இசை, மந்திரம் மற்றும் விடுதலை

: மாயா ஆஞ்ஜலா என்கிற கதைசொல்லி :

மாயா ஆஞ்ஜலோவின் கவிதைகளில் பதின்மம் முழுவதுக்குமான தோழமை இருந்தது.  பூர்வீகக் கிராமங்களில் தலை ‘உணாவி’க் கதை சொன்ன தாயன்னைகளின் வாசம் பாதுகாப்பாய், கதகதப்பாய், அதில், ஆழக் கமழ்ந்திருந்தது.  கண்முன்னிருந்த, உலகம் கொண்டாடியவற்றுடன் முரண்பாடுகொள்கிற – அஃதால் அந்நியப்படுகிற மனித மனங்களிற்கான தன்னம்பிக்கையும் ஆறுதலும் அங்கிருந்தன.

இன்று Hallmark வாழ்த்தட்டைகள் தாங்கிவருகின்றன மாயா ஆஞ்ஜலோவின் பிரபல மேற்கோள்களை.  அதிகமாக விற்பனையாகும் (best sellers) பல நூல்களின் ஆசிரியர்; தனது சுயவரலாற்று நூல்களுக்காய்ப் பரவலாய் அறியப்பட்டவர்.  இளைஞர்களின் மனதுக்குவப்பான, 1996 இல் கொல்லப்பட்ட, றாப் பாடகன் ரூபாக் (Tupac) சிறையில் இருந்தபோது வாசித்தவர்களில் முதல், பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரான ஓப்றா வின்ஃபிறீ (Oprah Winfrey) வரை இவரைத் தம் வழிகாட்டியாக ஆகர்ஷத்துக்குரியவராகக் கூறியுள்ளார்கள்.  1993 இல் கிளிண்டனின் பதவியேற்பு விழாவில் வாசித்த  கவிதை இவரது உச்ச புகழுக்கு காரணமானது என்றும், மேலும், கவிஞர் றொபேர்ட் ஃபுறோஸ்ற் (1874-1963) இற்குப் பிறகு இப் ‘பெருமை’யைப் பெற்றவர் மாயா ஆஞ்ஜலாவே என்றும் குறிப்பிடுகிறார்கள்.
மாயாவைப் பற்றிப் பேசுகிறபோது, இவை மேலதிகமான செய்திகள் மட்டுமே.  வியாபாரரீதியாக வெற்றி பெற்றவர் என்பதோ, பிரபலமானவர் என்பதோ அவரது படைப்பின் பாதிப்பின் காரணங்களாவதில்லை.  அவர் பற்றி எழக்கூடிய விமர்சனமும் அதுவல்ல.  முற்றாய் முதலாளித்துவம் எடுத்துக்கொண்ட புறச் சூழலில், தங்களை நம்பவும் நம்பிக்கையுடன் உலகை எதிர்கொள்ளவும் சில பிரதிகளின் இருப்பு முக்கியமாகிறது; அத்தகு பிரதிகளின் இடத்தை மாயாவின் படைப்புகளும் எடுத்துக் கொள்கின்றன.  எளிய நடைதான் ஆனால் ‘அப்படித் தெரியவேண்டுமென்பதற்கான நான் கடுமையாய் உழைக்கிறேன்’ என அவரே குறிப்பிட்ட அந்த நடை ஒரு அமைதியான, தன்னை வந்தடைந்த வருத்தத்தைப் போக்கும் உறவைப்போல இயல்பு கொண்டிருக்கிறது.
இவை தவிர்த்துப் பார்த்தால், முரண்பாடுகளிற்கு அப்பாற்படாத எல்லா பிரபலங்களையும் போலவே, சகிக்க இயலாத பல குறைபாட்டம்சங்களை மா.ஆஞ்ஜலோவிடமும் காணலாம்.  அதனால், மேலும், இங்கே, மாயாவைப் பற்றி தொடர எண்ணுகிறபோது படைப்புகளைப் பற்றி மட்டும் பேசுவதே தகும்.  இவரது அமெரிக்க அரசாங்கம் சார் தேசியவாதக் கருத்துக்கள் அரசியல்ரீதியாக பிரச்சினைக்குரிய ”அப்பாவித்தன”மானவை; ஆத்திரத்தை வரவழைப்பவை – அவற்றை இவரிடமிருந்து விலத்திப் பார்த்தலே சரியானது.  அல்லாதுவிடில், பிரமிளை ரசிப்பவர்களுக்கு,
