மதிப்புரை: ஒலிக்காத இளவேனில் – தி. பரமேசுவரி

“தொழிற்சாலையை விடக் கவிதை முக்கியமானது. தொழிற்சாலை வாழ்வதற்கான பண்டங்களை வழங்குகிறது; கவிதை வாழ்வதற்கான விருப்பத்தைத் தருகிறது” என்னும் ஓஷோவின் வரிகள்தான் ஒலிக்காத இளவேனில் என்னும் ஈழப் பெண் கவிஞர்களின் தொகுப்பைப் படிக்கும்போது நினைவிலெழுந்தது. ஈழத்துப் போர்ச்சூழல், யுத்தம், பெண்ணிலைவாதம், புலம்பெயர்வாழ்வு, குடும்ப இறுக்கங்கள், பிரிவுத்துயர் எனக் கூடுமானவரையிலும் விடுபடல்களின்றிப் பேசப்பட்டிருக்கிறது. வாழ்வுக்கான தேடலில், அலைச்சலில் கூடத் தங்கள் பண்பாடு (குறிப்பாக, பெண்களைக் கட்டுப்படுத்துதல்) அழிக்கப்படுவதைக் குறித்துக் கவலை கொள்ளும் ஆணியக் கட்டுமானம், சாதீயப் புலம்பல்கள், பொருள்முதல்வாதச் சிந்தனை எனச் சகலமும் பெண்களால் விதந்தோதப்பட்டிருக்கிறது. தொகுப்பு முழுவதும் இறைஞ்சுதல்களும் நிச்சயமற்ற வாழ்வின் மன்றாட்டுகளும் மன அலைவுகளும் இயலாமைகளும் துன்பியல்களுமே பெரும்பான்மையாக இருப்பது மனத்தைக் கனக்கச் செய்கிறது. ரௌத்ரமாக எழும் ஓரிரண்டு குரல்களும் கூட இறுதியில் விரக்தி மௌனம் பூணுகிறது.

