வென்றவர்கள் மத்தியில் இருக்கிற இன்னும் வெல்லாதவர்கள்

 – சம்பூர் வதனரூபன் கவிதைகள் –


adayalamatiruththal-500x500

1.
சம்பூர் வதனரூபனின் “அடையாளமற்றிருத்தல்” (வடலி வெளியீடு, 2013 டிசம்பர்) கவிதைத் தொகுப்பின் கவிதைகள் பூர்விக நிலம் பறிபோதலை, தம் ஊரிலிருந்து அகற்றப்பட்ட பிறகு நினைவுகளில் உள்ள ஊர் ஏற்படுத்தும் அகலா வலியை, அதனைப் பின்னிய உணர்வோட்டங்களைப் பதிவு செய்கின்றன. நீண்ட வரலாற்றை உடையதான தமிழ்ப் பகுதிகளில் இலங்கை அரசின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் ஈழப் போராட்டத்தில் ஆற்றிய பங்கு எம்மிடையே ஏலவே கவனத்துக்குள்ளாகிய ஒன்றே. 2006 இல் நிகழ்ந்ததான திருகோணமலை மாவட்டம், சம்பூரிலிருந்து மக்களது வெளியேற்றம் வெளிப்படுத்துவதும் ஆக்கிரமிப்பாளர்களைப் பொறுத்தவரை அது தொடர்ச்சியான வேலைத் திட்டம் என்பதே.

நூலின் முன்னுரையில் மு.மயூரன் குறிப்பிடுவதுபோல, ‘45% இற்கு மேற்பட்டவர்கள் விவசாயத்தையும் 35% இற்கு மேற்பட்டவர்கள் மீன்பிடித் தொழிலையும் செய்துவந்த தன்னிறைவான நிலமான சம்பூர் எனும் சிறு கிராமத்தின் 5000 ஹெக்டேயர் நிலப்பரப்பு “உயர்பாதுகாப்பு வலயம்” என்ற பெயரில் கடற்படையின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இவ்விடத்திற்தான் இந்தியாவின் பாரிய நிலக்கரி மின்நிலையமும் 4000 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள வரிவிலக்களிக்கப்பட்ட மிகப்பெரிய பன்னாட்டு முதலீட்டு வலயமும் உருவாகவுள்ளன.’

மக்களின் நிலங்கள் அந்நிய முதலீடுகளுக்கும் உயர்பாதுகாப்பு வலயம் என்கிற பெயரில் அரசுக்கும் பறிபோகையில் நிலம் யாருடையது என்கிற கேள்வி தவிர்க்கமுடியாதபடி எழுகிறது. உலகப் பரப்புகளில் ஆக்கிரமிப்புக்கு எதிரான நிலம்சார் போராட்டங்களும் அவைக்கு எதிரான பின்காலனித்துவ அடக்குமுறைகளும் தொடர்கின்றன. கனடா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட பூர்விகக் குடிகளிடமிருந்து திருடப்பட்ட நாடுகளது; இஸ்ரேல் போன்ற பலஸ்தீனர்களிடமிருந்து திருடப்பட்ட நாட்டினது; இந்தியா போன்ற தனது ஆதிக்குடிகளது வளங்களைச் சுரண்டி அந்நிய முதலீடுகளுக்கு கொடுக்கும் அரசுகளினது, ஆயுத அதிகார பலத்துக்கெதிராக – வாழ்விடத்தின் மீதான தமது உரிமையை வலியுறுத்தி – சாதாரண மக்கள் தொடர்ந்து போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

சம்பூரிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு எட்டு வருடங்களும்; இலங்கையில் யுத்தம் முடிவு(?)க்குக் கொண்டுவரப்பட்டு ஐந்து வருடங்களும் ஆன நிலையில் மக்கள் கூட்டாக போராட்டங்களில் ஈடுபடுவதற்கு கடும் எதிர்ப்புகளும் தண்டனைகளும் பதிலாகிக் கொண்டிருக்கின்றன. முன்னம் இராணுவம் நிலைகொண்டிராத கிராமங்களில் வந்துவிட்ட ஆயுதங்களுடனான இராணுவ பிரசன்னம் அரசாங்கம் எச் சிறு எழுச்சியையும் தான் எவ்வாறு கையாளப் போகிறேன் என்பதைச் சுட்டும் சமிக்ஞையாக இருக்கிறது. அவை தாண்டியும் யுத்தத்தில் ஏற்கனவே இழந்தவற்றின் துயர் ஆறுமுன்னே தமது உரிமைகளுக்காக மக்கள் தெருவில் இறங்கிய சந்தர்ப்பங்களும் இருக்கின்றன. அத்தகையதான காணாமற்போன தமது உறவுகளுக்காக ஒருங்கிணைக்கப்பட்ட போராட்டங்கள் போன்ற கூட்டு போராட்டங்கள் தவிர, போரின் பிறகான முதல் கட்டத்தில், இழந்தவற்றை விடுத்து, இருப்பவற்றைக் காத்துக் கொள்ளும் எத்தனிப்புகளை அதிகம் காண முடியும்.

2.

வதனரூபனின் தொகுப்பும் இத்தகைய பின்னணியின் பாதிப்புகளிலிருந்து விலகியதல்ல. ‘யுத்தமற்ற யுத்தகாலத்தில்’ நிகழ்ந்த 2006 சம்பூர் இடப்பெயர்வு முதல், யுத்தகாலத்தில் 2009 இல் தமிழீழ விடுதலைப் புலிகளது இராணுவத் தோல்வி மற்றும் அதன் பிறகான காலம் வரையான மனநிலைகளை கவிதைகள் கொண்டிருக்கின்றன. தனித்தும் கூட்டாகவும் அப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்களது உணர்வோட்டங்களை இவை வெளிப்படுத்துகின்றன.

நினைவுகளிலுள்ள ஊர் தனியே மனிதர்களால் ஆனதா… செந்தாமரைகள் நிறைந்த குளங்கள், கால்நடைகள், பிரார்த்தனைத் தலங்கள், தமது ‘பருத்த கிளைகளை வீசியெறிந்து’ காத்திருக்கும் அரசமரங்கள்; இவற்றுடன் இணைந்ததே சக மனிதர்களுடனான பயணமும் வாழ்வும். அவற்றை இழந்து, சொந்த நாட்டுக்குள்ளேயே இடம்பெயர்ந்து முகாம் வாழ்க்கைக்குத் தள்ளப்பட்ட பிறகு; மரபுவழி யுத்தத்தில் அதன் தோல்வியின் பின்னரான முதற் கட்டத்தில் – தருவதை ஏற்க வேண்டியவர்களாக சமூகம் மாற வேண்டியிருக்கிறது. உரிமைகளும் தேர்வுகளும் அற்ற நிலையைக் கவிஞர் இவ்வாறு எழுதுகிறார்:

“விரும்புகின்றவைகளைக் கொடுப்பதும்
தருவதையெல்லாம் ஏற்பதும்
மிக கடினமாயுளது எப்போதும்.’ (ப. 41)

அதேபோல, கிழக்கில் தமிழர் பகுதிகளில் உள்ள அரச மரங்களின் கீழ் எல்லாம் புத்தர் வந்தபின் ‘…காகமும் கொக்கும் கூடுகட்டிக் கூச்சலிட / கறுப்பு நிழல் பரப்பி வெள்ளை எச்சங்கள் பூசி/ ஆண்டுகள் தோறும் ஆயிரங்களாய் காய்த்துக் கொட்டி/ அதற்கான உரிமையோடு பல்லாண்டுகளாய்’ (ப.67) வாழ்ந்த மரங்களை அவற்றை வளர்த்தவர்களே அவசரமாய்க் கொல்ல நேர்ந்த சூழலை”புத்தரின் பெயரால் வெட்டப்படும் மரங்கள்” கவிதை சொல்கிறது.

இருக்கிறவை பறிபோகாமலிருக்க சிறுபான்மை சமூகம் எடுக்கும் எத்தனங்களாகவே அதைப் பார்க்க முடியும். தன் புராதன அழகை கெடுத்தவாறு கோணேஸ்வரர் கோயிலில் புதிதாய் – எங்கே பேரினவாத அடையாளத்துடன் புத்தர் அங்கும் வந்து விடுவாரென்றோ என்னவோ – மாபெரும் சிவன் சிலையும் வந்துவிட்டது. இதனுடன் தொடர்புடையதாக, சிறு பராயத்தில் எமது கிராமத்தில் – பல தமிழ்க் கிராமங்களில் – தமிழ் பவுத்தத்திற்கான சாட்சிகளாய் நிலங்களின் அடியில் புத்தர் சிலைகள் கண்டெடுக்கப்பட்டதும் பேரினவாதத்தின் முன் அதை மறைக்க வேண்டி இருந்த ‘தேவைகள்’ குறித்து எம்முன் பெரியவர்கள் உரையாடிய நினைவுகளும் வருகின்றன. பவுத்தம் தத்துவார்த்தமான ஒரு மார்க்கம் என்கிறபோதும், இந்துக்கள் சக பவுத்தர்கள் என்கிற அரசியல் வாய்பாடே இன்றும் உடனடியான எதிர்ப்பரசியலாகுவதைக் காண முடிகிறது.

தனது தேசத்திலே அந்நியமாக உணருதல்; காலகாலமாக சிறுவம் – பள்ளிப் பருவம் – காதல் என தன்அனுபவங்களைப் பகிர்ந்த நிலத்திருந்து பிடுங்கி அகதி முகாம்களுக்கு எறியப்படுதல் – இத்தகையதான அனுபவங்களை ஒவ்வொரு தலைமுறையும் ஒவ்வொரு விதமாய் எதிர்கொள்கிறது. அந்த வகையில், இன்னமும் சொந்த ஊரில் இருப்பதாய் நினைத்து இயங்கும் ஆச்சியொருத்தியைக் கண்முன் கொண்டுவருகிறது மற்றுமொரு கவிதை. மரநிழலில் இருந்து, சருகு பொறுக்கிச் சேர்ப்பதும் கேட்டால் ‘பயிர் வளர உரம் இடுவதாகச்’ சொல்வதுமாய்,

“…அவள் வாழ்வது
அகதி முகாம் என்பது
எப்போதும்
அவளுக்கு நினைவில் வராது.

கைக்குத்து அரிசியோ?
கடைந்த குப்பைக் கீரைக்கறி இல்லையோ?
வீட்டு முற்றத்தில் காற்று வீசல்லையோ?
ஆச்சி அறியாமல் கேட்பாள்.’ (ப. 79)

போருக்கு பிந்தைய மனம் வெற்றிபெற்றவர்களது களிப்பாலும் தோல்வியடைந்தவர்களது மனச்சோர்வாலும் பின்னப்பட்டிருக்கின்றது. ஃ கொடிகளை உயர அசைத்தவாறு ஒரு தரப்பின் வெற்றிக் கொண்டாட்டங்கள் யுத்த வடுக்களிலிருந்து மீள முனைபவர்களிடம் அதிர்வுகளை ஏற்படாதிருத்தல் சாத்தியமில்லை. இப் பெரும் போரும் அதன் முடிவும். அர்த்தமற்றுப்போன இழப்புகள் ஏற்படுத்துகிற துயரமும், தோல்வி எவ்வாறு வந்தது என்கிற கேள்வியும் பல கவிதைகளைத் துளைக்கின்றன. அவை, போரிட வந்த அசுரர்கள் இன்னதென்று அற்று பல முகங்களுடன், ‘எட்டுத் திக்குகளிலுமிருந்து / நவீன வாகனங்களில் ஜாலம்காட்டி/ பலமாக வலியவர்களாக’ உலகக் கடவுளர்களின் ‘வரம்பெற்று போரிட வந்த’ கதையையும்; ‘உண்மையான’ போராளிகள் களத்தில் இறந்துவிட ஏனையோர் தடுப்புமுகாம்களிலும் தனிப்பட்ட வறிய நிலைகளிலும் மௌனித்துவிட சந்தர்ப்பவாதிகளானோரே சமூக கௌரவங்களுடன் பேசத் தொடங்கும் தன் சமகாலத்தையும் பதிவு செய்கின்றன. ‘விடுதலை கேட்டவர்கள் விமர்சிக்கப்பட்டும் குற்றவாளிகளாகியும் நிற்க; முடமான போராளிகள் முன்னாள் போராளி சான்றிதழ்களுடன் வீடுகளில் முடங்கியும்’ யுத்தமில்லாத யுத்தகாலம் – அவரது மொழியில் – தாய்நிலமற்று தனிக் கலாச்சாரமற்று தொன்மங்களைத் தொலைத்து தோற்றும் போய், ஊர்களுக்குத் திரும்ப முடியாதவர்கள் முகாம்களில் வாழும் காலமாகவும்; சந்தேகத்தில் கைதானவர்கள் சிறைகளில் வாடும் காலமாகவும் ஆகிப் போனது.

பயங்கரங்களும், தனிநாடு கோரப் ‘புலிகளும் பிரபாகரனும் … பயங்கரவாதிகள் என அழைக்கப்பட்டோரும் இல்லையென்றான பின்பும்’ கூட, தமது நிலங்களுக்குத் திரும்ப முடியாமல் சம்பூர் உள்ளிட்ட மக்கள் உள்ளனர். சந்தேகத்தில் கைதானவர்கள் திரும்பிவரவில்லை. ‘காகித முகங்களையும் விடுதலை வேண்டுதல்களையும் / கைகளால் உயர்த்திப் பிடித்தபடியுள்ள, பெண்களதும் முதியவர்களதும் கவலை தோய்ந்த முகங்களாக / அவை திரையிடப்படுகின்றன.’ கிழக்கில் நில ஆக்கிரமிப்பு அப்படியே இருக்கிறது. ஆக்கிரமிப்பாளர்களான,

‘இன்றுள்ளவர்கள் வேலி விரித்திருக்கும்
மிக வசதியான அடைப்புக்குள் தான்
நேற்று இருந்தவர்களின் படுக்கையும்
கழிப்பறையும் கூட
ஆதியாகவும் நிரந்தரமாகவும் அமைந்திருந்தது.’ (ப. 39)

‘இனி எந்த வீதியிலும்
புத்தர் மீண்டும் கவச வண்டிகளில்
சித்தார்த்தனாக வலம்வர முடியும்.’ (ப. 40)

இப்படியான சூழல் தருகிற மனச்சோர்வை; அடையாளங்கள் அழியும் ஆக்கிரமிப்பு ஏற்படுத்துகிற வெற்றிடத்தை; நம்பிக்கைகள் உடைந்த ஒரு காலத்தை நகர்த்திச் செல்ல “தோற்றுக் போகவில்லை” என்கிற உணர்வு முக்கியமாயிருக்கிறது. தோல்வியடைந்தவர்கள் இல்லை என்கிற நம்பிக்கை தேவையாய் இருக்கிறது.

‘தோற்றவர்களில்லை
நாங்கள்
வென்றவர்கள் மத்தியில் இருக்கும்
இன்னும் வெல்லாதவர்கள்.’ (ப. 62-63)

போன்ற கவிதை வரிகள் வழி அதையே உணர முடிகிறது.

3.

கவிதை அல்லது தாம் தேர்ந்தெடுக்கும் படைப்பு வடிவத்தின் அமைப்பு, அதன் சமகாலப் போக்குகள் குறித்த விவாதங்கள் / விமர்சனங்கள் மற்றும் போதிய ஊக்கப்படுத்தல்கள் பரவலாயில்லாத சூழலில், தொடர்ந்து எழுதுவதற்கும் எழுதுபவர்கள் தம்மைப் புதுப்பித்துக் கொண்டு படைப்பையும் புதுப்பித்துக் கொள்ளுதலிற்குமான ஆயுளும் குறைவானதே. அனேகமாக இலங்கைக்குள் எழுதப்பட்ட இலக்கியங்களுள் தமது நூல்கள் உரிய கவனம் பெறாததாலும், ‘பிரபல பட்டியலாளர்கள்’ அறிந்த ஒரு சில பெயர்கள் மட்டுமே ஈழத்தின் அதிசிறந்த எழுத்தாளர்களாய் முன்வைக்கப்படுவதாலும் காலப்போக்கில் காணாமற் போனவர்களது தொகையே அதிகம்.

போருக்குள் சிக்கிக்கிடந்த, போரே பிரதான பேசுபொருளாய் சபிக்கப்பட்டிருந்த நிலத்தையுடையவர்கள், தம் இளமையின் பெரும் பகுதியை அதனுடனே பகிர்ந்தவர்கள், தமது படைப்புகளின் தராதரத்தை நிர்ணயிக்கிற அதிகாரம் உடையவர்களாய் இருந்ததில்லை. தம் பாடுகளை எழுதுதல் தவிர தம் படைப்பின் குரலை உரிய வாசகர்களிடம் எடுத்துச் செல்லும் சந்தைப்படுத்தல் வசதிகள் கிடைக்கப் பெறாதவர்கள் அவர்கள். அதனால், துரதிர்ஸ்டவசமாக அவர்களதான அனுபவங்களைக் கொண்டிராதவர்களே அவர்களது அனுபவங்களையும் சேர்த்து பிரதிநித்துவப் படுத்திக் கொண்டிருப்பார்கள். அதைத் தாம் பிரதிநித்துவப்படுத்துவதாச் சொன்னாலும், வசதியான சலுகைமிக்க வகுப்பைச் சேர்ந்த எழுத்தாளர்களால் ஒருபோதும் பிரத்தியேக சலுகையற்றவர்களது உலகத்தை அதன் சிக்கல்களைப் புரிந்துகொள்தலோ முழுமையாய்ப் பிரதிநித்துவம் செய்தலோ சாத்தியமில்லை. இதனாலேயே வதனரூபனின் தொகுதியும் அதிகம் பிரதிநித்துவப்படுத்தப்படாத பிரதேசத்தின் பாடுபொருள்களுடன் தனித்து ஒலிக்கிறது.

ஒத்ததாக, வதனரூபனது தலைமுறையைச் சேர்ந்த சம்பூரைச் சேர்ந்த இன்னொரு கவிஞரான சுஜந்தனின் ‘நிலம் பிரிந்தவனின் கவிதை’ என்கிற தொகுதியொன்றும் 2011 இல் வெளிவந்தது. ஆச்சரியமற்ற வகையில் இந்த இரண்டு கவிஞர்களும் தாம் இழந்து வந்த சம்பூர் எனும் ‘பொன்னிலத்துக்கும்’ அதைப் பிரிந்து இடம்பெயர்கையில் பலியானவர்களுக்கும் தம் நிலத்துக்காய்ப் போராடியவர்களுக்குமே தமது நூலை சமர்ப்பணம் செய்திருக்கிறார்கள். இரண்டு தொகுதிகளுமே ஊரை அதன் மீதான உரிமைகளை இழந்து வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட முகாம் வாழ்வையும் அதைச் சூழ் அரசியலையுமே பேசுகின்றன. அத்துடன் இருவரும் தமது கவிதைகளின் அமைப்புகள் நவீன கவிதை வடிவங்களுள் அடங்கியனவா அல்லவா என்பதை விடுத்து தம் பாடுகளை தமது குரலைப் பதியும் பெரு விருப்பைத் தம்முரைகளில் பதிந்திருக்கின்றனர்; வாசகர்கள் தம் சூழலின் எல்லைகளை கவனங் கொள்ளுமாறு கேட்டுள்ளனர். கவிதையா இல்லையா போன்ற விவாதங்களுக்கு போகக் கூடிய தனிச்சலுகை (privilege) மிகுந்த சூழல் அகதி முகாம் வாழ்விலோ தம்மைச் சூழ நிகழ்ந்துகொண்டிருந்த பிரச்சினைகளின் கொதிநிலையிலோ இருந்ததில்லை என்பதையே அவர்கள் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அவற்றையும் கவனங் கொள்வதுடன், இத்தகைய நூல்கள் குறித்த தொடர் உரையாடல்கள் விமர்சனங்களுடன் மேலும் நூல்கள் வருவதற்கான பொருளாதார ஊக்குவிப்புகளும் நம் மத்தியில் அவசியமானவை.

அந்த வகையில் வெளியீடுகளில் இலங்கையில் வாழும் ஆளுமைமிகு பல படைப்பாளிகளதும் படைப்புகளை முதன்மைப்படுத்தி வெளியிடும் வடலி வெளியீட்டிற்கும் அகிலனுக்கும் நன்றிகள்.வெகு சில எழுத்துப் பிழைகள் தவிர்த்து, நூல் நேர்த்தியாக வந்திருக்கிறது. நிலம் மற்றும் காலம் தொடர்பில் அறிமுகமற்ற வாசகர்களுக்கு கவிதைகள் எழுதப்பட்ட திகதிகளும்,திருக்கோணமலையில் சம்பூரின் நிலப்படமும் சேர்க்கப்பட்டிருப்பின் அதன் புவியியல்சார் முக்கியத்துவங்களை விளங்கிக் கொள்ள அதனுடன் கவிதையை மேலும் புரிந்துகொள்ள உதவியிருக்கும். ஏனெனில் 07.07. 90 என்கிற கவிதையின் தலைப்பாக வரும் திகதியின் பின்புலம் அறிவதில் என் போன்ற வெளிநாடுளில் வசிக்கிற தலைமுறை வாசகர்களுக்குத் தடைகளுண்டு (பிரத்தியேக பின்புலமற்ற, அன்றாடமாய்ப் போன நிகழ்வுகளில், கவிஞருக்கு முக்கியமான ஒரு பயங்கர தினமாய் அது இருக்கவும் கூடும் எனிலும்).

இக் கவிதைகளின் போதாமை அல்லது அடைந்திருக்கக் கூடிய படைப்பின் உச்சங்கள் வதனரூபன் தன்னுரையில் கூறுவதுபோல ஒரு காலத்தின் பிரதிபலிப்புகளே. அவ்வாறு காலத்தோடு வாசிக்கக் கோருவதையும் விஞ்சியிருக்கின்றன சில கவிதைகள். அவற்றில் சிறப்பான கவிஞராகத் தன்னை அடையாளங் காட்டுகிறார் சம்பூர் வதனரூபன்.

“எனது பூர்வீக நிலத்தில் இருந்து ஓர் நள்ளிரவில் விரட்டப்பட்டு, வாழ்வின் வேரறுந்து, தனித்த பொட்டல்வெளிக் கூடாரங்களில் அனல் மூடக் கிடந்த காலங்களிலும், என் மக்களின் அவலங்களைத் தினமும் காணும்போதும் அதற்குக் காரணமானவர்களிடம் இந்நிலைக்காக கெஞ்சவோ, வருந்தி அழவோ, விதியென நொந்து கொள்ளவோ என்னால் இப்போதும் முடிவதில்லை” என்று கூறும் அவரின் அந்த இயல்பே பல கவிதைகளை ஆக்கிரமித்திருக்கிறது. அவர் எதற்கும் கெஞ்சவோ வருந்தி அழவோ இல்லை. அடையாளமற்றிருத்தல் – தொடர்பில் தனியாகவும்கூட்டாகவும்உணரும் உணர்வெழுச்சிகள் சிறு சிறு எதிர்ப்புகளாக இங்கே வெளிப்பட்டிருக்கின்றன.

நீண்ட வரலாற்றை உடையதான கிழக்கிலங்கையின் தொடர் நிலஅபகரிப்பினை அதன் சமகால உதாரணமாய் அந்நிலத்துடன் பிணையப்பட்ட மனிதர்களின் தவிப்புடன் இக் கவிதைகள் வெளிப்படுத்துகின்றன. நிலத்துடனான தனது உரிமை பறிக்கப்படுதலை தம்மால் இயன்றவரைக்கும் எதிர்க்கின்றன. அதனால்த்தான் பெயரின் முன்னால் ஊரின் பெயரைப் போடுகின்றதொரு வழக்கம் இருந்து வருகின்ற போதும் – தன்னிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட – ஒன்றைக் காவும் ஒருவரது தேர்வு, வரைபடத்திலிருந்து நீக்கினும் கூட தனது பெயருக்கு முன்னால் அது ‘இருக்கும்’ என்பதை உறுதி செய்ய விரும்புவதாய்த் தோன்றுகிறது. ஒரு வகையில் தாய் தகப்பனது பெயரை மிஞ்சி இழந்த நிலத்தின் மீதான பிடிமானம் பதியப்படுவதிலிருந்து ஊர் தன்னடையாளத்தின் மையமாகுவதையும் அதனை இழப்பதன் தாக்கத்தையும் உணரலாம்.

வாசித்த பிறகு, படைப்பின் பெரும் கனத்தை, அதன் சலனங்களை, மனதை நிரப்பும் வெறுமை ஏற்படுத்தும் மௌனத்தை தந்து நகரும்’ஆளற்றுத் தனித்த வெளிகள்” ‘இப்படிக்குத் தாய் நிலமின்றிய அண்ணன்” “எனக்குப் பிடித்த வில்லுக்குளமும் வெண்தாமரைப் பூக்களும்” போன்ற கவிதைகளும்;

‘அச்சம் குறையவில்லை..
இன அடக்குமுறையும் தீரவில்லை.
ஆண்டாண்டாய் போர் செய்தோம்.
அழித்தோம். அழிந்தோம்.
விடுதலை என்பதற்கு
விளக்கம் மட்டும் கிடைக்கவில்லை.
சந்தனப்பேழையுள் நீ
விதைக்கப்பட்டதற்காய்
கல்லறைமேடுகள்தான் மீதமாகும் சான்றுகளா?

தாய்நிலம்மீது நீ
வீரங்கொண்டெழுந்தோடி
பாதச் சுவடுகள் பதித்ததன் புண்ணியம்
களப் புதர்களுக்கு மட்டுமே கிடைத்ததா சொல்.’

போன்ற வரிகளும், எமது தலைமுறையில், மிக நீண்டகாலத்துக்குப் பாதிப்புச் செலுத்தக்கூடிய படைப்புக்களைத் தரக்கூடிய ஒரு கவிஞராக சம்பூர் வதனரூபனை அடையாளங் காட்டுகின்றன. அவர் தொடர்ந்தும் எழுதவேண்டும். தொடர் இயக்கமொன்றே எந்நிலையையும் மேம்படுத்த உதவுகின்ற ஒன்றாக இருக்கும். அத்துடன் இத்தகைய படைப்புகளூடாகவே (அவற்றின் இடையறா பரவலாக்கத்தின் ஊடாக) தமக்கான பிரதிநித்துவங்களை குறிப்பிட்ட இடங்களுக்கு உரியவரே கைப்பற்றிக் கொள்ளுதலும் சாத்தியம்.

தம் கைகளில் ஏதோரு அதிகாரமுமற்றவரது சிறு எதிர்ப்புகளின் இடம் தான் என்ன? அது – பலங்கொண்ட இராட்சசனாய் ஆக்கிரமிக்கும் இராணுவ வண்டிகளை நோக்கிக் கல்லெறியும் – சிறுவர்களது இடமெனவே சொல்லத் தோன்றுகிறது.

__பிரதீபா கனகா-தில்லைநாதன்

Nantri: thaiveedu (Tamil News Monthly) June 2014 issue

 

Advertisements

நீத்தார் பாடல் நூல் வெளியீடு – பேச்சு ஒளிப்பதிவு

தொகுப்பு: கௌசலா

பேச்சாளர்கள்:

குமரன் https://www.youtube.com/watch?v=I0IMFVdGmDs&list=UU9skOgKdc5cC-3khDrLuLFg

மதி கந்தசாமி https://www.youtube.com/watch?v=LOlAjR0oqio

யோகன் கார்த்திகேசு https://www.youtube.com/watch?v=8xrdbDymrz0

 

ஓபியசின் தலை: யோ.கர்ணனின் சிறு கதைகள் ….

நேற்றும் கூட பெருமழை பெய்தது..

இன்னும் முளைக்கவில்லை

[மண்ணுக்காக] விதைக்கப்பட்ட மனிதர்கள்.

– சம்பூர் வதனரூபன் (கவிஞர், திருகோணமலை)

பண்டைய கிரேக்க புராணக் கதைகளில் ஓர்பியஸ் என்கிற ஒரு பாத்திரம் வரும். தீர்க்கதரசியும் ஒப்பற்ற கவிஞனுமான அவன் கற்களையும் மரங்களையும் கூட கசிய வைக்கும் பாடகனாய் அறியப் படுகிறான். அவன் பாடத் தொடங்குகையில் தனது வேர்களைப் பிடுங்கி எடுத்துக் கொண்டு அவனுடன் நடக்கத் தொடங்கும் மரம், மலைப் பாதைகளையும் நதிகளையும் அவன் பின்னால் நடந்து,
கடந்து,
அவன் பாடலை நிறுத்துகின்ற கடற்கரையில் மீண்டும் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளுமாம். மந்திர சக்தியைச்  சூழவும் கொணரும் அவன் குரலின் ஆளுமை நதிகளைத் தம் பாதைகளை மறக்கவும்; நெடு மரங்களை தமை மறந்து ஆடவும் செய்யுமாம்.  ஏன், பலதரப்பட்ட கிளைக் கதைகள் காரணங்களாகப் புனையப்படக் கொல்லப்படுகிற ஒஃபீயஸின் துண்டாடப்பட்ட தலையுமே கூட, நதியில் விழுந்து, லெஸ்போஸ் எனும் சிறுதீவை வந்தடையும் வரை,  நீரில் மிதந்தவாறு, பாடிக் கொண்டே இருந்ததாம்…   யோ.கர்ணனின் “தேவதைகளின் தீட்டுத் துணி” என்கிற சிறுகதைத் தொகுதி குறித்த இக் குறிப்பையும் ‘சம்பூர்’ வதனரூபனின் கவிதையிலிருந்தோ அல்லது துண்டாடப்பட்ட ஓஃபீயஷின் அந்தத் தலையிலிருந்தோ தொடங்கத் தோன்றுகின்றது.