‘ஆபிரிக்காவின்
ஹெபிராயிட்ஸில்
கையிலே ஆயுதம்
எடுத்து வெள்ளைக்
காலனி அரசை
எதிர்த்த கறுப்பன்
விடுதலைப் புலிகளின்
ஆதர்சமான ஆள்
ஆமில்கார் கப்ரால்’
(கவிதை: கவுன்டர் கல்ச்சர் லிமிட்டெட்)
என்று பிரமிள் உணர்ச்சிவசப்பட்டு நிற்கிற இடங்கள் துருத்துவதுபோல மாயாவும் துருத்துவார்.  இவர் கிளிண்டனின் வேண்டுகோளிற்கிணங்க – வாசித்த – On the pulse of Morning -இற்குப் பிறகான கிளிண்டனின் மொனிக்கா விவகாரம் போன்ற சர்ச்சைகள் பற்றிக் கேட்கப்பட்டபோது, ‘நான் பார்த்தவரையில் மிக நல்ல ஆள், எனக்கு அவனைப் பிடிக்கும். தனது தவறுக்காக மிகவும் சங்கடப்படுபவன்’ என -பொதுத்தளத்தில் பொதுமக்களிற்குச் சற்றும் அவசியப்படாத கிளின்டன் பற்றிய ‘நல்’ அபிப்பிராயங்களைக் குறிப்பிட்டார்.  இப்படியான சந்தர்ப்பங்களில், விமர்சகர்களால் ‘தேசத்தினதும் கிளிண்டனினதும் நவீன கால அம்மா’ (a modern day mammy for the Clintons, and for the nation) எனக் கடுமையாகக் குற்றஞ்சாட்டப்பட்டார்.  புஷ்ஷைப் பற்றி (ஆரம்பத்தில்) கேட்கப்பட்டபோதுகூட, ”அவரைப்பற்றி இப்போது அவ்வளவிற்கு (கிளிண்டனைத் தெரிந்தளவுக்கு?!) – எனக்குத் தெரியவில்லை.  ஆனால் அவர் எனது ஜனாதிபதி, நான் அவருக்கு வாக்களித்தேனோ இல்லையோ, அவர்தான் அமெரிக்க ஜனாதிபதி. ஆகவே அவர் எனது ஜனாதிபதி.  எனக்கு உயர் நம்பிக்கைகள் இருக்கின்றன” என்றதும், சகிக்க இயலாத தேசியவாதியாக, இவரை அடையாளங் காட்டுகின்றன.
அவை கடந்து மாயாவை நெருங்கினால், மால்க்கம் எக்ஸ் திரைப்படத்தின் (Malcolm X, 1992) இறுதிக்  கட்டத்தில், சுடப்பட்டுக் கொல்லப்படுகிற அவனைப் பற்றிச் சொல்லத் தொடங்குகிற பின்னணிக் குரல், ”உங்களுக்குச் சகோதரன் மால்க்கம் எக்ஸ்சைத் தெரியுமா, அவனை நீங்கள் தொட்டிருக்கிறீர்கள? அவன் எப்படிப்பட்டவன் என்பதை அறிந்திருக்கிறீர்களா? அவன் தீயவன் எனில் அவன் யாருக்கு, என்ன தீங்கிழைத்திருக்கக் கூடும் என்று கூறுவீரா” என எழுகிறது.  வரலாற்றின் அத்தகு துண்டுகளிலிருந்து – இன்று பெரும் தலைவர்களாகச் சுவர்ப் படங்களாகச் சிரிக்கிற மனிதர்களோடு இணைந்து செயற்பட்ட  மாயாவின் வாழ்க்கைப் பங்களிப்பின் முக்கியத்துவத்தை புரிந்துக் கொள்ளலாம்.

