நீத்தார் பாடல் நூல் வெளியீடு – பேச்சு ஒளிப்பதிவு

தொகுப்பு: கௌசலா

பேச்சாளர்கள்:

குமரன் https://www.youtube.com/watch?v=I0IMFVdGmDs&list=UU9skOgKdc5cC-3khDrLuLFg

மதி கந்தசாமி https://www.youtube.com/watch?v=LOlAjR0oqio

யோகன் கார்த்திகேசு https://www.youtube.com/watch?v=8xrdbDymrz0

 

Advertisements

இசை, மந்திரம் மற்றும் விடுதலை

: மாயா ஆஞ்ஜலா என்கிற கதைசொல்லி :

மாயா ஆஞ்ஜலோவின் கவிதைகளில் பதின்மம் முழுவதுக்குமான தோழமை இருந்தது.  பூர்வீகக் கிராமங்களில் தலை ‘உணாவி’க் கதை சொன்ன தாயன்னைகளின் வாசம் பாதுகாப்பாய், கதகதப்பாய், அதில், ஆழக் கமழ்ந்திருந்தது.  கண்முன்னிருந்த, உலகம் கொண்டாடியவற்றுடன் முரண்பாடுகொள்கிற – அஃதால் அந்நியப்படுகிற மனித மனங்களிற்கான தன்னம்பிக்கையும் ஆறுதலும் அங்கிருந்தன.

இன்று Hallmark வாழ்த்தட்டைகள் தாங்கிவருகின்றன மாயா ஆஞ்ஜலோவின் பிரபல மேற்கோள்களை.  அதிகமாக விற்பனையாகும் (best sellers) பல நூல்களின் ஆசிரியர்; தனது சுயவரலாற்று நூல்களுக்காய்ப் பரவலாய் அறியப்பட்டவர்.  இளைஞர்களின் மனதுக்குவப்பான, 1996 இல் கொல்லப்பட்ட, றாப் பாடகன் ரூபாக் (Tupac) சிறையில் இருந்தபோது வாசித்தவர்களில் முதல், பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரான ஓப்றா வின்ஃபிறீ (Oprah Winfrey) வரை இவரைத் தம் வழிகாட்டியாக ஆகர்ஷத்துக்குரியவராகக் கூறியுள்ளார்கள்.  1993 இல் கிளிண்டனின் பதவியேற்பு விழாவில் வாசித்த  கவிதை இவரது உச்ச புகழுக்கு காரணமானது என்றும், மேலும், கவிஞர் றொபேர்ட் ஃபுறோஸ்ற் (1874-1963) இற்குப் பிறகு இப் ‘பெருமை’யைப் பெற்றவர் மாயா ஆஞ்ஜலாவே என்றும் குறிப்பிடுகிறார்கள்.
மாயாவைப் பற்றிப் பேசுகிறபோது, இவை மேலதிகமான செய்திகள் மட்டுமே.  வியாபாரரீதியாக வெற்றி பெற்றவர் என்பதோ, பிரபலமானவர் என்பதோ அவரது படைப்பின் பாதிப்பின் காரணங்களாவதில்லை.  அவர் பற்றி எழக்கூடிய விமர்சனமும் அதுவல்ல.  முற்றாய் முதலாளித்துவம் எடுத்துக்கொண்ட புறச் சூழலில், தங்களை நம்பவும் நம்பிக்கையுடன் உலகை எதிர்கொள்ளவும் சில பிரதிகளின் இருப்பு முக்கியமாகிறது; அத்தகு பிரதிகளின் இடத்தை மாயாவின் படைப்புகளும் எடுத்துக் கொள்கின்றன.  எளிய நடைதான் ஆனால் ‘அப்படித் தெரியவேண்டுமென்பதற்கான நான் கடுமையாய் உழைக்கிறேன்’ என அவரே குறிப்பிட்ட அந்த நடை ஒரு அமைதியான, தன்னை வந்தடைந்த வருத்தத்தைப் போக்கும் உறவைப்போல இயல்பு கொண்டிருக்கிறது.
இவை தவிர்த்துப் பார்த்தால், முரண்பாடுகளிற்கு அப்பாற்படாத எல்லா பிரபலங்களையும் போலவே, சகிக்க இயலாத பல குறைபாட்டம்சங்களை மா.ஆஞ்ஜலோவிடமும் காணலாம்.  அதனால், மேலும், இங்கே, மாயாவைப் பற்றி தொடர எண்ணுகிறபோது படைப்புகளைப் பற்றி மட்டும் பேசுவதே தகும்.  இவரது அமெரிக்க அரசாங்கம் சார் தேசியவாதக் கருத்துக்கள் அரசியல்ரீதியாக பிரச்சினைக்குரிய ”அப்பாவித்தன”மானவை; ஆத்திரத்தை வரவழைப்பவை – அவற்றை இவரிடமிருந்து விலத்திப் பார்த்தலே சரியானது.  அல்லாதுவிடில், பிரமிளை ரசிப்பவர்களுக்கு,
‘ஆபிரிக்காவின்
ஹெபிராயிட்ஸில்
கையிலே ஆயுதம்
எடுத்து வெள்ளைக்
காலனி அரசை
எதிர்த்த கறுப்பன்
விடுதலைப் புலிகளின்
ஆதர்சமான ஆள்
ஆமில்கார் கப்ரால்’
(கவிதை: கவுன்டர் கல்ச்சர் லிமிட்டெட்)
என்று பிரமிள் உணர்ச்சிவசப்பட்டு நிற்கிற இடங்கள் துருத்துவதுபோல மாயாவும் துருத்துவார்.  இவர் கிளிண்டனின் வேண்டுகோளிற்கிணங்க – வாசித்த – On the pulse of Morning -இற்குப் பிறகான கிளிண்டனின் மொனிக்கா விவகாரம் போன்ற சர்ச்சைகள் பற்றிக் கேட்கப்பட்டபோது, ‘நான் பார்த்தவரையில் மிக நல்ல ஆள், எனக்கு அவனைப் பிடிக்கும். தனது தவறுக்காக மிகவும் சங்கடப்படுபவன்’ என -பொதுத்தளத்தில் பொதுமக்களிற்குச் சற்றும் அவசியப்படாத கிளின்டன் பற்றிய ‘நல்’ அபிப்பிராயங்களைக் குறிப்பிட்டார்.  இப்படியான சந்தர்ப்பங்களில், விமர்சகர்களால் ‘தேசத்தினதும் கிளிண்டனினதும் நவீன கால அம்மா’ (a modern day mammy for the Clintons, and for the nation) எனக் கடுமையாகக் குற்றஞ்சாட்டப்பட்டார்.  புஷ்ஷைப் பற்றி (ஆரம்பத்தில்) கேட்கப்பட்டபோதுகூட, ”அவரைப்பற்றி இப்போது அவ்வளவிற்கு (கிளிண்டனைத் தெரிந்தளவுக்கு?!) – எனக்குத் தெரியவில்லை.  ஆனால் அவர் எனது ஜனாதிபதி, நான் அவருக்கு வாக்களித்தேனோ இல்லையோ, அவர்தான் அமெரிக்க ஜனாதிபதி. ஆகவே அவர் எனது ஜனாதிபதி.  எனக்கு உயர் நம்பிக்கைகள் இருக்கின்றன” என்றதும், சகிக்க இயலாத தேசியவாதியாக, இவரை அடையாளங் காட்டுகின்றன.
அவை கடந்து மாயாவை நெருங்கினால், மால்க்கம் எக்ஸ் திரைப்படத்தின் (Malcolm X, 1992) இறுதிக்  கட்டத்தில், சுடப்பட்டுக் கொல்லப்படுகிற அவனைப் பற்றிச் சொல்லத் தொடங்குகிற பின்னணிக் குரல், ”உங்களுக்குச் சகோதரன் மால்க்கம் எக்ஸ்சைத் தெரியுமா, அவனை நீங்கள் தொட்டிருக்கிறீர்கள? அவன் எப்படிப்பட்டவன் என்பதை அறிந்திருக்கிறீர்களா? அவன் தீயவன் எனில் அவன் யாருக்கு, என்ன தீங்கிழைத்திருக்கக் கூடும் என்று கூறுவீரா” என எழுகிறது.  வரலாற்றின் அத்தகு துண்டுகளிலிருந்து – இன்று பெரும் தலைவர்களாகச் சுவர்ப் படங்களாகச் சிரிக்கிற மனிதர்களோடு இணைந்து செயற்பட்ட  மாயாவின் வாழ்க்கைப் பங்களிப்பின் முக்கியத்துவத்தை புரிந்துக் கொள்ளலாம்.

”எழுத்தின் ரகசியம்: வாசித்தல், உரத்து வாசித்தல்.  தனிமையில் உங்கள் அறையிலிருந்து உங்களது மொழி உங்கள் வாயிலும் காதிலும் எப்படி ஒலிக்கிறதென்பதை நீங்கள் கேட்கவேண்டும்.  கேட்டுப் பின் அதை வெளியிடுங்கள், ஏனெனில், பிரத்தியேகமாக, கவிதை, மனிதக் குரலுக்காக எழுதப்பட்ட இசை”

“‘ஸ்தூலமான கவிதையால் வசீகரிக்கப்பட்டிருக்கிற பல கவிஞர்களை நான் அறிவேன்.  அது எப்படியென்றால் அந்தக் கவிஞர்கள் முதலில் – இதயமென்று சொல்லி சொற்களை போடுகிறார்கள்.  பின், அதைச் சூழவும் ஒரு இதய வடிவத்தைப் போடுகிறார்கள், பிறகு அதுதான் கவிதை என்கிறார்கள்!  ம்ஹீம். இல்லை. அது கவிதை இல்லை.  சொற்களை மட்டும் கொண்டு அர்த்தத்தை உருவாக்க முடியவில்லை என்றால், வெறும் சொற்களைக் கடதாசியில் ஒழுங்குபடுத்துவது மட்டும் மந்திரத்தை உருவாக்காது.”

இங்கே, அவர் சொல்வதுபோல அவரது கவிதைகள் அதிகம் உரத்துப் படிக்கத் தோன்றுபவையே.  அப்படிப் படிக்கிறபோது ஒரு பாட்டாக தன்னுணர்தலின் உச்சமாக அவை எழுச்சி பெறுவதை உணரலாம்.  அதோடில்லாமல் வாசிக்கிற ஒரு கவிதை பல கவிதைகளிற்கான திறப்பாக அமையும்.  அல்லது, பதிலாய்ப் பல நூறு கவிதைகள் எழுதுவதற்குப் பதில், அந்தக் கவிதைகளின் உள்ளடக்கத்தை முற்றாய் எம்மைச் சுவீகரிக்க விட்டு, அதை எழுதியவர் உணர்ந்ததை உணர்த்தத் தலைப்படும் – தான் உணர்ந்த வித்தையின் இரகசியத்தை படிப்பவரிடம் ஏற்படுத்த வல்லவர் மாயா.

இவர் கவிதையை செவிக்குரிய அல்லது ஒலி (குரல்) சார்ந்தது என எண்ணுகிறார்.  உள்ளொடுங்கிய, தன்னுள் அனேக தட்டுக்கள் நிறைந்த, பல்வாசிப்புகளை தரக்கூடிய கவிதைகளிற்கெதிரான கருதுபாடு இது.
மாயாவிடமிருந்தோ பிற எழுத்தாளர்களிடமிருந்தோ அறிவுரைகளையோ ‘எது கவிதை’ என்கிற வரையறுப்புகளையோ வேண்டிக்கொண்டு கவிதை படைப்பதில் நம்பிக்கையில்லை.  கல்விக்கூடங்களில் எழுத்துப் பயிற்சி போன்ற பாடங்களை எடுத்து எழுதப் பழகுவதுபோல பாசாங்குத்தன்மையுடையன இவ் அறிவுரைகள், மற்றும் பின்தொடருதல்கள்.

ஜெயகாந்தனுக்கு ஞானபீட விருது கிடைத்தது தொடர்பான தனது மகிழ்ச்சித் தெருவிப்பில் வண்ணநிலவன் ஜெயகாந்தனது கதைகளில் அதிகமாய் உள்ள ‘மனித சம்பாஷணைகள்’ குறித்துச் சிலாகித்து, சமகாலத்துப் படைப்பாளிகளிடம் தொடர்-மனித சம்பாஷணைகளுடன் கதைகள் எழுதச் சொன்னால் அவர்களால் முடியுமா?  என்று ‘சவாலாக’ எழுதியிருந்தார்.  இதை ஒத்ததே மா.ஆ. வின் கவிதை பற்றிய கூற்றும்.  இலக்கியம் காலத்துக் காலம் மக்களின் உளவியலை/உள்நிலையைப் பிரதிபலிப்பதாய் மாறுவதே அதனது இயல்பு ஆகும்.  இதில் செவிக்கான இலக்கியம் போய், அறிவிற்கான தனிவாசிப்பிற்கான ஒன்றாக அது எப்போதோ மாறிவிட்டது.  ஒரு பிரதி ‘உரத்துப் படித்தலிற்கும்’ ‘ஓசை நயத்திற்கும்’ என்பது மரபான, ‘பழையன குறித்த புளகாங்கிதத்தில்’ இருத்தலே ஆகும்.  தனது கவிதைகளில் ஒன்றில், ‘Nostalgia is not my forté’ என்ற மா.ஆஞ்ஜலோவும் இத்தகைய பகர்வுகளில் அதையே செய்கிறார்.  சமகாலத்தை தங்களது [சென்ற] காலத்தைப் பிரதிபலிக்கக் கேட்பதே சர்வாதிக்காரத்தன்மையை உடையது; அர்த்தமற்றது.  ஆனால், ஏதோ ஒரு வகையில் ‘பழைய’ எழுத்தாளர்கள் ‘புதியவர்களிடம்’ அதையே கேட்க ஆரம்பிக்கிறார்கள்; மாறாக, அவர்களிடம் ‘தன்னுள் ஒடுங்கிய’ ‘சம்பாஷணைகள் அற்ற’ ஒரு புனைவொன்றை உருவாக்குமாறு கேட்கப்படின், அது அவர்களால் முடியாது போயின், அதை அவர்கள் குறித்த எதிர்மறையான/திறமையின்மையின் அடையாளமாக ஒரு குறைபாடாகப் பிரகடனப்படுத்திவிட முடியாது.  அந்த வகையில் நம் காலத்தில் வண்ணநிலவனுக்குரிய இடம்போல, ஜெயகாந்தனுக்குரிய இடம்போலயே மாயாவிற்கென்றிருக்கிற இடத்தையும் பார்க்கவேண்டும்.  அவரது படைப்பின் இடம், பத்திரிகைகளின் மரபுக் கவிஞர்கள்போல ‘நிலா பலா கலா’ என அடுக்குமொழியாக அடுக்கப்படின், அதற்குப் பெறுமதி இல்லை.  இணையத்தில் அடுக்குமொழி, எதுகைமோனைகளில் எழுதப்படும் ஏராளமான ஆங்கிலக் கவிதைகள் போலவே அவையும் இருக்கும்.  ஆனால் நாற்றுநடும் பெண்களின் நாட்டுப்புறப் பாடல்கள்போல, கிராமத்துக் கிழவிகளிடமிருந்து வசையாக ஒப்பாரியாக – செயற்கையான பிரயத்தனங்கள் அற்று இயல்பெனவே வந்து விழும் சொற்கள் போன்றவை இவருடையன, அதிலும் ஒடுக்கப்பட்ட சீற்றம் தன்னுள் அமிழ்ந்த ஒரு இனத்தின் பெண்ணொருத்தியிடமிருந்து வருவது. அதில், சொற்கள், கவிதைக்கான செயற்கையான எத்தனங்கள், தயார்நிலைகள் எதுவுமற்று, விழுவதே பேரழகு.  அவரே கூறியதுபோல சொற்களால்தான் மந்திரத்தை உண்டுபண்ணுகிறார், அது சொற்களைக் கையாளத் தெரிந்ததால்தான் சாத்தியப் படுகிறது.  இதில், நவீன/மரபுக் கவிஞர் என்கிற வரையறையில்லை, யாரால் ‘மந்திரத்தை’ உருவாக்க முடிகிறதென்பதே பிரதானம்.

