மொழிசார் உலகு: கூட்டு வேலைகளது தேவை

சிறு வரைபு:

வடலி பதிப்பகத்தின் நூல்களது வெளியீடு ஸ்காபரோ சிவிக் சென்ரறில் கடந்த மாதம் நடைபெற்றிருந்தது. தனியே ஒரு பதிப்பகத்தின் தேவை என்பதாயன்றி பொது நோக்கில் எம் மத்தியில் ஒவ்வொரு துறையிலும் தேவையாய் இருக்கின்ற இணைந்து செய்யும் – குறிப்பாய் மொழி மற்றும் வரலாறு தொடர்பான – சமூக முன்னேற்றத்துக்குக் கட்டாயமானதான – சில  வேலைத் திட்டங்கள் குறித்து எழுதத் தோன்றியது.
பெயரை ஈட்டித் தராத அத்தகு சமூக வேலைகளில் பங்குகொள்ள  – முக்கியமாக அந்த வேலை பெயரை ஈட்டித் தருமா என்பதையறியவியலாத அதன் ஆரம்ப கட்டங்களில் போய், அதற்குத் தம் நேரத்தைப்  பங்குபோட – பெரியளவில் யாரும் முன்வருவதில்லை.  அத்தகைய முகமறியாத வேலைகளுக்கென சமூகத்தில் ஒரு பகுதி எப்போதும் தயாராகவே இருக்கிறது. அது மிகச் சிறிய இலக்கங்களிலேயே தம் பணியைத் தொடங்குகிறது. அப் பணிகளே சமூகத்தை வளப்படுத்தும் தூண்களாக நிற்கின்றன.

இணையம் – தொழில்நுட்பம்:

இன்று இணையத்தில் நாங்கள் அனுபவிக்கின்ற வசதிகள் — யூனிக்கோட் எழுத்து, பாமினி உள்ளிட்ட எழுத்துருக்கள் — தன்னார்வர்களது உழைப்பிலேயே தோற்றம் பெற்றவை.

இணையத்தில் தமிழ்-ஆங்கில, ஆங்கில-தமிழ் அகராதிகள், விக்கிபீடியா,   முழுமையாய்த் தமிழிலேயே கணிணி மற்றும் இணையப் பாவனை, எண்ணிம நூலகத் திட்டங்கள் (Digital library)…. மேலும், தாம் இணையத்தை உபயோகித்த போது (இணைய நூலகத் திட்டங்கள் போன்ற) அங்கிருந்த அனேக வளங்கள் தமிழக உள்ளடக்கத்தை கொண்டிருக்கின்றன என ஈழ நூல்கள் மற்றும் ஈழம் தொடர்பான தகவல்களை (விக்கிபீடியா உள்ளிட்ட தளங்கள் ஊடாக) இணையத்தில் இணைக்கத் தொடங்கியவர்கள்…. தேடும் ஒரு தலைமுறைக்காய் இணையத்தில் ஈழ நூல்களும் இருக்க வேண்டும் என்கிற ஒரு எண்ணம் ஈழ நூல்களை ஒரு இடத்தில் இணைக்கும் நூலகத் திட்டமாக உருவாக, அத்தகைய நூல்களைப் படித்தல் அத் திட்டத்தை பயன்படுத்துதல் உட்பட இணையத்தில் செய்து தரப்பட்டிருக்கிற பல சேவைகளது பயனாளர்களே இன்று எம்மில் பலரும்.

நவீன யுகத்தில் ஒரு மொழி நின்றுபிடிப்பதற்கு அது தன்னை ஒவ்வொரு புதிய தொழில்நுட்பத்திற்கும் ஏற்ப தகவமைத்துக் கொள்வதே வழி செய்கிறது.  மேற்குறிப்பிட்டவர்களது வேலைகளது முக்கியம் என்னவெனில் அவை ஒரு மொழியின் உயிர் பிழைத்தலை உறுதி செய்கின்றன.  மொழி வாழ்கிறது என்கிறபோது  – தனியே தமிழ் என்பதல்ல – அம் மொழியில் பதியப்பட்ட வரலாறுகளுமே அதனோடு சேர்ந்து வாழ்கின்றன.

