மதிப்புரை: ஒலிக்காத இளவேனில் – தி. பரமேசுவரி

“தொழிற்சாலையை விடக் கவிதை முக்கியமானது. தொழிற்சாலை வாழ்வதற்கான பண்டங்களை வழங்குகிறது; கவிதை வாழ்வதற்கான விருப்பத்தைத் தருகிறது” என்னும் ஓஷோவின் வரிகள்தான் ஒலிக்காத இளவேனில் என்னும் ஈழப் பெண் கவிஞர்களின் தொகுப்பைப் படிக்கும்போது நினைவிலெழுந்தது. ஈழத்துப் போர்ச்சூழல், யுத்தம், பெண்ணிலைவாதம், புலம்பெயர்வாழ்வு, குடும்ப இறுக்கங்கள், பிரிவுத்துயர் எனக் கூடுமானவரையிலும் விடுபடல்களின்றிப் பேசப்பட்டிருக்கிறது. வாழ்வுக்கான தேடலில், அலைச்சலில் கூடத் தங்கள் பண்பாடு (குறிப்பாக, பெண்களைக் கட்டுப்படுத்துதல்) அழிக்கப்படுவதைக் குறித்துக் கவலை கொள்ளும் ஆணியக் கட்டுமானம், சாதீயப் புலம்பல்கள், பொருள்முதல்வாதச் சிந்தனை எனச் சகலமும் பெண்களால் விதந்தோதப்பட்டிருக்கிறது. தொகுப்பு முழுவதும் இறைஞ்சுதல்களும் நிச்சயமற்ற வாழ்வின் மன்றாட்டுகளும் மன அலைவுகளும் இயலாமைகளும் துன்பியல்களுமே பெரும்பான்மையாக இருப்பது மனத்தைக் கனக்கச் செய்கிறது. ரௌத்ரமாக எழும் ஓரிரண்டு குரல்களும் கூட இறுதியில் விரக்தி மௌனம் பூணுகிறது.

கனடாவில் வாழும் புலம் பெயர்ந்த 18 ஈழப் பெண் கவிஞர்களின் கவிதைகளைப் பல்வேறு தலைப்புகளூடாகத் தொகுத்து, தான்யா, பிரதீபா கனகா தில்லைநாதன் ஆகிய இருவரும் ஒலிக்காத இளவேனிலாக்கிக் கொடுத்திருக்கிறார்கள். 2003 – 2009 காலப் பகுதியில் இலங்கையுள் நடந்த அரசியல் நிகழ்வுகள், போர் அனுபவம், நிலத்திலிருந்து பிடுங்கி எறியப்பட்டதன் துயரம், தனிமை, அச்சம் என அவரவர் உலகமும் இத்தொகுப்பில் கூட்டிணைக்கப்பட்டிருக்கிறது.
எந்தக் கலை வடிவமும் அது சொல்லும் உணர்வைப் படிப்போரின் மனத்துக்குக் கடத்துவது என்பதே அதன் முதன்மைத் தன்மையாக இருக்கவேண்டுமென்பதைப் பலரும் பல்வேறு சொற்களில் சொல்லியிருக்கிறார்கள். அவ்வகையில் இத்தொகுப்பில் உள்ள கவிதைகளின் மொழி நடை, வடிவம், செய்நேர்த்தி, உத்தி, கருப்பொருள் எனத் தனித்தனியாகப் பார்க்கத் தேவையில்லை என்பது இத்தொகுப்பின் அவசியம் கருதித் தோன்றுகிறது. இத்தொகுப்பு வாழ்வின் அவசியத்தை, வாழ்வதின் போராட்டத்தைப் பேச வந்துள்ள ஒன்று.