தன் முன் மக்கள் கூடியிருக்க, அரங்குகளில், மாயா ஆஞ்சலோ தனது க(வி)தைகளை பாடுவார்.  அங்கிள் விலீ (Wille) பற்றிய கவிதையை அவர் பாடப் பார்த்தபோது மலைப்பாகிவிட்டது.  தனது பரம்பரைக்குரிய உயரத்தில், அவரது நிமிர்ந்த உடல் முழுதும், கைகளின் பரப்பெங்கிலும் ஒரு மந்திரவாதியின் அசைவு; வாசகர்கள், மந்திரத்தின் புதிருள் அமிழ்ந்துகொண்டிருக்கும்/கிளர்ச்சியுண்டாகியிருக்கும், குழந்தைகள்.  சொல்லிப் சொல்லிப் பழகிப்போய், அர்த்தமற்றுத் தேய்ந்த இச் சொற்களூடே, தடித்த கன கம்பீரமான அவரது குரல், பார்வையாளர்களைத் தன்னுள் அசைவற்று வைத்திருக்கிறது. ஏனென்றால், ஒவ்வொரு சொல்லுமே உணர்ந்து உணர்ந்து அதற்குரிய தகுதியுடன் சொல்லப்படுகின்றது; முயற்சித்துப் பார்த்தும் அவரைப் போல சொற்களை உச்சரிக்க முடியவில்லை.

இதுவரையிலும் அடக்கி ஒடுக்கப்பட்ட உணர்ச்சிகளின் ஒலிப்பு இந்த மனுஷி.  அற்புதமான கதைசொல்லி, நடிகை, ஆவணப்பட இயக்குநர் எனப் பல வடிவங்களில், தாம் அழகுணர்ச்சியுடனும், கருணையுடனும் தொடுகிற எத் துறையையும் கையகப்படுத்திற வெகுசில ஆளுமைகளில் ஒருவளாகவே மாயா தன்னை வெளிப்படுத்தியுள்ளார்.

மாயாவின் கவிதைகளில், ‘நாம் சேருமிடம் – ஒரு ஜோடிப் பாடல்’ (Where We Belong, A duet), ‘பொய்’ – இவை காதல் உறவுகளைப் பாடின என்றால், பதின்மங்களில் ‘வியித்திரமான பெண்’ (Phenomenal woman) ஒரு தன்னம்பிக்கைப் பிரதி (மாயா ஆஞ்ஜலோவே அந்த அடைமொழியால்தான் அழைக்கப்படுகிறார்).

‘நான் இன்னும் எழுகிறேன்’ (Still I rise)-ஐ பற்பல தடவைகள் உரத்து வாசிக்கையில்,

‘உங்கள் சேட்டில்
ஒட்டியிருந்த தூசியைப்போல்
என்னைத் தட்டிவிடுங்கள்
போய் விடுகிறேன்.

மாணிக்கங்களை இழந்து போகிறேன்
வளநதிகளை விட்டுச் செல்கிறேன்
அது என்வரையில்தான்
உங்களுக்கு நான்,
சனக் கும்பலில் ஒரு நொடிக்குள்
உங்களைக் கடந்துபோய்விட்ட
ஒரு கால் அல்லது ஒரு கை,
ஒரு பிடரி அல்லது முதுகு,
முகமற்ற ஒரு நிழல்’
(ஒரு பிரியாவிடை,
சண்முகம் சிவலிங்கம், நீர்வளையங்கள், 1988)

‘உங்களின் வரையறைகளின்
சாளரத்துக்குப் பின்னால்
நீங்கள் என்னைத் தள்ள முடியாது.
இதுவரை காலமும்,
நிரந்தரமாக்கப்பட்ட சகதிக்குள் கிடந்து
வெளியே எடுத்து வரப்பட்ட
ஒரு சிறிய கல்லைப் போன்று
நான்
என்னைக் கண்டெடுத்துள்ளேன்

உங்கள் எல்லோரினதும்
நாகரிகம் வாய்ந்த கனவுகளின் மீது
ஒரு அழுக்குக் குவியலாய்
பளிச்சிடும் உங்கள் சப்பாத்துகளை
அசுத்தம் செய்கிறேன்

(அவமானப்படுத்தப்பட்டவள்,
சிவரமணி, செல்வி/சிவரமணி கவிதைகள், 1990)

என்பன போன்ற வரிகளை அது ஒத்தொலித்திருக்க உணரலாம்.  மேற்குறிப்பிட்ட பிரதிகள் தவற விட்டிருக்கக்கூடிய நம்பிக்கைகளையெல்லாம் உறிஞ்சி இதில் தன்னை முன்வைத்திருந்தார் மாயா.
இசைபோல வசீகர மந்திரம்போல வாசித்ததுண்டு, ‘நான் இன்னும் எழுகிறேன்‘ கவிதை தருகிற,

You may shoot me with your words,
You may cut me with your eyes,
You may kill me with your hatefulness,
But still, like air, I’ll rise.
உன்னுடைய சொற்களால் எனை நீ சுடலாம்
உனனுடைய கண்களால் எனை நீ வெட்டலாம்
உன் வெறுப்புமிகுதன்மையால் எனை நீ கொல்லலாம்
எனினுங் கூட, காற்றைப் போல, நான் எழுவேன்

என்பதான வரிகளை, அவற்றின் எழுச்சிக்காக.  ஆனால், அத்தனை அவையினரையும் கட்டிப்போடும் விதமாய், இயல்பான பெரிய சிரிப்பில், உரத்துப் பாடுவதில், அவரது சொற்கள் பிறிதொரு வடிவம் கொள்கின்றன; தன்னுடைய வரலாற்றைத் தன்னுடைய மனிதர்களது கதைகளூடாக விடாது சொல்வதாகின்றன.  மாயாவின் படைப்புகளில்த் தன் வரலாறு என்பது, தன்னூடாக தன் இனத்தைப் பற்றிய தன் மனிதர்களைப் பற்றிய பதிவுகளாகவே ஒலிக்கின்றது.
இங்கே ‘நான்’ என்பது நான் அல்ல.  ஆகவே அது ‘என்னுடைய’ புகழைப் பாடுதல் அல்ல.  நாம் என்பது எனது இனத்தைப் பற்றிய வீண் பெருமை அல்ல.  அது அடக்கப்பட்டதற்கெதிரான திமிறல், எதிர்த்தல், சுய-நசிவின்மை, தன்-மிளிர்வு.  எல்லோரதும் தனித்துவத்தையும் ஒத்துக்கொள்வதாலேயே மிக அதிர்வை உண்டாக்குகின்றன.
1928இல் பிறந்து 1930 களில், இனவாதத்திற்குப் பேர்போன, அடிமைமுறையைக் கொண்டிருந்த தெற்குப்புற அமெரிக்காவில் வளர்ந்த ஒரு எழுச்சிகரமான தனிநபர் ஆளுமை இவர்.  உண்மையாக இருப்பவரது முகம்; தன் வரலாற்றை அறிந்த/மதிக்கிற, தன்மீது ஏவப்பட்ட அடக்குமுறைமைகள் தன்னை முற்றாய் அழிப்பதை சற்றுமும் அனுமதிக்காத ஒரு ஆன்மாவின் பயணம்.  எம் ‘கீழைத்தேய’ங்களில் கிராமத்துப் பொம்பிளைகளிடமிருக்கிற கதைசொல்லலைக் கைக்கொண்டவர்.  அத்தகைய எளிமையானதும் ஆழமானதுமான அவரது கவிதைகளில் இரு நீள் கவிதைகள் ஒவ்வொரு பதின்மக்காரிகளிற்கும், அடக்கப்படுபவர்களுக்கும் தாரக மந்திரமாகக் கூடியவை! பல தடவைகள் பல மொழிகளிலும் இம் மாதிரிக் குரல் கேட்டிருந்தாலும், எப்போதும் சலிப்பூட்டாதவை:
(1) வியித்திரமான பெண்
(2) நான் இன்னும் எழுகிறேன்.
பிரத்தியேகமாக இந்த இரு பிரதிகளும், ”இந்த உலகத்தில் நீ என்ன அநியாயமும் செய்யலாம்.  கொலை, கொள்ளை, சுரண்டல், அதிகாரம், துஸ்பிரயோகம், அடக்குமுறை, என்னவும்!  ஆனால் என்னை, எனது ஆன்மாவை, உனக்கெதிரான அதனுடைய ஓயாத எதிர்ப்பை, உன்னால் ஒருபோதும் கொல்ல முடியாது.  அதை நெருங்கவோ துவம்சிக்கவோ முடியாது.  அது எப்போதைக்குமாய் எனக்குள் வேரூன்றி, நீ அடக்க அடக்க ஒடுக்க ஒடுக்கத் துளிர்விட்டுக் கொண்டே இருக்கும்” என்கிற செய்தியைத் தருவனவாகின்றன.  அதனால், இவை முடிவான மொழிபெயர்ப்புகள் அல்ல.  சொற்களால் நடத்தப்படுகின்ற மந்திரத்தை மீளநடத்தச் சொற்கள் மட்டுமல்ல மந்திரமும் தெரியவேண்டும்.  மைக்கல் பிரான்ரி (Michael Franti) என்ற மாற்றிசைப் பாடகன் தருகிற பாடல்கள்போல, என்.டி.ராஜ்குமாரின் கவிதைகள்போல உடம்பு முழுதும் பரவுகிற உணர்வெழுச்சி மீள இடம்பெறவேண்டும்.  ஒரு ஆளுமையைக் கொல்லாமல், சற்றேனும், அவரை ஒலிக்க விட வேண்டும்.  அப்படியொரு முயற்சியே இம் மொழிபெயர்ப்புகள்.  நிகழ்த்தியோள(ன)◌ான மந்திரவாதி காட்சிகளை விட்டுச் செல்ல, ஒரு மந்திரத்தை விளங்கிக்கொண்டதன்படிக்கு விபரித்தல் மொழிபெயர்ப்பாகிறது.  அவள்(ன்) மாயத் துணியை விசுக்குகையில் பறந்து செல்கிற புறாக்கள் போல, இக் கவிதைகளிலிருந்து, ‘நினைவுகள் கிடக்கிற வெகுகாலத்திற்கு முந்தைய அறைகள்’ ‘கணவனின் குரல் தொண்டையில் இறுகும் ஒரு முஷ்டியாக ஆகும்,’  ‘இன்று நாளைக்கான அழிவையும், இடது வலது செய்கிற தவற்றை அறியாததுமான காலத்தில்’, ‘சீராட்டும் கறுப்பிற்குள் ஓடிவரும்’, ‘தன் ஆட்களை நினைத்து உரத்துச் சிரிக்கிற’, ‘முதுமையில் ஆடுநாற்காலியை வேண்ட மறுக்கிற’, ‘கூடாமல் உணர்கிற ஒரு நல்ல பெண்’ (எதிர்கொள்கிற) ‘பொய்கள்’, (அவளது) புகழோ பெண்ணோ இல்லாத அங்கிள் விலீ, இவையை/இவர்களை, மீண்டும் ஒருமுறை விடுவித்து, வேறொரு மொழிப் புலத்திற் பறக்கச் செய்விக்கும் முயற்சி.
மாயாவின் தேசியவாதக் கருத்துக்கள், தனது தேசத்தின் தலைவர்களிடம் தன் நம்பிக்கைகளை ஒப்படைத்தல், இன்றைய ‘மக்களது’ பேராசைதான் சமகாலத்தில் அழிவுகளிற்கான மகிழ்வின்மைக்கான பெருங் காரணமெனச் சொல்கிற தட்டைத்தனம் போன்றன அவரது சிந்தனைப்போக்கு வரம்புக்குட்பட்டது என்பதை உணர்த்துகின்றன.  அவரைக் குறுக்குவதோடு, போதாமையைச் சுட்டுகின்றன.  மாறாக, அவரது கவிதைகளோ, அத்தகைய கட்டுக்கள் ஏதுமற்று விடுதலையைப் பாடுகின்றன.   மொழியை ஆற்றுவோளாக, மாயா, தன் ஆறடி உயரத்தில், அரங்க மையத்தில், நிகரற்ற நிமிர்வுடன், தன் வரலாற்றைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்; அக் குரலிற்கு மட்டுமே செவிசாய்க்கிறது மனம்.

– பிரதீபா தில்லைநாதன்

published in attem-magazine – September 2005

மாயா ஆஞ்ஜலோ கவிதைகள்.

| Maya Angelou Poems translated from English to Tamil

“கூண்டுப் பறவை ஏன் பாடுகின்றது என்பதை அறிவேன்” (I Know Why the Caged Bird Sings) நூலைத் திறந்த tumblr_lvco104omb1qldalco1_500கணம்முதலாய் நான் மாயாவோடு மிக ஆழமாகப் பிணைக்கப்பட்டதை உணர்ந்தேன்.  அதன் ஒவ்வொரு பக்கங்களிலும் அவரது வாழ்க்கையானது என் வாழ்வின் கண்ணாடிபோல இருந்தது.  அவரும், அவரது ஆரம்ப வயதுகளில், அமெரிக்கத்  தெற்குப்புறத்தில், அவரது பாட்டியால் வளர்க்கப்பட்டவர்; மிகச் சிறிய வயதில் பாலியல் வன்முறைக்கு உள்ளானவர்; அத்துடன், அவரும், என்னைப் போலவே, ..தேவாலயத்துள் முன் இருக்கைகளில் உட்கார்ந்திருக்கும் பெண்மணிகளிடமிருந்து பெரும் உற்சாகக் கூச்சல்களையும் ஆமென்-களையும் கொண்டுவரும் பகுதிகளை உருப்போட்டபடி வளர்ந்தவர்.  இந் நூலின் பக்கங்களில் மாயாவைச் சந்திப்பதானது, முழுதாக என்னையே சந்திப்பது போலிருந்தது.  முதன்முறையாக ஒரு கறுத்த இளம் பெண்ணாய் என் வாழ்வனுபவம் ஒப்புக் கொள்ளப் பட்டிருந்தது.