வரலாறும் ஆவணப்படுத்தல்களும்:

புலம்பெயர் நாடுகளில் 1980களின் ஆரம்பத்திலிருந்து ஈழத் தமிழர்களது பல்வேறு பங்களிப்புகள் அவர் பெயர்ந்த நாடுகளெங்கும் உள்ளன.  பொதுநீரோட்டத்திற் பரவலாக அறிமுகமான ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியல் கருத்துக்களுக்கு மாற்றானவை முதலான சிறு சமூக இயக்க செயற்பாடுகள் – இலக்கியப் பதிவுகள் அனுபங்கள் என அவற்றின் பயணப் பரப்பு பெரிது. இன்று அவை அந்தந்த இடங்களுடனும் சிறு குழுக்களுடனும் தனிநபர்களுடனும் சுருங்கி மற்றவர்கள் வாசிக்கப் பெறக் கூடிய வடிவிலற்று பதிவற்றப் போய்விட்டன.  தமிழிணையத்தில்  அதன் ஆரம்ப காலத்திலிருந்து விவாதிக்கப் பட்டவையினதும் நிலமை கிணற்றில் போட்ட கல்லினதே. விளைவாக: ஏலவே  விவாதித்த விடயங்களை விளக்கங்களையே மீள மீள கூற வேண்டி வருகிறது.  எண்ணிம நூல்த்  திட்டங்களது அவசியம் போலவே பதிப்புத்துறையினது அவசியத்தையும் அவை வலியுறுத்துகின்றன.

இதுவரை இணையத்தில் எழுதியவை கிணற்றில் ஆற்றில் அல்ல கடலில் போட்ட கல்லென காணாது போக அவை எரிக்கப்படாமலும் அழிந்துபோகாமலும் இணைய சேகரத்தில் இருக்கின்றன என்பது தவிர அதன் அத்தகைய வடிவம் இன்னமும் – இணையத்தில் அன்றிப் புத்தகத்தில் விடயங்களைப் படிக்கும் – மரபான வாசகர்களை அடைவதற்கான தடையாகவே இருக்கின்றது.

வடலி போன்ற பதிப்பகங்ககளது தேவையும் வளர்ச்சியும் இதன் போக்கிலேயே முக்கியமானது. ஏலவே இருக்கிற பதிப்பகங்களது போதாமைகள்  எனப் பாக்கிற போது முக்கியமாக அவற்றின் பதிப்புகள் எல்லோரையும் கிடைக்கக் கூடிய மாதிரியான சந்தைப்படுத்தல் அல்லது விநியோகம்  குறித்ததான முதன்மையான சிக்கல்கள் இணைய புத்தகக் கடை போன்றன ஊடாக வடலியாற் தீர்க்கப்பட்டிருக்கிறது. இத்தகைய பதிப்பு வசதிகள் ஊடாக அவை பதியப்படுவதூடாகவும் பேசப்படுவதூடாகவுமே அதை முன்வைத்த உரையாடல்களுக்குள் நாங்கள் செல்ல முடியும்

இன்றைய எம் காலத்தில் – 25 வருடங்களுக்கு மேலாய் இழப்புகளையே கண்டுவந்த ஒரு சமூகத்தின் மரணத்தினுள் இறுதிவரை வாழ்ந்த மனிதர்களின் பல்வேறு குரல்கள் (பக்கங்கள்) புத்தகங்களாய்ப் பதியப்பட வேண்டும்.  அதே போல: 1980 களில் வந்த சஞ்சிகைகளில் விவாதிக்கப்பட்ட போராட்ட அரசியலாகட்டும் இணையத்தின் தணிக்கையற்ற கட்டமைப்பில் பகிரப்பட்டவை ஆகட்டும் அவையும் பரந்த வாசிப்புக்கென பதிப்பிக்கப்பட வேண்டியவையே. பதிவுகள் இருக்கிற சந்தர்ப்பங்களிலேயே, `பெரும்பான்மையின் அரசியல் மனநிலைக்குள் எமது குரல் சிறியதாய் இருந்த போதும், 1980களின் இறுதியில் எமது போராட்டம் தொடர்பான இத்தகைய விவாதங்கள், கேள்விகள் எம்மால் முன்வைக்கப்பட்டன` – என்று எமக்கு முந்தைய தலைமுறையில் ஒரு சாரார் சொல்கிறபோது இன்றைய மற்றும் இனி வரும் தலைமுறை அதை `அது நம்பும்படியாய் இல்லை` என இலகுவாகக் கடந்து செல்ல முடியாது போகும். இவற்றின் பயன் வரலாற்றை அறிதல் தான்.   வரலாற்றின் எல்லாப் பக்கங்களும் பின்வருபவர்களுக்குக் கடத்தப்பட வேண்டும். அப்போதுதான் நேர்மையான கடந்தகாலம் குறித்த பரிசீலனைகள் – சுய விமர்சனங்கள் சாத்தியம்.