”எழுத்தின் ரகசியம்: வாசித்தல், உரத்து வாசித்தல்.  தனிமையில் உங்கள் அறையிலிருந்து உங்களது மொழி உங்கள் வாயிலும் காதிலும் எப்படி ஒலிக்கிறதென்பதை நீங்கள் கேட்கவேண்டும்.  கேட்டுப் பின் அதை வெளியிடுங்கள், ஏனெனில், பிரத்தியேகமாக, கவிதை, மனிதக் குரலுக்காக எழுதப்பட்ட இசை”

“‘ஸ்தூலமான கவிதையால் வசீகரிக்கப்பட்டிருக்கிற பல கவிஞர்களை நான் அறிவேன்.  அது எப்படியென்றால் அந்தக் கவிஞர்கள் முதலில் – இதயமென்று சொல்லி சொற்களை போடுகிறார்கள்.  பின், அதைச் சூழவும் ஒரு இதய வடிவத்தைப் போடுகிறார்கள், பிறகு அதுதான் கவிதை என்கிறார்கள்!  ம்ஹீம். இல்லை. அது கவிதை இல்லை.  சொற்களை மட்டும் கொண்டு அர்த்தத்தை உருவாக்க முடியவில்லை என்றால், வெறும் சொற்களைக் கடதாசியில் ஒழுங்குபடுத்துவது மட்டும் மந்திரத்தை உருவாக்காது.”

இங்கே, அவர் சொல்வதுபோல அவரது கவிதைகள் அதிகம் உரத்துப் படிக்கத் தோன்றுபவையே.  அப்படிப் படிக்கிறபோது ஒரு பாட்டாக தன்னுணர்தலின் உச்சமாக அவை எழுச்சி பெறுவதை உணரலாம்.  அதோடில்லாமல் வாசிக்கிற ஒரு கவிதை பல கவிதைகளிற்கான திறப்பாக அமையும்.  அல்லது, பதிலாய்ப் பல நூறு கவிதைகள் எழுதுவதற்குப் பதில், அந்தக் கவிதைகளின் உள்ளடக்கத்தை முற்றாய் எம்மைச் சுவீகரிக்க விட்டு, அதை எழுதியவர் உணர்ந்ததை உணர்த்தத் தலைப்படும் – தான் உணர்ந்த வித்தையின் இரகசியத்தை படிப்பவரிடம் ஏற்படுத்த வல்லவர் மாயா.

இவர் கவிதையை செவிக்குரிய அல்லது ஒலி (குரல்) சார்ந்தது என எண்ணுகிறார்.  உள்ளொடுங்கிய, தன்னுள் அனேக தட்டுக்கள் நிறைந்த, பல்வாசிப்புகளை தரக்கூடிய கவிதைகளிற்கெதிரான கருதுபாடு இது.
மாயாவிடமிருந்தோ பிற எழுத்தாளர்களிடமிருந்தோ அறிவுரைகளையோ ‘எது கவிதை’ என்கிற வரையறுப்புகளையோ வேண்டிக்கொண்டு கவிதை படைப்பதில் நம்பிக்கையில்லை.  கல்விக்கூடங்களில் எழுத்துப் பயிற்சி போன்ற பாடங்களை எடுத்து எழுதப் பழகுவதுபோல பாசாங்குத்தன்மையுடையன இவ் அறிவுரைகள், மற்றும் பின்தொடருதல்கள்.

