ள இனத்துவ பாகுபாடுகளுக்கே உதவி புரிந்து, வழிவிடுகின்றன. இள வயதுகளில் சிறைச்சாலைகளில் நிறைந்திருக்கிற, நீதிமன்றங்களை ஏறி இறங்குகிற எமது இளைஞர்களே அதற்குச் சாட்சியாக உள்ளார்கள். போரின் கொடிய கரங்களிலிருந்து தம் பிள்ளைகளைக் காப்பாற்றிக்  கொண்டு வந்தவர்கள், புதிய நிலத்தின் இனவாதப் பொறிகளுக்கு அவர்களை இழக்க வேண்டியிருக்கிறது.

0 0 0 0

எமது சமகாலம் வன்முறையாலும் தனிமையாலும் உருவாகியிருக்கிறது. நாம் விரக்தியால் பின்னப் பட்டிருக்கிறோம். அது போர்ப் புலத்தின் தொடர்ச்சியால், பெயர் புலத்தில் விழுகிற கொலைகளால், கலாசார இடைவெளிகளால் மட்டுமல்ல; நண்பர்களைப் பிரிவதாகவோ, தொடர்பூடகங்களால் ஏற்படுத்தப்படுகிற தாழ்வுச் சிக்கலாகவோ தனிமைப் படுத்தலாகவோ இருக்கலாம். எதையும் ‘வெளியில்’பேச முடியாதபடி நாங்கள் பயிற்றப் பட்டிருக்கிறோம். பேச முனைதல் என்பதே சமூகத்தால் ஏளனமாகப் பார்க்கப்படுகின்ற ஒன்றாகும். வழிவழியான பயிற்றுவிப்புகள், ‘வெளியில்’ இருந்து, எந்த உதவியையும் நாடாதவாறு தனிமைப் படுத்தப்பட்டவர்கள் மீது பயங்கரமானதொரு எதிர்விளைவைக் கொண்டிருக்கின்றன. இதை எந்த ஒரு பாலினத்துள்ளும் (gender) அடக்குவது எமது நோக்கமல்ல. இன்றைய சமூக-பொருளாதார சிக்கல்களுள் பாதிக்கப்பட்டவர்களாக சகலருமே உள்ளார்கள். ஆயினும், புலம்பெயர்ந்த பிறகும், புதிய நிலத்தில் ஓர் இனம் காவுகிற சகல விழுமியங்களையும் காவ வேண்டியவர்களாய் உடனடியாக எதிர்பார்க்கப்படுவது பெண்களிடமிருந்தே தொடங்குகிறது. பொது ஊடகங்களில் விமர்சிக்கப்படும் (அணியும் ஆடைகளிலிருந்து ஒழுக்கம் வரை) உடம்பை முன்னிறுத்திய அனைத்து செயற்பாடுகளையும் உதாரணமாய்க் கூறலாம். தெருவில் திரியும் ஆண்களது  ஒழுக்கம் குறித்து விமர்சனங்கள் அத்தகைய முக்கியத்துவத்துடன் எழுவதில்லை.

தாயகத்திலிருந்து திருமணங்கள் ஊடாக, இங்கு அழைக்கப்படுகிற, தாம் வாழ்ந்த நம்பிக்கைகளிலிருந்து ‘பிடுங்கி வைக்கப்படுகிற நாற்றுகள்’ புதிய இடத்தை தகவமைத்துக் கொள்வதற்கான உதவியை இங்குள்ள நிறுவனங்களோ, குறிப்பாக குடும்பத்தில் ஆண் உறவுகள் செய்ய தவறுகின்றனர். தவறாது, வந்ததும் குழந்தையை மட்டும் சுமக்கத் தந்துவிடுகிற துணைகளோடு, புதிய இடத்தில், தனித்து வைக்கப்படுகிற ‘குடும்பப் பிரச்சினையை எங்கவும் கதைக்கக் கூடாது’ எனக் கட்டளைகள் இடப்பட்டிருக்கிற பெண்ணின் நிலை – சமூகத்தின் பொது நீரோட்டத்தின் ‘வரையறை’களுள் அடங்காதவர்களை ஒத்ததே. தன்னுள் ஒடுங்குதல் எனும் ‘தகர்க்க முடியாது’ தனைச் சூழ்ந்த சுவர்களுக்குள்ளே கூட யாரையுமே அணுகவியலாத் தனிமை பிறழ்வுகளுக்குள் இட்டுச் செல்கிறது. ‘பேச’ யாரும் இல்லாத நிலையிலேயே – எண்ணற்ற கோயில்கள், தேவஸ்தானங்கள் உளநலனுக்கான உத்தரவாதத்துடன் பத்திரிகைகளில் ‘விளம்பரமிட்டு’ அழைக்கிற போதும்; பல பத்திரிகைகள் சமூகத்தின் தூண்களாய் நிமிர்ந்து நிற்கின்ற போதிலும்; 24-மணிநேரமும் தமிழ் வானொலிகள் – ‘தனிமையில் இருக்கிறவர்களை’ நம்பி நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கிற போதும்; பெண்நல(?) உதவி நிறுவனங்கள் உம் அதில் தமிழ் ‘சமூக சேவகிகள், சேவகர்கள் சேவை’யாற்றிக் கொண்டிருக்கின்ற போதும் – ‘பல்க்கனி கம்பிகளை மீறி’ பல அவலங்கள் நிகழ்கின்றன.