கல்வி வட்டங்கள்:

ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் தமிழியலை ஒரு துறையாகக் கொணரும் நீண்ட காலத் திட்டத்துக்கான அறிமுகத்தின் பொருட்டு – வருடாவருடம் ரொறன்ரோப் பல்கலைக்கழகத்தினால் தமிழியல் ம◌ாநாடு என ஒன்று நடப்பதுண்டு. கல்வியாளர்கள் தமதான துறைகளில் தமிழியலுடன் தொடர்புபட்ட ஆய்வுகளை வாசிக்கும் அந்த மாநாட்டின் தாபகரான — சில வருடங்களுக்கு முன்இலங்கை திரும்பிச் சென்று இப்போது மட்டக்களப்பில் சமூக வேலைகள் செய்துகொண்டிருக்கிற – தர்சன் அம்பலவாணர்  போன்றவர்களுடன் பல மாணவர்கள் தன்னார்வர்களுடன் இணைந்து ஒருங்கிணைக்கும் ஒரு நிகழ்விது.

கல்வியாளர்கள் இடம்பெறினும் முற்றிலும்  தன்னார்வர்களாலேயே ஒருங்கிணைக்கப்படும் இந்த மாநாட்டிற்குச் செல்வது தொடர்பில் – தொழிற்சாலைத் தொழிலாளர்கள் அல்லாத  – முழுநேர வேலைகளிலிருக்கிற சமூகத்தில் ‘மாற்றம்’ குறித்துப் பேசுகிற பலர் அதிக கட்டணம் என முறையிடுவதைக் கேட்டிருக்கிறேன். விமர்சனங்களையும் பரிந்துரைகளையும் ஏற்றுக் கொள்ளவியலாத எந்த சூழலும் ஆரோக்கியமானதல்லத் தான்.  ஆகவே அந்த முறையீட்டின் நியாயத் தன்மை அல்ல கேள்விக்குரியது – மாறாக – இத்தகைய சந்தர்ப்பங்களில் – அவர்களை ஒத்த இடத்தில் இருக்கிற அவர்களை விட (அதிக) குடும்பப் பொறுப்புக்களை உடைய நபர்கள் இவ்வாறான தன்னார்வ முயற்சிகளில் பங்கெடுத்துக் கொள்வதும் கட்டணம் செலுத்தி வருவதும் அதன் பிறகே தமது விமர்சனங்களை முன் வைப்பதும் அவை கவனத்துக்கு எடுக்கப்படாத போது விலகுவதையும் வழக்கமாய்க் கொண்டுள்ளார்கள் என்பதும், கட்டணம் குறித்து கூறுகிற  முன்னையவர்கள் தாம் இத்தகைய நிகழ்வுகளால் பயன்பெறுபவர்களாக இருக்கிற போது பின்னையவர்களது ‘நியாயமான’ விமர்சனங்களைக் கூட நியாயமற்றது எனப் போடு போடக் கூடியவர்கள் என்பதும் தான் கேள்விக்குரியது.

மாற்றத்தை விரும்புபவர்கள் அதற்கான விதைகளை போடுவதுடன் யாராலோ ஏலவே விதைக்கப்பட்டவைக்கும் நீர்ப்பாய்ச்சி அவற்றை துளிர்விடச் செய்பவர்களாவார்கள்.  உங்களுக்கு சூழலியற் பிரச்சினைகள் குறித்த அக்கறைகள் உண்டெனில் உங்கள் வாழ் நாளில் குறைந்த பட்சம் ஒரு மரத்தைத் தானும் நீருற்றி வளர்க்க தெரிய வேண்டும்.    (வளர்க்கும்) சிறு குழுக்களானவற்றுடன் எமக்கு வெவ்வேறு முரண்பாடுகள் – விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் இவற்றின் இருப்பு ம் வளர்ச்சியும் முக்கியமானது.
ஒருமித்த கூட்டு  வேலைகள் அவற்றுக்கான உற்சாகப்படுத்தல்கள்  பங்களித்தல்கள் உரிய விமர்சனங்கள் இவையன்றி அவை வளரவும்  முடியாது.

