அங்கீகாரங்களை வேண்டி நிற்கும் ஓமனக் குட்டிகள்

ஹொலிவூட் ஊடாக ஆதிக்கஞ் செலுத்தும் ‘அமெரிக்க வெகுசன பண்பாடு’ சிறிய பண்பாடுகளை மாற்றி இன்று உலகெங்கும் ஒரேவித ஃபாசன் உடைகளை பழக்க வழக்கங்களை அங்கஅசைவுகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இதனால், அத்தகைய பெரிய குடையின் கீழ் உள்ள பண்பாடுகள், நாடுகள் என்பன எப்போதும் பெரிய தேசங்களது, அதன் பெரிய மனிதர்களது அபிப்பிராயங்களை உயர்வாய் நினைத்தபடி அதற்காய் ஏங்கியபடி இருப்பதும் நிகழ்கிறது. ஏலவே சென்ற கட்டுரையொன்றில் குறிப்பிட்டிருந்தது போல, ஒரு பெரும்பான்மைச் சமூகத்துக்குக் கீழிருந்து வருகின்ற ‘சிறிய’ நாட்டவர்களது இந்த ஏக்கம் அவர்களது படைப்பாக்கங்களில் ஓங்கியிருக்கக் காணலாம்.

அந்த வகையில், சினிமாவாகட்டும் இலக்கியம் ஆகட்டும் அரசியல் ஆகட்டும் எம்மில் ஆதிக்கஞ் செலுத்தும் சக்தியாக தமிழகம் (இந்தியா) இருக்கிறது. அங்கிருந்து தான் எமக்கான அங்கீகாரங்களை நாம் பாத்திருக்கிறோம்.

இந்த எதிர்ப்பார்ப்பின் அடிப்படையிலான, தமிழக எழுத்தாளர்களுக்கும் ‘இலங்கை’, புலம்பெயர் எழுத்தாளர்களுக்குமான இவர்களை அவர்கள் (இந்தியர்கள்) அங்கீகரிக்காத பிலாக்கணங்களைப் (ஒப்பாரிகளைப்) படிக்கையில் ஓமனக் குட்டி தான் ஞாபகத்தில் வந்தாள், அதிலிருந்தே தொடங்கும் இக் கட்டுரையின் பேசுபொருள்.

அமரர் சுந்திர ராமசாமியின் ‘ஜே ஜே சில குறிப்புகள்’ நாவலில் வருகிற பாத்திரம் தான் ஓமனக் குட்டி எனுமோர் கேரளத்துப் பெண் பாத்திரம். சின்னப் பெண்ணான ஓமனக்குட்டி பத்திரிகைகளில் வருகின்ற அழகழகான வண்ணப் படங்களை கத்திரித்து எடுத்து, பூக்கள் வண்ணத்துப் பூச்சிகள் என்பனவைக் கொண்ட அவற்றை அப்பியாசக் கொப்பியில் ஒட்டி, ஒவ்வொன்றின் அருகேயும் கவிதை என்றும் ஒன்று எழுதி வைத்திருப்பாள்! அனேகமாக அவள் சமீபத்தில் கேட்ட சினிமாப் பாடலொன்றின் சாயலில் இருந்திருக்கக் கூடிய அவை, கவிதைகளல்ல, அவற்றில் தனித்தன்மையுமில்லை. ஒரு ரயில்ப் பயணத்தில் தனதந்தக் கொப்பியை அவள் மிகவும் மதிக்கின்ற ஜே.ஜேயின் அபிப்பிராயம் வேண்டிக் காட்டுவாள். ஜே.ஜே என்கிற பெரும் அறிவாளியால் அந்தப் பிள்ளையின் தனித்தன்மையற்றதான அசட்டுத்தனத்தை இரசிக்க முடியவில்லை. தலையில் அடிக்காத குறையாய், கொப்பியை அவளிடமிருந்து வேண்டியவன் அதனை யன்னலுக்கு வெளியே எறிவான்.