இத்தொகுப்புகளுக்கு முன்னர் வந்துள்ள தொகுப்புகள் பற்றிய தரவுகள் குறிப்பிடத்தக்கவை. அதை மிகக் கவனமாகப் பதிவு செய்திருப்பது அவசியமானதும் பாராட்டுக்குரியதுமாகும். இத்தொகுப்பு தாமதமானபோதும் கூட, எழுதிய பெண்களெவரும் அது பற்றிக் கேட்காததும் தொடர்ந்த தாமதமும் இற்றைகாலத்திலும் பெண்ணெழுத்துக்குள்ள தடைகளையும் அது வெளிவருவதற்குப் போராடும் நிலையையும் வெளிப்படுத்துகிறது. கவிதைகளைத் தலைப்பு வாரியாகப் பிரித்திருப்பதும் தலைப்பில்லாக் கவிதைகளைக் கூட முதல்வரி கொடுத்து உணர்த்தி இருப்பதும் நல்ல உத்தியாகும். நன்கு அறியப்பட்ட பெண் கவிஞர்கள், வலைப்பூவில் எழுதுபவர்கள், இன்னும் தொகுப்பு கொண்டு வராதவர்கள் எனப் பல வகையிலும் எழுதி வரும் பெண்கள் இந்தத் தொகுப்பால் இணைக்கப்பட்டிருக்கிறார்கள்.
எப்போதும் ஒடுக்கப்படுபவர்களாகக் குழந்தைகளும் பெண்களுமே இருக்கிறார்களென்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்தெதுவும் இருக்க முடியாது. அதிலும் குறிப்பாக, போர் நிகழும் இடத்தில் வாழும் குழந்தைகளும் பெண்களும் எத்தகைய வன்முறைகளைச் சந்திக்க நேரிடுமென்பதை அவதானிக்க முடியும். ஆனால், இத்தகைய ஒடுக்குதல்களையும் தாக்குதல்களையும் சந்திக்கும் உலக இனங்கள் பலவும் தன் துன்பியலை மொழியின் துணையுடன் பேசி, உலக இதயத்தை, மனசாட்சியைக் கேள்வி கேட்டுக்கொண்டேதான் இருக்கிறது என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். அதற்கு ஈழத் தமிழர்களும் விதிவிலக்கல்லர்.
திணிக்கப்பட்ட காலை / திணிக்கப்பட்ட எழுத்து / திணிக்கப்பட்ட ரசனை / திணிக்கப்பட்ட குறி
என்னும் நான்கு வரிகளில் ஜெபா வெளிப்படுத்தும் உணர்வுகள் பெரிய கவித்துவச் சொற்களேதுமின்றியே படிப்பவர் நெஞ்சுக்குள் கடத்தப்படுவதை, குத்துவதை உணரலாம்.
இந்தத் தொகுப்பினை ரசனை வெளிப்பாட்டுக்காகவோ, அறிவின் தீற்றலாகவோ, இலக்கியப் பிரதி மட்டுமாகவோ பார்த்து ஒதுங்கி நிற்க இயலாது. பெண்ணின் ஆவேசம், அழுகுரல், ஓலம், மௌனம், ஏமாற்றம் யாவும் இவ்வரிகளில் விரவி இருக்கின்றன.
நிச்சயமற்ற வாழ்விற்குப் பழக்கப்பட்டவர்கள் / எதற்காகவும் காத்திருப்பதை விரும்புவதில்லை / இன்றைய நிமிடத்தினை வாழ்வதுடன் / நாளைய நிமிடத்தை எதிர்கொள்ளவும் தயாராகிறார்கள்
என்னும் ரேவதியின் ‘சிதிலமடைந்துள்ள வாழ்க்கை’ கவிதையின் சில வரிகள் நம்பிக்கையும் அர்த்தமுமற்ற பெண்ணின் இயலாமையைப் பேசுகிறது.
நான் தூக்கணாம் குருவி / தும்புகளின் தொடுதல்களில் தொங்கிக் / கொண்டிருக்கிறது / எனது கூடு
என்னும் ரேவதியின் மற்றொரு கவிதை வாழ்வின் இழப்பை, இழந்தும் வாழும் வாழ்வின் வலியை உரத்துரைக்கிறது.