இந்த நூல் வெளிவந்த சில மாதங்களுக்குப் பிறகிருந்து (நவம்பர் – டிசம்பர் 2010) வாசிக்கக் கிடைத்திருந்த போதும், வாசிப்பின் போதான எண்ணங்களை ஒரு விமர்சனமாகத் தொகுப்பதற்கு மனதை ஒருங்கிணைக்க முடிந்திருக்கவில்லை.  போரின் அந்தரமும்  அது உக்கிரமுற்றிருந்த போதிலும் பிறகும் ஏற்படுத்திய கையாலாகாத்தனமும் வெறுமையும் ஒருவித அயர்ச்சியுள் எழுதுதல் தொடர்பான அர்த்தமின்மையுள் தள்ளியிருந்தன; அக் காலத்தைப் பதிவுசெய்கிற இவற்றைத் தொகுக்க முனைகிற முயற்சிகளும் அத்தகைய யுத்தகால உணர்வுகளது தாக்கத்துக்குள்ளேயே (அந்தரத்துள்) விட்டுச் செல்கின்றன.  இக் குறிப்பையும் அந்த அந்தரிப்பை கடக்கும் இன்னொரு முயற்சியாகவே இங்கே மீண்டும்  தொடங்கவேண்டியிருக்கிறது.

ஒரு புதிய தலைமுறையின் வருகை:

நடந்து முடிந்த இப் போரினதும் அதன் அதிர்வுகள் ஆறாத காலங்களதும் வயதுகள் ஆகிற 1980-களில் பிறந்த எனது தலைமுறையில், யோ.கர்ணன் இவ் அனுபவங்களை அங்கிருந்து உள்வாங்கியவராய் இருக்கிறார். தமது அரசியலாற்பட்ட மனத்தடைகளை விட்டு இலக்கிய, அரசியல் பிரமுகர்கள் அவரது அனுபவங்களை உரையாடும் காலம் வருகிறதோ இல்லையோ, இவை நிராகரிக்கப்பட முடியாத கேள்விகள் போல சாட்சியமாய் உள்ளன. கலைமெருகு குறையாத, சாட்சியங்களாய்.. பரிகசிப்பும் துயரமும் மிகுந்த சாட்சியங்களாய். ஒவ்வொன்றும் ஒரு tragic comedy-இன் சிறு சிறு காட்சித் துண்டுகள் போல.

எனது தலைமுறையில் யோ.கர்ணன் என்கிற புதிய கதைசொல்லியின் (சாட்சியின்) வரவை இந் நூல் தெரிவித்துப் போகிறது. இது, இந்தத் தலைமுறையிற் பலர் கேட்கவிரும்பாத ஆனால் தமது வாழ்வே ஆகிப் போன அனுபவங்களை –  கண்டதைச்  சொல்லும் காலமாகட்டும். அதற்கு வலுவாக, இத்தகைய சாட்சிகள் மீது கல்லெறியாத – சேறு பூசாத – பாதுகாப்பு அரண்களைச் சமூக ஆர்வலர்கள் ஏற்படுத்துவார்கள் எனவும் நம்புவோம்.

முன்னுரையில் கருணாகரன் கூறியது போல:
என்னதானிருந்தாலும் சனங்களுக்கு எப்போதும் உண்மை மீதுதான் நாட்டமிருக்கிறது. அவர்கள் எப்படியோ உண்மைகளைக் கண்டுபிடித்து விடுகிறார்கள். தாங்கள் கண்டுபிடிக்கும் உண்மைகளை நாடிச் சென்றும் விடுகிறார்கள்.
ஸ்ராலினின் இரும்புச் சப்பாத்துக் கால்களுக்குள்ளிருந்து உண்மைகளைக் காப்பாற்றிய அன்னா அக்மத்தோவாவை சனங்கள் எப்படி அடையாளங் கண்டு கொண்டார்கள் என்பதும் சியோனிஸ்ருகளின் அபாய வலைகளுக்குள்ளால் மிகக் கடினப்பட்டு உண்மைகளோடு பயணித்த ஆடோனிஸயும் நிசார் கப்பானியையும் எப்படி மக்கள் அரவணைத்துக் கொண்டார்கள் என்பதையும் புரிந்து கொண்டால் இதையும் எளிதிற் புரிந்துகொள்ளலாம்.

இலட்சியம் நியாயம் கற்பு தமிழீழம் … இவை ஒத்த புனிதங்கள் என வருகிற போது இவை குறித்த தமது  கேள்விகள், ‘கண்ட’ மற்றும் ‘தெரிந்த’ உண்மைகளை மறுத்து வந்த சமூகம் அக் கற்பிதங்கள் உடைகையில் பேசியவையே புதிய தத்துவங்களைக் கொணர்ந்தன. இந் நூல் எம் இலட்சியங்களின் “அழுக்கு’ (“தீட்டு”) பக்கத்தை விமர்சிக்கின்றது. இந்த  விமர்சனங்களைச் சாட்சியங்களைக் கொண்டிருக்கிற கலைவெளிப்பாடுகளை உள்ளெடுத்துக் கொண்டாலேயே வேறு தரிசனங்களை அடைய முடியும். அத்தகைய தரிசனங்களுக்கான அத்திவாரங்களைப் போடும் கர்ணனை ஒத்தவர்களை messengers / whistle-blowers-ஐ மறுப்பதை, வசைபாடுவதை, அவர்கள் குறித்த ‘ஊக’  வதந்திகளைப் பரப்பி எதிர்கொள்வதை விடுத்து  – அவற்றைக் கேட்பதுக்குத் தயாராக வேண்டும். இப்போது பாசாங்கு செய்தாலும், தமிழ்ச் சமூகம் ஏதோவொரு வகையில் தனது வரலாற்றின் கோரப் பக்கங்களைக் கேட்டே ஆகவேண்டும்.

#எழுத்துப் பாணி: A Collage [கலப்போவியப் படிமங்கள்]

கர்ணனின் கதைகளில் ‘தஸ்யுக்களின் பாடல்கள்’ (பக் 75) இரு எதிர் இனக் குழுமங்களின் கதையை சொல்ல முனைகிறது. அதன்  சிக்கலுகள் (complexes)  (ஒருவர் நியாயவாதியாய் மற்றய குழுமம் முழு எதிரியாய்) சித்தரிப்பதில் உள்ள வரலாற்றுக் குறைபாடுகள் காரணமாக, பெரிய நாவலுக்கான சிறு தொடக்கமாக, முற்றுப் பெறாததாய் அமைந்து விடுகிறது (பெரிய கதையொன்றைக் கூற எத்தனித்து பெருமூச்சுடன் முடிந்து போவது போல பல கதைகள் பிறகும் விரிந்து செல்கின்றன). அதில் தஸ்யுக்கள் தமிழர்களாய், சகோதர இனத்தால் வஞ்சிக்கப்பட்டவராயும் புனையப்படுகிறதோ இல்லையோ. அதற்கான படிமங்கள், கலப்போவியங்களாய்.. விழுகின்றன.

1980களில் பிறந்த ஒரு தலைமுறை அக் காலத்தின் கலை இலக்கிய, அரசியல், சரி-பிழை, பலி எல்லாவற்றினதும் எதிரொலியான ஒரு Collage ஆகவே இருக்க முடியும்.
‘இரண்டு குண்டுகள்.
ஒன்று ஆகாயத்திற்கு
அடுத்தது பூமிக்கு’  என்பதாய் 1980களின் கவிதை முடிகிறதா, கர்ணனின் கதையும் முடிகிறது ‘உதவியாளன் அடிச்சது இரண்டே இரண்டு ரவுண்ஸ் தான். சனம் எல்லாம் குழறிக் கொண்டு திரும்பி ஓடிச்சுதுகள்.
ஒன்று வானத்துக்கு. மற்றது இவன்ர தலைக்கு’ (பக். 59; கதை: “சுதந்திரம்”)

#கறுப்பு – அங்கதம்

கர்ணனின் கதைகளில் வைக்கப்பட்ட விமர்சனங்களில் ஒன்று:
அவை இதுவரைகாலமும் புனிதங்களாக இருந்தவற்றை (விடுதலை இயக்கம், தமிழீழ இலட்சியம், மனித அழிவு தரும் பெருந் துயரம்) கேலிக்கூத்தாக்கியிருக்கிறது என்பது. இந்த விமர்சனங்களுக்குப் பின்னே ஒரு கொடிய மனித அழிவினது சாட்சியாக உள்ள எழுத்து குறித்த ‘அது இப்படித்தான் இருக்கவேண்டும்’ என்பதான பிம்பமும்  – அவ் வாழ்வை வாழ்ந்திராதவர்களது – புனித மனநிலையும் இருக்கிறது; அதுவே முன்வைக்கப்படுகிறது.

இவற்றுக்கு மாறான பார்வையே அவரது எழுத்துக் குறித்து எனக்குள்ளது. கனடிய புனைவுலகில் முதலாம் உலக யுத்தத்தை மையப்படுத்திய Timothy Findley போன்ற கதைஞர்களது படைப்புகளில்  உள்ள துயரத்தில், அங்கதம்  பேசப்படுவதுண்டு. ஒருவகையான இந்த எள்ளலுணர்வு அல்லது விகடம் (Wit) உண்மையில் ஒருவரது பாதுகாப்புக் வழிமுறையாகவே (defense mechanism) செயற்படுகிறது. ஏனெனில் துன்பியல் நாடகங்கள் துயரத்தில் தோய்ந்து எழுதப்படுகிற துயரக் கதைகள் எம்மை மீட்டெடுக்கத் தோதான சிகிச்சை (Therapy) வழிகள் இல்லை. கொடிய அனுபவங்களை எழுதுபவர்கள் அறியாமலே எள்ளல் ஒரு பாதுகாப்புக் கவசமென அவர்களது படைப்புகளில் வந்துவிடுவதையே அவதானிக்கலாம்; பல தலித் கதைகளாகட்டும் கறுப்பின இலக்கியமாகட்டும் அவற்றின் எளிய தன்மை விளிம்புகளது கதைகளுக்கு உரியதே. வறுமைக்குள்ளாறவும் அடக்குமுறைக்குள்ளாறவும் வன்முறைக்குள்ளாறவும் கசியும் எள்ளலுங் கூட அவற்றின் இயல்புகளில் ஒன்றே – கனம்மிகுந்த வாழ்வை இலகுவாய் எதிர்கொள்ள நகைச்சுவையே மனிதர்களுக்கு உதவுகிறது.

இத்தகைய எள்ளலுணர்வுடைய கதைகளாக, சம காலத்திலிருந்து (எனது வாசிப்புக்குட்பட்ட அளவில்) 2008 – 2009 யுத்தம் உக்கிரமடைந்த போது, வலைப்பதிவில் எழுதப்பட்ட சயந்தனின் சில சிறுகதைகள்… சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம்  குறித்த நிரூபாவின் கதைகளைக் கூறலாம்.

போரிலிருந்து, போர்ச் சூழலிலிருந்து விலகி, வெவ்வேறு தேசங்களில், தமிழ்த் தேசீய நேரடி வர்ணனையில் எம் மூளைத் திசுக்களுட் பதியப்பட்ட யுத்தம் பற்றிய பிம்பங்களுள், போர் குறித்த கதைகளில் நகைச்சுவை உணர்வுக்கு ஓர் இடமுமில்லை. அதனாலேயே இத் தொகுப்புக் குறித்த விவாதங்களும் தமிழ் இணையத்தில் அதற்கு எதிரானதாக அமைந்திருந்தன:
1 – போராளிகள் இப்படி யோசிப்பினமோ
2 – அவர்களுக்கும் சக பெண்களில் ஈர்ப்பு வருமோ
3 – முகாமில் இப்படி உணவுக்காக சனம் அடிபாடு செய்திருப்பினமோ
4 – யுத்தம் நடக்கேக்க சனம் நகைச்சுவையாய்க் கதைச்சுக் சிரிச்சிருக்குமோ

இத்தகைய கேள்விகள் இதை இணையத்தில் வாசித்தவர்களால் முன் வைக்கப்பட்டிருந்தன.

சமீபத்தில் வாகன விபத்துக்குள்ளாகிய ஓர் 15 வயது சிறுவன் தான் உயர் வகுப்பில் படித்த போது (அன்றைய தனது யதார்த்தத்துக்கு ஒத்துவராததால்) பிடிக்காத ஒரு நாவலை – அப்போது சாத்தியமற்றுத் தோன்றிய அதன் பிறழ் மனநிலையை – இப்போது தினமும் அனுபவிப்பதாகச் சொன்னான். உடலின் பாகங்கள் இயங்கும் வரை, அதற்கான முயற்சியுள், சிகிச்சை அறையுள், சூழும் மனிதரை மிருக நிலைக்கு கொண்டு செல்லும் அந்தப் பிறழ்வுத் தனிமை, அவனால் (அவளால்) அப்படியான ஒன்றை அனுபவிக்க முன்னர் நினைத்துப் பார்க்கவியலாததாயிருந்த  ஒரு சிந்தனை அல்லது வன்முறை நிலையை அடைந்துவிடுகிறது. Cast Away என்கிற வழமையான ஹோலிவூட்த் திரைப்படத்தில் விமான விபத்தில் ஒரு தீவுள் தனியனாக வந்தடைந்து விடுகிற அவன் யாருமற்ற தனிமையில் கொஞ்சம் கொஞ்சமாக விலங்காக மாறுகிறான்; வேட்டையாடி உண்கிறான். நாகரீகவானாக இருந்த அவனது உடல்மொழி வளைந்து ஒரு வேடனுடையதைப் போல இரை தேடிப் பதுங்கத் தன்னை தகவமைத்துக் கொள்கிறது (முள்ளிவாய்க்காலில் நாங்கள் நாகரீகமடைந்த மனிதர்களைப் போலவே இருக்கவில்லை – இவ்வாறு போர் ஓய்ந்த பிறகு ஒருவர் எழுதியிருந்ததை இங்கே குறிப்பிடத் தோன்றுகிறது).

மிருகநிலைக்குத் தள்ளப்படும் வன்முறை மனத்துக்குரிய  இடங்களாகவே முகாம்களும் போர்க் களங்களும் இருக்கின்றன. இவைக்கு வெளியில் இருப்பவர்கள் இதைப் புரிந்து கொள்ளாததுடன், தாம் எப்போதுமே அனுபவித்திராத அந்த அனுபவத்துக்கு வாய்ப்பே இல்லை என்கிறவர்களாயும் இருக்கிறார்கள். உண்மையை மறுதலித்தல் அல்லது தமதல்லாத எந்த அனுபவத்தையும் (அதன் உண்மையையும்) மறுத்தல் என்பது பாரதூரமானது. அறியாமை அல்ல, அறிந்ததை – தமக்கு உடன்பாடற்றனவையை – கண்டும் காணாத புறக்கணிப்பு; கபடம் நிறைந்த தேர்ந்தெடுப்பு அரசியல் (Selective Politics).

அது போல ஒன்றே, மரண நெடிக்குள் இருப்பதால் இயற்கையான ஆண்-பெண் ஈர்ப்புகளோ அதை வென்ற சூழல் ஏற்படுத்தும் மனநெருக்கடிகள் மற்றும் பிறழ்நிலைகளோ இருக்காது என நம்புவதும். மரணத்துள் வாழ்பவர்கள் இயற்கையான காதல் காம உணர்வுகள் அற்ற கடவுளர்களா? போராடியவர்கள், மனித அழிவை அனுபவித்தவர்கள் என்பதற்காக பசி அற்றுப் போய் விடுவார்களா; தமது உணவுக்காய் சண்டை பிடிக்கார்களா?

சென்ற காலங்களிலும், போரினுள் மனிதப் படுகொலைகளினுள் வாழாதவர்கள் கட்டி எழுப்பி வைத்திருக்கிற போர் குறித்த போராட்டம் குறித்த பிம்பங்களை உலக இலக்கியங்கள் போட்டு உடைத்திருக்கின்றன. யூதப்படுகொலைகள் பற்றிய அதனுள் வாழ்ந்த தனது அனுபவத்தை எழுதுகிற – 1986-இல் நோபல் பரிசு பெற்ற எலீ வீஸல் (Elie Wiesel), யூதக் குடியிருப்பிலிருந்து தொடங்கி, வழியில் தன் குடும்பத்தினரை ஒவ்வொருவராய் இழந்த யூத வதைமுகாம்கள் குறித்த அனுபவத்தைப் பதிவு செய்த ‘‘இரவு’  (யூத வதைமுகாம் அனுபவங்கள்) நூலினை இவ்வாறு முடிக்கிறார்:

சுதந்திரமடைந்த மனிதர்களான எங்களது முதல் நடவடிக்கை, உணவுப் பொருட்களை நோக்கிப் பாய்ந்தது தான். நாங்கள் அதைப் பற்றியே எண்ணினோம்; பழிவாங்குவதையோ எங்கள் குடும்பங்களைப் பற்றியோ இல்லை; ரொட்டியைத் தவிர வேறெதைப் பற்றியும் இல்லை.
நாங்கள் பசியின்றி இருக்கும்போதுகூட எவரும் பழிவாங்குவதைப் பற்றி யோசிக்கவில்லை.  மறுநாள் சில இளைஞர்கள் வெய்மாருக்கு உருளைக் கிழங்கு மற்றும் உடைகள் வாங்க பெண்களுடன் படுக்கச் சென்றனர். ஆனால் பழிவாங்குவது குறித்த அறிகுறியே இல்லை.  புச்சன்வால்ட் விடுதலையடைந்த மூன்றாம் நாள் உணவு விசமானதால் நான் நோய்வாய்ப்பட்டேன். மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு இரண்டு வாரங்கள் வாழ்விற்கும் சாவிற்குமிடையே போராடியபடி கழித்தேன்.
ஒருநாள் எனது பலமனைத்தையும் ஒன்றுதிரட்டிய பிறகு என்னால் எழுந்திருக்க முடிந்தது. நான் எதிர்ச் சுவரில் தொங்கிக் கொண்டிருந்த கண்ணாடியில் என்னைப் பார்க்க விரும்பினேன். யூதக் குடியிருப்பில் இருந்ததற்குப் பின் நான் கண்ணாடியில் என்னைப் பார்த்ததே இல்லை.  
அந்தக் கண்ணாடியின் அடியாழத்திலிருந்து ஒரு பிணம் என்னைக் கூர்ந்து பார்த்தது. அந்த விழிகள் என்னை உற்றுநோக்கியபோது பார்த்த பார்வை என்னைவிட்டு அகலவில்லை.

000

கொடும் படுகொலைகளது சாட்சியான ஒருவர், வதைமுகாமில் தன் குடும்பத்தினைரையே இழந்த ஒருவர், இவ்வாறாக தனது விடுதலையின் பிறகு யோசிப்பார் என்பதை ‘கற்பனை’ செய்ய கடினமாகவே இருக்கும். ஆனால் எம் கற்பனைக்கு அப்பாலுள்ளவையை நாம் நிராகரிக்க முடியாது.

கர்ணனின் ‘பாதுகாப்பு வலயம்’ போன்ற கதைகளில் விபரிக்கப்பட்டிருக்கிற காட்சிகள் அவல நகைச்சுவையாகவே படுகிறது. செல் அடிக்க அடிக்க தன் காயப்பட்ட பிள்ளையைத் தூக்கிக் கொண்டு செல் அடிக்கிற அதே வழிகளில் விழுந்து கிடக்கிற பிணங்களில் விழுந்து எழும்பி ஓடுகிறவர் குறித்த சித்தரிப்பு அவலச் சுவையுடனே வாசிப்பவரிடம் வருகிறது.

#வாசிப்பனுவம்:

1
யுத்த நிறுத்த (?) காலத்தில் போர்ப்புலமிருந்து வெளிவந்த தானா.விஷ்ணுவின் கவிதைகளில், வாழ்தல் என்பதுக்கான பதிற் சொல்லாக அவரது கவிதைத் தொகுதி முழுவதும் ‘வசித்தல்’ என்றொரு சொல் பாவித்திருப்பார். அதை அவர் வேண்டுமென்று பாவித்தாரோ இயல்பாயோ வந்ததோ, அது பல அதிர்வுகளைத் தன்னளவில் கொண்டதாக இருந்தது. போருள் வாழ்தலில் அதன் ஜீவன் எங்கு சாத்தியம்? எனிலும்: போருக்குள்ளும் சனங்கள் வாழ்ந்தார்கள்; மரணத்துள் வாழ்வோம் என்ற குரலெழுப்பிய கவிஞர்கள் பலரும் சமூக புற, அகக் காரணங்களுடன் போரின் உக்கிரம் காணாது புலம்பெயர்ந்த பிறகும் அங்கே சனங்கள் வாழ்ந்தார்கள் (வெளியேற வாய்ப்பற்ற சனங்கள், வெளியேற மறுத்த சனங்கள், வெளியேற விரும்பாத போதும் ‘வெளியேற்றப்பட்டவர்கள்’ தவிர்த்து, எஞ்சிய சனங்கள், போராடிய சனங்கள், போராட்டத்துக்காய்த் தம் பிள்ளைகளைக் கொடுத்த சனங்கள்) . தமது இலட்சியங்களின் மீதான நம்பிக்கைகளைக் கைவிடாமல், அல்லது வேறு தேர்வுகள் இல்லாமல் ஏலுமானவரை விமர்சனங்களைத் தம் குரலில் உயர்த்த முனைந்தபடி. ‘வாழ’ முனைந்தபடி… அந்த வாழுதலின் இன்பத்தைச் சந்தர்ப்பங்களிற் பாடியபடி.

அதற்குச் சாட்சியாக கருணாகரனின் பல கவிதைகள் இயற்கையை, இன்பத்தை, காதலைநப் பாடியிருக்கின்றன (அவை போருக்கு வெளியிலிருந்து பாடிய காதலை விடவும் அற்புத படிமங்களும் நெகிழ்ச்சியும் நிறைந்தவையாய் இருந்திருக்கின்றன). ஏன்? போருக்குள்ளும்,  எப்போ முடியும் இக் கணமென அறியாத உயிர் தானே அறியும் மேலான இவ் வாழ்வின் அன்பின் ஒப்பீடின்மையை, ‘தரப்பட்ட அவகாசத்தின்’ கருணையை?

கருணாகரனின் கவிதைகள் கொண்டிருக்கிற (போரிலும் கைவிடப்பட முடியாது அலையும் மனித மனத்தின் கற்பனையாற்றலும் இயற்கை மீதான காதலும், வன்முறைக்கும் போரின் நியாயத்துக்குமிடையிலான நித்திய வேள்வியும்) அதே கூறுகள் கொண்ட படைப்பாற்றலை யோ.கர்ணன் தனது உரைநடையில் கொண்டிருக்கிறார் (அதே பாணியல்ல, மாறாக அந்த மனக் கூறு).

2
ஒப்பிடுகையில் யுத்த நிலத்துக்குத் தொலைவிலிருக்கும் எனது கற்பனைகள் சிறு வயதின் வன்னியின் வயல்வெளிகளைப் போல பரந்திருந்த அந்த எனது கற்பனைகள், சீனக் கதைப் புத்தகங்களிற் தொலைந்திருந்த அச் சிறு பிராயத்தோடு தொலைந்து போய் விட்டன; பிறகெப்போதும் தொடரவில்லை. அப்படியிருக்க, பேரழிவுகளது ஊற்றான போருக்குள்ளும், கர்ணனின் கற்பனைகள் ஆசையூட்டுகின்றன. தீராத புதிர்களை உருவாக்கும் எமது சிறுவத்தினை நினைவூட்டுகின்றன. இராசகுமாரன்கள் குமாரத்திகளின் கூந்தலால் உப்பரிகைக்கு ஏறி வரும் வேனிற் கால சீனாவும் பூத்துக் குலுங்கும் பூக்களும் மனதை வந்து நிரப்புகின்றன. அவரது எழுத்தின் இந்த சாத்தியம் அதனது பலம். அவை  மீண்டும் மீண்டும் மனித உயிரின் வாழும் வேட்கையைப் பதிவு செய்கின்றன. எனவே தான், பெரும் அழிவியந்திரனான யுத்தத்துக்குள்ளும் முகிழ்ந்து எழும் மனித மனத்தின் படைப்பியக்கம் ஒப்பீடுகளுக்கு அப்பாற்பட்ட மகா சக்தியாக, அது நெகிழ்ச்சியையும் வியப்பையும் கைவிட்டுவிடமுடியாத ஆன்மாவின் நம்பிக்கையையும் கொண்டிருக்கிறது.

#சமகாலம் பேசப்படுதல்: போரின் தலைமுறை

எமது காலத்தின் நிகழ்வுகளை அவைக்கான வினைகளை எமது தலைமுறையில் படைப்பாக்க வினையாக படிக்கிற அனுபவம் கிளர்ச்சியூட்டுகிறது.

சென்ற காலங்களின் வரலாற்று முக்கியத்துவங்களே அழுத்தப்படுகிற சூழலில் சமகால அரசியல் நடப்பை  யோ.கர்ணனின் பிரதிகள் பதிவுசெய்கின்றன. ஒரே விதமான அனுபவங்களை — ஒரே அரசியற் சம்பவங்களை — ஒரே நிலத்திற் பிறந்த இந்த ஒரு தலைமுறை எவ்வாறு உள்வாங்கிக் கொள்கிறது, எவ்வாறு தன் படைப்பாக்கத்தில் பயன்படுத்துகிறது, அது எவ்வாறு எதிரொலிக்கின்றது என்பன தொடர்பில் ஒரு ஒப்பீட்டை செய்வதற்கான பிரதிகள் கொண்ட ‘எமது’ காலமாக இது இருக்கிறது. மூன்றாவது ஈழப் போரின் (1995 – 1999) ஆரம்பத்தில் புலம்பெயர்ந்த என்னை  கர்ணனின் கதையான “மன்னிக்கப்படாதவனின் கைத்தொலைபேசி”  2006 இல்  (யுத்த நிறுத்த காலம் என சொல்லப்பட்ட காலப்பகுதியில் நடந்த) ஈரோஸ் பாலாவின் கொலையிடம் திருப்பி எடுத்துச் சென்றது. அக் காலப் பகுதியில் ‘களையெடுப்பு’ப்போல அவ்வாறு பல கொலைகள் நடைபெற்றன.  போர் நிற்பதற்கு முந்தைய காலம் ‘இவை பற்றிப் பேசப் கூடாது’ என்றொரு குரல் இருந்தது; சொல்லப்பட்ட யுத்த நிறுத்த காலம் பலரும் கொல்லப்பட்ட காலமாகவே இருந்தது.

000
1990களின் இறுதியில் கொழும்பிற்கும், 1990களின் மத்தியில் ‘கனடா’ என்படுகிற பூர்விகரின் நிலத்துக்கும் புலம்பெயர்ந்து சென்றவளாக 15 வருடங்களுக்கு மேலாய் அந்த நிலத்தை விட்டு வாழ்ந்த போதும், யுத்த காலத்தில்த் தாக்கப்பட்ட – நான் கண்டறிந்திராத / கண்டுணர்ந்திராத எனது தகப்பனின் குருதியைக் கொண்டலைகிறேன்.  காலத்தைக் கதைகளூடாக இணைத்துப் பார்க்கும் எனக்கு, அகிலனின் அப்பா 1980களின் இறுதியில்  மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட முடியாது இந்திய இராணுவம் தடுக்கச் செத்துப் போவதும், அதே காலப்பகுதியில் அத் தெருக்களில் எங்கோ விழுந்த கிடந்த (வைத்தியாதீனமாய் உயிர் தப்பிய) எனது தகப்பனும் இணைந்து செல்வது போல இருக்கும். அந்த இணைவு, எம்மை இணைக்கின்ற ஒன்றாக; ஒரே காலத்தில் ஒரே நிலப்பரப்பில் வெவ்வேறு குடும்பங்களில நிகழ்ந்த  – வாழ்வைப் என்றென்றைக்கும் பாதிக்கப் போகிற – ஒத்த சம்பவங்களும்…  எம்மில் அவற்றின் தாக்கங்களுமென… யோ.கர்ணன் உள்ளிட்ட இந்தத் தலைமுறையுடன் அவர்களின் கதைகளுடன் நெகிழ்ச்சியூட்டும்விதமான ஒத்துணர்தல், நாம் பகிர்ந்துகொண்டிருக்கிற ஒரே வரலாற்றுடன் தொடர்புடையது. ஆனால் அந்த ஒரே வரலாறுதான் எத்தனை பாரபட்சமானது? ஒரே காலப்பகுதியில் நாங்கள் பிறந்து வளர்ந்த எமது சிறுவத்தில் போர் எங்களை எப்படியான எதிர்காலத்துள்த் தள்ளியது? போரினால் வெளிநாட்டில் வசிக்கின்ற நானும், 2006 வரை  அதனுள் உழன்ற அகிலனும், எனது தகப்பனை ஒத்தோர் இணைந்து நடத்திய போராட்டத்தில் அந்த விடுதலை இலட்சிய ஆகுருதியில் உயிரை இழந்தவர்களும், காலினை இழந்த யோ.கர்ணனும் எத்தனை சமமான வாய்ப்புகளைப் பகிரவில்லை? ஒரு நிலப்பரப்பின் ஒத்த தலைமுறைகளிடமே பகிரப்படும் வெவ்வேறு வாழ்வனுபவத்தை – அதன் வேறுபாடுகளை – கருத்திற் கொள்ளாது எப்படிப் பேச முடியும்? கருத்திற் கொள்ளாத போதே – யுத்தம் தொடர்பான எம் எல்லோரது அனுபவங்களையும்- ஒரே தளத்தில் வைத்துப் பேசுதலெனும் வன்முறை நிகழ்கிறது (அது மறுபடி மறுபடி நிகழ்ந்த படியே இருக்கிறது).

எனினும், எங்களை இணைக்கும் கோடாய் இந்தப் போர் ஆகியிருக்கிறது.
இல்லாவிடடால் 2006-இல் தெருவில் ஒரு பரிதாபத்துக்குரிய நாயைப் போல சுடப்பட்டுக் கிடந்த (நான் கண்டறியாத), அப்பாவின் தொழர் ஒருவரது கொலை என் உயிரை எப்படி குளிரச் செய்திருக்கும், ஒரு செத்த பிணத்தினுடையதைப் போல?  மூன்று பெண் குழந்தைகளின் தகப்பனான அவரது இறுதிக் கோலத்தை, மூன்று பெண் பிள்ளைகளது தகப்பனான எனது தகப்பனுடன் ஒப்பிடாதிருக்க முடியாது, பரிதாபத்துக்குரியவராய், பாதுகாப்பற்ற அந்தரத்துள் அவர் கிடந்த காட்சி இன்னமும் ஏன் என்னைப் பதட்டத்துள்த் தள்ளுகிறது. அப் பதட்டத்தை அந்தவொரு கதையில் கர்ணன்  மீண்டும் மீண்டும் ஏற்படுத்துகிறார். சதா மரண பயத்துடன் இந்த அச்சங்களை அந்தந்த அச்சங்கள் கொண்டவர் அன்றி வேறு யாரறிவார்?