ஜெயகாந்தனுக்கு ஞானபீட விருது கிடைத்தது தொடர்பான தனது மகிழ்ச்சித் தெருவிப்பில் வண்ணநிலவன் ஜெயகாந்தனது கதைகளில் அதிகமாய் உள்ள ‘மனித சம்பாஷணைகள்’ குறித்துச் சிலாகித்து, சமகாலத்துப் படைப்பாளிகளிடம் தொடர்-மனித சம்பாஷணைகளுடன் கதைகள் எழுதச் சொன்னால் அவர்களால் முடியுமா?  என்று ‘சவாலாக’ எழுதியிருந்தார்.  இதை ஒத்ததே மா.ஆ. வின் கவிதை பற்றிய கூற்றும்.  இலக்கியம் காலத்துக் காலம் மக்களின் உளவியலை/உள்நிலையைப் பிரதிபலிப்பதாய் மாறுவதே அதனது இயல்பு ஆகும்.  இதில் செவிக்கான இலக்கியம் போய், அறிவிற்கான தனிவாசிப்பிற்கான ஒன்றாக அது எப்போதோ மாறிவிட்டது.  ஒரு பிரதி ‘உரத்துப் படித்தலிற்கும்’ ‘ஓசை நயத்திற்கும்’ என்பது மரபான, ‘பழையன குறித்த புளகாங்கிதத்தில்’ இருத்தலே ஆகும்.  தனது கவிதைகளில் ஒன்றில், ‘Nostalgia is not my forté’ என்ற மா.ஆஞ்ஜலோவும் இத்தகைய பகர்வுகளில் அதையே செய்கிறார்.  சமகாலத்தை தங்களது [சென்ற] காலத்தைப் பிரதிபலிக்கக் கேட்பதே சர்வாதிக்காரத்தன்மையை உடையது; அர்த்தமற்றது.  ஆனால், ஏதோ ஒரு வகையில் ‘பழைய’ எழுத்தாளர்கள் ‘புதியவர்களிடம்’ அதையே கேட்க ஆரம்பிக்கிறார்கள்; மாறாக, அவர்களிடம் ‘தன்னுள் ஒடுங்கிய’ ‘சம்பாஷணைகள் அற்ற’ ஒரு புனைவொன்றை உருவாக்குமாறு கேட்கப்படின், அது அவர்களால் முடியாது போயின், அதை அவர்கள் குறித்த எதிர்மறையான/திறமையின்மையின் அடையாளமாக ஒரு குறைபாடாகப் பிரகடனப்படுத்திவிட முடியாது.  அந்த வகையில் நம் காலத்தில் வண்ணநிலவனுக்குரிய இடம்போல, ஜெயகாந்தனுக்குரிய இடம்போலயே மாயாவிற்கென்றிருக்கிற இடத்தையும் பார்க்கவேண்டும்.  அவரது படைப்பின் இடம், பத்திரிகைகளின் மரபுக் கவிஞர்கள்போல ‘நிலா பலா கலா’ என அடுக்குமொழியாக அடுக்கப்படின், அதற்குப் பெறுமதி இல்லை.  இணையத்தில் அடுக்குமொழி, எதுகைமோனைகளில் எழுதப்படும் ஏராளமான ஆங்கிலக் கவிதைகள் போலவே அவையும் இருக்கும்.  ஆனால் நாற்றுநடும் பெண்களின் நாட்டுப்புறப் பாடல்கள்போல, கிராமத்துக் கிழவிகளிடமிருந்து வசையாக ஒப்பாரியாக – செயற்கையான பிரயத்தனங்கள் அற்று இயல்பெனவே வந்து விழும் சொற்கள் போன்றவை இவருடையன, அதிலும் ஒடுக்கப்பட்ட சீற்றம் தன்னுள் அமிழ்ந்த ஒரு இனத்தின் பெண்ணொருத்தியிடமிருந்து வருவது. அதில், சொற்கள், கவிதைக்கான செயற்கையான எத்தனங்கள், தயார்நிலைகள் எதுவுமற்று, விழுவதே பேரழகு.  அவரே கூறியதுபோல சொற்களால்தான் மந்திரத்தை உண்டுபண்ணுகிறார், அது சொற்களைக் கையாளத் தெரிந்ததால்தான் சாத்தியப் படுகிறது.  இதில், நவீன/மரபுக் கவிஞர் என்கிற வரையறையில்லை, யாரால் ‘மந்திரத்தை’ உருவாக்க முடிகிறதென்பதே பிரதானம்.