கனடாவில் வாழும் புலம் பெயர்ந்த 18 ஈழப் பெண் கவிஞர்களின் கவிதைகளைப் பல்வேறு தலைப்புகளூடாகத் தொகுத்து, தான்யா, பிரதீபா கனகா தில்லைநாதன் ஆகிய இருவரும் ஒலிக்காத இளவேனிலாக்கிக் கொடுத்திருக்கிறார்கள். 2003 – 2009 காலப் பகுதியில் இலங்கையுள் நடந்த அரசியல் நிகழ்வுகள், போர் அனுபவம், நிலத்திலிருந்து பிடுங்கி எறியப்பட்டதன் துயரம், தனிமை, அச்சம் என அவரவர் உலகமும் இத்தொகுப்பில் கூட்டிணைக்கப்பட்டிருக்கிறது.
எந்தக் கலை வடிவமும் அது சொல்லும் உணர்வைப் படிப்போரின் மனத்துக்குக் கடத்துவது என்பதே அதன் முதன்மைத் தன்மையாக இருக்கவேண்டுமென்பதைப் பலரும் பல்வேறு சொற்களில் சொல்லியிருக்கிறார்கள். அவ்வகையில் இத்தொகுப்பில் உள்ள கவிதைகளின் மொழி நடை, வடிவம், செய்நேர்த்தி, உத்தி, கருப்பொருள் எனத் தனித்தனியாகப் பார்க்கத் தேவையில்லை என்பது இத்தொகுப்பின் அவசியம் கருதித் தோன்றுகிறது. இத்தொகுப்பு வாழ்வின் அவசியத்தை, வாழ்வதின் போராட்டத்தைப் பேச வந்துள்ள ஒன்று.
இத்தொகுப்புகளுக்கு முன்னர் வந்துள்ள தொகுப்புகள் பற்றிய தரவுகள் குறிப்பிடத்தக்கவை. அதை மிகக் கவனமாகப் பதிவு செய்திருப்பது அவசியமானதும் பாராட்டுக்குரியதுமாகும். இத்தொகுப்பு தாமதமானபோதும் கூட, எழுதிய பெண்களெவரும் அது பற்றிக் கேட்காததும் தொடர்ந்த தாமதமும் இற்றைகாலத்திலும் பெண்ணெழுத்துக்குள்ள தடைகளையும் அது வெளிவருவதற்குப் போராடும் நிலையையும் வெளிப்படுத்துகிறது. கவிதைகளைத் தலைப்பு வாரியாகப் பிரித்திருப்பதும் தலைப்பில்லாக் கவிதைகளைக் கூட முதல்வரி கொடுத்து உணர்த்தி இருப்பதும் நல்ல உத்தியாகும். நன்கு அறியப்பட்ட பெண் கவிஞர்கள், வலைப்பூவில் எழுதுபவர்கள், இன்னும் தொகுப்பு கொண்டு வராதவர்கள் எனப் பல வகையிலும் எழுதி வரும் பெண்கள் இந்தத் தொகுப்பால் இணைக்கப்பட்டிருக்கிறார்கள்.
எப்போதும் ஒடுக்கப்படுபவர்களாகக் குழந்தைகளும் பெண்களுமே இருக்கிறார்களென்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்தெதுவும் இருக்க முடியாது. அதிலும் குறிப்பாக, போர் நிகழும் இடத்தில் வாழும் குழந்தைகளும் பெண்களும் எத்தகைய வன்முறைகளைச் சந்திக்க நேரிடுமென்பதை அவதானிக்க முடியும். ஆனால், இத்தகைய ஒடுக்குதல்களையும் தாக்குதல்களையும் சந்திக்கும் உலக இனங்கள் பலவும் தன் துன்பியலை மொழியின் துணையுடன் பேசி, உலக இதயத்தை, மனசாட்சியைக் கேள்வி கேட்டுக்கொண்டேதான் இருக்கிறது என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். அதற்கு ஈழத் தமிழர்களும் விதிவிலக்கல்லர்.
திணிக்கப்பட்ட காலை / திணிக்கப்பட்ட எழுத்து / திணிக்கப்பட்ட ரசனை / திணிக்கப்பட்ட குறி
என்னும் நான்கு வரிகளில் ஜெபா வெளிப்படுத்தும் உணர்வுகள் பெரிய கவித்துவச் சொற்களேதுமின்றியே படிப்பவர் நெஞ்சுக்குள் கடத்தப்படுவதை, குத்துவதை உணரலாம்.
இந்தத் தொகுப்பினை ரசனை வெளிப்பாட்டுக்காகவோ, அறிவின் தீற்றலாகவோ, இலக்கியப் பிரதி மட்டுமாகவோ பார்த்து ஒதுங்கி நிற்க இயலாது. பெண்ணின் ஆவேசம், அழுகுரல், ஓலம், மௌனம், ஏமாற்றம் யாவும் இவ்வரிகளில் விரவி இருக்கின்றன.
நிச்சயமற்ற வாழ்விற்குப் பழக்கப்பட்டவர்கள் / எதற்காகவும் காத்திருப்பதை விரும்புவதில்லை / இன்றைய நிமிடத்தினை வாழ்வதுடன் / நாளைய நிமிடத்தை எதிர்கொள்ளவும் தயாராகிறார்கள்
என்னும் ரேவதியின் ‘சிதிலமடைந்துள்ள வாழ்க்கை’ கவிதையின் சில வரிகள் நம்பிக்கையும் அர்த்தமுமற்ற பெண்ணின் இயலாமையைப் பேசுகிறது.
நான் தூக்கணாம் குருவி / தும்புகளின் தொடுதல்களில் தொங்கிக் / கொண்டிருக்கிறது / எனது கூடு
என்னும் ரேவதியின் மற்றொரு கவிதை வாழ்வின் இழப்பை, இழந்தும் வாழும் வாழ்வின் வலியை உரத்துரைக்கிறது.
படைப்பு மனம் பெரிதும் இழப்புகளை, வேதனைகளைப் பேசுபவை. அதனூடாகத் தத்துவச் சரடுகளை விரித்துக் கொள்பவை. ஒவ்வொரு படைப்பும் தன் ஆதாரத்தை முன் வைத்தே இயங்கும். ரகசியமானதும் பரிசுத்தமானதுமான / ஒரே ஒரு சொல் / இன்னமும் மீதமிருக்கலாமென்று சொல்லும் மைதிலி, எழுத முடியாத தன் வலியை, கவிதையைப் பேசுவதுடன் தன் முலைகளில் அமைதி கொண்டு துயிலும், வார்த்தைகளுள் மறைந்துகொண்டு தாக்கும், அந்த மூளைத் திசுக்களிலிருந்து ஒழுகும் அசுத்தமான புன்னகையை இனியும் சகிப்பதற்கில்லையென்று குடும்பக் கட்டுமானத்தைத் தகர்த்தெறிகிறார்.
ஒடுக்கப்பட்ட பெண்களின் வாழ்வு வன்முறையாலும் தனிமையாலும் சூழப்பட்டிருக்கிறது.இன்றைய சமூக, பொருளாதாரச் சிக்கல்கள் எல்லோருக்குமே பொதுவானவை எனினும் வெளிப்படையாக ஏதும் பேச முடியாத, பேச அனுமதிக்கப்படாத பெண்களின் சிக்கல்கள் தனித்துவமானவை.உணர்ந்து கொள்ளும் அக்கறையின்றிப் உதாசீனப்படுத்தப்பட்ட அவ்வேதனைகளே கவிதைகளாய் இங்கே விரிக்கப்பட்டிருக்கின்றன.
பிறழ்வுற்ற சூழலிலிருந்து / நீ மட்டும் எவ்விதம் உயிர்ப்புடன் இருப்பாய் / மன நோயின் கூறுகளுடன் உன்னைப் பார்ப்பதை / விமர்சிப்பதை அதில் உன்னை இணைப்பதை / எப்பிரிவிலும் அனுமதிக்க முடியாது / நீ என்பது உடைவின் குறியீடு / போரின் குறியீடு சமூகத்தின் குறியீடு / நானின் குறியீடு / இப்படியிருக்க, உன்னை எப்படிப் புறக்கணிப்பேன் / புறக்கணிக்க முடியாத புள்ளியில் நானும் நீயும் / இணைந்திருக்கிறோம், காதலால் அல்ல / பிறழ்விலிருந்து எழுதுங்கள் முறிவின் முதற் குறிப்பை.
என்னும் தான்யாவின் கவிதை பெண்ணின் காத்திருப்பை, மன அழுத்தத்தைக் கடத்துகிறது நம்முள். எளிய வரிகளெனினும் எளிய விஷயமாகக் கடந்துவிடமுடியாதபடிக்குப் பேசுகின்றன.
பெண்ணை, அவளிருப்பை, தன்முனைப்பில் அவளது சிக்கல்களை மட்டுமே பேசாமல் போர்க்கால வாழ்வின் நச்சினையும் இத்தொகுப்பினூடாகப் பேசுகின்றனர்.
அரசியலும் மானுட இருப்பும் / உடலையும் உயிரையும்போல் / பின்னிப் பிணைந்ததில் / கைதுகளும் காணாமல் போதல்களும் / உயிரிழப்புகளும் / அன்றாட அவலங்களாகிப் போன / அந்தக் கனத்த நாட்களின் மௌனம் / திரும்பிக் கொண்டிருக்கிறது / அதிகார வர்க்கத்தினரின் / அட்டூழியங்களுக்கு அடிபணிகையில் / மெச்சாமலிருக்க முடிவதில்லை / சீருடைக்காரரின்மீது காறி உமிழ்ந்து / மரணத்தைத் தழுவிய எதிர்வீட்டுப் பெண்ணின் தன்மானத்தை
என்று போர் வாழ்வின் அவலத்தை, வன்முறையைப் பேசுகிறது நிவேதாவின் கவிதை. எப்போதும் போரின் கொடூர இலக்காகப் பெண் இருப்பதை, அதன் எதிர்ப்பைக் கடும் தொனியில் வெளிப்படுத்துகின்றார்.
விண்ணிற்கும் மண்ணிற்குமாய் விசுவரூபமெடுத்து நிற்கும் பெரும்கோயிலை ‘அவளாய்’க் காட்சிப்படுத்தும் ஆழியாள், அவளைச் சிறைப்படுத்தவும் ஒடுக்கவும் நினைக்கும் சமயப் பித்தர்களை இகழ்ந்து மேலும் பேசுகிறார். அவை அறிந்தோ அறியாமலோ / கருவறையில் இருட்சுடரில் / மற்றுமோர் “அவள்” / ஜனிக்கத் தொடங்குகிறாள் / கோயிற் திருக்காளை / அசைபோட்டு அமர்ந்தபடிக்கு / மொய்க்கும் ஈக்களைக் / கழுத்துமணி அசைய விரட்டுகிறது / வாலைச் சுழற்றிச் சுழற்றி.
என்னும் வரிகளில் பெண்ணின் ஆளுமை, அதை ஒடுக்க நினைக்கும் சமூகத்துக்கான எதிர்ப்புக் குரலாகவும் சுத்திகரிப்புச் செயலாகவும் அமைகிறது.
தர்சினியின், உரத்து உச்சரிக்கத்தான் ஆசை / எனது குரலை / ஆனாலும் / அலையாய் ஆர்ப்பரிக்கும் / ஏனைய குரல்களில் / அது அர்த்தமிழந்து விடுகிறது என்னும் கவிதையும்
றெஜியின், என் குருதியின் நிறத்தைத் தேடாதே / நானும் தொலைந்து போய் விடுவேன் / என் குருதி, உன்னதைப் போல சிவப்பானதே / நண்பா என்னும் கவிதையும்
பெண்ணை இரண்டாம் நிலைக்குத் தள்ளும் ஆணாதிக்கச் சமூகத்தை, போர்க்காலத்தில் கூட அப்போக்கினைக் கைவிடாத, புலம்பெயர்ந்தபோதும் மூட்டைகட்டி எடுத்துச் செல்லும் அத்தன்மையை எதிர்ப்பதைப் பதிவு செய்கிறது. பெண்ணின் சமகால வாழ்வைப் போர்ச் சூழலிலும் புலம்பெயர்விலும் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பதியும் இக்கவிதைத் தொகுப்பில் கவிதையல்லாத கவிதைகளும் சில விடுபடல்களும் கூட உண்டெனினும் காலத்தால், பேசும் பொருளால் முக்கியமான தொகுப்பே.
பெண் விடுதலையின் மொழியை, பெண்ணெழுத்தின் பிரக்ஞையை, சர்வதேசப் பின்னணியிலான பெண்ணின் அடையாளச் சிக்கலை, புதிய பாலியல்புகளை, உறவுகளை மேலும் மேலும் பெண்கள் வெளிப்படையாய்ப் பேச வேண்டும். இத்தகைய தொகுப்புகள் இன்னும் இன்னும் பெருகிவர வேண்டும். சிந்தனையாலும் உள்ளடக்கத்தாலும் வெளிப்பாட்டு அழகியலாலும் செழுமையுற வேண்டும். பெண் உரத்துப் பேசத் தொடங்கும்போதே அவளுடைய விடுதலைப் பாதை புலப்படத் தொடங்கும். பேசுவாள்; அதன் தொடக்கமான தொகுப்பாக நம் கையில் இருக்கிறது ‘ஒலிக்காத இளவேனில்’.
ஒலிக்காத இளவேனில்
தொகுப்பு : தான்யா – பிரதீபா கனகா – தில்லைநாதன்
வடலி வெளியீடு
முதல் பதிப்பு, டிசம்பர் 2009,
விலை 135.00
Advertisements

ஒலிக்காத இளவேனில்: செந்தில்வேல்

Picture 947 Picture 948 Picture 949

நன்றி: புதிய தரிசனம், செந்தில்வேல்

முற்றாத எலுமிச்சைகளின் இனிய மணம் – ஒலிக்காதஇளவேனில்: மதுமிதா

Picture 3026

திணிக்கப்பட்ட காலை
திணிக்கப்பட்ட எழுத்து
திணிக்கப்பட்ட ரசனை
திணிக்கப்பட்ட குறி – ஜெபா

ஒரு இனத்தின் மீது வலியத் திணிக்கப்பட்ட அடக்குமுறைகள், நிகழ்த்தப்பட்ட ஒட்டு மொத்த வன்முறைகள் அனைத்தையும் இந்தக் கவிதை ஒற்றைக்குறியீடாக அதன் கனத்தை சுமையை சுமந்து எடுத்துச் சொல்வதாகவே தோன்றுகிறது.