சில வேளைகளிற் சகோதரர்களுக்கு எதிராய் செயற்பட  வைத்த / வைக்கும் அச்சம்; சிலவேளைகளில் எதிரிகளாய் ஆ(க்)கும் அச்சம்; எதிரிகளாய் உணர்பவர்களை எல்லாம்  களையெடுக்க (காவெடுக்க) உந்திய அந்த அச்சம். ஒருவரை ஒருவர் சந்தேகிக்கும் உளவியல் தாக்கம், அச்சம் என்பன பற்றி போர்ப்புலத்துள் (ஆயுத அரசியலுள்) பிறந்தவரே உணருவர். அதன் அச்சுறுத்தலுள் வாழ்ந்தவரே அறிவர். சிரிப்பூட்டுபவையாக (பலரது அறிவுக்கு) இருப்பினும், ஒருவருக்கொருவர் எதிரிகளாய் ‘கவனத்துடன்’ ‘துவக்குடன்’ திரிந்த காலங்களே சொல்லும் நண்பனும் சந்தேகிக்கக் கூடியவன் ஆவது எவ்வாறு என்பதையும் ஆயுதங்களுக்கு எவ்வளவு தூரம் மனிதர்களை ஆளும் பலம் உண்டு என்பதையும்.

சமாதான காலப் பகுதிகளில்,  புலம்பெயர் எழுத்தாளர்களது, ‘தாம் கொல்லப்பட்டு விடுவோம்’ என்கிற வகையான பயங்கள் பற்றிய புரிதலாய் ‘அந்த எழுத்தாளரின்’ புத்தகங்கள் இலங்கையில அவர்களது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்தன, பிறகென்ன..’ ‘பின்னர் எதற்கு இந்த stunt’ என்ற போல விமர்சனங்கள் இன்னொரு புறம் வைக்கப்பட்டிருக்கின்றன.  (அக் காலப் பகுதியில் கொல்லப்பட்டவர்கள் பலரும் அடையாளமற்ற, பிரபலமற்ற, தம் வாழ்வுக்கு திரும்பிவிட்டிருந்த குடும்பஸ்தர்களான, வெவ்வேறு இயக்கங்களைச் சேர்ந்த முன்னாள்  போராளிகளே). எனினும், இன்று யோசிக்கையில், ஈழப் போராட்டம் ஏற்படுத்திய பலவித மனப்பிறழ்வுகளின் பல்வேறு அச்சங்களை — ரொறன்ரோவில் யுத்த எதிர்ப்பு நாடகமொன்று போடப்பட்டபோது, சகோதரப் படுகொலைகள் மற்றும் போர்ச் சூழலின் இதர வன்முறைகள் அரங்கில் தத்ரூபமாய் நடித்துக் காட்டப்பட்டபோது, முன் வரிசையில் இருந்து நடுங்கி நடுங்கிப் பார்த்துக் கொண்டிருந்த ‘வளர்ந்த’ இளைஞனின் ‘இருப்பினை’  (அதை ஆள்கிற உளவியலுக்கான அரசியலை)  புரிந்துகொள்ளுதலுக்கும் அவற்றின் பின்னணியை அறியும் தேவையை உணர முடிகின்றது.

கர்ணனும் அந்தச் சம்பவம் ஒத்த சம்பவங்களுள் நேரடி அனுபவங் கொண்டவராய் இருக்கலாம். அல்லது கேட்டறிந்த கதையாக இருக்கலாம். ஆனால் அவை ‘எமது’ கதைகள். எம் உடல்களைக் குளிரில் சில்லிடச் செய்யும்.

#எமது- கதைசொல்லிகள்

1
(குறிப்பாக) சிறுகதை, நாவல்களைப் பொறுத்தவரையில் – இந்தியாவுடன் ஒப்பீட்டளவில் – குறைந்த பங்களிப்புகள் / “கவனங்கள்” உள்ள ஈழத்திலிருந்து, புலம்பெயர் சூழலிலிலிருந்து (இலக்கிய சூழலுள்) பார்த்திபன், யீவமுரளி, குமார் மூர்த்தி, குருசேவ், நிரூபா, சோபாசக்தி போன்றவர்களது படைப்புக்கள் எழுத்தின் ஆரம்பங்களில் ( தனிப்பட்ட எனது வாசிப்பினடிப்படையில்) கவனங்களைப் பெற்றவை. இவர்களில் – ஏனையவர்கள் சிறுகதை என்கிற வடிவத்துடன் அறியப்பட – சோபாசக்தி ஒன்றுக்கு மேற்பட்ட (சிறுகதை, நாவல், கட்டுரை) தொகுதிகளுடன் இன்று நன்கு அறியப்பட்டவராய் இருக்கிறார் (வெகுசன இந்திய வாசகர்களால் அறியப் படுதல் என்று வருகிற போது அதற்குள் அ.முத்துலிங்கமும் வருவார் என்றாலும், அவரது கதைகளது களன்கள் வேறு). ஓர் சிறுகதை-வடிவத்தில் எழுதப்பட்ட-நாவல் எனக் கூடிய நிரூபாவின் ‘சுணைக்குது’ மிக முக்கியமான தொகுதி; இலங்கையிலிருந்து வெளிவந்தது; தமிழ்நாட்டில் (வழமைபோல) அனேகமானவர்கள் வாசித்திருக்க வாய்ப்பில்லை என்பதோடு கவனமும் பெறவில்லை.  எமது பெருந்தேசிய அலையுள் வரக்கூடிய அரசியல் நீக்கப்பட்ட பெண்-பிரதி இவ்வாறான புறக்கணிப்புக்குள்ளாவதும் இயல்புதான்.

புலத்திலிருந்தும் புலத்தை விட்டு வெளியேறியும், தனது தலைமுறை அனுபவித்த போருக்குப் பிந்தைய நினைவுகளை (அழிவின் அரசியலை) சமகாலத்தில் வெளிப்படுத்திய பிரதியான த.அகிலனின் ‘மரணத்தின் வாசனை’யைத் தந்த வடலி பதிப்பகத்தால் இந்தியாவிலிருந்து வெளியிடப்பட்டுள்ள இன்னொரு பிரதி புலத்திலிருக்கிற யோ.கர்ணனின் “தேவதைகளின் தீட்டுத் துணி.” இந் நூல் இந்தியாவிலிருந்து வெளியிடப்பட்டுள்ள போதும், ஆனந்தவிகடன் போன்ற ஒரு ஜனரஞ்சக இதழால் தரப்பட்ட கவனம் (அங்கீகாரம்?) கூட இழப்பின் அரசியலைப் பேசும் – இன்று தமிழ்நாட்டு அரசியலுள் ஈழ அரசியலின் இன்னொரு பக்கத்தைப் பேசும் – இந் நூலுக்குத் தரப்படவில்லை எனவே கூறலாம்.

மரணத்தின் வாசனை ஈழத்திலிருந்தும் எழுதப்பட்டதாலோ என்னவோ நேரடையாய் அல்லாத (நேரடியாய் விமர்சிக்க முடியாத)  “சுய – தணிக்கை” அதிலிருந்தது. அதன் சொற்களுக்கு பலத்த கண்காணிப்புகளுக்குள் தன்னை வெளிப்படுத்த வேண்டிய தேவையிருந்தது. அந்தக் காலப் பகுதிகளில் ‘சிந்தனைக் குற்றம்’ என்கிற 1984 நாவலில் வருகிற வாசகம் தன்னை பின்தொடர்ந்துகொண்டிருந்தது என அகிலன் கூறியதும் ஞாபகம். ஆம், சுயமான சிந்தனைகளுக்கு, நேர்மையான விமர்சனங்களுக்கு என்றென்றைக்குமே முகங் கொடுக்க விரும்பாத (இன்று அழிவைத் தந்த) சட்டகத்தினுள், ஒரு கர்வத்தினுள்,  தீக்கோழியைப் போல முகம் புதைத்து தமிழ்-தேசிய அரசியல் அதிகாரபீடங்கள் நின்றிருந்தன (நிற்கின்றன). இலக்கியப் பதிவாய், அதன் ஒரு பாகத்தை (பெரும்பாலும் கடும் விமர்சன அரசியல் நீக்கப்பட்ட) அகிலனின் பிரதி கொண்டு வந்ததெனில், மற்றொரு பாகத்தை யோ.கர்ணன் தனது முதலாவது சிறுகதைத் தொகுதியில் கொண்டு வந்திருக்கிறார்.
போர் முடிந்த பிறகு வெளிவருகின்ற தொகுதி என்கின்றபடியால் அது தணிக்கையற்றதாக இருக்கின்றது. ஆனால் போர் முடிந்த பிறகும், ஆச்சரியமூட்டாதவகையில், தமிழ் பெரும்பான்மை தமிழ்த்தெசீய மனநிலை அவரது பிரதியின் விமர்சனங்களைத் தணிக்கை செய்யவும், அது பேசப்படாதிருக்க வேண்டுமெனவுமே விரும்புகின்றது. அதனால், அதை வாசித்தாலும், அதையிட்டு மெளனமாய் இருக்கிறது. அல்லது அதன் நியாயத்தன்மையைக் குற்றப்படுத்த விரும்புகிறது.

2
“தேவதைகளின் தீட்டுத் துணி என்பது எவ்வாறான அர்த்தத்தை தருகிறது” என ஆரம்பகாலப் போராளி ஒருவரிடம் கேட்டேன். அவர் “இது ஒரு உன்னத இலட்சியத்தில் (அல்லது அந்த உன்னத இலட்சியத்தின் போது) நிகழ்ந்த அழுக்கு பற்றியது” என்றார்.  அந்த அழுக்குகளைப் பற்றி அப் போரினை ஆரம்பித்து வைத்த அவரது தலைமுறையின் பிள்ளைகள் (அப் போரினுள் வாழ்ந்த அதனுட் தம் வாழ்வை வாழ்வின் அழகிய கூறுகளை இழந்த பிள்ளைகள்) எழுதுவதை மிகவும் துயரம் படர வாசித்துக் கொண்டிருந்தார் அவர்.

நூலாக்கப்பட்ட புனை-தொகுப்புகளில் ஈழப் போராட்ட கருப்பொருளைக் கொண்ட பிரதிகளாக பல குறிப்பிடப் படலாம். இதில் சோபாசக்தியினதை ஒத்த நூல்கள் புலம்பெயர் (முன்னாள்) போராட்டக் காரர்களதாகவும் (1980கள் 1980களின் இறுதிகள் 1990கள்) இருக்க; 2006 வரையான போருக்குட்பட்ட ஈழத்தை அகிலனும், பிறகு யோ.கர்ணனதே அந்த நிலத்தில் போரினுள் (இறுதிவரை) வாழ்ந்தவரது சாட்சியம் என்னும் வகையில் இன்னும் பிரத்தியேகமாகக் கவனத்துக்குரியதாகிறது.

இத்தகு தொகுப்புகளுக்குத் தரப்படாத கவனங்கள் இலக்கிய உலகில் (அது எந்தப் பக்கமாயினும்) எப்போதும் சுவாரசியமாய்ப் பேசப்படும் கிசுகிசு சலசலப்புகளுக்கு உண்டே. போராட்டத்தில் (மக்களில்?!) அக்கறை கொண்டவர்கள் இறுதிவரை அங்கிருந்தவர்களது குரலை (தமக்கு உடன்பாடற்ற போதும்) உன்னிப்பாய் கவனிப்பவராயே இருப்பர், இருக்க முடியும். வரலாற்றைச் சுய -விமர்சனம் செய்யாமல் ஒரு இனம் எங்கே போக முடியும்? விமர்சனங்கள் தொடர்பில் காதுகளைப் போத்திக் கொள்வதால் என்ன மாற்றம் விளைந்தது? 30 வருடப் போரினில் வெறும் புலி எதிர்ப்பு எதிர் புலி சார்பு இரண்டு பக்கங்களுக்கும் மற்றவரை குற்றம்சாட்டுவது தவிர வேறென்ன (ஆரோக்கியமான?) தாக்கத்தைத் தமது சமூகத்திடம் தர முடிந்தது? இறுதிப் போரினில் மக்கள் (தரப்புகள் எதுவென தெரியாத மயக்கத்துள்) செத்துக் கொண்டிருந்த போது (புலி எதிர்ப்பு மனநிலையில்) ‘புலிகள் அழிய வேண்டும். மக்கள் வெல்ல வேண்டும்’ என எழுத என்ன சூத்திரம் நம்பிக்கை தந்திருக்க வேண்டும்? ‘புலிகளை அழிக்கின்ற எந்த அதிகாரத்துக்குமும் கூட மக்களைப் பற்றிய கவலையில்லை’ என்கிற எளிய உண்மையை அச் சூத்திரங்கள் தராமற் போனது ஏன்? ‘உந்தக் கொடிகள தூக்கிப் போட்டுட்டு மக்களைப் பற்றி கதையுங்கடா’ எனும் புலி’சார்பு’ (நேர்மையான) குரல்களைக் கூட மதியாது கொடிகளோடு புலம்பெயர் தெருக்களில் நின்ற தமிழ்த் தேசீயம் போலவே, புலி வெறுப்பு என்பது தவிர ஏதேனும் மற்றத் தரப்பில் இருந்திருந்தால் புலி உடையினில் (புலிகளினால்) பிடித்துச் செல்லப்பட்ட பிள்ளைகளும் நின்றிருப்பது தெரிந்திருக்க வேண்டுமே…. புலி உடையும் புலி வெறுப்பும் மட்டுமே கண்களில் தெரிந்தால் உங்களிடமிருந்த எந்த சூத்தரங்களால்தான் சனங்களை, சனங்களின் பிள்ளைகளைக் காப்பாற்றியிருக்க முடியும்?

3.
இங்கே, இத்தகைய எழுத்தை எழுதுகிற ஒருவர் எமது சூழலில் தனிமைப் படுத்தப்படுவதே நிகழ்கிறது. அதிலும் தோல்வியுற்ற தேசீயத்திலிருந்து மீண்டு வராத தேசீய மனங்கள் இன்னமும் அது தந்த எச்சசொச்ச- அரசியலுடன் துரோகியாக்குதலுக்கே முன் நிற்பன. மறுபுறத்தில் so called புலி எதிர்ப்புக் கூட்டமும் தம் மீதான மற்றவர்களுடைய இதுநாள்வரையான விமர்சனங்களை களத்துள்ளிருந்து வந்த ஒருவரிடமும் பகிர்ந்துகொள்ளப் பங்களிக்கின்றன (!). அதாவது, சோபாசக்தி போன்ற ஒரு பெயர்ப் பட்டியலுடன் கர்ணனைக் காணுகின்ற ஒருவர் அவர்கள் பகிர்கிற வரலாறு குறித்த அதிலிருக்கிற போருடனான அவர்களது அனுபவங்களது வேறுபாடுகள் குறித்த எந்த அக்கறையுமின்றி ஒருவர் மீதான விரோதத்தை (விமர்சனத்தை) மற்றவரிடமும் கையளிக்கிறார். பட்டியல்களின் அரசியலில் ஒருவரது வாழ்வனுபவத்தின் முக்கியத்துவங்கள் மழுங்கடிக்கப்படுகின்றன. கர்ணன் field-இல் இல்லாத கடந்த 10 – 15 + வருடங்களுள் புலம்பெயர் நாடுகளில் ஏராளம் விவாதங்கள் இயங்களது சண்டைகள் இந்திய எழுத்தாளர்களது வருகைகள் மகுடங்கள் நடந்திருக்கின்றன. அந்த 10 வருடங்களில் புலி எதிர்ப்பு அல்லது புலி சார்புப் பரணிகள் பாடியவர்கள் அனைவருமே களத்தில் வாழ்ந்த ஒருவருடன் ஒப்பிடுகையில் புலம்பெயர் சமூகத்தில் பாதுகாப்பான அகதி வாழ்வையே வாழ்ந்தார்கள். எந்த வகையிலும் புலம்பெயர் வாழ்வோடு ஒப்பிடவியலாததே போரில் வாழ்ந்த புலத்திலுள்ளோர் வாழ்வு. கர்ணன் இந்த 10 வருடங்களில் அதற்கு முன்பும் போராளியாய் இருந்தவர். அதிற் தன் ஒரு காலை இழந்தவர். முள்ளிவாய்க்கால்வரை அங்கு வாழ்ந்தவர். அவரது அனுபவங்களும் அவர் மீதான விமர்சனங்களும் முன்னையவர்கள் மீதான விமர்சனங்களும் எப்படி ஒன்றாக முடியும்? அத்துடன் கர்ணனின் எழுத்து புலி எதிர்ப்பு என்கிற கட்டத்துள் அடைசப் படுவது பொருந்தாத ஒன்றாகவே படுகிறது. அவரது அனுபவங்கள் எழுதப்படுகிற போது அது த.வி.புலிகள் அமைப்பினது தோல்வியின் பின்னான பதிவு என்கிற போதில் அவர்களது செயல்பாடுகளது உண்மையைப் பேசியமையால் அது வசதியாக அவ்வாறு அடையாளங் காணப் படுகிற போதும், கர்ணன் மிக தெளிவாக மக்களுக்கு எதிரான – தேசியவாதத்துக்குமே எதிரான – கூறுகளை பதிந்திருக்கிறார். (‘’தமிழனுக்கு தலையாட்டியை தெரியாதா’’ பக். 118)  துரதிர்ஸ்டவசமாக, பிரதியை விட எந்தக் குழுவைச் சேர்ந்தவர் என்பதே பிரதானப்படுத்தப்படும் தேசீய மற்றும் பின்நவீனத்துவ சூழலில் கர்ணனும் இது குறித்த (இவ்வாறு அடையாளங் காணப்படுதல் தொடர்பாய்) பிரக்ஞையுடன் இருத்தல்  சாட்சியாக இருக்க விரும்புகிற அவரது அனுபவங்களுக்குச் செய்கிற நியாயமாக இருக்க முடியும்.

4.
தன் இத்தனை இழப்புகளுடனும் ‘கண்டதை சொல்லவும் அஃதால் தனிமைப்படவும்’ துணிகிற இளைஞனாய் கர்ணன் இருப்பது மதிப்புக்குரியது; இத்தனைக்குப் பிறகும் சந்தர்ப்பவாதத்துக்கு எதிரான குரல்கள் தொடர்பான நம்பிக்கையைத் தருகிறது. பேரழிவில் முடிந்த ஒரு போராட்டத்தின் அழிவுகளுக்குக் காரணமான வன்முறைக்கு எதிரான மனநிலையே வன்முறைக்கெதிரான சாட்சியம் ஆகும்.

எமது சூழலில் புலியிருந்தால் புலி எனவும் இல்லாவிடில் வேறொன்றிலும் நழுவி நழுவித் திரியும் சந்தர்ப்பவாத விற்பன்னர்களையே நாம் கண்டுவந்திருக்கிறோம் (எஞ்சியிருக்கும் பலம் மிகுந்த ஒரு அதிகாரத்திடம் சரணடைவது வேறு வழியற்ற எமது மக்களினது அல்ல, மாறாக எக் காலத்தில் அது சந்தர்ப்பவாதிகளான அரச சேவகர்களதும் கல்வியாளர்களதும் யதார்த்தமாகவே இருந்திருக்கிறது; இருக்கிறது. என்ன அதை அவர்கள் திரைமறைவில் செய்வர், அவ்வளவே). அவர்கள் மாறி மாறி, பலம் மிகுந்த ஒரு அணி எங்கு நிற்கிறதோ அங்கு நிற்பார்கள். நோகாமல் நசியாமல் அவர்களுக்கென்றோர் இடம் இத் தமிழ் கூறும் நல்லுலகில் தரப்பட்டுமிருக்கும்.

அவற்றுக்கு மாற்றாய் இத்தகைய சாட்சிகள் எழுந்து வரட்டும். அவர்களின் சொற்கள் சொகுசான இருப்பை சுற்றி கேட்கும்வரை மொய்க்கட்டும். முந்தைய போர்ப் பரணிகள் எடுத்த இடத்தை இந்தக் கதைகள் நிரப்பட்டும். வன்முறையிலிருந்து விடுதலை அதன் இத்தகை கொடூரங்களை எதிர்கொள்வதிலிருந்தே பிறக்க முடியும்; எதிர்கொள்ளாமை மேலும் மேலும் கொடூரங்களையே வீண் வீம்புடன் உற்பத்தி செய்யும். அப்பொழுதும் உற்பத்தியாளர்களது பிள்ளைகள் அல்ல மடியப் போவது. களத்தில் நிற்கிறவர் பிள்ளைகளே (அது தலைவர்களதே ஆயினும்).

அவர்களது அபிப்பிராயங்களை, கடந்து வந்த பேரழிவின் அனுபவங்களை, சாட்சிகளை – புறக்கணித்து (அல்லது தமக்குத் தோதானவையை மட்டுமெடுத்து) அவர்களது இழப்புகளின் மேல் ஏறி தமது இன  மானத்தை, வெற்றுத் தேசீயச் கூச்சலை, வேண்டி நிற்றல் – அது, அந்தக் குட்டித் தீவுள் வாழ் மக்களுக்குதவாத பிதற்றல்.  ‘அவர்கள் அழிந்து விட்டார்கள். நடந்தது நடந்து விட்டது. இனி கதைத்து ஒன்றுமில்ல’ – இதை சொல்லுபவர்கள் அவர்கள் இருந்தபோது கதைத்தார்களா? தவறு நடந்த போது விமர்சித்தார்களா? இத்தகைய தரப்பிடமிருந்தே, 2009 மே நிகழ்வின் பிறகு முகாமிலிருந்து எழுதப்பட்ட இறுதிப் போர் அனுபவங்களை, சம்பந்தப்பட்டவர்கள், ‘இப்போது எழுதக் கூடாது’ என்கிற வாதம் அல்லது  கட்டளையும் முன் வைக்கப்பட்டது [எமது பெரும்பான்மை அரசியலைப் பொறுத்தவரை அதற்கு மாறான விமர்சனங்களைப் பொறுத்தவரையில் (அவை பொதுவெளியில் வைக்கப்பட அல்லது பேசப்பட என) எப்போதுமே தகுந்த நேரம் என்று ஒன்று வந்ததேயில்லை].

இவ்விடத்தில், வாசித்த ஒரு யூதக் கதை ஞாபகம் வருகிறது. படுகொலைகள் எல்லாம் முடிந்த பின் தனது வீட்டுக்குத் திரும்பி வருவாள் ஒரு பெண் (முகாம்களில் தப்பிய பெண்).  உயிர்தப்பாத தனது பெற்றோரின் எஞ்சியுள்ள பொருட்களை (இருந்தால்) எடுத்துச் செல்ல. அவளது வீட்டில் ஒன்றுமில்லை. அவளது பக்கத்துவீடுகளில் அயலவர்கள் ‘அப்பிடியா? எல்லாப் பொருட்களும் அரசாங்கம் கொண்டு போனதோடு சரி. ஒன்றும் மிச்சமில்லை’ என கையை விரிப்பார்கள். ஆனால் அவர்கள் வீட்டில் இவளுக்கு ரீ கொண்டு வர அவர்கள் பாவித்த கப் அன் சோசர் தொட்டு ‘அவர்களுடைய’ எல்லாம் அங்கே புழக்கத்தில் இருக்கும். அவளுடைய மனம், அங்கு எஞ்சியுள்ள பொருட்கள் தருகிற நினைவினில் மிதக்கும். அவளுடைய அம்மா ரீ ஊத்திய கேற்றில்… அப்பா சாய்ந்திருந்த கதிரை… நிலா முற்றத்து வாங்கில்… இவற்றை அழித்த கொடும் சித்ரவதைக் காலம்! அந்த அயலோர் நடந்தது குறித்து வருத்தம் தெரிவிக்காதது மட்டுமல்ல, எதுவும் நடந்தது போல காட்டிக் கொள்ள மாட்டார்கள். இப்போ இதை செய்வது சிங்கள மேற் தட்டு மட்டுமல்ல தமிழ் மேற் தட்டும் தான். இல்லாவிடில், ‘நடந்ததை பெசாதீர்கள்’ என்று கேட்க யாருக்குத்தான் தைரியம் வரும்?

போருக்குள் வாழ்ந்து (போராடி) அதில் தம் காலங்களை இழந்து கடைசிவரை அதனுள் இருந்து (முகாமிலும் இருந்து) வந்தவனிடம் /வந்தவர்களிடம் அதை சொல்வதில் என்ன ஒரு அதிகாரம்?!  அதில் என்ன நியாயம்?

இன்று இத்தனையாயிரம் போராளிகள் உள்ளே இருக்கிறார்கள் என அரசாங்கத்தை சாடிக் கொண்டே, அந்த வறிய போராளிகளது குடும்பங்களுக்குத் தமிழ்த் தேசியத்தின் பேரில் சேகரித்த பணத்தை பயன்படுத்த ‘தயாரற்ற’ – இன்னமும் தமக்குள் பணத்தை சுவீகரிக்கும் மோதல்களால்ப் பிரிந்துள்ள – புலம்பெயர் தரப்பு(கள்) ஒரு புறம், மற்றும் ‘அவர்கள் செய்யலாம் தானே” என சொல்கிற எதிர் தரப்பினர்.. என ஏஜென்டுகளை வாய்ச் சொல்லர்களை சட்டாம்பிகளை பணத்தை சுருட்டியவர்களைத் தானே காண முடிகிறது. மக்களை நேசித்த மனிதர்கள் எங்கே?
சமீபத்தில் இலங்கையிலிருந்து வந்த ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுளள்ளது போல (தமிழ்த் தேசீயத்தின் பேரில்) மண்ணுக்காக விதைக்கப்பட்ட அத்தனை பிள்ளைகளும், எஞ்சிய பேராளிகளும் “…வேள்விக்கு இறைத்த கடாய்களாய்” தானே ஆகி விட்டிருக்கின்றனர். தேசீயம் பேசிய புலம்பெயர்ந்தவர்களால் கைவிடப் பட்டிருக்கின்றனர்? புதிதாய் அரசியல் ‘செய்ய’ முன் பழைய கணக்கை – அதன் தவறுகள் களைந்து – தீர்க்க வேணாமா? பழைய கணக்கின் தவறுகளாற் பழிவாங்கப்பட்டவர்கள் தொடர்பில் கபடமான மெளனத்தை சாதிக்கலாமா? அவர்கள் தொடர்பில் செய்வதற்கு ஒன்றும் இல்லையெனில், நீ துரோகி என்றும் நீ புலி என்றும் எம் மயிர்அரசியலின் நிமித்தம் தாராளமாய் லேபல்களை வழங்கித் திரியவேண்டியதில்லையே? எம் ஈகோவைத் திருப்திப்படுத்தச் செய்யும் அரசியல்களை தாய்நிலத்தில் இருக்கும் அவர்களின் நலன்களுக்காகவும் தான் என சளாப்பத் தேவையில்லையே….

……………………………………………………………………………………………………………………….
கற்பனைகளும் கனவுகளும் அழகானவை. மனதுக்கு நிறைவை தருவனவும் கூட. ஆனால் யாதர்த்தம் அவ்வளவு இனிமையாக இல்லை. கண்களை மூடியபடி உலகம் இருட்டு என்ற பூனையின் கதைகளை இந்த உலகம் எத்தனை தடவை பார்த்து இருக்கிறது. ஒவ்வாரு தடவையும் பூனை தான் பிறர் சொல்வதை கேட்பதாய் இல்லை. பூனை கேட்காது விட்டாலும் அவலம் மனிதர்களுக்கு தானே நேர்கிறது. மனிதப் பேரவலத்தின் முடிவில் சுடுகாட்டின் மேல் நின்று நாடு கடந்த அரசாங்கம்என்ற குரல் ஒலிக்கின்றது.
மீநிலங்கோ தேய்வேந்திரன், Facebook status, பெப்.14 2011′
……………………………………………………………………………………………………………………

#பெண்கள்

இவை தவிர, கர்ணனின் கதைகளில் வருகிற பெண்கள், பெண் சார்ந்த பார்வை பற்றியும் குறிப்பிட வேண்டும். ஒன்றினது குறியீடாகிற ‘தேவதையின் தீட்டுத்துணி’ என்கிற தலைப்புத் தொட்டு காதல் தொட்டு புனிதங்களென கட்டப்பட்டவை தொடர்பில் எள்ளலுடனே கர்ணன் தான் சார்ந்த உலகை பார்க்கிறார். சக போராளிகளாக ( காவல்துறைப் பெண்களாக) இருக்கின்ற போதும், கர்ணனே எழுதிறது போல (“எல்லா இடமும் பெண்கள் ஒரு மாதிரித்தானே”) கர்ணனின் கதைப் பெண்கள் நளினமும் சிரிப்புமாய் ஒரு மரபான முகத்தையே அணிந்துள்ளார்கள். கதைகளில் வருகிற கதைசொல்லி ஆண் எந்த வயதானவரையும் பொதுப்புத்தியின் அடிப்படையிலேயே சிந்திக்க வைக்கிறார் (பிள்ளை நின்றார். ‘என்னவாமடி பிள்ளையள். கெலி நோட்டீஸ் போட்டது உண்மையே?’ அதுகள் ஒரு சாங்கமாய்ப் பிள்ளையைப் பாத்தன. ஒருத்தி ‘ஓமோம் அங்கிள்’ என்றுவிட்டு ஒருத்தியின் சட்டையைப் பிடிக்க இருவரும் சிரிச்சுக் கொண்டு ஓடிச்சுதுகள். பிள்ளைக்குப் பெரிய புதினமாக இருந்தது. இப்ப என்ன நடந்தது என்று இதுகள் இப்பிடி வெட்கப்பட்டுக்கொண்டு ஓடுதுகள். லவ் பண்ணப் போறன் எண்டு சொன்னாலும் சரி, ரேப் பண்ணப் போறன் என்று சொன்னாலும் சரி எல்லாத்துக்கும் சிரிக்குங்கள்போல என யோசித்துக் கொண்டு….. . பக்.61.) இது, போராட்டம் எவ்வளவு தூரம் ஆண்-பெண் புரிதல்களை வளர்த்திருககிறது என்பது தொடர்பில் யோசிக்கத் தூண்டினாலும் இயல்பான ஆண் – பெண் ஈர்ப்பும் ஒருவரது உலகம் பற்றிய இன்னொருவரது புதிர்நிலையும்  சமூகத்தளங்களில் பெரியளவில் மாறவில்லை என்பதே யதார்த்தம். அவர்களிருவரது உலகமும் இருவருக்கும் புதியதே. எச் சந்தர்ப்பத்திலும் அவ் உலகம் அறியக் கிடைக்கும் அருகாமை கிளர்ச்சியூட்டக் கூடியதே. புனிதம் எதிர் புனிதமற்றது என்கிற இரு எதிர் நிலைகளில், தீட்டினை அழுக்கான ஒன்றாகவே முன்வைக்கிறது.  தமிழ்ச் சூழலில் சமகாலப் பெண்ணியம் தீட்டென ஒதுக்கப்படும் தூமையை தூய்மைக்கெதிராய் (புனிதங்களுக்கு எதிராய்) முன் வைப்பது.