தன் முன் மக்கள் கூடியிருக்க, அரங்குகளில், மாயா ஆஞ்சலோ தனது க(வி)தைகளை பாடுவார்.  அங்கிள் விலீ (Wille) பற்றிய கவிதையை அவர் பாடப் பார்த்தபோது மலைப்பாகிவிட்டது.  தனது பரம்பரைக்குரிய உயரத்தில், அவரது நிமிர்ந்த உடல் முழுதும், கைகளின் பரப்பெங்கிலும் ஒரு மந்திரவாதியின் அசைவு; வாசகர்கள், மந்திரத்தின் புதிருள் அமிழ்ந்துகொண்டிருக்கும்/கிளர்ச்சியுண்டாகியிருக்கும், குழந்தைகள்.  சொல்லிப் சொல்லிப் பழகிப்போய், அர்த்தமற்றுத் தேய்ந்த இச் சொற்களூடே, தடித்த கன கம்பீரமான அவரது குரல், பார்வையாளர்களைத் தன்னுள் அசைவற்று வைத்திருக்கிறது. ஏனென்றால், ஒவ்வொரு சொல்லுமே உணர்ந்து உணர்ந்து அதற்குரிய தகுதியுடன் சொல்லப்படுகின்றது; முயற்சித்துப் பார்த்தும் அவரைப் போல சொற்களை உச்சரிக்க முடியவில்லை.

இதுவரையிலும் அடக்கி ஒடுக்கப்பட்ட உணர்ச்சிகளின் ஒலிப்பு இந்த மனுஷி.  அற்புதமான கதைசொல்லி, நடிகை, ஆவணப்பட இயக்குநர் எனப் பல வடிவங்களில், தாம் அழகுணர்ச்சியுடனும், கருணையுடனும் தொடுகிற எத் துறையையும் கையகப்படுத்திற வெகுசில ஆளுமைகளில் ஒருவளாகவே மாயா தன்னை வெளிப்படுத்தியுள்ளார்.

மாயாவின் கவிதைகளில், ‘நாம் சேருமிடம் – ஒரு ஜோடிப் பாடல்’ (Where We Belong, A duet), ‘பொய்’ – இவை காதல் உறவுகளைப் பாடின என்றால், பதின்மங்களில் ‘வியித்திரமான பெண்’ (Phenomenal woman) ஒரு தன்னம்பிக்கைப் பிரதி (மாயா ஆஞ்ஜலோவே அந்த அடைமொழியால்தான் அழைக்கப்படுகிறார்).

‘நான் இன்னும் எழுகிறேன்’ (Still I rise)-ஐ பற்பல தடவைகள் உரத்து வாசிக்கையில்,

‘உங்கள் சேட்டில்
ஒட்டியிருந்த தூசியைப்போல்
என்னைத் தட்டிவிடுங்கள்
போய் விடுகிறேன்.

மாணிக்கங்களை இழந்து போகிறேன்
வளநதிகளை விட்டுச் செல்கிறேன்
அது என்வரையில்தான்
உங்களுக்கு நான்,
சனக் கும்பலில் ஒரு நொடிக்குள்
உங்களைக் கடந்துபோய்விட்ட
ஒரு கால் அல்லது ஒரு கை,
ஒரு பிடரி அல்லது முதுகு,
முகமற்ற ஒரு நிழல்’
(ஒரு பிரியாவிடை,
சண்முகம் சிவலிங்கம், நீர்வளையங்கள், 1988)