’ஒலிக்காத இளவேனில்’ பதினெட்டு பெண் கவிஞர்கள் எழுதிய கவிதைகளின் தொகுப்பாக வடலி வெளியீடாக வெளிவந்திருக்கிறது.
தொகுத்த தான்யா, பிரதீபா கனகா – தில்லைநாதன் என்றென்றும் பாராட்டுதலுக்குரியவர்கள்.

ஒவ்வொருவரின் ஒவ்வொரு கவிதையும் கவிதையின் ஒவ்வொரு வரிகளும் ஓராயிரம் கதைகளைச் சொல்லிச் செல்கின்றன. ஒரு சிறிய வாசிப்பனுபவமாக இதை எழுதிச் சென்றுவிட முடியாது. ஒவ்வொரு கவிதையையும் வரி வரியாக ரசிக்கும் அளவுக்கு ஒரு நிகழ்வாக நடத்தப் பட வேண்டிய அனுபவத்தை சில பக்கங்களில் எழுதிவிட முடியாது என இத்தருணத்தில் உணர்கிறேன். எழுதி முடித்த பின்னும் குறிப்பிடப்படாத கவிதைகளின் வரிகள் என்னை குற்ற உணார்வில் ஆழ்த்தும் என்பதை அறிந்தே இருக்கிறேன். முழுமையாகச் சொல்லிவிட முடியாதபடிக்கு ஒன்றைச் சொல்ல வருகையில் இன்னொரு உணர்வினை முன்னும் பின்னுமாய் ஊடு பாவாகப் பின்னி வரிகளில் நூதன உணர்வின் வெளிப்பாட்டினை அள்ளித் தெளித்திருக்கின்றனர்.

கவிதைகளின் கரு தேசத்தின் மீதான நேசம், யுத்தம் மீதான கசப்புணர்வு, பிரிவு, காதல், காமம், ஏக்கம், தனிமை, கனவு, அச்சம் என பல்வகை உணர்வுகளை வெளிப்படுத்துபவையாக உள்ளன கவிதைகள். ஒரு கட்டுக்குள் இந்தக் கருவை முன்னிறுத்துகின்றன எனச் சொல்லவியலாதபடிக்கு இன்னும் இன்னும் பல்வேறு வெளிகளில் பரந்து விரிந்து வியாபிக்கின்றன.

ஊடறு – விடியல் வெளியீடாக ஈழப் பெண் போராளிகளின் ‘பெயரிடாத நட்சத்திரங்கள்’ கவிதைத் தொகுப்பு வாசிப்புக்குப் பிறகு வெளி வந்த இலங்கைப் பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு என்ற அளவில் முக்கியத்துவம் நிறைந்ததாக இருக்கிறது. அந்த பாதிப்பிலிருந்து வெளிவருவதற்கு முன் இந்தத் தொகுப்பு இன்னுமொரு புதிய அலைவரிசையில் பதிவாகி இருக்கிறது.

ஒரு நினைவை ஒரு நிகழ்வை ஒரு மகிழ்வை ஒரு சோகத்தை ஒரு அனுபவத்தை ஒரு கவிதை வெளிப்படுத்தலாம். ஒரு எதிர்பார்ப்பை ஒரு ஏக்கத்தை ஒரு தனிமையை ஒரு விருப்பை ஒரு நிதர்சனத்தை கவிதை வெளிப்படுத்துகையில் அது ஒரு உன்னதக் கலைவெளிப்பாடாக அமைகிறது. இந்தப் புத்தகத்தில் தொகுக்கப்பட்ட கவிதைகள் அத்தகு அனுபவத்தை நம்முன் காட்சிப்படுத்துகின்றன.

நிவேதாவின் கவிதைகள் இத்தகைய தன்மையைக்கொண்டவையாக வெளிப்படுகின்றன.

அறியாப் பருவமதில்
அந்தரங்கங்கள் அத்துமீறப்பட்டு
கதறித் துடித்தபடி
கண்விழித்திருந்த இரவுகளினதும்
இவர்களது அருவருப்பூட்டும் தீண்டல்கள்
கலைத்துப்போன கனவுகளினதும்
நீட்சியில்
கற்பனையின் எல்லைகளை மீறுவதாயிருக்கிறது…
இவர்களுள் ஒருவனோடு காதலில் வீழ்வது!

காதலே இன்பத்தை நல்குவதைவிட வலியும் வேதனையும் நிரம்பியது. இப்படிப்பட்ட ஒருவனோடு காதலில் விழும் வலி என்ன ஒரு ஆக்ரோஷமான வலி.

’எலுமிச்சைகள் பூக்கும் நிலம்
எங்கிருக்கிறதென்று உனக்குத் தெரியுமா?’ என்னும் கதேயின் கவிதை வரிகள் ஐரோப்பிய இலக்கிய உலகில் மிகப் பிரபலமான வரிகள்.

கதே தன்னுடைய ’காதலின் துயரம்’ நூலில் தனது நண்பனுக்கு, கடிதம் வழியாக காதல் நாயகி ’லோதே’ வின் மீதான தனது காதலையும் துயரத்தையும் எழுதிக்கொண்டே இருக்கும் நாயகன் ’வெர்தர்’ தனது காதலையும் அதனால் அவன் ஏற்கும் துயரத்தையும் கடிதம் முழுக்க எழுதிக்கொண்டே இருப்பான். கடைசியில் .தனது காதலியின் கையால் பெறப்பட்ட காதலியின் கணவனின் துப்பாக்கியால் தன்னைச் சுட்டுக்கொல்வதற்குமுன்பு, தனது மறைவுக்குப்பிறகு தன்னை எலுமிச்சை மரங்களின் கீழ் புதைக்கும்படி எழுதிவிட்டுச் செல்வான். ‘தேவாலயத்தின் சுற்றுப்புறத் தோட்டத்தில் பின்பக்க மூலையில் வயல்வெளிகளுக்குப் போகும் பாதையில் இரண்டு எலுமிச்சை மரங்கள் உள்ளன. அங்கேதான் நான் உறங்க விரும்புகிறேன்’ என்று எழுதிவைத்துவிட்டுத் தன்னை மாய்த்துக்கொள்கிறான் வெர்தர். இறந்த பிறகும் எந்த இடத்தில் புதைக்கப்பட்டு இருக்க வேண்டும் என்ற விருப்பும் கலைஞனுக்கு இருக்கிறது.

ஒரு நிலமோ ஒரு வீடோ ஒரு மரமோ அதன் வாசமோ என்பது ஒரு நிலம் ஒரு வீடு ஒரு மரம் ஒரு வாசம் மட்டுமல்ல. அது நமது முந்தைய நாம் வாழ்ந்த வாழ்க்கையும் வாழ்வில் நாம் அறிந்த வாழ்வின் மீதான விட்டு விடவே முடியாத நேசமும் ஆகும். ஒவ்வொருவருக்குள்ளும் தனது சொந்தமான வீடு குறித்த ஒரு கனவு இருக்கும். ஒரு மனிதனின் வாழ்க்கையின் ஒரு பகுதியென்பது ஒட்டுமொத்தமாகப் பொதுவில் பார்க்கையில் தனக்கென ஒரு குடும்பம், அதில் தன் குழந்தைகளுக்கென சொத்தும், சொத்தாகத் தனியாக ஒரு வீடும் கட்டி முடிக்கப்படுகையில் முதுமை நெருங்கி இறப்பின் பாதையில் அடியெடுத்து வைத்துவிட நேரும். பாரதி தனக்கொரு காணிநிலமும் தென்னைமரங்களும் பக்கத்தில் பத்தினிப்பெண் வேண்டுமென்றும் பாடி இருப்பர்.