-மாயா ஆஞ்ஜலோ பற்றி ஓப்றா வின்ஃபிறீ (2000, தொலைக்காட்சி நேர்காணலில்)

1.
ஓர் நல்ல பெண் கூடாமல் உணருதல்

துயரங்கள் தான் நீ முன்னெடுத்திருந்த வாழ்வாக இருக்கலாம்
அல்லது நள்ளிரவு மணித்தியாலங்கள்
வெறுமையான படுக்கையில்.  ஆனால்
எனக்குத் தெரிந்த கட்டவிழ்த்தப்படும் துயர்கள்
சிறுத்தைகள்போல பாய்வதாகலாம்,
எலும்புபோல முறியலாம்

தூக்குமரத்திலுள்ள
முடிவுசெய்யப்படாத கயிறுபோல
என் வம்சாவளியை நான்
வசைபாடச் செய்கிறது

உறுத்தும் நாக்கில்
தடிப்புமிகு கசப்புப் போல
காதலுக்கான தோத்திரம்
பாடப்படாமல் விடப்பட்டதாய்

வடக்கை நோக்கி செல்கிற நதிகளோ
தெற்கில் முடிவதுபோல
செத்தவீட்டு இசை
வீடு திரும்பும் வாய்களிற்போல

எல்லா புதிர்களும் துயரமானவை
அத்துடன் எல்லா துயர்களும் கவலையானவை
அத்துடன் நான்,
நான் பெற்ற சில துயர்களை மட்டுமே
குறிப்பிடுகிறேன்
-0-

2.
என் வாழ்க்கை துயரத்துக்கு மாறிவிட்டது

எனது கோடை போய்விட்டது
அப் பொன்னான நாட்கள் கழிந்தன.
வழக்கமாக
நான் உன்னுடன் விழித்தெழுந்த
நம்பிக்கையூட்டும் விடியல்கள்
சாம்பலாக மாறிவிட்டன,
என் வாழ்க்கை துயரத்துக்கு மாறிவிட்டது.

ஒரு காலத்தைய பசும் புற்தரைகள்
இப்போது பனித்துளிகளால் மின்னுகின்றன.
சிவப்பு றொபின் போய்விட்டது,
கீழே தெற்காய் அவன் பறந்தான்.
இங்கு தனியே விடப்பட்டு,
என் வாழ்க்கை துயரத்துக்கு மாறிவிட்டது.

நான் செய்தி கேட்டேன்:
குளிருங் கூட கடந்து போகும்,
வசந்தம் தான்
ஆக இறுதியில் கோடை வரும் என்பதன்
சமிக்ஞை ஆகிறது.
ஆனால் நான் உன்னைக் காணுமட்டும்
பச்சைப் புல்லிற் கிடந்தபடி,
என் வாழ்க்கை துயரத்துக்கு மாறிவிட்டது.
-0-

3.
சமகால அறிவிப்பு

பெரிய மணிகளை அடியுங்கள்
மாட்டைச் சமையுங்கள்
உன் வெள்ளிப் பதக்கத்தை போட்டுக் கொள்
வீட்டுரிமையாளர் கதவைத் தட்டுகிறார்
எனது வாடகைப் பணம் பொக்கற்றிலுள்ளது

ஒளியை அணை,
மூச்சை அடக்கிக் கொள்,
என் இதயத்தைக் கையில் எடு,
வேலையை இரு கிழமைக்குமுன் இழந்தேன் –
வாடகை நாளும் மீள வந்துவிட்டது
-0-

4.
முதிர்தல் குறித்து

அடுக்கில் தனியே கிடக்கிற சாக்குப்பை போல
அமைதியாய் நான்  அமர்ந்திருக்கையில்
என்னை நீ காணும்போதில்
நீ நினைக்காதே
உன்னுடன் ஓர் அரட்டையடிப்பு எனக்குத் தேவையாயிருக்கென.
நான் என் சுயத்தை செவிமடுத்தபடி உள்ளேன்
பொறு! நிப்பாட்டு! என்மேல் பரிதாபப்படாதே!
பொறு! உன் அனுதாபத்தை நிப்பாட்டு!
உனக்கு விளங்கியிருக்குமென்றால் புரிந்துகொள்
இல்லாட்டியும் அதில்லாமலே நான் சமாளித்துக் கொள்வேன்

என் எலும்புகள் செயலின்மையும் நோவும் அடைகிறபோது
என் பாதங்களாற் படிகளை ஏறமுடியாமற் போகிறபோது
நான் ஒரே ஒரு உதவியைத்தான் கேட்பேன்:
எனக்கொரு ஆடுகதிரையும் நீ கொண்டுவர வேண்டாம்

என்னைத் தடுமாற்றத்துடன் நடக்கக் காணுகையில்
நீ தவறாக கற்பித்துப் பிழையாக எடுத்துக் கொள்ளாதே
ஏனென்றால் களைப்பிட அர்த்தம் சோம்பல் அல்ல
அத்துடன் எல்லா விடைபெறல்களும் ‘முடிந்துபோன’தென்பதல்ல
முன்பிருந்த அதே நபர் தான் நான்-
கொஞ்சம் குறைய முடி, கொஞ்சம் குறைய நாடி,
செரியான குறையச் சுவாசப்பை அதில் பயங்கரக் குறைவாய்க் காற்றும்..
ஆனால் நான் அதிர்ஷ்டசாலி அல்லவா
என்னால் இன்னும் சுவாசிக்க முடிகிறதென்பதில்.
-0-

5.
நான் இன்னும் எழுகிறேன்

திரிக்கப்பட்ட உனது கசப்புமிகு பொய்களால்
வரலாற்றில் என்னை நீ எழுதிக் கொள்ளலாம்
மிகுந்த அழுக்கினுள்ளே என்னை நீ மிதிக்கலாம்
எனினும் தூசிபோல நான் எழுவேன்

என் உடல்வசீகரத்தன்மை உன்னை நிலைகுலையச் செய்கிறதா?
ஏன் நீ துயரத்தால் கட்டப்பட்டுள்ளாய்?
என் வரவேற்பறையில் ஏதோ
எண்ணெய்க் கிணறுகள் தளும்பிக்கொண்டிருப்பதுபோல
நான் நடப்பதால்!

நிலாக்களைப் போலவும் சூரியன்களைப் போலவும்
அலைகளின் நிச்சயத்தன்மையுடன்,
நம்பிக்கைகள் உயரப் பறப்பதே போல,
எழுவேன்

நீ என்னை உடைந்துபோய் பார்க்க வேண்டுமா?
குனிந்த தலையும் தாழ்ந்த கண்களும்?
என் ஆன்மாநிறைந்த அழுகைகளால் பலகீனமாகி,
நீர்த்துளிகளைப்போல
தோள்கள் கீழே விழுந்தபடி..?

என் இறுமாப்பு உன்னை அச்சுறுத்துகிறதா?
என் வீட்டுக் கோடியில்
தங்கச் சுரங்கம் கிண்டப்பட்டுக்கொண்டிருப்பதுபோல
நான் சிரித்துக்கொண்டிருப்பதை
நீ மிகக் கடினமாய் எடுப்பதில்லையா?

உன்னுடைய சொற்களால் எனை நீ சுடலாம்
உனனுடைய கண்களால் எனை நீ வெட்டலாம்
உன் வெறுப்புமிகுதன்மையால் எனை நீ கொல்லலாம்
எனினுங் கூட, காற்றைப் போல, நான் எழுவேன்

என் பாலுறவுக்கவர்ச்சி உன்னை நிலைகுலையச் செய்கிறதா?
என் தொடைகள் இணைகிற இடத்தில்
வைரங்களைக் கொண்டிருப்பவள்போல
நான் நடனமிடுவது ஒரு ஆச்சரியமாய் வருகிறதா?

வரலாற்றின் இழிவுகளால் ஆன குடிசைகளிற்கு அப்பால்
எழுகிறேன்
வலியால் வேர்கொண்ட கடந்த காலத்தின் மேலிருந்து
எழுகிறேன்
நான் பரந்ததும் பாய்தலுமான கருங் கடல்
ஊற்றெடுத்தும் பொங்கியும் வெள்ளத்தில் எடுத்துச் செல்லப்படுகிறேன்

எனக்கு பின்னால் திகில்மிகு இரவுகளையும் அச்சத்தையும் விட்டு
எழுகிறேன்
அற்புதத் தெளிவில் புலரும் விடியலுள்
எழுகிறேன்
என் மூதாதையர்கள் தந்த பரிசுகளைச் கொணர்ந்தபடி,
நான்தான் அடிமைகளின் கனவும் நம்பிக்கையும்.
நான் எழுகிறேன்
எழுகிறேன்
எழுகிறேன்.
-0-

6.
நாம் சேருமிடம், ஒரு ஜோடிப் பாடல்

ஒவ்வொரு நகரிலும் கிராமங்களிலும்
ஒவ்வொரு நகர சதுக்கங்களிலும்
சனநெருக்கடி மிகுந்த இடங்களில்
நான் முகங்களைத் தேடினேன்
அக்கறைமிகு ஒருவனை
கண்டடைவேன் என்ற நம்பிக்கையுடன்.

தொலைதூர நட்சத்திரங்களில்
மர்மமான அர்த்தங்களைப் படித்தேன்.
பிறகு நான் சென்றேன் பாடசாலை அறைகளுக்கும்
நீச்சலறைகளுக்கும்
அரை-வெளிச்ச மதுபான பார்களுக்கும்

ஆபத்துக்களை அழைத்தபடி
அந்நியர்களுடன் சென்றபடி,
அவர்களது பெயர்கூட நினைவில்லை எனக்கு.
நான் வேகமாகவும் தென்றல்போலவும் இருந்தேன்-
எப்போதும் காதல் விளையாட்டுக்கள் விளையாடத்
தோதானவளாக

நான் வைன் குடிக்கவும் உண்ணவும்
போனேன் – உயர்ரக(ச்) சாப்பட்டறைகளுக்கு
அதி சுவாரசியமான
ஒரு ஆயிரம் ஜோன்களுடனும் ஜேன் களுடனும்.
புழுதியான நடன மண்டபங்களில்,
மங்கைகளின் அரங்கேற்ற நடனங்களில்
தனிமையான கிராமத்து ஒழுங்கைகளில்.
நான் ‘என்றென்றைக்குமாக’ காதலில் விழுந்தேன்
ஒவ்வொரு வருடமும் இருமுறையோ என்னவோ
அவர்களை இனிமையாக அனுமதித்தேன்
முழுமையாய் அவர்களுடையவளாய் இருந்தேன்.
ஆனால் எப்போதும்; அவர்கள் என்னைப் போகவிட்டார்கள்.
‘இப்போ விடைபெறுவோம் – மேலும் முயலுவதற்குத் தேவை இல்லை
உரிய கவர்ச்சி உனக்கில்லை
மிகவும் உணர்ச்சிவயமானவள், செரியான மிருதுவுங்கூட!
உன் அணைப்பில் நான் உருகுவதில்லை’ என்றபடிக்கு…

பிறகு
வாக்களிக்கப்பட்ட சூர்யோர்தயம் போல
நீ என் வாழ்க்கையுள் உதித்தாய்
உன் கண்களில் உள்ள ஒளியால் என் நாட்களுக்கு பிரகாசமூட்டியபடி.
ஒருபோதும் நான் மிகத் திடமாய் இருந்ததில்லை,
இப்போதே எனக்குரிய இடத்தில் இருக்கிறேன்
-0-

7.
வியித்திரமான பெண்

அழகான பெண்கள் ஆச்சரியப்படுவர்
எங்கே என் இரகசியம் உள்ளதென.
நான் வடிவானவளோ
ஓர் ஃபாஷன் மொடலின் அளவுக்குப் பொருந்த
உருவமைக்கப்பட்டவளோ அல்ல.
ஆனால் நான் சொல்ல ஆரம்பிக்கையில்
அவர்கள் நினைக்கிறார்கள்
நான் பொய்களைச் சொல்கிறேன் என்று.
நான் சொல்கிறேன்:
அது,
என் கரங்களின் விரிவில் இருக்கிறது, என்
நாரியின் சாணளவில், என்
காலடியின் தாவிச் செல்லலில், என்
உதட்டின் சுருள்வில்.
வியித்திரமான முறையில்
நான் பெண்
வியித்திரமான பெண்,
அது நான்தான்.

உங்களை இறைஞ்சச் செய்யும் குளிர்ச்சியுடன்
நான் அறைக்குள் நுழைகிறேன்
கூடவே ஒரு ஆணிற்கு,
அவர்கள் எழுந்து நிற்பர் அல்லது
முழங்காலில் விழுவார்கள்.
பின் என்னைச் சுற்றி மொய்ப்பார்கள்-
கூடு நிறை தேனீக்கள்.
நான் சொல்கிறேன்:
அது என் கண்களின் நெருப்பிலிருக்கிறது
அத்துடன் என் பற்களின் ஒளிர்வில்
என் இடுப்பின் அசைவில்
கூடவே என் கால்களிலுள்ள மகிழ்ச்சியில்,
நான் பெண்
வியித்திரமான விதமாய்
வியித்திரமான பெண்
அது நான் தான்.

ஆண்களும் தம் பங்குக்கு வியந்துள்ளார்கள்
தாங்கள் என்னில் என்னத்தைக் காண்கிறார்களென
மிகவும் தான் முயலுவார்கள்
ஆனால் என் உள்ளத்துப் புதிர்நிலையை
தொட முடியாது அவர்களால்
அதை நான் காட்ட முயன்றால்
அவர்கள் சொல்வார்கள் – அப்போதும்
தங்களால் காண முடியவில்லையென.
நான் சொல்கிறேன்: அது,
என் வில்லொத்த பின் வளைவில்
இருக்கிறது,
என் புன்னகையின் சூரியனில்
என் முலைகளின் பயணத்தில்
என் செயற்பாணியின் வசீகரத்தில்
இருக்கிறது
வியித்திரமான முறையில்
நான் பெண்
வியித்திரமான பெண்
அது நான்தான்.

இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்
ஏன் என் தலை குனிந்தில்லை என்பது.
நான் கத்தவோ துள்ளவோ
உரத்துக் கதைப்பதோ அவசியமில்லை.
நான் உங்களைக் கடக்கக் காண்கையில்
அது உங்களைப் பெருமைப்படச் செய்யும்.
நான் சொல்கிறேன்: அது,
என் சப்பாத்துக் குதிகளின் கிளிக்கிடலில் இருக்கிறது,
என் தலைமுடியின் வளைதலில்,
அது என் உள்ளங்கை நுனிக்குள் இருக்கிறது
என் கவனிப்பை வேண்டுதலில் இருக்கிறது.
ஏனெனில் நான் ஒரு பெண்
வியித்திரமான முறையில்,
வியித்திரமான பெண்,
அது நான்தான்.
-0-

==================

(1)

Where We Belong, A Duet
In every town and village,
In every city square,
In crowded places
I searched the faces
u;oping to find
Someone to care.
I read mysterious meanings
In the distant stars,
Then I went to schoolrooms
And poolrooms
And half-lighted cocktail bars.
Braving dangers,
Going with strangers,
I don`t even remember their names.
I was quick and breezy
And always easy
Playing romantic games.
I wined and dined a thousand exotic Jims and Johns
In dusty dance halls, at debutante balls,
On lonely country lanes.
I fell in love forever,
Twice every year or so.
I wooed them sweetly, was theirs completely,
But they always let me go.
Saying bye now, no need to try now,
You don`t have the proper charms.
Too sentimental and much too gentle
I don`t tremble in your arms,
Thenyou rose into my life
Like a promised sunrise.
Brightening my days with thelight in your eyes.
I`ve never been so strong,
Now I`m where I belong.