மாற்றத்துக்குப் பங்களித்தல்:

ஒரு எழுத்தாளருடான எம் மத்தியில் பதிப்பகங்களது தேவையை முன்னிறுத்திய ஒரு உரையாடலின் போது அவர் என்னிடம் கூறினார் “நான் ஒரு காலமும் காசு குடுத்து புத்தகம் போட்டதில்ல.”
இன்றைய நிலையில் புலம்பெயர்ந்து வசிக்கிற அறியப்படுகிற எழுத்தாளர்கள் வெளிநாட்டில் வசிக்கிற ஒரு  பெண் அல்லது ஆண் – கவிஞர் – புலம்பெயர்ந்தவர் – இந்த அடையாளங்களுடன் தனது புத்தகத்தை இலவசமாகத் தமிழகத்தில் பதிப்பித்துக் கொள்ள முடியும். ஏனெனில் அந்த அடையாளங்களை விற்பதற்கான சந்தை அங்குண்டு. மறுவழத்தில், ஈழத்தில் இருந்து எழுதுகிற அல்லது எழுதாது போன அதே தலைமுறையைச் சேர்ந்த வெளித் தெரியாத குரல்கள் குறித்து அவர்களுக்கும் சரி புலம்பெயர் ஈழத் தமிழர்களுக்கும் சரி தேடலும்  அக்கறையும் இல்லை என்கிற போது – எப்பிடி அதை வளமான சூழலாய் எடுத்துக் கொள்ள முடியும்?
எமதான அடையாளம் என்பதும் சுயமரியாதை என்பதும் எல்லா சந்தர்ப்பங்களிலும்  தனி ஒருவருடையது மட்டுமல்ல. ஆகையால் தான் சில எமது எழுத்தாளர்களுக்கு தமிழகத்தில் புத்தகச் சந்தையில் நிறைய பெறுமதி இருந்தாலுமே கூட –  அப் புத்தகச் சந்தைகள், பதிப்பகங்கள்  முன்னிறுத்தாத படைப்பாளிகளது வருகையை ஊக்குவிக்கவும் – பதிப்பகங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
வெளியில் மரம் நடுதல்; பாரபட்சங்களுக்கு எதிர்ப்பு; விலை கொடுத்து புத்தகத்தை வாங்குதல் – இணைந்து கொள்ளுதல் –  கட்டணம் கொடுத்து  ஒரு நிகழ்வுக்குச் செல்லல்; கூட்டு வேலைளூடாயான மாாற்றத்துக்கான முதல் பங்களிப்புகள் – வளர்ச்சிப் படிகள் இவ்வாறானவையே.

பெயரற்ற சமூக ஆர்வலர்கள்

உண்மை எதுவாயினும், கூட்டுழைப்புக்குத் தயாராய் இல்லாத தன்முனைப்பான பலரை நாம் அன்றாடம் காண முடியும். இந்த நாட்டில் (பிற கனடிய மாநிலங்கள் பலவற்றிற் கூட குறைவாய் இருக்கிற) அடிப்படைச் சம்பள உயர்வு ரொறன்றோவில் சிறு குழுக்கள் இணைந்து பெற்றுத் தந்த வெற்றியே (குறிப்பாக தொழிலாளர் நடவடிக்கை நிலையம் என ரொறன்ரோவில் இன்று இயங்குகிற அமைப்பினால் 5 வருடங்களிற்கு முன் தேர்தலை முன்வைத்து அரசியல்வாதிகள்-வாக்காளர்கள் என்ற தொடர் பிரச்சார பரப்புரைகளும் [$10 Minimum Wage Campaign] அடித்தள வேலைகளுமும் அதற்கு பெரும் பங்கு வகித்தன. பிற இனத்தவருடன் அத்தகைய வேலைகளில் இணைந்திருந்த எமதினத்தைச் சேர்ந்த பாலின வேறுபாடற்ற பல பெயரற்ற தொழிலாளர்கள் நினைவில் வருகிறார்கள்). அவர்களது உழைப்பில் விளைந்த பிரதிபலனை வேலையிலிருக்கும் அனைவரும் அனுபவிப்பார்கள். மாற்றத்துக்காக உழைப்பவர்கள் தம் இறுதி நாட்கள் வரையும் கூட தன்னார்வத் தொண்டர்களாக இருக்க, முகாமைத்துவ மனங்கள் அதில் இலாபமீட்டலை அனுபவிப்பவராகவும் அரசியல்வாதிகளாகவும் கல்வியாளர்களாகவும் – இவர்களது உழைப்பை உறிஞ்சியவாறும் தம் ஆய்வுகளுக்காகத் திருடியவாறும் – தன்வய வெற்றிகளை பெற்றவாறு இவர்களைக் கடந்து சென்றிருக்க முடியும்.