இதோ நிவேதாவின் பாடலைப் பாருங்கள்:

எனக்கென்று ஒருநாள் வரும்
பௌர்ணமி நிலவொளியில்…
தென்னை மரங்களின் சலசலப்பினூடு
முற்றாத எலுமிச்சைகளின்
இனிய மணத்தினை நுகர்ந்தபடி…
திறந்த ஓலைக் கொட்டிலுக்குள்…
சாக்குக் கட்டிலின் மீது
நீட்டி நிமிர்ந்து உறங்குவேன் நான்
நீங்கள் மட்டுமல்ல…
வேறெவருமே
என்னை ஏனென்று கேட்கமுடியாதபடி.

பதுங்குகுழிகளில் வாழ்க்கை முடிந்துவிடாதபடிக்கு அனைவரையும் போல் வாழவேண்டும் என்னும் சுதந்திர வாழ்க்கை, யாரும் ஏனென்று நம்மைக் கேட்கமுடியாதபடி வாழ வேண்டிய வாழ்க்கை இனிமையானது அல்லவா. இனி எப்போது இவ்வாழ்க்கை நம் மக்களுக்கு வாய்க்கும்.

ரேவதி தனது கவிதையில்:

நிச்சயமற்ற வாழ்விற்குப் பழக்கப்பட்டவர்கள்
எதற்காகவும் காத்திருப்பதை விரும்புவதில்லை… என்கிறார்.

வாழ்க்கையே நிச்சயமில்லை எனும்போது இவர்கள் ஏன் எதற்காகவும் காத்திருக்க முடியும். என்ன ஒரு நிச்சயமற்ற வாழ்க்கை. என்ன ஒரு நிதர்சன உண்மை.

யுத்தபூமியும், யுத்தபூமியை தாய்நாடாகக் கொண்டவரும் புலம்பல்களையும் வேதனையையுமே எழுதி வருகின்றனர் என்ற சிலரின் கூற்றினையே முற்றிலும் மறுத்து ஒதுக்கித் தள்ள விளைகிறேன். அவர்களின் இந்தக் கூற்றினையே நான் புலம்பல்களாகக் கருதுகிறேன். அந்த வாழ்க்கையை வாழ்ந்து பார்க்காத அந்த வேதனையை அறியாதவர்கள் கூறும் பிதற்றல் மொழிகளே ஆகும். இவர்களின் எழுத்தையே வாசிக்க முடியாது நாம் வெறும் உள வலியைச் சுமக்கிறவர்கள் ஆகிறோம். எனில் நிச்சயமற்ற வாழ்க்கையின் ரணத்துயர் அளிக்கும் மரண அவஸ்தையின் உச்சத்தில் இருப்பவர் அதனை எவ்விதம் வெளிப்படுத்தாமல் இருக்க முடியும். அதைப் பதிவுசெய்யும் அவர்களின் அந்த நேர்மைதான் அவர்களின் கவிதைகளுக்கு உயர்வினைத் தருகிறதல்லவா. வேறு எந்த இலக்கண இலக்கிய வகைமுறைமைகளை விட இந்த கவிதைகள் சுமக்கும் கரு உன்னதமான உண்மை உணர்வுகள்.

கணவனை இழந்த மனைவிகள், மகனை இழந்த தாய்கள் என ஒருவரை இழந்து இன்னொருவர் வாழ்வதான நிலையையே அதிகம் காண்கிறோம். வாழ்வின் இணைந்த இனிக்கும் உறவுகளை பிணங்களாகவே பார்க்க நேர்வது என்ன ஒரு கொடுமை. பிறக்க விருக்கும் மழலையிலும் பிணத்தைப் பார்க்க வேண்டிய நிலை. இன்னும் அதிகமாகத் தன்னையே பிணமாகக் காண நேரும் அவலம். அந்த வலியினை கவிதைகளாக உக்கிரமாக பதிவு செய்திருக்கின்றனர்.

கற்பகம் யசோதரவின் ’யுத்தம் என்ன செய்தது’ கவிதையும் சொல்கிறது:

அவள் தலையிலடித்- தடித் -தழுகிறாள்
நம்பிக்கையை
ஐ. நா. திறந்து திறந்து மூடுறது
தெய்வமே, நீ எங்கிருக்கிறாய்
நான் காற்றோடும் மரத்தோடும்
கோடை நிலத்தின் மேலாய்
என்னோடு தோன்றிடும்
நிழல் தோறும் பேசினேனே

பிள்ளைகளின் பிணத்தில் நிலம்
பிள்ளைகளின் கனவில் கொலை
பிள்ளைகளின் விளையாட்டில் சூடு.

ஜெபா எழுதிய ’வெளிகளில் தோற்கும் பிணங்கள்’ கவிதை,

’பிணங்கள்/ பெண் பிணங்கள்’ என முகத்தில் உண்மையை அறைந்து சொல்கிறது. பெண்கள் பெண்களாகப் பார்க்கப்படாமல் உடல்களாகப் பார்க்கப்படுவதே பெரிதும் அவலமான நிலை. அதிலும் பெண் பிணமாகவே பார்க்கப்படுவது…

அனாரும் எனக்குள் வசிக்க முடியாத நான் கவிதையில் எழுதுகிறார்:

எந்த சிதையில் எரிகின்றது
என் உடல் ?

எல்லாவற்றிலும் எல்லோரையும் தானாகப் பார்க்கும் கவிமனம் எத்தனை வலி தாங்கி இது போன்ற கவிதைகளைக் கருக்கொண்டிருக்கும்.

நிவேதாவின் ’புகையெனப் படரும் பிணங்களின் வாசம்’, கவிதையில் என் கனவுகளெங்கும் பிணவாசம்
புகையெனப் படர்ந்தது
இனி, அகாலம் விடியும் வேளையில்
என் படுக்கையின் மீது
நிணக்கூழ் வடியும் கண்களுடன்
பிணமொன்று தவழும் மழலையென..

தான்யாவின் ‘எத்தனை குழந்தைகள்’ கவிதை காலம் காலமாக பெண்ணுக்கு நடக்கும் குழந்தை சுமத்தலின் முற்றிலும் சுடும் வலியின் தொனியினை முன்வைக்கிறது.

ஒவ்வொரு உறவும்
கர்பப்பையை நிரப்பவே
என்பது தரும் தளர்ச்சியான உணர்வை
யாரும் புரிந்து கொண்டதேயில்லை…

சிறிய துவாரங்களுள்
பாம்புகள் நுழையும்/ நுழைகின்றன.

இன்னுமொரு கவிதையில்:

கொடிய கனவுகளைக்கொண்ட
குழந்தை பெற விரும்பாத – ஒருத்தியை
நினைத்தபடி இருக்கப் போவதில்லை… என்கிறார்.

இத்தொகுப்பில் இன்னும் சில கவிதைகளிலும் பாம்பு விசேஷமான பொருளில் கையாளப்பட்டுள்ளது.

வசந்தியின் வரிகளைப் பாருங்கள்:

கேவலம்
கண்டவிடமெல்லாம் ஊர்ந்து திரிகின்ற
அற்பப் பாம்பிற்கு
இத்தனை
அந்தஸ்தா?

ரகஸ்யம் 2 கவிதையில் வசந்தி எழுதுகிறார்:
ஆண்டாண்டு கால
கர்ப்பப்பை ஒடுக்கல்களில்
இறுகிக் கிடக்கும்
ஜனன ரகசியங்கள்
ஆவேச வெடிப்புக்காய்… என.

கருவறையின் இருட் சுடரில்
மற்றுமோர்
‘அவள்’
ஜனிக்கத் தொடங்குகிறள் – என்கிறார் ஆழியாள்.

வீடு என்ற ஒன்று முதல் முதலாகக் கட்டப்பட்ட அந்தக் காலம் தொட்டு இப்போது வரையிலும் பெண்கள் வீட்டுக்குள் பூட்டப்பட்டுக் கிடந்தவர்கள். கிடப்பவர்கள். பாதுகாப்புணர்வு கருதி பகலில் வெளியில் சென்றாலும் இரவுகளில் வீட்டுக்குள் அடைபட்டுக்கிடக்க வேண்டியவர்களாகவே இருக்கிறார்கள்.