0 1

ஓர் புலம்பெயர் சமூகமாக, எம்மிடையே இடம்பெறுகிற கொலைகள், தற்கொலைகள், பாலியல் துஷ்பிரயோகங்கள், இளைஞர் குழு மோதல்கள் – இவற்றின் பின்னணியிலேயே இத் தொகுப்பும் எண்ணம் பெற்றது. சுயமற்றவர்களாய் மற்றவர்களது கருத்துக்களைக் காவ எதிர்பார்க்கப்படுகிற பெண்கள் ஊடாக சமகாலத்தைப் பேசத் தோன்றியது. இக் கவிதைகள் எவ்வளவு தூரம் ஓர் காலத்தைப் பிரதிபலித்தன என்பதல்ல, நாம் இவையால் உந்தப் பட்டிருக்கிறோம். அந்த உந்துதலூடாக இப் படைப்புகள் உங்களிடம் வருகின்றன. இதில் இடம்பெறுகிற ஒவ்வொரு பெண்களும், தம் அன்றாடத் தனிமை, காதல், காமம், ஏக்கம், அச்சம், கனவு, அரசியல் இலட்சியம்சார் அவரவர் உலகங்களைத் தமதான நம்பிக்கைகளுடன் வெளிப்படுத்தியுள்ளார்கள்.

தமது நிலத்தினதும், அந் நிலமிருந்து பெயர்ந்து திரியும் தேசங்களினதும் நிகழ்காலத்தை தமது எல்லைகளுடனும் பாடுகின்றன இவை. கால மாற்றங்கள் வயதைத் தவிர எதையும் அதிகரிக்காத வாழ்விலுங் கூட அத்தகைய தமது இருப்பைப் பகிரலும் அதூடாக ஓர் உரையாடலைத் தொடங்குவதுமே இவற்றினது மைய நோக்கமாகிறது. தாம் ஒலிப்பதை மறுக்கிற சூழலின் மீதும், சுயமரியாதையின்றி அவமதிக்கப்படும் ஆண்-பெண் உறவுச் சிக்கல்களின் மீதும், பேச்சை ஒடுக்கும் குடும்ப நிறுவனங்களின் மீதும் சற்றேனும் இவை தம் விசனங்களைப் பதிவு செய்திருக்கின்றன. இறுக்கமான சமூகக் கட்டமைப்பில் இத்தகைய பகிர்வுகள் மாற்றத்திற்கான சிறு சிறு சலனங்களே எனலாம். அவ்வகையில், பெண்களாகிய அவர்களுக்கும் சமூகத்திற்கும் இடையில், குடும்ப நிறுவனத்திற்கும் அவர்களுக்கும் இடையில், ஆண் உறவுகளுக்கும் அவர்களுக்கும் இடையில், வன்முறைக் குழுக்களுக்கும் அவர்களுக்கும் இடையில், வேரூன்றித் தொடரும் அடக்குமுறையையும் நிலவும் அசமத்துவத்தையும் இவை தொட்டுச் செல்கின்றன.

0 2

தொகுப்புக்கென அனுப்பப்பட்ட கவிதைகளின் பொதுத்தன்மை உறவுகள் சார்ந்ததாகவே இருந்ததில் இருவிதமான சிக்கல்களை எதிர்கொண்டோம். ஒன்று: பெண்களுடையது என்றால் காதல் மற்றும் ‘தனிப்பட்ட’ உணர்ச்சிகள் சார்ந்தவை என்கிற பொதுவான நிலைப்பாடு குறித்தது. மற்றயது, சமகாலத்தில் நாம் வாழும் உலகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கிற ‘முக்கிய’ அரசியல்(!) நிகழ்வுகள் சார்ந்த பதிவுகள் இல்லாமையால் வருகிற போதாமை குறித்தது. இது பெண்களுடைய பாடுபொருள்களது மட்டுப்படுத்தப்பட்ட எல்லைகள் குறித்து ஆண்கள் ஊடாக ஏற்படுத்தப்படும் சிக்கல் உணருதலாயும் இருக்கலாம். (பெண் வாழ்வியலில் தாண்டப்பட முடியாதவையாக ஆண் நலனை முன்நிறுத்தும் குடும்பமும் வாரிசுடமையும் இருக்கின்றன. அவது உடலில் ஓர் அங்கமான கருப்பை மீதிலான அவளது உரிமையையே நிர்ணயிப்பது அவளாய் இல்லை; அதை நிர்ணயிப்பது ஆண் மதபீடங்களதும் அரசாங்கங்களதும் நலன்களாய், வளர்ந்த(?)-வளராத சகல நாடுகளிலும் இவையே பெண்ணை இறுக்குகையில், பெண்களது அரசியல் என வேறு எதைத்தான் அழுத்துதல் முடியும்?)