படைப்பு மனம் பெரிதும் இழப்புகளை, வேதனைகளைப் பேசுபவை. அதனூடாகத் தத்துவச் சரடுகளை விரித்துக் கொள்பவை. ஒவ்வொரு படைப்பும் தன் ஆதாரத்தை முன் வைத்தே இயங்கும். ரகசியமானதும் பரிசுத்தமானதுமான / ஒரே ஒரு சொல் / இன்னமும் மீதமிருக்கலாமென்று சொல்லும் மைதிலி, எழுத முடியாத தன் வலியை, கவிதையைப் பேசுவதுடன் தன் முலைகளில் அமைதி கொண்டு துயிலும், வார்த்தைகளுள் மறைந்துகொண்டு தாக்கும், அந்த மூளைத் திசுக்களிலிருந்து ஒழுகும் அசுத்தமான புன்னகையை இனியும் சகிப்பதற்கில்லையென்று குடும்பக் கட்டுமானத்தைத் தகர்த்தெறிகிறார்.
ஒடுக்கப்பட்ட பெண்களின் வாழ்வு வன்முறையாலும் தனிமையாலும் சூழப்பட்டிருக்கிறது.இன்றைய சமூக, பொருளாதாரச் சிக்கல்கள் எல்லோருக்குமே பொதுவானவை எனினும் வெளிப்படையாக ஏதும் பேச முடியாத, பேச அனுமதிக்கப்படாத பெண்களின் சிக்கல்கள் தனித்துவமானவை.உணர்ந்து கொள்ளும் அக்கறையின்றிப் உதாசீனப்படுத்தப்பட்ட அவ்வேதனைகளே கவிதைகளாய் இங்கே விரிக்கப்பட்டிருக்கின்றன.
பிறழ்வுற்ற சூழலிலிருந்து / நீ மட்டும் எவ்விதம் உயிர்ப்புடன் இருப்பாய் / மன நோயின் கூறுகளுடன் உன்னைப் பார்ப்பதை / விமர்சிப்பதை அதில் உன்னை இணைப்பதை / எப்பிரிவிலும் அனுமதிக்க முடியாது / நீ என்பது உடைவின் குறியீடு / போரின் குறியீடு சமூகத்தின் குறியீடு / நானின் குறியீடு / இப்படியிருக்க, உன்னை எப்படிப் புறக்கணிப்பேன் / புறக்கணிக்க முடியாத புள்ளியில் நானும் நீயும் / இணைந்திருக்கிறோம், காதலால் அல்ல / பிறழ்விலிருந்து எழுதுங்கள் முறிவின் முதற் குறிப்பை.
என்னும் தான்யாவின் கவிதை பெண்ணின் காத்திருப்பை, மன அழுத்தத்தைக் கடத்துகிறது நம்முள். எளிய வரிகளெனினும் எளிய விஷயமாகக் கடந்துவிடமுடியாதபடிக்குப் பேசுகின்றன.
பெண்ணை, அவளிருப்பை, தன்முனைப்பில் அவளது சிக்கல்களை மட்டுமே பேசாமல் போர்க்கால வாழ்வின் நச்சினையும் இத்தொகுப்பினூடாகப் பேசுகின்றனர்.
அரசியலும் மானுட இருப்பும் / உடலையும் உயிரையும்போல் / பின்னிப் பிணைந்ததில் / கைதுகளும் காணாமல் போதல்களும் / உயிரிழப்புகளும் / அன்றாட அவலங்களாகிப் போன / அந்தக் கனத்த நாட்களின் மௌனம் / திரும்பிக் கொண்டிருக்கிறது / அதிகார வர்க்கத்தினரின் / அட்டூழியங்களுக்கு அடிபணிகையில் / மெச்சாமலிருக்க முடிவதில்லை / சீருடைக்காரரின்மீது காறி உமிழ்ந்து / மரணத்தைத் தழுவிய எதிர்வீட்டுப் பெண்ணின் தன்மானத்தை
என்று போர் வாழ்வின் அவலத்தை, வன்முறையைப் பேசுகிறது நிவேதாவின் கவிதை. எப்போதும் போரின் கொடூர இலக்காகப் பெண் இருப்பதை, அதன் எதிர்ப்பைக் கடும் தொனியில் வெளிப்படுத்துகின்றார்.