பெண்ணுக்குள் பறத்தலின் சுதந்திரம் அறிந்த ஒரு சிறகு விரிக்கும் பறவை எப்போதும் இருந்துகொண்டே தான் இருக்கிறது. பெண்ணுக்குள் வனத்துள் தன்னைப் பிணைக்கும் விலங்கின்றி சுற்றித் திரியும் விலங்கின் ஒரு வேட்கை இருந்துகொண்டே தான் இருக்கிறது. பெண்ணுக்குள் கடலுள் தன்னிச்சையாய் அலைந்து நீந்திச் செல்லும் மீனின் விருப்பு இருந்துகொண்டே தான் இருக்கிறது.

ஆணால் அறிந்துகொள்ளப்படவே இயலாத இந்த வேட்கையினை இதோ ஒரு அடைபட்ட இனத்தின் வரம்புகளை உடைத்தெறிய விரும்பும் இந்திராவின் இந்த அர்த்தமுள்ள வரிகளில் காணலாம்:

எனக்குள் ஒரு ஜிப்சி
எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறாள்
அவள் –
வரம்புகளை உடைத்தெறிந்து
ஒரு புறாவைப் போல பறந்திட
ஏங்கிக் கொண்டிருக்கிறாள்.
நாடற்று
நிலமற்று
சுதந்திரமில்லா இந்த வாழ்வுற்றும்
பறந்திடக் காத்திருக்கிறாள்.

அரசியலானாலும் வேறு எந்தத்துறையினைச் சார்ந்ததானாலும் வலியவனின் முன் மெலியவனின் நியாயமான குரல் எழும்புவதேயில்லை. உரிமை வேண்டி உண்மையினை உரத்த குரலெடுத்து கூக்குரலிட்டாலும் அது வலியவனின் முன்பு எடுபடுவதும் இல்லை. இயற்கை நியதியாகவும் உலக நியதியாகவும் ஆகிவிட்டது இது. மேலும் வலியவன் கூறும் பொய்கூட உண்மையென ஆணித்தரமாக ஆக்கப் பாடுபட்டு மேற்கொள்ளப்படும் விந்தையை வரலாறு நெடுகிலும் பார்த்துக்கொண்டுதானிருக்கிறோம்.

’விலகலுக்கான நெருக்கத்தில்’ எனும் நீள் கவிதையை எழுதிய தர்சினியின் இந்த கவிதையைப் பாருங்கள்:
உரத்து உச்சரிக்கத்தான் ஆசை
எனது குரலை
ஆனாலும்
அலையாய் ஆர்ப்பரிக்கும்
ஏனைய குரல்களில்
அது அர்த்தமிழந்து விடுகிறது.

பிரதீபா Weapon of Mass Destruction கவிதையில் சொல்கிறார்:
உலகத்தில் என்னென்னமோ நடக்கும்.
ஒவ்வொரு மூலையிலும் வல்லவர்கள் ஆளுவார்கள்.
முதலாம் உலகங்களில்;
மின்கம்பங்கற்கு மேல்
பறவைகள் சுழல்வதை
“போர் விமானங்கள் போல” எனவும்
தொலைக்காட்சியில் ஒளி சிதற
கிராமமொன்றில் குண்டு விழும்
சற்றலைட் காட்சியை
“இரவில்
நட்சத்திரங்கள் மின்னுவது போல” எனவும்
எழுதிக்கொண்டிருப்பர் கவிஞர்.

இன்னும் நீள்கிறது கவிதை.

கற்பகம் யாசோதரவின் ’வரலாற்று மறதி’ கவிதையும் றெஜியின் தெரியாத விம்பங்கள் நீள்கவிதையும் இரத்தக் கண்ணீர் ஆறுகள்.

துர்க்காவோ தனது சுவடுகளை காலங்களில் பதிந்து செல்ல விரும்புகிறார்.

அவரின் மகள்
இவரின் மனைவி
உங்களின் தாய் என்பதை விட
நான் என்பதாக
விட்டுச் செல்ல விரும்புகிறேன்
எனக்கான என் சுவடுகளை

பெண்மனதின் இன்னொரு மாற்றம் கண்ட பரிமாணமாய் ஒழுக்க மீறல்கள் என பொதுபுத்தியுடன் எழுப்பப்படும் சமூக அக்கறை நிறைந்த கேள்விகளைக் கேள்விக்குறியாக்குகிறது. சமூகத்தில் மனமொத்த ஆண், பெண் இருவர் உடல், மனம், ஆன்மா இணைய உயிராய் இழைந்து இணைதால் என்பது அநீதி, துரோகம் மேலும் பாலியல் மீறிய பிழையாகவே கருதப்படுகிறது. இந்த அநியாய சமூகத்திற்கு அங்கீகாரம் கொடுத்தது யார் என சரண்யாவின் கவிதை வினவுகிறது:

அருகில்: கணவனை விட்டு
வேற்று ஆணுடன் உறவு வைத்திருக்கும்
மனைவியாய் மட்டும் நான்.
தொடரும் உறவுகளில் திளைத்திருக்கும்
உன்னை அங்கீகரிக்கவும்
துணிவும் தன்னம்பிக்கையுமுள்ள
என்னை நிராகரிக்கவும்
இந்த அநியாய சமூகத்திற்கு
அங்கீகாரம் கொடுத்தது யார்?

சரண்யாவின் வேறு கவிதையின் இன்னும் சில வரிகள்:

உடைத்து விட்ட உறவும்
கட்டில்லா காதலும் காமமும்
எதைக் கொண்டு வருமெனப் பார்த்திருக்கிறேன்…

கௌசலாவின் கவிதை சொல்கிறது:

அகலிகை புத்திசாலி.
அறிவுக்கும் உணர்விற்கும்
உறவு என்னவாயிருக்கும்?

இப்படித்தான்
காதல்களும்
வாழ்தல்களும்
செத்தும் பிறந்தும்…
மனிதருக்கு எதற்கு வாழ்க்கை…?

தர்சினியின் ‘விலகலுக்கான நெருக்கத்தில்’ கவிதை முழுவதுமாய் மனம் கனத்துப் போகச் செய்கிறது.

ரேவதியின் கவிதையும் இதை உரத்துப் பேசி ஒரு நேர்மையான புதுப் பார்வையினை முன் எடுத்து வைக்கிறது. ‘சிதிலமடைந்த வாழ்க்கை’ என்கிற தலைப்பே ஒரு குறியீடாக நிகழ்த்திக் காட்டுகிறது.

குறிகளும் யோனிகளும் இன்று இப்படித்தான்
எதற்காகவும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை
அவை தமது நிமிடத்தினை
வாழ்ந்து விடவே விரும்புகின்றன…

ஒரு பெண்
தன் கணவன் தன்னைச் சந்தோசப்படுத்த முடியாதவன்
என்பதனால் அவனை நிராகரிக்கிறாள்
அந்த நேர்மை எனக்குப் பிடித்துப் போகிறது…

சரண்யாவின் ’உனது அறைக்குள் என்னை அழைக்காதே’ கவிதை முழுக்க முழுக்க ஒரு பெண்ணின் சிதைந்த உணர்வுகளை, அவளுக்கு நிகழ்ந்த நம்பிக்கை துரோகத்தை, இழைக்கப்பட்ட அநீதியை எரிமலைக் குமுறல் வார்த்தைகளால் நிறைக்கிறது.

’ஒருபோதும் எழுதப்படாத கவிதையை’ எழுதிய ’தான்யா’வின் ‘தற்கொலை பற்றி அறிந்திராத ஒருவள்’ தரும் உணர்வலைகள் உணர்வின் உச்சத்தினைக் காணுங்கள்:

அத்துவான வெளியில்
வாழ்க்கையின் நம்பிக்கையைத் தொலைப்பது
இயலாமற் போகிறது
சாகசக்காரியாய், ஆறாய், நீர்வீழ்ச்சியாய்
படகாய் குழந்தைகளாய்
கீழே வாகனங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன
மேலே
கோபமும் விவேகமும் தாபமும் நிறைந்தவள்
சேர முடியாதபடி
வாழ்க்கை அவளை வசீகரிக்கிறது.

வசீகரிக்கும் வாழ்க்கையை வாழவே அனைவரும் விரும்புகிறோம். ஆனால், அந்த வாழ்க்கையை அப்படியே சுதந்திரமாய் விருப்புடன் வாழ அனுமதிக்கிறதா காலம். அப்படி அனைவராலும் வாழ இயலுகிறதா? அதுவும் போர்பூமியில்.

நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் இவர்களுடன் இவர்களின் நம்பிக்கையைப் போலவே ஒரு நாள் அந்தக் காலம் நிச்சயம் வாய்க்கும் என்று. அன்று அந்த நம் பூமியில் கிரிவெஹர பாதையில் நான் நம் தோழிகளுடன் நடந்து செல்வேன் என்னும் நம்பிக்கையுடன் இதை முடிக்கிறேன்.

அன்புடன்
மதுமிதா
1.03.2013

ஒலிக்காத இளவேனில் – கவிதை நூல் அறிமுகம். (நிர்மலா கொற்றவை)

  • நிர்மலா கொற்றவை

இதயம் ஒரு துப்பாக்கிக் குண்டுக்காக ஏங்குகிறது
தொண்டையோ ஒரு கத்திக்காக ஏங்குகிறது
ஆன்மாவோ பனிச்சுவர்களிடையே நடுங்குகிறது
அது ஒருபோதும் பனியிலிருந்து தப்ப முடியாது.

ம்யாக்கோவ்ஸ்கி

பனியை இங்கு கொலைக்களமாக ம்யாக்கோவ்ஸ்கி ஏன் விரித்தான். தற்சாவும் விருப்பதிற்கிணங்காத முறையில் நிகழும்போது கவிக்கு சொல்ல இறுதியாக என்ன வார்த்தைகள் மிஞ்சும், கவியின் இறுதியுணர்ச்சி எதைச் சொல்லும். கையகல இருப்புகளுக்காகவா இத்தனை அழித்தொழிப்பு. இங்கு உண்மையில் கவிதைகளுக்கு என்ன இடம் இருக்கப் போகிறது. கவிதை மானுடமனத்தை இயற்கையாக ஆண்டுகொண்டிருக்கிறது என்பதற்கு சாட்சியாக கவிதை மட்டுமே இருக்கிறது ஆனால் போர்க்களத்தில் கவிதை பாடிக்கொண்டிருக்க முடியாது எனச் சொன்ன லூ சூனையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மனிதர்கள் தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ளுவதில் பேராவலோடு இருக்கும் காலகட்டத்தில்தான் நாம் பிறந்திருக்கிறோம். வெற்றிபெற்றவர்களின் ஆங்காரக் கூச்சலிடையே தோல்வியுற்றவர்களின் கசந்த அழுகைகள் மறந்துவிடுகின்றன. அவைகள் முணுமுணுப்பது கவிதைகளின் வாயிலாகத்தான். அக்கவிதைகளை வரிகளை வைத்து எடைபோடமுடியாது என காலம் தன் இருப்பை வைத்துச் சொல்லுகிறது. அக்காலமோ அகால உணர்ச்சியை முன் வைக்கிறது. அகாலத்தின் துயர்களைச் சொல்லியபடி எனக்குத் தெரிந்து வெளிவந்திருக்கும் கவிதைத் தொகுதிகள் என மரணத்துள் வாழ்வோம், பெயரிடாத நட்சத்திரங்கள், இப்பொழுது ஒலிக்காத இளவேனில். இம்மூன்று தொகுதிகளின் தலைப்பே வீழ்ந்து கொண்டிருக்கும் ஆன்மாவின் குரலாகவே ஒலித்துக்கொண்டிருக்கிறது.

கண்ணுக்கெதிரே பறிபோகும் நிலமும் உடலும், உடல் சார் உளமும் கருகும்போது சொல்லமுடியாதவர்களின் குரலாய் ஒலிக்கிறது இக்கவிதைகள். உள்ளபடியே கொஞ்சம் அழுத்திச் சொல்ல வேண்டுமானால் கவிதைகள் கூறும் இலக்கண அல்லது இலக்கிய விதிகளை சற்றுப் புறந்தள்ளிவிட்டுத்தான் இத்தொகுதியை வாசிக்க முடியும். வாசிக்க வேண்டும் இது வேண்டுகோளே. அஞ்சிச் சாகும் மக்கள் இறக்கும்போது எழுதவோ சொல்லவோ ஒரு வார்த்தை எப்பொழுதும் இருக்கத்தான் செய்கிறது. சில மரணங்கள் சில மனிதர்களுக்கு வாழ்வின் ஆசுவாசத்தை ஏன் தருகிறது என்ற மானுட உளவியலையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். தீராத்துயர். மனிதர்களை மனித இருப்புக்களுக்காய் கொலை செய்வதை எந்த மன அமைப்பு விரும்புகிறது.

கவிதை என்பதை மனநிலை என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா. மனம் திறந்து நமது உணர்வுகளை வாய்மொழியாக பேசுவதற்கும் அதை அச்சில் ஏற்றுவதற்குமான எந்த இடைவெளியில் உணர்வுகள் கவிதையாகின்றன. ஓசையும் ஓசையின்மையும் அதை சாத்தியப்படுத்துகிறதா? வடிவமா அல்லது கவிதை எழுதுதல் என்பது ஒரு அறிவார்த்த வெளிப்பாடு, ரசனை, படைப்பு கலை என்கிற பூடகங்கள் ஒருவரை கவிதை எழுதத் தூண்டுகிறதா.

மானுட வரலாற்றில் தோன்றிய முதல் கவிதை எதுவாக இருக்கும். காலம் காலமாக அது குழந்தை என்ற பதிலையே கொண்டிருக்கும் என்று தோன்றுகிறது. ஒரு சிறந்த ஓவியத்தை, கண்களை ஈர்க்கும் தோற்றம், சிறந்த கட்டிடக் கலையை வெளிப்படுத்தும் கட்டிடம், இவ்வளவு ஏன் ஒரு சிறந்த கதை, உரைநடை கூட மனம் கவரும் விதத்தில் இருந்தால் கவிதை போல் இருக்கிறது என்கிறோம்.

ஆக கவிதை என்பதற்கான விளக்கமாய் அது கொடுக்கும் அனுபவமே பிரதானமாய் இருக்கிறது வடிவமல்ல என்பது தெளிவு. அந்த அனுபவத்தை சொற்செறிவுடன், சொற்சிக்கனத்துடன் சொல்வதற்கேற்ற வடிவமாக உரைநடையல்லாத வடிவம் அமைகிறது. தற்போதைய காலகட்டத்தில் உரைநடைக் கவிதைகளும் வந்துள்ளன. கவிதை என்பது ரசனை சார்ந்த ஒன்றாக கருதப்பட்டாலும் ஒரு கவிதை உடனடியாக நம்மைக் கவர்வதும், மற்றொன்று பிடிக்காமல் போவதற்கும் அது தரும் அனுபவமே காரணமாக இருக்கிறது.

எதிலிருந்து கவிதை, அனுபவத்தைத் தருகிறது. நமது தேர்வு, விருப்பங்கள், இலட்சியத் தேடல்கள் அதன் உட்கூறுகளாக இருக்கின்றன. உ.ம் படைப்பை தூய இலக்கியம் என்று கருதுபவர்களின் பிரதானத் தேர்வாக காதல், காமம், உடலியல் இன்பம், மொழிப் பயன்பாடு ஆகியவை இருக்கிறது.  கூடுதலாக சமூகம் பற்றிய இவர்களது அக்கறை இரக்க பாவனை கொண்டதாக இருப்பதால் அத்தகைய வியாக்கியானங்களை, இரக்க பாவனைகளை சமூகக் கவிதையாகக் கருதும் போக்கு நிலவுகிறது. இந்த தேர்வானது அவநம்பிக்கை, அயர்ச்சி, இயலாமை, வெறுமை என்பதாக நீள்கிறது.

கலை மக்களைப் பேசவேண்டும் என்று கருதுவோரின் தேர்வாக அரசியல், சமூக மாற்றம் இவற்றை முன் வைக்கும் புரட்சிகர கவிதைகள், விடுதலை முழக்கங்கள், அழித்தொழிப்பிற்கெதிரான கலகக் குரல்கள் ஆகியவை பிரதானத் தேர்வாக இருக்கின்றது.  அதிகாரத்திற்கெதிரான விமர்சனங்கள், மாற்றம் குறித்த நம்பிக்கைகள், அணி சேர்தல் என்பதை உள்ளடக்கமாகக் கொண்டிருக்கும் கவிதகள் இப் பிரிவினரை ஈர்க்கிறது. இங்கு ‘நான்’ என்பது
‘நாம்’ என்பதாகவே அமைகிறது.