போரில் எதிர்கொள்கிற வீரமும் அதற்கு மாறான நளினமும் காதலும் தாய்மையும் என மரபான பெண் முகங்கள் விரிந்தாலும், இறுதியாய் எஞ்சுகின்று முகம் என்னவோ மண்ணள்ளி எறிந்து அழுகின்ற அம்மாக்கள் தான்.

“….எவ்வளவோ சொல்லிப் பாத்தான். ஆமி விடவில்லை. காணிக்கைமலரும் வந்து நிலத்தில ஒரு பாட்டம் விழுந்து குழறிப் பாத்தது. ஆமிக்காரர் நிறையச் சமாதானம் சொல்லி தாய்க்காரியை அனுப்பிப் பொட்டு, இவனைப் பஸ்ஸில ஏத்திச்சினம். மெனிபாம் செம்பாட்டு மண்ணில உருண்டு அழுது உடம்பெல்லாம் செம்பாடு பத்திப் போய் நிக்கிற தாய்க்காரியைப் பாக்க இவனுக்கு அழுகை பொத்தீக் கொண்டு வந்தது. பஸ் யன்னிலில முகத்தை வைச்சுக் கொண்டு அழுதான். …” (பக்.19, இரண்டவாது பந்தி, அழுகின்ற அம்மாக்கள்)

இயக்கத்துக்காக (போராட்டத்துக்காக) ஆள் சேர்த்தவர்களே, பிறகு யார் யார் இயக்கத்தில் இருந்தார்கள் எனக் ‘காட்டிக் கொடுக்கும்’ முகமூடிகளாக (“தலையாட்டிகளாக”) ஆகும் ஜீரணிக்க முடியாத உண்மைகள்.  குப்பிகளை இளைஞர்களிடம் தந்தவர்கள், அவர்களது இழப்புகளுக்குப் பொறுப்பானவர்கள் ஆன தலைவர்கள் சரணடைந்து நின்றதும், காட்டிக் கொடுப்பவர்கள் என மற்றவர்களைச் சாடியவர்கள் தாமே காட்டிக் கொடுப்போர்களாக மாறியதும், அதிகாரம் இழந்து, இன்னொரு அதிகாரத்திடம் போவது ‘வேறு வழியற்ற நிலைமை’ என்பதை ஒத்துக் கொள்ளாமல் / முடியாத இக்கட்டுள் சுழலும் முன்னைய ‘இரண்டாவது’ தலைவர்களும் ….. பற்றிய சித்திரமே எஞ்சுகிறது. அதாவது வரலாறு திருப்பிக் கொண்டு வந்து ஆரம்பித்ததிலும் மோசமான இடத்தில், மோசமான உயிரிழப்புகளுடன் விட்டுச் செல்லும் காட்சி. அத் துயரம் எள்ளலுடன்

இங்கே / இவ்வாறாய்

…….
எனது தலைமுறையின் வலியும் துயரமும் நிறைந்த இந்தப் பிரதிகளும் குருதியில் நீந்திச் சென்றவாறு பாடிக்கொண்டிருக்கின்றன. கண்டும் காணாது இருப்பவர்கள் கண் எதிரே  – எல்லோரதும்
மதில்களைத் தாண்டி
உடைந்த மதகுகள் தாண்டி
மிதந்த வந்த
ஓஃபீயசின் தலையை வைத்துக் கொண்டு
சிலையாகி நிற்பாள் எமது வரலாற்றின் பெண், (மண் சுமந்து, பின்) தாங்கவியலா அதன் துயர் சுமந்து.

தேவதைகளது தீட்டுத் துணி இளம் பருவத்தில்  வயதுக்கு மீறிய அனுபவங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிய போருக்கான குறியீடாய் இருக்கலாம்.  ஆனால் நாவுகளும் கைகளும் கால்களும் துண்டாடப்பட்ட அவநம்பிக்கைமிகு போரிலிருந்து தமக்கான வாழ்வை அவர்கள் கண்டடைய வேண்டும். அப்போது பாடப்படும் அந்தப் பாடல்களில் காதலும் விடுதலையும் தீர்க்க தரிசனங்களும் நிறைய,
கடற்கரையில் அவல ஓலங்களும் இரத்தமும் எந்த மீட்பரதும் செவிக்கெட்டாத அந்த சனங்களின் உண்மைகள் உயிர்பெற, சாட்சிகள் ஒவ்வொருவராய் எழுந்து வரட்டும். இன்னும் நிறையக் குரல்கள், பெண்கள், போருள் இருந்தவர்கள்,  தம் இளமையைத் தந்தவர்கள் அனைவரது சாட்சியத்துக்காகவும் காத்திருப்போம். அதிலிருந்து பாடங்களை கற்றுக்கொள்ளதுவதும் கொள்ளாததும் வரலாற்றினதும் அதன் மாணவர்களதும் தேர்வு (choice).  சர்வதேசம் கேட்பதென்ன, முதலில் புலம்பெயர் நாடெங்கும் சடைத்துக் கிடக்கும் — எங்களது மனச் சாட்சிகள் தானும், ‘தம் பக்க அரசியல்களை எங்க நியாயப்படுத்துவது’ என்பதை விடுத்து கேட்கத் தொடங்கட்டும். வரலாற்றின் உண்மைகளை மிதித்துச் செல்லாத புதிய வெளி அப்போதே சாத்தியமாகும்.

..நேரம் நன்றாக போய்க் கொண்டிருந்தது. தேத்ததண்ணிக் கடைகாரன் ரேடியோ மீற்றரை புலிகளின் குரலிலிருந்து பீ.பி.சிக்கு மாற்றினான். எங்கட பிரச்சனையைத்தான் அதில கதைச்சினம். இவன் சுமதியை சுரண்டிவிட்டு வலு ஆவலாகக் கேட்டான். முதல்நாள் ஷெல்லடிச்சு நிறையச் சனம் செத்தது பற்றித்தான் பீ.பீ.சீக்காரன் கதைச்சுக் கொண்டிருந்தான். ஆமிக்காரனிட்ட கேட்டான். அவையள் சொல்லிச்சினம் தாங்கள் ஷெல்லடிக்கவில்லை. ஆனால் தங்கட ஆட்கள் சத்தத்தைக் கேட்டவைதான். அது புதுக்குடியிருப்புக்கு கிழக்குப் பக்கமாகக் கேட்டதாகவும். ஆகவே புலிகளே அடிச்சிருக்கவேணும் எண்டினம். பீ.பீ.சீக்காரரும் விடவில்லை. விடுத்து விடுத்துக் கேட்க கதைச்ச ஆமிக்காரர் கொஞ்சம் நழுவினார். பிறகு இயக்ககாரரோட கதைக்க றை பண்ணினம் கிடைக்கயில்ல என்றுவிட்டு மாத்தளன் ஆசுப்பத்திரி டொக்டர் சத்தியமூர்த்தியை தொடர்பு கொண்டினம். அந்தாள் அடிச்சுச் சொல்லுது. இல்லை. அந்தச் ஷெல்லுகள் மேற்கு, வடமேற்காலதான் (ஆமிப் பிரதேசம்) வந்தது என்று. என்னெண்டாலும் அந்தாளின்ர துணிவை மெச்சவேணும் என்று மனதுக்குள் நினைச்சுக் கொண்டிருக்க வழிகாட்டி வந்தான். எல்லாரும் வெளிக்கிட்டு சத்தம் போடாமல் எனக்குப் பின்னால ஓடிவா என்று விட்டு ஓடத் தொடங்கினான். ஒரு கையில சுமதியைப் பிடிச்சுக் கொண்டு குனிஞ்சபடி ஓடினான். இயக்கத்தின்ர பண்ட்டை ஏறிக் கடக்க வேணும். சுமதி கஸ்டப் பட்டாள். கல்யாணம் கட்டிய இரண்டு மாதத்தில் முதல் முதலாக அவளைத் தூக்கினான்.
அவளின்ர தமயன் பண்டுக்கு மற்றப் பக்கம் நின்று கீழ்குரலில அம்மா வந்தாச்சுதா.. தம்பி வந்தாச்சுதாசுமதி வந்தாச்சுதா என்று இடாப்பு கூப்பிடத் தொடங்கினான். எல்லாரும் சரியெண்டதும் இவங்கட குடும்பகாரர் ஓடிப் போய் தண்ணீருக்குள் இறங்க சுமதி கிடங்கொண்றில் காலை விட்டு விழுந்தாள். அவளை தூக்கி தனக்கு முன்னுக்கு நடக்கவிட்டபடி இவன் நடக்க
எங்கிருந்தென தெரியவில்லை. கிழக்கிலிருந்தா மேற்கிலிருந்தா, வானத்திலிருந்தா பூமியிலிருந்தா என்பது தெரியவில்லை. தெரிந்ததெல்லாம் எங்கோ தொலைவில் துப்பாக்கி ஒன்று ஒரு சுற்று சடசடத்து ஓய்ந்தது. அதன் ஒரு ரவை 7.62க்கு 52 mm அளவு கொண்ட சின்னி விரலளவு ரவை, இவன் நெஞ்சைத் துளைத்துப் போனது.
(தொகுப்பிலிருந்து, சிறுகதை: றூட், பக்.93-94)

./.

  • கர்ணனின் வலைத்தளம்: http://yokarnan.com/
  • இரவு – தமிழ் மொழிபெயர்ப்பிலிருந்து
  • அவரது இரண்டாவது தொகுதி ‘சேகுவேரா வாழ்ந்த வீடு’ வடலி வெளியீடாக வந்திருக்கிறது — http://vadaly.com/

===============================

published in கூர் 2012 

===============================

பயிருக்கு இறைத்த நீர்…

(சிறுவர்களிடம் சமூக நீதிகளை எடுத்துச் செல்லுதல்)

 

01
வாசிப்பு பரவலாக ஏனைய துறைகளில் குறைந்த பிற்பாடு, கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் நான் தேர்ந்தெடுத்தவையில் பல் வகைப்பட்ட சிறுவர் நூல்களும் அடங்கும். ஒருவகையில் ஏலவே தீர்மானிக்கப்பட்ட வளர்ந்தவர்களது கருத்தியல்களும் உள்ளுறங்கும் கபடங்களும் தந்த களைப்பும் அவற்றை நாட எனது காரணமாய் அமைந்திருந்தன. வளர்ந்தவர்களிடமிருந்து விலகிச் சென்று அந் நூல்களை வாசிக்கின்ற போது என்னையறியாமல் அவற்றின் கருப்பொருட்களை ஆராய ஆரம்பித்த மனம் அவற்றின் போதாமைகளை உணர ஆரம்பித்தது. சிறுவர்களுக்கென பெரியவர்களால் தீர்மானிக்கப்பட்ட அறிவுரைகள்-நீதிகள்-பொதுஅறிவுக் கேள்விகள் போன்றனவால் அடங்கிய அந்த நூல்களுள் வெளிப்படுத்தப்படும் மறைமுக சமூக எதிர்பார்ப்புகள் மரபான முகத்தையே கொண்டிருந்தன.

அருமையான ஒரு கதைசொல்லியான ஒரு தொடக்கநிலைப் பள்ளியினது கல்வியாளர், தான் சிறுவர்களுக்கு சொல்கிற ஒன்றென பின்வருகின்ற ரீதியில் ஒரு கதையைச் சொன்னார்:
‘கோழியொன்று மிகவும் கவலைப்பட்டது. அது இட்ட எந்த முட்டையும் குஞ்சு பொரிக்கவில்லை….
ஆவலுடன் அது இருந்து அடைகாத்த எல்லாமே கூழ் முட்டைகள்!
அது கவலைப்பட்டவாறு திரிந்தது தன் ஒரு முட்டையாவது குஞ்சு பொரிக்காதா என…’

அவர் இந்தக் கதையை மிக அற்புதமாக, தொடர்ந்தும் சிறுவர்கள் ஆவலுடன் கேட்டிருக்க, பல வர்ணங்களில் முட்டைகளை வகுப்பறை மூலைகளுள் அங்கும் இங்கும் ஒளித்து வைத்து, எந்த முட்டையாவது பொரித்திருக்கிறதா எனும் கோழியின் ஏக்கத்தை தன் பிள்ளைகளிடமும் பரப்பி அவர்களுடன் இணைந்து அவற்றைத் தேடி, பிறகு அந்தக் கோழியின் முட்டைகளில் ஒன்று பொரிக்க மட்டும் கதையை விரித்துச் சென்று, கதையை முடித்தார். அருமையாகப் பாடியும் ஆடியும் நடித்துக் காட்டியும் அவரது வெளிப்பாட்டின் நேர்த்தியும் மொழியைக் கையாண்ட விதமும் சிறுவர்களது வெளிப்பாட்டு முறைகளிலும் மொழியைக் கற்றலிலும் நிச்சயமாய்ப் பாதிப்பைச் செலுத்தும் – இதை ஒத்த ஏராளம் கதைகளைப் போலவே.
ஆனால் இத்தகு கதைகள் எந்த மரபான விடயங்களையும் கேள்வி கேட்பதில்லை. ஒரு கோழி என்றால் அதன் தலையாய கடமை அது முட்டைகளை இட வேண்டும் என்பதே. அடைகாத்து உரிய காலத்திற் குஞ்சும் பொரிக்க வேண்டும். இல்லாவிடில் கோழி கவலையாய்த் திரிய வேண்டும். மரபினை மீறிய எதுவும் துயரத்துக்குரியதென்பது அல்லவா இது தருகிற ஆழமான பாடம்? இச் சிந்தனையானது பின்னாளில் `வித்தியாசப்படும்` வளர்ந்த சிறுவர்களை எப்படிப் பாதிக்கக் கூடும்?

02
இன்று சிறுவர்களுக்கான அனேக திரைப்படங்களை, கதைப் புத்தகங்களைத் தயாரிக்கிற நிறுவனமான டிஶ்னி [Walt Disney] நிறுவனம் மிகக் கவனமாக தனது தயாரிப்புக்கள் அனைத்திலும் தன் பார்வையாளர்களைச் சிந்திக்கச் செய்யும் அரசியல் எதையும் கலக்காமலிருக்கப் பார்த்துக் கொள்கிறது. அவை ‘குழந்தைகளின் உலகத்தை அழகான கனவுகளுடன் விட்டுவிடவேண்டும். எம் பெரிய உலக அரசியல்களும் கருத்துத் திணிப்புகளும் அங்கே கூடாது’ என்கிற வாதத்தை முன்வைக்கிற பலருக்கும் தோதானதாய் இருக்கிறது.  ஆனால் நேரடி அரசியல் நீக்கப்பட்டவை அனைத்திலும் தாராளமாய் மலிந்துள்ளன மறைமுக அரசியல்கள். அவை ஒன்றும் அழகானவை அல்ல.  வெண்பனியைப் போல ‘வெள்ளை’நிறமான அழகிகளான கதாநாயகிகள் (ஶ்நோவைற், சிண்டறலா) (கறுப்பர்களுக்கு இடமில்லை. யஶ்மின் (அலாடின்) தான் டிஶ்னியின் குறிப்பிடத் தகுந்த வெள்ளையல்லாத கதாநாயகி). அவர்கள் எந்த கஶ்டம் வந்தாலும் அதை எதிர்த்துப் போரிடாமல் ‘பொறுமை’ காத்து, அந்தப் பொறுமைக்குப் பரிசாக இளவரசர்களால் மணமுடிக்கப்படுபவர்களாக வலம்வருவார்கள் (தமிழ்-ஆங்கிலத்  தொலைக்காட்சி நாடகங்களில் பெரியவர்களது உலகம் இவ்வாறு தானே இருக்கிறது?). தீய மனிதர்கள் கறுப்பாகவும், நல்ல மனிதர்கள் வெள்ளையாகவும்… அதே அழகு குறித்த ஆண்ட பரம்பரை வரைவிலக்கணங்கள், சிறு பெண் பிள்ளைகளது சிந்தனையை ஓர் இளவரசனுக்காய் காத்திருப்பதோடு சுருக்குதல் என அதன் கதைகள் நகரும். ஒருமுறை கனடிய நடிகை சாரா (Sarah Polley) கூறியிருந்தார். தான் சிறுமியாகக் குழந்தை நட்சத்திரமாக இருந்தபோது ஒரு ஊடகவியலாளர் சந்திப்பில் தான் சமாதான குறியீட்டினைக் கொண்ட கழுத்துச் சங்கிலி அணிந்திருந்ததாகவும், அந்த மாநாடு முடிந்ததும் டிஶ்னி நிர்வாகம் தாம் எந்த அரசியல் செய்தியையும் விரும்புவதில்லை என அதை அணிந்ததுக்காகத் தன்னைக் கண்டித்ததைப் பற்றியும் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். சமாதானத்துக்கான குறியீட்டை சங்கிலியாய் அணிவது தவறு; பதிலாக ராஜ குமாரன்கள் வந்து காப்பாற்றுவார் என்கிற கனவுகள் மிக நன்று!!

இங்கே குறிப்பிட விரும்புவது மரபான கதைகளைப் பிள்ளைகள் படிக்கவே கூடாது என்பதல்ல. பழைய புராணங்களும்  ஆயிரம் கிளைகள் கொண்ட புராதனக் கதைகளும் சகல இனக்குழுமங்களதும் செழுமையான வாசிப்புக் கொடைகளே (அவற்றை வாசித்த பிறகே அவற்றின் மீதான விமர்சனங்களை விவாதங்களை முன்னெடுக்கலாம்). ஆனால் அவற்றுடன் இணைந்து யதார்த்தத்தையும் சமகாலத்தின் நடப்புக்களையும் கூறும் நூல்களும் அவர்களுக்குத் தரப்பட வேண்டும். அப்போது தான் அவர்களால் இந்த உலகினை அதன் முழுமையுடன் உள்வாங்க முடியும். அத்தகைய கதைகளை இங்கே சொல்லப்படுகிற மரபான கதைகளுக்கு மாற்றான கதைகள் எனக் கூறலாம். உதாரணமாக, தூங்கும் அழகி [Sleeping Beauty] என்கிற பிரபலமான டிஶ்னிக் கதைக்கு மாற்றாய் அதைப் பகடி செய்து தூங்கும் அசிங்கி [Sleeping Ugly] என்றொரு கதை வெளியானது [1981]. அதுபோல முயற்சிகள் பொதுவெளியின் வரையறுப்பை மீறி வேறும் சாத்தியங்களை முன்வைத்தன; முன்வைக்கின்றன.

வளர்ந்தவர்கள் ஆகிவிட்ட மூளைகள் உருவாக்கும் அதே பழைய நீதி புகட்டும் கதைகள் அல்ல; மாறாக, அந்த பூஞ் சிட்டுக்களை தம் சமூகத்தில் அக்கறை கொண்டவர்களாக உருவாக்க வல்ல கதைகளை; ஒரு பிள்ளையிடம் வல்லனவே வாழுகிற இவ்வுலகில்,அது தனிமைப்பட்டுவிடக் கூடாத வல்லமையையும் வலிமையையும் தருகிற அதே நேரம் உலகம் சார்ந்த பிரக்ஞையை ஊட்டும் அறிவையும் தருகிற கதைகளை நாம் தேட வேண்டியிருக்கிறது.

பிள்ளைகளால் உள்ளெடுக்கப்படுகின்ற இந்த அறிவு பிற சாத்தியங்களை பிற உலகங்களை ஏற்றுக் கொள்ளச் கற்றுத் தரும் அறிவு; அறிவை தனக்குட் பதுக்கி மற்றவர்களை நக்கலடிக்கவும் தன்னை பெரியவளாய் எடுத்துக் கொள்ளவும், மற்றவர்களது அறியாமையைப் பார்த்து சிரிக்கவும் தரப்படுவதல்ல. மாறாக தனது அறிவைப் பகிர்வதுடன் மற்றவர்களது அறியாமையை அவர்கள் வரும் பின்புலங்கள் ஊடாக அறிகின்றவளாகவும், அதை புரிந்துகொள்பவளாகவும், ஆனால் அந்த அறியாமையால் அவர்கள் மற்றவர்களை அடக்குவதையோ மற்றவர்கள் மீதான வன்முறைகளை ஏவுவதையோ ஒருபோதும் சகித்துக்கொள்ளாத தன்மையை வளர்க்கும் அறிவு.  பொருட்களை சேர்ப்பதற்காகவும் மற்றவருடன் போட்டியிடுவதற்காகவும் அன்றி, சமூகத்துக்குத் தேவையான ஒன்றை உருவாக்கி வளர்க்கத் தெரிந்த அறிவு.

வேகமான இந்த fastfood பண்பாட்டை சுவீகரித்துக் கொள்ளும் தலைமுறையுள்; ஒரு மரச்செடியை நட்டுவிட்டு, நாளும் நீர் வார்த்து, ஒருநாள் அதன் குளிர்ச்சியில் பூ விரிதலில் மயங்கிப் போகக் காத்திருக்கும் பொறுமையை; ஒரு மியூசியம் போல தனது மூளையைப் பயன்படுத்தாமல் அதனுள் சேரும் அறிவை பகிரும் கலையைக் கற்றுக் கொடுக்க; இந்த கல்வியமைப்போ பொருளீட்டுதலிலேயே மூழ்கியிருக்கும் மனிதர் படைக்கும் பெரும்பான்மை நுகர் நூல்களோ முயல்வதில்லை. அவை ஒருவருக்கொருவர் ஆரோக்கியமற்ற போட்டியையும் வேகத்தையுமே கற்றுத் தருகின்றன. பெரியவர்களால் உருவாக்கப்பட்ட வேகப் பந்தயத்தில் சிறுவர்கள் தம் சிறுவத்தை இழந்து ஓடிக் கொண்டிருக்கிறார்கள் – தம் சக மாணவர்களுக்கு முன் தாம் உயரங்களைத் தொட்டு விட.

சண்முகம் சிவலிங்கத்தின் கவிதை சொல்லும்

‘…எச்சிறிய புல்லும்
அதன் இயல்பினிலே முழுமை
இடுகாட்டில் முளைக்கின்ற கழனியும் ஓர் அருமை’

(நீர் வளையங்கள் தொகுதி).

ஆனால் இங்கே பிள்ளைகள் ஒவ்வொருவரதும் அவரவர் இயல்புகளின் தனித்துவங்கள் கொண்டாடப்படுகின்றதா?

0000

சிறுவர் பாலியல் துஶ்பிரயோகங்களும்; அதை வெளியில் கூற முடியாமல் தங்களிலேயே தவறிருக்கிறது என்பதாய் சுயவதைகளுடன் தாம் செய்யாதவற்றுக்கான தண்டனைகளைத் தமக்கு வழங்கியவாறு தமது நாளாந்த வாழ்வில் கல்வியிலோ உறவுகளிலோ பிரச்சினைப்படுபவர்களாய் தாழ்வுச்சிக்கல்கள் கொண்டவராய்  தத்தளிப்பதையும் காண்கையில் இதுவரை சொல்லப்பட்ட *கற்பனை*க் கெடுதிகளிலிருந்து (evils) அல்ல, நியமான அன்றாட வாழ்வின் கெடுதிகளிலிருந்து எவ்வாறு அவர்கள் தம்மைத் தற்காத்துக் கொள்ள உதவுவது என்கிற கேள்வி எழுகிறது. எந்த வன்முறையாளர்களையும் போலவே, பாலியல் துஶ்பிரயோகத்தைச் செய்பவர்களுக்கும் உருவத்திலும் வயதிலும் சிறியவர்களான சிறுவர்கள் மிக எளிதான இலக்குகளே. உடல்ரீதியாகப் பலமற்றவர்கள் என்பதுடன் அவர்களால் உடனடியாக எதிர்வினையாற்ற முடியாது என்பதால் அதுவரை அவர்கள் மீதான வன்முறையைத் தொடர முடியும். பலவேளைகளில் இத் தொடர் வன்முறைகள் தம் மீதான வன்முறைகளை எதிர்ப்பதற்கான முதிர்ச்சியை பக்குவத்தை பலத்தை அவர்களிடமிருந்து அறவே அழித்து விடுவதே நிகழ்கிறது.
ஆகவே தான் சிறுவர்களைப் பொறுத்தவரை வேறெந்தப் பாடங்களை விடவும் பிரதானமானதாய் இருக்க வேண்டியன வெளி ஆபத்துக்கள் குறித்த விழிப்புணர்வூட்டலும் அவை குறித்து வெறும் அச்சமூட்டலாயில்லாத, அவ் ஆபத்துக்களிலிருந்து அவர்கள் தம்மைத் தற்காத்துக் கொள்வதற்கான தகைமைகளும்.

இன்றெம் சிறுவர்கள் வளரும் சூழலும் கல்வியும் எவ்வளவு தூரம் அவர்களிடம் தோதான தற்காப்பு வலிமையை ஏற்படுத்துகின்றன? தேவதைக் கதைகள் சொல்லும் கெடுதிகளிலிருந்து அல்ல, மாறிவரும் சூழல்களின் நெருக்கடிகளின் வன்முறைகளிலிருந்து எம் பிள்ளைகளைக் காப்பாற்ற நாம் மீண்டும் (வீட்டிலும் வெளியிலும் – எதை கற்பிக்கிறோம், எதை முதன்மைப் படுத்துகிறோம் என்பதான) எம் கற்பித்தல் முறைகளையே சரிபார்க்க வேண்டியிருக்கிறது.

03
கனடிய சூழலில், வருடா வருடம்  தம் சக மாணவர்கள் தருகிற நெருக்கடிகளை முகங்கொடுக்க முடியாது சிறுவர்கள்  தற்கொலை செய்து கொள்கிறார்கள். bullying ஏற்படுத்தும் தனிமை மற்றும் தன்னம்பிக்கையின்மை, மனஉளைச்சல் என்பன பிரதான காரணங்கள். இவர்கள் எதற்காக சக மாணவர்களால் நெருக்குதலுக்குள்ளாகிறார்கள் ?

ஒவ்வொருவரதும் வித்தியாசங்கள் என்பவை அவரவர் தனித்துவங்கள் என்பதையோ சமூக ஏற்றதாழ்வுகள் நிர்ணயிக்கிற ஒருவரது புறத்தோற்ற அலங்காரங்கள் என்பன பற்றிக் கற்றுத் தராத சமூகத்தில் வித்தியாசப்படாத  பலசாலிகளும் அவர்களுள் வித்தியாசப்பட்டு நிற்கிற நோஞ்சான்களும் தோன்றுகிறார்கள். பலசாலிகளால் நோஞ்சான்கள் தாக்கப்படுகிறார்கள்.

ஒரு மாணவன் அல்லது மாணவியை சக மாணவர்கள் வாய்ச் சொல்லாலும் உடல் தாக்குதல்களாலும் நெருக்குதலுக்கு உள்ளாக்குவதற்கான காரணங்களாக அவர்களது பொருளாதார பின்புலம் (வறுமை காரணமாக போடுகின்ற ஆடைகளது பெறுமதி மற்றும் அவ் ஆடைகளில் இருக்கக் கூடிய மணங்கள்); தோற்றம் [சொல்லப்பட்ட அழகு வரைவிலக்கணத்துள் வராதவர்கள் (வெள்ளையர்களுள் பொன்னிற முடிதான் அழகு. ஏனைய முடி நிறங்களுள் குறிப்பாக செந்நிறத் தலைமுடியை உடையவர்கள் கேலிப்பொருட்களாக பார்க்கப்படுவர். இதனாற் சிவத்தத் தலைகள்–red heads என கேலி செய்யப்படுவர்) மற்றும் உடற் பலங் குறைந்தவர்களாய் இருத்தல்; சிறியவர்களாய் இருத்தல்]; பாலியற் தேர்வு (சமபாலுறவாளர்கள்)  என்பன இருக்கின்றன. பலமற்றவர்களைத் தமது தாக்குதல்ப் பொருளாகத் தெர்வதில் பலசாலிகள் கவனமாகவே இருக்கிறார்கள். யாரும் பெரும்பான்மை மாணவர்களதும் ஆசிரியர்களதும் ஆதரவுடன் நடமாடுகிற பலமானவர்களைப் போய்த் தாக்குவதில்லை.  பலங் குறைந்தவரைத் தாக்குவதுதான் பலமானவர்களது பலம்!

நாம் வாழும் பூமியில் சமநிலையைப் பேணுதலின் நிமித்தம் நாம் சகமனிதரை மதித்தே ஆக வேண்டும் என்கிற அடிப்படை அறத்தினை வேறெந்த பாடங்களை விடவும் முக்கியமானதாக வலுவானதாக எம் குழந்தைகளுக்கு நாம் கற்பிக்கிறோமா? இன்னொரு சகஜீவிக்கு கை உயர்த்தும் அதிகாரம் எம்மில் எவருக்கும் இல்லை என்பதை எம் குழந்தைகளுக்கு நாம் — வீடுகளும் கல்விக் கூடங்களும் — கற்பிக்கின்
றோமா? Bully-களை பள்ளிகளும் வீடுகளுமே உருவாக்குகின்றன. வன்முறை சரியென வீட்டிலும் வெளியிலும் அடாவடியாய் நடந்து கொள்கிற ஒவ்வொரு ஆணும் பெண்ணும் ஆசிரியர்களும் வன்முறைக்குத் துணை போகிறார்கள். தம் பிள்ளைகளை, தம் மாணவர்களை வன்முறையாளர்களாக உருமாற்றுகிறார்கள்.