‘உங்களின் வரையறைகளின்
சாளரத்துக்குப் பின்னால்
நீங்கள் என்னைத் தள்ள முடியாது.
இதுவரை காலமும்,
நிரந்தரமாக்கப்பட்ட சகதிக்குள் கிடந்து
வெளியே எடுத்து வரப்பட்ட
ஒரு சிறிய கல்லைப் போன்று
நான்
என்னைக் கண்டெடுத்துள்ளேன்

உங்கள் எல்லோரினதும்
நாகரிகம் வாய்ந்த கனவுகளின் மீது
ஒரு அழுக்குக் குவியலாய்
பளிச்சிடும் உங்கள் சப்பாத்துகளை
அசுத்தம் செய்கிறேன்

(அவமானப்படுத்தப்பட்டவள்,
சிவரமணி, செல்வி/சிவரமணி கவிதைகள், 1990)

என்பன போன்ற வரிகளை அது ஒத்தொலித்திருக்க உணரலாம்.  மேற்குறிப்பிட்ட பிரதிகள் தவற விட்டிருக்கக்கூடிய நம்பிக்கைகளையெல்லாம் உறிஞ்சி இதில் தன்னை முன்வைத்திருந்தார் மாயா.
இசைபோல வசீகர மந்திரம்போல வாசித்ததுண்டு, ‘நான் இன்னும் எழுகிறேன்‘ கவிதை தருகிற,

You may shoot me with your words,
You may cut me with your eyes,
You may kill me with your hatefulness,
But still, like air, I’ll rise.
உன்னுடைய சொற்களால் எனை நீ சுடலாம்
உனனுடைய கண்களால் எனை நீ வெட்டலாம்
உன் வெறுப்புமிகுதன்மையால் எனை நீ கொல்லலாம்
எனினுங் கூட, காற்றைப் போல, நான் எழுவேன்