(2)
‘Still I Rise’

You may write me down in history
With your bitter, twisted lies,
You may trod me in the very dirt
But still, like dust, I’ll rise.
Does my sassiness upset you?
W}y are you beset with gloom?
‘Cause I walk like I’ve got oil wells
Pumping in my living room.
Just like moons and like suns,
With the certainty of tides,
Just like hopes springing high,
Still I’ll rise.
Did you want to see me broken?
Bowed head and lowered eyes?
Shoulders falling down like teardrops.
Weakened by my soulful cries.
Does my haughtiness offend you?
Don’t you take it awful hard
‘Cause I laugh like I’ve got gold mines
Diggin’ in my own back yard.
You may shoot me with your words,
You may cut me with your eyes,
You may kill me with your hatefulness,
But still, like air, I’ll rise.
Does my sexiness upset you?
Does it come as a surprise
That I dance like I’ve got diamonds
At the meeting of my thighs?
Out of the huts of history’s shame
I rise
Up from a past that’s rooted in pain
I rise
I’m a black ocean, leaping and wide,
Welling and swelling I bear in the tide.
Leaving behind nights of terror and fear
I rise
Into a daybreak that’s wondrously clear
I rise
Bringing the gifts that my ancestors gave,
I am the dream and the hope of the slave.
I rise
I rise
I rise.

(3)
‘Phenomenal Woman’

Pretty women wonder where my secret lies.
I’m not cute or built to suit a fashion model’s size
But when I start to tell them,
They think I’m telling lies.
I say,
It’s in the reach of my arms
The span of my hips,
The stride of my step,
The curl of my lips.
I’m a woman
Phenomenally.
Phenomenal woman,
That’s me.
I walk into a room
Just as cool as you please,
And to a man,
The fellows stand or
Fall down on their knees.
Then they swarm around me,
A hive of honey bees.
I say,
It’s the fire in my eyes,
And the flash of my teeth,
The swing in my waist,
And the joy in my feet.
I’m a woman
Phenomenally.
Phenomenal woman,
That’s me.
Men themselves have wondered
W}at they see in me.
They try so much
But they can’t touch
My inner mystery.
W}en I try to show them
They say they still can’t see.
I say,
It’s in the arch of my back,
The sun of my smile,
The ride of my breasts,
The grace of my style.
I’m a woman
Phenomenally.
Phenomenal woman,
That’s me.
Now you understand
Just why my head’s not bowed.
I don’t shout or jump about
Or have to talk real loud.
W}en you see me passing
It ought to make you proud.
I say,
It’s in the click of my heels,
The bend of my hair,
the palm of my hand,
The need of my care,
‘Cause I’m a woman
Phenomenally.
Phenomenal woman,
That’s me.

(4)
On Aging

W}en you see me sitting quietly,
Like a sack left on the shelf,
Don’t think I need your chattering.
I’m listing to myself.
u;old! Stop! Don’t pity me!
u;old! Stop your sympathy!
Understanding if you got it,
Otherwise I’ll so without it!
W}en my bones are stiff and aching,
and my feet won’t climb the stair,
I will only ask one favor:
Don’t bring me no rocking chair.
W}en you see me walking, stumbling,
Don’t study and get it wrong.
‘Cause tired don’t mean lazy
And every goodbye ain’t gone.
I’m the same person I was back then,
A little less hair, a little less chin,
A lot less lungs and much less wind.
But ain’t I lucky I can still breathe in.

(5)
Contemporary Announcement

Ring the big bells,
cook the cow,
put on your silver locket.
The landlord is knocking at the door
and I’ve got the rent in my pocket.
Douse the lights,
hold your breath,
take my heart in your hand.
I lost my job two weeks ago
and rent day is here again.

உலகின் எல்லாப் பருவங்களிலும் ஒலிக்கட்டும் எம் பெண்களின் இந்த ஒலிக்காத இளவேனில்

Picture 900Picture 899

  • தமிழச்சி தங்கப்பாண்டியன்

“கவிஞன் உணர்ச்சிகளின் நிபுணன், உணர்ச்சிகள் என அழைக்கப்படுபவற்றுக்கு குறைந்தபட்சம் இரு தளங்கள் உள்ளன. முதல் தளம் அறியப்பட்டதும் ஒப்புக்கொள்ளப்பட்டதுமானவற்றைத் தாங்கிச் செல்கிறது. இரண்டாவது தளம் பெயரிடப்படாத யாருக்கும் சொந்தமற்ற பிரதேசம். அளவில் அதிகரிக்கும் பெயரற்ற உணர்ச்சிகளின் தொகுதிகளுக்குக் கவிஞன் குடியுரிமை பெறும் கடமையிலிருக்கிறான்.
நமது வலிமிகுந்த இந்த சிக்கலுற்ற நூற்றாண்டு பிற விஷயங்கள் தவிர நமக்குக் கற்றுத் தந்திருக்கிறது மிகத் தலையாய விஷயங்கள் எல்லாம் நம் வாழ்வின் அறிவின் எல்லைக்கு அப்பால் உள்ள பிரதேசங்களில் நடக்கின்றன என” – ஆக்நெஸ் நெமிஸ் நேகி 

(சமகால உலகக் கவிதை, தொகுப்பு – பிரம்மராஜன்).

“இன்றைய நாளின் தன் வலியைப் பாடும் வெளித்தரியாத குரல்களைத்” தேடிச் சென்று பதிவு செய்திருக்கின்ற தொகுப்பாக ஒலிக்காத இளவேனில் (18 பெண் கவிஞர்களின் கவிதை நூல்) வடலி வெளியீடாக வந்துள்ளது. டிசம்பர் – 2009 இல் பதிப்பித்த இக்கவிதைத் தொகுதியை கனடாவில் வாழும் தான்யாவும், பிரதீபா கனகா தில்லைநாதனும் தொகுத்துள்ளார்கள். ஜூன் 16-2012 இல் டொரொண்டோ நகரில் இக்கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்ற நிலையில், தோழர் சாந்தாராம் வாயிலாக இந்நூல் என் கைக்குக் கிட்டியது.
“பெண்களின் மெளனம் யாரையையும் தொந்தரவு செய்ததில்லை – பெண்களையே கூட” எனும் ஆதங்கக் குரலுடன், அனைத்து வகையான வன்முறைகளுக்கும் ஒரே இலக்காகப் பெண்கள் இரையாகின்றபோதும், “தம் துயரை, எதிர்ப்பை, ஒரு அரசியலாய்க்” கொண்டு செல்ல வேண்டும் எனும் ஓர்மையுடன் தொகுப்பாளர்கள் இப் பணியை முன்னெடுத்திருக்கிறார்கள். இத் தொகுப்பின் மிக முக்கியமான கூறு என்னவென்றால் – “போராளிப் பெண் குரல்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தனவோ, அதுபோலவே, எமது அரசியல் காட்சிகளின் மாற்றங்களுக்கமைய ஒரு கணத்தில் போராளிகளாய் அற்றுப்போகும் பெணகளின் குரலும் முக்கியமானதே” எனும் தொகுப்பாளர்களின் தெளிவும், தெரிவும்.
“மாபெரும் கவிதைகளை அவர்கள் எழுதவேண்டியதில்லை, ‘ஈழப் பெண்குரல்’ என அவை மிகை படுத்தப்பட வேண்டிய அவசியமுமில்லை, ஆயின், உலகின் வெவ்வேறு நகரங்களில் உள்ள, இலங்கைத் தமிழ்ப் பெண்கள், எத்தகைய, ஆண் அரசியல், குடும்பக் கடப்பாடுகள், கட்டுப்பாடுகளூடாகத் தங்களை வெளிப்படுத்துகிறார்கள் – அவற்றின் அரசியல் என்ன” என்பதனைப் பகிர்ந்து கொள்ளச் செய்திருக்கின்ற முயற்சியே இது என்கிறார்கள் தொகுப்பாளர்கள்.
இத் தொகுப்பு ஈழத்தை மட்டுமே மையப்படுத்தவில்லை. ஒரு அந்நிய தேசத்தில் வாழ நேர்கின்ற, சமகால வாழ்வின் சிக்கல்களைத் தனது தாய்நாட்டின் வரலாற்றுக் கண்ணியுடன் இணைக்கின்ற, அதில் இதுவரை கேட்டிராத பெண் குரலெனப் பதியப்பட்டவைகள் குறித்துக் கவனப்படுத்துதலும், பேசுதலுமே இதன் மையப்புள்ளி . ஒர் புலம் பெயர்ந்த சமூகத்தின் தனிமை, வன்முறை, பண்பாட்டுச் சிக்கல்கள், அடையாள மறுப்பு, சுயமிழத்தல் – இவற்றையெல்லாம் ஒரு பெண்ணாக எதிர்கொள்ள நேர்கையில், தனது வலியின், எழுச்சியின் வலிமையான குரலாக அவள் கவிதையைத் தேர்வு செய்திருப்பதனை, தேசம் : யுத்தநிறுத்தம், பெண் : வாழ்வியல், புலம்பெயர்வு : குடும்பம்,  புலம்பெயர்வு : மாணவம், தேசம் : யுத்தகாலம் எனும் பிரிவுகளில் தொகுத்தளித்துள்ளார்கள். மெளனமாக்கப்பட்டவர்களுக்கான வெளியெனவும், அவர்தம் குற்றஉணர்ச்சிகளினின்றும் விடைபெறுகின்ற சுமைதாங்கிக் கல்லெனவும் இத்தொகுப்பு இருப்பின் அதுவே போதுமானது எனும் தான்யா, பிரதீபா தில்லைநாதனின் பெருமுயற்சி கவனிக்கப்படவேண்டியது, பரவலாகப்  பேசப்படவேண்டியது.
பெண்களின் உலகம் ஒரு மூடிய உலகமாகவே இன்றுவரை இருக்கிறது. தொடர்ந்த கண்காணிப்பினாலும், தடைகளினாலும் அவளது ஒவ்வொரு அடியும் முறைப்படுத்தப்படுகின்றது. பெரும்பாலான பெண்களின் உலகம் பதற்றம், மன உளைச்சல், பாதுகாப்பின்மை, பாலியல் அத்துமீறல், குடும்பச் சுமை, பொருளாதார நெருக்கடி இவற்றால் முழுதுமாய் மூச்சுத் திணறுகிறது எனில், புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழ்ப் பெண்களின் உலகோ தமது புகலிடச் சூழல், ஈழத்து அரசியல், யுத்தத்தின் நிகழ் மற்றும் நிழல் உணர்வுகள், தனிமை, பகிர்தலற்ற வெறுமை – இவற்றால் கட்டமைக்கப்பட்டுள்ளது. அவர்தம் சொல்ல இயலாக் கனவு, காதல், காமம், துரோகம், நம்பிக்கை, பயம் – இவற்றின் ஒட்டுமொத்தத் தனித்த குரலே இந்த ஒலிக்காத இளவேனில். இதில் ஒலித்திருக்கின்ற ஒவ்வொரு பெண் குரலும் தன்னளவில் தனித்துவம் வாய்ந்ததே.
எனக்கு மிகவும் பிடித்த, நான் நேசிக்கின்ற அனாரின்

“மலர்களின் பார்வைகள்
அந்தியில் ஒடுங்கி விடுகின்றன.
அவைகளின் கனவுகள் மாத்திரம்
காற்றில் அலைகின்றன
என் கவிதைகளைப் போல”

எனும் காற்றில் அலையும் கனவுகள் பெரும்பாலும் வட அமெரிக்காவைக் களமாகக் கொண்டிருக்கின்ற ஈழத் தமிழ்ப் பெண்களின் எதிரொலியே.

“குறிகளும் யோனிகளும் இன்று இப்படித்தான்
எதற்காகவும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை
அவை தமது நிமிடத்தினை
வாழ்ந்து விடவே விரும்புகின்றன”

எனும் நிவேதா ரேவதியின் குரல்,
“இந்தக் கணத்தை ஐம்பது வருடங்களுக்கு முந்தையதிலிருந்து
வேறுபடுத்தி அறியாத தளர் முதியோன் போல,”
எனும் ஹங்கேரியப் பெண் கவிஞர் ஆக்நெஸ் நெமிஸ் நேகியை நினைவு படுத்துகிறது.

“ஆண்களால் வெல்லப்பட்ட உடம்பு
பொய்களால் கொல்லப்பட்ட மனசு”

எனும் சரண்யா;

வசந்தி,

“எப்போதும் ஒரே வட்டத்துள்
நிர்ப்பந்த வெப்புசாரம்
மூச்சு முட்ட வைக்கும்
ஆசுவாசப் படுத்தல்கள்
அற்றதான தனிமை”யை வேண்டுகிறார்.

மிகச் சமீபத்திய செய்தியொன்றின் மூலமாக ஈழப் போரின் இறுதிக்கட்டத்தினை ஐ.நா உறுப்பினர்கள் சரிவரக் கையாளவில்லை என அறிந்து கொண்ட அந்தக் காலைவேளையில், யசோதராவின் புதைக்குழி கவிதையை மீண்டும் வாசித்தேன்.

“யுத்தம் என்ன செய்தது
யுத்தம் என்ன தந்தது
“அந்த” இராணுவமென்னை வன்புணர்ந்தது
எனது இராணுவம் உனது தகப்பனை
கண்ணுக்கு முன்னால் கொன்றுபோட்டது.
…….
அவள் / நான் தலையிலடித்தபடி அழுகிறேன் / அழுகிறாள்
புதைகுழியை ஐ.நா. திறந்து திறந்து மூடுகிறது
விஜி! ஐ.நா. என்ன செய்கிறது
விஜி: திறந்து திறந்து மூடுகிறது!”

சமகாலத்தின் மிகப்பெரிய துயரம் நம்பிக்கையற்றுப் போதல். அதன் தொடர்பான கையறு நிலையின் மன உளைச்சளைத் தான் தொகுப்பின் அநேகக் கவிதைகள் முன் வைக்கின்றன. என்றாலும், அவை வெறும் புலம்பல்கள் அல்ல.
சமகால உலகில் பாசிசம் ‘சாதாரண உடுப்பில்’ தோன்ற முடிவது குறித்து உம்பர்தோ ஈக்கோ பின்வருமாறு குறிப்பிட்டார்:

“உர் – பாசிசம் (நித்திய பாசிசம்) நம்மைச் சுற்றிலும் இன்றும் இருக்கிறது. சில நேரங்களில் சாதாரண உடைகளில். எவராவது ‘ஆஷ்விட்ச்சை மீண்டும் திறக்க வேண்டும். இத்தாலிய சதுக்கங்களில் கருப்புச் சட்டைகளின் பேரணி நடத்த வேண்டும்’ என்று சொன்னால், நமது சிக்கல் எளிதாகிவிடும். வாழ்க்கை அத்தனை எளிதானதல்ல. உர் – பாசிசம் எந்த அப்பாவித்தனமான உருவிலும் மீண்டும் வரலாம். உலகின் எல்லா மூலைகளிலும் தினசரி அது எடுக்கும் புதுப்புது அவதாரங்களைச் சுட்டிக் காட்டுவது நம் கடமை.”