கனடா போன்ற ஒரு சொல்லப்படுகிற முன்னேறிய நாட்டில் சக மாணவர்களது துன்புறுத்தலால் ஒரு பிள்ளை தற்கொலை செய்து கொள்வது வரை நிகழ்கிறது. இதைக் கற்பனை செய்வதே பலருக்கும் கடினமாயிருக்கலாம். எனிலும் ஒவ்வொரு சூழலிலும் வெவ்வேறு வடிவங்களில் வன்முறை இருந்து கொண்டேயிருக்கிறது – சிறியயதாயும் பெரியதாயும் வாழ்வின் ஒரு கூறென.

04.
சுதந்திரமான முடிவுகளை எடுக்கக்கூடியவரான வளர்ந்தவர்களே பாலியல் சுரண்டல்களுக்கும் பலவித உடல்-உள வன்முறைகளுக்கும் உள்ளாகிறபோது – எந்த, தக்கன வாழும் தகமைகளும் வளர்ந்திராத, வெறும் தேவதைக் கதைகளை வாசித்து வளரும் குழந்தைகளைப் பற்றிய எண்ணம் தொந்தரவு தருகிறது. தகாதென அழியுமே?

பவுத்த பிக்குகள்; கிறிஶ்தவ, கத்தோலிக்க பாதிரிகள்; யூத மதகுருக்கள்; ஐயர்கள்; சாமியார்கள்-  விதிவிலக்கின்றி அனைவரும் பாலியல் துஶ்பிரயோகங்கள் சுரண்டல்கள் தொடர்பான வழக்குகளில் அறியப்படுபவர்களே.  இது கூறுவது என்னவெனில் ‘சிறுவர்கள் – சிறியவர்கள் – பலமற்றவர்கள்’ மீதான எந்தக் குற்றங்களுக்கும் எவரும் பயப்பட்டதில்லை.

சிறுவர்கள், அவர்கள் எந்த நீதி மன்றத்தில்ப் போய் நியாயம் கேட்பார்கள்? அவர்களுடைய பவித்திரமான உலகம் காணாது போகும் ஒரு அத்துமீறலை துஶ்பிரயோகத்தை அவமதிப்பை எவ்வாறு அவர்கள் அடையாளங் காணுவார்கள் – அவர்தம் பூவுலகம் சிதறிப் போகாதபடி அவர்களுக்கு எதிர்ப்பை கற்றுத் தருவது எவ்வாறு?

மேலும், சோமாலியா உள்ளிட்ட தேசங்கள் பலதிலும் தினமும் இறந்துகொண்டிருக்கும் அவர்களை ஒத்த சிறுவர்களது நிதர்சனம்  தெரியாமல் அவர்களை வளர்க்க வேண்டிய தேவை என்ன? அது யாருக்கு உதவும்? அத்துடன், சமாதானத்துக்கான குறியீடுகளையே ஏற்றுக் கொள்ளாதவர்களிடமிருந்து, சமாதானத்தினதும் வன்முறையற்ற உலகினதும் ஒப்பீடுகளற்ற பெறுமதியை சிறுவர்கள் எப்படி கற்பார்கள்?

05
சமூக சமநிலைக்கு, சமூக நீதிகளுக்கு எதிரான தனது கருத்துக்களை தனது சந்தைகளை குழந்தைகளிடம் திணிக்கும் திறந்த விற்பனை கூடமாகவே நாம் வாழும் உலகம் உள்ளது. தொடக்கநிலை தனியார் பள்ளிக் கூடங்கள் பல அப்பியாசக் கொப்பிகளைக் கைவிட்டு ஐபாட் (iPad)  போன்ற பெருநிறுவனங்களது உற்பத்திப் பொருட்களுக்கு மாறிவிட்டன.

பரிசுகளே அன்பினை தீர்மானிப்பவையாக  தம் பிள்ளைகளுடன் நேரம் செலவளிக்க முடியாத பெற்றோர் தம் குற்றஉணர்ச்சியைப் போக்கும் நிமித்தம் பரிசுகளை வாங்கிக் குவிக்க வேண்டியுள்ளது (அதனூடாகச் சிறிதளவு அன்பை ஏனும் திருப்பிப் பெற).

இன்றெமது கதைகள் எல்லாம் எமது பட்டறிவின் நியாயங்களே. பெற்றோர் தம் இளம் வயதில் தாம் செய்த தவறுகளை பின்னாளிலேயே உணர்ந்து தமது பிள்ளைகளும் அதைச் செய்யக் கூடாதெனப் பதைபதைக்கின்றனர். தம் கைப் பிடிக்குள் வைத்திருக்க நீதிக் கதைகள் தயாராகின்றன. பிள்ளைகள் தவறு செய்வதை தமது அனுபவங்களைக் கூறிப் பயப்படுத்தித் தடுத்திட முயலுகின்றனர். ஆனால் வட்டமென சுழலும் வாழ்வு எதையும் தடுப்பதில்லை. பெற்றோர் தடக்கி விழுந்த போலவேயான இடங்களிற்  பிள்ளைகளும் போய் விழுகின்றனர் . தவறுகளை விட்டே அவர்களும் தவறறிகிறார்கள். துரதிர்ஶ்டவசமாக பெற்றோர் சென்ற அதே தெருக்களும் அதே பள்ளி நிறுவனங்களும் அதே பின்தொடரவேண்டிய குடும்ப-அரசாங்க-மத ஒழுங்குக் கட்டமைப்புகளும் அதன் நியதிகளுமே சற்றே மிகச் சற்றே மாறிய நாகரிகக் களங்களுடன் பிள்ளைகளுக்காகவும் தயாராய் உள்ளன. இதில் எதையும் மீறிச் செல்ல நம்மிடையே ஆயிரம் புத்தர்களா பிறந்தார்கள்?

குழந்தைகளின் உலகம் மாசுமருவற்ற உலகமாக என்றுமே விட்டுவைக்கப்பட்டு இல்லை. அது பெரியவர்களது உலகினால் அத்துமீறப்பட்டு, தன் சூழலின் கசடுகளுடனேயே இருக்கிறது. ஆகவே அவர்களிடன் தீய உலகின் கூறுகளையும் எடுத்துச் செல்வது ஒன்றும் அவர்களது உலகை இதுவரை இல்லாத குழப்பத்தில் ஆழ்த்துகின்ற ஒன்றாக அமைந்துவிட  முடியாது.

06
கனடிய பல் பண்பாட்டுச் சூழலில் (ஆங்கிலத்தில்) எழுதப்பட வேண்டிய சிறுவர் கதைகளூடாக எமது பண்பாட்டு வேறுபாடுகளை பெரும்பான்மை சமூகத்துடன் பகிர்ந்து கொள்வதற்கும்; அதனூடாகப் புரிதல்களை ஆரம்ப கட்டங்களிலையே ஏற்படுத்துவதற்கான தேவையும் இருக்கிறது.  புரிதல் இன்மைகளே ஆசிரியர்களிடமிருந்தும் சக மாணவர்களிடமிருந்தும் அறியாமைகளுக்கு (அவற்றில் நியாயம் இல்லை என்றாலும்) அதன்பாலான புறக்கணிப்புகளுக்கு வழிகோலுகின்றன.

இன்றைய காலத்தில் பெரியவர்கள் உள்ளடங்கலாக சிறுவர்கள் அனைவரும் தங்களை அறிவூட்டிக் கொள்ள வேண்டிப் பலதரப்பட்ட விடயங்கள் எதிர் உள்ளன. வளர்ந்தவர்கள் அவற்றின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வதோடு, அவற்றை சிறுவர் இலக்கியங்களும் உள்ளெடுத்துக் கொள்ளுதலே இன்னொரு படிநிலைக்கு உதவும். சிறுவர் இலக்கியங்களிலும் பாடத் திட்டங்களிலும் இவற்றை உள்ளடக்கி எழுதப்படுகிற போது தான் தன்னிலிருந்து வித்தியாசமாய் இருக்கிற சக மாணவரை ஒதுக்குகிற துன்புறுத்துகிற மனங்களில் படிப்படியாய் மாற்றம் வ(ள)ரும். அதுவரை இவை ஒரு முடிவற்ற பட்டியலே.

தமிழ் / ஆங்கில சிறுவர் இலக்கிய எழுத்தாளர்கள் கவனிக்கவேண்டிய பொருளடக்கம்:

1. குறிப்பிட்ட விகிதமான சிறுவர்களுக்கு இருக்கும் ஆட்டிசம் (Autism); டிஶ்லெக்சியா (dyslexia) போன்றன தொடர்பான புரிதலை சிறுவர்களிடம் ஏற்படுத்துகின்ற படைப்புகள்; அதே நேரம், டிஶ்லெக்சியா போன்றன இருக்கிற சிறுவர்களுக்கான வாசிப்புக்கான வடிவங்களிலும் படைப்புக்கள் வேண்டும். டிஶ்லெக்சியா இருக்கிற சிறுவன் அதை புரிந்திராத – அவனை ஒரு குறைபாடாய்ப் பாக்கிற –  பள்ளிச் சூழல் மட்டும் குடும்பச் சூழலில் எதிர்கொள்கிற உளவியல்ச் சிக்கல்களை Taare Zameen Par (பூமியிலுள்ள நட்சத்திரங்கள், 2007) என்கிற ஹிந்தித் திரைப்படம் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தது. உண்மையில் ஒவ்வொரு சிறுவர்களும் ஒவ்வொரு விதமாய்க் கற்றுக் கொள்கிறார்கள். ஒரு வகுப்பறை எல்லோரையும் ஒரே மாதிரிக் கற்றுக் கொள்ளச் சொல்கிறது. அது அனைவரது இயலுமைகளையும் கவனத்திலெடுக்காத கல்வித் திட்டத்தின் தவறே அன்றி மாணவர்களது அல்ல. ஆட்டிசம், டிஶ்லக்சியா இருக்கிற பிள்ளைகள் கற்றுக் கொள்ள வேறு வடிவிலான கற்பித்தல் முறைகளைப் பயன்படுத்த வேண்டும். அவர்களது வழமைக்கு மாறான தன்மையை சிறு சிக்கல் அல்லது தடை (barrier) என்று வேண்டுமானால் குறிப்பிடலாமே ஒழிய அது குறைபாடு அல்ல. தடைகளை அகற்றுதலைச் சிந்திப்பதே பொறுப்பான கல்வியாளர்களது வேலை. தள்ளி வைப்பதல்ல.

2. வெவ்வேறு வர்க்கங்களை, மாறுபட்ட குடும்ப அலகுகளை உள்ளடக்கும் படைப்புகள். உதாரணமாக: வறுமைக் கோட்டுக்குக் கீழிருப்பவர்களது பிள்ளைகள், தாய் அல்லது தகப்பன் ஒருவரது கவனத்தின்கீழ் அல்லது வளர்ப்புப் பெற்றோர், மாற்றாந் தாய் / தகப்பனுக்குள் வாழும் பிள்ளைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை உள்ளடக்கியவை.
3. சமத்துவம்; சமூகஅக்கறை:
பெரும்பாலான எமது குடும்பங்கள் பிள்ளைகள் போடுகிற ஆடைகள் உள்ளிட்ட வெளித் தோற்றத்திலேயே அதிக கவனம் செலுத்துகின்றன.  அவற்றிலுள்ள அக்கறை அகநிலையின் தோற்றம் குறித்து இருந்ததில்லை. ஆனால் அகநிலையின் விகாரங்களே சக மனிதர்கள் மீதான வன்முறைகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் காரணிகளாய் அமைகின்றன. அதில், எமக்கான சுதந்திரத்தைப் போலவே மற்றவரதையும் மதித்தலும் சமத்துவம் பேணலும் கற்றுத்தரப் படும் படைப்புகள்.
4. சுற்றுச்சூழல் மற்றும் சர்வதேச உள்ளடக்கத்தைக் கொண்ட படைப்புகள்.
5. சுயமரியாதை; சுயபாதுகாப்பு என்பனவை கற்றுத் தரும் படைப்புகள்.
6. வன்முறை எதிர்ப்பு; யுத்த எதிர்ப்பு என்பதை வலியுறுத்தும் படைப்புகள் –
வன்முறையிலிருந்து தப்பியோடிய சமூகத்தில் புலம்பெயர் வெளிகளிலும் ஒருவரை ஒருவர் தாக்குகிற துப்பாக்கியால் சுடுதல் காரினால் ஏற்றிக் கொல்லுதல் என்பன எப்படி சாத்தியமாகின? மேற்குறிப்பிட்டுள்ளது போல வன்முறையின் கூறுகளை அடையாளங் கண்டு அவை சமத்துவமற்ற உலகுக்கானது என்பதை சிறு வயதிலையே பிள்ளைகளின் அகநிலையில் பதிய வேண்டும்.
7. அனைவரையும் உள்ளடக்குதல் (பிற பண்பாடுகள்—இனங்கள்—மொழிகள்—உணவுவகைகள்—நிறங்கள்–மதங்கள்–பாலியல் தேர்வுகள்):

பிளவுண்ட வகுப்பு : ஒரு பரிசோதனைப் பாடம்

“Oh, Great Spirit, Keep me from ever judging a man until I’ve walked in his moccasins”
– Sioux Aboriginal Prayer

01

முற்போக்கான புரிதல்களை வளர்க்கின்ற மாற்று அமைப்புகள் தமது அறிவூட்டல் நிகழ்வுகளில்  – unlearn என்றொரு ஆங்கிலச் சொல்லை நாம் கற்ற தவறான விடயங்களை எம் மூளையிலிருந்து அகற்றுதலைக் குறிப்பதுக்குக் கூறுவார்கள்.  learn, unlearn. அதாவது, நாம் கற்க வேண்டும்; அதே நேரத்தில், எமக்கு கல்விக் கூடங்களில் குடும்பங்களில் சமூக சூழலில் கற்பிக்கப் படுகிறவற்றில் இருக்கும் தவறானவையை (மற்றவர் குறித்து, பாரபட்சங்களைத் தொடர்ந்தும் வலியுறுத்திக் கொண்டிருப்பவற்றை) நாங்கள் எம் அறிவிலிருந்து அகற்றுதலும் அவசியமாகின்றது.  நாம் கற்றவற்றை  மறுசீலனை செய்ய வேண்டும். ‘டாக்குத்தர் சொன்னால் எல்லாம் சரியாயிருக்கும், ஆசிரியர் சொன்னால் எல்லாம் சரியாயிருக்கும், பல்கலைக்கழகங்களிற் கற்பிக்கின்ற எல்லாமே சரியாய்த் தான் கற்பிக்கப்படுகின்றன, படித்தவர்கள் எல்லாருமே அறிவாளிகள்’ இப்படியான நம்பிக்கைகளைக் காவிக் கொண்டிருக்கிறபோது அங்கே மறுசீலனைக்கு இடமற்றுப் போய் விடுகிறது.

02
பாரபட்சங்களது வேர்  ஆழமானது; அது கண்ணுக்குத் தெரியாதது, சமயங்களில் நாமும் அறியாது நம்முள் ஆழ ஊன்றி வளர்வது. அதை யாரேனும் சமூக சீர்திருத்தவாதிகள் வந்து கேள்விக்குட்படுத்தி அடையாளங் காணும் வரை, அதுவும் சமூகத்தில் ஒரு அங்கமாக தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டு யாராலும் ஆட்சேபிக்கப் படாது வாழ்ந்து கொண்டிருக்கும். அந்த தனிநபர் சீர்திருத்தங்கள் பலவாய்ப் பரவி சமூக இயக்கமாய் அல்லது ஒரு சமூக மாற்ற இயக்கமாக உருவெடுத்து சமூகத்தை உலுக்கி, மாற்றத்தைக் கொண்டு வரும் வரையில், அதன் கபடங்கள் உயிருடன் தன் விச நாக்குடன் சக மனிதர்கள் மீதில் ஒடுக்குமுறையை நிகழ்த்திக் கொண்டிருக்கும்.

கள்ளங் கபடமற்ற மாசுமருவற்ற ஒரு பருவமென அறியப்படுகிற சின்ன வயதுகளை நினைக்கிற போது அதனுள் கலந்திருந்த பாரபட்சங்களை என்னால் இன்று அடையாளங் காண முடிகிறது. அவை எங்கிருந்து வந்தன என்பதையும்.

வன்னியில் காணிகளை உடைய – குடிசை அல்லாது  – வீடுகளுள் வாழ்கிறவர்களது பிள்ளைகள் மரியாதையற்று யாரை அவன் என்று விளித்தார்கள் என்பதையும் யாரை அவர் என்று சொன்னார்கள் என்றும் பார்த்தால் அதற்குக் காரணமான சாதித் தடிப்பும் பொருளாதாரப் பின்னணிகளும் தெரிய வரும். அதே போல தம் வீட்டில் வேலை பார்க்கிறவரை பெரியவர்களைப் போலவே சிறுவர்களும் பெயர் சொல்லியே அழைத்தார்கள். இதே நிலவரமே வன்னியில் யாழ்ப்பாணத்தில் கொழும்பில் மலையகத்திலிருந்து வீட்டு வேலைக்கெனக் கொண்டு வரப்பட்ட வீட்டுத் தொழிலாளர்களுக்கும் நடந்தது. அந்த வசதியான வீடுகளின் குழந்தைகள் அவர்களிடம் வன்முறையையும் குரூரத்தையும் பிரயோகித்தார்கள். ஒரே மொழியைக் கதைக்கின்ற போதும் அவர்களும் மனிதர்களே என்கிற போதும் அவர்கள் நடத்தப்பட்ட விதங்களில் எதுவும் தவறிருப்பதாக சூழ இருந்த யாருக்கும் உறைத்ததில்லை.

கள்ளம் கபடமற்ற அப் பருவத்தில், பாரபட்சத்தின் அந்த முதல் முளைகளை, கிள்ளி எறிய பெரியவர்கள் – ஆசிரியர்கள் – பெற்றோர்கள் எவருக்கும் ஏன் தோன்றவில்லை? பிள்ளைகள் பாரபட்சங்களை அங்கேயே கற்றார்கள்.  அவை தலைமுறைகளாய் ஏற்றுக் கொள்ளப்பட்டுக் கடத்தப்பட்டன.

பாரபட்சங்கள் அவ்வளவு தூரம் பிழையற்றனவாக நெறிகளுள் ஒன்றாக எங்களுக்குள் தம்மைத் தகவமைக்கச் செய்திருக்கின்றன.

அதனாற் தான் கல்வி கற்பிக்கிற – கடவுள்களில் ஒருவராகக் கருதப்படும் – ஆசிரியர் தொழிலில் உள்ளவர், சாதிய ரீதியில் ஒடுக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளிடம் ‘போய் சிரையுங்கோவன்டா’ ‘போய் மரமேறுங்கடா’ என்றும், விவசாயிகளது பிள்ளைகளிடம் ‘போய் மாடு மேயுங்கடா’ என்றும் கூறுவது ‘இயல்பாய்’ இருந்தது; தவறாய்ப் பார்க்கப் படவில்லை. யாரையும் உறுத்தவில்லை.

03
ஒடுக்கப்பட்டவர்கள் பள்ளிப் படிப்பை தொடருவதற்குத் தடையாய் ஆதிக்க சாதியினது ஆணவ அடக்குமுறை காரணமாய் இருந்திருக்கிறது. கரும்பலகையிற் தவறாகக் கணக்குப் போட்டுக் காட்டிய வாத்தியாரை, தான் தவறென்று திருத்தியபோது,  ஒரு ஒடுக்கப்படும் சாதியைத் சேர்ந்த மாணவன் தன்னைத் திருத்துவதைப் பொறுக்காத அந்த ஆசிரியர் கோபத்துடன் ‘போய்ச் சிரையுங்கோவன்டா’  என்றதைத் தன் கால அனுபவங்களை விபரிக்கும் ஒரு சிறு விவரணப் படத்தில் ஈழத்தின் முக்கிய இலக்கிய அரசியல் ஆளுமைகளுள் ஒருவரான டொமினிக் ஜீவா பகிர்ந்திருந்தார்.  மேலும் அவர், ‘எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்’ என்கிற தனது  சுயவரலாற்று நூலில் சாதி ஒடுக்குமுறை மற்றும் அதற்கெதிரான தனது அரசியல் அனுபவங்களை விரிவாகப் பதிந்திருக்கிறார்.
இதில் சாதியத் திமிரை (ஈகோவை) காட்ட எடுத்துக் கொண்ட ஆயுதம்: சாதிய ரீதியான அவமதித்தல். தனது அதிகாரத்தைப் பிரயோகிக்க சமூகத்தில் ஏலவே இருக்கவே இருக்கிற பாரபட்சங்கள் அந்த ஆசிரியருக்கு உதவுகின்றன. அவர் ‘(சாதிய மற்றும் பிற) அடக்குமுறைகள் பிழையற்றன’ என்கிற சூழலின் வார்ப்பு.
அந்தச் சூழலில் அத்தகைய ஆசிரியர்களை ஒத்தவர்களுடைய செயல்களைப் பார்த்து வளர்கிற சக மாணவர்கள் அத்தகைய அவமதிப்புகள் தவறல்ல என்றே ‘கற்று’க் கொள்கிறார்கள். விளையாட்டுத் திடலில் தம் சக மாணவர்களைச் சாதி சொல்லி அவமதிக்கிறார்கள். தம்மை விடக் கெட்டிக்காரர்களாக அவர்கள் இருந்துவிடில், அது தருகிற எரிச்சலுடன் – ஆசிரியர்மாரின் ஒத்துழைப்புடன்  – போய்ச் சிரையுங்கோடா எனக் கத்துகிறார்கள்.
ஏனெனில்:
– பெரியவர்கள் சொல்வதைக் கேட்கவேண்டும்.
– உயர்பீடங்களில் இருப்பவர்களைப் பின்தொடர்வது சமூகக் கடமை.
– பெரியவர்கள் எப்போதுமே பொய் சொல்வதில்லை.
– ஆசிரியர்கள் பிழையானவற்றைப் படிப்பிப்பதில்லை
– ஒப்புர ஒழுகு

இங்கே தான் கேள்விகள் எழும்புகின்றன. கல்வி, அது, எதைக் கற்பிக்கிறது? இத்தகைய பாரபட்சங்கள் உட்பட கல்விக்கூடங்களில் நாம் உள்ளெடுத்துக் கொள்ளும் அனைத்துமே அறிவுதானா? எனில், எத்தகைய அறிவு?

04
எங்களைச் சூழவும் பாரபட்சங்கள் அதிகாரங்களாக எமது கைகளில் தரப்பட்டுள்ளன. குறிப்பாக இந்து மதம் ஒருவரது பிறப்பே முன்வினைப் பயன் எனக் கூறி, ‘தாழ்ந்த’ பிறப்பு பாவத்தின் வினைப் பயன் என்றும், ‘உயர்ச்சி’ முன்செய் நன்மைகளின் விளைபலன் என்றும் கூறி வைத்திருக்கிறது. ஒருவரது ஜாதிய அடையாளம், பொருளாதார பின்புலம், பால் அடையாளம் – இவையெல்லாம் அவை அவைக்கு ஏற்ப பலங்களை எமக்குத் தந்துள்ளன.

ஒரு ஆணாக இருத்தல், ஒரு வசதியான ஆணாய் இருத்தல், ஒரு வசதியான ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஆணாய் இருத்தல் – இவை எல்லாம் ஒரு வறிய, ஒடுக்கப்பட்ட ஆணாய் இருத்தலை விட, ஒடுக்கப்பட்ட சமூகத்தை விட மேலான அதிகாரங்களைக் கொண்டது; அதற்குத் தகவாய் சலுகைகளையும் வாய்ப்புகளையும் கொண்டது.

ஆச்சரியமூட்டக் கூடிய வகையில், ஏலவே இருக்கின்ற பாரபட்சங்களுக்கு எதிரான சட்டதிட்டங்கள், இயக்கச் செயல்பாடுகள், தற்காலிக சமூக மாற்றங்கள் நீண்ட காலத்துக்கானவையாகச் செயல்படுத்தப் படாத போதில் மீண்டும் அவை  பாரபட்சங்களுக்கே வழி திறந்து விடுகின்றன. இயற்கை அழிவுகள் – மனித அழிவுகள் – பெரும் போர்களின் பிறகும், எல்லாம் வழமைக்குத் திரும்பி விடுகின்றன. போராடிய பெண்கள் சமையலறைக்குத் திரும்புகிறார்கள். சாதிய சமூகம் தன் சாதித் தடிப்புகளுக்குத் திரும்புகிறது. “உங்களை ஆயிரம் பெரியார் வந்தாலும் திருத்த முடியாது” என்றவாறு சலிப்புடன் நகர்கிறார்கள் சமூக செயற்பாட்டாளர்கள் தமிழ்நாட்டில்.

05

தாம் நம்புகிற எது குறித்தும் தம்மால் முடியக் கூடிய எல்லைகளுள் இருந்து எதிர்ப்பை எழுப்பக் கூட தயங்குவர் பலர். எம் சக்திக்கு இது முடியுமா.. என்னால் இது முடியுமா.. எமக்கு அப்படியொரு சக்தி இருக்கிறதா என பின்னடிப்பார்கள்.

ஆனால் சிலர் இருக்கிறார்கள் தாம் நம்புகிறவற்றுக்கு அவர்களே ஆஜர் ஆகுவார்கள். தமது எல்லைகளுக்குள் மாற்றங்களை உண்டாக்குவார்கள்.  சமூகரீதியான  தலைமைத்துவப் பண்பு என்பது சமூகத்துள் இருந்தே வருவது – இதையே எனக்கு உறுதிப்படுத்துகிறார் ஆசிரியை Jane. தன் வேலையே பறிபோகக் கூடிய வாய்ப்பிருந்தும், சக ஆசிரியர்களால் அச்சுறுத்தலுக்கும் வெறுப்புக்கும் புறக்கணிப்புக்கும் உள்ளான போதும், தனது குழந்தைகளையும் கேலிகள்-கிண்டல்கள் என அது பாதித்த போதும் அவர் தனது எல்லைகளுக்கு வெளியே போயும் தான் நம்பியதை பேசிடத் துணிந்தார்.


1968 றைஸ்வில், ஐஓவா :
சிறுவன் ஒருவன் அன்று தனது மூன்றாம் வகுப்பு ஆசிரியரிடம் கேட்க கேள்வி ஒன்றுடன் வருகிறான்…”ஒரு அரசனைக் கொன்று விட்டார்களாமே… அவனை ஏன் ரீச்சர் கொன்றார்கள்” என்பதே அவனது கேள்வி.

1968 ஏப்ரல் 4 – கறுப்பினச் சிவில் உரிமைகள் தலைவர் மார்ட்டின் லூதர் கிங் கொல்லப்பட்டிருந்தார். அது குறித்த தொலைக்காட்சி செய்திகளும் உரையாடல்களிலிருந்தும் ஒரு அரசனைக் (king) கொன்றுவிட்டதாக அவனுக்கு விளங்கியிருந்தது. தன் வயதுக்கேயுரிய அறியும் ஆர்வமும் துடிதுடிப்பும் அவனிடம்… மார்ட்டின் லூதர் கிங் கொல்லப்பட்ட போதான தொலைக்காட்சி நிகழ்வுகள் அந்த ஆசிரியரையும் பாதித்திருந்தன. அச் சந்தர்ப்பத்தில் அமெரிக்காவில் ஒடுக்கப்படுகிற பிற இனங்கள் குறித்த புரிதலை ஏற்படுத்தும் ஒரு பாடத்தை தனது மாணவர்களுக்கு அவர் கற்பிக்க விரும்பினார். ஆனால் அந்தப் பாடம் வழமையானதொன்றாக இருப்பதை அவர் விரும்பவில்லை. ஏனெனில் காலங் காலமாக கல்விக்கூடங்களில் பாடத் திட்டங்களில் பாரபட்சங்கள் குறித்த மேலோட்டமான பாடங்கள் இடம்பெற்றுக் கொண்டுதானிருந்தன.  ஆனால் பெரும்பான்மையாய் வெள்ளையின கிறித்துவர்களையே சனத்தொகையாய்க் கொண்டிருக்கிற றைஸ்வில் கிராமத்தில் உண்மையாகவே அடக்குமுறைக்குட்படுகிற இன்னொரு இனத்தவராய் இருப்பது என்பது எப்படியானதோர் உணர்வு என்பதை கற்பிக்க விரும்பினார்.

இது குறித்துக் கூறுகையில் அந்த ஆசிரியர் ஜேன் இலியட் (Jane Elliott) கூறினார். ‘கிங் கொல்லப்பட்ட பிறகு, தொலைக்காட்சியில் வெள்ளை நிருபர்கள் கறுப்பினத் தலைவர்களை நோக்கிக் கேட்ட கேள்வி என்னை யோசிக்க வைத்தது. அந்த நிருபர்களில் ஒருவர் கேட்டார் ‘எமது தலைவர் (கென்னடி) கொல்லப்பட்டபோது அவரது மனைவி எங்களை ஒரு ஒழுங்குள் வைத்திருந்தார்.  உங்களது மக்களை யார் கட்டுப்படுத்தப் போகிறார்கள்?’ இந்தக் கேள்வியின் பின்னாலுள்ள நாங்கள் எதிர் நீங்கள் என்கிற அந்த வேற்றுமையின் அரசியல் என்னைச் சிந்திக்க வைத்தது.  ஒரே நாட்டில் வசிக்கிற மனிதர்கள் தொடர்பில் உங்களது மக்களை யார் கட்டுப்படுத்தப் போகிறார்கள் என்கிற பிறிம்பான கேள்வியின் பின்னே அவர்களை இரண்டாம் மனிதர்களாக உப பிரிவாக பார்க்கிற வெள்ளை உளவியல் இருந்தது; வளர்ந்தவர்களிடமே இந்த மனநிலை இருக்கிற போது றைஸ்வில் போன்றதொரு சிறு கிராமத்தில் சிறுவர்கள் எத்தகைய மனநிலைகளுடன் இருப்பார்கள் என்கிற கேள்வி என்னைச் சிந்திக்க வைத்தது. பாடத் திட்டங்கள் வருடா வருடம் இந்த நாட்டின் பூர்விகக் குடிகளுடன் புரிதலை வளர்த்தல் பற்றியும், ஒவ்வொரு மாதங்களை ஒவ்வொரு தலைவர்களுக்கு அர்ப்பணித்தும், சமூக நீதிகளைப் பேசி வந்தாலும் அவை உண்மையான புரிதல்களை வளர்த்தனவா தாக்கத்தைத் தந்தனவா என்றால் அப்படி இல்லை என்பதே பதில்.’