அப்போதின் ஓமனக்குட்டியின் முகம் வாசகர்களுக்குத் தெரிவதில்லை. மாறாக, வாசகர்களை அவனது ஆணவம் தான் வசீகரிக்கிறது. தயவுதாட்சண்யமற்ற ஜே.ஜே மீதான ஈர்ப்பாய் “இப்படி ஒருத்தனோ.. அறிவின் அகங்காரமோ… அவன் உண்மையில் இருந்தானோ வாழ்ந்தானோ…” என்பதான கிளர்ச்சி ஏற்படுகிறது. அது போலவே, சினிமா உலகத்தில் ‘திமிர் பிடித்தவனாயும் நடிகர்களை “அறைகிற” இயக்குநர்களாயும் கலைஞர்களாயும் சிலரைக் கூறுவார்கள்; கூடவே, திமிர் அவர்தம் மேதமையிலிருந்து வருவது என்பதாகவும் காரணம் சொல்லப்படும். அந் நாவலாசிரியர் வியப்பது போல அறிவுக்கும் அற்ப ஆயுசுக்கும் அல்ல, மாறாக ‘அறிவுக்கும் அகங்காரத்துக்கும் என்ன பந்தமோ?’

“ஜே.ஜே சில குறிப்புகளைப் பொறுத்தவரை” – சுந்தர ராமசாமி இங்கு வந்திருந்த போது, அவருக்குத் தான் தனது துணையை அறிமுகம் செய்து வைத்தபோது “இது தான் என் ஓமனக் குட்டி’ என அறிமுகம் செய்ததாக குருஷேவோ யரோ பத்தாண்டுகள் பழைய “காலம்” சஞ்சிகையில் எழுதியிருந்தது ஞாபகம்.

பின்னர் தூர்ந்து போயிருந்தாலும் கடந்த 10 – 12 வருடங்களில் குறிப்பிட்டளவு தேடலும் பார்வையும் இலக்கியம், நாடகம், திரைப்படத் துறைகளில் உள்ள ஒரு பார்வையாளர் மற்றும் வாசகராய் – இத் துறை சார் விமர்சனங்களாய்ச் சில அவதானங்களை மீண்டும் மீண்டும் காணக் கூடியதாய் இருக்கிறது. அது என்னவெனிற் காலத்துக் காலம் – எங்களது அழைப்பின் பேரிலேயே – இங்கு ஒருவர் வருவார். இவர்களுக்கு நாவல் எழுதத் தெரியாது. “சரியாய்” ஆங்கிலம் பேசத் தெரியாது. திரைப் படங்கள் எடுக்கத் தெரியாது. இவ்வாறு ஏதோ போகிற போக்கில் கூறி விட்டுப் போவார்.

அவர்கள் விட்டுச் செல்கிற அந்த அபிப்பிராயமானது எமது தாழ்வுப் பசிக்கு இரையாகும். எங்களுக்கு அப்படிக் கூறிச் செல்கிறவர்கள் படைப்புகள் கருத்துகள் தொடர்பில் விமர்சனங்கள் கூட இருக்கும். எனினும், நாங்கள் யாரை வெறுக்கின்றோமா அவரது வாயாலேயே மகரிஷிப் பட்டம் வாங்க – புகழப்பட – ஞானஸ்தானம் செய்யப்பட காத்திருக்கிறது எங்கள் மனம். பிரபல எழுத்தாளர், புத்திசீவி, இயக்குநர் – அவர்கள் யாராகவும் இருக்கலாம் – தாங்கள் ‘உயர்ந்தவர்கள்’ என்கிற விம்பம் சுப்பீரியர் கொம்பிளெக்ஸ்-ஐ உடைய அவர்களாலும், அவர்களது அங்கீகாரத்தை வேண்டி நிற்கும் இன்ஃபீரியாட்டிக் கொம்பிளெக்ஸ் உடைய எங்களாலுமே உருவாக்கப் படுகின்றது.

இப்படிப் பல விம்பங்கள் இலக்கியச் சூழலில், தலைமைப் பீடங்களில், மக்களால் வாசகர்களால் கட்டியெழுப்பப் படுவதுண்டு. இந்த விம்பங்கள் இல்லாமல் அவர்களால் வாழவே முடியாதோ என்று தோன்றும் அளவுக்கு அவர்களை அவர்களே உருவாக்கிய விம்பங்கள் பாதிக்கும்; விழுங்கும். இருந்த போதும், புதிய புதிய விம்பங்களை உருவாக்குதல் நின்றபாடில்லை.