எனினும், வடஅமெரிக்காவைக் களமாகக் கொண்டிருக்கிற இத் தொகுதியில், அமெரிக்காவில் 2001 செப்ரெம்பர்- உலக வர்த்தக மையம் தாக்கப்பட்டதுக்குப் பின்பான அரசியலில், ஓர் காலகட்டம், மறைமுகமாகவேனும் பேசப்பட்டிருக்க வேண்டும் என்பதும்; ஈழத்தில் மட்டுமல்ல, உலகெங்கிலும் அதன் விளைவுகள் பற்றி இப் பெண்களுடைய எழுத்திலும் பதியப் பட்டிருக்க வேண்டுமென்பதே எமது விருப்பாயிருந்தது. அதுவே தமிழ்க் கவிதைச் சூழலுக்கான வளர்முகமாகவும் தோன்றிற்று. அதனால் ‘தாயகத்திலிருந்து பிரிக்கமுடியாத’ சோகப்பாடல்களை (அதிகம் பாசாங்குடன்) பாடிக் கொண்டிருக்கும் புலம்பெயர் கவிதைகள் இங்கு இடம்பெறவில்லை; மாறாய் இதில் இடம்பெறுகிற, சில நிகழ்வுகள் பதியப்பட்டிருக்கக்கூடிய ‘உனது இனம்’ போன்றன, கவிதைகள் என்பதைவிட ‘கருத்து’க்களாகவே இருக்கலாம்; எனினும், அவற்றுக்கான தேவை கருதியே சேர்க்கப் பட்டிருக்கின்றன. இத் தொகுப்பு ‘கவிதை’களை முன்நிறுத்தி அவற்றின் மகா உன்னதப் பாய்ச்சலை அடையாளங் காட்ட எனத் தொகுக்கப்படவில்லையாயினும், நவீன கவிதையின் சமகாலப் போக்குகளின் அடிப்படையில் அத்தகைய வகைமாதிரிகளை ‘கவிதைகள்’ என ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை.

0 0 0 0

80-களின் பிற்பகுதியில், ஈழத்தில், போராட்ட குணமும் நேர்மையும் நிறைந்த மனுஷிகள், செயற்பாட்டாளர்கள், சமூக பிரக்ஞையுடைய இளைய தலைமுறையினர் வெளிப் பட்டார்கள். அக் காலத்தின் சிறப்பாய், தம்முள் ஒடுங்காது, தமது சமூகத்துடனான தொடர்பைப் பேணின அவர்களது குரல்கள்.

ஒரு காலத்தின் பதிவுகளான அவர்களின் குரலை இனியும் தலைமுறைகள் தாங்கிச் செல்லும் என்கிற நம்பிக்கையோடு, அரசியந்திரத்துடன், ஆயுதந் தாங்கிய எமது சகல (ஆயுத) குழுக்களாலும் ‘விடுதலையின் பெயரால்’ மௌனமாக்கப்பட்டவர்களை தற்கொலை செய்து கொண்டவர்களை மறக்கப்பட்டவர்களை -இயக்க வேறுபாடின்றி, ‘விடுதலை’யை விரும்பிய, அதற்காய்த் தம்மை அர்ப்பணித்த சகல மனிதர்களையும் – இச் சமயத்தில் நினைவு கூருகிறோம். வெளித் தெரிகிற’சில’ பெயர்களை மட்டுமே பதிவு செய்கிற வரலாற்றில், வெளித் தெரியாத, எழுத்தில் பதியப்படாத ஏராளம் தனிமனிதர்களும், அவர்களின் அர்ப்பணிப்பும் சேவையுணர்ச்சியுமே எம் மக்களை நோக்கியிருந்தன; அவர்களைக் காப்பாற்றின. அத்தகைய மனிதரின் பிரதிபலனற்ற இருத்தல்தான் எமது வரலாற்றுக்குச் சிறப்பூட்டின என்பதை நினைவு கூருவோம்.

இத் தொகுப்பை சகல பெண்களும் – தம் குற்ற உணர்ச்சிகளிலும் சுமைகளிலும் இருந்து இறங்கி – அவர்களுக்கான சிறு பரிசாக ஏற்றுக்கொண்டால்; எழுத மறுத்து விரக்தி பூண்டிருக்கிற பெண்கள் கைகளில் இது புத்துணர்ச்சியை ஏற்றும் எனில் – அதுவே போதுமானது. அங்ஙனமாயினும், அவர்களுடைய ”இனிய மாலைக் காட்சியும், இயற்கை ரசிப்பும், எதிர்காலத்தின் வாழ்க்கைப் போக்கைப் பற்றிய கற்பனையும்” அவர்களால் எழுதப் படட்டும். அதற்கான சாத்தியங்கள் கைகூடும்வரை இத் தொகுப்பும் ஒரு காலத்தின் பதிவாக இருக்கட்டும்.

0

மார்கழி 2003-5, குளிர்காலம், ஐரோப்பாவிலிருந்து குடியேறிய ஆக்கிரமிப்பாளர்களால் “கனடா” எனப்படுகிற – பூர்வீகர்களின் – திருடப்பட்ட நிலத்திலிருந்து. (மறுதிருத்தங்களுடன்)