உள்ளடக்கப்பட்ட நிறைய விடயங்களைப் பாடத் திட்டங்கள் கற்பித்த போதும், அவை சரியான வகையில் மாணவர்களால் உள்வாங்கப்படுவதற்கு அவை ஏது செய்வதில்லை. இதற்கான மாற்றாக, 1968இல் அந்த வகுப்பறையில் தனது 3ம் வகுப்பு மாணவர்களுக்குள் அந்த நல்லாசிரியர் அப் பரிசோதனையை நிகழ்த்தினார் – அவர்களால் ஒருகாலமும் மறக்க முடியாத பரிசோதனை!

06
சயொக்ஶ் (Sioux) பூர்விக இனத்தவரது ஒரு பிரார்த்தனைப் பாடலான ‘ஓ.. மாபெரும் ஆத்துமாவே, நான் எவர் ஒருவரதும் பாதணியில் நடக்க நேரும் வரையில், அவரை மதிப்பிட என்னை அனுமதியாதே’ [“Oh Great Spirit, keep me from ever judging a man until I have walked a mile in his moccasins.”] என்பதை மையப்படுத்தியமைந்தது அவரது பாடம். ‘உனது உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது’ எனக் கூறினாற் போல, பல்வித அசமத்துவங்களைக் காவுகிற உறவுகளிலே எம்மால் எச் சந்தர்ப்பத்திலும் முழுமையாய் மற்றவருடைய உணர்வுகளைப் புரிந்திட முடிந்ததா? அவரது இடத்திலிருந்து அவரது நியாயங்களை அறிந்திட முடிந்ததா?

அப் பிரார்த்தனையை முன்வைத்து வகுப்பறையில் இனத்துவேசம் குறித்த சிறு உரையாடலை நிகழ்த்தினார் ஜேன். ‘’எப்படி நீங்க மற்ற இனத்தவரைப் பார்க்கறீர்கள். இந் நாட்டின் பூர்விகக் குடிகளை. கறுப்பர்களை?’’ இவ்வாறு கேட்கப்படுகிற போது, சிறுவர்கள் எந்தத் தணிக்கையுமின்றிக் கூறுகிறார்கள் ‘அவையளப் பாக்கேக்க நாங்க நினைப்பம் ‘பாரன் ஆக்கள’ எண்டு’ ‘குப்பைச் சனம்’ ‘அவர்கள் வெள்ளையர்கள் போல புத்திசாலிகள் இல்லை’ ‘சண்டை பிடிப்பவர்கள்’ –  நிறத்தை வைத்து ஆக்களை மதிப்பிட முடியுமாயின், ஆட்களது கண்களைப் பார்த்து ஒருவருடைய இயல்பை கணிப்பிட முடியுமா… கணித்துப் பார்ப்போமா என்ற கேள்வியுடன், ‘பாப்போமே’ என்கிற பிள்ளைகளது ஆர்வத்துடன், பிறகு அன்றைய வகுப்பை அவர் இரண்டாகப் பிரித்தார். அவர் சொன்னார் ‘நான் தான் உங்களின் ஆசிரியர்… எனக்கு நீலக் கண்கள். ஆகவே நீலக் கண்களை உடைய மனிதர்கள் கெட்டிக்காரர்கள். அவர்களுக்கு விசேச பலமும் இயலுமைகளும் உண்டு.’ மண்ணிறக் கண்களை உடைய பிள்ளைகளது உதடுகள் துடித்து கண்களில் துயரம் எட்டிப் பார்க்கிறது ‘அதெப்பிடி’ ‘அப்ப நாங்க?’ ‘இல்ல.. இருக்கவே இருக்காது’ என வாதிட வருகிற குழந்தைகளை அவரது குரல் மறிக்கிறது ‘உனது அப்பா உன்னை அடித்ததாகச் சொன்னாயே.. அவருக்கு மண்ணிறக் கண்ணா.. நீலநிறக் கண்களை உடைய அப்பாக்கள் இப்படி நடந்து கொள்வார்கள் என நினைக்கிறாயா?’
‘திறமை குறைவான மண்ணிறக் கண்களை திறமை கூடியவர்களிடம் இருந்து உடனடியாக வேறுபடுத்திக் காட்ட வேண்டும்! நீங்கள் இந்த கொலரைப் போட்டுக் கொள்ளுங்கள்.. தூரத்திலே உங்களை அடையாளங் காண உதவும்’
அத்துடன் நிறுத்தாது அவர் அன்றைய அவர்களது விளையாட்டுக்கான இடைவேளை நேரத்தை, நீலநிலக் கண்களை உடைய பிள்ளைகளுக்கு முன்னதாகவும் மண்ணிறப் பிள்ளைகளுக்கு தாமதமாகவும் குறைவாகவும் தரப் போவதாக அறிவிக்கிறார். மண்ணிறக் கண்களை உடையவர்கள் உடைந்து போய் நிக்கிறார்கள். நீலநிலக் கண்களை உடைய சிறுவர்கள் முகத்தில் மகிழ்ச்சி எட்டிப் பார்க்கிறது. தாம் உயர்ந்தவர் என்கிற போதை அவர்களது உடலெங்கும் மெல்ல மகிழ்ச்சியைப் பரப்புகிறது.

இரக்க சுபாவமும் சிறந்த எண்ணங்களும் உள்ள அந்தக் குழந்தைகள் ஒரு கணத்தில் தீய்மையும் வெறுப்பும் கொண்டவர்களாகி விட்டார்கள் – அதுவும், தம் சக மாணவர்களுக்கு எதிராக! தம் நேற்றைய நண்பர்களுக்கு எதிராக…! இடைவேளை நேரத்தில் கடந்த காலங்களில் உற்ற நண்பர்களாய் இருந்தவர்கள் கூட மண்ணிறக் கண்ணை உடையவர்களுடன் விளையாட அனுமதிக்கப்படவில்லை.  பழைய நண்பர்கள் யாரும் அவர்களை அழைக்கவும் இல்லை. அத்துடன் அவர்களை அவர்கள் மண்ணிறக் கண் உடையவர்கள் என வசையாடுகிறார்கள்… அவர்களை அவமதிக்கிறார்கள்… இடைவேளையில் அவர்கள் தனித்து அழுதவாறு தம்மைச் சிறுமைப்படுத்தும் கொலரை குளிராடைக்குள் மறைத்தபடி ஒதுங்கியிருந்தார்கள்.

இடைவேளையின் பிறகு: அவர்களது நடத்தைகளைக் கேட்கிற ஆசிரியை ஜேன் அவர்கள் அப்படி நடந்து கொண்டதற்கான காரணங்களைக் கேட்கிறார். தன்னை மண்ணிறக் கண் என்று சொன்னது தன்னை ஒரு முட்டாளாக உணர வைத்தது என்றும் அதனாற் தான் நான் சக மாணவனை அடித்தேன் என ஒரு மண்ணிற கண்ணை உடைய சிறுவன் கூறுகிறான். அவனது முகமோ சோகமே உருவாகி இருக்கிறது. விட்டால் தான் தனிமைப் படுத்தப்பட்டது தொடர்பில் அழத் தயாராக இருக்கிறது அது.  ‘அது… அப்படி அவனை அடித்தது.. உன்னை சந்தோசப்படுத்தியதா’ என்று அவனிடம் ஆசிரியர் திரும்பவும் கேக்கிறார், அவன் இல்லை என்று தலையசைக்கிறான். அவனது முகமும் மண்ணிறக் கண்களும் துயர் படர்ந்து சிறுத்து தெரிகின்றன. தான் ஒரு பெறுமதியற்றவன் என்கிற செய்தியை அது தருகிறது. தன் நண்பர்களால் ஒரே நாளில் தான் புறக்கணிக்கப்பட்ட வலி தெரிகிறது.

மறுநாள்: அதே வகுப்பறையில் ஜேன் கூறுகிறார் ‘நேற்று நான் நீலக் கண் உடையவர்கள் மண்ணிறக் கண்களை உடையவர்களை விடக் கெட்டிக்காரர் அதி புத்திசாலிகள் என்று கூறினேன். நான் நேற்று பொய் தான் சொன்னேன்.. உண்மையில் நீலக் கண்களை விட மண்ணிறக் கண்களை உடையவர்கள் தான் புத்திசாலிகள்’.  நீலக் கண் சிறுவர்கள் ‘அப்படி இருக்காதே’ என  மறுக்கிறார்கள். ‘ம்ஹீம் அது தான் உண்மை’ என்ற ஆசிரியை, இப்போது தன் கண்ணாடியை மறந்துவிட்டு வந்திருந்த நீலக் கண்களை உடையவனிடம் ‘உனக்கு நீலக் கண் இருப்பதாற் தான் இந்த மறதி. பார் மண்ணிறக் கண்களை உடையவர் யாரும் தங்களது கண்ணாடிகளை மறக்கவில்லை’ என்கிறார். கரும்பலகையில் வந்து பதில் எழுதச் சொல்ல முதல் நாள் துயர் படர்ந்திருந்த சிறுவன் உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்து இப்போது பதிலை தன்னம்பிக்கையாய் வந்து எழுதுகிறான்.  ஆசிரியரின் குரல் இன்னும் உறுதி பெறுகிறது ‘மண்ணிறக் கண்களை உடையவர்கள். வேகமானவர்கள். வந்து வேகமாய்ப் பதிலை எழுதிச் செல்வதிலேயே அது தெரிகிறது.’ எதிர்ப்புடன் தலையை மேசையில் சாய்ந்து வைத்திருக்கிற சிறுவனைப் பார்த்து, ‘இவனைப் பாருங்கள்… நீலநிறக் கண்களை உடைய பிள்ளைகளுக்கு ஒரு கதிரையில் எப்படி ஒழுங்காய் இருப்பது என்பதே தெரியவில்லை.. இதிலேயே தெரியவில்லையா இவர்களைப் பற்றி….’ (நீலக் கண் காரர்கள் சங்கடத்துடன் நெளிந்தவாறு கேட்டவாறு இருப்பார்கள்).  ஆசிரியர் இறுதியாய்க் கூறுவார் ‘இப்போது மண்ணிறக் கண்களை உடையவர்கள் அணிந்துள்ள கொலரை அப்படியே உங்களருகில் இருக்கிற நீலக்கண் காரருக்குப் மாட்டி விடுங்கள்’ – அந்தக் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் வந்து அதை அணிவிக்கும். 5 நிமிட மேலதிக இடைவேளை நேரமும் இவர்களுக்குக் கிடைக்கும். அத்துடன் விளையாட்டுத் திடல் உபகரணங்கள் எதையும் உபயோகிக்க நீலக் கண் காரருக்கு அனுமதியில்லை. அதே போல மண்ணிறக் கண்களை உடையவர்களுடனும் அவர்கள் விளையாட முடியாது.

ஒரு கணத்தில் அவர்களது தன்னம்பிக்கை உயர்ந்துவிட்டது. வகுப்பறை அறிவுசார் போட்டியில், முந்தைய நாள் 5 ½ மணிநேரம் எடுத்த மண்ணிறக் கண் சிறுவர்கள் இந்தப் புதிய நாளில் 2 ½ மணி நேரங்கள் எடுக்கிறார்கள்.
‘ஏன் உங்களால் நேற்று இது போல புள்ளிகளைப் பெற முடியவில்லை’ என்று ஆசிரியர் கேட்க, மாணவர்கள் பதிலளிக்கிறார்கள், ‘நேற்று நாங்கள் அந்த கொலரைப் பற்றியே யோசித்தவாறு இருந்தோம். இதில் எங்கள் மனம் ஈடுபடவில்லை. அது எம் கழுத்தைச் சுற்றிக் கொண்டு கிடந்தது.’
நேற்றைய நாள் 3 மணித்தியாலங்கள் எடுத்த நீலக் கண்களை உடையவர்களோ இன்றானால் 4 மணித்தியாலங்களும் 18 விநாடிகளும் எடுக்கிறார்கள். ஏனென்று கேட்க தாங்கள் ஒரு பிரியோசனமும் அற்றவர்களாக இன்று தங்களை உணர்ந்ததென்றும் அது தங்களைப் பாதித்ததென்றும் கூறுகிறார்கள். ஆசிரியரும் அவர்களுடன் இணைந்து கொள்கிறார் ‘இன்றைய நாளை நான் வெறுக்கிறன். ஏனென்டா எனக்கும் நீலக் கண்’ – குழந்தைகள்  அதை ஆமோதித்து உரையாட தங்களை  இணைத்துக் கொள்கிறார்கள். ‘..ஆனால் இது ஒரு சந்தோசமான நாளாய் இருக்குமென்று நான் உங்களுக்குச் சொல்லவில்லையே.. ஏனெனில் பாரபட்சம் என்கிற விடயமும் சந்தோசமான விடயமில்லை. அது ஒரு விளையாட்டுக்குரியதும் அல்ல’ – இவ்வாறு ஆசிரியை கூறத் தொடரும் உரையாடலில் அவர் அவர்களது உணர்வுகளைப் பகிரக் கேட்கிறார். கயிற்றால் கட்டப்பட்ட நாயைப் போலவும் நேற்று தங்களது நண்பர்கள் எப்படி உணர்ந்தார்களோ அது போல எனவும் ஒரு சிறைக்குள் அவர்களை அடைத்துவிட்டு திறப்பை  வெளியே எறிந்து விடுவது போல எனவும் அவர்கள் தம் மனநிலைகளைப் பகிர்கிறார்கள்.
இறுதியாய் அந்த ஆசிரியர் கேட்கிறார்:
அப்படியானால் ஒருவருடைய கண்ணின் நிறத்தை வைத்து ஒருவரை நாம் மதிப்பிடலாமா ?
சிறுவர்கள சொல்கிறார்கள்: இல்லை
அப்படியானால் ஒருவருடைய தோலின் நிறத்தை வைத்து ஒருவரை நாம் மதிப்பிடலாமா ?
இல்லை
ஒருவருடைய நிறத்தை வைத்தோ இன்ன பிற தோற்றத்தை வைத்தோ ஆட்களை நாம் மதிப்பிடலாமா ?
இல்லை…
(அந்தப் பையனின் முகமும் துயரம் மிகப் படியக் கூறுகிறது – இல்லை. இல்லை)

இவற்றை வைத்துத்தானா மனிதர்களை நல்லவர்களாக கெட்டவர்களா என மதிப்பிடுவீர்கள் ?
இல்லை
தோலின் நிறம், கண்ணின் நிறம் இவையா ஆட்களை நல்லவர்களாயும் கெட்டவர்களாயும் ஆக்குவது ?
இல்லை

அந்த கொலருகளை அகற்றக் கூறிவிட்டு, அதை என்ன செய்யப் போகிறீர்கள் என ஆசிரியர் கேட்க, அவர்கள் ஒருமித்து அதனைக் குப்பையில் எறிய விரும்புவதாய்க் கூறி, கிழி கிழி என்று கிழித்து, அவர்களது கழுத்தைக் சுற்றிக் கிடந்து, அது கடத்திய விசத்தைத் தம்மிடமிருந்து பிதுக்கி எறிய விரும்புகிறவர்கள் போல – எல்லையற்ற உற்சாகத்துடன் கிழித்தெறிகிறார்கள். பிறகு நண்பர்கள் ஓடி வந்து ஒருவரை ஒருவர் தோள்களிற் கை போட்டுக் கொண்டார்கள் இறுக்கமிழந்த அந்த மகிழ்ச்சியைத் தெரிவிக்க. முகங்களிலிருந்து துயரமும் அந்நியமும் விலகி விழுகிறது.

இப் பரிசோதனையை அந்த ஆசிரியர் செய்து 43 வருடங்கள் ஆகிவிட்டன. இன்றாயினும் இதற்கான தேவை இல்லாது போய் விட்டதா? ஜேனே 2002-இல் ஒரு பேட்டியில் கூறியது போல, ‘இதன் தேவை இன்னும் இருக்கிறது… ஏனெனில் இந்த நாட்டிலும் சரி ஏனைய உலக நாடுகளிலும் சரி நாங்கள் வெள்ளையின உயர்ச்சி மனப்பான்மை [white superiority] என்கிற மூடநம்பிக்கையை இன்னமும் பழக்கப்படுத்தி வருகிறோம்.  ‘இந்த நாட்டில் இனத்துவேசமெல்லாம் இப்ப இல்லை’ என்றே தொடர்ந்தும் சொல்லப்பட்டு வருகிறோம். ஆனால் இதைச் சொல்லுகிற அனேகமானவர்கள் வெள்ளையர்கள் தான். வெள்ளையினத்தவர்கள் நினைக்கிறார்கள் அப்படி (இனத்துவேசம்) எல்லாம் இல்லை என.  ஏனெனில் வெள்ளையர்கள் நினைக்கிறார்கள் தமக்கு நடக்காத எதுவும் (மற்றவர்களுக்கும்) நடக்காது என.

இந்தப் பரிசோதனை பலதரப்பட்ட பல்கலாச்சார வேலைத்தள பயிற்சிகளின் போது; பாலின மற்றும் இனரீதியான புரிதல்களை வழங்க செய்யப்படும் பட்டறைகளின் போது; இன்றுவரை  ஜேனாலும் பல செயற்பாட்டாளர்களாலும் முன்னெடுக்கப்படுகின்றது.  சிறுவர்கள் மட்டுமல்ல இந்தப் பரிசோதனைக்கு உள்ளாகிற பெரியவர்கள் கூட தாம் இதுகால்வரையில் கவச குண்டலங்களென அணிந்து வைத்திருந்த இனத்துவ, பால் மற்றும் வர்க்கப் பெருமைகள் ஒவ்வொன்றையும் இத்தகைய பரிசோதனை ஊடாக ஜேன் புடுங்கி எறிகையில், இறுதியிற் சிறுத்துப் போய் கூனிக் குறுகி நிற்கிறார்கள் – அப்போதில், இதுகால்வரையில், தமது உயர்வு-மனப்பாங்கினால் இவர்களால் ஒடுக்கப்பட்ட அந்த மனிதர்களைப் போல ஆகிவிடுகிறார்கள். தனித்து, நவ – நாசிகளது ஆதிக்கம் நிறைந்த ஒரு யேர்மானிய புறநகர்ப் பகுதியில் மாட்டுப்பட்டுவிட்ட மற்ற இடங்களில் மறத் தமிழ் வீரம் பற்றி பேசக் கூடிய இளைஞனது நிலை எப்படியிருக்கும்? பல் புடுங்கப்பட்ட பாம்பு; கூண்டில் அடைக்கப்பட்ட புலி – இப்படி ஒன்றாய் ஒரு கணத்துள் மா(ற்)றி விடும் நிலமையை, இக்கட்டை, இப் பரிசோதனை ஏற்படுத்துகிறது. அது அச்சங்களுள் வாழும் ஒடுக்கப்படும் மற்றவரது பாதணியில் நடக்கச் செய்கிறது..

07
வெள்ளை உயர்ச்சி மனப்பான்மையிலும் குறைவானதா என்ன நமது கண்டத்திலுள்ள பிராமண – வேளாள – ஆதிக்க மனப்பான்மைகளது அடக்குமுறைகள்?
சமீபத்தில் இணையத்தில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. கால் ஒன்றினைப் போரினில் இழந்திருந்த 29-வயது முன்னாள் போராளியும் அவரது மனைவியும் தற்கொலை செய்திருந்த செய்தி அது.  ‘ஒடுக்கும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த சங்கீதாவும் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த நிறஞ்சனும் இணைந்து வாழ்ந்ததில் சில சமூக முரண்பாடுகளும் நிலவி இருக்கிறது. வசதியான நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்த சங்கீதாவை அவரது வீட்டார் ஏற்க மறுத்துவிட்டனர்’ என்பதாய் அதிற் குறிப்பிடப் பட்டிருந்தது. பெரும் மனித அழிவில் உயிர் பிழைத்து வந்த ஒரு இளைஞன்,  பலரது தேசக் கனவுக்காக தமது உயிரைத் தரத் துணிந்த மதிப்புக்குரிய முன்னைநாள் போராளிகளே கூட போர் முடிந்த பிறகு ஆதிக்க சமூகத்தால் மதிப்பிறக்கம் செய்யப்பட்டு இப்படியாய் முடிவெடுக்கிற அளவுக்கு, நடத்தப்படுவதை இட்டு ஒரு சமூகம் எவ்வளவு வெட்கித் தலை குனிய வேண்டும்? எதிர்க்க வேண்டும்? ஆனால் போரிற் பலியான ஆயிரக்கணக்கான உயிர்களைப் போலவே, இவை பெறுமதியற்ற வெறும் சம்பவங்களாய்ப் போதலன்றி, சமூகத்தில் சலனங்கள் வேறொன்றுமில்லை என்பதை என்னவென்பது?

இன்னும் இன்னும் இந்த சமூகம் கட்டிக் காவும் இந்த இழிவை, சாதிப் பாகுபாட்டை இன்னொரு சாரார் ‘இப்ப அதெல்லாம் ஒருதரும் பாக்கிறதில்ல’ என மறுத்தும்  கூட வருகிறார்கள்.  அதைக் கூறுவது யாரெனப் பார்த்தால் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்களாயே இருக்கிறார்கள். வெள்ளை இனத்-துவேசர்களைப் போலவே ஆதிக்க சாதிகளும் சொல்லிக் கொண்டிருக்கின்றன, தம்மேல் நிகழ்த்தப்படாத ஒடுக்குமுறைகள் எதுவும் ஒடுக்குமுறைகளே இல்லை என்பதாய்.  இங்கே ஒடுக்கப்பட்டவர் மீதான ‘பாரபட்சங்களது யுத்தங்கள்’ தொடர்ந்தும்  நடந்து கொண்டே தான் இருக்கின்றன – வெளிப்படையாகவும் மறைமுகமாகவும்.

இவை எந்த முகமூடியோடு வந்தாலும், இவற்றை எதிர்த்து நிற்காது, பார்வையாளர்களாக, கண்ணுக்கு முன்னால நிகழும் இந்த அநீதிகளை கண்டும் காணாதவாறு – சந்தர்ப்பங் கிடைக்கும் போது தாமும் இன்னொருவரைச் சாதியின் பேரில் அல்லது ஏதோ ஒன்றின் பேரில் அடக்கி ஒடுக்கியவாறு – இருக்கிறபோது, ‘நாம் இனரீதியாக ஒடுக்கப் படுகிறோம்’ என்று சொல்வதற்கான தார்மீக நியாயத்தை இழந்து விடுகிறோம்.  ஏனெனில் ஏதோ காரணங்களுக்காக இன்னொருவரை நாங்கள் ஒடுக்குவது சரியெனில்,  எங்களை அவர்கள் ஒடுக்குவதற்கான காரணங்களும் அவர்களைப் பொறுத்தவரையில் மிகச் சரியே. மேலும், தொடர்ந்தும், தமக்கேற்றபடி காரணங்களைப் புனைவதில் மனிதர்கள் நாம் மகா கெட்டிக் காரர்களே!
\

மேலும் அறிய:
http://www.pbs.org/wgbh/pages/frontline/shows/divided/
http://www.penniyam.com/2012/01/blog-post_21.html

சிங்கார சீமையில.. (சினிமாப் பாடல்)

(more…)

புரட்சி நடந்துகொண்டிருந்த போது நீங்கள் எல்லாம் எங்கிருந்தீர்கள்?

பதிவு  01

லண்டன் ஒன்ராறியோவில் மாணவர்களுக்கான பத்திரிகை ஒன்றில் வெளியாகியிருந்தது கவனத்தை ஈர்த்தது. எமது காலத்தில் எதிர்கொள்ள வேண்டிய வரலாற்று கேள்வி சுழன்றடித்து அதிற் தலைப்புச் செய்திகளில் ஒன்றாய் நின்று கொண்டிருந்தது. பார்க்கிறவர்களுக்கு அமெரிக்காவில் வோல்ச்சிறீட் முற்றுகை (Occupy Wall Street) நிகழ்ந்தது தான் நிகழ்ந்தது அங்க என்ன நடந்தாலும் இங்க சுடுகிற  கனடியர்களும் முற்றுகை ரொறன்ரோ (Occupy Toronto) முற்றுகை லண்டன் என ஆரம்பித்து வீட்டார்கள் என்றே தோன்றும். குறிப்பாக லண்டனில் மாணவர்கள் வகுப்பறைகளுக்குப் போகாமல் கூடாரங்கள் அமைத்து, லண்டன் ஒன்ராறியோவிலும் முற்றுகையாளர்களுடன் முற்றுகையாளர்களாய் கலந்து, அங்கேயே காலம் தள்ளுவது குறித்து கவலை தெரிவித்திருந்தது அந்தச் செய்தி. பரீட்சைகளையும் புள்ளிகளையும் கவனங் கொள்ளாவிட்டாலும் கல்வி வியாபாரத்துக்கு வாங்குகிற உதவிக் தொகையை ஆவது மனங் கொள்ள வேண்டுமல்லவா என்பதே பொதுப்புத்தியில் இத்தகைய மாணவரது அரசுக்கு எதிரான ஈடுபாடுகள் தொடர்பாய் பதியப்படுகிறது. அது மட்டுமல்லாமல் எந்தவித நீதி நியாயங்கள் தொடர்பிலும் கதைக்க முடியாதவர்களாய் மாணவர்களும் ‘தாமுண்டு தம் படிப்புண்டு தம் கடனுண்டு’ என மந்தைகள் போலவே பின்தொடருபவர்களாயே இந்த அமைப்பினால் உற்பத்தி செய்யப்படுகிறார்கள்.  அந்த சூழலுள் அந்த மாணவர்களினது பிரதிநிதியோ தன் காரணங்களைக் கூறி தான் செவிசாய்க்க விரும்புகிற ‘அந்த’க் கேள்வியைப் பின்தொடருவதாய்க் கூறுவிடுகிறார்:
‘புரட்சி நடந்து கொண்டிருக்கிற போது
வேலையற்ற வேலை
படிப்பு முக்கியம்
அவையள் பாத்துக் கொள்ளுவினம் தானே
மற்றவர்கள் செய்யட்டும்
என்றிருக்கிறவர்களிடம் பிறகொரு தலைமுறை கேட்கும். வரலாறு கேட்கும்.
புரட்சியின்  போது நீங்க என்ன செய்திங்க என. அப்ப நாங்க சொல்ல விரும்பிறம் நாங்க இங்க – அந்த இடத்தில அத செய்தவர்களில் ஒரு பகுதியா – இருந்தம் எண்டு.’

பதிவு  02

சமூக இயக்கங்களில் பொறுப்பெடுத்தல் பொறுப்பெடுக்காமை என்கிற மனப்பாங்குகளை யோசிக்கின்ற போது ஒரு உரையாடல் ஞாபகம் வரும். இந்திய நண்பர்கள் இருவருடனான அந்த உரையாடல், ஈழ இலங்கைச் சூழல், வலைப்பதிவர்கள், வலையுலகம் இவ்வாறாய் சென்று கொண்டிருக்க – நில ஆக்கிரமிப்புகள் தொடர்பில் அந்த உரையாடல் திரும்பியது.
சூழலியல் தொடர்பான அக்கறை உள்ள ஒரு நண்பர் கூறினார் – ஒரு 20 வருடங்களுக்குள் இலங்கை போன்ற நாடுகள் நீரில் மூழ்கிப் போய்விடுகிற அபாயமிருக்கிறது என. அவர் கூறியதும், அது நீரில் மூழ்கும் மட்டும் அந்த சிறிய நாட்டுக்குள் இருக்கிற தலைவர்கள் சண்டை பிடித்தவாறே தான் சாவார்கள் என்பதாய் அந்த உரையாடல் செல்ல இருந்தது. அதற்குள் அவரை விட இளையவரான மற்ற நண்பர் முந்திக்கொண்டு  ‘சேச்சே. அப்படி நடக்காது..’ என்று மறுத்தார். அனேகமாக சூழலியல் தொடர்பான சமகால விவாதங்கள் தொடர்பில் தொடர்ச்சியான அறிதலை உடைய மற்ற நண்பரும் ‘எப்படி நடக்காம இருக்கும்.. நீங்க எத வச்சு அப்பிடிச் சொல்றிங்க’ எனக் கேட்டார். மற்ற நண்பரிடம் இதற்கென பதில்கள்–தரவுகள் இல்லை. எனினும்,  அவர் தொடர்ந்தும் அதே உறுதியுடன் நம்பாமையுடன் சொன்னார் ‘ச்சா.. அப்பிடி நடக்காது. அப்பிடி நடக்க விட மாட்டாங்க.. நான் நம்பல்ல.’

மற்றவர் மீண்டும் ‘இப்படியான விசயங்கள் விஞ்ஞானிகள் பல கூறுகளை ஆராய்ந்து தரவுகளினடிப்படையில் ஒரு வாய்ப்பாக எதிர்வு கூறியிருக்கிறவை…’ என்று விட்டு சிறு தலையசைப்புடன் நிறுத்திவிட்டார். ஏனெனில் மற்ற நண்பரது மனநிலையும் அவர் மறுத்த விதமும் கூறுவது என்னவென அவருக்கும் புரிந்திருந்தது.
நகைமுரணாக நண்பரது அந்தக் கூற்றில் இருந்த நம்பாமை இந்த உலகம் அப்படியெல்லாம் அழிந்துவிடாது என்பதான நம்பிக்கையைக் கொண்டிருந்தது.

— அத்தகைய நம்பிக்கையை அவர் கொண்டிருக்க சூழலியலை முன்னிறுத்திய வேலைத் திட்டங்கள் மற்றும் நபர்களுடனான அவரது தொடர்பு காரணமில்லை.
— அத்தகைய நம்பிக்கையை அவர் வலியுறுத்த – தாம் வாழும் பூமி தொடர்பில் எவ்வித கரிசனையுமின்றி மனிதர்களால் நடத்தப்படும் செயல்களுக்கு மாற்றான எதிர்-செயற்பாடுகளை அவதானித்தும் ஊக்குவித்தும் தொடர்ந்தும் அது தொடர்பில் தன்னை அறிவூட்டிக் கொள்ளலும் காரணமில்லை.

மாறாக, அவர் அப்படி உலகம் மனிதனின் பேராசையினால் அழிந்து போகாதிருக்க எங்கோ மூலையில் அதே மனிதர்களது தொடர் போராட்டங்கள் வழிகோலும் என்கிறதான, நம்பிக்கையோடு தான் அதை மறுத்தார்.