=மற்றவரது அபிப்பிராயங்களுக்காக வாழ்தல்=

பார்க்கையில், சதா தம்மைக் கண்காணிப்பதும், மதிப்பிடுவதுமாய் இருப்பவர்களுக்கு/இருக்கின்றவர்களுக்கு தம்மை நிரூபிக்கவேண்டிய இந்தக் கஸ்டம் (அல்லது பிரயத்தனங்கள்) எல்லாம், மத்தியதர வர்க்க மனநிலையை ஒத்ததாகவே தோன்றுகின்றது. அவர்கள் வாழ்வதே பிறருக்காகத் தான். தம்மை வருத்தி, பிறர் சொல்கிற ஒவ்வொரு சொல்லுக்கும் (இனிமேலும் பிறர் சொல்லப் போகிற ஒவ்வொரு சொல்லுக்கும் முற்கூட்டியே) குடும்பத்தில் அனைவரையும் வருத்தி “அவை என்ன நினைப்பினம், இவை என்ன நினைப்பினம்” என ‘சமூக நியதிகளுக்கு’ அமைய ஒத்து ஓடி ஓடி, செத்த வீடானாலும் சரி திருமண வீடானாலும் சரி அந்த சமூகத்தைத் திருப்திப் படுத்தவே முடியாது நிற்கும்-ஓடும் அந்த மத்தியதர வர்க்கம்.

அது போல கருத்து ஜாம்பவான்களும் பெரிய தேசத்துப் பண்பாடுகளும் எப்படித்தான் நாங்கள் அவர்களுக்கு நடந்து காட்டினாலும், “உன் நடையில் ஏதோ ஒரு தவறு இருக்கிறது நீ (என்னைப் போல) சரியாய் நடக்கிறாய் இல்லை” என்றே எம் காதுகளில் தொடர்ந்தும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன(ர்). என்றென்றைக்கும் தம் அழகு குறித்த திருப்தியின்மை எனும் தாழ்வுணர்ச்சியில் (போதாமையில்) பெண்களை விடுவதூடாக தமது கொம்பனிகளது ‘அழகு படுத்தும்” பொருட்களை விற்கக் கூடியதாய் உருவாக்கி வைத்திருக்கும் முதலாளித்துவ அழகு சாதனச் சந்தைகள் போல, பின்தொடர்ந்து வரும் அந்தக் குரல்கள், எம்மைத் தீராத பசியில் விட்டு விடுகின்றன.

எப்போதும் தமக்கு கீழுள்ளவர்கள் எனச் சிலரை வைத்திருப்பதிலும், ஏதாவது ஒரு சர்ச்சையைக் கிழப்பி விட்டு அதில் (தாழ்வுணர்வின் கரைச்சலில்) அவர்களை அல்லாட விடுவதிலும் தான் அனேகமான அங்கீரிப்பு மனிதர்களது காலம் ஓடும். பள்ளிக் கூடங்களில் பலசாலியான பிள்ளைகள் (உடலிலும் மனதிலும் இன ரீதியாகவும்) நோஞ்சான்களைப் பார்த்து ‘தனது பாரக்கிரமத்தை’க் காட்டுவது போல. அஞ்சுவதற்கு யாரோ இருக்கும் போதே, தமது பலத்தை பறைசாற்றுவதற்கான ‘இடமும்’ இருக்கும். அது பல்வேறு சமூகங்கள் ஆனாலும் சரி இலக்கிய உலகம் ஆனாலும் சரி இப்படித்தான் இருக்கிறது.