கவனித்தால்த் தெரியும் – எப்போதும் அர்ப்பணிப்புணர்வுடன், ஊதியமற்ற பங்களிப்புகளை வழங்கி – மாற்றங்களை உருவாக்குபவர்களாய் பெயரற்ற யாரும் இருப்பார்கள்; [ஏனெனில்] அம் மாற்றத்தில் பங்கெடுக்காமலே, அது – பின்னர் – தமக்குப் பயனளிக்கிற சமயத்தில் வந்து இணைந்து கொள்வது என்பது சமூக ஆர்வலர்களுடைய இயல்பல்ல.

சமூக ரீதியான பிரக்ஞையுடன் அதற்கான பங்காளர்களாகவும் வாழ விரும்புகிறவர்களைக் கவர்வது இச் சின்னஞ்சிறு கூட்டு வேலைகளால் உருவாக்க முடிகின்ற மாற்றங்களே. சமூக ரீதியான பொறுப்புகளை எடுத்துக் கொள்கிற ஒவ்வொருவரும் பதிலாக நல்லதொரு விளைச்சலுக்காய்த் தயார்ப்படுத்த தமது வாழ்நிலத்தை உழுகிறார்கள். ஒவ்வொரு தனிநபரும் தலா ஒருவருக்குத் தாம் கற்றதை பகிர்தல் என்கிறதான (each one teach one ) சமூகச்  சமநிலையை வேண்டிய கோசங்களே எமது தலைமுறையினது ஆன்மாவாக இருக்கிறது. இருக்க வேண்டும்.

|

எடுத்தாளப்பட்ட தளங்கள்:
நூலகம் திட்டம்: http://www.noolaham.net/
எண்ணிம நூலகம்: http://www.noolaham.org
விக்கிபீடியா அகரமுதலி: http://ta.wiktionary.org/
வடலி பதிப்பகம்:  http://vadaly.com/ http://vadaly.com/shop/
ரொறன்ரோ தமிழியல் மாநாடு: http://tamilstudiesconference.ca/
தொழிலாளர் நடவடிக்கை நிலையம்: http://workersactioncentre.org/
————————————————–
தாய்வீடு: நவம்பர் 2011

Advertisements

ஒரு தலைமுறைக்கான பிரியாவிடை

“ஒரு முதியவர் இறந்து போவதென்பது, ஒரு நூலகம் முழுவதுமாய் எரிந்து போவதற்கு சமானம்” – ஆபிரிக்க பழமொழி

ஒன்று

அந்த புகைப்படக் கலைஞரின் இணைய அல்பத்தில் இருந்தது ஒரு வீட்டின் நிழற்படம்; அது அவரது பாட்டன், பாட்டி வாழ்ந்த வீடு. 103 வயது வரை அவரது பாட்டன் அங்கு வாழ்ந்தாராம் என்கிற குறிப்புடன் அது இருந்தது. நான் அந்த வீட்டைப் பார்த்துக் கொண்டிருந்தேன், நீண்ட நேரம். அவரது மரணத்துக்குப் பிறகு அங்கு யாரும் போவதில்லை. அதற்குப் பிறகு அது தொலைதூரக் கிராமத்து வீடு; வருடாவருட நீத்தார் கடமைகள் செய்ய உறவினர் கூடுகிற இடம்.

எனது மனம் 103 வருடங்களை பின்தொடர்ந்தது. எனை ஒத்த வயதினரான அந்த நண்பருக்கு நினைவறிந்த ஒரு 25 வருடங்களின் முன்பிலிருந்து பாட்டனின் வாழ்வு தெரியும். நண்பரின் பெற்றோருக்கு அதற்கு முந்தைய ஓர் 25 வருடங்கள் வரை அவரது வாழ்வு தெரிந்திருக்கும். அதற்கு முந்தைய, அதற்கும் முந்தைய 50 வருடங்களை யாரறிந்திருப்பார்?

அவர்களது வாழ்க்கைக் காலமான இந்த ஒரு நூற்றாண்டுக்குள் அவர்களது மொழியில் வழக்கிலிருந்த எத்தனை சொற்கள் காணாமற் போயிருக்கும்? அதில் எத்தனை ஆங்கிலக் கலப்புகள்? எத்தனை பிற மொழிக் கலப்புகள்? தம் பால்யத்தில் அவர் நாவுகள் உச்சரித்துத் திரிந்த எத்தனை சொற்களை இறுதியில் அவர்களுமே மறந்திருப்பார்கள்?
(அவை குறித்த விமர்சனங்களுக்கு அப்பால்) வழக்கிழக்க வழக்கிழக்க அழிகின்ற சம்பிரதாயங்கள் போல அவர்களது வாழ்வு எத்தனையை இழந்திருக்கும்?