இந்த இரண்டு வகையினரின் கூட்டுக்கலவையாக இருக்கிறது பெண் கவிதைகள். பெண் உடல் என்பது சமூக உடலேயாகும். சமூகம் நிர்ணயித்திருக்கும் உடலையே அவள் சுமந்துகொண்டிருக்கிறாள். அவளது உடலே அவளுக்கு அந்நியமான ஒன்றாக கட்டமைக்கப்பட்ட சூழலில் அவள் முதலில் பிரதிகளில் இருந்து தன் உடலை மீட்பது பிரதானமாகிப் போனது. பெண் உடலை ரசிப்பதற்கான ரசனை அளவீடுகள் பெண் பற்றிய கவிதை எழுத்தலுக்கு ஒரு கோனார் உரையை கொடுத்திருக்கிறது. பெண்களுக்கு ஆண்கள் பற்றிய அத்தகைய உரைகள் வழங்கப்படவில்லை, அப்படி அவள் வர்ணிக்கும் உரிமையும் அவளுக்கு கிடையாது. அதையும் மீறி அவள் எழுதினால் அவள் ‘காம வெறி’ பிடித்தவள். சமூகம், அரசியல் வெளிகளை அறிந்து கொள்ளும் வாய்ப்புகளும் அடைக்கப்பட்டிருக்க அவள் தனது பாடல்களாக, கவிதைகளாக தனது வெளியாக உடலைத் தேர்வு செய்யும் நிலையை வரலாறு ஏற்படுத்தியது. அதனோடு அவள் அன்றாட வாழ்வில் குடும்ப அமைப்பிற்குள் எதிர்கொள்ளும் வன்முறைகள், பொதுவெளியில் எதிர்கொள்ளும் பாலியல் அத்துமீறல்கள், தொடர் ஒடுக்குமுறைகள், போரினால் உடல் சிதைக்கப்படும் சூழல் ஆகியவை பெண் எழுதுவதற்கான தேவையை உருவாக்கியது.

இது வெறும் ரசனை வெளிப்பாடாகவோ, அறிவார்த்த பறைசாற்றலாகவோ, அந்நியப்பட்டுப்போகும் தூய இலக்கியமாகவோ இல்லாமல் சமூகப் பண்பாட்டுப் பிரதிபலிப்பாக இருப்பதற்கு அவளது அனுபவமே காரணம். இங்கு தேர்வு என்பது சாத்தியமில்லாமல், அனுபவமே பெண் எழுத்தை தீர்மானிக்கிறது. ஆக பெண்கள் இயல்பிலேயே புரட்சிகர எழுத்துக்களை, சிந்தனைகளை உள்ளடக்கமாகக் கொண்ட எழுத்துக்களை படைக்கும் சாத்தியங்கள் அதிகமாக இருக்கிறது. அடிப்படைத் தேவைகளுக்கும், தனது இருப்பிற்குமான போராட்டங்கள் நடத்தி சற்று முன்னேறிவிட்ட பிறகு மேட்டுக்குடி  பெண் உரிமை சிந்தனையானது உடலியல் இன்பங்களைப் பேசுதல், காமத் துயர்களைப் பேசுதல் விரகதாபம், பெண் சுய இன்பம் என்கிற அளவில் திசைதிருப்பப்பட்டுள்ளது. இதில் அவர்கள் காண மறுப்பதாக நான் காண்பது பெண் உடல் என்பது உடலியல் இன்பங்களில் மட்டுமல்லாது இன்னும் பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கும் உள்ளாகிறது என்பதே அது. பெண் உடல் என்பதை பெண் விடுதலை அரசியலாக மாற்றும் வல்லமை எழுத்திற்கு உண்டு.

பாலியல் பேதமின்றி அனைவரும் வர்க்க அடிப்படையில் சமூக ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகிறோம் என்பது உண்மை, ஆனால் இனவாத அடிப்படையில் ஒரு இனமானது தொடர்ந்து ஒடுக்குமுறைகளுக்கு இலக்காகிய கொடூரம் நாம் வாழும் காலத்தில் இலங்கையில் அரங்கேறியது. சிங்கள இராணுவத்தினரால் பெண்கள் கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு சிதைக்கப்பட்டது அந்த இனவாதத்தின் உச்சபட்ச காட்டுமிராண்டித்தனம். அந்த மண்ணில் பிறந்து சித்திரவதைகளை அனுபவித்து மடிந்து போனவர்கள் ஆயிரக்கணக்கானோர், சிலர் வேறு நாடுகளுக்கு குடிபெயர்ந்தனர், சிலர் அகதி முகாம்களில் மேலும் சித்திரவதைகளை அனுபவித்து வருகின்றனர். அம்மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை, துரோகங்களை பலரும் தங்களின் படைப்புகள் வாயிலாக பதிவு செய்துள்ளனர். அநீதிகள், துரோகங்கள் மட்டுமல்லாது அவர்களின் வாழ்வுகளிலும் பல்வேறு உணர்ச்சிகள், அனுபங்கள், நிகழ்வுகள் இருக்கும் என்பதை கவிதை வடிவில் எடுத்துரைக்கும் மற்றோர் படைப்பு ஒலிக்காத இளவேனில்.

இலங்கைத் தமிழர்களுக்கு இருக்கும் ஒரு பெரும் கொடை அந்த மண் தனது மொழியை பெரும் வளத்துடன், அழித்தொழிப்புகளிடையே காத்து வந்திருக்கிறது என்பதுதான். மொழி அழிக்கப்பட்டால் இனமே அழிந்து போகும் என்பதை உலகறியும். மொழியின் அடிப்படையில் அழிக்கப்படும் தங்கள் உயிரையும், உடமையையும் காக்க நடந்துவரும் போராட்டங்கள் துயர் மிகுந்த பாடல். இந்த மொழிப்போரின் கோரப் பிடிகளிலிருந்து தப்பித்து புலம் பெயர்ந்து தங்கள் தாய் மண்ணை சுதந்திரமாகக் காவும் அந்த ஒரு கணத்திற்காக பரிதவிக்கும் உள்ளங்களின் வடிகாலாக விட்டுவைக்கப்பட்டிருப்பது எழுத்து மட்டுமே என்றால் அது மிகையல்ல.

தலித் உடலும் பெண் உடலும் ஒன்று என்பார்கள். ஆனால் போர்களினால் அலைகழிக்கப்படும் உடல்கள் மீது நிகழும் ஒடுக்குமுறை மற்ற எல்லாவற்றையும் விட முற்றிலும் மாறுபட்டது.  குறிப்பாக பெண் உடல்கள். சிறுவர்களின் உடல்கள். எல்லாப் போர்களிலும் முதலில் சிதைவுறுவது பெண் உடல்களே. ஏகாதிபத்திய பீரங்கிகள் நிலங்களைக் குறிவைத்து தொடுக்கும் குண்டுகளையும் விட மிகவும் கொடூரமான குண்டுகள் இராணுவத்தினரின் குறிகள். அவைகள் ப்ளாஸ்டிக் குறிகள். அந்தக் குறிகள் துளைப்பது யோனிகளை அல்ல, ஒரு தேசத்தின், ஒரு இனத்தின் தன்மானத்தை. ஒவ்வொரு போரும் இதையே உணர்த்துகிறது.

ஒலிக்காத இளவேனில் – 17 புலம்பெயர் இலங்கைத் தமிழ் பெண்கள் எழுதிய கவிதைத் தொகுப்பு. தான்யா, பிரதீபா கனகா தில்லைநாதன் ஆகியோர் கவிதைகளை தொகுத்துள்ளனர். வடலி பதிப்பகம் இதை வெளியிட்டுள்ளது.