இங்கே அவர்கள் கூறுவது போல அவர்களைச் சுற்றியே விட்டில்கள் போல பறந்தவாறு எந்த புதிய வாசிப்பும் புதிய சிந்தனையும் இல்லாமல், நாம் எந்தத் துறையில் பிரகாசிக்க விரும்புகிறோமா (பத்திரிகைத்துறை, அரங்காடல் அல்லது திரைப்படத் துறை அல்லது கவிதை கதை கட்டுரை அது எதுவாகவும் இருக்கட்டும்) அது தொடர்பான தேடல்களிலும், — இவ்வளவு காலமும் எமக்கு முன் இதே துறையில் இருக்கின்றவர்கள் ‘போல”(வே) செய்யாமல் அல்லாமல் எப்படி “வேறு” புதிய முறைகளில் செய்யலாம் என்கின்ற — பயிற்சிகளிலும் ஈடுபடாமல் இருப்பதால் நாம் அந்த ஜாம்பவான்களுக்கே உதவி செய்கிறோம் – அவர்கள் தம் பலத்தை உறுதி செய்ய.

எப் பொருளிலும் (அதை எவர் வாய் சொல்லக் கேட்பிடினும்) அதன் மெய்ப் பொருள் காணத் தெரிந்த புத்தி வளர்ந்த ஒருவருக்கு எதற்கு தேவை மற்றவர்களுடைய அங்கீகாரம்?! பள்ளிக்கூடங்களிலே கூட மரபான கற்பித்தல் முறைகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டு சீர்திருத்தத்துக்கு உள்ளாகியிருக்கின்றன. ஆசிரியர் பிரம்புடன் (அதிகாரம் மிக்கவராக) முன் நிற்க, அவருக்கு கீழே மாணவர்கள் பணிவுடன் நிற்பதுக்கு மாற்றான கற்பித்தல் முறைகள் – தனியே பணம் சம்பாதிப்பதற்கு தயார் செய்யும் கல்வியை அன்றி தோழமையுணர்வை சகோதரத்துவத்தை கேள்விகேட்கும் பண்புகளை – மனிதநேயத்தை வளர்க்கும் கற்பித்தல் மாற்றுமுறைகள் பரிந்துரை செய்யப்பட்டிருக்கின்றன. அவையே சமூகநலன்’ சார் கல்விக்கான அடிப்படை என முன்வைக்கப்பட்டிருக்கிறது. அப்படியிருக்க இந்த இலக்கிய, சினிமா, அரசியல் ஜாம்பவான்கள் கையில் பிரம்புடன் ‘தண்டனை’ தரவல்ல தலைவர்களென எம்மை மதிப்பிடும், தூற்றும், அங்கீகரிக்கும் அதிகாரத்தை நாமாயே எடுத்து ஏன் அவர் கையில்க் கொடுக்க வேண்டும்?

=”மாதிரி’களும் தனித்தன்மையும்=

விளையாட்டுகளில் குறிப்பிட்ட புள்ளிகள் “வெற்றி”யை நிர்ணயிப்பது போல, ஒரு நிர்ணயிப்பானை வைத்துக் கொண்டு, எம்மில் நம்பிக்கையற்று, எமக்கு சம்பந்தமில்லாத வாழ்க்கையை மாதிரியாய்க் கொண்டு, நாம் ‘மாதிரிகளை’ உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். சினிமா எடுத்தால் அது தமிழ்சினிமாவைப் பிரதி செய்து. கதை எழுதினால் அதன் கதாபாத்திரம் தமிழக பேச்சு வழக்கைப் போய்ப் பேசிக் கொண்டு. ஆனந்தவிகடனில் வந்தால் நல்ல கதை; காலச்சுவட்டில் வந்தால் என அந்த அந்த – நாம் மதிக்கப்பட விரும்புகிற வட்டத்தைப் பொறுத்து – வரம்பு போடுகிறோம். எமக்கென எம்மை நிர்ணயிப்பான், தொட வேண்டிய சிகரம் இருக்கிறது. அந்த சிகரங்களுள் ‘ஒத்துப் போகக் கூடிய’ ‘மாதிரி’ ஒன்றை செய்துவிட்டால், போதும், அதற்கு மேல் வளர்ச்சி (தேவை) இல்லை.