பதிவு  03

கடவுள் இருக்கின்றார் அவர் பார்த்துக்கொள்வார் என்பதுபோல உள்ளார்ந்த இந்த நம்பிக்கையும் செயலூக்கம் அற்றது – எனில் பயனற்றதே. ஆனால் அழிவை இட்டுச் செல்லும் கூறுகளுக்கு எதிராய் நான் துரும்பை எடுத்துப் போடாதிருப்பினும் சக மக்களில் ஒரு பகுதி தொடர்ந்தும் போராடும் வெற்றி பெறும் என்கிற நம்பிக்கை அதிலிருந்தது. தான் அந்த செயல்பாடுகளுக்கு உதவாவிடிலுங்கூட போராடும் மக்கள் அவற்றைத் தடுப்பர் என்கிற நம்பிக்கை இருந்தது; போராடும் மக்கள் குறித்த நம்பிக்கை அதிலிருந்தது. இந்த நம்பிக்கை இன்னொருவகையில் தனது குரல்வளையைப் பிரச்சினை வந்து நெரிக்கும் வரையான நடுத்தர வர்க்க மனிதரின் இயல்பாகவும் இருக்கிறது. அந்த வெற்றியில், தான் குளிர்காய்ந்து கொண்டிருக்கலாம், என்பதான சுயநலத்தின் அடிப்படையிலானது.

அது போலவே, அதிகாரத்தைக் கையில் எடுத்தவர்கள்; அதையே ஆயுதங்களாக்கி வைத்திருந்தவர்கள்; தம் செயல்களால் “எங்கள் அணுகுண்டுகளுக்கும் ஆயுதங்களுக்கும் பதில் சொல்லியே ஆக வேண்டும்” எனுகையில் எல்லாம்,  மார்ச்சிய சிந்தாந்தத்தை நம்புகிற நண்பரொருவர் – நண்பர் பலர் – அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கிறேன் “(மக்களுக்குத் தவறிழைப்பவர்கள்) வரலாற்றுக்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும்” என்பதாய்.  அவரது தொனியும், மீண்டும், மனச் சாட்சிக்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும், கடவுளுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்பது போலவே ஒலிக்கும்.
தவறிழைத்தவர்கள் எல்லாம் தண்டிக்கப்பட்டனரா. வரலாற்றிலும் சரி சராசரி வாழ்விலும் சரி…  அப்படியானால், கெட்ட குடியே கெடும் பட்ட மரமே படும் என்ற கதையெல்லாம் என்ன?

பதிவு  04

அத்தகைய நம்பிக்கையீனத்தை சற்றேனும் மறுதலிப்பவை மக்களது எழுச்சியும் அது அதிகார பீடங்களை அசைக்கின்ற அரிய நிகழ்வுகளும். அந்த வகையில்: அமெரிக்காவில் தொடரும் பொருளாதார நெருக்கடிகள், வேலையிழப்புகள், வர்க்க வேறுபாடுகள்  – நாட்டின் சனத் தொகையில் குறைந்த விகித பணக்காரர்களது  செல்வாக்கு, வங்கிகளின் ஆதிக்கம் என்பவற்றின் விளைவாகவே கடந்த செம்ரெம்பரிலேயே வோல்ச்சீறீட் முற்றுகை ஆரம்பிக்கப்பட்டிருந்தது. சுவாரசியமான வகையில் இவ் முற்றுகை இயக்கத்துக்கான அறைகூவல் கனடிய மாற்று ஊடக இயக்கமான Adbusters  இடமிருந்தே வந்திருந்தது.   Adbusters தங்களை  பூகோளம் தழுவிய வலையமைப்பாக அறிவிக்கிறார்கள். இந்த வலையமைப்பு இத் தகவல் யுகத்தின் ஒரு புதிய சமூக செயற்பாட்டியக்கத்தை வளர்த்தெடுத்துச் செல்ல விரும்புகிற கலைஞர்கள் செயற்பாட்டாளர்கள் எழுத்தாளர்கள்  …மாணவர்கள் கல்வியாளர்கள்  தொழில் முனைவர்களால் ஆனது (new social activist movement of the information age).

தனது வலைப்பதிவு ஒன்றில் அப்படியோர் அமைதி முற்றுகைக்கான அழைப்பை அது கடந்த யூலை மாதம் விடுத்திருந்தது. எகிப்தில் ரஹ்றர் சதுக்கத்தில் நடந்த முற்றுகையையும் எதிர்ப்பையும் முன்மாதிரியாய்க் கொண்டே இதுவும் முன்மொளியப்பட்டிருந்தது. இந்த முற்றுகை குறித்த ஊடகங்களால் ஏற்படுத்தப்பட்ட பிம்பமாக – விமர்சனமாக – அவர்களுக்கென்றொரு ஏலவே தயாரிக்கப்பட்ட  குறிக்கோள் இல்லை என்பதும் சொல்லப்பட்டிருந்தது. அத்துடன் தலைவரென ஒருவர் அடையாளங் காணப்படாமை குறிக்கோளற்ற வெறும் சலசலப்பு என்பது போல பிம்பப் படுத்தப்பட்டிருந்தது. ஆனால் பிரமிட் வடிவிலான அதிகாரப் பகிர்வை மறுக்கிற சமூக இயக்கமாகவே வோல் சிறீட் முற்றுகைக் காரர்கள் தங்களைத் தெளிவாக அடையாளங் காணுகிறார்கள்.  அவர்கள் தமது ருவிட்டர் சமூக வலைத்தளத்தில் கூறுவது போல இது பின்தொடர தனியே மைய்யமென ஒரு தலைவர் அற்ற (தனி ஒருவரது கணித்தலின் தவறுகள்  பெரும் தொகையினை பாதிக்காதவாறு) தலைமைப் பண்புகள் கொண்ட மக்கள் அதிகாரத்தை கொண்ட ஜனநாயகத்துக்கான இயக்கம் (#OCCUPYWALLSTREET is a leaderless people powered movement for democracy that began in America on September 17 with an encampment in the financial district of New York City. Inspired by the Egyptian Tahrir Square uprising and the Spanish acampadas, we vow to end the monied corruption of our democracy).
செப்ரெம்பர் 17 இல் தொடங்கிய இதனை [அரேபிய நாடுகளில் கடந்த பத்து அல்லது நூற்றாண்டு காலமாய் அமெரிக்க உதவியுடன் நடந்த பணக்கார மேட்டுக்குடிகளது ஆட்சீ அடக்குமுறைகளுக்கு எதிரான சமகால மக்கள் எழுச்சிகளைப் போலவே] கடந்த 30 வருடங்களாக தமது நாட்டில் ஐக்கிய அமெரிக்க உழைக்கும் மக்கள் எதிர்கொண்ட வர்க்க  பிரச்சினைகளுக்கு எதிரான முதலாவது பொது எதிர்வினையாற்றல் (first popular reaction)  என்கிறார் அமெரிக்க  அரசியல் விமர்சகர் நோம் சோமஸ்கி (Noam Chomsky).

அரேபிய நாடுகளில் பொலிஸ் வன்முறைகள் பற்றி (தன்னால் வளர்க்கப்பட்ட தலைவர்களை இன்னாள்) சர்வாதிகாரிகள் பற்றி கவலைகொண்ட அமெரிக்க அரசு  ஜனநாயகம், வோல் சிறீட் முற்றுகையாளர்களது காம்ப்-களை அகற்றிய விதமும் 200க்கும் மேற்பட்ட கைதுகளும் அமெரிக்காவின் கொள்கைகளின் (ஏனைய நாடுகளுக்கு மனித உரிமை அறவுரை வழங்கலின்) போலித்தனத்தை அறிந்தவர்களுக்கு ஆச்சரியமல்ல. அத்தகைய அதிகார நடவடிக்கைகளுள்ளும், வங்கிகள் எடுத்துக்கொண்ட மக்களது வீடுகளை ஆக்கிரமித்தல் (Occupy Homes) என்பதாய் பிற வடிவங்களில் வோல் சிறீட் முற்றுகை போராட்டம்  / எழுச்சி தொடருகிறது.

பதிவு  05

புரட்சி நடந்த போது நீங்கள் எங்கிருந்தீர்கள்?
இந்த வார்த்தைகளை நான் வெவ்வேறு சந்தர்ப்பங்களிற் கேட்டிருக்கிறேன்.
வரலாறு என்கிற மனச்சாட்சி குறித்து எல்லோரும் பயப்படுவதில்லையே. மறுபடி மறுபடி நடந்தேறும் அநீதிகளே அதையே நிரூபிக்கின்றன. அதிகாரத்தை விரும்புபவர்கள் வரலாற்றின் மறதியை நம்பி சவாரி செய்கிறார்கள். மக்களின் மறதியிலேயே, மீண்டும் மீண்டும் வரலாறு சந்தர்ப்பவாதிகளையும் சுயநலமான தலைவர்களையும் உற்பத்தி செய்வதும் சாத்தியமாகிறது. எமதும் எல்லோருடைய வரலாறும் செயல்பாட்டாளர்களையும் அவர்கள் செயற்பாடுகளில் குளிர்காய்பவர்கள் குளிர்காய்ந்தவர்கள் கதைகளையும் கொண்டுதானே நகர்வது…

கல்வி மற்றும் இதர சமூக எதிர்பார்ப்புகளை விட்டுவிட்டு அமைப்புகளுடன் தம்மை இணைத்துக் கொண்ட அந்த பழைய போராளிகள், அவர்கள் சொல்லுவார்கள் – தாங்கள் போராடிய போது, தாமுண்டு தம் படிப்புண்டு என இருந்தவர்கள் பற்றி. பின்னாளில் அவர்களே கற்று – பட்டங்கள் இதர பெற்று –  தமது சமூகப் பெறுமதிகளுடன் வந்து தமக்கு அரசியல் ஆசான்களாகியது பற்றி.

மேலும் அவர்கள் சொல்லுவார்கள்: அங்கொரு தமது நகரத்தில் நூலகம் எரிந்தபோது தாங்கள் அச் செய்தி கேட்டு ஓடிக் கொண்டிருந்தபோது கூட உடனே போய் எட்டிப் பார்க்காமல் யாரோடும் கடலை போட்டுக் கொண்டிருந்தவர்கள் – களவேலைகளில் ஈடுபடாதவர்கள் – பின்னாளில் இவை குறித்து கவிதை எழுதி அறியப்பட்டதாக. பிரமுகர்கள் ஆனதாக.  இரவல் படையில் மட்டுமல்ல மற்றவர்கள் செய்யிற புரட்சியைக் கூட தமதென்று கொண்டு பிழைத்தல் சிலரது இயல்பாயிருக்கிறது. மற்றவரது வேலைகளைத் கேட்டுத் தனதென்று எழுதி… சேர்ட் மடிப்புக் குலையாமல் நடந்து திரிந்தவர்கள் பின்னாளில் மக்களது குரல்கள் ஆனதைப் போல..

அத்தகைய பச்சோந்திகள் சொல்லப் போவதில்லை ‘குண்டு விழ விழ நல்ல பிள்ளையாய் நான் இருந்து படிச்சன்’ எண்டும் ‘கடலை போட்டன்’ எண்டும். நூலகம் எரிந்த போது எங்கிருந்தார்களோ அங்கு தான் அவர்கள் புரட்சி நடக்கிற போதும் இருப்பார்கள். மற்றவர்கள் செய்யட்டும்!

பதிவு 06

ஒரு புதிய அலையை எழுப்பும் வோல் சிறீட் முற்றுகை குறித்து (அதன் அடிப்படை நோக்கங்கள், இலக்குகள் குறித்த தெளிவின்மை குறித்து) பொதுப்புத்தியில் குழப்பங்கள் – விமர்சனங்களாகப் பரப்பப் படுகிற போதும் – சோம்ஸ்கி போன்ற அனுபவமிக்க விமர்சகர்கள் இம் முற்றுகையை ஆதரிப்பதோடு இனி அது அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டியதன் அவசியத்தை முன் வைக்கிறார்கள். சோம்ஸ்கி சுற்று வட்டாரங்களில் அரசியல் ஒருங்கிணைப்புகளுக்கான (Neighborhood Organizings) தேவையைப் பரிந்துரைத்திருக்கிறார்.

நிச்சயம் இப் போராட்டம் செல்ல வேண்டிய தொலைவு இன்னுமிருக்கிறது. ஆனால் 1960 – 1970களில் அமெரிக்காவில் அலையென எழும்பிப் பின் அடங்கிய முற்போக்குக் கருத்துக்கள், சிவில் உரிமைகள் இயக்கம், யுத்த எதிர்ப்புக் குரல், கூட்டுஒருமைப்பாடு அல்லது கூட்டுப்பொறுப்புணர்வு (solidarity) — பெருமளவில் இளம் மனங்களை சந்தையில் அறிமுகப்படுத்தப்படுகிற புதிய புதிய உற்பத்திப் பொருட்களே ஆள்கின்ற — இன்றைக்கும் சாத்தியமாவது சமத்துவமின்மைகளும் பொருளாதார சமமின்மைகளும் அவற்றை எதிர்த்து மக்களை ஒருங்கிணைக்கும் என்பதையும் அது அதிகாரங்களை அமைதியில் விடாது என்பதையுமே வெளிப்படுத்துகிறது. தினமும் தம் நிறுவனங்களது புதிய சந்தைப் பொருட்களை அறிமுகப்படுத்தி, இளைஞர்களிடம், அவர்கள் அவற்றை வைத்திருப்பதிலேயே அவர்கள் ஒவ்வொருவரதும் கவுரவம் நிர்ணயிக்கப்படுகிறது. பொருள்சார் அடிமைகளாக மனிதர்களை வைத்திருத்தலையும் தாண்டி; அக் கருத்துக்களையே பரப்பும் ஊடகங்களையும் தாண்டி, இத்தகையதொரு மக்களின் ஒருங்கிணைவு சாத்தியப்பட்டிருப்பதும், எல்லா சந்தர்ப்பங்களிலும் சமூக விடயங்கள் தொடர்பில் அக்கறையற்றவர்களாய் உறங்கிய நிலையில் மனிதர்களை வைத்திருக்க முடியாது என்பதையே இது உறுதிப்படுத்துகிறது.

இன்று தொடர்பூடகங்களைத் திறந்தால் யுத்தமும் உயிரிழப்புகளும் பொருளாதார பிரச்சினைகளுமென அவநம்பிக்கைகளே எம்மைச் சூழுகின்றன. அவற்றுடன் ‘நாம் தனித்துப் போனோம்’ என உணருகையில் எதிர்ப்பும், மக்கள் எழுச்சியும் தணிக்கைகளை மீறியும் எம்மை வந்தடைகிறது – இந்த இணைய + தகவல் யுகத்தில்.  இங்கே இந்த முதலாளித்துவ நாடுகளில் மக்களது எழுச்சிக்கான (அதிலும் ஒரு வெகுசன இயக்கத்துக்கான) வாய்ப்பிருப்பது மனித விழுமியங்களை மனங் கொண்ட இயக்கத்துக்கான வாய்ப்பையும் அது குறித்த நம்பிக்கையையும் ஏற்படுத்துவதைத் தவிர்க்க முடியவில்லை. நாங்கள் பங்குகொள்கிறோமோ இல்லையோ இவை எம் காலத்தில் இணையத்தில் மாற்று ஊடகங்களில் நேரடி ஒளிபரப்பாக எம் கண் எதிர்க்க நடந்து கொண்டிருக்கின்றன. வேக வேகமாய் ரொறன்ரோ – லண்டன் எனப் பரவியவாறு – ஒரு தகவல் புரட்சி நடந்துகொண்டிருக்கிறது; அமெரிக்க நகரங்களில் மக்கள் முற்றுகையிட்டிருந்த இடங்களிலிருந்து அவர்களை அதிகாரத்தை பிரயோகித்து  வெளியேற்றிவிட   / அகற்றிவிட முடிந்திருக்கலாம் – ஆனால் கிளரும் (எதிர்ப்பு) சிந்தனையை அத்தனை சுலபத்தில் அகற்றிவிட முடியாது (“you cannot evict an idea”). அதற்கான தீர்வுகள் தரப்படாதபோது அது வளரும் – அதிகாரங்களுக்கு எதிராக.

-|-
உதவியவை:

  • http://www.adbusters.org/
  • “Arab Spring, American Winter.” – நோம் சாம்ஸ்கியின் உரை, மார்கழி 12 2011

Credit: தாய்வீடு யனவரி 2012

“Away From Her” : சாகசக்காரிகள் பற்றியவை

நேர்ஸ்: நீங்க சந்திக்கேக்க உங்களுக்கு எத்தின வயசு?
கிறான்ற்: அவளுக்கு 18
நேர்ஸ்: கடவுளே! கலியாணங் கட்டுறதுக்கு அது செரியான சின்ன வயசெல்லோ..?
கிறான்ற்: அது என்ர ஐடியா இல்ல.
நேர்ஸ்: அப்ப அவதான் கட்ட கேட்டவா எண்டிறிங்களா. ஆ.. கேட்கவே ஆசையா இருக்கு. நானும் அவதான் கேட்டிருப்பா எண்டு நினைச்சன். எப்பிடிக் கேட்டவா?
கிறான்ற்: அவ அத முதலே திட்டமிட்டிருந்தா எண்டு சொல்ல முடியாது. நாங்க ரோபமோறியில மனிரேலிலன் போறதுக்காண்டி படகுக்கு காத்தண்டு இருந்தம். மழை தூறிக் கொண்டிருந்தது. விசரான ஒரு காலநிலை. அவள் நல்ல மூட் இல இருந்தாள் – எனக்கிருந்த விசர் மூட்டின்ர எந்த சிறு பகுதியும் அவளுக்கு வேணுமாய் இல்லை.
நேர்ஸ: ஓ.. அப்ப என்ன செய்தவ.. என்ன சொன்னவா
கிறான்ற்: ம்ம்.. அவ கேட்டா நாங்க கலியாணங்கட்டினா நல்லா இருக்குமெண்டு… நினைக்கிறியா? எண்டு..
நேர்ஸ: அதுக்கு நீங்க என்ன சொன்னிங்க
கிறான்ற்: … நான் ஓமெண்டு கத்தினன்!
(மௌனம்)
நான் எப்பவுமே அவளிட்ட இருந்து விலகி இருத்தலை விரும்பேல்ல. அவளிட்ட வாழ்வின் உயிர்ப்பிருந்தது…
***நேர்ஸ்-இற்கும் கிறான்ற்-இற்குமான உரையாடல், திரைப்படம் ‘Away from her’ [2006]

01
முதியவர்களின் காதலைப் பற்றியும் அவர்ளுக்கிடையான நெருக்கம் – பாலுணர்ச்சி என்பனவும் திரைப்படங்களது கவர்ச்சியான பேசுபொருளாக அமைந்ததில்லை.  முதியவர்களது காதற் கதை என எடுக்கப்படுகிற பல கதைகள் ஞாபகங்களூடே ஒரு பயணம் என அவர்களது இளமைக் காலத்தை நோக்கியே பின்னகர்கின்றன. அந்த வகையில் எம் மனதிலுள்ள முதியவர்கள் பழங்காலத்தை மென்றவாறு நிகழ்காலத்தில் குந்தியிருப்பவர்களாகவே பதிந்துள்ளார்கள். அதற்கு மாறாக முதியவர்களது  நிகழ்காலத்துக்குரிய காதல் பேசப் படுவதில்லை.

முதிய வயதிலும் பாலுணர்வு காதல் நெருக்கம் மனிதர்களுக்கு தேவையானது என்பதை உணராததாற் தான் பல குடும்பங்களில் ஒரு மகளின் பிள்ளையை அம்மாவும் இன்னொரு மகளின் பிள்ளைகளை தகப்பனும் பார்க்கவென இறுதிக் காலத்திலும் ஒன்றாக இருக்க விடாமற் பிரித்து பிள்ளைகளது வசதிக்கேற்ப வெவ்வேறு வீடுகளில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

கனடியத் தென்மேற்கு ஒன்ராறியோவின் கிராம பின்புலத்தில் ஒரு முழு நேர கனடிய சினிமாவில், தொடங்கி முடியும் வரை,  இரு முதியவர்களது காதலைப் பாலுணர்வை நெருக்கத்தை உறவில் இருவரிடையேயான சமமின்மைகளைப் பார்க்கக் கிடைத்தது.  2006இல் வந்த “Away from her” என்கிற அத் திரைப்படம் இக் கருப்பொருள் உட்பட பல வகைகளிற் சிறப்பு மிக்கது.  இது கனடிய எழுத்தாளர்களில் எமது செக்கோவ் என மதிக்கப்படுகிற அலைஸ் மன்றோவின் [Alice Munro] சிறுகதையான ‘”The Bear Came over the Mountain”’-இனை அடியொற்றி எடுக்கப்பட்டது. மிக நுட்பமாக மனித மனத்தின் நுணுக்கங்களை உள்ளுறங்கும் எரிமலைகளைத் தன் சொற்களால் உருவாக்கும் தேர்ந்த கதைசொல்லி அலைஸ். அவளது கதைகள் யாவும் கனடிய பின்புலத்தை அதிலும் தென்மேற்கு ஒன்ராறியோ பின்புலத்தைக் கொண்டவை. ஒன்ராறியோவின் கிராமப்புறங்களின் முகங்கள் அவளது எழுத்தெங்கும் வியாபித்திருக்கின்றன.

02.
கிறான்ற்-இன் 44 வருட வாழ்க்கைத் துணையான ஃபியோனா தன் முழு அசைவிலும் உயிர்த்துடிப்பும் நளினமும் மிகுந்தவள். படபட என பதிலுக்குப் பதில் பேசும் அவளது விளையாட்டுக் குணம் எந்த முதிர்ச்சியிலும் போய்விடவில்லை. இளமையில்‘’நான் ஒரு இடத்துக்குப் போக விரும்பி; அதற்கு நான் போக முடியாமல் போனது என்று இப் புவியில் ஓரிடமுமில்லை’’ என்றவள் அவள்; திடமான நம்பிக்கையும் சாகசங்களுமென ஈர்ப்புக்குரியவள்.
குளிர்காலத்தில் ஒவ்வொரு நாளும் கனடிய தென்மேற்கு ஒன்ராறியோவின் அந்த வெள்ளை பனி வெளிகளில் அவர்கள் இருவரும் ஸ்கீயிங் போவார்கள். பனியிற் சறுக்கியபடி உரையாடல்களற்ற நிசப்தத்தில் இயற்கையின் பேரியக்கத்தை தம்மை சூழவும் உணர்ந்தவாறு மாலை மயங்குகையில் வீடு செல்வார்கள். ஹாஸ்ய உணர்வு மிக்க ஒரு கதைகாரியான ஃபியோனா ஏதாவது கதைசொல்லிச் சிரித்தவாறு, நிதானமானவன் என்கிற போதும் அவளுக்குச் சளைக்காத கிறான்ற்-இன் பதிலுடன் அவர்களது தோழமையுணர்வும் காதலும் கூடவே காலவெளியில் உள்ளுறங்கும் சிறு சிறு பனிப்போர்களும் எல்லையற்ற கனடிய நிலப்பரப்பின் மாறும் பருவங்கள் போல; வாழ்வின் அநித்ய வடிவங்கள் போல பின்னப்பட்டிருக்க வீ டு செல்வார்கள்.

03
ஐஸ்லாந்துப் பின்புலத்தைச் சேர்ந்த ஃபியோனாவை, எல்லையேயற்ற கனடிய நிலப்பரப்பை ஒத்த அவளது சாகச மனத்தின் ஞாபகங்களது செழுமையை, மிக மிக மெதுவாக ஞாபக மறதி நோயான அல்சைமர் [Alzheimer] வந்து அரிக்கவாரம்பிக்கிறது. அயலட்ட நண்பர்களை அழைத்து விருந்து கொடுக்கும் போது, கதைத்தவாறு வைனினை நண்பரது கோப்பையினுள் ஊற்ற எழுந்தவள் தான் எதற்காக எழுந்தேன் என்பது தெரியாமல், நின்று விடுகிறாள். ஒரு விருந்தின் பின்னர் சாப்பாட்டு இயத்துக்களை கணவர் கழுவிக் கொடுக்க கீழே றாக்கினுள் அடுக்க வேண்டியவள் ஒன்றைக் கொண்டு போய் குளிர்சாதனப் பெட்டியினுள் வைத்து விடுகிறாள். தன் துணைப் பெண்ணின் இந்த மாற்றங்கள் ஒவ்வொன்றையும் உள்ளார்ந்த வலியுடன் அவதானிக்கும் கிரான்ற் யன்னலடியில் யோசனையுடன் பாத்திருக்க அவள் தனியே பனியில் ஸ்கீ (Skiing) சறுக்கப் போகிறாள். மனம் ஒன்று விலகித் தனித்துப்  போதலை அது முன்னறிவிக்கிறது. தனியே போகிறவள் இடையில், தனது இல்லத்தை, தன் துணையை, நடுவே பனி வெளியில் நிற்கும் தன்னையும் மறந்து போகிறாள் – திசையற்று. மூளை திரும்ப வேண்டிய வீட்டின் வழிகளை மறந்து போயின் அவள்  எங்கு திரும்ப முடியும்?

03
அனேகமாக திரைப்படங்களுக்கான விமர்சனமாய் அவற்றின் கதையைக் கூறுவதில் ஈடுபாடு இருப்பதில்லை. எனினும் சாகசங்களும் பேரழகுகளும் நிறைந்த தான் தொலைந்து போய் விட்ட பிறகு, உயிர் இருக்கும் போதே ஆன்மா பிரிந்து விட்டவளாக, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஆளரவமற்ற பனிவெளியில், ‘half of the time wonder around i cant remember what it is’ என்கிற வசனத்துடன் நிற்கும் ஒரு முதிய பெண் சில காட்சிகளை மீள மீள எழுதத் தூண்டுகிறாள். “அரைவாசி நேரம் நான் எதையோ தேடித் திரியிறன். என்ன தேடுறன் எண்டு எனக்கே தெரியேல்ல.“ இவ்வாறு சொல்லும் குரல்களைத் திரைக்கு வெளியிலும் நாம் அறிவோமல்லவா?

எம்மை மறந்து போதல் எத்தகு அந்தரமான ஒரு கணம் – அதிலும் அதனை எங்களால் எமது முழு நனவுமனநிலையுடன் உணர முடியாது என்கிற போது. அல்லது அந்தக் கணம் யாரை அந்தரத்தில் விட்டுச் செல்லும், எங்களையா அல்லது எம்மைச் சார்ந்தவர்களையா. தேர்ந்த நடிகையாய் ஜீலியினது [Julie Christie] முகம் தன் மனம் தன்னுடலைக் கைவிடுதலை அதன் அந்தரிப்பை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.

மேலும், ஃபியோனாவைப் பார்க்கையில் அவள் தன்னை மறந்து போதல் என்பதைத் தனியே ஒரு நோயின் பிறழ்வாகப் பார்க்க முடியவில்லை. அலைஸ் மன்றோ என்கிற பெண், நோயை பெண் வாழ்வினது குறியீடாய் ஆக்கியிருக்கிறார். பெண்களது கவிதைகளில் ஒன்றில் வரும் –
“அவளை
அந்த சாகசக்காரியை
மறந்து விடுதல் சாத்தியமாகிறது.“

குடும்ப வட்டங்களுள் அதன் சுவருகளுள் எத்தனை சாகசக்காரிகள் கதைகாரிகள் தம் கதைகளற்றுப் போனார்கள்; சாகசமிழந்து சுருங்கினார்கள். அந்த சாகசக்காரிகளை — அந்த அவர்களது சாகசங்களுக்காகவே காதல் வசப்பட்டவர்களால் – எப்படி மறக்க முடிகிறது.  வாழ்வின் ஒரு பக்கம் எப்படி மறந்து போகிறது. மறைந்து போகிறது?
எனது பார்வையில், இத் திரைப்படம் பெண்களின் அக வெளியின் ஸ்தம்பிதத்தை அடையாளமிழப்பை வெளிப்படுத்துகிறது என்றே படுகிறது. திருமணத்தின் பின் தம் அத்தனை ஜாலங்களும் தொலைய சமையல் கலயங்களுடனும் பிள்ளை வளர்ப்புடனும் அமுங்கிப் போகும் முகங்கள்; சுயமதிப்பை குறைக்கும் விதமாய் நடத்தப்படுவதை ஏற்றுக் கொள்ளாவிடிலும், அதன் வெறுப்பை தம்முள் புதைத்து விட்டு, புன்னகையுடன் வளைய வரும் முகங்கள் – எம் அனுபவங்களிலிருந்து எம் சுற்றுவட்டங்களிலிருந்து ஞாபகமூட்டப்படுகிறார்கள்.

இங்கு புற உலகில் – பெண்களின் உலகம் பற்றிய கேலிகளிற்கோ ஒரு அளவில்லை. அவை சந்தடி சாக்கில் கற்களைப் போல எறியப் படுகின்றன. பல வேளைகளில் பெண்களும் அதை நம்பியவாறு நகர்கிறார்கள்.  ‘’இந்தசமையலுக்குத் தான் இவ்வளவு கதையோ… ஆண்கள் ஒரு மணிநேரத்தில் செய்திருவார்கள்…’ விடுமுறை நாட்களில் முழு நாளும் வீட்டில் இருந்து, வெளியே இரண்டு கட்டை நடக்கத் தானும் போகாமல் ஒரு அமுக்கத்தில் இருந்த நாட்களில் தான் உணர முடிந்தது உள்ளிருப்பவர்களின் உலகை. என்றைக்காவது ஒரு நாள் சமைக்க நேருகிறவர்களுக்கும் என்றென்றைக்கும் ஒரே விதமாய்ச் சமைத்துக் கொண்டே இருக்க வேண்டியிருப்பவர்களுக்குமான வேறுபாட்டினை. பிரசித்தமான ஆண் சமையல்காரர்களுக்குப் போலன்றி சம்பளமற்ற வேலையின் களைப்பூட்டலை. ஒரே மாதிரியான செயல்களைத் திருப்பி திருப்பி செய்து கொண்டிருப்பதில் தன்னார வாரம் ஒரு பயித்திய நிலை வந்து விடுகிறது. ஆனால் தமக்கென வகுக்கப்பட்ட அந்தக் கடமைகளைச் சென்ற காலங்களிலும் அந்த முதிய பெண்கள் எவ்வளவு அழகாகச் செய்தார்கள். உணவுகளை அலங்கரித்தல் – விதவிதமான கேக்குகள் – வீட்டுத் தயாரிப்புகள் – அழகிய லேஸ் பின்னல்களில் திரைச்சீலைகள்…… கைபட்ட இடமெல்லாம் தம் பிறழ்வுக்கு எதிரான முயற்சிகளுடன் – களையற்ற தம் வாழ்வுக்கு தம் சூழலுக்கு உயிர் கொடுக்க எத்தனித்தவாறு… அவர்கள் எம் சூழலில் வளைய வரக் காணலாம்.