என்பதான வரிகளை, அவற்றின் எழுச்சிக்காக.  ஆனால், அத்தனை அவையினரையும் கட்டிப்போடும் விதமாய், இயல்பான பெரிய சிரிப்பில், உரத்துப் பாடுவதில், அவரது சொற்கள் பிறிதொரு வடிவம் கொள்கின்றன; தன்னுடைய வரலாற்றைத் தன்னுடைய மனிதர்களது கதைகளூடாக விடாது சொல்வதாகின்றன.  மாயாவின் படைப்புகளில்த் தன் வரலாறு என்பது, தன்னூடாக தன் இனத்தைப் பற்றிய தன் மனிதர்களைப் பற்றிய பதிவுகளாகவே ஒலிக்கின்றது.
இங்கே ‘நான்’ என்பது நான் அல்ல.  ஆகவே அது ‘என்னுடைய’ புகழைப் பாடுதல் அல்ல.  நாம் என்பது எனது இனத்தைப் பற்றிய வீண் பெருமை அல்ல.  அது அடக்கப்பட்டதற்கெதிரான திமிறல், எதிர்த்தல், சுய-நசிவின்மை, தன்-மிளிர்வு.  எல்லோரதும் தனித்துவத்தையும் ஒத்துக்கொள்வதாலேயே மிக அதிர்வை உண்டாக்குகின்றன.
1928இல் பிறந்து 1930 களில், இனவாதத்திற்குப் பேர்போன, அடிமைமுறையைக் கொண்டிருந்த தெற்குப்புற அமெரிக்காவில் வளர்ந்த ஒரு எழுச்சிகரமான தனிநபர் ஆளுமை இவர்.  உண்மையாக இருப்பவரது முகம்; தன் வரலாற்றை அறிந்த/மதிக்கிற, தன்மீது ஏவப்பட்ட அடக்குமுறைமைகள் தன்னை முற்றாய் அழிப்பதை சற்றுமும் அனுமதிக்காத ஒரு ஆன்மாவின் பயணம்.  எம் ‘கீழைத்தேய’ங்களில் கிராமத்துப் பொம்பிளைகளிடமிருக்கிற கதைசொல்லலைக் கைக்கொண்டவர்.  அத்தகைய எளிமையானதும் ஆழமானதுமான அவரது கவிதைகளில் இரு நீள் கவிதைகள் ஒவ்வொரு பதின்மக்காரிகளிற்கும், அடக்கப்படுபவர்களுக்கும் தாரக மந்திரமாகக் கூடியவை! பல தடவைகள் பல மொழிகளிலும் இம் மாதிரிக் குரல் கேட்டிருந்தாலும், எப்போதும் சலிப்பூட்டாதவை:
(1) வியித்திரமான பெண்
(2) நான் இன்னும் எழுகிறேன்.
பிரத்தியேகமாக இந்த இரு பிரதிகளும், ”இந்த உலகத்தில் நீ என்ன அநியாயமும் செய்யலாம்.  கொலை, கொள்ளை, சுரண்டல், அதிகாரம், துஸ்பிரயோகம், அடக்குமுறை, என்னவும்!  ஆனால் என்னை, எனது ஆன்மாவை, உனக்கெதிரான அதனுடைய ஓயாத எதிர்ப்பை, உன்னால் ஒருபோதும் கொல்ல முடியாது.  அதை நெருங்கவோ துவம்சிக்கவோ முடியாது.  அது எப்போதைக்குமாய் எனக்குள் வேரூன்றி, நீ அடக்க அடக்க ஒடுக்க ஒடுக்கத் துளிர்விட்டுக் கொண்டே இருக்கும்” என்கிற செய்தியைத் தருவனவாகின்றன.  அதனால், இவை முடிவான மொழிபெயர்ப்புகள் அல்ல.  சொற்களால் நடத்தப்படுகின்ற மந்திரத்தை மீளநடத்தச் சொற்கள் மட்டுமல்ல மந்திரமும் தெரியவேண்டும்.  மைக்கல் பிரான்ரி (Michael Franti) என்ற மாற்றிசைப் பாடகன் தருகிற பாடல்கள்போல, என்.டி.ராஜ்குமாரின் கவிதைகள்போல உடம்பு முழுதும் பரவுகிற உணர்வெழுச்சி மீள இடம்பெறவேண்டும்.  ஒரு ஆளுமையைக் கொல்லாமல், சற்றேனும், அவரை ஒலிக்க விட வேண்டும்.  அப்படியொரு முயற்சியே இம் மொழிபெயர்ப்புகள்.  நிகழ்த்தியோள(ன)◌ான மந்திரவாதி காட்சிகளை விட்டுச் செல்ல, ஒரு மந்திரத்தை விளங்கிக்கொண்டதன்படிக்கு விபரித்தல் மொழிபெயர்ப்பாகிறது.  அவள்(ன்) மாயத் துணியை விசுக்குகையில் பறந்து செல்கிற புறாக்கள் போல, இக் கவிதைகளிலிருந்து, ‘நினைவுகள் கிடக்கிற வெகுகாலத்திற்கு முந்தைய அறைகள்’ ‘கணவனின் குரல் தொண்டையில் இறுகும் ஒரு முஷ்டியாக ஆகும்,’  ‘இன்று நாளைக்கான அழிவையும், இடது வலது செய்கிற தவற்றை அறியாததுமான காலத்தில்’, ‘சீராட்டும் கறுப்பிற்குள் ஓடிவரும்’, ‘தன் ஆட்களை நினைத்து உரத்துச் சிரிக்கிற’, ‘முதுமையில் ஆடுநாற்காலியை வேண்ட மறுக்கிற’, ‘கூடாமல் உணர்கிற ஒரு நல்ல பெண்’ (எதிர்கொள்கிற) ‘பொய்கள்’, (அவளது) புகழோ பெண்ணோ இல்லாத அங்கிள் விலீ, இவையை/இவர்களை, மீண்டும் ஒருமுறை விடுவித்து, வேறொரு மொழிப் புலத்திற் பறக்கச் செய்விக்கும் முயற்சி.
மாயாவின் தேசியவாதக் கருத்துக்கள், தனது தேசத்தின் தலைவர்களிடம் தன் நம்பிக்கைகளை ஒப்படைத்தல், இன்றைய ‘மக்களது’ பேராசைதான் சமகாலத்தில் அழிவுகளிற்கான மகிழ்வின்மைக்கான பெருங் காரணமெனச் சொல்கிற தட்டைத்தனம் போன்றன அவரது சிந்தனைப்போக்கு வரம்புக்குட்பட்டது என்பதை உணர்த்துகின்றன.  அவரைக் குறுக்குவதோடு, போதாமையைச் சுட்டுகின்றன.  மாறாக, அவரது கவிதைகளோ, அத்தகைய கட்டுக்கள் ஏதுமற்று விடுதலையைப் பாடுகின்றன.   மொழியை ஆற்றுவோளாக, மாயா, தன் ஆறடி உயரத்தில், அரங்க மையத்தில், நிகரற்ற நிமிர்வுடன், தன் வரலாற்றைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்; அக் குரலிற்கு மட்டுமே செவிசாய்க்கிறது மனம்.