இங்கே தான் தனித்துவம் என்கிற ஒன்று வருகிறது. கலைகளின் அழகே பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்கள் பார்த்து வந்த அதே வானத்தையும் பூவையும் ‘ராவில் தேயும் பூரண நிலவையும் பாடுவதற்கும், காதலென காமமென தாம் உணர்ந்துவந்த இன்னோரன்ன உணர்வுகளை இசைப்பதற்கும் அவர்களிடம் (மனிதர்களிடம்) இருக்கிற மொழியில் இன்னமும் புதிய வெளிப்பாடுகள் மிஞ்சியிருக்கின்றன என்பதே. இனியும் எமக்குப் பிறகும் அது தொடரப் போகின்றது என்பதும், பழைய எழுத்துக்களைக் கொண்டு பழைய மொழியைக் கொண்டு மனிதர் தமது கற்பனை வளத்தினால் படைப்பாக்க ஆற்றலினால் புதிய கருவிகளை சொற்களை இலக்கியங்களை உருவாக்க முடிவதும் என்பதுமேயாகும்.

யாரையோ போலச் செய்த ‘மாதிரி’ப் படைப்புகளில் அது கிடையாது. அதில் எமது கற்பனை, எம் ஒவ்வொருவருடையதுமான தனித்தனி படைப்பாற்றலின் ரசங்களோ சவாலோ கிடையாது. அத்துடன், கலைகளைப் பொறுத்தவரையில், மற்றவர்களது மதிப்புரை வேண்டி எழுதப்படுபவை நீண்ட காலம் நிலைக்க முடியாது; அவை வெகுசன உலகுள் –ஃபாஷன் உலகில் ஃபாட் -கள் (Fads) போல– அவ்வப்போது வந்து போக முடியுமே தவிர – தங்காது. நதியா கிளிப் போல!
ஆகவே, குறுகிய அங்கீகாரங்களை நோக்கிய ஏக்கத்தினை விட்டுவிட்டு, ஜாம்பவான்களது குரலை மறந்து விட்டு, மூன்றாம் நபராய் எமது வெளிப்பாடுகளில் மூக்கையும் இன்ன பிறவையும் நீட்டியபடி இருக்கும் சமூகத்தின் நுழைதலை மறுத்து விட்டு, – சமூகர் எமக்கு அனுமதிக்காத – திறந்த சிந்தனைகளுக்கும் அனுபவங்களுக்கும் எம்மை நாம் அனுமதிக்கின்ற போதே தனித்துவமான படைப்புகள் உருவாக முடியும். உருவாக வேண்டும்!

இரண்டு உலகங்கள்:

01
மிகவும் அறியப்பட்டவராக பின் நாட்களில் வளரும் ஒரு கவிஞர் அப்படி ஆவதற்கு முன் எழுதிய முதல் கவிதை (முதல் காலடி) அவர் எழுதிய காலத்தில் எவ்வித தனித்தன்மையுமற்ற ஒரு வெளிப்பாட்டு முயற்சியாகவே இருந்திருக்கக் கூடும். அவரது ஆர்வமும், வாசிப்பும், தொடர் தேடலும், அவற்றாடாக தன்னை தான் சார்ந்த சூழலில் தொடர்ந்தும் புதுப்பித்துக் கொண்டு இருக்கும் தன்மையுமே அவரை ஒரு சிறந்த எழுத்தாளராக காலப் போக்கில் உருவாக்கியிருக்க முடியும்.

ஜாம்பாவன்களாய் உருவாகும் ‘அங்கீகார வழங்கிகளாக’ பார்க்கப் படுபவர்கள் ‘தம்’ ஆரம்பங்களை மறந்து விடுகிறார்கள். எல்லோரும் திருஞானசம்பந்தர் ஆகிவிடுகிறார்கள்… இதனால் பல சந்தர்ப்பங்களில் இந்த ‘அங்கீகார வழங்கி’களுக்கும் ஆரம்ப கட்டத்தில் நிற்பவர்களுக்கும் இடையேயான பொருதுதலை காணக் கூடியதாய் இருந்திருக்கிறது. ஒரு சிகரத்தின் மேலே நின்று கீழே பார்த்தால் பார்வை எப்படி இருக்கும்? தாழ்வாய்த் தானே?