எனது சிந்தனை நான் காணாத அவர்களது வாழ்வில் அறியாத வரலாற்றில் திகைத்து நின்றது. எந்தப் புத்தகத்திற் போய்த் தேடுவது அவர்களது வாழ்க்கைக் கதையை? அவர்களது இளம் முகத்தை? சிறுவத்தை, குமரிமையை?

இரண்டு

நிசாந்த் றட்னாகர் பெங்களூரைச் சேர்ந்த புகைப்படக்கலைஞர். அவரது தாத்தாவின் அந்த 103 வருட வாழ்வின் சீரும் சிறப்பும் அவ் வரலாற்றில் புதிய தலைமுறைக்கு நிச்சயமாய் இருக்கக் கூடிய (இருக்க வேண்டிய) சமத்துவமின்மைகள் குறித்த கேள்விகளும் விமர்சனங்களும் பதியப்படாமல் அவருடனே போகப் போகின்றன; அவர் வாழ்ந்த வீடோ உதடுகளற்ற சாட்சியாக நிற்கிறது.

அதைப் பார்த்துக் கொண்டிருக்கிற என் கண் முன், எனது பாட்டர்களின் மரணம் நிகழ்ந்த விதங்கள் நினைவாடுகிறது. கொடும் இடப்பெயர்வில், குண்டுவீச்சில், அகாலத்தில் அவர்களுடன் அவர்களது வீடுகளும் வாழ்வின் உயிர்ப்பை இழந்து நிர்மூலமாகின. கைவிட்டுச் சென்றவையும் கூரைகளற்றுப் போக, காணிக்குள் இன்று பற்றைகள் வளர்ந்து நிற்கின்றன. யன்னல்களும் கதவுகளும் களவாடப்பட்ட – வாழ்வின் தடங்கள் அழிக்கப்பட்ட – வீடுகள். பிள்ளைகள் வெளியேறிய நிலங்களில் அவருக்காய்க் காத்திருந்த முதிய பெற்றோர் ஒவ்வொருவராய் தம் ஆயுளை முடித்துக் கொண்டிருக்கிறார்கள்; முடித்துக் கொண்டும் விட்டார்கள்.

நிசாந்துக்கு தனது பாட்டர்கள் வாழ்ந்த வீடு என்கிற ‘நினைவைத்’ தர ஒரு வீடு இருக்கிறது. சிலவேளை புகைப்படங்கள் இருக்கலாம் (அவை எரிந்தும் அழிந்தும் போவதற்கான போர்ப் புலமும் இல்லை). சிலவேளை ‘அவரது சினிமா’வில் அவரது பாட்டனை ஒத்த ஒரு கதாபாத்திரம் பேசிக்கொண்டிருந்த ‘பதிவு’ம் இருக்கக் கூடும்.

(முதிய தலைமுறை மட்டுமன்றி, போரினுள்ளும் அதன் இடப்பெயர்வுகள் இதர அழிவுகளுக்குள்ளும் வாழ்ந்த குடும்பங்கள் – உயிரைக் காப்பாற்ற ஓடிய அலைவில் இன்ன பிறவற்றுடன் அந்தந்தக் காலத்தைய தம் குடும்ப வரலாறுகளைக் கொண்டிருந்த புகைப்படங்களை இழந்தன என்பது இன்னொரு புறமிருக்க,) ஈழத்தைச் சேர்ந்த முதிய தலைமுறை குறித்து எம்மிடம் என்ன இருக்கிறது? எமது முதியவர்களது வாழ்க்கைப் பதிவுகள், வாய்மொழி வரலாறு, அவர்களுடன் சம்பந்தப்பட்ட சிலருடன் தானே தங்கி பின்னர் அவர்களதும் அழிவுடன் அழியப் போகின்றன?