– பிரதீபா தில்லைநாதன்

published in attem-magazine – September 2005

Leave a comment

3 Comments

  1. மிக்க நன்றியும் அன்பும் தீபா. இதை நான் எங்காவது பிரசுரத்திற்குப்
    பயன்படுத்திக் கொள்ளலாமா?

    Reply
    • No problem… 🙂 இது ஏற்கனவே ஒருமுறை பிரசுரமானது. என்பதவிர நீங்கள் பயன்படுத்துவதில் ஆட்சேபனை இல்லை….

      Reply
  2. || ஜெயகாந்தனுக்கு ஞானபீட விருது கிடைத்தது தொடர்பான தனது மகிழ்ச்சித் தெருவிப்பில் வண்ணநிலவன் ஜெயகாந்தனது கதைகளில் அதிகமாய் உள்ள ‘மனித சம்பாஷணைகள்’ குறித்துச் சிலாகித்து, சமகாலத்துப் படைப்பாளிகளிடம் தொடர்-மனித சம்பாஷணைகளுடன் கதைகள் எழுதச் சொன்னால் அவர்களால் முடியுமா? என்று ‘சவாலாக’ எழுதியிருந்தார். இதை ஒத்ததே மா.ஆ. வின் கவிதை பற்றிய கூற்றும். இலக்கியம் காலத்துக் காலம் மக்களின் உளவியலை/உள்நிலையைப் பிரதிபலிப்பதாய் மாறுவதே அதனது இயல்பு ஆகும். இதில் செவிக்கான இலக்கியம் போய், அறிவிற்கான தனிவாசிப்பிற்கான ஒன்றாக அது எப்போதோ மாறிவிட்டது. || இத்தகைய சிந்தனை இன்று என்னிடம் இல்லை என்பதை பதிவு செய்யவேண்டும். தனக்குள் இயங்குகிற எழுத்துப் போலவே உரத்து படிக்கிற எழுத்தும் வெவ்வேறு வர்க்க பிரதிநித்துவத்தைக் கொண்டிருப்பதாக உணர்கிறேன். எனது மேற்குறிப்பிட்ட பந்தி (அதைத் தொடரும் பந்திகள்) ஒரு நடுத்தரவர்க்க சிந்தனை வெளிப்பாட்டை உடையதாக உணர்கிறேன். தனக்குள் வாசிக்கும் எழுத்தை எழுதுவதற்கு ஒடுக்கப்பட்ட வர்க்கம் priviledgedஆனதாக இல்லை. அதன் ஒடுக்கமுறைகளை உரத்துக் கத்தவும் பொதுவெளிக்கு வெளிப்படுத்துவதும் அதற்கு இன்றியமையாததாக இருக்கிறது.
    – பிரதீபா (மீள் வாசிப்பின்போது)

    Reply

Leave a comment