02
இத்தகைய இயல்புடைய அவர்களது மதிப்பீடுகளில் குறிப்பிட்ட படைப்பு உருவான பிரதேசம், அதன் சூழல், பின்னணி என்பன கவனத்தில் இருந்து தவறுகின்றன. மரபுரீதியான பள்ளிக்கூட றிப்போர்ட் கார்ட்-இல் கூட ஒரு பிள்ளையின் கல்வி பெறுபேறு மாநில மட்டத்துக்குச் சமாந்தரமாகவா, அதைவிட அதிகமாகவா, அல்லது குறைவாகவா என்பன மதிப்பிடப்படும். அந்த ஒவ்வொரு பெறுபேறுக்குப் பின்னாலும் அதை அந்த மாணவர்கள் எடுப்பதற்கான சமூக காரணிகளும் இருக்கின்றன. அந்த வகையில், சொன்னது சொல்லல் பல்கலைக்கழக மற்றும் ஆய்வு மாணவர்கள் ஆய்வாளர்கள் வரலாற்றாசிரியர்கள் செய்கிற போது தான் குற்றமே தவிர படைப்பாக்கத்துக்கு புதியவர்களாய் சிறுவர்களாய் ஆரம்பநிலைகளில் இருக்கின்றவர்கள் செய்கின்ற போது அல்ல. உலகமயமாதல் இங்கே ஒரே சமயத்தில் *கோம்பிளான்* [Complan – பால் மா] குழந்தைகளையும் உயிர்ச் சத்தற்ற போதிய வளர்ச்சியற்ற (வளர்ச்சியேயற்ற) குழந்தைகளையும் தந்துள்ளது.

கல்வி அறிவு பெற்று மூளை வீங்கிய ஒரு பின்னணியிலிருந்து வந்தவர், அப்படியல்லாத இலங்கையின் பிற குறிப்பிட்ட பிரதேசங்களிலிருந்து வருகிற “புதிய’ –ஆனால் பழைய கருத்துக்களைக் காவும்– குரல்களைக் கண்டு களைப்புறலாம். “இன்னும் எத்தனை காலத்துக்கு இதைப் பற்றியே கதைக்க போறிங்க. தத்துவங்கள் எங்கையோ போயிற்று. நாங்க எங்கையோ போயிற்றம்” இவ்வாறு சொல்லலாம். உ-மாக, ‘கற்பழிப்பு’ என்றொருவர் இன்னமும் பாவிப்பதையிட்டு தலையில் அடித்துக் கொள்ளலாம். அந்த சலிப்பும் கூட தன்னளவில் நியாயமானதே.

யுத்தம் எமது மொழியில் குறிப்பிடத் தகுந்த மாற்றங்களை இலக்கிய – மொழி – ஊடகத் துறைகளில் கொண்டு வந்தது.
“பார் பார் போராட்டத்தில்
ஆண் வதை பட்டால்
தியாகம் என்பதும்
பெண் வதை பட்டால்
கற்பிழப் பென்பதும்…”
எனச் சொற்களிலிருக்கிற ‘நியாயமின்மைகளை’ “ஆதிக்க சிந்தனையைச் சாடிய வ.ஐ.ச.ஜெயபாலனின் கவிதை வரிகளில் தொடங்கி, இந்த சொல்லாடல்கள் தொடர்பாய் கணிசமான விவாதங்கள் அறிவுத் தளத்தில் நிகழ்ந்திருக்கின்றன. எனினும், இவை நடந்த காலத்தில், அதற்குள் வாழ்ந்து, அந்த அனுபவங்களுடன் வெளிப்பட்ட இலக்கிய-அரசியல் சூழலிலேயே கூட இதன் பாவனை “பாலியல் வன்முறை” என்று முழுமையாய் வந்திராத போது, இலங்கையில் இந்த விவாதங்களை வாசித்திராத, இந்த விவாதங்களே நிகழ்ந்திராத (நிகழ வாய்ப்பற்ற) பின்தங்கிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் அப்படி உபயோகிப்பதையிட்டு புத்தியீவித்தனத்தை காட்ட முடியுமா?