அது யுத்தமாகட்டும், இடப் பெயர்வாகட்டும், வன்முறைகளாகட்டும், ஊடகங்களாகட்டும், அன்றாட இயல்பான வாழ்க்கை நடைமுறைகளாகட்டும் – பெண்னென்பவள் எதிர்கொள்வது இப் பாசிசத்தின் ஏதாவதொரு முகத்தைத்தான். சமூகம் கட்டமைத்துள்ள நிறுவனங்கள், ஆண், சக பெண்கள் – என அனைத்து வெளிகளிலும் பெண்ணானவள் ஒரு நுட்பமான பாசிச அரசியலைத் தான் ஒவ்வொரு கணமும் எதிர் கொள்கிறாள்.

“நகரம் இச்சையால் மூடியிருக்கிறது
ஒவ்வொரு மூலையிலும் வல்லவர்கள் ஆளுவார்கள்”

என Weapon of Mass Destruction இல் பாசிசத்தின் ஒரு முகத்தைச் சுட்டும் பிரதீபா, தனது ஆண் கவிதையில் தோலுரிப்பது அதன் மற்றொரு வடிவத்தையே.

“வீதிகளில்
தோழர்களுடன் செல்கையில்
உன் இனத்தவன் ஒருவன்
எங்களில் யாரேனும் ஒருத்தியை
உன் இனத்து மொழியிலேயே
வேசைகள் என்று
எம் பால் உறுப்புக்கள் சொல்லிக் கத்துவான்,
அவர்களை எவ்வின அடையாளமுமின்றி
ஆண்கள் எனவே அழைத்துப் பழகினோம்”.

விவரிப்பவரே, விவரிப்பின் ஒரு பகுதியாக மாறிவிடுகின்ற சர்ரியல் தன்மை கொண்ட பிரதீபாவின் “உனது இனம், அரசியல், ஆண், மொழி” தொகுப்பின் அதி முக்கியமான கவிதை. இன்றைய பெண்ணுக்கான தெளிவான அரசியலைப் பேசும் பின்வரும் இக்கவிதை –

“நீ பொறாமையுறும்
திடகாத்திரமான காப்பிலிகளுக்கோ
ஆண்மையற்ற நோஞ்சான்களாய்
இகழப்படும் சப்பட்டையருக்கோ
தாயாகுவதில்
எச்சொட்டு வருத்தமும்
நான் கொள்வதில்லை.
எண்ணி நாப்பது வருடங்களிலோ
இன்றையோ
அக்குழந்தைகள்
தாய்மொழியை இழப்பதில்
அப்படி ஒரு துக்கம்
எழுவதாயில்லை.
வஞ்சனையை, மனித விரோதத்தை, பகைமையை
கொண்டு ஆடுகிற மொழி
அழிந்தால் என்ன?
நியாயமற்று
வெறித்தனமாக
ஒரு மரணத்தை நியாயப்படுத்தவோ
மரணத்திற்கு பழகியோ போகாதவரை
அவர்களுடைய எந்த மொழியும்
எனது மொழியே.
அது உன்னுடையதாய் அல்லாதது குறித்து
என் கவலைகள் இல்லை”

என்று வாழ்வின் மிக உன்னதமானவையென விதந்தோதப்படுகின்ற, இன, மொழிப்பற்றை விவாதத்திற்குள்ளாக்கி, முடிவில் மிகத் தெளிவானதொரு அரசியலைத் தீர்ககமானதொரு பெண் குரலில் முன் வைக்கிறது.
இத்தொகுப்பின் மிகப்பெரிய பலம் – இக்கவிதைகள் எவையும் இரக்கத்தைக் கோராதவை என்பதுவே. இத்தாலியக் கலாச்சாரத்திற்குப் பெரும் சவாலாக விளங்கிய கவிஞர், நாவலாசிரியர், பன்முக ஆளுமை கொண்ட பியர் பாவ்லோ பாசோலினியின் பிரசித்தி பெற்ற வாக்கியம் – “எனக்கு இரக்கத்தின் மீது நம்பிக்கையில்லை”. அதனை அடியொற்றிப் பயணித்திருப்பவையே இந்தத் தொகுப்பின் கவிதைகள்.
தற்கொலை பற்றிய தான்யாவின்:

“அந்த இடம் –
ஒரு நிமிடம் சாவதற்கான முனை
மறு நிமிடம் இசைக்கான கருவி
பிறிதொரு பொழுதில் வாழ்வதற்கான வெளி
அத்துவான வெளியில்
வாழ்க்கையின் நம்பிக்கையைத் தொலைப்பது
இயலாமற் போகிறது
…………
வாழ்க்கை அவளை வசீகரிக்கிறது”

எனும் வரிகளும்

” ஓர் முத்தத்தின் பேரியக்கத்தில்
ஆயுதங்களின் விறைப்புக்களுக்கு அப்பாலாய்
நானும் வாழ வேண்டும்” (யசோதர)

எனும் வேட்கையும், இரக்கம் கோராத, தன்னளவில் திமிறி நிற்கும் திடமான பெண் குரல். இந்த தெளிவிருக்கும் எம் பெண்களுக்கு,

“புரிந்து கொள்ள வேண்டி
நிற்கும் அவலமோ
நேசத்தை உணராத
வலியோ அற்ற அமைதி” (தான்யா)

வாய்க்கப் பெறும் ! பெறின் – அதுவே இத்தொகுப்பின் வெற்றியாகும்!
தேசம் என்பதே ஒரு கற்பிக்கப்பட்ட உருவாக்கம் போன்ற கருத்தாக்கங்கள் பரவலாக விவாதிக்கப்படுகின்ற இப் பின் நவீனத்துவக் கால கட்டத்தில், தன் தேசத்தின் மீட்சிக்காகப் பாடும் ஒரு பெண்ணின் தேசம் எது? புலம் பெயர்ந்து வாழும் பிற நாடு நமதாகுமா? கனடா போன்ற நாட்டில் பூர்வீகர்களுடைய வரலாறு மறைக்கப் படுகையில், அவர்களை ஒடுக்கியவரிடத்தில், ‘எம்மை வாழவைத்த தேசம்’ எனும் நன்றியுணர்வு சரியானதா? தேசம், தேசீயம் – இவை கட்டமைக்கப்பட்டிருக்கிற ஆதிக்க – ஆண் மனத்திற்கு முரணாகத்தானே, தமது பிள்ளைகளைப் பறிகொடுத்தவர்களது மனநிலையும் இருக்க முடியும்? – போன்ற மிக முக்கியமான கேள்விகளைத் தொகுப்பாளர்கள் எழுப்பி இருக்கிறார்கள். உணர்வும், அறிவும் சரிசமமாக வெளிப்படும் கலவையான கவிதைகள் மூலமாகவும் அவர்கள் முன்வைப்பது இந்தக் கேள்விகளையே!
தம் எல்லாவிதமான வேறுபாடுகளோடும், ஒவ்வொரு குரலும், தத்தமது அனுபவங்களின் நேர்மையுடனும், மொழியின் சத்தியத்துடனும் ஒலிக்கப்பட வேண்டும் – அவை கேட்கப்படவும் வேண்டுமென்கின்றன இப் பெண்களது கவிதைகள். அவை உலகின் அனைத்துப் பெண்களின் கவிதைகள்தாம்!
தேடலுடன் உரத்து ஒலிக்கும் எக்குரலும் அங்கீகரிக்கப்பட்ட வேண்டியதே – குறிப்பாக அக்குரல் ஒரு பெண்ணினுடையதாய் இருக்கும் பட்சத்தில்!  இந்திராவின் பின்வரும் இக்குரலே பெண்ணினத்தின் ஒருமித்த குரல் –

“எனக்குள் ஒரு ஜிப்சி
எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறாள்.
அவள் –
வரம்புகளை உடைத்தெறிந்து
ஒரு புறாவைப் போலப் பறந்திட
ஏங்கிக் கொண்டிருக்கிறாள்”

மேலும், மேலும் மறைக்கப்பட்ட, அழுத்தப்பட்ட குரல்களைத் தேடிப் பயணியுங்கள் தோழிகளே! தான்யாவும், பிரதீபாவும் தொடங்கி வைத்த இப்பயணத்தில் ஒரு வாசகியாய்ப் பங்கு பெற்ற நான் இந்த தொகுப்பினை மூடி வைத்தவுடன், டெல் அவீவின் பெண் கவிஞர் தாஸ்லியா ராவிகோவிச்சின் வரிகளை நினைத்துக் கொண்டேன் –

“அவர்கள் அனைவரும் சென்றபிறகு
கவிதைகளுடன் நான் தனியே எஞ்சியிருக்கிறேன்”

* * * * *

ஒலிக்காத இளவேனில் : உணர்வுகள் ததும்பும் கலசம் (யாழன் ஆதி)

  • யாழன் ஆதி


புலம் பெயர்ந்த தமிழர்களின் வாழ்வாதாரங்களில் பல மாறுதல்கள் இன்றைய காலகட்டத்தில் ஏற்பட்டிருக்கலாம். பல்வேறு அய்ரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்க நாடுகளுக்கும் நார்வேயன் நாடுகளுக்கும் ஆஸ்திரேலிய கண்டத்திற்கும் என அவர்களின் வாழ்வு பல திசைகளில் சுழற்றியடிக்கப்பட்டதாகவே இருக்கிறது. ஆனாலும் அவர்களின் வேராக அவர்களின் தாய்மண் எப்போதும் இருந்துகொண்டிருக்கிறது.

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்திற்குப் பிறகு பல்வேறு வெளிகளில் ஈழப்போராட்டமும் அவர்களின் வாழ்வியலும் விமர்சிக்கப்பட்டும் முள்வேலியில் சிக்கியுள்ள தமிழர்களின் விடுதலைக்கும் தற்போதும் புலம் பெயராமல் நாட்டிலிலேயே இருக்கும் தம்மின மக்களுக்கானப் போராட்டங்களைக் கையிலெடுத்தும் கொண்டிருக்கும் இச்சூழலில்தான் நம் கைககளி வந்திருக்கிறது இந்த ‘ஒலிக்காத இளவேனில் என்னும் கவிதைத் தொகுப்பு.

தமிழ் இலக்கிய சூழலில் கவிதைக்கும் அதன் மூலத்திற்கும் ஆகச்சிறந்த படைப்புகளை அள்ளித்தந்தவர்கள் ஈழமக்கள். பழங்காலத்திலிருந்தே இது சாத்தியமான ஒன்றாக இருக்கிறது. இன்றைக்கு சிதறடிக்கப்பட்டு இருக்கின்ற இச்சூழலிலும் தன் பண்பாட்டு மாற்றங்களையும் இழந்த தேசத்தின் ஒளியில் இயங்கும் விடுதலைக்கான தாகத்தையும் அதே நேரத்தில் தன்னுணர்வின் பிரதான வெளிப்பாட்டையும் அவர்கள் இக்கவிதைகளில் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

தன்னிலத்தில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்கள் அவற்றின்னூடாக அவர்களிம் உணர்வுகளைப் பொருத்துகின்ற பாங்கு என்பது மிகவும் அருமையாக கைவந்திருக்கிறது இக்கவிஞர்களுக்கு. கூடுதலாக கவிஞர்கள் பெண்கள் என்பதாலும் புலத்தைவிட்டு அகன்று அவர்கள் வாழும் நாட்டின் பண்பாட்டுத்தளத்தில் தங்களை இருத்திக்கொள்ளல் என்னும் தன்மையும் அதற்கு உகந்ததாக இல்லாத தங்களின் மனச்சாய்வுகளையும் அவர்களால் அற்புதமாக எழுத்தில் கொண்டுவர முடிந்திருக்கிறது.

வாழ்வின் மீதான தேவைகளின் நாட்டம் ஒரு பெண் மனத்தின் அடியாழத்தில் தேங்கிக்கிடக்கும் தண்ணீரைப்போல இருக்கிறது. அதில் பட்டு நெளியும் நிலவின் பிம்பத்தைப் போலக் கவிதை மெல்ல அசைகிறது.

ரேவதியின் ‘சிதிலமடைந்த வாழ்க்கைகுறிகளும் யோனிகளும் இன்று இப்படித்தான்/எதற்காகவும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை/அவை தமது நிமிடத்தினை வாழ்ந்திவிடவே விரும்புகின்றன/ எனக் கூறும்போதும் அதைத் தாண்டி தன் தாய்நிலத்தில் எண்ணம் மீறிடும் வேளையில் சந்தோசமும் நம்பிக்கையயும் நிறைந்த/வாழ்வை இழந்து/நெடுங்காலம் ஆகிவிட்டது/யுத்தமும் அதன் வடுக்களும் மட்டுமல்ல/பொருளாதாரத்திற்கான எமது ஓட்டமும்/ எங்கள் வாழ்வை/அதற்கான அர்த்தத்தை அழித்துவிட்டு/இன்னொருதிசையில் எழுதிச்செல்கிறது/என்னும் தவிப்பும் தெறிக்க தெறிக்க வாழ்கை விரட்டும் போது என்ன செய்வது? வாழ்வதற்கான தேவைகளை ஏற்றுக்கொள்ளும் வலி பிறக்கிறது.

விடுதலையின் வேட்கை சுமந்த வடுக்கள் ஏராளம். ஈழத்தமிழர்கள் அவர்கள் நாட்டில் இருந்தாலும் அல்லது புலம் பெயர்ந்து இருந்தாலும் அது அவர்களுக்கு வடுக்களையே தந்திருக்கிறது. தங்கள் வாழ்வின் இன்னொரு பாகத்தினை இழந்து காலம் தந்த சுமைகளை கண்டங்கள் தாண்டினாலும் அவர்கள் சுமந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.அதன் நீட்சியாகவே ‘என்னை ஏனென்று கேட்க முடியாதபடிவிட்டு விடுதலையாவேன் என்னும் மனம் அவர்களுக்கு வாய்த்திருக்கிறது.