இந்தக் கேள்வியுடனே, இந்த மேற்கோளை இங்கு எழுத விரும்பகிறேன். “ஒரு முதியவர் இறந்து போவதென்பது ஒரு நூலகமே எரிந்து மண்ணோடு மண்ணாவது போன்றதாகும்” – ஆம் அவர்கள் தம்வரலாற்றை தம்முடன் எடுத்துப் போகிறார்கள். தம் அனுபவங்களது பெருங்கதைகளைத் தம்முடன் எடுத்துப் போகிறார்கள். அதிலிருந்து நாம் கற்கவேண்டிய எமக்கான பாடங்களை எடுத்துச் செல்கிறார்கள். சாகசங்களும் துயரங்களும் நீச்சலடித்து வென்ற வாழ்க்கைச் சாதனைகளும் போராடி வென்ற உரிமைகளும்….. இங்கே அவர்களை புகழாரங்களால் நிரப்பி ‘(அவர்களுடைது) அது ஒரு உன்னத காலம்!’ என நிறுவுவது அல்ல நோக்கம்.
அவர்களது காலம் அனுஸ்டித்த இழிவு மிகுந்த சாதீயமனநிலைகளும் (இன்று வரைத் தொடரும் அதன்), ஆதிக்க, ஆணிய, நிலபுரபுத்துவ மனநிலைகளும் நிச்சயம் விமர்சனத்துக்குரியதும் ஏற்கவியலாததும் எதிர்ப்புக்குரியதும் தான். ஆனால்:
எமது பாட்டர்கள் என இங்கு குறிப்பீடுவது ஒரு குறிப்பிட்ட ஜாதிப் பிரிப்பை அல்ல. நிலமற்ற எமது பாட்டர்கள், அவர்களை சுரண்டிய எமது பாட்டர்கள், இருவர்க்கத்தாலும் சுரண்டப்பட்ட பெண்கள். இவர்கள் எல்லோருடைய பக்கங்களும் கதைகளும் அதன் வரலாறும் தான் அவர்களுடைய மரணத்துடன் அழிந்து போகிறது. சுரண்டப்பட்ட, ஒடுக்கப்பட்ட, அதற்கெதிராய் போராடி வாழ்ந்தவர்களது கதைகள்; ஒடுக்கிய, சுரண்டிய இழிவுகளுடனும், மனிதர்களே ஆனவர்களது வரலாறுகள்.

மூன்று

“ஆகாஷ குஸீம்” என்கிற தனது திரைப்படத்தினது திரைக்கதையின் தமிழாக்கமான “ஆகாயப் பூக்கள்” நூல் முன்னுரையில் பிரசன்ன விதானகே சொல்கிறார்:
“63ஆவது வயதில் அடியெடுத்து வைத்துள்ள நமது நாட்டின் திரைப்படத் துறையை நாம் இலங்கைத் திரைப்படத்துறை என அழைத்த போதிலும் அது ஆரம்பம் தொட்டே சிங்களத் திரைப்படத் துறையாகவே இருந்து வந்துள்ளது. கடந்த காலத்தில் மொத்தம் 1040 சிங்களத் திரைப்படங்களை நாம் உருவாக்கியிருந்த போதிலும் மொழி மாற்றம் செய்யப்பட்ட திரைப்படங்கள் உள்ளடங்கலாக இந் நாட்டில் 40 தமிழ்த் திரைப்படங்கள் மாத்திரமே இதுவரை உருவாகியுள்ளன. நாட்டின் மொத்த சனத்தொகையில் 19 வீதமானோர் தமிழ் பேசும் மக்களாக இருக்கின்ற நிலையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பில் இவ் எண்ணிக்கையானது எந்த வகையிலும் போதுமானதல்ல என்பதை அடித்துக் கூற வேண்டியதில்லை.”

பிரசன்ன கூறுவது போல: இதுவரை வெளியிடப்பட்ட 1000 சிங்களத் திரைப்படங்களில் நிச்சயம் சிங்கள முதியவர்கள், அவர்களது வாழ்க்கை, பேச்சு முறைமை என (ஒரு வர்க்கத்தைப் பிரதிபலிப்பதாய் இருப்பினும்) இருப்பார்கள். அவர்களது ஒரு தலைமுறை பதியப்பட்டிருக்கும்.

இதுவரை எமக்கான சினிமா என ஒன்று அதற்கான அழுத்தமான முகவரியுடன் வளர்ந்திராத நிலையில், போருக்குள் சிக்குப்பட்ட மக்கள் தாம் வாழ்ந்த வாழ்வென ஒன்றை எல்லாவகையிலும் இழந்தவர்களாயே ஆகி விட்டார்கள். இதன் விளைவு: போரினில்
முதியவர்களுடன் பரதரப்பட்ட சமூகபடிநிலைகளின் பேச்சுமொழியும், சுயவரலாற்றுக் கதைகளும் மடிகின்றன. போரே அநியாயத்துக்கு பணிவது என்கிற போது, போரிடம் எந்த நியாயமும் கேட்க முடியாது. எனது தாத்தாவின் பால்ய கால மொழிவழக்கை இன்னும் 10-15 வருடங்களுள் அவரைப் போலவே அவரது தலைமுறை முழுவதும் மெளனித்த பிறகு சொல்வதற்கு யாரும் இருக்க மாட்டார்கள்.