‘ஒரு மட்டத்தில்’ எத்தனை அறிவுசார் விவாதங்கள் தான் நடந்தாலும், இன்னொரு மட்டத்தை அவ் விவாதங்கள் போய்ச் சேராத சமூக புற நிலைக் காரணிகளும் அமைந்தே விடுகின்றன. அப்படியாய், சேராமைக்கான காரணிகள் இருக்க மட்டும் –சமூக மாற்றத்தை விரும்புகின்ற அறிவுப் பகிர்வே சமூக விரிவிற்கான முன்னேற்றத்துக்கான மூலதனம் என நம்புகிறவர்கள்– இத்தகைய சமமின்மையைச் சரி செய்யவே முயலலாம்.

அத்துடன், ஏதேனும் ஒரு சமூக நலன் சார் செயற்பாட்டை கொண்டு செல்ல விரும்புகிறவர்கள், தனியே ‘மிகச் சிறந்த’-வற்றை மட்டும் குறிவைத்துச் செயற்பட முடியாது (மிகச் சிறந்த திரைப்படங்கள், நாவல்கள்!). கல்விக்கூடங்கள், தனது பள்ளிக்கூடத்திலிருந்து ‘சிறப்பாய்’ச் சித்தியடைந்தவர்களை வரிசைப்படுத்துவது ஒரு சிந்தனை. வெற்றியடையாதவர்களது காரணங்களை அறிதலும், அதை நிவர்த்தி செய்யும் வழிகளை அடைவதும் பிறிதொரு சிந்தனை. இரண்டாவது சிந்தனையின் அடிப்படையில், தர அடிப்படையிலான ‘சட்டகத்துள்’ அடங்குபவரை, அடங்குபவையை எழுதி மட்டும் மாற்றத்தைக் கொண்டு வர முடியாது.

இன்னும் கூறப் போனால், அப்படியான சட்டகத்தினுள், மாற்றத்தை வேண்டி செயற்படும் அடிமட்ட (விளிம்புநிலை) அமைப்புகள் எதுவும் செயற்பட முடியாது. அவற்றினது சமூக மேம்பாடுசார் கல்வியூட்டல் என்பது இறுக்கமான தரப் பிரிப்புகள் அற்றது. சகலருக்குமானது. கல்வியூட்டலில் “ஆரம்ப கட்டத்தில் இருப்பவர்கள்’ “மாறிக் கொண்டிருப்பவர்கள்’ ‘மற்றவர்களுக்குக் கல்வியூட்டத் தயாராகியவர்கள்’ என்கிற அடிப்படையில் நிகழ்கிற ஒரு சுழற்சி, கூட்டுச் செயற்படு முறை.

அவ் வேலைக்கான பொறுமையோ சமூக அறிவாளிகளான (ஞானப்பாலை கரை கரையென கரைத்து அளவுகணக்கற்று மற்றவர்களுக்கும் வைக்காமற் குடித்த) பிறப்பிலேயே புலமையுடன் பிறந்த ஞானிகளிடம் கிடையாது. அவர்களிடம் இருப்பதெல்லாம் தம் அறிவைப் பகிரும் ஞானமற்ற தன்னுள் சுருங்கியதொரு செருக்கு மட்டுமே.

செருக்குப் பிடித்தவர்களை சிடுசிடுத்துக் கொண்டிருப்பவர்களை சுயமோகத்தில் அலையும்/மிதக்கும் பிறர்க்கு உதவாக் கஞ்சர்களை எமது கிராமங்கள் கொண்டாடியதேயில்லை (கண்டுகொள்ளமாட்டார்கள், ஆனால் அவர்கள் அவர்கள் பாட்டில் இருக்கச் சகித்துக் கொள்வார்கள்). அவர்கள் வீட்டுப் பக்கம் ஈ, காக்கா கூட பறக்கப் பயப்படும். ஆனால் எழுத்துலகம் உள்ளிட்ட சில இடங்களில் தான் அவர்களது சிடுசிடுப்பை கணக்கெடுத்து, எழுதி எழுதி நிரூபிக்க வெளிக்கிட்டு, என்றைக்காவது ஒருநாள் அவர்கள் அங்கீகரிக்க மாட்டார்களா எனக் காத்திருக்கிறார்கள். அவர்களை இவர்கள் பொருப்படுத்துவதால் தான் அவர்களது பொருட்படுத்தலின்மையைக் கிடந்து காய்கிறார்கள்.