எந்த ஒரு படைப்பும் ஆதரமாய் ஒரு தேவையைக் கொண்டிருக்கிறது. ஒலிக்காத இளவேனிலுக்கு தம்மண்ணிலிருந்து விரட்டப்பட்ட துன்பியலையும்இ தம் மண்ணில் நசுக்கப்படும் குரல்வளைகளுக்கு பதில் குரலாகவும் இருப்பதே அத் தேவை.

ஒலிக்காத இளவேனில் என தலைப்பு தொடங்கி உள்ளே கவிகள் எழுதியிருக்கும் கவிதைகளின் பெரும்பாலான தலைப்புகள் அனைத்தும் நிச்சயமற்ற வாழ்வின் அலைச்சல்களைக் கதறியபடியே சொல்கிறது,

நிச்சயமற்ற வாழ்விற்கு பழக்கப்பட்டவர்கள்
எதற்காகவும் காத்திருப்பதை விரும்புவதில்லை

என்று ரேவதி பேசுகையில்

எவருக்காகவும் காத்திருப்பதில்லை- காலம்
விரைந்துகொண்டேயிருக்கிறது

என தன் வரிகளை கனத்த இயலாமையுடன் முன் வைக்கிறார் நிவேதா.

கனவுகள் மாத்திரம்
காற்றில் அலைகின்றன
என் கவிதைகளைப் போல

என தன்னையே முன் வைத்து நகர்ந்து

ஏதோ ஒரு
காய்கறிக் கடையில்
எங்கேனும் ஒரு
வீதி மருங்கில்
எப்போதாவது தொலைபேசியில்
முடிவற்ற
துர்வாடையாய்
நம் தலைக்கு மேல்
நிரம்பி வழியும்
நரகங்கள்
பற்றிப் பேசலாம் (அனார்)

இத்தகைய எளிய வரிகள் விதிக்கப்படாத சாவைத் தலைக்குமேல் சுமந்து கொண்டு அன்றாட நரகத்தைப் பேச அழைக்கின்றன. சாவைப் போலொரு பேச்சென இக்கவிதையைச் சொல்லலாம்.

திணிக்கப்பட்ட காலை
திணிக்கப்பட்ட எழுத்து
திணிக்கப்பட்ட ரசனை
திணிக்கப்பட்ட குறி  (ஜெபா)

என உலகியங்கும் கொடூரத்தை முன்வைத்து நகர்ந்திருக்கிறார். ஆழியாளின் கவிதை தொடர்ந்து பிணங்களின் தோற்றவுருக்களை விவரித்து அவைகள் பலிதீர்க்கப்பட்டதற்கான கருத்தியல்களை எழுதிச் செல்லுகிறார். முக்கியமாய்

மரணவெளியில் மறைக்கப்பட்டு
வாழ்விக்கப்படும் பெண்கள் நாங்கள் (ஜெபா)

எனும் இரு வரிகள் தரும் துயரம் மீளமுடியாத உணர்ச்சியைத் தருகிறது.

இத்தொகுதியில் எழுதியிருக்கும் தமிழினி, சரண்யா, வசந்தி கவிதைகள் இத் தொகுதிக்குள் ஒலிக்கும் துர்மரணத்தை முன் வைத்தே பேசுகின்றன. புலம்பல்கள் கவிதையா எனக் கேட்டால் அதுவும் என்னைப் பொறுத்த வரையில் காலத்தையே சுட்டிக்காட்டுப் பேசுகிறது என்பேன். சரண்யா எழுதியபடி..

ஆண்களால் கொல்லப்பட்ட உடம்பு
பொய்களால் கொல்லப்பட்ட மனசு

இவ் வரிகள் அதற்கு சாட்சியாக்குகின்றன.

மொனிக்கா, துர்க்கா, மைதிலி இவர்களும் தங்களது இயலாமைகளை கவிதைகளென முன்வைத்திருக்கிறார்கள்.

நீங்கள் எச்சரித்தது போலவும் இல்லாமலும்
ஆனாலும் வாழ்வேன்!
என் எல்லாக்
காயங்களிலிருந்தும்
உடைவுகளிலிருந்தும்
நோவுகளிலிருந்தும்
ஆத்திரங்களிலிருந்தும்
ஏமாற்றங்களிலிருந்தும்.. (கௌசலா)

என வரும் வரிகள் நேரடியாக ஆள்வோரின் ஆணைகளுக்கு தங்கள் பதில்களைத் தந்துவிடுகின்றன. இந்திரா, தர்சினி, தான்யா, பிரதீபா, கற்பகம் யசோதர, ரெஜி ஆகியோரின் கவிதைகளும் சாவின் விரும்பவியலா மணத்தைக் கடத்துகின்றன.

கவிதை புரியாமல் போய்விடுமோ என்கிற ஒரு அகப் போராட்டத்தை கவிஞர்கள் நிகழ்த்திய வண்ணம் இருக்கிறார்கள். அதனால் கவிதை முடிந்த பின்பு சில பின் வரிகளை உடைத்து போட்டு அதை விளக்கு முயற்சி நடைபெறும். அதற்கு ஒரு உதாரணம்:
அகமெங்கும் பொழியும் முன்பனிக்கால மந்தாரங்கள் – நிவேதாவின் கவிதை

………….
……………..

இனியெதற்கு என் தயவு
முலைகளே பேசட்டும்……….
கழுத்தை நெரிக்கும்
‘ஆம்பிளை’த்தனங்களைப் பற்றி
கால்களைப் பிணைக்கும்
யுத்தச் சங்கிலியைப் பற்றி…
இன்னமும்இஅந்தரத்தில் அலைவு7ண்டிருக்கும்
என் எப்போதைக்குமான
கனவுகளைப் பற்றி….

இனியெதற்கு என் தயவு
முலைகளே பேசட்டும்……….

நிவேதாவின் இந்த வரிகளைலேயே கவிதை முடிந்து விடுவதாக நான் கருதுகிறேன். முலைகள் என்ன பேச வேண்டுமோ அதை வாசகர் மனம் உணரும், பின்வரும் விளக்கங்கள் கவிதை அனுபவத்தை சற்று தொந்தரவு செய்கிறது. வாசகர் அடையக்கூடிய இதுபோன்ற சிறு அனுபவக் குறிப்புகளுக்கப்பால் ஆணாதிக்கத்தை கூறு போட்டு எடுத்துரைப்பதில் இத்தொகுதியின்  அனைத்து கவிஞர்களின் கவிதை மொழியும், படிமங்களும் குறிப்பிடத்தக்கவை.

தொகுதி முழுக்க இறைஞ்சும் வார்த்தைகள், தசைகளை இறுக்கும் வார்த்தைகள் என எங்கும் நிறைந்திருக்கின்றன. தொகுதியிலுள்ள பெயர்களை எடுத்துவிட்டால் அனைத்தும் ஒரே கவிஞருடையதோ எனத் தோன்றும் அளவிற்கு அது நம்மைக் கொண்டுவிடுகிறது. போரின் வாதையைச் சொல்ல வந்த கவிதைகளில் இலக்கிய நயம் தேடிப் பயணிப்பதில் எனக்கு எப்பொழுதும் உவப்பில்லை. எல்லோருக்கும் இழப்பில் சொல்ல இருக்கும் ஒரு சொல்லை கவிஞர்கள் மட்டும்தான் எழுதவேண்டுமென்பதில்லை. எழுதப்படிக்கத் தெரியாத ஒரு ஆன்மாவுக்கு கல்வியால் ஆகப்போவது ஏதுமில்லை. ஏனெனில் அனைத்தும் படித்தவர்களே ஆயுதத்தைத் தூக்குவதோடு அதற்குப் போதுமான கருத்தியலையும் எழுதுகிறார்கள். ஈவிரக்கமற்ற முதலாளிக்கு கவிதைகளால் ஒரு பயனும் இல்லை. பணத்தையும் பேரத்தையும் தவிர ஆள்வோர்களுக்கு கவிதையால் என்ன பயன். அவர்கள் நம்மை எழுத வைக்கிறார்கள். எழுத்து மாற்றத்தைக் கொண்டுவரும். அதற்கு கவிதைகள் சாட்சி. அல்லற்றபட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றோ…………..

~~~~~~~~~~~~~~

நன்றி: சாவின் உதடுகள் வலைப்பதிவு-மற்றும்-உயிர்எழுத்து இதழ்