முரண்பாடுகளாலும் அதனுடன் எழும் நிரப்பவியலாத வெற்றிடங்களாலும் முறிவுகளாலும் நிரம்பும் ஒரு காதலில், அதன் குடும்பத்தில், தொடர்ந்துமிருக்க ஒருவளைத் தூண்டுவது எது? காதலென்று தொடங்கி பின் துரோகங்களையும் சமமின்மைகளையும் உதாசீனத்தையும் தந்து, சுயமதிப்பையும் எடுத்துச் சென்றாலுமே கூட, அதிற் தங்கிப் போகச் செய்வது ஒன்றில்ப் பழகிப் போய்விடுகிற மனித இயல்பா அல்லது ஒன்றின்மீதான தீராக் காதலா? அனேகமான போது, வேற வழியற்ற சமூக இயல்பாகவே அது அமைந்திருக்கிற போதும், பல வருடங்கள் இணைந்திருத்தலில் ஏற்ற தாழ்வுகளற்ற பயணமும் சாத்தியமற்றதே.

கிறான்ற் ஞாபக மறதி நோயான அல்சைமரினால் பாதிக்கப்படுவர்களுக்கான சிகிச்சை இல்லத்தில் ஃபியானாவை விட வேண்டி நேரிடுவதிலிருந்தே தொடங்குகின்றது கதை. ஆனால் அது அந் நோய் தவிர்ந்த அரங்குகளுக்கும் எம்மைப் பார்வையாளர் ஆக்குகிறது.

04.
44 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த ஒரு தம்பதி நோயினால் பிரிக்கப்படும் சமகாலத்தைப் பற்றிய திரைப்படம் அத்தனை ஆண்டுகள் இணைந்து வாழ்தலின் குறைநிறைகள் தொடர்பான உள்ளார்ந்த விமர்சனத்தைக் கொண்டிருத்தலும் இயல்பானதே. ஆனால் அதைப் புரிந்துகொண்டு அவர்களது முதிர்ச்சிக்குரிய மரியாதையுடன் இப் படத்தை இயக்கியிருக்கிற பெண் ஒரு 28 வயது கனடிய நடிகை என்பது மிகவும் ஆச்சரியத்தைத் தந்தது. இளம் பெண்களைப் பொறுத்தவரையில் அவர்களது வாழ்வு முதிய காலங்களைப் பற்றிய கனவுகளையோ கற்பனைகளையோ கொண்டதல்ல. முதியவர்களது காதல் உணர்வுகள் அவர்களது சுவாரசியத்துக்குரிய பேசுபொருள்களுமல்ல. பொதுவாகவே இளைஞர்களை மையப்படுத்திய வெளிப்பாடுகளே கிளாமரானவையாக இருக்கின்றன.

இதன் இயக்குநரான Sarah Polley-யோ இந்தப் படத்தைப் பார்த்தவர்களது தனது வயது குறித்த ஆச்சரியமும் இந்த கருவை தான் தேர்ந்தெடுத்ததற்கான காரணம் அறிய விரும்புதலும் பற்றி கூறுகையில் தான் இதை ‘வித்தியாசமான’ கதைக்களன் தேடி எடுத்ததாய் இல்லை என்கிறார். இந்த கருப்பொருளை எடுக்கிறபோது தனது வயது குறித்த பிரக்ஞையோ மனத்தடையோ தனக்கிருந்திருக்கவில்லை என்கிறார். இப்படியான ஆளுமைகள் அறிமுகமாகிறபோது, தன்வயப்பட்டவராய் அல்லாத எந்த வயதினரும் தம்முடன் உலகைப் பகிரும் சகலர் குறித்தும் அறியவும் அவர்களது வாழ்வை மரியாதை செய்யவும் தயாராய் இருப்பார்கள் என்பதையே நம்ப முடிகிறது. பல்வித முரண்பாடுகளை மறைமுகமாகப் பேசுகின்ற இந்தத் திரைப்படம்  அற்புதமான காதற் கதை. நான் அது குறித்த எனது மனப்பதிவை நோயினால் நினைவிழந்து போய்க்கொணடிருக்கும் முதிய பெண்ணான அந்த சாகசக்காரி மீதான முச்சாய்வுடன் எழுதுகிறேன். ஆனால் அவள் மீதான ஆழ்ந்த காதலுடன் ‘’நான் 44 ஆண்டுகளில் ஒருமுறை தானும் அவளைப் பிரிந்து இருந்ததில்லை. [I was never away from her] இப்போது முதல் முப்பது நாட்கள் அங்கு வர வேண்டாம் என்கிறார்கள்’’ என்கிற ஒரு கிழவனின் குரலும், சிகிச்சைக்கு விடப்பட்ட இடத்தில் அவரையும் அவள் மறந்து போய் விட, தொடர்ந்தும் அவர் விருந்தினர் நேரங்களில் மருத்துவமனையே கிடையாய்க் கிடந்து அவளது கவனத்தை வேண்டி வேண்டித் திரும்புதலும் இடையில் எந்த வார்த்தைகளுக்கும் அவசியமற்று மனதைத் தொடுகின்றன.

கணவராய் நடித்திருக்கிற Gordon Pinsent உட்பட கனடிய நடிகர்களும் julie christie போன்ற ஒப்பீடற்ற திறமைமிகு பிரித்தானிய நடிகையும் ஒளிப்பதிவும் குறிப்பிட வேண்டியவை. மேலும் கனடிய திரைப்பட சூழலில் தவிர்க்கவியலாதவரான ஆர்மினிய பின்புலத்தைச் சேர்ந்த Atom Egoyanஆல் தயாரிக்கப்பட்டிருக்கிறது படம்.

05.
இங்கே சாகசம் என்பது சேர்க்கஸ் வித்தைகளல்ல. அது ஒருவளு(னு)க்கேயுரிய தனித்துவங்கள். மேடையில் நடனம் ஆடிய பெண்ணில் காதல் வசப்பட்டு திருமணம் செய்து கொண்டு அவளை ஒரு நடன ஆசிரியையாய்த் தன்னும் இருக்க விடாதவர்கள்; வீணை வாசிக்கத் தெரிந்த பெண் வேண்டும் என தேடித் தேடிக் கட்டிவிட்டு வீணையைத் தொட விடாதவர்கள்.. இப்படி சிலவற்றை இங்கே உதாரணமாய்ப் போடலாம். ஒருவள்(ன்) தன் சாகசங்களிலிருந்து விலக்கப்படுகிற போது அங்கே தானே நிகழ்ந்து விடுகிறது சுயமிழத்தல். ஒரு சிறு குருவி போல உயிர்ப்பே உருவாக ஃபியானோ சிறப்பான இல்வாழ்வை வாழ்கிற போதும் அவளது வாழ்விலும் அவள் அதை விட்டு ஓட விரும்புவதற்கான காரணங்களும் உண்டுதான். அவளது கணவன் ஒரு கல்லூரி பேராசிரியராய் இருந்தவர். அவர் அவளை விட்டு ஓடிவிடவில்லை என்றாலும் அவளது வாழ்வில் விதவிதமான சப்பாத்துக்களுடன் கணவருடம் சம்பந்தப்படும் அந்தப் பெண்களின் இருப்பு உணரப் பட்டிருக்கிறது. சிகிச்சை இல்லத்தை நோக்கிய பிரயாணத்தில் ஃபியானோ இப்படியாய்ப் பொருள்பட சொல்லுவாள் ‘எல்லா ஞாபகங்களையும் மறக்க முடிவதில்லை பார். எத்தனையோ விடயங்களை நான் மறந்திருந்தாலும் நான் மறக்கோணும் என நினைக்கிறவற்றை மறக்க முடியவில்லைப் பார். அந்த விதவிதமான சப்பாத்துகளுடன் பெண் கால்கள்!!!’ – இப் படத்தின் கதையின் அதி சிறப்பு ஒரு நோயூடாக எமக்குள் எழுப்பப் படும் கேள்விகள் தான். கடந்த காலங்களில் மிகவும் அருமையான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிற போதும் நல்ல உறவுகளில் இருந்திருக்கிற போதும் மனதை பாதிப்பதும் துளைப்பதும் அதனைப் பாதித்த துர் அனுபவங்களே. அவற்றிலிருந்து தப்பி ஓடி விடத் தான் அந்தக் கணம் அழுத்துகிறது. ஆனால தப்பிப் போகும் வாய்ப்பு புத்தனுக்கு மட்டுமே உரியது. ஒருவர் அல்லது ஒன்றின் மீதான பற்று மற்றும் சமூக நியமங்களும் தப்பிச் செல்லும் வாய்ப்புகளை விழுங்குகின்றன. அந்த வாய்ப்புகளிற்கு அவசியமற்ற கணம் நாம் எம்மை இழந்து போதலெனும் பிறழ்வுற்ற பைத்தியநிலையே. இந்தப் புத்தகத்தில் கிறான்ற் மனைவிக்கு அவளுக்குப் பிடித்தமான நூல்களை வாசித்துக் காட்டுவார். அதில் ஃபியோனாவின் பின்புலமான ஐஸ்லாந்துப் பிண்னணியில் [“Letters From Iceland” by; W.H. Auden என்கிற] ஒரு நூலிலிருந்து இந்த மேற்கோளும் வரும்: Those in love cannot make up their minds to go or stay. Artist and doctor return most often. Only the mad will never, never come back. (காதலில் இருப்பவர்களால் அதில் இருப்பதா அல்லது கைவிட்டுப் போவதா என்பதில் முடிவை எடுக்க முடியாது. கலைஞர்களும் வைத்தியர்களும் அனேகமாக திரும்பி வருவார்கள். பைத்தியக்காரர்கள் மட்டும் ஒருபோதும் திரும்பி வர மாட்டார்கள்).
0

==பிரதீபா கனகா – தில்லைநாதன்

குறிப்புகள்:
1. எடுத்தாளப்பட்ட கவிதை வரிகள்: தான்யா
2. திரைப்பட மேற்கோள்கள், தகவல்கள்: http://www.imdb.com/title/tt0491747/

தாய்வீடு டிசம்பர் பதிப்புக்காக / thaiveedu.com — for december 2011 issue

மொழிசார் உலகு: கூட்டு வேலைகளது தேவை

சிறு வரைபு:

வடலி பதிப்பகத்தின் நூல்களது வெளியீடு ஸ்காபரோ சிவிக் சென்ரறில் கடந்த மாதம் நடைபெற்றிருந்தது. தனியே ஒரு பதிப்பகத்தின் தேவை என்பதாயன்றி பொது நோக்கில் எம் மத்தியில் ஒவ்வொரு துறையிலும் தேவையாய் இருக்கின்ற இணைந்து செய்யும் – குறிப்பாய் மொழி மற்றும் வரலாறு தொடர்பான – சமூக முன்னேற்றத்துக்குக் கட்டாயமானதான – சில  வேலைத் திட்டங்கள் குறித்து எழுதத் தோன்றியது.
பெயரை ஈட்டித் தராத அத்தகு சமூக வேலைகளில் பங்குகொள்ள  – முக்கியமாக அந்த வேலை பெயரை ஈட்டித் தருமா என்பதையறியவியலாத அதன் ஆரம்ப கட்டங்களில் போய், அதற்குத் தம் நேரத்தைப்  பங்குபோட – பெரியளவில் யாரும் முன்வருவதில்லை.  அத்தகைய முகமறியாத வேலைகளுக்கென சமூகத்தில் ஒரு பகுதி எப்போதும் தயாராகவே இருக்கிறது. அது மிகச் சிறிய இலக்கங்களிலேயே தம் பணியைத் தொடங்குகிறது. அப் பணிகளே சமூகத்தை வளப்படுத்தும் தூண்களாக நிற்கின்றன.

இணையம் – தொழில்நுட்பம்:

இன்று இணையத்தில் நாங்கள் அனுபவிக்கின்ற வசதிகள் — யூனிக்கோட் எழுத்து, பாமினி உள்ளிட்ட எழுத்துருக்கள் — தன்னார்வர்களது உழைப்பிலேயே தோற்றம் பெற்றவை.

இணையத்தில் தமிழ்-ஆங்கில, ஆங்கில-தமிழ் அகராதிகள், விக்கிபீடியா,   முழுமையாய்த் தமிழிலேயே கணிணி மற்றும் இணையப் பாவனை, எண்ணிம நூலகத் திட்டங்கள் (Digital library)…. மேலும், தாம் இணையத்தை உபயோகித்த போது (இணைய நூலகத் திட்டங்கள் போன்ற) அங்கிருந்த அனேக வளங்கள் தமிழக உள்ளடக்கத்தை கொண்டிருக்கின்றன என ஈழ நூல்கள் மற்றும் ஈழம் தொடர்பான தகவல்களை (விக்கிபீடியா உள்ளிட்ட தளங்கள் ஊடாக) இணையத்தில் இணைக்கத் தொடங்கியவர்கள்…. தேடும் ஒரு தலைமுறைக்காய் இணையத்தில் ஈழ நூல்களும் இருக்க வேண்டும் என்கிற ஒரு எண்ணம் ஈழ நூல்களை ஒரு இடத்தில் இணைக்கும் நூலகத் திட்டமாக உருவாக, அத்தகைய நூல்களைப் படித்தல் அத் திட்டத்தை பயன்படுத்துதல் உட்பட இணையத்தில் செய்து தரப்பட்டிருக்கிற பல சேவைகளது பயனாளர்களே இன்று எம்மில் பலரும்.

நவீன யுகத்தில் ஒரு மொழி நின்றுபிடிப்பதற்கு அது தன்னை ஒவ்வொரு புதிய தொழில்நுட்பத்திற்கும் ஏற்ப தகவமைத்துக் கொள்வதே வழி செய்கிறது.  மேற்குறிப்பிட்டவர்களது வேலைகளது முக்கியம் என்னவெனில் அவை ஒரு மொழியின் உயிர் பிழைத்தலை உறுதி செய்கின்றன.  மொழி வாழ்கிறது என்கிறபோது  – தனியே தமிழ் என்பதல்ல – அம் மொழியில் பதியப்பட்ட வரலாறுகளுமே அதனோடு சேர்ந்து வாழ்கின்றன.

வரலாறும் ஆவணப்படுத்தல்களும்:

புலம்பெயர் நாடுகளில் 1980களின் ஆரம்பத்திலிருந்து ஈழத் தமிழர்களது பல்வேறு பங்களிப்புகள் அவர் பெயர்ந்த நாடுகளெங்கும் உள்ளன.  பொதுநீரோட்டத்திற் பரவலாக அறிமுகமான ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியல் கருத்துக்களுக்கு மாற்றானவை முதலான சிறு சமூக இயக்க செயற்பாடுகள் – இலக்கியப் பதிவுகள் அனுபங்கள் என அவற்றின் பயணப் பரப்பு பெரிது. இன்று அவை அந்தந்த இடங்களுடனும் சிறு குழுக்களுடனும் தனிநபர்களுடனும் சுருங்கி மற்றவர்கள் வாசிக்கப் பெறக் கூடிய வடிவிலற்று பதிவற்றப் போய்விட்டன.  தமிழிணையத்தில்  அதன் ஆரம்ப காலத்திலிருந்து விவாதிக்கப் பட்டவையினதும் நிலமை கிணற்றில் போட்ட கல்லினதே. விளைவாக: ஏலவே  விவாதித்த விடயங்களை விளக்கங்களையே மீள மீள கூற வேண்டி வருகிறது.  எண்ணிம நூல்த்  திட்டங்களது அவசியம் போலவே பதிப்புத்துறையினது அவசியத்தையும் அவை வலியுறுத்துகின்றன.

இதுவரை இணையத்தில் எழுதியவை கிணற்றில் ஆற்றில் அல்ல கடலில் போட்ட கல்லென காணாது போக அவை எரிக்கப்படாமலும் அழிந்துபோகாமலும் இணைய சேகரத்தில் இருக்கின்றன என்பது தவிர அதன் அத்தகைய வடிவம் இன்னமும் – இணையத்தில் அன்றிப் புத்தகத்தில் விடயங்களைப் படிக்கும் – மரபான வாசகர்களை அடைவதற்கான தடையாகவே இருக்கின்றது.

வடலி போன்ற பதிப்பகங்ககளது தேவையும் வளர்ச்சியும் இதன் போக்கிலேயே முக்கியமானது. ஏலவே இருக்கிற பதிப்பகங்களது போதாமைகள்  எனப் பாக்கிற போது முக்கியமாக அவற்றின் பதிப்புகள் எல்லோரையும் கிடைக்கக் கூடிய மாதிரியான சந்தைப்படுத்தல் அல்லது விநியோகம்  குறித்ததான முதன்மையான சிக்கல்கள் இணைய புத்தகக் கடை போன்றன ஊடாக வடலியாற் தீர்க்கப்பட்டிருக்கிறது. இத்தகைய பதிப்பு வசதிகள் ஊடாக அவை பதியப்படுவதூடாகவும் பேசப்படுவதூடாகவுமே அதை முன்வைத்த உரையாடல்களுக்குள் நாங்கள் செல்ல முடியும்

இன்றைய எம் காலத்தில் – 25 வருடங்களுக்கு மேலாய் இழப்புகளையே கண்டுவந்த ஒரு சமூகத்தின் மரணத்தினுள் இறுதிவரை வாழ்ந்த மனிதர்களின் பல்வேறு குரல்கள் (பக்கங்கள்) புத்தகங்களாய்ப் பதியப்பட வேண்டும்.  அதே போல: 1980 களில் வந்த சஞ்சிகைகளில் விவாதிக்கப்பட்ட போராட்ட அரசியலாகட்டும் இணையத்தின் தணிக்கையற்ற கட்டமைப்பில் பகிரப்பட்டவை ஆகட்டும் அவையும் பரந்த வாசிப்புக்கென பதிப்பிக்கப்பட வேண்டியவையே. பதிவுகள் இருக்கிற சந்தர்ப்பங்களிலேயே, `பெரும்பான்மையின் அரசியல் மனநிலைக்குள் எமது குரல் சிறியதாய் இருந்த போதும், 1980களின் இறுதியில் எமது போராட்டம் தொடர்பான இத்தகைய விவாதங்கள், கேள்விகள் எம்மால் முன்வைக்கப்பட்டன` – என்று எமக்கு முந்தைய தலைமுறையில் ஒரு சாரார் சொல்கிறபோது இன்றைய மற்றும் இனி வரும் தலைமுறை அதை `அது நம்பும்படியாய் இல்லை` என இலகுவாகக் கடந்து செல்ல முடியாது போகும். இவற்றின் பயன் வரலாற்றை அறிதல் தான்.   வரலாற்றின் எல்லாப் பக்கங்களும் பின்வருபவர்களுக்குக் கடத்தப்பட வேண்டும். அப்போதுதான் நேர்மையான கடந்தகாலம் குறித்த பரிசீலனைகள் – சுய விமர்சனங்கள் சாத்தியம்.

கல்வி வட்டங்கள்:

ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் தமிழியலை ஒரு துறையாகக் கொணரும் நீண்ட காலத் திட்டத்துக்கான அறிமுகத்தின் பொருட்டு – வருடாவருடம் ரொறன்ரோப் பல்கலைக்கழகத்தினால் தமிழியல் ம◌ாநாடு என ஒன்று நடப்பதுண்டு. கல்வியாளர்கள் தமதான துறைகளில் தமிழியலுடன் தொடர்புபட்ட ஆய்வுகளை வாசிக்கும் அந்த மாநாட்டின் தாபகரான — சில வருடங்களுக்கு முன்இலங்கை திரும்பிச் சென்று இப்போது மட்டக்களப்பில் சமூக வேலைகள் செய்துகொண்டிருக்கிற – தர்சன் அம்பலவாணர்  போன்றவர்களுடன் பல மாணவர்கள் தன்னார்வர்களுடன் இணைந்து ஒருங்கிணைக்கும் ஒரு நிகழ்விது.

கல்வியாளர்கள் இடம்பெறினும் முற்றிலும்  தன்னார்வர்களாலேயே ஒருங்கிணைக்கப்படும் இந்த மாநாட்டிற்குச் செல்வது தொடர்பில் – தொழிற்சாலைத் தொழிலாளர்கள் அல்லாத  – முழுநேர வேலைகளிலிருக்கிற சமூகத்தில் ‘மாற்றம்’ குறித்துப் பேசுகிற பலர் அதிக கட்டணம் என முறையிடுவதைக் கேட்டிருக்கிறேன். விமர்சனங்களையும் பரிந்துரைகளையும் ஏற்றுக் கொள்ளவியலாத எந்த சூழலும் ஆரோக்கியமானதல்லத் தான்.  ஆகவே அந்த முறையீட்டின் நியாயத் தன்மை அல்ல கேள்விக்குரியது – மாறாக – இத்தகைய சந்தர்ப்பங்களில் – அவர்களை ஒத்த இடத்தில் இருக்கிற அவர்களை விட (அதிக) குடும்பப் பொறுப்புக்களை உடைய நபர்கள் இவ்வாறான தன்னார்வ முயற்சிகளில் பங்கெடுத்துக் கொள்வதும் கட்டணம் செலுத்தி வருவதும் அதன் பிறகே தமது விமர்சனங்களை முன் வைப்பதும் அவை கவனத்துக்கு எடுக்கப்படாத போது விலகுவதையும் வழக்கமாய்க் கொண்டுள்ளார்கள் என்பதும், கட்டணம் குறித்து கூறுகிற  முன்னையவர்கள் தாம் இத்தகைய நிகழ்வுகளால் பயன்பெறுபவர்களாக இருக்கிற போது பின்னையவர்களது ‘நியாயமான’ விமர்சனங்களைக் கூட நியாயமற்றது எனப் போடு போடக் கூடியவர்கள் என்பதும் தான் கேள்விக்குரியது.

மாற்றத்தை விரும்புபவர்கள் அதற்கான விதைகளை போடுவதுடன் யாராலோ ஏலவே விதைக்கப்பட்டவைக்கும் நீர்ப்பாய்ச்சி அவற்றை துளிர்விடச் செய்பவர்களாவார்கள்.  உங்களுக்கு சூழலியற் பிரச்சினைகள் குறித்த அக்கறைகள் உண்டெனில் உங்கள் வாழ் நாளில் குறைந்த பட்சம் ஒரு மரத்தைத் தானும் நீருற்றி வளர்க்க தெரிய வேண்டும்.    (வளர்க்கும்) சிறு குழுக்களானவற்றுடன் எமக்கு வெவ்வேறு முரண்பாடுகள் – விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் இவற்றின் இருப்பு ம் வளர்ச்சியும் முக்கியமானது.
ஒருமித்த கூட்டு  வேலைகள் அவற்றுக்கான உற்சாகப்படுத்தல்கள்  பங்களித்தல்கள் உரிய விமர்சனங்கள் இவையன்றி அவை வளரவும்  முடியாது.

மாற்றத்துக்குப் பங்களித்தல்:

ஒரு எழுத்தாளருடான எம் மத்தியில் பதிப்பகங்களது தேவையை முன்னிறுத்திய ஒரு உரையாடலின் போது அவர் என்னிடம் கூறினார் “நான் ஒரு காலமும் காசு குடுத்து புத்தகம் போட்டதில்ல.”
இன்றைய நிலையில் புலம்பெயர்ந்து வசிக்கிற அறியப்படுகிற எழுத்தாளர்கள் வெளிநாட்டில் வசிக்கிற ஒரு  பெண் அல்லது ஆண் – கவிஞர் – புலம்பெயர்ந்தவர் – இந்த அடையாளங்களுடன் தனது புத்தகத்தை இலவசமாகத் தமிழகத்தில் பதிப்பித்துக் கொள்ள முடியும். ஏனெனில் அந்த அடையாளங்களை விற்பதற்கான சந்தை அங்குண்டு. மறுவழத்தில், ஈழத்தில் இருந்து எழுதுகிற அல்லது எழுதாது போன அதே தலைமுறையைச் சேர்ந்த வெளித் தெரியாத குரல்கள் குறித்து அவர்களுக்கும் சரி புலம்பெயர் ஈழத் தமிழர்களுக்கும் சரி தேடலும்  அக்கறையும் இல்லை என்கிற போது – எப்பிடி அதை வளமான சூழலாய் எடுத்துக் கொள்ள முடியும்?
எமதான அடையாளம் என்பதும் சுயமரியாதை என்பதும் எல்லா சந்தர்ப்பங்களிலும்  தனி ஒருவருடையது மட்டுமல்ல. ஆகையால் தான் சில எமது எழுத்தாளர்களுக்கு தமிழகத்தில் புத்தகச் சந்தையில் நிறைய பெறுமதி இருந்தாலுமே கூட –  அப் புத்தகச் சந்தைகள், பதிப்பகங்கள்  முன்னிறுத்தாத படைப்பாளிகளது வருகையை ஊக்குவிக்கவும் – பதிப்பகங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
வெளியில் மரம் நடுதல்; பாரபட்சங்களுக்கு எதிர்ப்பு; விலை கொடுத்து புத்தகத்தை வாங்குதல் – இணைந்து கொள்ளுதல் –  கட்டணம் கொடுத்து  ஒரு நிகழ்வுக்குச் செல்லல்; கூட்டு வேலைளூடாயான மாாற்றத்துக்கான முதல் பங்களிப்புகள் – வளர்ச்சிப் படிகள் இவ்வாறானவையே.

பெயரற்ற சமூக ஆர்வலர்கள்

உண்மை எதுவாயினும், கூட்டுழைப்புக்குத் தயாராய் இல்லாத தன்முனைப்பான பலரை நாம் அன்றாடம் காண முடியும். இந்த நாட்டில் (பிற கனடிய மாநிலங்கள் பலவற்றிற் கூட குறைவாய் இருக்கிற) அடிப்படைச் சம்பள உயர்வு ரொறன்றோவில் சிறு குழுக்கள் இணைந்து பெற்றுத் தந்த வெற்றியே (குறிப்பாக தொழிலாளர் நடவடிக்கை நிலையம் என ரொறன்ரோவில் இன்று இயங்குகிற அமைப்பினால் 5 வருடங்களிற்கு முன் தேர்தலை முன்வைத்து அரசியல்வாதிகள்-வாக்காளர்கள் என்ற தொடர் பிரச்சார பரப்புரைகளும் [$10 Minimum Wage Campaign] அடித்தள வேலைகளுமும் அதற்கு பெரும் பங்கு வகித்தன. பிற இனத்தவருடன் அத்தகைய வேலைகளில் இணைந்திருந்த எமதினத்தைச் சேர்ந்த பாலின வேறுபாடற்ற பல பெயரற்ற தொழிலாளர்கள் நினைவில் வருகிறார்கள்). அவர்களது உழைப்பில் விளைந்த பிரதிபலனை வேலையிலிருக்கும் அனைவரும் அனுபவிப்பார்கள். மாற்றத்துக்காக உழைப்பவர்கள் தம் இறுதி நாட்கள் வரையும் கூட தன்னார்வத் தொண்டர்களாக இருக்க, முகாமைத்துவ மனங்கள் அதில் இலாபமீட்டலை அனுபவிப்பவராகவும் அரசியல்வாதிகளாகவும் கல்வியாளர்களாகவும் – இவர்களது உழைப்பை உறிஞ்சியவாறும் தம் ஆய்வுகளுக்காகத் திருடியவாறும் – தன்வய வெற்றிகளை பெற்றவாறு இவர்களைக் கடந்து சென்றிருக்க முடியும்.

கவனித்தால்த் தெரியும் – எப்போதும் அர்ப்பணிப்புணர்வுடன், ஊதியமற்ற பங்களிப்புகளை வழங்கி – மாற்றங்களை உருவாக்குபவர்களாய் பெயரற்ற யாரும் இருப்பார்கள்; [ஏனெனில்] அம் மாற்றத்தில் பங்கெடுக்காமலே, அது – பின்னர் – தமக்குப் பயனளிக்கிற சமயத்தில் வந்து இணைந்து கொள்வது என்பது சமூக ஆர்வலர்களுடைய இயல்பல்ல.

சமூக ரீதியான பிரக்ஞையுடன் அதற்கான பங்காளர்களாகவும் வாழ விரும்புகிறவர்களைக் கவர்வது இச் சின்னஞ்சிறு கூட்டு வேலைகளால் உருவாக்க முடிகின்ற மாற்றங்களே. சமூக ரீதியான பொறுப்புகளை எடுத்துக் கொள்கிற ஒவ்வொருவரும் பதிலாக நல்லதொரு விளைச்சலுக்காய்த் தயார்ப்படுத்த தமது வாழ்நிலத்தை உழுகிறார்கள். ஒவ்வொரு தனிநபரும் தலா ஒருவருக்குத் தாம் கற்றதை பகிர்தல் என்கிறதான (each one teach one ) சமூகச்  சமநிலையை வேண்டிய கோசங்களே எமது தலைமுறையினது ஆன்மாவாக இருக்கிறது. இருக்க வேண்டும்.

|

எடுத்தாளப்பட்ட தளங்கள்:
நூலகம் திட்டம்: http://www.noolaham.net/
எண்ணிம நூலகம்: http://www.noolaham.org
விக்கிபீடியா அகரமுதலி: http://ta.wiktionary.org/
வடலி பதிப்பகம்:  http://vadaly.com/ http://vadaly.com/shop/
ரொறன்ரோ தமிழியல் மாநாடு: http://tamilstudiesconference.ca/
தொழிலாளர் நடவடிக்கை நிலையம்: http://workersactioncentre.org/
————————————————–
தாய்வீடு: நவம்பர் 2011

“நாட்டின் படுக்கையறைகளுக்குள் அரசுக்கு ஒரு இடமுமில்லை’’

(more…)