பெண் உடல்மொழியால் புனையப்பட்ட ‘புகையெனப் படரும் பிணங்களின் வாசம்என்னும் நிவேதாவின் கவிதை தமிழ் நவீனக் கவிதையின் பெண்மரபின் தொடர்ச்சியானது எனச் சொல்லலாம். விடுதலையற்ற எந்த உயிரும் பிணமாகத்தான் இருக்க வேண்டும். பிணம் புணர்ந்து பிணம் பிறக்கும் அபத்தம் அடிமைகளின் வாழ்வில் தொடரும் நிழலாகவே இருக்கிறது என்ற வரிகளின் பின்னே அமைந்த படிம வேதியியல் கவிதையின் இயற்பியலைத் தாண்டி வந்து நம்மை தீண்டுகிறது. முலைகளின் வழியே அவர் பேசும் விடுதலைக்கான மொழிகளை அவற்றின் கழுத்துகளை நெறிக்கும் ஆம்பிள்ளைகளைக்கு எதிராக அவர் ஆக்குவது கவிதையின் இன்னொரு கோணம்.

அனாரின் மீசைப் புடையன் பணிய மறுக்கும் பெண் மனம். கிடைக்காதவைகளைப் பற்றிய கவலைகள் ஏதுமற்று தலைநிமிறும் தன் விடிகாலத்தின் முன் ஒரு பறவையின் குரலாகவே பெண் எழுத்தைக் கொள்ள வேண்டும் என்னும் கோட்பாட்டின் வடிவமாக அனாரின் கவிதைகள் இருக்கின்றன. கவித்தைக்காக அனார் தேர்ந்தெடுக்கும் மொழி என்பது மிகவும் அலாதியானதாகக் கவிதையை தன்னுள்ளே அது வைத்திருக்கிறது.

பெண்ணுக்கும் கோயிலுக்குமான ஆழியாளின் படிமம் பெண்ணரசியலைப்பேசும் இன்னொரு வெளியாக விரிவடைகிறது. அவரின்ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்னும் கவிதையில் கோயிலாக விரிந்திருக்கும் பெண் இருட்சுடரில் மற்றுமோர் ‘அவள்ஜனிக்க வாலையாட்டி ஈ ஓட்டும் காளையின் படிமம் நந்திகளைத் தாண்டி வணங்கமுடியாதக் கோயில்களாகவே அவள் இருக்க வேண்டிய நிர்பந்த அரசியலை உணர்த்துகிறது.

ஜெபாவின் ‘திணிக்கப்பட்ட குறிஎன்னும் சொல்லாட்சி விரிவான பெண்வெளியைப் புனைகிறது. அதன் நிகழ்தகவுகளைப் பேசும் மீயதார்த்தவாதத்தினை முன் வைக்கும்போது கட்டுடைகிற மையங்களை நோக்கி பெண் விளிம்பு பாயும். இந்த அரசியல் சரடு இந்தத் தொகுப்பின் எந்த பகுப்பிலும் நம்மால் உணரம்முடிகிறது என்பதே இத் தொகுப்பின் வெற்றியாக நாம் கொள்ளலாம்.

வெளிகளில் தோற்கும் பெண்கள் கவிதையும் பெண்ணின் வலியை அவள் எந்த நாட்டில் இருந்தாலும் அது பொதுவானதாக இருக்க ‘ஆனாலும் வாழ்கிறோம் வாழும் வெளியில் பெண்களாக….என்று முடியும் போது நாம் ஏதும் செய்யாமுடியாதவர்களாகவே உணர்கிறோம்.

சரணயாவின் ‘உன்னோடு அருகில் நான்எனத்தொடங்கும் கவிதை இதுவரைப் பாடப்படாத தளத்தில் நின்று நேரிடையாகப் பேசுகிறது. ஆண்களுக்கான சமூக இயங்கியல் எவ்வளவு சுலபமானதாக எண்ணெயிடப்பட்ட இயந்திரத்தைப் போல எல்லாவற்றையும் கடக்கிறது. திருமண உறவினைக்கடந்து கொள்கின்ற காதலில் ஆண் எவ்வளவு இயல்பாகத் தப்பிக்கிறான். பெண் தான் புறக்கணிக்கப்படுகிறாள். துணிவும் தன்னம்பிக்கையுமுள்ள/ என்னை நிராகரிக்கவும்/இந்த அநியாயச் சமூகத்திற்கு அங்கீகாரம் கொடுத்தது யார்என்னும் கேள்வி கனடாவிலிருந்தும் ஒலிக்கிறது.

Certainty : Nirosan Thillainathan

By

Nirosan Thillainathan

Fear the shadow
Fear the dark
Fear the bloodshed that leaves a mark
Fear the night that brings us fear
Fear the noise that you might hear
For what we fear is fear in us
You can’t stop fear,
for fear is us

~

(2003/4)

பிற்சேர்க்கை 02 யுத்த காலம் 2009 – தேசத்திடம் திரும்புதல்

பிற்சேர்க்கை 02பெயரற்றவை: ஒலிக்காத இளவேனில் பற்றி..

யுத்த காலம் 2009 – தேசத்திடம் திரும்புதல்

புதிய தேசங்கள் ஒடுக்கப்பட்டவர்களுக்குத் தந்த விடுதலையும் அனுபவங்களது வெளியும் வேறானாலும் – தமதெல்லா உறவுகளையும் வெளிநாடுகளில் கொண்டிருக்கிற ஆதிக்க பிரதேசவாதிகள் போலன்றி, பல உறவினர்களை அங்கு கொண்டிருக்கிற– புலம்பெயர்ந்து வாழும், குறைந்த அளவிலான ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள்   தாம் பிறந்த தேசத்திடம் திரும்ப வேண்டிய சந்தர்ப்பங்களை யுத்த காலம் கொண்டு வருகிறது.

போர்நிறுத்தத்திலிருந்து (நம்பிக்கையிலிருந்து) அக் காலப் பகுதியின் அரசியல் களையெடுப்புகள்  – படுகொலைகளிலிருந்து,  மீண்டும் உத்தியோகபூர்வமாய் இனவழிப்பு யுத்தம். மக்கள் முகாம்களிடம் ஆயுதங்களால்த் துரத்தப்பட்டனர்.

இடையில், மீண்டும் அம்மா – போராளி – சகோதரி – விசரி என்கிற யுத்தகால முகங்களை வரித்தவாறு பெண் இருப்பு.

மீண்டும், மறுக்கமுடியாத உண்மை, இந்த யுத்தமும் உயிரிழப்புகளும் தேசத்திலிருந்து வெளியேறவியலாத, பெரும்பான்மை, அடித்தட்டு மக்களுடையதே என்பதும், இந்த யுத்தம் பலிகொண்டது தொடர்ந்தும் பலிகொள்வது ஏழைத் தாய்மாரின் குழந்தைகளையே என்பதும்…

யுத்தம் தேசத்தின் வறிய மக்கள் மீதானது. எப்போதும் தொலை-புலங்களில் இருந்து ‘பேசுகிறவர்களாய்’ தேசியவாதிகள் இருக்க, அஃதால் இழப்புகளை முகங்கொடுத்தவர்களாய் மனப்பிறழ்வுகளுக்கு உள்ளாகிறவர்களாய் பாதிக்கப்பட்டவர்களாய் சாதாரண மக்களே இருந்தார்கள்; மரணத்திடம் திரும்பிய இந்த யுத்தம் அவர்களது தேர்வாக இருந்ததில்லை.

இனி: இயலாமையையும் குற்றஉணர்ச்சியையும் எழுப்புகிற சொற்களோடு சொல்வதற்கு எதுவுமில்லை. இப்போது: ‘இது யுத்த(ம் நடக்கிற) நிலத்துக்கு ‘வெளியில்’ வாழும் குறிப்பிட்ட சில இலங்கைப் பெண்களின் தொகுதி’ என்பதே சரியாக இருக்கும்.

இதில் எழுதியுள்ள, இலங்கையில் இருந்து எழுதிய கவிஞர்களுள் அனேகமானவர்கள், போருக்கும் போர் நிறுத்தத்துக்குமிடையேயான குறுகிய காலப் பகுதிகளில் கல்வி மற்றும் குடும்ப நிமித்தமாக புலம்பெயர்ந்துள்ளார்கள். ஆக, அதுவும் இதில் எழுதியுள்ள பெண்களிடம் உள்ள ‘தேர்வுகள்’ எனும் அரசியலைப் பேசவே செய்கிறது. தேர்வற்ற பெண்கள் இலங்கைக்கு உள்ளே உள்ளார்கள். அவர்கள் தனியே பெண்களாக அல்ல, சாதீய பொருளாதார அவர்கள் பிறந்த நிலப் பிரதேசத்தின் (போர் காரணமான) பின்தங்கல்நிலைகளால் ஒடுக்கப்பட்டவர்களாய் உள்ளார்கள். அவர்களது பிள்ளைகள் போராடினார்கள். அவர்கள் போராடினார்கள். ஆயுதம் ஏந்தி மட்டுமல்ல, [தமக்காய்/தம்முடன்] ஆயுதம் ஏந்தியவர்களுடனும் அவர்கள் போராடினார்கள்.

இன்று முகாம்களுள் அடங்கியுள்ள எஞ்சியுள்ள சனங்களுக்கு, அவர்கள் கடந்து வந்த, எம் காலத்தில் நடந்தேறப் பெற்ற மனித அழிவு கடக்க முடியாத கனவாக நடந்தேறியிருக்கிறது. அக் கனவில், அந்நிய ஆயுதங்கள் மட்டும் அல்ல, எமது ஆயுதங்களே கூட தம் சொந்த மக்களை கொன்று, கொன்றவனாயும் கொல்லப்படுபவனாயும் ஆகிய பெரும் துரோகத்தை செய்தன. அந்த யதார்த்தத்தைக் கத்தப் போகும், எம் ஆன்மாவைக் துளைக்கும் அவர்கள்தம் அலறல்கள் எங்களை நெருங்குகின்றனவா? எங்களால் அதன் ஓலத்தைக் கேட்க முடிகின்றதா?

இதுவரை, யுத்தம் – இலங்கையின் ஏனைய சிறுபான்மைகளுடன் – பெண்களுக்கு எதைத் தந்தது என்பதற்கு நாங்கள் இலங்கையின் ஒவ்வொரு சமூக கட்டமைப்புகளுள்ளும் நுழைந்து பார்க்க வேண்டியிருக்கிறது. பெண்களது இருப்பை, அரசியலிலும் தன் இடத்தை, கேள்வி கேட்க எத்தனை பெண்கள்? பெண் அரசியல் விமர்சகர்கள்? எழுத்தாளர்கள்? கவிஞர்கள்? முன்னாள்ப் பேச்சுவார்த்தை மேடைகளில் எத்தனை பெண்கள்? ஆயுதங்கள் தவிர்த்து, தேசீயமும், ‘தேச’ அரசியலும் பெண்களுக்கு தந்தது என்ன என்பதையும், வருங் காலம் பெண்களினுடைய கரங்களினூடாக மூளையினூடாக இதயத்தினூடாக கருணையினூடாக எழுதக் காத்திருக்கிறது.

– தொகுப்பாளர்கள் –

அதே திருடப்பட்ட நிலமிருந்து

சிங்கார சீமையில.. (சினிமாப் பாடல்)

(more…)

“நாட்டின் படுக்கையறைகளுக்குள் அரசுக்கு ஒரு இடமுமில்லை’’

(more…)

வெல்கின்ற பக்கத்தைத் தேருபவர்கள் யார்

01.

இவ் வருட பெண்கள் தின ஊர்வலங்களில் ஆகட்டும், மேதின ஊர்வலங்களிலாகட்டும் உழைக்கும் மற்றும் பலதரப்பட்ட சிறுபான்மை மக்கள் குழுக்கள் இணைந்து ஆளும் பழமைவாத (கொன்சவேட்டிவ்) கட்சிக்கு எதிராய், ‘புதிய ஜனநாயகக் கட்சி’க்கான ஆதரவு குரல்கள் எழுந்தன. எளியோர் நலன்களில் அக்கறை கொண்ட சிறு குழாம்கள் மாற்றத்தினை வேண்டி ஒன்றிணைந்தன. பல சாராரின் பிரச்சாரத்தினால், முன்னெப்போதும் இல்லாதளவு ஆதரவை (குறிப்பாக பிரேஞ்சு கனடியர்களது கியுபெக் மாநிலத்தில் தேசீயக் கட்சியே பின்தள்ளப்பட்டு) ‘புதிய ஜனநாயகக் கட்சி’ பெற்றது. ‘Raise Welfare! Disability Rates! Restore Special Diet!’ ‘United we eat, divided we starve’ போன்ற கோசங்களூடாக, சமூகநல உதவிகள், சலுகைகள் தொடர்பில் நிதி ஒதுக்குவதை நிறுத்த வேண்டாமென்றும்; மருத்துவத் துறையை தனியார்மயமாக்குதல், உணவுப் பொருட்கள்-எரிவாயு விலைவாசி ஏற்றம், மத்தியகிழக்கில் தொடரும் கனடிய இராணவ நிலைகொள்ளல் என்பனவை தொடர்பில் அவை எதிர்த்துக் குரல் கொடுத்தன.
முன் ஒருபோதும் புதிய ஜனநாயகக் கட்சிக்கு வாக்களிக்காதவர்களைப் பொறுத்தவரை (ஏனெனில் அது ‘வெல்கின்ற’ இரண்டு கட்சிகளில் ஒன்று அல்ல என்பதால்!) ஒவ்வொரு தேர்தல் சமயமும் குழப்பத்துக்கு உள்ளாவார்கள். இருக்கின்ற இரண்டு சாத்தான்களில் எந்த சாத்தானால் ‘குறைந்த’ அழிவு உள்ளது என்பதை அளவிடுவதிலுள்ள குழப்பம்தான் அது. இன்னும் சொல்லப் போனால் மூன்றாம் சக்தி ஒன்றை உருவாக்க எத்தனிக்காத ஒரு வட்டத்துக்குள்ளேயே பழகிப் போன மனதின் குழப்பம். இதனாலேயே, சுருதி மாறாமல் பல நாடுகள், ஒன்று மாறி இன்னொன்று என தமக்குதவாத அரசாங்கங்களை தேர்ந்தபடியிருக்கிறார்கள்.

இதற்கு முந்தைய தேர்தல்களில் எல்லாம், புதிய ஜனநாயக கட்சிக்கு வாக்களிக்கும் சிலரைப் பொறுத்தவரை, இம் முறையும் ஆளும் கட்சி வெல்கிற வாய்ப்பு இருப்பதை அறிந்ததும், புதிய குடியேறிகள் தொடர்பில் நச்சுத்தனமான துவேசங்களைக் காவும் கொன்சவேட்டிவ் கட்சியை ‘வராமல் பண்ண’ லிபரலுக்கு வாக்களிக்கலாம் என முடிவு செய்தார்கள். காண்பவர்களிடமும் அதையே வேண்டினார்கள். சிறுபான்மை மக்களது நலன்களில் அக்கறையுள்ளவர்கள் என்றபோதும் அவர்கள் மிகுந்த அக்கறையுடனும், காப்பர் போன்ற ஒருவர் வெற்றி பெற்று வந்தால் சிறுபான்மை மக்கள் எதிர்கொள்ளக் கூடிய நெருக்கடிகளையும் மனங்கொண்டு அவ்வாறு வேண்டினார்கள். ‘இந்த முறை நாங்கள் strategically வாக்களிக்க வேண்டும்!’