விண்ணிற்கும் மண்ணிற்குமாய் விசுவரூபமெடுத்து நிற்கும் பெரும்கோயிலை ‘அவளாய்’க் காட்சிப்படுத்தும் ஆழியாள், அவளைச் சிறைப்படுத்தவும் ஒடுக்கவும் நினைக்கும் சமயப் பித்தர்களை இகழ்ந்து மேலும் பேசுகிறார். அவை அறிந்தோ அறியாமலோ / கருவறையில் இருட்சுடரில் / மற்றுமோர் “அவள்” / ஜனிக்கத் தொடங்குகிறாள் / கோயிற் திருக்காளை / அசைபோட்டு அமர்ந்தபடிக்கு / மொய்க்கும் ஈக்களைக் / கழுத்துமணி அசைய விரட்டுகிறது / வாலைச் சுழற்றிச் சுழற்றி.
என்னும் வரிகளில் பெண்ணின் ஆளுமை, அதை ஒடுக்க நினைக்கும் சமூகத்துக்கான எதிர்ப்புக் குரலாகவும் சுத்திகரிப்புச் செயலாகவும் அமைகிறது.
தர்சினியின், உரத்து உச்சரிக்கத்தான் ஆசை / எனது குரலை / ஆனாலும் / அலையாய் ஆர்ப்பரிக்கும் / ஏனைய குரல்களில் / அது அர்த்தமிழந்து விடுகிறது என்னும் கவிதையும்
றெஜியின், என் குருதியின் நிறத்தைத் தேடாதே / நானும் தொலைந்து போய் விடுவேன் / என் குருதி, உன்னதைப் போல சிவப்பானதே / நண்பா என்னும் கவிதையும்
பெண்ணை இரண்டாம் நிலைக்குத் தள்ளும் ஆணாதிக்கச் சமூகத்தை, போர்க்காலத்தில் கூட அப்போக்கினைக் கைவிடாத, புலம்பெயர்ந்தபோதும் மூட்டைகட்டி எடுத்துச் செல்லும் அத்தன்மையை எதிர்ப்பதைப் பதிவு செய்கிறது. பெண்ணின் சமகால வாழ்வைப் போர்ச் சூழலிலும் புலம்பெயர்விலும் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பதியும் இக்கவிதைத் தொகுப்பில் கவிதையல்லாத கவிதைகளும் சில விடுபடல்களும் கூட உண்டெனினும் காலத்தால், பேசும் பொருளால் முக்கியமான தொகுப்பே.
பெண் விடுதலையின் மொழியை, பெண்ணெழுத்தின் பிரக்ஞையை, சர்வதேசப் பின்னணியிலான பெண்ணின் அடையாளச் சிக்கலை, புதிய பாலியல்புகளை, உறவுகளை மேலும் மேலும் பெண்கள் வெளிப்படையாய்ப் பேச வேண்டும். இத்தகைய தொகுப்புகள் இன்னும் இன்னும் பெருகிவர வேண்டும். சிந்தனையாலும் உள்ளடக்கத்தாலும் வெளிப்பாட்டு அழகியலாலும் செழுமையுற வேண்டும். பெண் உரத்துப் பேசத் தொடங்கும்போதே அவளுடைய விடுதலைப் பாதை புலப்படத் தொடங்கும். பேசுவாள்; அதன் தொடக்கமான தொகுப்பாக நம் கையில் இருக்கிறது ‘ஒலிக்காத இளவேனில்’.
ஒலிக்காத இளவேனில்
தொகுப்பு : தான்யா – பிரதீபா கனகா – தில்லைநாதன்
வடலி வெளியீடு
முதல் பதிப்பு, டிசம்பர் 2009,
விலை 135.00
Advertisements