எமக்கு இருக்க வேண்டிய சுய மரியாதை என்பது ஜாம்பவான்களிடம் இருப்பது அல்ல. ஏனெனில் சுயமரியாதை என்பது தன்முனைப்பு (சுய மோகம்) மட்டுமே அல்ல. முதலில் நான் எனக்குரிய மதிப்பைத் தர வேண்டும். நான் என்பது என்ன என்பதை, அதற்குரிய கெளரவத்தை வழங்க வேண்டும். அப்படியான கெளரவத்தை வழங்குகிற போது யாரின் அங்கீகாரமும் எமக்கு வேண்டியிராது. நாம் எம்மை (எமது மனத்தை, இருப்பை, தனித்தன்மையை) அங்கீகரிக்காததால் தான் மற்றவர்கள் மனங்களில் வீடுகளில் பண்பாட்டில் எம்மை அங்கீகரிக்கக் கேட்டவாறு நிற்கிறோம். எம்மை எம்மாலேயே அங்கீகரிக்க முடியாத போது மற்றவர்கள் எப்படி அங்கீகரிப்பார்கள்?

வலியவர்களது தந்திரம்

அப்படி ஒன்று நிகழாதிருப்பதில், ஜாம்பவான்களானால் தெளிவாய் இருக்கிறார்கள். நேர்காணல்களில் நடிகை, நடிகர்களை எந்த நடிகைகள் நடிகர்கள் பிடிக்கும் என்றால், சமகாலத்தில் இருந்து சொல்லியே ஆக வேண்டிய சில பெயர்களையும் கடந்த காலங்களில் இருந்து தங்களுக்கு பிரச்சினையற்ற சில பெயர்களையும் (உ-மாக: சீறீதேவி) அண்டை அயலக நடிகர்களையும் சொல்வார்கள். இதுபோல, ஜாம்பவான்களும் அண்டை அயலக இலக்கியங்களையும் திரைப்படங்களையும் புகழுவார்கள். சமகாலத்தில் இருந்து தமக்கு போட்டியாய் வர இயலாத (ஏற்கனவே பொதுவெளியில் அறியப்படுகிற) ஈரொரு பெயர்களைப் ‘பட்டியல்’ இடுவார்கள். அந்தப் பட்டியலில் இல்லாத — அந்த அவர்களது ‘பட்டியல் உள்’ நாமும் வர மாட்டோமா என்கிற பெயர்களது — ஏக்கத்துக்கமைய அவர்களது அங்கீகாரம் வழங்கும் அதிகாரமும் பலமானதாய் இருக்கும். காலங்கள் மாறி மாறி வந்தாலும் புதிய புதிய ஜாம்பவான்களை உருவாக்கியே தீர்வதான கங்கணத்துடன் – கடவுள் உட்பட – தம்மை ஒரு பொருட்டாய் மதிக்காத அதியுயர் பீடங்களை நோக்கியே – கவனம் வேண்டி சதா மனித மனம் சென்று கொண்டிருப்பதன் உளவியல் தான் என்ன? வலியன வாழ்கின்றனவா அல்லது அவை மீதான கவர்ச்சியில், தன் தாழ்வுணர்ச்சியில் சமூகமும் அதனுடன் ஒத்திசைந்து கொடுத்து அதை வாழ வைக்கின்றதா?

இவையே, ஜாம்பவான்கள் குறித்த பிரமிப்பையும் அவர்கள் குறித்து பிம்பம் ஏற்படுத்தி வழிபடுதலையும் பார்க்கையில் எல்லாம் தோன்றுகிறது.
=)

பிரதீபா கனகா.தில்லைநாதன்
தாய்வீடு – ஜீலை- பதிப்புக்காக..
Published in Tamil News Monthly “ThaiVeedu“‘s 2011 July Issue
Advertisements