எமது உத்திகள் எப்போது பலித்திருக்கின்றன? எந்த புத்தறிவும் அற்ற, ராஜதந்திர நகர்வு அல்லது strategic move போன்ற அரசியல் தரிசனங்கள் எல்லாம் கடற்கரையோரம் நல்ல மணல் கோட்டை என எமது போராட்டத்திலேயே நடந்து முடிந்த வரலாறு இருக்கையில் அவர்களுடைய அந்த ராஜதந்திரப் பரிந்துரையில் மனம் எடுபடவில்லை. தேர்தல் காலத்து எமதேயான அனுபவமான ராஜதந்திர அரசியல் உத்தியின் சிறப்பினைக் கூற சந்திரிக்காவும் ராஜபச்சேவும் மனக் கண்ணுள் சிரித்தவாறு கையசைத்தார்கள்.

கனடாவில் வரலாறு படைத்திருக்கும் தேர்தல் முடிவுகள், அவர்களது (எமது) strategy–க்கு புறம்பான உண்மைகளையே கூறுகிறது.
(1) அத்தனை புதிய ஜனநாயக கட்சியின் வாக்குகள் போயிருந்தாலுங்கூட லிபரலைக் காப்பாற்றியிருக்க முடியாது.
(2) புதிய ஜனநாயகக் கட்சிக்கு வாக்களித்த சிறுபான்மை மக்கள் தமது குரலை, தம்மாலும் மாற்றுக்களை அது அல்லது இது என்று மாற்றி மாற்றி பழைய மொந்தையிலேயே உழன்று கொண்டிராமல், ஒரு புதிய சக்தியை தேர்வு செய்ய முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.
(3) கொன்சவேட்டிவ்-ஐ வெல்ல செய்திருப்பது அவர்களுக்கு விழுந்த ‘லிபரல்’ வாக்குகளே.

பழமைவாதக் கட்சி போலன்றி, ‘முன்னோக்கான’ லிபரல் கட்சியை ஆதரிக்கிற லிபரல்கள் எப்படி பழமைவாத கட்சி ஒன்றுக்கு வாக்களித்திருக்க முடியும்? இதற்கான பதில், இரண்டுமே ‘கிட்டத்தட்ட’ ஒன்றுதான் என்பதன்றி வேறென்ன? மணிரத்னம் படங்களில் ஏனையவர்கள் கணக்கிலெடுக்காத சிறபான்மையிலும் சிறுபான்மையான மனித இருப்புகளான அலிகள் என கொச்சைப்படுத்தப்படுகிற அரவாணிகள் அல்லது திருநங்கைகள், மற்றும் பெண்கள் கண்ணியத்துடன் காட்டப்படுவது போல, சில சில விடயங்களில் ‘பரந்த’ எண்ணங்களும் மைய்யமான (பரப்புரையாய்) எண்ணமாய் பிற்போக்கு (வன்முறையின் வலிகளை கணக்கெடுக்காத தேசீய ‘வாதமும்’ கொண்ட) அரசியலிருப்பது போல இந்த எதிர்க் கட்சிகள் இருக்கின்றன. பெரும்பான்மை சனத்தொகைக்கு ‘பழகிப்போய்விட்ட’, அதனால் மாறி மாறி ஆட்சியில் ஏற்றப்படும் இந்தக் கட்சிகளுக்கிடையில் அடிப்படை முரண்பாடுகள் பெரிதாய் இல்லை என்பதையே காலத்துக்கும் அவர்களது சந்தர்ப்பவாத அரசியல் முன்(பின்?!)நகர்வுகள் அம்பலப் படுத்தியிருக்கின்றன. இல்லாவிட்டால்: கடவுள் மறுப்பு உள்ளிட்ட பெரியாரின் கருத்துநிலையை அடியொற்றி வந்தவர்கள் எப்படி பாரதீய ஜனதா போன்ற ஒரு ஜாதீய கட்சியோடு கூட்டுச் சேர முடியும்? பாலஸ்தீனத்தின் இருப்பை ஆதரிப்பவர்கள் எப்படி அதன் இருப்பை நிராகரிக்கிற இஸ்ரவேல் அரசாங்கத்தைச் சாருகிற ஒரு கட்சியை ஆதரிக்க முடியும்?

02

சமீபத்தைய வெகுசன கனடிய அரசியலிற் பேசப்பட்ட (பூதாகரப்படுத்தப்பட்ட) கப்பலில் வந்திறங்கிய புதிய அகதிகள் குறித்த அச்சம் கொன்சவேட்டிவ் இன் பிரச்சாரத்துக்கு மிகவும் உதவியிருந்தது. இந்தப் புதிய குடிவரவாளர்கள் எங்கே ‘தமது’ நாட்டை அபகரித்து விடுவார்களோ என்கிற மனப் பயம் மிகவும் ஆழமாக ஊன்றப்பட்டது. பல பூர்விகர் குழுமங்களினது பல தேசங்களாக இருந்த இந்த பெரிய நிலப்பரப்பின் இன்றைய குடியாளர்கள் (முந்தைய ஆக்கிரமிப்பாளர்கள்) தாம் இன்னொரு நாட்டை அபகரித்த நினைவு-மறதியில் வரும் புதியவர்கள் குறித்த அச்சங் கொண்டார்கள். இது தொடர்பில்தான் ‘லிபரல்களில்’ பெரும்பான்மையின் நம்பிக்கை குறைந்தது. இப் பிரச்சினையை ‘எதிர்கொள்ளத்தக்க’ தீர்வுகள் ஏதும் லிபரல்களிடம் (அவர்களது பேச்சு வல்லமையில்) இல்லை என்பதே பெரிய ஏமாற்றமாகப் பார்க்கப்பட்டிருந்தது. அதை ஆளும் சக்தி வாக்கு வங்கி நன்கு பயன்படுத்திக் கொண்டது.

கடந்த ஆட்சியில் என்ன மும்மாரி பொழிந்தது என்று பார்த்தால் நிலமை ஒன்றும் உவப்பானதாய் இல்லை. கடந்த வருடத்தின் ஜுன் மாதத்திலிருந்து: வேலைவாய்ப்பின்மை அளவு அதிகரித்துள்ளதுடன், கடந்த ஜுலை மற்றும் நவம்பருக்கு இடையில், 10,000 தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளார்கள். பெப்ரவரி 2008இலும் பாக்க, 64,000த்திலும் அதிகமான வேலை செய்யக் கூடிய வயதுடைய கனடியர்கள் வேலை வாய்ப்பற்றுள்ளார்கள் (தகவல்கள் நன்றி: www.canadauncut.net))

இதில், பெரும்பான்மை கனடியர்கள் அதிகம் வசதியற்றவர்களாய் (கணிசமான அகதிக் கனடியர்கள் வாழ்க்கைத் தரம் வறுமைக் கோட்டிற்குக் கீழவாய்), நடுத்தரவர்கக்த்தினராயே இருந்த போதும் அவர்களில் ஒரு பகுதி கொன்சவேட்டிவ்வுக்கே வாக்களிக்கும் மக்களின் ஆதரவுடன், இந்தியாவில் பிஜேபி போன்ற மதவாத கட்சி ஆட்சியில் ஏற முடிவது போல. மத்தியகிழக்கில் அடிப்படைவாதம் வெல்லமுடிவது போல. மேலும் பல நாடுகளில் தேசீயம், மதம் போன்ற மனிதர்களைப் பிரிக்கும் அம்சங்களைத் தமது உருவேற்றும் கொள்கைகளின் மையமாய் வைத்து கட்சிகள் வெல்வது போல.

துவேசமான கருத்தியல்களால் உருவேற்றப்படுகின்றவர்கள் பாதிப்படைபவர்கள் வறியவர்களே. அவர்களே அதி தீவிர அரசியலால் ஈர்க்கப்படுபவர்கள், இலகுவில் மூளைச் சலவைக்கு உள்ளாகுபவர்கள். அவர்களே தங்களைப் போன்ற ஏனைய வர்க்கத்துக்கு எதிராய் மத, தேசியஉணர்வுகள் ஊடாகத் தூண்டப் படுபவர்கள். எங்கே ஒரு முஸ்லிம் ஆதிக்கம் செலுத்திவிடுவானோ என்கிற பயம் குஜராத்தில் நரேந்திர மோடி என்கிற கொலைக் குற்றங்களுக்குரிய தலைவனை ஆட்சியில் ஏற்றுகிறது. சமூகத்தில் ஒடுக்கப்படுபவர்கள் நலன்களைக் கொண்ட இடஒதுக்கீட்டுக்கு எதிராய், பெண்ணின் கருவறை உரிமைகளுக்கு எதிராய் என, மனிதர்களது அடிப்படை மற்றும் சமச்சீரை வலியுறுத்தும் உரிமைகளை – சந்தர்ப்பவாத அரசியலாளர்களால் உருவேற்றப்படும் பேரச்சங்கள் காரணமாக – மனிதர்களே பலிகொடுக்கிறார்கள். இது அவர்களது பிள்ளைகளை, அவர்களை, அவர்களது மகள்களை, சக மனிதர்களைப் பாதிக்கும் என்கிற போதும், அதை அறியாதவர்களாய் அவர்கள் வழிநடத்தப்படுகிறார்கள். தேசீய, ஆணாதிக்க, ஜாதிய’வாதம்’கள் மனிதர்களது (சக மனிதர் குறித்த மனிதத்துவத்தினது) கண்களை மறைக்கிறது. விளைவு: அவர்களது வாக்குகளாலேயே, இவ்வளவு தூர பிரச்சாரத்தின் பிறகும், கடந்த தேர்தலில் சிறுபான்மை வெற்றியில் ஆட்சி செய்த கொன்சவேட்டிவ் கட்சி இம்முறை மாபெரும் வெற்றி பெற்று பெரும்பான்மை ஆட்சியை அமைத்திருக்கிறது.

03
‘தேசம்’ குறித்த கனவு:

ஒரு தேசத்தின் வாழ்க்கைத் தரத்தை நிர்ணயிப்பது அது வசதியானதாக, வல்லரசாக இருப்பதிலோ, அதன் இராணுவ பலத்திலோ, தன் நாசகாரப் படைகளை இன்னொரு நாட்டுக்கு அனுப்புவதிலோ, நிறைய வளங்களைக் கொண்டிருத்தலிலோ – இல்லை. மாறாக, அந்த வளங்களும் செல்வமும் தேசத்தின் சகல பிரஜைகளுடனும் பகிரப்படுவதிலும், வேலை வாய்ப்புகள், வாழ்வை உளைச்சலற்றதாக்கும் வேலைத்தள சலுகைகள், மற்றும் ஏனைய பல வாழ்வாதார உரிமைகள் கொண்டிருத்தலிலும், சுற்றாடல், மட்டும் மனித உயிர் வாழ்தலுக்கு எதிரான விடயங்களை செய்யாதிருத்தலிலும் இருக்கிறது.

தேசத்தின் பிரஜைகளின் உளைச்சலற்ற அமைதியான மனநிலைக்கு உதவுவது அவர்கள் உருவாக்கிய குடும்பங்களுக்கான சலுகைகள் (உ-மாக குழந்தைப் பராமரிப்பு மற்றும் வலுவளருக்கானவை), வேலைத்தள பாதுகாப்பு, இலவச மருத்துவம் மற்றும் கல்வித்துறை, வயது முதிர்ந்தவர் ஓய்வூதிய மதிப்புகள் போன்ற நிரந்தரக் காப்புறுதிகள் தான்.
ஆனால், இவற்றையன்றி, தேசஅபிமானம், வல்லரசுஆதல், இராணுவபலம், முதலீடுகளது வெற்றி போன்றன முன்நிலைப்படுத்தப்பட்டு, மக்கள் அவற்றில் தான் தம் வாழ்க்கைத்தரம் தங்கியிருப்பதாக நம்ப வைக்கப் படுகிறார்கள். பெரும்பான்மையான உழைக்கும் மக்களை விடுத்து, நாட்டின் சனத்தொகையில், 1 விகிதத்திலும் குறைவான முதலாளிகளது நலன்களுக்கே இந்த அரசாங்கங்கள் சேவை செய்கின்றன. கொள்ளை இலாபம் சம்பாதிப்பவர்களுக்கு வரிக்குறைப்பு, வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் தொழிலாளர்களுக்கோ வாழ்வாதார சலுகைகள், சம்பளம் என்பன குறைப்பு – இவ்வாறு தான் அரசாங்கத்தின் வறியமக்கள்-மற்றும்-முதலாளிகள் ‘நியாயத் தராசு’ இருக்கிறது. வல்லன வாழவும் அல்லன தேயவும் தான் ‘விதி’ செய்யப்படுகிறது.

அரசாங்கங்கள் செய்கின்ற இந்த நியாயம் எம் குடும்ப அமைப்புக்குள்ளும் ஒன்றும் புதிதல்ல. வசதியான குடும்பங்களில் உள்ள ஆரோக்கியமான பிள்ளைகளுக்கு உறவுக்காரர்கள் விழுந்து விழுந்து சாப்பாடு கொடுப்பதும், கஸ்ரப்பட்ட குடும்ப பிள்ளைகளைக் கணக்கெடுக்காது விடுவதும் என, இருப்பவர்களை நோக்கித் தானே கவனமும் அக்கறைகளும் குவிக்கப்படுவது நியதி?!

இந்த நியதிக்கேற்ப, அரசாங்கங்களும் பணக்காரர்களின் சேவகர்கள் ஆகின்றன. மக்களும் ஒவ்வொரு வருடமும் மாறி மாறி ஒரே நலன்களைக் கொண்ட நபர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகளின் சம்பள விபரங்களைப் பார்த்தால் புரியும், இதால் அவர்களது குடும்பங்களும் – அவர்கள் நாலு வருசமிருந்து போடுகிற வாக்குகளில் இயற்றப்படுகிற சட்டச் சலுகைகளில் – வசதி படைத்தோரும் தவிர, யாரும் வாழப் போவது இல்லை என்பது.

04
தன்னிலை அறிதல்:

மனிதர்களின் கற்பனைகளையும் கலைத்துவ வெளிப்பாடுகளையும் ஊக்குவிக்காது கலைக்கான மானியங்களை வெட்டுதல், சுற்றுச்சூழல் குறித்த சட்டங்களுக்கு தொழிற்சாலைகளை பணிய வைக்காதிருத்தல், வாடகை. அன்றாட தேவைகள் விலைவாசி ஏற்றத்தில் எவ்வித கட்டுப்பாடும் வியாபாரிகளுக்கு விதிக்கப்படாமை என அரசுகளின் வலியோர் சார்புநிலை சாதாரண மக்களின் வாழ்வை மேலும் இறுக்கியிருக்கிறது.