**
2007 யுத்தம் தொடங்கிற போது, தனிப்பட்ட உரையாடல் ஒன்றில், இந்திய கல்வியாளர் ஒருவர் இப்படிக் கூறினார் “இலங்கையில் யுத்தம் நடக்கிற பகுதிகளில் உள்ள ஓலைச்சுவடிகள் அழிந்து போகாதா, அதை யாரும் கவனிப்பார்களா” என. கொடும் யுத்தத்தில் சிக்கப்போகிற சனங்களை, தெரிந்த தோழமை முகங்களை யோசித்துக் கொண்டிருந்த நாம், “மனுசரே அழியப் போகினம், இதில ஓலைச்சுவடிகளோ” என நினைத்துக் கொண்டது ஞாபகம். அவரொத்த கல்வியாளர்களது அக்கறையை கொண்டிராதவர்கள் என்கிற போதும், அவரது யோசனையை இப்போது அதே விதமாய்ப் பார்க்க முடியவில்லை. அவருக்கு முக்கியமாய்ப் பட்டதை ஒத்த வேலைகளை, வேறு சமூக பங்களிப்புகளை தம் முதன்மை நோக்கமாய்க் கொண்டு இயங்குகிறவர்கள் முன்னெடுக்க வேண்டியதில்லை; ஆனால் அப்படியல்லாத கல்வியாளர்கள், அவற்றைக் காப்பாற்றுகிற ‘வேலை’யையாவது – தம் சமூக மானுடவியலை அறிய விரும்புகிற எதிர்கால சந்ததியின் பொருட்டு – செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.

**
தனியே இதுவென்று அல்ல, எல்லா வகையான அரசியலுக்கும் இடமிருப்பதான எங்களுடைய வரலாற்றைத் தேடிச் செல்வதூடாக, அதன் பல்வேறு கூறுகளை அடையாளங் காணுவதூடாக, அவற்றை ஆவணப்படுத்துதலின் ஊடாக, நாங்கள் என்ன செய்யலாம்? எம் தவறுகளை
ஒரு முறை திரும்பிப் பார்க்கலாம். எளியோரை அடிமைகளாய் நடத்திய சக மனிதரை சாதிப் பிரிவினைகளால் அடக்கி ஆண்ட, போன்றதான பல அற்ப, வெட்கப்பட வேண்டிய விடயங்களுக்காகவன்றி, உரிய விடயங்களுக்காக, போராடி வென்ற சமூக நீதிகளுக்காகப் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்; சாமத்தியவீடு, சங்கீத வகுப்பு, பஜனைகள் என்பவை அல்லாத ‘எம் பண்பாட்டைப்’ பேசத் தொடங்கலாம்.

குறிப்பு:
இப்படியான ஒரு நோக்கத்தோடு ஏற்பாடு செய்த நிகழ்வே “farewell to our grandparents” [ஒரு தலைமுறைக்கான பிரியாவிடை; டிசம்பர் 4ம் திகதி மிட் ஸ்காபரொ சனசமூகநிலையம்] என்கிற சிறு நிகழ்வு. நீங்கள் உங்களுக்குத் தெரிந்த முதியவர்களது கதைகளை வரலாற்றை உங்களுக்குத் தெரிந்த முறையில் பதிவுசெய்யவும், அவர்களைத் தமது கதைகளை எழுதவும் தூண்டுகிறபோது சமூக வரலாறு என்கிற அளவில், அது ஒரு முக்கியமான செயற்பாடாக இருக்கும். எந்தெந்த வகைகளில், வடிவங்களில் அவர்களது கதைகளது வரலாற்றைப் பதிவுசெய்யலாம் என்பன குறித்த தொடர் நிகழ்வுகள் ஊடாகவே நாங்கள் இச் செயற்பாட்டை முன்னெடுக்கலாம்; சாத்தியப்படுத்தலாம்.

=)

பிரதிபா கனகா – தில்லைநாதன்

(=

மேலுள்ள ஓவியத்தின் தலைப்பு “‘வெறுங் கிழவீ’ “; ஓவியர்: நிலா.சாயினி (இலங்கை)