மனித மேம்பாட்டுக்கான சமூகத் தூண்களில் ஒன்றான கல்விச் செலவுகள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன (இதனால் நிறைய மாணவர்கள் சிறுபான்மை மற்றும் வறிய குடும்பங்களில் இருந்து வருபவர்கள் மேற் கல்வியைத் தொடர அல்லது முடிக்க முடியாதவர்களாய் இடையில் கைவிட வேண்டியவர்களாய் எல்லாம் உள்ளார்கள்). பணமிருக்கிறவர்கள் கட்ட வேண்டிய வரியளவைக் குறைத்துவிட்டு, கல்விகற்க வேண்டிய இளந் தலைமுறையைக் கல்வி கற்காமற் பண்ணக்கூடிய விதத்தில் அதிகரிக்கும் ரியூசன் செலவை மட்டுப்படுத்தாத அரசாங்கங்கள் யாருக்கானவை?

ஒரு வறிய இந்தியர், தனது வறுமையையும் வாய்ப்பின்மைகளையும் தீர்க்காத ஒரு ஆட்சியை தேர்வு செய்வதை ஒத்ததே இத் தேசத்தில் ஏனைய சிறுபான்மையினரில் ஒன்றான தமிழ் சமூகம் கொன்சவேட்டிவ் (அல்லது லிபரல்) கட்சி போன்ற ஒரு கட்சியுடன் தன்னை அடையாளங் காண்பதும்.

எந்த ஒரு கட்சியிலும் வேட்பாளராய் நிற்பதும் வாக்குக் கேட்பதும் அவரவரது ஜனநாயக உரிமைகள் தான், அதை மறுப்பதற்கில்லை. ஆனால், தேர்தல் சமயங்களில் கேட்கும் சில கோசங்களான ‘தமிழர்கள் வெல்ல வேண்டும்’ ‘எந்தக் கட்சியில் நின்றாலும் உங்கள் தொகுதியில் தமிழரைத் தேருங்கள்’ ‘தமிழர்களைப் பாராளுமன்றம் அனுப்புவோம்’ என்பனவை குறித்த எதிர்மறையான கருத்துக்களை இங்கே பகிர வேண்டியிருக்கிறது.

மேற் குறிப்பிட்ட இங்குள்ள சிறுபான்மை இனங்களது பொருளாதார, வாழ்வாதாரப் பிரச்சினைகள் தமிழர்களுக்கு இல்லையா? குறைந்த சம்பளத்தில் இரண்டு வேலைகள் என்றெல்லாம் ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்களில் தமிழர்கள் இல்லையா? அவர்களது பிள்ளைகள் கல்விச் செலவினால் சிரமப்படவில்லையா?

எப்போதும் கஸ்டப்படும் சமூகங்களுக்கு என சில இயல்புகள் உண்டு. மூன்றாமுலக சேரிகளில் உழைக்கும் வர்க்கம் கடும் வண்ணத்தில் சேலைகளை ஆடைத் தெரிவுகளை தேருவதைக் காணலாம். ஒளியும் நம்பிக்கையும் அற்ற கடும் உழைப்பை வேண்டும் கடினமான வாழ்வின் சுமைகளை அவர்கள் வண்ண வண்ணமான (மிகவும் குறைந்த விலையில் வீதியோரக் கடைகளில் வாங்கிக் கட்டும்) சேலைகளில், அணியும் ஓட்டுக் காப்புகளில் கரைத்துக் கொள்கிறார்கள்.

இந்த நாடுகளது கறுப்பு சேரிகளில் கறுப்பின அம்மாக்கள் கடும் சிவப்பு நிறத்திலும் (எமது பார்வையில்) கண்ணைக் குத்தும் கலர்களிலும் ஆடைகள் அணிந்து கொண்டாட்டங்களில் நடனமும் பாட்டுமென தமது வாழ்வின் சுமைகளை சற்று நேரம் இறக்கி வைக்கிறார்கள்.

அது போல கனடாவில் இருப்பதாகக் சொல்லப்படுகிற 300,000 தமிழர்களில் போரில் இடம்பெயர்ந்தவர்கள் பலரும் கல்வியை இடைநிறுத்தியும், சட்டத்துக்கு விரோதமான வகையில் குடியேறியும், தம் வாழ்வை கடினமான பாதையாகவே கண்டவர்கள். அவர்களில் நலுங்காமல் புத்திஜீவிகளாக பல்கலைக்கழங்களிலும் காரியாலயங்களிலும் வேலை பார்ப்பவர்கள் குறிப்பிட்ட சதவீதத்தினரே. மற்றவர்கள், பெரிய வீடுகள், கார்கள் வைத்திருந்தாலும் கூட (அந்த ஆடம்பரங்களுள் தமது கடின வாழ்வின் கடுமையை மறைக்க முடிகிற போதும்), அதற்காய் கடினமாய் உழைக்கும் (முக்கியமாய் உடல் உழைப்பை நம்பிய) வர்க்கத்தினரே.

நிலமை இவ்வாறிருக்க, கொன்சவேட்டிவ் கட்சியில் போட்டியிடும், யாரேனும் ஒரு தமிழர் கொன்சவேட்டிவ் கட்சிக்குரிய மேட்டுக்குடி வர்க்கத்தைச் சேர்ந்தவராய் இருந்தாலுமே கூட (அதிக வருமானத்துடன், எனினும் சம்பாத்தியத்துக்கான அதிக வரி கட்ட விரும்பாதவராக இருப்பினிலுங் கூட) அவர் ஒரு தமிழ்த் தேசீய வாதியாக இருப்பின், அவர் வாக்குப் போடுமாறு கேட்கிற ‘அவரது மக்கள்’ எத்தகைய தொழில் வாய்ப்புகளில் இருக்கிறார்கள்? தொழிற்சாலைகளிலா பல்கலைக்கழகங்களிலா அல்லது வியாபாரிகளாகவா? எத்தனை விகிதம்? இன்று கப்பலில் வந்திறங்கும் தமிழர்களது உரிமைகளை பறிக்கக்கூடிய ஒரு கட்சியை தமிழர் நலன்களுக்கு ஆதரவாளர் என சொல்லிக் கொள்பவர்கள் எந்த அறத்துடன் ஆதரிக்க முடியும்? இங்கு வாழப் போகும் தமிழ் மக்கள் (தாங்கள் உள்ளிட்ட ஏனைய சிறுபான்மை மக்கள் குறித்தும் பொறுப்புணர்வுடன் சிந்திக்க வேண்டிய தமிழ் சமூகம்) தமது நிலைமைக்கும், ஏனைய சிறுபான்மை மக்களுக்கும் பாதகம் விளைவிக்கக் கூடிய பிரதிநிதியை அவர் தமிழர் என்கிற ஒரே ஒரு காரணத்துக்காக மட்டும் எப்படித் தேர்ந்தெடுக்க முடியும்?

துரதிர்ஸ்டவசமாக, தமிழர்களுடைய சந்தர்ப்பவாத அரசியலை அன்றி வேறு எதையும் இது காட்டி நிற்கவில்லை. (வெல்கிற பக்கத்தில்) எமக்கு யார் இடம் தருகிறார்களோ அங்கு நிற்க தயக்கமில்லாத தனக்கென ஒரு கொள்கையை வகுக்காத மனமே இங்கும் தொழிற்படுகிறது.

இலங்கை அரசாங்கத்துடன் ‘சேர்ந்து’ நிப்பவர்கள் என ஒருபாலாரைத் தூற்றுவதும், அதே சமயத்தில், (கப்பலில் வந்திறங்கும்) எமது மக்களில் ஒரு பகுதிக்கு மட்டுமல்ல இங்குள்ள ஏனைய (பல அநீதிகளை கடந்து இங்கு வந்த) சிறுபான்மை இனங்களுக்கும் அநீதி இழைக்கக் கூடிய சட்டதிட்டங்களை தன்னகத்தே கொண்டுள்ள கட்சியை ஆதரிப்பதும் முரண்பாடானது அல்லவா? (அதன் சட்டதிட்டங்களை மாற்றுவதெனில் ஒரு மாமாங்கம் வேண்டும், அதிலும் ஒரே ஒரு தமிழர் தேர்வாகி, வெள்ளை பெரும்பான்மை கட்சியுள் அதன் அத்தனை சிக்கல்களுள் எதை என்று மாற்றுவது?!)

எல்லாவற்றிலும் விட, ‘எந்தக் கட்சி என்றாலும் சரி’ என, நமக்கென ஒரு கொள்கையற்ற (யாரைச் சார்வது யாரைச் சார்வதில்லை என்கிற தீர்க்கமான அரசியல் பார்வையற்ற) சந்தர்ப்பவாதத்தை இட்டு இன்னமும் நாம் பெருமைப்பட என்ன இருக்கிறது? அது எந்தவிதமான வெற்றிகளை – ஒரு இனமாய் – இதுவரை எமக்கு அள்ளிக் குவித்திருக்கிறது?

05
வெல்லாத பக்கத்தை சேர்ந்த கட்சியின் வெற்றி

நடந்து முடிந்திருக்கும் கனடிய பொதுத் தேர்தலில் ‘புதிய ஜனநாயகக் கட்சி’யில் போட்டியிட்ட தமிழர் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினர் ஆகியிருக்கிறார்; அவர் ஒரு பெண் என்பதுடன் இத் தேசத்தில் வந்தேறிய சிறுபான்மை இனக் குழுமத்திலிருந்து அவர் தேர்வாயிருக்கிறார் என்பதும் அழுத்தப்பட வேண்டிய ஒன்று.

உண்மையில் புலம்பெயர்ந்த சூழலில், பொதுத் தேர்தலில், இந்த வெற்றிக்கு, இது தனியே தமிழர்கள் என்றில்லாமல் ஏனைய இனங்களது நலன்களுடன் ஒத்திசைந்திருந்தது தான் காரணம் ஆகியிருக்கிறது. அத்துடன் புதிய ஜனநாயகக் கட்சி போன்ற கட்சியில் தான் புதிய குடிவரவாளர்களுக்கும் வெள்ளையர் அல்லாதோருக்கும் இளையொருக்கும் பெண்களுக்கும் ‘ஒதுக்கீடு’ அதிகம்.

பத்தொன்பதே வயதான பதின்ம வயது பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட 6 பல்கலைக்கழக மாணவர்கள் இதே கட்சியில் பா.உறுப்பினர்களாகத் தேர்வாகியிருக்கிறார்கள்! தேர்தலுக்கு முன், பல்கலைக்கழக கல்விகான வங்கிக் கடனைப் பற்றி உளைச்சலுற்றுக் கொண்டிருந்திருக்கக் கூடிய இவர்களது வருடாந்த சம்பளம் இனிமேல்: 157, 000 கனடிய டொலர்கள்! இதே கட்சியில் தான் அதிக பெண் உறுப்பினர்களும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். (இலங்கையில் தமிழ் பாராளுமன்ற அரசியலில் எல்லாம் ஏன் புதிய அலைகள் வீசுவதில்லை? ஏன் எப்போதும் பழம்பெரும் தலைவர்களே இருக்கைகளில் குந்தியவாறு? மனதில் இத்தகைய கேள்விகள் எழுகின்றன)

கடந்த காலங்களில், (உள்ளுர், மாநிலத் தேர்தல்களில்,) சமூகநலன்களில் அக்கறைப்படுகிற அதற்காக செயற்படுகிற தமிழ் செயற்பாட்டாளர்கள் ‘புதிய ஜனநாயகக் கட்சி’ வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்ய கதவுகள் தட்டியபோது, பல தமிழ் நண்பர்கள், ‘தமிழர்’ என்பதற்காக லிபரல், கொன்சவேட்டிவ் நபர்களுக்கு வாக்களிக்கச் சொன்னார்கள். ‘இவை தான் வெல்லுகிற கட்சிகள். ஆகவே வெல்லுகிற ஒன்றை தேர்வதூடாக எமது குரலை அவர்களூடாக நாங்கள் ஒலிக்கச் செய்யலாம்’ என்றார்கள். இவ்வாறாய், ‘எப்போதுமே புதிய தரிசனங்களை, புதிய மாற்றங்களை ஏற்படுத்துதல் சாத்தியமில்லை’ என்று கூறி வந்தவர்களது நம்பிக்கைகளை இந்த வெற்றி பொய்ப்பித்திருக்கிறது. எம் பெரும்பான்மைத் தமிழர்களைப் பொறுத்தவரை இவ்வளவு காலமும் ‘வெல்கிற’ பக்கத்தை சார்ந்து நின்று, ஓடுவதில் நன்கு ஓடுற குதிரைக்கு பந்தயம் கட்டிய, தம் பாரம்பரியத்தை மீறி தமக்குரிய கருத்துநிலைக்கேற்ப ஒரு கட்சியைத் தேர்ந்து, அதன் வேட்பாளருக்கான ஆதரவை, பத்திரிகைகள், தனிநபர்கள், இணைந்து வழங்கி, பின்னிருந்து இயக்கி, வெற்றி பெறச் செய்திருப்பது மிக மிக முக்கியமானது. அத்துடன், மதிக்கப்படவும் வளர்த்தெடுக்கப்படவும் வேண்டிய பாரம்பரியம்.

இனி வரும் ஆண்டுகளில் கொன்சவேட்டிவ் ஆட்சி (கறுத்த, வெள்ளை, மண்ணிற சகல எளிய கனடிய வர்க்கங்களுக்கும்) சிறுபான்மை குழுக்களுக்கு பெரும் நெருக்கடிகளை கொண்டு வர இருக்கிறது. அடிப்படையில் ஒரு முதலாளித்துவ நாடான கனடாவில், அந்த நெருக்கடிகளின் பின்னாவது இந்த ஆட்சியின் சராசரி மக்களுக்கு எதிரான போக்குகள் மக்களால் அடையாளங் காணப்பட்டால் சரிதான். ஆனால்த் தமிழர்களைப் பொறுத்தவரை, மீண்டும் மீண்டும் வலியுறுத்த வேண்டியிருப்பது இதுதான்: இந் நாட்டின் ஏனைய சிறுபான்மை இனங்களுள் ஒருவராக நாங்கள் எம்மை அறிவூட்டிக் கொள்ள வேண்டும். எது எமக்குரியது, எது எம்மைப் பொன்ற மக்களின் நலன்ககளுக்கு ஏற்புடையது என்பன தொடர்பில் விழிப்புணர்வு வேண்டும். அதில், நிச்சயமாய், ‘தமிழர்களுக்கு வாக்களியுங்கள்’ என்கிற வாதம் ஏற்புடையதானதே அல்ல.
நம்பிய, ராஜதந்திர ஏனைய பிற கோட்பாடுகள் எம் மக்களுக்கு எதையும் தராததால், இனி மக்கள் தம் சுயசிந்தனையை விடாது, தமக்கான அரசியலைத் தேடட்டும். அவர்கள் சுதந்திரமாக முடிவெடுப்பவர்களாக உருவாகட்டும். எமக்கு உதவக்கூடிய ஓடாத குதிரைகளையும் ஓடச் செய்யட்டும்! அதை செய்யும் சக்திகளாகுவதற்கு அவர்கள் தகுதியானவர்களே. இந்தத் தேர்தல் அதைத் தான் நிரூபித்துப் போயிருக்கிறது. வெல்கிற பக்கம் என்பதை மக்களும் தீர்மானிக்க முடியும்.
~~~~

– பிரதீபா கனகா தில்லைநாதன் –

நன்றி: தாய்வீடு, May 2011 issue